டேக்வாண்டோ அம்பிகா !


 

 

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு கணிப்பொறி பொறியியல் படிக்கும் அம்பிகாவைப் பார்த்தால், எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுமி போல இருக்கிறார். அதை மனம்விட்டு சொன்னதும், வாய்விட்டு சிரிக்கிறார்.

”எல்லாரும் இப்படித்தான் சொல்றாங்க. ஆனாலும் காரமுள்ள கடுகு நான். ‘டேக்வாண்டோ’ தற்காப்புக் கலைதான் என்னோட அடையாளம். இது கராத்தே இல்லை. கராத்தேவில் உடம்பின் எந்தப் பகுதியையும் தாக்கலாம்; கை, கால் இரண்டையுமே பயன்படுத்தலாம். ஆனா… டேக்வாண்டோவில் இடுப்புப் பகுதிக்கு மேலதான் தாக்கணும்; கால்கள மட்டும்தான் பயன்படுத்தணும். முகத்துல காலால அடிச்சா அதிகப் புள்ளி. ஒரு நிமிஷத்துக்குள்ள அதிகபட்சம் பத்து புள்ளி வரை அடிக்கலாம். இதுல இருந்தே இந்த ஆட்டத்தோட வேகத்தை நீங்க யூகிக்கலாம்!”

– எக்ஸ்பிரஸ் வேகத்தில் தடதடக்கிறது அம்பிகாவின் பேச்சும்.

 

”என் சொந்த ஊரு நெய்வேலி. மிடில் கிளாஸ் ஃபேமிலி. எங்க ஊரு பக்கம் இந்த ‘டேக்வாண்டோ’ ரொம்பவே பிரசித்தி. ஆனாலும், பெண்களோட பங்களிப்பு இதுல அதிகமா இல்ல. என்.எல்.சி. அரசுப் பள்ளியில ஏழாம் வகுப்புப் படிச்சுட்டு இருந்தப்போ, பயிற்சியாளர் விஜயசங்கர் ‘டேக்வாண்டோ பெண்கள் அணி’ உருவாக்குறதுக்காக பல்வேறு சாகசங்களை மாணவிகள் மத்தியில செய்துகாட்டி, ஆர்வம் ஏற்படுத்தினார். உற்சாகத் தோட பயிற்சியில சேர்ந்த மாணவிகள்ல நானும் ஒருத்தி. என்னோட ஆர்வத்தை கவனிச்ச சார், எனக்குக் கூடுதல் உற்சாகமும், பயிற்சியும் தந்தார். இதுல எனக்குத் தடையா இருந்தது… என் உயரம். என் வேகமான விளையாட்டால அந்தக் குறையை நிவர்த்திக்க கற்றுத் தந்தார் சார். முதல் முறையா கலந்துக்கிட்ட போட்டியே, மாநில அளவுப் போட்டி. அதில் நான் தங்கம் ஜெயிக்க, எட்டாவது படிக்கும்போதே தேசிய அளவிலான போட்டிக்குப் போற வாய்ப்புக் கிடைச்சுது. அதில் வெண்கலம் கிடைச்சுது.

Image

இதுக்குப் பிறகு… இன்னும் நுணுக்கங்கள், அனுபவங்கள் எல்லாத்தையும் சேர்த்துக்கிட்டு, அடுத்த வருஷ தேசிய போட்டியோட இறுதிச் சுற்றுல மணிப்பூர் மாநில பெண்ணோட களத்துல நான் நின்னேன். பொதுவாவே இந்தக் கலையில மணிப்பூர் மற்றும் மகாராஷ்டிரக்காரர்கள் கலக்குவாங்கங்கறதால, நான் இன்னும் வெறியோட ஆடினேன். அனல் பறந்த ஆட்ட முடிவுல ரெண்டு பேருமே சமபுள்ளியில் இருந்தோம். அடுத்ததா, யார் ஆக்ரோஷமா விளையாடுறாங்கனு நடுவர்கள் பார்த்து வெற்றியாளரை முடிவு செய்யும் ‘சுப்பீரியாரிட்டி சுற்று’. பெரும்பாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்கள்ல மணிப்பூர்காரர்களே வென்றதா அறிவிக்கப்படுவாங்கனு ஒரு தகவல் எனக்கு வந்து சேர, என் ஆட்ட வேகத்தை அதிகரிச்சேன்… தங்கம் என் வசமாச்சு. இந்த மாதிரி நிறைய த்ரில் வெற்றிகளை இதுல நான் கைப்பற்றியிருக்கேன்!” என்ற அம்பிகா… மாநில, தென்னிந்திய, தேசிய அளவிலான இன்னும் பல பரிசுகளை வென்றுள்ளார்.

 

 

”முதல் முறையா சொந்தமா ஒரு டேக்வாண்டோ டிரெஸ் வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்தின விஜயசங்கர் சார் மற்றும் சையத் அஹமதுல்லா சார் ரெண்டு பேரும்தான் என் பயிற்சிகளுக்கான செலவுகளை ஏத்துக்கிட்டாங்க. போட்டிக்கு போய் வர ஆகும் செலவையும், வாழ்த்தையும் தந்து அனுப்பி வெச்சாங்க, பள்ளி தலைமை ஆசிரியை மணிமொழி மேடம். பொறியியல் படிப்பில் சேர கவுன்சிலிங் வரணும்னுகூட தெரியாம இருந்த என்னை, என் விளையாட்டு மிஸ் ரேவதியும், அவங்க வீட்டுக்காரரும்தான் தங்களோட கார்லயே கவுன்சிலிங்  அன்னிக்கு அண்ணா யுனிவர்சிட்டிக்கு அழைச்சுட்டு வந்தாங்க. ஸ்பார்ட்ஸ் கோட்டாவில் கம்ப்யூட்டர் இன்ஜீனியரிங் படிக்க வாய்ப்புக் கிடைச்சுது. அவங்களுக்கும் என் பெற்றோருக்கும் நன்றி”

– என்றார் அம்பிகா உருக்கத்துடன்!

வெற்றிகள் பெருகட்டும்!

மழை இருட்டின் முடுக்குகளில் கரைந்து போன ரகசியங்களை முத்தமிட்டு நைந்து போன பிரியங்களை செப்பனிட்டு மாய்ந்து


மழை இருட்டின் முடுக்குகளில் 
கரைந்து போன ரகசியங்களை 
முத்தமிட்டு 
நைந்து போன பிரியங்களை செப்பனிட்டு 
மாய்ந்து போன மண்ணிற்கு 
திவலைகளில் திலகமிட்டு 
கடக்கையில் மரித்துப்போன 
எல்லா ஊர் நீர்நிலையும் 
அழுவதாக அனுமானம் !

கசக்கப்பட்ட மலர்களில் புறக்கணிக்கப்பட்ட முட்களின் காவியங்கள் காணடிக்கப்படுகின்றன மனச்சிறகின் பிய்ந்த


கசக்கப்பட்ட மலர்களில்
புறக்கணிக்கப்பட்ட முட்களின் காவியங்கள்
காணடிக்கப்படுகின்றன
மனச்சிறகின் பிய்ந்த மிச்சத்தில்
பெருங்கானகம் கடந்த பறவையின்
பிரயத்தனம் ஒளிந்து நகைக்கிறது
சிதறிக்கிடக்கும் காசுகளில்
காலங்காலமாக கரைந்து வழிகிறது தெருப்பாடகனின்
கேட்கப்படாத கீதம்
போராளியின் உடம்பின் மீது மொய்க்கும்
ஈக்களுக்கு இணையாக
அழுகிற மனிதர்கள் வருவதற்கு
முன்னும் பின்னும் மறதியின் புடவை
கிழிந்து போர்த்திக்கொள்கிறது
மரணத்தை
தற்கொலைகளுக்கு நடுவே வாழ்தலின்
பிரயாசைகள் தத்திக்கரைதல்
போலவே போலியாக நகர்கிறது வாழ்க்கை !

 

2382209408 27eaa94dd0 work life balance is a false choice


தேர்வு முடிவுகளில் முதலிடம் பெற்றவர் நோக்கி
மைக்குகள்
டிவி கேமிராக்கள்
செய்தி வாசிப்புகள்
கொஞ்சம் அழுகை
கொஞ்சம் கொண்டாட்டம்
தோற்றவர்களை யாருமே கண்டுகொள்வதில்லை
என்கிறார்கள் மேதாவிகள்
நாம் முட்டாளாகவே இருப்போம்
சிறிய வெற்றி பெற்றவர்களின் கூட்டத்தில் கலப்போம்
கசங்கிய நெஞ்சங்களுக்கு
மனதால் முத்தம் கொஞ்சம்
நைந்தாலும் ஈரம் போகாத
கைகுட்டையால்
ஒத்திக்கொடுங்கள்
உடைக்கப்பட்ட பேனாக்களை கண்டு அழுகிறவர்களின்
கரங்களில் தூரிகை கொடுங்கள்
கிழிக்கப்பட்ட கனவுகளின் மீது
இறகு இழந்தவர்களுக்கு
வானைக்காட்டி வலசை போகச்சொல்லுங்கள்
மைக்குகள்
புகழ்மாலைகள்
தாண்டிய
புன்னகைகள்
அழுகைக்கழிப்புகள்
செய்துவிட்டு உறங்கப்போங்கள்
எப்பொழுதும் சிரிக்காத நம் பால்யகால காயங்கள்
ஆறிப்பூக்கள் நீட்டி நிற்கலாம் கனவுகளில்


தூக்கங்கள் அவரவருக்கு
எப்பொழுதேனும் கொடுக்கப்படுகிறது
அன்றாட சண்டைகளின் ஒரு முனையில்
சில குழந்தைகள் தூங்கிப்போகிறார்கள்

கவலையின் கடைசிக்கடிதத்தை
படித்த படி உலகம் விழித்துக்கொள்ளும்
பொழுதில் கடிதத்தின் சில எழுத்துகள் உதிர்ந்து
கனவுகளாக தூக்கம் கெடுக்கின்றன

கடவுள்,கற்பு,ஒழுக்கம் ,அறம்
என எண்ணற்ற வகுப்புகள் எடுத்தெடுத்து
அடுத்தடுத்து கண்ணிமைகளை கத்தரித்து
சிரிக்கிறார்கள் கலாசார காவலர்கள்

உண்மை வெறுத்து நகைத்தவர்கள்
கவலைகளின் இதழை பருகி சுவைத்தவர்கள்
எல்லாரிடமும் இருந்து தூக்கம் பறிக்கப்படுகிறது

தெருவோரங்களில்
நிம்மதியாக உறங்குபவர்களை
குடிசையின் ஓட்டைகளில் நட்சத்திரம் எண்ணுபவர்களை
துரத்தி அடிக்க வளர்ச்சி தேவர்கள்
பாணங்கள் ஏந்தி வருகிறார்கள்

தூக்கத்தில் எம்பிவிழும்
உண்மைகளையும் கொடுங்கனவுகளையும்
துரத்திப்பிடிக்க ஆசைப்படும்
சிறுமிக்கு தெரியுமா அதுவும் தூக்கம் தொலைக்கும் வழியென்று