‘காமன் மேன்’ கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண்!


காட்சி ஒன்று:

அந்தக் கார்ட்டூன் வரையப்பட்டு நாற்பது வருடங்கள் இருக்கும் :

இந்தியாவின் கடைக்கோடி குடிமகன்களில் ஒருவரான எளிய மனிதர் உள்ளே வருவார். அது நிலவுக்கான பயணத்தைப் பற்றி ஆய்வு செய்யும் கூடம். உள்ளே அவரை அழைத்து வரும் நபர் இப்படிச் சொல்வார்:

“இவரைத்தான் நிலவுக்கு அனுப்பப்போகிறோம். இவருக்குச் சோறு, தண்ணீர்,வெளிச்சம், காற்று, இருப்பிடம் எதுவும் தேவையில்லை.” என்பதாக அது அமைந்திருக்கும்.

எளிய மனிதனை எப்படி அரசுகள் பார்க்கின்றன என்பதை இதைவிட எளிமையாகச் சொல்லிவிட முடியாது.

காட்சி இரண்டு:.

மன்மோகன் சிங்கும், நரசிம்ம ராவும் ஒரு சந்தின் நுழைவில் ஓரமா நின்று கொண்டிருப்பார்கள். மன்மோகன் சிங் கையில் விலைவாசி ஏற்றம் என்கிற பெரிய ஆயுதம் இருக்கும். சுவரில் டீசல் விலை, கேஸ் விலை ஏற்றம் என்று போஸ்டர்கள் தொங்கிக்கொண்டு இருக்கும். காமன்மேன் ஓய்ந்து போய் அந்தச் சந்தில் நடந்து வந்து கொண்டிருப்பார். அவரைத் தாக்க மன்மோகன் தயாராக இருப்பார். ராவ் அசையாமல் இப்படிச் சொல்வார் :

“அவரின் நிலைமை இன்னமும் மோசமாகக் கூடாது என்று கருணையோடு நாம் இதைச் செய்கிறோம் என்று நிச்சயம் அவர் புரிந்துகொள்வார்.”

ஆட்கள் தான் மாறியிருக்கிறார்கள். காட்சிகள் மாறவில்லை அல்லவா?

மேலே சொன்ன அந்த இரண்டு கார்ட்டூன்களையும் வரைந்தது ஆர்.கே.லக்ஷ்மண். ஆர்.கே.லக்ஷ்மணின் அந்தக் ‘காமன் மேனை’ பார்த்து இருக்கிறீர்களா? கோடு போட்ட சட்டை, எளிமையான வேட்டி, சொட்டை விழுந்த தலையில் ஓரிரு முடிகள், எப்பொழுதுமே வாயைத் திறக்காத மவுனம், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், அதிகாரிகள் தரும் அதிர்ச்சிகளை எதிர்கொள்ள எப்பொழுதும் உயர்ந்திருக்கும் புருவம். இது தான் காமன்மேன். இந்தச் சாதாரண மனிதனை கிட்டத்தட்ட அம்பது வருடங்கள் மக்களின் மனசாட்சியாக அவர் உலவ விட்டார்.

ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மண் ஆறு பிள்ளைகள் கொண்ட வீட்டில் கடைக்குட்டி. கண்ணில் படுவதை எல்லாம் வரைவது மட்டுமே அவரின் வேலையாக இருந்தது. பள்ளியில் மரத்தின் இலை, வீட்டில் சாக்பீஸில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அப்பா, இலைகள், பல்லிகள், எங்கெங்கும் அமர்ந்திருக்கும் காகங்கள் என்று வரைந்து அனைவரும் அதிரவைத்துக் கொண்டிருந்தார்.

பையன் பெரிய ஓவியக்காரனாக வருவான் என்று அனைவரும் நம்ப ஆரம்பித்து இருந்தார்கள். உயர்கல்வியை முடித்த பின்னர் ஜே.ஜே. கலைப் பள்ளியில் சேர விண்ணப்பித்தார் லக்ஷ்மண். அந்தக் கல்லூரியின் முதல்வர் கடுகடுப்பான முகத்தோடு “எங்கள் பள்ளியில் சேர வேண்டிய தகுதி உனக்கில்லை தம்பி.” என்று அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கு திரும்பி நிறைய வருத்தத்தோடு மைசூர் பல்கலையில் இளங்கலை பட்டம் பெற்றார். அதனோடு ப்ளிட்ஸ், சுயராஜ்யா இதழ்களுக்கு ஓவியங்கள் வரைந்து அனுப்பினார். தன்னுடைய அண்ணன் ஆர்.கே.நாராயண் ‘தி இந்து’வில் எழுதிய கதைகளுக்கும் படங்கள் வரைந்து தள்ளினார்.

பால் தாக்கரே வேலை பார்த்த ப்ரீ பிரஸ் ஜர்னலில் இவரும் கார்ட்டூனிஸ்டாக இணைந்தார். அங்கே எக்கச்சக்க வேலை வாங்கப்பட்டாலும் முகம் சுளிக்காமல் வேலை பார்த்த லக்ஷ்மண் கருத்து மோதல்களால் அந்த இதழை விட்டு வெளியேறினார்.

பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் இணைந்தார். முதலில் அவரைச் செய்தித்தாளின் மாலை இணைப்பிதழில் வரைய வைத்தார்கள்.

இவரின் பேனாவின் பெருமை புரிந்து சீக்கிரமே தினமும் அரசியல் கார்ட்டூன் வரையும் பொறுப்பை ஒப்படைத்தார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ,’you said it’ என்கிற பெயரில் ஐம்பது வருடங்களுக்கு இடைவிடாமல் காமன்மேன் மூலம் மக்களின் வலிகளை, ஏமாற்றங்களை, எதிர்பார்ப்புகளை அவர் கொண்டு சேர்த்தார்.

காலையில் எழுந்ததும் செய்தித்தாள்களில் மதியம் வரை முழுமையாகத் தன்னைப் பல்வேறு செய்திகளுக்குள் ஈடுபடுத்திக்கொள்வார். பல்வேறு அரசியல் பார்வைகளை உள்வாங்கிக் கொண்ட பின்னர், மக்களின் வலியை எப்படி அங்கதத்தோடு சொல்வது என்று மதிய உணவுக்குப் பின்னர் யோசித்துவிட்டு அவர் கேலிச்சித்திரத்தை தீட்டி முடிக்கையில் சாதாரண மனிதனின் அழுகுரல் நகைச்சுவையோடு கொண்டு சேர்க்கப்பட்டு இருக்கும்.

எந்த அளவுக்கு அவர் அரசியல்வாதிகளை கவனித்தார் என்றால் தேவகவுடா, வி.சி.சுக்லா ஆகியோர் எந்த பாணியில் பேசுவார்களோ அதை அப்படியே மிமிக்ரி செய்கிற அளவுக்கு ஆழமாக அரசியல்வாதிகளை தொடர்ந்து கவனித்து வந்தார். அரசியல், தத்துவம், வரலாறு ஆகியவற்றை கல்லூரியில் பயின்றது அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது.

“நீங்கள் ஓய்வே எடுத்துக்கொள்ள மாட்டீர்களா?” என்று கேட்கப்பட்ட பொழுது, “அரசியல்வாதிகள் எல்லாரும் நல்லவர்களாக ஆகிவிடுகிற நாளோடு நான் ஓய்வு பெற்றுவிடுவேன். அது எப்பொழுதும் நடக்காது இல்லையா?” என்று கண்சிமிட்டிய அவர் அரசியல்வாதிகள் ஒரே மாதிரி செயல்பட்டுத் தன்னைச் சலிப்புக் கொள்ளச் செய்வதாகப் புலம்பினார். அவருக்கு ஆறுதலாக அவ்வப்பொழுது வித்தியாசமாக எதையாவது செய்து கொண்டிருந்த இருவர் லாலுவும், ஜெயலலிதாவும் தான்!

90 ப்ளஸ் வயதில் பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் அவரின் உடல் பெரும்பாலும் செயலிழந்தது. அந்தச் சூழலில் கூட ஒரே ஒரு கையால் அவர் வீட்டில் இருந்தபடியே கேலிச்சித்திரங்கள் வரைந்தார். அதை எடுத்துக்கொண்டு போகப் புனாவில் இருந்து வீட்டுக்கு ஒருவர் அனுதினமும் வந்து சென்றார். ராமன் மகசேசே, பத்ம பூஷண் விருதுகளைப் பெற்றிருக்கும் அவரின் ஒரு கார்டூன் பற்றிய விவரிப்போடு முடிப்பது சரியாக இருக்கும்.

விவாசய நிலங்கள் மீதான உச்சவரம்பை அரசு நீக்கியது என்கிற செய்தி மேலே எழுதப்பட்டு இருக்கும். விவசாயியின் தலை மீது பெரிய கல் ஸ்லாப் இறக்கப்படும். அதன் மீது அரசியல்வாதி வெற்றி பெருமிதத்தோடு அமர்ந்து இருப்பார். இப்படி மக்களின் வலிகளை உணராதவர்களைப் பேனா முனை கொண்டு குத்தி கிழித்தவர் அவர். மென்மையாக, சிரிக்கவைத்தபடியே அந்த அறுவை சிகிச்சை ஐம்பது வருடங்கள் நடந்தது. சாதாரண மனிதனை கவனப்படுத்திக் கொண்டே இருந்த அவருக்கு அஞ்சலிகள்!

Advertisements

பிரியத்தை முறித்தல் சுலபம்!


ஒரு பிரியத்தை முறித்தல்
அத்தனை சுலபமாய் இருப்பதாக சொல்கிறார்கள்.
அழுகையை அடக்கியபடி ஒருவர் பிரிவது தெரியும் உனக்கு…
மரணத்தின் மவுனம் தவறவிடப்படுவது
புரியும் நமக்கு…
கடவுளின் ஆயுதங்கள் சாத்தானுக்கு கைமாறுவது
அறிந்தும் கைகட்டி நிற்க வேண்டியிருக்கிறது…
முத்தங்கள் கொடுத்துக்கொண்ட இதழ்களில்
“இனி பார்க்க முடியாது!” என்கிற சப்தங்கள் எழுவது
கால்டாக்ஸி ஒலியில் ஒளிந்து கொள்ள பிரார்த்திக்க மட்டுமே முடிகிறது…
பரிசுப் பொருட்கள் மீண்டும் வந்து சேரும் நாளில்
முகவரி மாறியிருப்பது சொல்ல நாய்க்குட்டி மட்டுமே இருக்கும்..
ஊருக்காக வாழ்தல் என்றபடி சோறள்ளிப் பிசைகையில் கை எப்பொழுதும் போல் அலைபேசியை அனிச்சையாய் வருடுகிறது…
ஆமாம்! எத்தனை முறை முறித்தாலும் காயாமல்
கசியும் ரணத்தின் திரவத்தை
அன்பு ஏன் பசிகொண்டு கேட்கிறது?

பெரியவர்கள் யார்?


டுத்தடுத்து நீண்ட காலமாக நேசித்து வரும் நண்பர்களின் காதல்கள் ஜாதியின் பெயரால், குடும்பக் கவுரவத்தின் பெயரால் பலி வாங்கப்படுவதை எதுவும் செய்ய முடியாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். “பதிவுத் திருமணமோ, விலகி வந்தோ கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லையா?” என்று கேட்டால் என்னமோ எழுதி வைத்தது போல ஒரு பதிலை சொல்கிறார்கள்.

“எங்க அப்பா, அம்மா எங்களுக்கு எந்தக் குறையும் இல்லாம அவங்க அளவில் பார்த்துக்க முயற்சி பண்ணினாங்க. வாழ்க்கையில் யார்கூட ட்ராவல் பண்ணனும்னு முடிவு பண்ணுறதுக்கு அவங்க தடை சொல்ல மாட்டாங்கனு நினைச்சோம். இல்லைன்னு தெரிஞ்சிடுச்சு. தொடர்ந்து பேசிப் பார்ப்போம். அவங்க விருப்பம் இல்லாம கல்யாணம் கண்டிப்பா பண்ணிக்க மாட்டோம். சொந்தக்காரன் என்ன நினைப்பான், தெருக்கடைசியில இருக்கிறவன் என்ன நம்மளைப் பத்தி பேசுவான்னு கவலைப்படுறாங்க. நாங்க என்ன நினைப்போம்னு யோசிச்சு இருக்கலாம்.”

இதில் யார் பெரியவர்கள் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை

இந்திக்கு இணையான இடம் தமிழுக்கும் வேண்டும்!


இந்திக்கு இணையான இடம் தமிழுக்கும் வேண்டும்:

இந்த வருட குடியரசு தினம் சிறப்பானது. தென்னிந்தியாவை அதிர வைத்த, தமிழகம் முன்னின்று நடத்திய பரவலான இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களின் ஐம்பதாவது ஆண்டை அடைகிறோம்.

பல்வேறு போலீஸ் தாக்குதல்கள், மரணங்கள் ஆகியவற்றுக்கு வழிவகுத்த இந்தப் போராட்டங்கள் ஆங்கிலத்தை இந்திக்கு இணையாக அதிகாரப்பூர்வ மொழியாக மத்திய அரசு தொடரச் செய்தது. இந்தி வெறியர்கள் இந்த நாள் வரை இது ஆங்கிலம் என்கிற அந்நிய மொழியின் மீது தென்னிந்தியர்களுக்கு உள்ள காதலை இது காட்டுவதாக எண்ணிக்கொண்டு உள்ளார்கள். ஆனால், அது தவறான பார்வை. தென்னிந்தியர்கள் ஆங்கிலத்தை நாடவில்லை, தங்களின் சொந்த மொழியை இந்திக்கு இணையான இடத்தில் வைக்கவே விரும்புகிறார்கள். இந்தி மட்டும் அதிகாரப்பூர்வ மொழியாக அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட பொழுது எதிர்ப்பதற்கான காரணங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம்.

இந்திய கூட்டமைப்பு உருவான சம்பவங்களைக் கவனித்தால் தென்னிந்தியா பெரிய ஆர்வமில்லாமலே அதில் பங்கேற்றதை காணமுடியும். ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சிகள் பெரிய அளவில் வட இந்தியாவில் நடை பெற்றதையும் வட இந்தியாவில் நிகழ்ந்த விடுதலைப் போராட்ட இயக்கங்களின் நீட்சியே பெரும்பாலும் தென்னிந்தியாவில் நடந்தது. இவற்றில் வடக்கு அதிக ஆர்வம், வேகம் கொண்டு செயல்பட்டது. இதற்கு என்ன காரணம் இருந்தாலும், விடுதலைக்குப் பிந்தைய இந்திய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தெற்கின் பங்கேற்பு இதனால் குறைவாகவே இருந்தது. இந்தக் காரணம், மற்றும் வெறும் பல காரணங்களால் தங்களின் மொழியை இந்திக்கு இணையாக மத்திய அரசு நடத்த வேண்டும் என்று அப்பொழுது அழுத்திச் சொல்ல தவறிவிட்டது தெற்கு. ஆனால், தற்போது வேறொரு காலத்தில் வாழ்கிறோம்.

தென்னிந்திய மாநிலங்கள் தற்போது அரசு அதைச் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். நான் இதை எழுதுகிற பொழுதே, பல்லாயிரக்கணக்கான திராவிட இளைஞர் செயல்பாட்டாளர்கள் எட்டாவது பட்டியலில் இருக்கும் எல்லா மொழிகளையும் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இது என்னவோ சென்னையோடு முடிந்து விடுகிற போராட்டம் என்று நினைத்தால் பெங்களூரு மக்களும் இதே மாதிரியான கோரிக்கையை வைக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். யாரெல்லாம் இந்தியே இந்தியர்களின் மொழி என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் ஆங்கிலத்துக்குப் பதிலாக ஏன் அதற்கும் மேலாகத் தங்களின் தாய்மொழியைத்தான் இம்மக்கள் விரும்புகிறார்கள். இதனால் அவர்கள் ஆங்கிலத்தையோ, அது தருகிற வாய்ப்புகளையோ நிராகரிக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. அவர்கள் ரங்ககூ என்கிற ஜப்பானிய சொல்லின் பொருளான, ‘மேற்கிடம் இருந்து கற்றல்’ என்பதை விரும்புகிறார்கள். தங்களின் தாய்மொழியை ஆங்கிலத்தில் உள்ள விஷயங்களால் செம்மைப்படுத்தலை இளைஞர்கள் செய்கிறார்கள். கூட்டாகப் பலர் சேர்ந்து பங்களிக்கும் Wiktionary மாதிரி தளங்களில் இந்தியின் இருப்பை விடத் தமிழ்,கன்னடம் ஆகியவற்றின் இருப்பு அதிகமாக உள்ளது பல நூறு கோடிகளை மத்திய அரசு அநியாயமாக இந்தியை வளர்க்க செலவிட்டும் சில திராவிட இளைஞர்களின் வேகத்துக்கு அது ஈடுகொடுக்க முடியவில்லை. நன்றாகப் படித்த மக்கள் தங்களின் பிள்ளைகளைக் கூட்டாக நடத்தப்படும் தாய் மொழி வழிக்கல்வி கூடங்களுக்கு அனுப்பி வைக்க ஆரம்பித்து உள்ளார்கள். ஆங்கில வழிக் கல்விக் கூடங்களில் பல்வேறு குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதைவிட ஆங்கிலத்தைத் திணித்தலே ஒரு பெரிய வன்முறைதான்.

இந்தியை தங்களின் அரசியல் ஆர்வம், வளர்ச்சி ஆகியவற்றை அடைக்க வந்த புல்லுருவியாகவே இவர்கள் பார்க்கிறார்கள். இந்தியை இதற்கு முன் இருந்த எந்த அரசுகளைவிடவும் விட வேகமாக மோடி அரசு வளர்க்க செய்த அபத்தமான செயல்கள் இந்த எண்ணத்தைக் காட்டுத்தீ போலப் பரப்பியிருக்கிறது. எங்கெல்லாம் இந்தியை தென்னகத்தில் பார்க்கிறார்களோ அங்கெல்லாம் அதை எதிர்க்க திராவிட இளைஞர்கள் (தமிழக இளைஞர்கள் மட்டுமல்ல) அழைக்கப்படுகிறார்கள். சமூக வலைதளங்களில் எப்படி இந்தி திணிப்பை பொது இடங்கள், வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், விளம்பர நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் எதிர்கொள்வது என்று பதிவுகள் ஏராளமாக உள்ளன. இவை அனைத்துக்கும் மேலாக, மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு தங்களின் சொந்த சிக்கல்களைத் தாண்டி மற்றவற்றையும் கவனிக்க வைத்திருக்கிறது. அவர்கள் கர்நாடகாவில் கன்னடம் பேசுபவர்களை, தமிழகத்தில் தமிழ் பேசுகிறவர்களைக் காண்கிறார்கள். பயணம், இணையம் ஆகியனவும் உலகம் முழுக்க என்ன நிலை உள்ளது என்பதைப் புரிய வைத்துள்ளது. ஐரோப்பிய யூனியன் பல்வேறு மொழிகளின் மொழிபெயர்ப்புக்கு பல கோடி டாலர்களைச் செலவிடுவதைப் போலவே இந்திய நாடாளுமன்றமும் நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முக்கிய மொழியையும் இந்திய கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ மொழி என்று அறிவிக்க வேண்டும்.

நான் முன்னரே சொன்னது போல நாம் வேறொரு காலத்தில் வாழ்கிறோம். ஒரு பக்கம் இந்தி திணிப்பே இந்தியாவை ஒன்றாக வைத்திருக்கும் ஒரே வழி என்று எண்ணுகிறவர்களும், அப்படி இந்தியை திணிக்கக் கூடாது என்று கருதுகிறவர்கள் இன்னொரு பக்கமும் நிற்கிறார்கள். இன்னமும் இந்திய ஜனநாயகத்தின் ஆரம்பக் கட்டத்தை விட்டு அவர்கள் வெளிவரவில்லை. இந்தி என்ன இடத்தை அனுபவிக்கிறதோ அதை மற்ற மொழிகளும் அனுபவித்தால் மட்டுமே இந்தியா ஒன்றிணைந்த நாடாகத் தொடரும். அது நடந்தால், ஆங்கிலத்துக்கு அதிலிருந்து நல்ல விஷயங்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு அதன் வழி என்ன என்று காட்டப்படும்.

(இன்றைக்கு மொழிப்போரின் பொன்விழா ஆண்டு. கிரண் பட்னியின் கட்டுரை அதை ஒட்டி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது )

மூலம் :
http://ibnlive.in.com/blogs/kiranbatni/3707/65468/hindi-imposition-on-south-india-then-and-now.html

தமிழில் : பூ.கொ. சரவணன் 🙂

ஆமாம் ! இஸ்லாமில் சீர்திருத்தங்கள் தேவை


சிறந்த சமூகச் சீர்திருத்தவாதியும், கல்வியாளருமான சர் சையது அகமது கான் இறைவனின் வார்த்தையை மறுவாசிப்பு செய்வதன் மூலம் இறைவன் மற்றும் உலக உயிர்களுக்கு இடையே ஒத்திசைவை உண்டு செய்ய வாதாடினார். மனித உயிர்கள், இறைநம்பிக்கை இரண்டுக்கும் இடையே போராட்டம் வருவது போலத் தோன்றினால் இப்படி மறுவாசிப்பு நிகழ வேண்டும் என்று அவர் கருதினார்.

சையது அகமது கானின் பார்வையில், “குரான் கடவுளின் வார்த்தை. இந்த உலகில் பார்க்கும் எல்லாமும் இறைவனின் படைப்பே.” ஆகவே, இறைவனின் படைப்புக்கும், இறைவனின் சொல்லுக்கும் இடையே எந்த முரண்பாட்டையும் யோசித்தல் சாத்தியமற்றது என்றார். “நாம் ஏதேனும் முரண்பாட்டைக் கண்டோம் என்றால் நாம் இறைவனின் வார்த்தையைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்றே பொருள்.
இந்த மாதிரியான சூழல்களில் நாம் இறைவனின் வார்த்தை பற்றிய நம்முடைய பார்வையை மறு ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். இறைவனின் வார்த்தை, படைப்பு இரண்டுக்கும் இடையே ஒத்திசைவைக் கொண்டு வருவதற்கு நாம் பாடுபட வேண்டும்.” என்று அவர் எழுதினார். ஆகவே, இறைவனின் வார்த்தைகள் நீங்கள் எப்படி வாழ்க்கையை வாழ வேண்டும் என்று வழிகாட்டினாலும், அந்த வார்த்தைகளின் நடைமுறை பயன்பாடு, செயல்பாடு ஆகியவை அக்காலச் சூழல்கள், காலத்தின் தேவைகளைப் பொருத்து முடிவு செய்யப்பட வேண்டும்.

சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்களின் மிருகத்தன்மை-அதாவது பெஷாவர் பள்ளிப் படுகொலைகள், பாரீஸ் தாக்குதல்கள் இரண்டிலும் ஈடுபட்டவர்கள் இந்தக் காட்டு மிராண்டித்தனத்துக்கு இஸ்லாமிய நம்பிக்கைகளைத் தாங்கள் தூக்கிப் பிடிப்பதாகச் சொல்லிக்கொண்டார்கள். இதனால் இந்தக் கேள்வி எழாமல் இல்லை, “இஸ்லாமில் சீர்திருத்தம் தேவைப்படுகிறதா? அதைச் சீர்திருத்த முடியுமா?”

இரண்டுக்குமே ஒரே பதில், “ஆம்! முடியும்.”

இஸ்லாமின் பெயரால் நடைபெறும் ஒவ்வொரு இரக்கமற்ற கொலைக்கும் பின்னால், ஒரு சராசரி இஸ்லாமியர் அழுத்தத்துக்கு உள்ளாகிறார். அல்லது தானாகவே அந்தத் தீவிரவாதிகளை விமர்சிப்பதை செய்வது முக்கியம் என்று கருதுகிறார். அவர்கள் அனைவரும் கொலையாளிகளின் மதம் தங்களின் மதமில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், கால ஓட்டத்தில் தாக்குதல்கள் கூடிக்கொண்டு போகப் போக உலகம் இஸ்லாமை ஒரு சிக்கலாகப் பார்க்க ஆரம்பிப்பது அதிகரித்து உள்ளது.

இஸ்லாம் காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளாமல் இருந்து விட்டது. மற்ற மதங்கள் சீர்திருத்த இயக்கங்கள், மாற்றத்தை முன்னெடுப்பவர்களை ஆரம்பத்தில் இருந்தே கொண்டிருந்தன. இஸ்லாம் ஒரு ஏழாம் நூற்றாண்டு நம்பிக்கையாக நின்றுவிட்டது. நிறுவனமயமாக்கப்பட்ட மற்ற மதங்கள் இந்த இறைவன்-உலக உயிர்கள் சமநிலையைத் தக்கவைத்ததன் மூலம் அதன் பற்றாளர்கள் இரண்டும் ஒன்றுகொன்று எதிரானதாகப் பார்க்காமல், ஒன்றை இன்னொன்று முழுமைப்படுத்துகிற ஒன்றாகக் காண்கிற நிலையை எட்டினார்கள். ஆகவே, அவர்களின் நம்பிக்கை சொந்த வாழ்க்கையோடு தொடர்புடைய ஒன்றாக அமைந்து விடுகிறது, உலகத்தைப் பார்க்கும் கண்ணாடியாக மதத்தை அவர்கள் பயன்படுத்துவது இல்லை. இஸ்லாம் இன்னமும் இந்தச் சமநிலையை அடைய வேண்டியிருக்கிறது. சிலாமியர்கள் இறைவன், உலக உயிர்கள் இரண்டில் ஒன்றை தேர்வு செய்வதோ அல்லது அவற்றுக்கிடையே ஆன போராட்டம் என்றோ காணாமல் இரண்டையும் பிணைத்து வாழ்வது கடினமான ஒன்றாக இருக்கிறது.

இதற்காக ஒரு சராசரி முஸ்லீம் மீது குற்றம் சொல்லலாமா? அல்லது இந்த மாறாத மனோபாவம் மதத்தைச் சுற்றியுள்ள சூழலோடு தொடர்ந்து உரசலுக்கு அழைத்துச் செல்கிறதா? எல்லா மத நூல்களும் அவை எப்படி வாசிக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து நல்லதாகவோ, தீயதாகவோ மாற முடியும். துரதிர்ஷ்டவசமாக வன்முறை, வெறுப்பை முன்னெடுக்கும் பற்றாளர்களின் குரல்கள் தான் பெரும்பாலும் கேட்கிறது.

காந்தியும், விவேகனந்தரும் கண்ட கீதையின் வாசிப்பு கோட்சே, மோகன் பகவத் வாசிப்பதில் இருந்து மாறுபட்டது. அதே போல மவுலானா ஆசாத், மவுலானா வாஹிதுதின் கான் குரானை வாசிப்பது பக்தாதி, பின் லேடனின் வாசிப்பில் இருந்து மாறுபட்டது. ஆகவே, நூலை குறைசொல்வது பற்றாளர்கள், எதிர்ப்பாளர்கள் இருவரையும் எங்கும் கொண்டுபோய்ச் சேர்க்கப்போவதில்லை, நூலானது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட சூழலில் எழுதப்பட்டது. அதன் வாசிப்பும், அதன் விளக்கமும் காலத்துக்கு ஏற்றார் போல மாறவேண்டும்.

இஸ்லாமில் சீர்திருத்தத்துக்கு வருவோம். இஸ்லாம் தோன்றிய காலத்தில் நிலவிய பல்வேறு அவலங்களுக்கு எதிராக அம்மதம் கிளர்ந்து எழுந்து புரட்சி செய்ததால் தொடர்ந்து மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைப் புதுப்பித்துக்கொண்டது. இன்று நம்பிக்கை என்கிற பெயரால் நமக்குக் கிடைப்பது திரிக்கப்பட்ட, பழமைவாதம் நிரம்பிய வாசிப்பு தான். ஆன வாசிப்புதான். இஸ்லாமின் இரண்டு ஆரம்பகால நூற்றாண்டுகள் அறிவியல், நவீன புத்தாக்கங்களில் மாபெரும் சாதனைகளால் நிரம்பியிருந்தது. ஆனால், 13-ம் நூற்றாண்டு துவங்கியே அறிவுச்சூழல் பழமைவாத சேற்றில் மூழ்கி காணாமல் போனது. கல்வி, அறிவியல் விசாரணை, புத்தாக்கம் கெட்ட வார்த்தைகளாக மாறின.

நீதிபதி அமிர் அமீர் அலி தன்னுடைய ‘இஸ்லாமின் மெய்ப்பொருள்’ எனும் அற்புதமான நூலில் ஒரு அரேபிய ஆசிரியரின் கருத்தை குறிப்பிடுகிறார், “அரேபியா எண்ணற்ற கலிலியோக்கள், நியூட்டன்கள், கெப்ளர்கள் ஆகியோரின் தேசமாக இருந்திருக்கலாம், ஆனால், தத்துவம், அறிவியல் ஆகியவற்றை ஒதுக்கி வைத்து இறையியல், சட்டத்தைத் தவிர மற்ற எதிலும் அறிவு பெறுவது வீணானது என்கிற எண்ணம் இஸ்லாமிய உலகின் வளர்ச்சியைத் தடை செய்துவிட்டது. இந்தக் காலம் வரை இது அறியாமை, அறிவுத்தேக்கம் ஆகியவற்றுக்கு முக்கியமான காரணமாகத் திகழ்கிறது.”

இந்த மதிப்பீடு சரியே என்பதற்கு உலக அளவில் இஸ்லாமிய தேசங்களின் நிலையே சான்று. சில செல்வவளம் மிகுந்தவையாக இருந்தாலும் மனித உரிமைகள், பாலின சமத்துவம், ஜனநாயகம், புத்தாக்க குறியீடுகள் ஆகியவற்றில் கடைசி இடங்களில் தள்ளாடிக்கொண்டு இருக்கின்றன.

இந்த அரேபிய மனோபாவத்தில் இருந்து இஸ்லாம், இஸ்லாமியர்கள் மீட்கப்பட வேண்டும். இஸ்லாமின் நூல், மதத்தத்துவம் ஆகியவற்றைப் பழமைவாதத்திடம் இருந்து காப்பாற்றி நவீன, அறிவியல் விசாரணைக்கு ஏற்ப கருத்துக்கள், வாசிப்புகளைப் பரப்ப வேண்டும். சுன்னி இஸ்லாமில் போப்பை போன்ற மதத்தலைவர் இல்லை என்பது உண்மை என்றாலும் உல்லாமாக்கள், அரசு இரண்டுக்கும் இடையே உள்ள புனிதமற்ற தொடர்பு ஆணாதிக்க, ஜனநாயகத்தன்மையற்ற, பழங்காலக் குரான் வாசிப்பையே வழங்க காரணமாக இருக்கிறது. இந்த இரு சார்பினரும் தங்களுடைய கொடூரமான செயல்பாடுகளுக்கு மதத்தில் இருந்தும், திரிக்கப்பட்ட இறைவாசகத்தில் இருந்தும் பாதுகாப்பு தேடுகிறார்கள்.

இஸ்லாம், இஸ்லாமிய கற்றல் ஜனநாயகமயமாக வேண்டும். மவுலானா ஆசாத் ஒரு முறை குறிப்பிட்டது போல, “வரலாறு முழுக்க உல்லாமாக்களின் செயல்கள் ஒவ்வொரு காலத்திலும் இஸ்லாமுக்கு அவமானம், களங்கம் ஆகியவற்றைக் கொண்டு வந்திருக்கிறது.”

சவுதி எண்ணெயை மட்டுமல்லாமல் இஸ்லாமின் பெயரால் பழமைவாதம், காட்டுமிராண்டித்தனம் ஆகியவற்றையும் ஏற்றுமதி செய்கிறது. இது எந்த வகையிலும் மாற்றத்தையோ, சீர்த்திருத்ததையோ கொண்டு வராது. மேற்கிலுள்ள சவூதியின் நண்பர்கள் அதனுடைய கண்மூடித்தனமான போக்கை ஆய்வு செய்ய வேண்டும். சவூதி அரேபியா இஸ்லாமிய வளர்ச்சி, புரிந்துணர்வு ஆகியவற்றுக்கு மற்ற எந்தச் சக்தியை விடவும் பெரிய தீங்கை புரிந்துள்ளது. சவூதியின் இஸ்லாம் பற்றிய பார்வையை நிராகரிக்க வேண்டிய தருணம் இது. மீட்டெடுத்தல் என்பதில் மீண்டும் விழிப்புணர்வு கொள்ளுதல் இல்லையென்றால் அதில் பயனில்லை.

கெய்ரோவின் அல் அசார் பல்கலையில் இஸ்லாமிய சீர்திருத்தங்களுக்கு எகிப்திய அதிபர் குரல் கொடுத்தார். அவரைப் புதிய அட்டடுர்க், இஸ்லாமிய மார்டின் லூதர் கிங் என்றெல்லாம் பரவலாகப் புகழ்கிறார்கள். சீர்திருத்தத்துக்கு ஒரே மாதிரியான நிலையான அணுகுமுறை விடையல்ல என்றே எண்ணுகிறேன். சீர்த்திருத்தத்துக்கான குரல் கீழிருந்து இஸ்லாமிய மறு விழிப்பில் பங்குடைய எளிய ஆண்கள், பெண்களிடமிருந்து எழ வேண்டும்.

இஸ்லாமிய மறுமலர்ச்சி மக்கள் திரளால் ஏற்பட வேண்டும், முல்லாக்களால் ஏற்படுவதாகச் சொல்லப்படும் மறுமலர்ச்சி எல்லாம் காலாவதியான ஒன்று.
மூலம் :
http://www.ndtv.com/arti…/…/yes-islam-needs-to-reform-647551
கட்டுரையாசிரியர் முகமது ஆசிம் NDTV 24×7 சேனலின் மூத்த செய்தி ஆசிரியர்

ஹிந்தித் திணிப்பால் ஹிந்தி வளருமா?- யோகேந்திர யாதவ்


ஹிந்தித் திணிப்பால் ஹிந்தி வளருமா?:

ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடர்பாளரும்,அரசியல் விஞ்ஞானியுமான யோகேந்திர யாதவ்ஹிந்தி திவாஸ் நாள் கொண்டாட்டத்தை நிறுத்த வேண்டும் எனச்சொல்லி எழுதிய கட்டுரையின் மொழியாக்கம் இது :
செப்டம்பர் 14 அன்று கொண்டாடப்படும் ஹிந்தி திவாஸ் நாள் வருடாவருடம் நடக்கும் ஆன்மாவற்ற அரசாங்க சடங்கு. ஒரு ஹிந்தி திவாஸ் விழாவை நீங்கள் இரங்கல் கூட்டமோ என்று எண்ணிக்கொண்டால் உங்களை மன்னித்துவிடலாம்.
அந்த இரண்டு வாரங்கள் கடமை தவறாமல் வருடம் முழுக்க இந்தி நமக்கு எவ்வளவு அத்தியாவசியமானது என்பதை நினைவுபடுத்தும்.

இந்திய அரசாங்கம் ராஜ்பாஷாவான ஹிந்தியை வளர்க்கிறேன் என்று எடுத்த முன்னெடுப்புகள் மாண்டரின்,ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளுக்கு அடுத்து பெரிய மொழியாகத் திகழும் ஹிந்தியை ஒரு அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினமாக மாற்றியிருக்கிறது. ஹிந்தி திவாஸ் நம் நாட்டின் மொழிக்கொள்கையில் என்னவெல்லாம் தவறாக இருக்கிறதோ அது எல்லாவற்றின் அடையாளமாக திகழ்கிறது. இந்த தவறுகளை சரி செய்வதன் துவக்கமாக ஹிந்தி திவாஸ் விழாக்கொண்டாட்டத்தை நீக்கலாம்.

ஹிந்தியை தொடர்ந்து தூக்கிப்பிடிக்கும் நானே இப்படியொரு பரிந்துரையை தருவது வினோதமானதாக இருக்கலாம். என்னுடைய நண்பர்கள் இதை எதிர்க்கலாம். அவர்கள் ஹிந்தியில் அதிக பொருள் மற்றும் உயிர்ப்பை கொண்டு வந்து அதை வளர்ப்பதை விட்டுவிட்டு அரசாங்கம் ஹிந்திக்கு கொடுத்திருக்கும் ஒரே ஒரு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தையும் விடுவதா என்று எதிர்க்குரல் கொடுக்கலாம்.
நான் முரண்படுகிறேன். ஹிந்தியை சூழ்ந்திருக்கும் அதிகார கருவிகள் ஆங்கிலத்துக்கு ஹிந்தி அடிமைப்பட்டு இருப்பதை உறுதி செய்திருக்கிறது. மற்ற இந்திய மொழிகளோடு ஹிந்திக்கு இருக்கும் தொடர்பையும் அது துண்டித்து விட்டது இன்னமும் மோசமான ஒன்றாகும். அதன் ‘வட்டார வழக்குகளோடு’ம்,அதன் ஆற்றல் மற்றும் படைப்புத்திறனோடும் ஹிந்தி இன்னமும் உயிர்த்திருக்கிறது. இந்த பழைய நடைமுறைகளை உடைத்தால் மட்டுமே முன்னோக்கி நகர முடியும்
நான் எப்படி மற்றும் ஏன் என்று விளக்குகிறேன். அதிகாரப்பூர்வ ராஜ்பாஷா பட்டம் ஹிந்தியின் உண்மையான நிலையை மறைக்கிறது. சுற்றிப்பார்த்தால் தான் உண்மையை பதிவு செய்ய முடியும். எங்கெங்கும் நிரம்பி இருக்கும் ஆங்கிலத்தில் சீக்கிரமாக பேச உதவும் கோர்ஸ்களுக்கான விளம்பரங்கள் காளான்கள் போல முளைத்துக்கொண்டு இருக்கும் ஆங்கில வழிக்கல்வி தரும் ‘கான்வென்ட்’கள் ,தன்னை அரைகுறை ஆங்கிலத்தில் வெளிப்படுத்திக்கொள்ள முயலும் பரிதாபத்துக்குரிய சூழல் எல்லாமும் எப்படிப்பட்ட அடுக்குநிலையில் மொழிகள் இந்தியாவில் இருக்கின்றன என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

கனவுகளின் மொழியாக ஆங்கிலமே இருக்கிறது. வேறெந்த தேர்வும் இல்லாதவர்களின் மொழியே ஹிந்தி. csat சிக்கலில் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்துகிறது என்பது நிரூபணமானது. ஒரு சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் மாணவனின் திறனை ஆங்கில மூலத்தில் இருந்து வரும் மொழிபெயர்ப்பின் மூலம் சோதிப்பது காலனிய மனோபாவமே அன்றி வேறில்லை. என்றாலும்,அரசாங்கம் தேர்வுகளை நடத்தியது. ஆங்கிலமே அதிகாரத்தின் மொழி. இந்த வகையில் மற்ற இந்திய மொழிகளின் நிலையே இந்தியின் நிலையம் ஆகும். அதன் சிறப்பு நிலை மற்ற மொழிகளுடனான அதன் உறவை பாழ்படுத்தியிருக்கிறது . எங்கேயும் இந்தியை தேசிய மொழி என்று அரசியலமைப்பு சட்டம் சொல்லாத பொழுதும் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள். அதை பிற மொழியினர் எதிர்க்கிறார்கள். இந்தி இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி என்றாலும் அது இந்தியாவின் பழமையான மற்றும் வளமான மொழியில்லை.

ஒவ்வொரு இந்தி பேசாத பிற மக்கள் ஓரளவுக்கேனும் இந்தியை பள்ளிகளில் கற்க வேண்டியிருக்கிறது. இந்தி பேசுபவர்கள் வேறெந்த நவீன இந்திய மொழியையும் கற்பதில்லை. உண்மையில் அரசாங்க ஹிந்தி அதன் கலாசார மற்றும் மொழியியல் பாரம்பரியம் மற்றும் அதன் பன்னிரெண்டு ‘வட்டார’ வழக்குகளை விட்டும் தள்ளி நிற்கிற ஒன்றாகவே இருக்கிறது. ஹிந்தி மற்றும் உருது ஆகியவற்றுக்கு இடையேயான பிரிவினை திட்டமிட்டே வளர்க்கப்பட்டது. ஹிந்தி இறந்து விட்டது என்றோ அது இறந்து கொண்டிருக்கிறது என்றோ அர்த்தமில்லை. அது உண்மையில் வளர்ந்தவண்ணம் இருக்கிறது. பம்பாய் சினிமா,கிரிக்கெட் வர்ணனை,வேகமாக வளரும் ஹிந்தி மீடியா அதை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. சமகால ஹிந்தி இலக்கியம் மற்ற நவீன மொழிகளின் இலக்கியங்களோடு ஒப்பிடும் வண்ணம் சிறந்திருக்கிறது. ஹிந்தியில் அற்புதமான இலக்கிய விமர்சன பாரம்பரியம் இருக்கிறது மற்றும் சமூக அறிவியலில் பல்வேறு ஆக்கங்கள் அரசாங்க ஹிந்தி வளர்ப்பைத் தாண்டி நடந்திருக்கின்றன. er,
ஆகவே ஹிந்தி திவாஸ் நிகழ்வுக்கு பதிலாக பாஷா திவாஸ் என்கிற நிகழ்வை மாற்றாக நடத்த நான் பரிந்துரைக்கிறேன். அந்நாளை இந்த நாட்டின் மொழிகளின் பன்முகத்தன்மை மற்றும் வளத்தை குறிக்க பயன்படுத்தலாம். பல்வேறு மொழிகளுக்கு இடையேயான பந்தத்தை பலப்படுத்தவும் அது ஒரு அடையாளம் ஆகும். அரசாங்கம் அதை செய்யாது. ஹிந்தியை உண்மையில் காதலிப்பவர்கள் இந்த போலித்தனத்தை உடைக்க முன்னெடுப்பு எடுக்க வேண்டும்.
அதற்கு பதிலாக அவர்கள் என்ன செய்ய வேண்டும் ? ஹிந்திக்கு செய்யக்கூடிய பெரிய சேவை அதை பயன்படுத்துவது தான். முதலில் பயன்படுத்தக்கூடிய,செயல்பாட்டுத்தன்மை கொண்ட ஹிந்தி அகராதிகளை உருவாக்க வேண்டும்.

சமஸ்கிருதமயமக்கப்பாட்ட அரசாங்க ஹிந்தியை விட்டு நகரவேண்டும். ஹிந்தி தன்னுடைய கதவுகள்,ஜன்னல்களை அதன் வட்டார வழக்குகள்,ஆங்கிலம் முதலிய பிற மொழிகளுக்காக திறந்து வைத்து அதை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். இளந்தலைமுறையை நாம் ஹிந்தி சார்ந்து ஈடுபடுத்த வேண்டுமென்றால் நாம் அவர்களை ஈர்க்கும் இலக்கியம் படைக்க வேண்டு. குல்சாரின் பாஸ்கி கா பஞ்சதந்த்ரா அல்லது சுகுமார் ரெவின் அபோல் தபோல் ஆகியன இதற்கு மாதிரியாக பயன்படலாம். உயரிய தரம் வாய்ந்த பாடப்புத்தகங்களை கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஹிந்தி மாணவர்களுக்காக எழுத வேண்டும்

மேலும் சீனம் மற்றும் ஜப்பானிய மொழியைப்போல ஹிந்தியும் இணைய பயன்பாட்டுக்கு உகந்ததாக மாறவேண்டும். மேலும் அதிகத்தரம் வாய்ந்த மொழிபெயர்ப்பு திட்டத்தை தேசிய அளவில் முன்னெடுத்து ஆங்கிலம் உட்பட வெவ்வேறு மொழிகளில் இருந்து நூல்களை ஹிந்திக்கு மொழிபெயர்க்க வேண்டும். ஹிந்தி உருதுவில் இருந்து ஷஹ்யரி வகைக்கவிதைகளை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் அதன் சட்டமொழியையும்,தமிழின் செம்மையான பாரம்பரியத்தையும்,மலையாளத்தின் அச்சு கலாசாரத்தையும்,கன்னடத்தின் சமகால இலக்கியங்களையும்,மராத்தியின் எதிர்ப்பிலக்கியதையும், வங்கத்தின் அறிவுசார்ந்த எழுத்துக்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஹிந்தியை வளர்க்க அதை பரப்புவதை விட அது மற்ற மொழிகளோடும்,மொழிகளோடும் ஏற்படுத்திக்கொண்டிருந்த பாலங்களை அப்படியே இருக்கிறபடியே இருக்க விடுவதுமே சிறந்த வழி

கோபல்ல கிராமம்- பெருங்கதை, காவியம்!


கி.ராவின் கோபல்ல கிராமம் நாவலை வாசிக்க நேர்ந்தது. மக்களின் மொழியில் கரிசல் மண்ணின் கதையைப் போகிற போக்கில் சொல்லிக்கொண்டே போகிற அந்த நடை அத்தனை சொகமானது. பேசிக்கொண்டே இருக்கையில் சொல்லிக்கொண்டிருக்கும் கதையை மறந்து விட்டு இன்னொரு விஷயத்தின் சுவாரசியமான விவரிப்புக்குள் தன்னைச் செலுத்தி விடுவதைக் கண்டிருப்பீர்கள். அதையே கி.ராவும் செய்கிறார். ஒவ்வொரு ஆளுக்கும் எப்படிப் பெயர் வந்தது என்று அவர் போகிற போக்கில் அவர் சொல்கிற கதைகளில் கூடக் கண்களில் மின்னி மறையும் பரவசம் தெரிகிறது.

வளம் மிகுந்த பகுதியைவிட்டு வெளியேறி வரும் நாயக்கர்களின் கதையை மங்கத்தாயார் அம்மாள் என்கிற நூற்றி முப்பது சொச்சம் வயது கொண்ட பாட்டி விவரணையில் கேட்டபடி நாமும் கோபல்ல கிராமத்தில் போய் அமர்ந்து கொள்ளும் உணர்வை அனுபவிக்க வேண்டும்.

ஏணிப் படி போட்டு முடி சீவப்பட வேண்டிய பெண்ணின் கதை, செத்த பிறகும் அழகாக இருக்கும் சென்னம்மா தேவியின் வாழ்க்கையில் அவளின் அழகுக்கு எல்லாரும் தலைவணங்குவதைச் சரளமாகக் கி.ரா. சொல்லிக்கொண்டு போகையில் அப்படியொரு அழகை நாம் எங்கே மதிக்கக் கண்டோம் என்று யோசித்துப் பெருமூச்சு விடத்தான் முடிகிறது.

காடு எரிக்கும் தருணத்தில் நெருப்புக்குள் பாயும் பன்றி, இரண்டு மனைவிகளிடம் கழுத்தும், கையும் கொடுத்து தவிக்கும் இளவரசன், தீவட்டித் திருடர்களைக் கவண்கற்களால் எதிர்கொள்ளும் மக்கள் என்று சொல்லித்தீராத கதைகள் நூலை அலங்கரிக்கின்றன.

விக்டோரியா மகாராணியின் ஆட்சி வருகிறது என்று சொல்லப்படும் பொழுது அவளை ராணி மங்கம்மாவோடு மக்கள் ஒப்பிட்டுக்கொள்கிறார்கள். அவளுக்கும் இடது கையால் பாக்கு போட்ட கதையைக் கி.ரா. நம் வாயில் மெள்ள எடுத்துத் தருகிறார்.

எல்லாவற்றுக்கும் உச்சம் கழுவனின் கதை. கால் விரலை கொன்றவளின் பற்கள் பற்றிக்கொண்டு மாட்டிக்கொள்ளும் அவன் வாயையே திறப்பதில்லை. கழுமரத்தில் ஆசனவாயில் ஏற்றப்பட்டு உயிர் போய்க்கொண்டிருக்கும் சூழலில் சிறுமிகள் அவனைச் சுற்றி கும்மியடித்துப் பாடுவதில் மரணத்தைக் கொண்டாடும் மனம் கண்களைக் கலங்க வைக்கிறது. அதைப் பார்த்தபடியே அவன் தானும் பாட எத்தனிக்கையில் இறந்து போகிறான். அவனும், அவன் கொன்ற பெண் இருவரும் தெய்வங்களாக மாறினார்கள் என்கிற முடிவை மக்களோடு இயங்கி அவர்களின் கதைகளை எழுத்தாக்கிய கி.ராவால் தான் தரமுடியும். அவசியம் வாசிக்கப்பட வேண்டிய கரிசல் வாழ்க்கையின் ஆவணப்படுத்தல் இந்தப் பெருங்கதை.

ஆசிரியர்: கி.ராஜநாராயணன்
அன்னம் வெளியீடு
பக்கங்கள்: 176
விலை : 140