‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப்போகும்’ மாயக்கதை மஞ்சும்மல் பாய்ஸ்


‘கண்மணி அன்போடு’ பாடல் என் வாழ்வின் தாலாட்டுப்பாடல். இசைஞானி இளையராஜாவின் எத்தனையோ அருட்கொடைகளில் இப்பாடல் இன்னமும் அணுக்கமானது. உடைந்து அழும் காலங்களில் ஜானகியின் குரல் போல இருட்குகைகளில் இருந்து மீட்கும் வேறொரு கீதம் என்னளவில் இல்லை. ஒரே நேரத்தில் நெகிழ வைத்தபடியே, சிலிர்ப்பினை உடலெங்கும் தரும் பாட்டுடைச்செய்யுள். இந்த ஆண்-பெண் காதல் கீதம் அபிராமியின் கீதம் மட்டுமா? அது நம் தனிமைக் காலத்தின் உடன்வரும் உற்ற துணை. கசந்து போன வாழ்வின் கடைசி வெளிச்சம். கைகோர்த்து எம்பித்தள்ளும் கனிவின் மொழி. ‘Magical’ என்பதற்கான பொழிப்புரை இப்பாடல். 

இளையராஜாவின் இந்த கீதத்திற்கு கமல்-ஜானகி மட்டுமா உயிர் கொடுத்தார்கள்? இயக்குனர் சிதம்பரம் கேரளாவின் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மூலம் ‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப்போகும்’ மாயக்கதையை நிகழ்த்தியிருக்கிறார். எத்தனையோ மலையாளத் திரைப்படங்களுக்கு சென்னைத் திரையரங்குகளில் ஆரம்ப நாட்களிலேயே பார்வையாளனாக சென்றிருக்கிறேன். ஒரு வார நாளில் அரங்கு நிறைந்த கூட்டத்தை என் நினைவுக்கெட்டிய காலத்தில் கண்டதில்லை. இப்படத்தைக் காண மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. வைத்த கண் வாங்காமல் கமர்ஷியல் படங்களின் இலக்கணமெதுவும் இல்லாத இப்படத்தில் மக்கள் அமிழ்ந்து போயிருந்தார்கள்.


இத்திரைப்படம் உண்மையின் சாயலோடு இருப்பது மட்டும் இதன் வெற்றிக்குக் காரணமில்லை. அது எளிய மனிதர்களின் அசாத்திய சாதனையை திரையில் படைத்தளிப்பதில் நுணுக்கமாக வெற்றி பெற்றிருக்கிறது. வெற்றி, தோல்விக்கு இடையே சிக்கிக்கொண்ட கயிறு இழுக்கும் போட்டி 900 அடி ஆழ பள்ளத்தின் மரணப்பாதையில் அரங்கேறும் அதிசயம் இப்படம். 

இம்மனிதர்களுக்கு அரசின் துணையில்லை. மீட்பர்கள் வருவதில்லை. இறைவன் காட்சி தருவதில்லை. அவநம்பிக்கைமிக்க சொற்கள் மட்டுமே பரிசளிக்கப்படுகின்றன.  சாத்தானின் சமையலறை எனக் கர்ண பரம்பரைக் கதைகள் அச்சுறுத்துகின்றன. ‘அதனால் என்ன? என்னாகும் பார்த்து விடலாம்!’, என சக நண்பனின் மீதான பேரன்போடு துச்சமென வாழ்வுக்கும், மரணத்திற்கும் இடையேயான நண்பர்களின் புத்துயிர்ப்பு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. 

‘சாவைப் பாத்துட்டு வந்த இவன் தெய்வத்துக்கு சமமானவன். கும்பிட்டுக்கோ தாயி’ என்கிற ஒரு வரி மானுட யத்தனத்தை கடத்திவிடுகிறது. தேவலாயங்களும், இறை வழிபாட்டாளர்களும் கைத்தொழுது வணங்கும் தெய்வீக காதலை நிகழ்த்துபவர்கள் காதலர்கள் அல்ல, நண்பர்கள். அவர்களின் வாழ்த்துப்பாடல் இளையராஜாவின் இறவா கீதம். அவசியம் திரையரங்கத்தில் பாருங்கள். நம் காயங்களை ஆற்றும் அற்புதக்கதை இது. வாழ்வின் நறுங்கனவும் கூட. 

உண்மை நாயகர்கள் சிஜூ, சுபாஷ்

‘லியோ’ – மரணம் நெருங்குகையில் மகிழ்வாய் இருத்தல்


இது தமிழில் வெளிவந்த ‘லியோ’ திரைப்படம் குறித்த அறிமுகம் அல்ல. ‘Netflix’-ல் காணக்கிடைக்கும் ‘Leo’ குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படம் போலத் தோன்றலாம். ஆனால், சொற்களின் அதிசயத்தை திரையில் வார்த்திருக்கும் அழகிய முயற்சி இப்படம்.

ஐந்தாம் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கான பள்ளியில் விளையாட்டுப் பிராணிகளாக, ‘லியோ’ எனும் 74 வயதாகும் பல்லியும், ‘Squirtle’ எனும் ஆமையும் அறிமுகம் ஆகிறார்கள். இக்குழந்தைகளின் சிக்கல்கள், கவலைகள் புதியவை. கூடவே, கடுமை தொனிக்கும் ஆசிரியை வந்து சேர நிலைமை மோசமாகிறது. வார இறுதி நாளன்று ஒருவர் ஒரு பிராணியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற விதியின்படி ‘லியோ’ குழந்தைகளின் வீட்டிற்குச் செல்கிறது.

இன்னும் வாழ்வதற்கு ஓராண்டே இருக்கும் நிலையில் தப்பித்து போய் வாழ்வை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்பது அதன் கனவு. வாராவாரம் தப்பிக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகிறது. ஏன்? ஒவ்வொரு வாரமும் பேசும் பல்லியாக குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறது லியோ.

பெற்றோரின் மணவிலக்கு, கீச்சென்ற குரல், எப்போதும் கண்காணிக்கும் கண்கள், பெற்றோரின் கவனிப்பற்ற குழந்தைமை, வதைமுகமான வகுப்பறை என அத்தனை வெளிகளின் வழியாக உற்சாகமாகவும், நம்பிக்கையாகவும் ஓடுகிறது உலகறிந்த லியோ.

போகிற போக்கில் அதன் இலக்கு மாறுகிறது. கூடவே, சில பொய்களும் சேர்ந்து கொள்கிறது. கடுமைமிக்க வகுப்பறையில் கலகலப்பின் சுவையை கண்டுணர வைக்கும் மாயமாய் லியோ மாறுகிறது. தீர்வுகளை விட காது கொடுத்து கேட்பதன் முக்கியத்துவத்தை உணர வைக்கிறது.

மடிக்கணினி, ஸ்மார்ட்போன், மழலைகளின் ஒவ்வொரு கணத்தையும் கட்டுப்படுத்தும் Drone-கள் இவற்றின் நடுவே மனங்களித்து வாழ்தல் குறித்த படம் இது. உருவம், பிறர் நம் மீது கொண்டிருக்கும் பார்வை குறித்த கவலைகள், உற்றவர் இல்லாத ஏக்கம் எனப்பலவற்றின் தொகுப்பாக காட்சிகள் விரிகின்றன.

திடீரென்று இந்த மகிழ்ச்சியால் ஆன உலகம் உடைகிறது. லியோ வில்லன் ஆகிறது. வாழ்வு முடியும் கணத்தினில் புறக்கணிப்போடு மனம் வெதும்பி வெளியேற்றப்படுகிறது. ஏன்? திரையில் பாருங்கள். இக்கதை சிறுவர்களைப்பற்றியதாக பாவனை செய்தபடியே சொல்லப்படும் பெரியவர்களுக்கான கதை.

‘Kathal’ – சமகாலம் குறித்த சலிப்பூட்டாத எள்ளல்


உருவகக் கதைகள் நம்மை உண்மையான உலகங்களுக்கு அழைத்துச் செல்லும் அற்புதச் சாவிகள். ‘Kathal’ எனும் இந்தித்திரைப்படம் காணாமல் போன எம்.எல்.ஏ.வின் Uncle Hong ரகப் பலாக்களைத் தேடும் தலித் பெண் ஆய்வாளர் பற்றிய கதை. இது உண்மையில் பலாக்காயை திருடியவரை கண்டுபிடிக்கும் பயணமில்லை.

முதல் காட்சியே அதகளம். இந்திய சினிமா காவல்துறையின் Chase காட்சிகள் எப்படியிருக்கும் என வழமையாக விதித்து வைத்திருக்கும் விதிகளை எல்லாம் விளையாட்டாக அத்தொடர் காட்சி குலைக்கிறது. இது பிற படங்களைப் பகடி செய்யும் முயற்சியல்ல. யதார்த்தத்திற்கு நெருக்கமான காட்சியனுபவத்தைத் தரும் முயற்சியாகவே திரையில் கதை வளர்கிறது.

அதிகாரம், அரசியல், சாதி, பாலினம், ஊடகம் எனப்பலவற்றின் மீதான நகைச்சுவையால் ஆன வெளிச்சம் இப்படம். இதில் காதைக் கிழிக்கும் சண்டைக்காட்சிகள், அதிரடிக்கும் பஞ்ச் வசனங்கள், ரத்தத்தை உறைய வைக்கும் வன்முறை அறவே இல்லை. தொலைந்து போன பெண்களை விட அரசியல் தலைவரின் பலாப்பழம் ஏன் முதன்மையானதாகத் தேடப்பட வேண்டிய ஒன்றாகிறது? பதவி உயர்வே வேண்டாமென்று ஒரே ஊரில் சமையல் வேலைகளுக்கான ஆளாக ஏன் பெண்களைக் குடும்ப அமைப்பு நடத்துகிறது?

உண்மையை உரக்கச் சொல்லும் சின்னஞ்சிறிய ஊடகவியலாளர் ஒருவர் இப்படத்தில் கைது செய்யப்படுகிறார். முழுக்க, முழுக்கச் சோகமயமனதாக மாற்ற சகல வாய்ப்புகளும் உள்ள காட்சி அது. அங்கே பிளந்து கொண்டு வெளிப்படும் பகடியும், இசையும், பத்திரிகையாளராகத் தோன்றுபவரின் நடிப்பும் சமகாலத்தின் மீதான நுண்மையான கேலியாக அமைகிறது. ‘நான் ரொம்பப் பிரபலமாகிட்டேன். இவங்க அடிச்ச அடியில என் பிருஷ்டம் மட்டும் இரண்டு இன்ச் வீங்கிருச்சு’ என அவர் இறுதியாகத் தோன்றும் காட்சியில் பேசுகையில் மிதமான கற்பனையுலகினில் உண்மையின் கூர்மையான வெளிப்பாடு சாத்தியப்பட்டிருக்கிறது.

தீவிரமான சண்டைக்காட்சியில் அடித்து நாயகிக்குக் கை வலிக்கிறது. கதவை உடைக்கப் போகும் நாயகன் அதற்கான திராணியின்றி நாயகியின் கைகளில் விழுகிறான். காணாமல் போன பலாப்பழத்திற்குப் பரிசு என்றவுடன் அதைப்போன்ற போலிப் பலாக்கள் பல வரிசையில் வந்து நிற்கின்றன. எம்.எல்.ஏ.வின் புகழ்பாடும் பேனர் பழைய பேப்பர் கடைக்குப் போவதற்காக நின்றபடியே பலாப்பழ திருட்டிற்கு உடந்தையாகிறது. இடையே மிக மென்மையான காதல் கதை ஒன்று மனதோடு உறவாடுகிறது.

இக்கதை தலித் காவல் ஆய்வாளர் உயர்சாதி காதலன் பதவி உயர்வுக்காக உழைக்கும் திரைப்படம் என்றும் அணுகப்படக்கூடும். ஆயினும், இப்படம் சாதிச்சுவரின் ஓரிரு செங்கல்களை நகைச்சுவை சுத்தியல் கொண்டு உடைக்கிறது. சாதிப்பெருமிதங்களை முன்னிறுத்தும் உலகினை கூர்வேல் கொண்டு எதிர்க்கவில்லை. அதற்கு மாறாகக் கிச்சு கிச்சு மூட்டுகிற பாவனையில் தலையில் ஒரு குட்டுக் கொட்டுகிறது. உலகை மாற்றும் வேகம் இக்கதையின் நாயகர்களிடம் இல்லை. படம் முடிகையில் தேடியது கிடைத்ததா என்பதைவிட ஏன் இதைப்போய்த் தேடினார்கள் என்கிற வினாவே கடத்தப்படுகிறது. மறக்காமல் பாருங்கள். காணாமல் போகும் எளியவர்களின் மீதான அக்கறைமிக்க நுண்மையான ஆக்கம் இத்திரைப்படம். இத்திரைப்படத்தை தமிழிலேயே நெட்பிளிக்ஸில் காணலாம்.

புகழஞ்சலி காங்கிரஸ் தாத்தா …


சேகர் தாத்தா. காங்கிரஸ் தலைவர் என்றுதான் அவரை அறிவோம். எனக்கு ‘காங்கிரஸ் தாத்தா’. ‘என்ன தலைவரே? கட்சியை ஒழுங்கா பாத்துக்க மாட்டீங்களா. இப்படி கோஷ்டியா கிடந்தா எப்படி. நீங்க எந்த கோஷ்டி’ என சிறுவனாக இருந்த காலத்தில் வம்பிழுப்பேன். அவர் காங்கிரஸ் மாவட்டத் தலைவராக இருந்தவர். கிணற்றினில் குளிக்கப்போகும் போதெல்லாம் அவரின் இருப்பே அந்நாட்களின் நினைவாக மிஞ்சியிருக்கிறது.

தன்னளவில் அவர் கடைசிவரை காங்கிரஸ் மீது பிடிப்புள்ளவராகவே இருந்தார். காமராஜரின் சீடராக கடைசி வரை வாழ்ந்தவர். பொருளாதார ரீதியாக தன்னையோ, குடும்பத்தையோ வளர்த்துக்கொள்ளவில்லை.

தன்னைவிட 50 ஆண்டுகள் சிறியவன் ஒருவனிடம் பேசுகிறோம் என்கிற எண்ணமே இல்லாமல் சமமாகவே நடத்துவார். ‘அநியாயம் பண்றேடா நீயி’ எனச்சீண்டும் போது செல்லமாக கடிந்து கொள்வார். எப்போதாவாது ஊருக்கு போகும் போது சைக்கிளில் வெள்ளுடையோடு தென்படுவார். நன்றாக படிய சீவிய தலையோடு கம்பீரமான குரலில், ‘என்னடா ஆளையே பாக்க முடியலை’ என உரிமையாக மிரட்டுவார். காங்கிரஸ் இயக்கம் குறித்த ஆரம்பநிலை அறிமுகம் அவராலேயே கிட்டியது. மக்கள் பணிகள், ஊர்த்தேவைகளுக்காக தன்னளவில் இயன்றதைத் தொடர்ந்து செய்தவர். வெகுகாலமாக கட்சியின் செயல்பாடுகளில் இருந்து விலகியிருந்தாலும் நூல்கள் வாசிப்பது, செய்திகளை அலசுவது எனத்துடிப்பாக இருந்தவர்.

அவரை நேரடியாகப் பார்த்து ஐந்தாறு ஆண்டுகள் இருக்கும். அப்பா மூன்று, நான்கு மாதங்களாக ஒவ்வொரு முறை வரும்போதும், “அவர் உன்னைப்பாக்கணும்னு சொன்னாரு, வாடா போயிரலாம்” என்பார். நான், ‘அடுத்த வாட்டி போயிடலாம்’ எனத்தட்டி கழிப்பேன். வெறுங்கையோடு எப்படி போவது எனும் எண்ணம். ஆனால், ஊர் வரும் போது மறந்திருப்பேன். இந்த முறை இறுதியாக அவரின் தலைவரான கர்மவீரர் காமராசர் குறித்த நூலினை எடுத்துக்கொண்டு ஊர் சேர்ந்தேன். நேற்று சித்தியின் அகால மரணம். ‘நாளைக்கு காங்கிரஸ் தலைவரைப் பாத்துடுவோம்பா’ என்றேன். ‘சரிடா! இந்த வாரம் அவர் மடக்குவாருன்னு வேற பக்கம் பயந்து ஓடினேன். தேடுறாரு. நாளைக்குப் பாத்துரு’ என்றார். இன்று காலை எழுந்து அப்பாவிடம் சென்றேன். கம்மிய குரலில் ‘காங்கிரஸ் தலைவர் தடுக்கி விழுந்து மண்டையில அடிபட்டு இறந்துட்டாருடா. தாத்தா ஈடு. கடைசிவர கெத்தா சுத்திட்டிருந்தாரு. நல்ல சாவு. யாரையும் நம்பியிருக்காம, தொல்லைதராம இருந்தாரு, போயிட்டாரு. ஆனா, நீ தா கடைசிவரைப் பாக்கலை’ என்று அங்கலாய்த்தார். அவரைக்காண போகிறேன். தாளாத குற்றவுணர்ச்சியும், அவர் என்னை மன்னிப்பார் என்று தோன்றுகிறது. என்றைக்கும் அவர் என் மீது அன்பை மட்டுமே காட்டியவர். இன்றைக்குத்தான் நன்மரண அறிவிப்பில் அவர் டாக்டர் எனத்தெரியும். ‘டாக்டரா அவரு’ எனக்கேட்டேன். ‘ஆமா! சித்தா டாக்டர்’ என்றார் அப்பா.

போய் வாருங்கள் டாக்டர் சேகர். காங்கிரஸ் தலைவர் என்றால் அது என்னளவில் நீங்கள் தான். உங்கள் தலைவரின் நூலோடு இத்தனை காலந்தவறி வந்திருக்கிறேன். யார் அந்நூலை வாசிப்பார் 😥 அரசியல்வாதிகள் என்பவர்கள் வானுலகவாசிகள் அல்ல, சக மனிதர்களோடு இயங்கக்கூடியவர்கள் என உணர்த்திய பெருவாழ்வு உங்களுடையது. புகழ் வணக்கம்.

டாடா குழுமத்திடம் இருந்து தன்னம்பிக்கை தரும் கதைகள்


 கல்லூரி மூத்தவர் ஒருவரின் பிறந்தநாளுக்காக என்ன புத்தகத்தை வாங்கலாம் என்று அவரிடமே கேட்டேன். ‘#Tata Stories- 40 Timeless Tales to Inspire You’ என்கிற ஹரிஷ் பட் எழுதிய நூலினை தேர்வு செய்தார். டாடா குழுமத்தின் ‘பிராண்ட் பாதுகாவலராக’ திகழும் நூலாசிரியர் டாடா தொடர்புடைய விறுவிறுப்பான, சுவையான நாற்பது நிகழ்வுகளை அடுக்கிச் செல்கிறார். உத்வேகமூட்டும் கதைகள் என்கிற வரையறை என்பதால் பெருமிதமிக்க, உற்சாகமான நிகழ்வுகளை மட்டுமே சொல்லிச் செல்கிறார். 

டாடா  சுமோ என்கிற பெயரை அடிக்கடி உச்சரித்திருப்போம். சுமோ என்பது என்ன? வெகுகாலமாக ஜப்பானிய தற்காப்பு கலையின் தாக்கத்தில் வைக்கப்பட்ட பெயர் என்றே எண்ணிக்கொண்டு இருந்தேன். சுமந்த் மோல்காவ்கர் எனும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரின் நினைவாகவே அப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. லாபம் என்பதை சந்தையில் கிட்டியவரை அடிப்போம் என்பதாக இல்லாமல், நல்ல தரமான வண்டிகளை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்து பெற வேண்டும் என்பது அவரின் கொள்கையாக இருந்தது. எதிலும் ஆகச்சிறந்த ஒன்றை எட்ட வேண்டும் என்கிற சிந்தனையே  அவரை செலுத்தியிருக்கிறது. புனேவில் டாடா மோட்டார்ஸ் ஆலையை துவக்கிய போது 15 இலட்ச ரூபாய்  செலவில் பெரிய ஏரி  ஒன்றையும் உருவாக்கினார் மிஸ்டர். சுமோ. இன்றைக்கு அது 245 ஏக்கர் ஈரநிலமாக விரிந்து நிற்கிறது. 

ரத்தன் டாடா  ஒரு கனவு கண்டார், “ஜென் கார் அளவில், அம்பாசிடர் போன்ற உள் வசதிகளோடு, மாருதி 800-ன் விலையில் ஒரு காரினை உருவாக்க வேண்டும்”. புதிதாக ஒரு ஆலையை இத்தகைய கார்களை உற்பத்தி செய்ய வைக்க வேண்டுமென்றால் 2 பில்லியன் டாலர் செலவாகும் என்று தெரிந்தது. அது மலைப்பைத் தரும் முதலீடு. சாத்தியமற்றதும் கூட. தீர்வு? ஆஸ்திரேலியாவில் செயலிழந்து போன நிஸான் கார் உற்பத்தி ஆலை ஒன்றை முழுதாக பிரித்தெடுத்து அப்படியே இந்தியாவிற்கு கொண்டு வந்து ஆலையை உருவாக்கினார்கள். ஐந்தில் ஒரு பங்கு செலவில் இண்டிகா இந்தியாவிற்கு கிடைத்தது. 


ஓசூரில் இயங்கும் டைட்டன் நிறுவனத்தை உருவாக்கியவர்  ஸெர்ஸேஸ்  தேசாய். தமிழ்நாடு அரசோடு இணைந்து வர வெறும் கைக்கடிகார நிறுவனம் ஒன்றை உருவாக்கவில்லை. பல நூறு தொழிலாளர்களின் எதிர்காலத்தை உருவாக்கினார். நாமக்கல், கிருஷ்ணகிரி மாணவர்களுக்கு பயிற்சியளித்து உள்ளூரிலேயே தமக்குத் தேவையான தொழிலாளர்களை திறனோடு தயார்படுத்தினார். வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக டைட்டன் பள்ளியையும் உருவாக்கினார். எங்கிருந்தோ ஓசூர் வந்த அவர், அங்கேயே மரணித்தார். தங்களுடைய மைந்தராக அவரை தத்தெடுத்துக் கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அவருக்கு கண்ணீர்விடை கொடுத்தார்கள். 


கோஹினூர் வைரத்தை போல இரு மடங்கு அளவில் பெரிய ஜூப்ளி  வைரத்தினை ஜாம்ஷெட்ஜி டாடாவின் மூத்த மகன் டோரப்ஜி டாடா  தன்னுடைய மனைவி  மெஹெர்பாய்க்கு பரிசாக கொடுத்தார். உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு டாடா குழுமத்தின் உருக்காலைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் தரமுடியாத நிலை 1924-ல் வந்தது. தன்னுடைய சொத்துக்கள், விலை மதிக்க முடியாத காதற்பரிசு அனைத்தையும் அடமானம் வைத்து நிலைமையை சமாளித்தார்கள்  தம்பதிகள். விரைவில் நிலைமை சீரானதும் அனைத்தையும் மீட்டார்கள். 1930, 1932-ல் முறையே மனைவி, கணவன் இறந்து போனார்கள். தங்களுடைய சொத்துக்களை முழுவதும் அறக்கட்டளைக்கு எழுதி வைத்திருந்தார் டோரப்ஜி டாடா. அந்த ஜூப்ளி வைரம் விற்கப்பட்டு அதில் கிடைத்த வருமானத்தில் டாடா மெமோரியல் மருத்துவமனை கட்டப்பட்டது. 


ஏர் இந்தியாவை டாடா  நடத்திய காலத்தில் உலகத்தின் தலைசிறந்த வானூர்தி  சேவை நிறுவனம் என்கிற பெருமிதத்தை பெற்றது. விமான இருக்கைகள் வசதியாக இருக்கிறதா, பரிமாறப்படும் தேநீர் சுவை தரமாக இருக்கிறதா என்று ஒவ்வொன்றையும் ஜே.ஆர்.டி. டாடா  கண்காணித்து ‘நீலக்குறிப்புகளாக’ தன் குழுவினருக்கு வழங்கியது இந்த வெற்றிக்கான முதன்மையான காரணம். மேலும், வானூர்தியின் உள்ளே உள்ள திரைச்சீலைகள் வெளுத்து போகாமல் இருக்கிறதா? இடுக்குகளில் தூசி இல்லாமல் முழுமையான சுத்தம் பேணப்படுகிறதா? கழிப்பறையில் திசு பேப்பர் சரியாக வைக்கப்பட்டு இருக்கிறதா என்று அனைத்தையும் தானே அவ்வப்போது ஆய்வு செய்வதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். சேவை என்பது சொல்லில் இருப்பதல்ல, அது செயல்பாடு சார்ந்தது. 


IISC, TIFR என்று பெரும் பொருட்செலவில் பல்வேறு அறிவியல் அமைப்புகளை உருவாக்கி, அவற்றை கட்டியெழுப்பி பின்னர் தேசத்திற்கு அர்ப்பணித்த பெருமைமிக்க வரலாறும் டாடா குழுமத்திற்கு உரியது. இந்தியாவின் அணுசக்தி திட்டங்கள் துவங்கி முதல் சூப்பர் கணினி வரை பலவற்றில் டாடாவின் அழுத்தமான பங்களிப்பு உண்டு. 


இந்தியாவின் முதல் சூப்பர் கணினி ‘ஏகா’வை உருவாக்குவது என்று டாடா குழுமம் திட்டமிட்டது. குறித்த காலத்திற்குள் பெரும் சவால்களுக்கு இடையே அக்கணினி தயாராகி 20 அக்டோபர் 2007-ல் நின்றது. அந்நேரம் அக்கணினி 97 டெர்ராஃபிளாப்கள்  வேகம் கொண்டதாக இருந்தது. உலகின் டாப் 100 சூப்பர் கணினிகளில் ஒன்றாக மாற இந்த வேகத்தை 100 டெர்ராஃபிளாப்களாக கூட்ட வேண்டும். ரஷ்ய அறிவியல் அறிஞர்களின் உதவியை நாடினார்கள். சார்மினார் சிகரெட்கள், கிங் பிஷர் மதுவகைகள் பரிசுகளாக அவர்களுக்கு சென்றன. தங்களின் நிறுவனங்களின் அனுமதியோடு, அவர்கள் பத்து நாட்களுக்குள் கணினியின் வேகத்தை 118 டெர்ராஃபிளாப்களாக மாற்றி சாதித்தார்கள். இந்தியாவின் முதல் சூப்பர் கணினி கனவு சாத்தியமானது. அக்கணினி சந்திரயான் திட்டத்தில் பெரும் பங்காற்றியது.  


டாடா குழுமத்தை தோற்றுவித்த ஜாம்ஷெட்ஜி டாடா பெருங்கனவுகள் கொண்டவராக இருந்தார். உருக்காலை உருவாக்குவதற்காக அமெரிக்கா சென்றது  ஒருபுறம், மிகப்பெரிய அளவிலான நீர்மின் திட்ட உருவாக்கத்துக்காக நயாகரா அருவி நோக்கி பயணம் என்று இன்னொரு புறம் அவர் சுற்றிச் சுழன்றார். அவர் ஏன் தாஜ் ஹோட்டலை கட்டினார். அவரை நிறத்தை கொண்டு பாகுபடுத்தி ஹோட்டலுக்குள் விடவில்லை என்கிற கதைக்கு எந்த சான்றுமில்லை. தன்னுடைய வியாபாரத்தை பெருக்க இந்த ஹோட்டலை அவர் பார்க்கவில்லை. ஐரோப்பிய நிறுவனம் ஒன்றிடம் குத்தகை விடலாம் என்றே அவர் விரும்பினார். பெரும் வருமானம் ஈட்டும் ஒன்றாக இந்த ஹோட்டலை பார்த்தாரா? இதற்கும் பதில், ‘இல்லை!’ என்பது தான். அவர் லண்டன், பெர்லின், பாரீஸ்  என்று உலகம் முழுக்க அலைந்து, திரிந்து தன்னுடைய தாஜ் ஹோட்டலை இழைத்து, இழைத்து உருவாக்கினார். 26 லட்ச ரூபாய் செலவில் எழுந்த அந்த மாளிகைக்கு அன்றைய தேதியில் பிற தங்குமிடங்களை போன்றே ஆறு ரூபாய் வாடகையை தான் அவரும் வைத்தார். 
வேறென்ன காரணம்? அவரின் உதவியாளர் பிலிமோரியாவின் குறிப்புகளில் அதற்கான விடை இருக்கிறது, “பம்பாய் நகரத்தின் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் முன்னேறிய ஹோட்டல் ஒன்று தவிர்க்க முடியாத தேவை என்று அவர் நம்பினார். வேறெந்த தொழிலதிபரும் இதனுள் நுழையவில்லை என்பதால் தான் செய்து முடிக்க வேண்டிய கடமை என்று அவர் செயல்பட்டார்’. பம்பாயில் உலகததரத்திலான ஒரு ஹோட்டலை எழுப்பினால் உலகமெங்கும் உள்ள மக்கள் இந்நகரத்தை நோக்கி பெருமளவில் வருவார்கள் என்கிற பெருங்கனவு அவரை செலுத்தியது. 

இந்த நூலில் இன்னும் பற்பல சுவையான கதைகளும், ஆளுமைகள் குறித்த எழுத்தோவியங்களும் உண்டு. ஒரே ஒரு கடிதத்தை பற்றி மட்டும் குறிப்பிட்டுவிட்டு இக்கதை மழையில் இருந்து விடைபெறலாம். ஜே.ஆர்.டி.டாடாவின் வாழ்க்கையை செலுத்தும் விழுமியங்கள் யாவை என்று 06-08-1965-ல் பன்சாலி எனும் ஆசிரியர் கேட்டிருந்தார்.
13-09-1965-ல் இக்கடிதத்திற்கு ஜே.ஆர்.டி.டாடா பதில் எழுதினார். அதில், தன்னை ஒரு எளிய மனிதர் என்று சொல்லிக்கொள்ளும் அவர் கீழ்கண்ட விழுமியங்களை பட்டியலிடுகிறார்,


ஆழ்ந்த சிந்தனை, கடின உழைப்பு இரண்டுமில்லாமல் மதிப்புமிக்க எதையும் வாழ்க்கையில் வென்றிட இயலாது. முகத்தின் முன் சொல்லப்படும் துதிகள், கவர்ச்சிமிக்க சொற்களில் ஒருவர் ஏமாந்து விடக்கூடாது. தன்னுடைய சுய அறிவை பயன்படுத்தி தனக்காக தானே சிந்திக்க வேண்டும். 

எடுத்துக்கொண்ட செயல் எத்தனை சிறியதாக இருந்தாலும் அதில் மகத்துவத்திற்கும், கச்சிதத்திற்காகவும் ஒருவர் அயராது உழைக்க வேண்டும். சிறந்ததை விட சற்றே தரங்குறைந்த இரண்டாம் தரம் எதையும் பெற்றுவிட்டதற்காக திருப்தியடையக்கூடாது. 

தாய்நாட்டின் நலன்கள், அதன் மக்களுக்கு பயன்படும் வகையில் இல்லாத சாதனை, வெற்றிகள் பொருளற்றவை. இவை நேர்மையான, முறையான வழியில் பெறப்பட்டவையாக இருக்க வேண்டும். 

சக மனிதர்களிடம் நல்லுறவை பேணுவது தனிப்பட்ட வெற்றிகளை கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல் நிறுவனத்தின் வெற்றிக்கும் இன்றியமையாதது ஆகும்.”

பிரிதலின் பருவகாலம்


அந்திவேளையில் மேகம் தூறுகையில்  விடைபெறல்கள் அமைந்துவிட்டால் நன்றாக இருக்கும். 

சொற்கள் அருகி விக்கி நிற்கையில் பிரிதல்கள் நிகழ்கின்றன. 

அலைபேசியின் ஊடாக அழுது அயர்ந்து போன முகங்கள் உடைந்து மறைகின்றன. 

புன்னகைத்தபடி கையசைத்து விலகுகையில் சன்னலோரம் பிரியமிக்க உறவொன்று  எட்டிப்பார்க்கையில் கேவல்கள் மின்னி அறைகின்றன. 

துயர்மிக்க காலங்களை கடக்கும் வண்ணம் விழாவொன்று நிகழ்கிறது. 

உடைந்தபடி உருகி வழியும் இசைச்சரம் ஒன்றின் தொடர்பறுந்து செவி துடிக்கையில் பிரிவுக்காலத்தின் வெம்மை இளைப்பாறுகிறது.

 ஒவ்வொரு பிரிதலின் கணத்தினிலும் புதிய நடுக்கங்கள் கரம் சேரும். 

ஆயினும், பிரிவைக் கடக்கும் பயணத்தில் புதிதாய் பூக்கும் தழும்பொன்றின் நேசம் மட்டும் எப்போதும்  உடனிருக்கும். – பூ கொ சரவணன்

அரிய சுவை தரும் அற்புதக்கதை ‘தேநீர்க் குடில்’


‘தேநீர்க் குடில்’ எனும் கவிஞர் யூமா வாசுகியின் நூல் வெகுநாள் காத்திருப்பிற்கு பின்பு வாசிக்க கிடைத்தது. இந்நூல் எழுத்தாளர் ஆரணி கே.யுவராஜன் அவர்களின் வாழ்க்கையின் தாக்கத்தில் எழுதப்பட்ட சிறார் கதை. யுவராஜன் சாரை வெகு நெருக்கமாக கண்டிருக்கிறேன். குழந்தைகள் உலகிற்கு தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்ட அன்பு மனம் மிக்கவர். ‘ஒப்புரவு’ எனும் வள்ளுவரின் சொல்லாடலுக்கு பொழிப்புரை அவரின் வாழ்க்கை என்பது துளிகூட மிகையில்லை. அவரின் பாசமிகு அம்மாவின் முகத்தை பார்க்கும் போது, மனதில் ரம்மியமும், மகிழ்ச்சியும் ஊற்றெடுக்கும்.  யுவராஜன் அண்ணனின் குழந்தைகளுக்கான படைப்புகள் அத்தனை அன்பும், கதைகளின் மழைச்சாரலையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் ஊட்டுபவை. அவரின் வாழ்வும் அத்தகையது தான்:  https://www.bbc.com/tamil/india-62246095

அவரின் குழந்தைப்பருவத்தின் தாக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் தேநீர்க்குடில் வேலிகள் அற்றது, பகட்டை விரும்பாதது, பாட்டாளிகளின் உறைவிடம். யூமா வாசுகி அவர்களின் இக்கதையில் ‘ராஜா’ எனும் சிறுவன் தான் நாயகன். அவனுக்கு நரம்புத் திரட்சிக்  குறைபாட்டினால் முகமெங்கும் சிறு, சிறு கட்டிகள். வெறுப்பும், ஒதுக்கலும்  வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாகிறது. இக்கதையின் மைய இழை அந்த வெறுப்பு சார்ந்தது அல்ல. வாழ்வின் வலிகள், மனிதர்களின் கசடுகளை வாசிப்பின் ருசியில் கடக்கிற ராஜாவின் பயணம் நம்மை அப்படியே தழுவிக்கொள்கிறது.

பள்ளியின் பிரார்த்தனை கூட்டத்தில் தலைமையாசிரியர் இப்படி சொல்கிறார். 
“… அவனை யாரும் வெறுக்காமல் புறக்கணிக்காமல் கேலி செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. தான் இப்படி இருக்கிறோமே என்று அவன் மனதில் குற்ற உணர்ச்சியோ, தாழ்வு மனப்பான்மையோ ஒருபோதும் வந்துவிடக்கூடாது. 
இந்த உலகின் மீதான அன்பையும், சக மனிதர்கள் மீதான நம்பிக்கையையும், எத்தகைய நெருக்கடியையும் எதிர்கொண்டு வெல்வதற்கான திட்டத்தையும் அவன் மனதில் நாம் உண்டாக்க வேண்டும்… அதற்காகவும் தான் சமூகம் இருக்கிறது, இந்தப்பள்ளி இருக்கிறது, நாம் இருக்கிறோம்…’ 

இது உரிமைப் பிரகடனம் மட்டுமல்ல. சமத்துவமும், உடன்பிறப்புணர்வும் பிணைத்து, அணைத்து பயணிக்க வேண்டும் என்பதற்கான அன்புக்குரல். ராஜாவின் தனிமையை போக்கும் வண்ணம் மாலதி அக்காவும், தோழன் இம்மானுவேலும், மேரியம்மாவும் அவனை அரவணைத்துக் கொள்கிறார்கள். தன்  பள்ளியைவிட்டு விட்டு மாலதியக்கா விரைவில் விடை பெறுவார் என்று ராஜா வருத்தப்படுகையில், “சரி, விடுறா, நான் இந்த வருடம் உனக்காகவே பெயிலாயிடுறேண்டா.” என்கிறாள். வெம்மைமிக்க வாழ்வின் கணங்களில் ‘உனை  நான் மறவேனே’ எனும் அந்த குளிர்ச்சி மிகுந்த குரலின் சாரல் எத்தனை ஆசிகளை விட மேலானது. 
இத்தேநீர்க்குடில் அயர்வு தரும் வாழ்வினில் நிம்மதியாக இளைப்பாறும் வண்ணம் அமைந்திருக்கிறது.

இதில் யெஸ்.பாலபாரதி அண்ணனும், அவருடைய படைப்புகளும் முதன்மையான இடத்தைப் பிடிக்கின்றன. ராஜா வாசிப்பின் வழியே மனித வாழ்க்கையின் அடுக்குகள், சிக்கல்கள், நுட்பங்கள், அதிசயங்கள், உணர்வுப் பிரவாகம் ஆகியவை புலப்படுகின்றன. அது யூமா வாசுகியின் எழுத்தில் பலவிதமான அபூர்வமான வாசனைகளை உடைய மலர்களால் ஆன பெரிய மலைப்பாம்பின் பிடியில், ராஜா விரும்பி சிக்கிக்கொண்டிருப்பதாக உணர்வதாக அமைகிறது. இந்நூல் தன்னம்பிக்கை சிம்மாசனத்தில் ராஜாவை நிறுத்துவதோடு நில்லாமல், சமூகத்தின் கூட்டு மனசாட்சியை குற்றவுணர்ச்சிக்கும், பகுப்பாய்விற்கும் வெறுப்பற்ற, மென்மையான கதைநடையில் உட்படுத்துகிறது. நோய்மையால்  தாழ்வுணர்ச்சி அடையும் குழந்தைகளை அரவணைத்துக் கொள்ளும் கரங்களை பெருக்கப்போகும் அற்புதம். தவறவிடக்கூடாத ஆக்கம்.

தன்னறம் நூல்வெளி வெளியீடு
 நன்கொடை : ரூபாய் 150
அலைபேசி: 9843870059

‘Everything everywhere all at once’ திரைப்படம் – அபத்தங்களால் ஆன வாழ்வு குறித்த வெளிச்சம்.


‘Everything everywhere all at once’ – திரைப்படம் குறித்துப் பிப்ரவரி மாதம் தான் தெரியவந்தது. நண்பர் ஒருவர் instagram -ல் அப்படத்தில் இருந்து காட்சி ஒன்றை பதிந்திருந்தார். அதன் சாகசம், கற்பனைத்தெறிப்பு எல்லாவற்றுக்கும் மேலாக, இசையோடு கூடிய அபத்தமான நிகழ்வுகள் கட்டிப்போட்டன. ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பெருமளவில் இப்படம் கவனம் ஈர்த்திருக்கிறது என்று தெரிந்ததும், கடந்த வாரம் திரைப்படத்தைக் கண்டு பேறு பெற்றோம்.

Mild Spoilers ahead

மார்வெல் காமிக்ஸ் அடிப்படையிலான படங்களின் ரசிகர்களுக்கு Multiverse என்பது புதிதில்லை. ஆனால், சூப்பர் ஹீரோக்கள் இல்லாமல் எளிய மனிதர்கள் பல்வேறு பிரபஞ்சங்களுக்கு இடையே எண்ணியபடி தாவி குதிக்க ஆரம்பித்தால் என்னாகும்? அது தான் இப்படத்தின் மைய இழை.

சீனாவில் இருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த ஈவ்லின் (மிச்செல் யோஹ்), அவரின் கணவர், மகள் ஆகியோர் சலவை செய்யும் கடையொன்றை அமெரிக்காவில் நடத்தி வருகிறார்கள்.
வாழ்க்கை ஒரே மாதிரி எல்லா நாளும் ஓடிக்கொண்டிருக்கும் நம் அன்றாட உலகை இக்குடும்பத்தினர் பிரதிபலிக்கிறார்கள். என்ன செய்கிறோம், எதற்காக ஓடுகிறோம் என்கிற வினா வாழ்க்கையை அரித்துக் கொல்கிறது. ஏற்பிற்கும், அன்பிற்கும், கனிவிற்குமான நேரமே இல்லாதது கண்முன் விரிகிறது. வருவாய் துறை அதிகாரியிடம் கணக்கு, வழக்குகளைக் காட்டுவதற்காகக் கணவனும், மனைவியும் லிஃப்ட்டில் ஏறுகிறார்கள். அங்கே தான் வாழ்க்கை திசை மாறுகிறது.

வேறொரு பிரபஞ்சத்தின் மக்கள் ஈவ்லினின் உதவியை நாடுகிறார்கள்? எதற்காக? ஈவ்லினிற்கு என்னவென்று புரிவதற்குள் பெரும் களேபரங்கள் வரி அலுவலகத்தில் நிகழ்கிறது. வேற்றுலகில் ஈவ்லினின் வாழ்க்கைகள் கண்முன் தோன்றுகின்றன. ஒரே கணத்தில் வெவ்வேறு உலகங்களில் வெவ்வேறு வாழ்க்கைகளுக்கு எகிறி குதிக்க முடிகிறது. இதனால், நிகழ்காலத்தை மாற்ற முடிகிறதா?

நம் காலத்தின் நடுத்தர வர்க்கத்தின் அன்றாட வாழ்க்கை குறித்த அபத்த நகைச்சுவையாக இப்படத்தை ஒரு தளத்தில் அணுகலாம். உடைந்து போயிருக்கும் சக மனிதர்களின் கதைகளை நிதானித்துப் பார்க்க வைக்கும் மென்மையான விவரிப்பாகவும் புலப்படலாம். நிராகரிப்பும், வஞ்சனையும், துரோகமும் நிறைக்கின்றன. மிக நெருங்கிய உறவின் வெம்மை, மனப்போராட்டங்கள், அங்கீகரிப்புக்கான ஏக்கங்கள் எதுவும் புரியாத நம் வாழ்க்கை ஏன் இப்படியாகிப் போனது?

‘என்னை விட்டுவிடுங்கள். எங்கேயோ போகிறேன்’ எனப் பரிதவித்து, பிரிந்து போகத் துடிக்கும் உறவோடு எப்படி அன்பு பாராட்டுவது? முடிந்து போகும் வாழ்வில் நிலையாமை மட்டுமே உண்மை என்பது புரிந்தும், எப்படி மகிழ்ச்சியோடு இருப்பது? தகிப்பையும், புறக்கணிப்பையும், வெறுப்பையும் உமிழும் உலகினில் விரும்பியதை செய்ய நம்மால் முடியுமா?

இத்தனை கேள்விகளுக்கான தேடல்களையும், அறிவியல் புனைவு ஒன்றில் தத்துவ விசாரணைகள், தாய்-தந்தை-மகள் இடையேயான பாசப்போராட்டம் ஆகியவற்றோடு பிணைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பும், இசையும் மறக்க முடியாத அனுபவத்தைப் பரிசளிக்கின்றன. பல்வேறு ஹாலிவுட் படங்களை மென்மையாகக் கேலி செய்யும் காட்சிகளும் இப்படத்தில் உண்டு.

சண்டைக்காட்சிகளில் விலா நோக சிரிப்போம். பல்வேறு பிரபஞ்சங்களுக்குள் பாத்திரங்கள் பயணிப்பதால் சில நொடிகளுக்கு ஒரு முறை வெவ்வேறு பார்வைகள், போராட்டங்கள், அனுபவங்கள் திரையில் விரிகின்றன. அதனால் ஒரு கணத்தைத் தவறவிட்டாலும் கதையின் போக்கு குழப்பி விடும். கருந்துளையாக நம்மை உள் இழுக்கும் வாழ்க்கையைப் பேரன்போடு குறுக்கு விசாரணை செய்யும் இப்படத்தின் பெரும் பலம் அதன் நடிகர்கள்.

ஜாக்கி சான் நடிக்க வேண்டியதாக இருந்த நாயகியின் கணவர் வேடத்தில் நடித்திருக்கும் கி ஹுய் குவான் நெகிழ வைக்கிறார். வரி அதிகாரியின் கடுமையும், ஏளனமும், எச்சரிப்பும் கலங்கடிக்கின்றன. Multiverse கதைகளின் சில புள்ளிகள் பூடகமாக இருக்கும். சமயங்களில் எளிய பார்வையாளர்களைக் குழப்பியடிக்கும். இத்திரைப்படம் தன்னுடைய நேர்த்தியான திரைக்கதை, மையமான ஒரு கதையைச் சுற்றிய துணைக்கதைகளால் அருமையாகப் புரியும் வண்ணம் வெளிவந்திருக்கிறது. இப்படம் ஒவ்வொரு மனிதரைப்பற்றிய ஒரே கதைகளைப் புறக்கணித்து, அவர்களுக்குள் ஊற்றெடுக்கும் பற்பல கதைகளின் மீது கவனம் குவித்திருக்கிறது. அரவணைத்துக் கொள்ளவும், முன்முடிவின்றி வாழ்வினை அணுகவும், பேரன்பை பரிமாறவும், இறுதியில் எதுவும் முக்கியமில்லை என்பதையும் வண்ணமயமாகச் சொல்லிச்செல்கிறது. மறக்காமல் திரையரங்குகளில் பாருங்கள்.

விசாவுக்காக காத்திருக்கிறேன் – அண்ணல் அம்பேத்கரின் நினைவலைகள்


‘விசாவுக்காக காத்திருக்கிறேன்’ எனும் இரு சொற்களின் அடர்த்தி, வலி அபரிமிதமானது. எது தனக்கான நாடு? சமத்துவம், சம உரிமைகள், சம வாய்ப்புகள் மறுக்கப்பட்டு பிறப்பின் அடிப்படையில் அந்நியரைப் போல நடத்தப்படுவது தகுமா? நீதி, நியாயம், நம்பிக்கை, ஆதரவு, பாதுகாப்பை உறுதியளிக்கும் அந்த சமத்துவ விசாவுக்கான காத்திருப்பு எப்போது கைகூடும்? இப்படி பற்பல வினாக்களை முப்பதிற்கும் குறைவான பக்கங்களில் பாபாசாகேபின் தன் வரலாறு எழுப்புகிறது.

ஏராளமான நூல்களை எழுத வேண்டும் என்கிற கனவுகள் கைகூடுமுன்னே அண்ணல் நம்மை விட்டுப்பிரிந்தார். அரசமைப்புச் சட்ட உருவாக்கம், கட்சிப் பணிகள், இந்து சட்ட மசோதா வரைவினை எழுதுதல், சித்தார்த்தா கல்லூரி உள்ளிட்ட கல்வித்தலம் எழுப்பல், மக்கள் பணி, இதழில் என ஓய்வு அலைச்சல் இல்லாமல் இயங்கியவரை வறுமை, ஏளனம், அவமதிப்பு, புறக்கணிப்பு வீழ்த்தவில்லை. அத்தனைக்கு நடுவிலும் அவர் எழுதினார், இயங்கினார். டாக்டர் அம்பேத்கரின் அகவுலகினை கண்முன் நிறுத்தும் எழுத்து இப்போது தமிழில். இந்நூலின் முதல் பதிப்பினை வெளியிட்ட நீலம் பதிப்பகத்திற்கு நன்றிகள்.

இந்நூல் சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கு எண் 158,159-ல் கிடைக்கும்.
நன்செய் வெளியீடு
ஓவியம்: சந்தோஷ் நாராயணன்
விலை: 20

தமிழில்: பூ.கொ.சரவணன்.

சாவித்திரிபாய் பூலே – கல்விக்கண் திறந்த ஆளுமை


சாவித்திரிபாய் பூலேவின் 125 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்குறிப்பில் இருந்து..

‘வணக்கம். நலமா? என் பெயர் சாவித்திரிபாய் பூலே. என் கதையைச் சொல்கிறேன். இது பல்லாயிரம் பெண்களின் கதை.

என்னுடைய ஊர் சத்தாரா. இப்பகுதியின் அரசர் மூன்றாம் பேஷ்வா பாஜிராவ். ஊர் முழுக்கக் கட்டுப்பாடுகள். கல்வி என்பது பிராமணர்கள் உள்ளிட்ட சாதியினருக்கு மட்டுமே கிடைத்து வந்தது. பெண்கள் நிலைமை மோசம். குழந்தையாக இருக்கும் போதே திருமணம். கணவர் இறந்தால் மொட்டையடித்து ஒதுக்கிவிடுவார்கள். நெருப்பில் தள்ளும் வழக்கமும் உண்டு. படிப்பெல்லாம் சுத்தம். நாங்கள் படித்தால் உருப்பட மாட்டோம் எனச்சொன்னார்கள். ஊரில் பலருக்கும் கடிதம் எழுதுவோம் என்றார்கள். படிக்கிற பெண்ணுடைய கணவரின் சாப்பாட்டில் புழுக்கள் நெளியும். சீக்கிரம் அவர் செத்துடுவார் என்றுகூடச் சொல்வார்கள். நான் சிரித்துக்கொள்கிறேன். எப்படியெல்லாம் ஏமாற்றப் பார்க்கிறார்கள்?

அதை விடுங்கள். என்னுடைய ஊருக்கு போவோம். என்னுடையது விவசாயக் குடும்பம். நான் குளிர்மிகுந்த ஜனவரி மாதத்தில் பிறந்தேன். இளம் வயதில் பள்ளிக்கூடத்தைக் கண்ணில் கூடக் காட்டவில்லை. 9 வயதில் ஜோதிபாய்யோடு திருமணம். புனேவிற்குக் குடிபெயர்ந்தேன்.

அவர் மிஷனரி பள்ளிகளில் கல்வி பயின்றார். எனக்கும் எழுத, படிக்க உதவினார். பல்வேறு கதைகள், அனுபவங்கள். ஒருநாள் பிராமணர் வீட்டுக் கல்யாணம். போன வேகத்திலேயே திரும்பிவிட்டார். ‘நாமல்லாம் சூத்திரனுங்களாம். தீட்டாயிடுச்சாம். விரட்டிவிட்டுட்டாங்க’ எனப் புலம்பினார். எல்லாரையும் படிக்க வைக்க வேண்டும் என அவருக்குக் கனவு. சாதிப்பாகுபாடுகள் படிப்பாலும், விழிப்புணர்வாலும் தான் ஒழியும். நான் மேலும் படித்தேன். ஜோதிபாய் உடனிருந்தார், உற்சாகப்படுத்தினார். அவருடைய நண்பர்களும் பாடம் சொல்லிக்கொடுத்தனர். எனக்குப் படிப்பது சுகமானதாக இருந்தது. இன்னமும் கற்க வேண்டுமென ஆசையாக இருந்தது. ஃபராரி, மிட்செல் எனும் இரண்டு ஆங்கிலேய ஆசிரியைகள் அன்போடு உதவினார்கள். நான் படித்ததைப் பலருக்கும் சொல்லித்தரும் நேரம் எப்போது வரும்?

ஜோதிபாய் பெண்களுக்கான பள்ளியைத் துவங்கினார். ஒரே எதிர்ப்பு. பள்ளிக்கூடத்திற்கு வெளியே ‘ஒழிஞ்சு போங்க’னு கோஷம் போடுவார்கள். என் மாமனாரை தூண்டி விட்டார்கள். ‘நீ எக்கேடோ கெட்டுப்போ. இவளை ஏன் படிக்க வைக்கிறே’ எனக்கேட்டார். இதையெல்லாம் நிறுத்திக்கொள்ளுங்கள், இல்லையென்றால் நடுத்தெரு என்றார். நானும், ஜோதிபாயும் நடுத்தெருவை தேர்ந்தெடுத்தோம். எங்களுக்குள் கல்விக்கனல் எரிகிறது. அது ஒரு வீட்டிற்குள்ளேயே அணைந்து விடலாமா? ஆகாது.

எங்கள் பள்ளிக்கு வந்துகொண்டிருந்த ஒரே ஆசிரியரையும் மிரட்டினார்கள். வேறு வழியில்லை. என்னையே பாடம் நடத்தச் சொன்னார் ஜோதிபாய். பள்ளிக்கு நடந்து போவேன். என் மீது சாணி, அழுகிய காய்கறிகளை வீசுவார்கள். சில நாட்கள் வெற்றிலைப் போட்ட எச்சில் கூடப் பரிசாகக் கிடைத்தது. முதலில் பயமாக இருந்தது. பள்ளியின் பெண் குழந்தைகளின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. பயமெல்லாம் பாசத்தின் முன் பறந்தது. அழுக்குகளை வீசியவர்களிடம் சொன்னேன், “என்னுடைய தங்கைகளுக்குப் பாடம் சொல்லித் தரப்போகிறேன். இந்தக் குப்பைகள் எல்லாம் எனக்கான வாழ்த்து மலர்கள். இறைவன் உங்களை ரட்சிக்கட்டும்’.

என் அண்ணன் என்னைக் கடிந்து கொண்டான். ஏன் இந்த வேண்டாத வேலை என்றான். நான் சொன்னேன்,
“படிக்காமல் இருப்பது முழு மிருகத்தனம். அறிவைப் பெறுவதாலே பிராமணர்கள் மேல்நிலையில் உள்ளார்கள். கல்வியும், அறிவும் அற்புதமானது. கற்றவர் பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் எனப்பட்டாலும் அவரே உயர்ந்தவர். நாங்கள் தீண்டப்படாதோர் கற்க வேண்டும் என உழைக்கிறோம். அதன்வழியே விடுதலை கிட்டும். என் கணவர் பிராமணர்களை எதிர்த்துக்கொண்டு ஏன் தீண்டப்படாதவர்களுக்குக் கற்பிக்கிறார்? அவர்களும் சமமான மனிதர்கள். மானமிகு வாழ்க்கை எல்லாருக்கும் ஆனது. அதற்குக் கல்வி கற்க வேண்டும். அதற்காகவே நானும் கற்பிக்கிறேன். இதிலென்ன தவறு ? நாங்கள் சிறுமிகள், பெண்கள், மகர்கள், மங்குகள் என அனைவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்ப்போம்’ என்றேன்.

ஆரம்பத்தில் பெரிதாகப் பெண்கள் படிக்ற வரவில்லை. இத்தனைக்கும் எங்கள் பள்ளியே இந்தியர்கள் நடத்தும் முதல் பெண்கள் பள்ளி. நானும், ஜோதிபாயும் ஊர் ஊராகச் சுற்றினோம். படிக்க வரும் பிள்ளைகளுக்குப் பரிசுப்பணம் தந்தோம். கிராமம், கிராமமாகப் படிப்பின் அவசியம், நன்மைகளை எடுத்துச் சொன்னோம். கல்வியோடு விளையாட்டுகள், கலைகளைப் பேரன்போடு பகிர்ந்தோம். கூட்டம் பெருகியது.

9 ஆசிரியர்கள், 132 மாணவர்கள், 3 பள்ளிகள். அது கனவின் தொடக்கம். 1851, 1852 காலத்தில் தேர்வுகளை நடத்தினோம். கிட்டத்தட்ட திருவிழா தான். பெண்கள் படித்து, தேர்வில் அசத்துவதைப் பார்க்க 3,000 பேர் கூட்டம். அலையில் எழும் சூரியனாய் எங்கள் பெண்கள் மின்னினார்கள்.

‘பூனா அப்சர்வர்’ எனும் பத்திரிகை 1852 -ல் என்ன எழுதியது? ‘ஜோதிபாய்- சாவித்திரிபாயின் பள்ளியில் அரசுப்பள்ளி மாணவர்களை விடப் பத்து மடங்கு அதிகப் பெண்கள் படிக்கிறார்கள். மிக உயர்ந்த கல்வித்தரம். விரைவில் இப்பெண்கள் பெரும் சாதனைகள் புரிவார்கள்’. 50 க்கும் மேற்பட்ட பெண்கள், அனைவருக்குமான பள்ளிகளை நடத்தினோம்.

எங்கள் இருவருக்கும் குழந்தை பிறக்கவில்லை. ஜோதிபாயை இரண்டாம் கல்யாணம் செய்துகொள்ளச் சொன்னார்கள். அதற்கு அவர், ‘குழந்தை பிறக்கலைனா பொண்ணு தான் மலடியா? ஆம்பிள கிட்டயும் பிரச்சனை இருக்கலாமே. பிள்ளை பொறக்கலைனு பொண்டாட்டி வேற கல்யாணம் பண்ணிக்கிட்டா புருஷனுக்கு எப்படியிருக்கும்? என்னால சாவித்திரியை விட்டுட்டு இருக்க முடியாது’ என்றார்.

பல கைம்பெண்கள் நிலைமை கண்ணீரை வரவைத்தது. சொந்தக்கார ஆண்கள் வதைத்தார்கள். பரிதாபமாகக் கைம்பெண்கள் கர்ப்பமானார்கள். அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களைக் காப்பாற்றினோம். 1853-ல் அப்பெண்களை அரவணைக்க இல்லம் துவங்கினோம்.

கையால் நெய்த ஆடைகளை அணிவது வழக்கம். அவை எளிமையான, ஆனால், கம்பீரமான ஆடைகள். இல்லத்தரசிகளுக்கு ஆடை நெய்யக் கற்றுக்கொடுத்தேன். பொங்கல் பண்டிகை அன்று பெண்கள் அமைப்பைத் துவங்கினேன். மாமியார், மருமகள், அம்மா, மகள் என அனைவரும் வந்தனர். ஒன்றாக அமர்ந்து சொந்தக்காலில் நிற்கப் பழகினோம்.

கைவிடப்பட்ட கைம்பெண் ஒருவரின் மகனை தத்தெடுத்துக் கொண்டோம். யஷ்வந்த் எனப் பெயரிட்டு வளர்த்தோம். மருத்துவம் படித்தபின் ஏழை, எளியவர்கள், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குச் சேவை செய்தான் யஷ்வந்த்.

கண்முன் இன்னொரு அநீதி தெரிந்தது. கணவன் இறந்ததும் கைம்பெண்களுக்கு மொட்டையடித்தார்கள். மனைவி இறந்தால் கணவனுக்கு மொட்டையடிக்கிறோமா? ஏன் பெண்ணுக்கு மட்டும் இந்தக் கொடுமை? சவரம் செய்பவர்களை நாடினோம். வேலை நிறுத்தம் செய்யக் கோரினோம். கூடுதல் கூலி வேண்டியோ, சலுகைகள் நாடியோ அல்ல. கைம்பெண்களின் சமத்துவம் நாடி போராட்டம் நிகழ்ந்தது. சவரக்கத்திகள் ஓய்வெடுத்தன. பல கைம்பெண்களின் கண்ணீர் காணாமல் போனது. அந்தச் சவரத்தொழிலாளர்களை நினைக்கும் போதே பெருமிதம் பூக்கிறது.

1877-ம் ஆண்டு. பெரும் பஞ்சம். மக்கள் பசியால் செத்து மடிந்தார்கள். விலங்குகள் இறந்து தரையில் விழுந்தன. பெரும் உணவுப்பஞ்சம். மக்கள் ஊரைவிட்டு வெளியேறினார்கள். ஆறு, குட்டை, குளம் எல்லாம் வற்றின. தவித்த வாய்க்கு தண்ணீரில்லை. மரங்களில் இலையே தென்படவில்லை. வறண்ட நிலம் பாளம், பாளமாய்ப் பிளந்தது. விஷப்பழங்களை உண்டார்கள், சிலர் சிறுநீரை குடித்தார்கள். மக்கள் உணவுக்காக, தண்ணீருக்காக அழுதார்கள், பின், பரிதாபமாக இறந்தார்கள்.

நாங்கள் கிராமம், கிராமமாகச் சுற்றினோம். இயன்றவரை நீரும், சோறும் தந்தோம். கந்துவட்டிக்கார கொடுமைகளைத் தட்டிக்கேட்டோம். ஏழைப்பிள்ளைகள் தங்கவும், கற்கவும் 52 விடுதியோடு கூடிய பள்ளிகள் திறந்தோம்.

1890-ல் ஜோதிபாய் காலமானார். அவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றேன். ஆணும், பெண்ணும் சமம் எனும் தாமஸ் பெய்னின் ‘Rights of Man’ னின் வரிகளை ஜோதிபாய்ச் சொல்லிக்கொண்டே இருப்பார். அதை எண்ணிக்கொண்டு நானே அவரின் உடலுக்குத் தீமூட்டினேன்.

1897 பெரும் பிளேக் நோய். லட்சக்கணக்கான மரணங்கள். மருத்துவர்கள் சாதி பார்த்தார்கள். ஒடுக்கப்பட்ட சூத்திரர்கள், அதி-சூத்திரர்கள் யாருமின்றி இறந்தார்கள். நானும், யஷ்வந்தும் அசரவில்லை. எங்கள் சத்தியசோதக் அமைப்பினரோடு உழைத்தோம். மருத்துவமனைகள் நடத்தினோம். உயிரைப் பணயம் வைத்து போராடினோம். பிளேக் நோயுற்ற மகர் சிறுவன் ஒருவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. நானே தொட்டுத் தூக்கினேன். அவன் உயிரை காப்பாற்றி விட்டோம். களைப்பாக இருக்கிறது. பிறிதொரு நாள் இன்னமும் சொல்கிறேன். ‘

சாவித்திரிபாய் பிளேக் நோய்க்கு எதிரான போரின் போதே வீர மரணம் எய்தினார். ‘கல்வித்தாய்’, ‘இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்’ எனும் பல்வேறு பெருமைகளுக்கு உரியவர். ‘மாசற்ற ரத்தினங்களின் பெருங்கடல்’ எனும் கவிதை நூல் இயற்றினார். அவரின் கவிதை ஒன்று:

உனக்கு நீயே துணை, ஓயாமல் உழை.
கல்வியும், பொருளும் கொண்டு சேர்.
அறிவிழந்தால் அனைத்தும் அழியும்.
கல்விச்செல்வமின்றிக் கால்நடை விலங்கு நாம்.
சோம்பி அமராதே, எழு, கல்வி கற்றிடுக.
ஒடுக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள் துயர்துடை.
கற்கும் பொன் வாய்ப்பினை பற்றிக்கொள்.
ஆகவே, கற்றிடுக, சாதிச்சங்கிலிகளை உடைத்தெறிக.
பிராமணர்களின் புனித நூல்களை வேகமாகத் தூக்கியெறிக.