”Pornstar என அழைப்பது ஈவிரக்கமற்றதாகத் தோன்றுகிறது. நான் அதனைக் கடந்து வர முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.” – மியா காலிஃபாவுடன் ஒரு உரையாடல்


BBC Hard Talk நிகழ்வில் மியா காலிஃபா தன்னுடைய கடந்த காலம், தொடரும் பயணம், அடிப்படைவாதிகளிடம் இருந்து வந்த மிரட்டல்கள், கலவையான உணர்ச்சிகள் என்று பலவற்றைப் பேசினார். (https://www.youtube.com/watch?v=i2qplvJ6SLs) உரையாடலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் மட்டும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

உரையின் மூலத்தை தட்டச்சு செய்து கொடுத்த தோழர் Nivaas Sudhan -க்கு நன்றி !

நேர்முகம் செய்பவர்:

வணக்கம் நான் ஸ்டீபன் சேக்குர். இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளப்போகும் விருந்தினர் மியா காலிஃபா. 16 மில்லியன் followers உடன் instagram -ல் உலா வருகிறார். அவருடைய பெயரை கூகுள் செய்தால் அளவற்ற தேடல் முடிவுகள் தோன்றும். இப்படி உலகப்புகழ் பெற்ற ஒருவராகத் திகழ்வதைக் குறித்து மியா பெருமைப்படவில்லை. இந்தப் புகழ் 2014-ல் ஃபோர்ன் துறையில் பணியாற்ற அவர் செய்து கொண்ட மூன்று மாத ஒப்பந்தத்தால் கிட்டிய ஒன்று.

இத்துறையை விட்டு வெளியேற முடிவு செய்வதற்கு முன்பு வரை 12 காணொளிகளில் மட்டுமே அவர் பங்களித்து இருந்தார். அதில் ஒன்று உலகளவில் அதிர்வலைகளைக் கிளப்பியது. இஸ்லாமிய ஹிஜாப் அணிந்தபடி அவர் உடலுறவில் ஈடுபடுவதாக ஒரு காணொளி காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அது பலத்த கண்டனங்கள், கொந்தளிப்பை சம்பாதித்துக் கொடுத்தது. ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் அவரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள்.

லெபனான் நாட்டில் கிறிஸ்துவப் பெற்றோருக்கு பிறந்த மியா சிறுமியாக இருக்கும் போது குடும்பத்தோடு அமெரிக்காவின் மேரி லாண்ட் பகுதிக்கு இடம்பெயர்ந்து விட்டார். இளம்வயதில் பாதுகாப்பின்மையால் சூழப்பட்டவராக, கட்டுப்பாடுகளுக்கு அடங்க மறுப்பவராகத் திகழ்ந்த மியா தனக்கு நேர்ந்தவை குறித்து மனம்திறந்து உரையாட இருக்கிறார்

நே: எப்படிப் பார்த்தாலும் நீங்கள் மிகவும் புகழ்பெற்ற பெண்மணி. 16 மில்லியன் பேர் உங்களை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள். ஆனால் , இந்தப் புகழிற்கு நீங்கள் போர்ன் துறையில் குறுகிய காலம் ஈடுபட்டதே காரணம். இதை எதிர்கொள்வது உங்களுக்குக் கடினமான ஒன்றாக இருக்கிறதா?

மியா : ஆமாம். நான் அத்துறையை விட்டு வெளியேறியதும் என்னுடைய இன்ஸ்டா கணக்கை அழித்தேன். இல்லை. சரியாகச் சொல்வது என்றால், ஐ எஸ் ஐ எஸ் ஆதரவாளர்கள் என்னுடைய கணக்கை கைப்பற்றி, அதில் தங்களுடைய பரப்புரைகளைப் பதிந்து கொண்டே இருந்தார்கள். இன்ஸ்டாகிராம் அந்தக் கணக்கை தூக்கிவிட்டது. இன்னொரு கணக்கை ஓராண்டிற்கு நான் உருவாக்கவில்லை. உலகம் ஏளனமாகப் பார்க்கும் ஒரு போர்ன் நட்சத்திரம் என்கிற என்னுடைய தலைவிதியை ஏற்றுக்கொண்டேன். என்னைப்பற்றி நிலவும் பார்வையை மாற்ற முயற்சி செய்யலாம் என முடிவு செய்தேன். ஒரு இன்ஸ்டா கணக்கை மீண்டும் துவக்கி, வேறு நல்ல வார்த்தை தோன்றவில்லை என்பதால் influencer ஆக முயன்றேன் எனச் சொல்லலாம்.

நே: உங்கள் பெயரை வேலை நிமித்தமாகக் கூகுள் செய்தால் “போர்ன்ஸ்டார்’” என்று தான் உடனே வருகிறது. இதனை எவ்வளவு முயன்றாலும் உங்களால் கடந்துவிட முடியாத இல்லையா? எவ்வளவு மெனக்கிட்டாலும்

மியா: இது ஈவிரக்கமற்றதாகத் தோன்றுகிறது. நான் அதனைக் கடந்து வர முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.

நே: நீங்கள் அப்படித்தான் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புவதாகச் சொல்லவில்லை. அப்படிதான் இணையம், தொழில்நுட்பம் இயங்குகிறது என்கிறேன்

மியா : கூகுளுக்கு எனக்கும் நல்ல உறவு இல்லை என்பது உண்மை தான். அதனை மாற்ற முயன்று கொண்டே இருக்கிறோம். நான் நடத்துவதாக அறிவித்துக் கொள்ளும் ஒரு தளத்தோடு எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அதனை எந்த வகையிலும் நான் கட்டுப்படுத்தவில்லை. என்னைக் குறித்த விக்கிபீடியா பக்கத்திலும் மியாவின் அதிகாரப்பூர்வ தளம் அது என்றே குறிப்பிடுகிறார்கள். அந்தத் தளத்தை முடக்கச் சட்டப்படி பலமுறை முயன்று பார்த்தாகிவிட்டது. பலமுறை தளத்தை மூட அவர்கள் கேட்பதை தருவதாகப் பேசியும் ஆகிவிட்டது. ஒன்றும் மாறவில்லை.

நே: ஒவ்வொன்றாகப் பேசுவோம். எப்படி லெபனான் நாட்டில் பிறந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து நன்றாகப் படித்து டெக்ஸாஸ் பல்கலைக்குள் நுழைந்த நீங்கள் போர்ன் துறைக்குள் அகப்பட்டுக் கொண்டீர்கள்?

மியா: தாழ்வு மனப்பான்மை பாகுபாடு பார்க்காமல் எல்லாரையும் ஆட்கொள்கிறது என்று நினைக்கிறேன். செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தீர்களா, பெரிய பின்புலம் இல்லாத குடும்பத்தில் வளர்ந்தீர்களா என்பதை எல்லாம் பார்த்துத் தாழ்வுமனப்பான்மை வருவதில்லை. நான் குழந்தையாக இருக்கும்போது பருமனாக மட்டுமே இருந்தேன். கவர்ச்சிமிக்கவளாக அல்லது ஆண்களை வசீகரிக்கும் தகுதி கொண்டவளாக உணர்ந்ததே இல்லை. சிறு சிறு மாற்றங்களைச் செய்த போது, கல்லூரி முதல் ஆண்டில் நான் எடை இழக்க ஆரம்பித்தேன். பட்டப்படிப்பை முடித்த போது ஆளே மாறியிருந்தேன். கிட்டத்தட்ட 50 பவுண்ட் எடை குறைந்த போதும், என் மார்பகங்கள் குறித்தே அதீதமாகக் கவனம் செலுத்தினேன். இந்த எடையை எப்படிக் கிலோகிராம் கணக்கில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை

நே: அது உங்களின் உடற்தோற்றத்தையே மாற்றியிருக்கும் இல்லையா?

மியா: ஆமாம். என்னுடைய மார்பகம் ஏன் இப்படி இருக்கிறது என்பதே மிகப்பெரிய கவலையாக அரித்துக் கொண்டிருந்தது. எது இயல்பான அளவோ அந்தளவுக்கு என்னுடைய மார்பகத்தை மாற்ற முயன்றேன். அது ஒருவழியாக நடந்ததும், ஆண்களின் எல்லாக் கவனமும் என் மீது குவிந்தது. இதை எல்லாம் அதற்குமுன்பு எதிர்கொண்டதே இல்லை. இப்படித் தாழ்வுணர்ச்சியில் உழன்று கொண்டிருந்துவிட்டு முதன்முறையாகக் கிடைத்த அங்கீகாரம், புகழ் மொழிகள் என்னைப் பரவசம் கொள்ள வைத்தன. அதனை இழந்துவிடக்கூடாது என்று விரும்ப ஆரம்பித்தேன்.

நே: முதன்முறை சாலையில் யாரோ கல்லூரிப்படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்த உங்களைப் பார்த்து “போர்ன் தொழிலில் ஈடுபட விருப்பமா” என்று கேட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். வேண்டாம் என்று சொல்லாமல் எது இதற்குள் நுழைய உங்களை உந்தித்தள்ளியது?

மியா: அப்படி யாரும் கேட்கவில்லை. அதற்கு மாறாக, “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. மாடலிங் பண்ண விருப்பமா. உங்க உடல்வாகு அப்படி அசத்தலா இருக்கு. நீங்க nude modeling பண்ணா பிரமாதமா இருக்கும்” என்று பேசினார்கள். நான் ஸ்டூடியோவிற்கு வந்தேன். மியாமியில் அந்த இடம் இருந்தது. அது பார்வைக்கு அவ்வளவு அழகாகக் காட்சியளித்தது. அவ்வளவு சுத்தமாக இருந்தது. வேலை பார்த்தவர்கள் எல்லாரும் அவ்வளவு கனிவாக நடந்து .கொண்டார்கள். அவர்களின் அறைகளில் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்கள் காணப்பட்டன. எனக்குச் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் எதுவுமே இல்லை. எதுவும் என்னைச் சங்கடப்படுத்தவில்லை. முதல் முறை போர்ன் படம் எடுக்கவைக்கவில்லை. “இந்த ஒப்பந்தத்தில் இங்கே கையெழுத்து போடு இன்னும் பிற” என்றே நகர்ந்தது. இரண்டாவது முறை தான் படம் பிடித்தார்கள்

நே: உலக அனுபவம் இல்லாத இளம்பெண்களை வேட்டையாடும் நபர்கள் பற்றிக் குறிப்பிட்டதால்கேட்கிறேன். மேற்சொன்னவை நடந்த போது உங்களுக்கு 21 . இப்போது உங்களுக்கு 26 வயதாகிறது. வயது. இந்தக் கடந்த காலத்தைத் திரும்பிப்பார்க்கையில் ‘நான் இப்படிப் போய்ப் பலியானேனே’ என்கிற உணர்வு ஏற்படுகிறதா? அந்த 21 வயது பெண்ணை அவர்களின் தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டாரகள், அவள் பாதிக்கப்பட்டவள் என்று தோன்றுகிறதா?

மியா: தன்னைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளும் கருவிகள் அப்போது அவள் வசம் இல்லை என்றே உணர்கிறேன். அவளிடம் பொய்களை அள்ளி வீசுகிறார்கள் என்று அவளுக்குத் தெரியவில்லை. பொய்கள் என்பதைவிட அவர்களுக்கு ஏற்றவாறு அவளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். தங்களுக்கு வேண்டியதை அவளைக்கொண்டு முடித்துக் கொண்டார்கள். உண்மையில் என்னைப் பாதிக்கப்பட்டவள் என்று கருதவில்லை. அந்த வார்த்தை எனக்குப் பிடிக்கவில்லை. நான் எடுத்த முடிவுகள் மோசமான முடிவுகள் என்றாலும் அம்முடிவுகளை நான் தான் எடுத்தேன். பெண்கள் அணுகப்படுகிற விதம் மாறவேண்டும் என்று எண்ணுகிறேன்.

நே: பல கோடிகள் புரளும் துறை. இதன் உயிர்நாடியாகக் கேமிராவின் முன்னால் கலவியில் ஈடுபட வேண்டுமென்று பணிக்கப்பட்ட, அதற்கு ஒப்புக்கொண்ட இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் இருக்கிறார்கள். பல கோடி பேரால் பார்க்கப்படும் இந்தக் காணொளிகளின் உருவாக்கத்தை எந்தளவிற்கு உங்களால் கட்டுப்படுத்த இயலும்?

மியா : கிட்டத்தட்ட எதுவுமே இல்லை. அதிகபட்சம் இந்த மேலாடையை அணிய மாட்டேன் என்றுசொல்லலாம். எதைப் படம் பிடிக்கிறார்கள், அதன் உள்ளடக்கம், பேசுபொருள், எங்குப் படம்பிடிக்கப்படும் என்று எதையும் நாங்கள் முடிவு செய்ய முடியாது.

நே: இவற்றைப் பார்க்கும் வெளியாளாக இதில் ஈடுபடுபவரின் ஒப்புதல் அடிப்படையான, முக்கியமான கொள்கையாக இருக்க வேண்டும். நீங்கள் விரும்பாத பாலியல் செயலை உங்களை அவர்கள் செய்யச் சொன்னால் ….

மியா: இல்லை. அவர்களால் உங்களைக் கட்டாயப்படுத்த முடியாது. இல்லவே இல்லை.

நே: சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சுவாரசியமாகப் பேசியிருந்தீர்கள். இந்தப் பாலியல் காணொளிகளுக்காக இயங்குகையில், மொத்தமாக எல்லாமே இருண்டு போனதை போன்ற ஒரு உணர்வு ஏற்படும் என்றும், திரும்பி பார்க்கையில் பல விஷயங்களைத் தெளிவாக நினைவுகூர முடியவில்லை என்றும் சொல்லியிருந்தீர்கள். இந்தத் துறைக்குள் ஆழமாகக் கால் பதிக்க ஆரம்பித்த போது உங்கள் மண்டையில் என்ன ஓடிக்கொண்டிருந்தது

மியா: அந்தப் பேட்டியின் போது எனக்கு அகப்படாமல் போன சொல்- அட்ரினலின். என்னுடைய அட்ரினலின் சுரப்பி அதீதமாகச் சுரந்து எனக்கு என்ன நடக்கிறது என்பதோ, நான் என்னவெல்லாம் செய்வேன் என்று கற்பனை செய்தேனோ அதனைத் தாண்டி என்னென்னவோ செய்து கொண்டிருந்தேன் என்று எண்ணுகிறேன். தலைக்கு ஏறிய அட்ரினலினால் எதையும் திரும்பிப்பார்க்கையில் என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக நினைவுகூர முடியவில்லை.

நே: இதைப்பற்றியெல்லாம் இப்போது பேசுவது சங்கடமாக இருக்கிறதா?

மியா: ஆமாம் ஓரளவிற்கு

நே: நீங்கள் அரேபிய வம்சாவளியில், லெபனானில் பிறந்தவர். அரேபிய கலாசாரம் ஒட்டுமொத்தமாகப் பழமைவாதத்தில்ஆழமாகத் தோய்ந்து போன ஒன்று. அந்தக் கட்டுப்பாடுகள் நிறைந்த படலத்தை உரித்து எறிந்து விட்டு இந்தத் தொழிலில் ஈடுபட வேண்டியிருந்ததா?

மியா: இருக்கலாம். இந்தச் செயல்பாட்டின் ஒரு பகுதி எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு, என்னுடைய எல்லைகளை, பண்புகளைத் தாண்டி எதையேனும் செய்ய வேண்டும் என்கிற விருப்பத்தில் என்னையே நான் அதிரவைக்கிற செயல்களில் ஈடுபட்டேன் என்று எண்ணுகிறேன்.

நே: இது உங்கள் குடும்பத்துக்குத் தெரியாதில்லையா?

மியா: நான் என்ன செய்கிறேன் என்று அவர்களுக்குத் தெரிந்ததும் என்னை மகளே இல்லை என்று தலைமுழுகி விட்டார்கள்.

நே: அது பெருந்துயரமாக இருந்திருக்கும் இல்லையா

மியா: இந்த உலகம் மட்டுமல்ல என்னுடைய குடும்பம், என்னைச் சுற்றியிருந்த மனிதர்கள் எல்லாரும் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இந்தத் துறையை விட்டு வெளியேறிய பின்னர்த் தான் நான் இன்னமும் தனிமையானவளாக உணர்ந்தேன். சில தவறுகளை மன்னிக்க முடியாது என்று உணர்ந்துகொண்டேன் என்கிறேன். காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும். இப்போது நிலைமை எவ்வளவோ பரவாயில்லை.

நே: இந்தத் துறையின் இன்னொரு வகையான இயங்கியல் குறித்துச் சொல்லுங்கள். இந்த அதிகாரம், ஆதிக்கம், பணம். ஆபாசமான ஆண்கள், பெண்கள் குறித்துப் பேசினோம். உங்களுக்குத் தெரிந்தவரை இந்தத் தொழிலில் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் இடத்தில் பெண்கள் இருக்கிறார்களா?

மியா: நிச்சயமாக. இத்துறைக்குள் வருபவர்கள் நெருக்கமாகப் பணியாற்றும் ஒரு பெண்மணி இருக்கிறார். அவர் இனிமையானவர், மரியாதைமிக்கவர், கண்ணியமானவர… விற்பனை, வரிப் பக்கம் பல பெண்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் எப்படி இந்தவேளைக்கு வந்து சேர்ந்தார்கள் என்று கேட்பேன். வாய்வழி செய்தியா? இல்லை நண்பர்களின் மூலமா என்றெல்லாம் கேட்டிருக்கிறேன்.

நே: இந்தத் துறையின் பணம் கொழிக்கும் பக்கம் அசாதாரணமானது இல்லையா? நீங்கள் இஸ்லாமிய ஆடையான ஹிஜாப் அணிந்து கொண்டு தோன்றும் காணொளி pornhub ல் வெளிவந்தது. அதன்மூலம் நீங்கள் நம்பர் 1 போர்ன் நடிகையாக ஆனீர்கள். நீங்கள் நடித்த காணொளிகளைப் பல கோடி பேர் கண்டார்கள். அந்த 12 காணொளிகளுக்கும் உங்களுக்கு மொத்தமாக 12,000 டாலர் மட்டுமே தரப்பட்டது. ஆனால், நீங்கள் பணியாற்றிய Bang Bros நிறுவனம் மற்றும் pornhub இரண்டும் கோடிக்கணக்கான டாலர்களை ஈட்டின. ஏன் இப்படி?

மியா: அது அப்படித்தான். எனக்கு மட்டும் இப்படிச் செய்தார்கள் என்றில்லை. எனக்கு மட்டும் மோசமான ஒப்பந்தமோ, மேலாளரோ கிடைத்தார் என்றில்லை. எனக்கு என்று மேலாளர், ஏஜென்ட் இருந்தார்கள். ஆலோசகர்கள் யாருமில்லை. யாருமே இல்லை.

நே: இல்லையா? உங்களுக்கு 21 வயது தான் ஆகியிருந்தது. குழந்தைப்பருவத்தைக் கொஞ்ச காலத்திற்கு முன்பு கடந்த உங்களுக்கு ஆலோசனை சொல்ல யாருமில்லையா?

மியா : இல்லை. மனித மூளை முழுமையாக வளர்ச்சியடைய 25 வயதாகும். என்னுடைய மூளையில் இருந்த முடிவெடுக்கும் பகுதி முதிர்ச்சி அடைந்திருக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும், எது தவறு என்றெல்லாம் சொல்ல யாருமே இல்லை.

நே: இது போர்ன் தொழிலின் பண்பை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. நீங்கள் ஒரு காணொளியில் தோன்றுவீர்கள். அது சாசுவதமாக இருக்கும். பல லட்சம் பேர் காண்பார்கள். எவ்வளவு நீங்கள் பிரபலம் ஆனாலும், நம்பர் 1 நாயகி என்று ஆனாலும் எந்த உரிமையும் உங்களுக்குக் கிடையாது. எகிறிக்கொண்டிருக்கும் உங்கள் புகழால் உங்களுக்கு ஒரு பயனுமில்லை.

மியா : ஆமாம். ஒன்றுமே கிடைக்காது. இன்றுவரை இந்த ஒப்பந்தங்கள் இப்படித்தான் போடப்படுகின்றன.

நே: இதைப்பற்றிப் பேசியே ஆகவேண்டும். நான் முதலிலேயே நீங்கள் ஹிஜாப் அணிந்து தோன்றிய காணொளி குறித்துப் பேசினேன். அதில் உங்களைத்தவிர மூன்று இளைஞர்களும் தோன்றினார்கள். அது பின்னர்க் கலவி காட்சியாக மாறுகிறது. அது உசுப்பேற்றக் கூடிய ஒன்று என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

மியா: “நீங்க என்னைக் கொல்ல பாக்குறீங்க” என்று நான் சொன்னேன். அவர்கள் கொல்லென்று சிரித்தார்கள்.

நே: நீங்கள் ஏன் இதில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை..

மியா: அச்சுறுத்தல். நான் பயந்து போயிருந்தேன். நான் முடியாது என்று சொன்னால் அவர்கள் என்னைக் கட்டாயப்படுத்த போவது கிடையாது என்று எனக்குத் தெரியும். அப்படி அவர்கள் கட்டாயப்படுத்தினால் அது வன்புணர்வு. என்னை யாரும் கட்டாயப்படுத்திப் புணரப்போவதில்லை. ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது … மனந்திறந்து பேச படபடப்பாக இருந்தது. நீங்கள் ஒரு உணவகத்துக்குப் போகிறீர்கள். சிப்பந்தி “எப்படி இருக்கு சாப்பாடு எல்லாம்?” என்று கேட்கிறார். “சாப்பாடு நல்லாவே இல்லை” என்று முகத்தில் அறைந்தாற்போலச் சொல்ல யோசிப்பீர்கள் இல்லையா. நான் பயந்து போயிருந்தேன். பதற்றமாக உணர்ந்தேன்.

நே: ஆண்களே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துகிற இத்துறையில் அந்த ஆண்களுக்கும், 21 வயது இளம் நடிகைக்கும் இடையேயான அதிகார இயங்கியலில் விருப்பம் என்கிற கருத்தாக்கத்துக்கு அர்த்தமே இல்லை என்கிறீர்களா.

மியா : அதேதான் நான்கு ஆண் தயாரிப்பாளர்கள் இருக்கிற அறையில் நீங்கள் ‘என்னைக் கொல்ல பார்க்கிறீங்க’ என்கிற ரீதியில் எதையோ சொல்கிறேன். அவர்கள் வாய்விட்டு சிரிக்கிறார்கள். அது எதோ ஒரு வகையில் உலுக்கிவிடுகிறது. அதற்குப்பிறகு பேசவோ, மீண்டும் எதையாவது சொல்லவோ வாயே வராது. நிறுவனத்தின் தலைவர், CEO எல்லாம் உட்கார்ந்து கொண்டு ஒப்பந்தத்தைப் படிக்கச் சொல்வார்கள். அவர்கள் முன்னே உட்கார்ந்து கொண்டு படிக்கையில் ஒன்றுமே மண்டைக்கு ஏறாது. யாரோ நம்மை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற எண்ணமே பதற்றத்தை எகிற வைக்கும்.

நே: நீங்கள் படத்தளத்தை விட்டு வெளியேறியதும் இது பேரிடராக மாறப்போகிறது என்று மனம் எச்சரித்ததா?

மியா: அட்ரினல் தலைக்கேறி இருந்ததால் எனக்கு அப்போது ஒன்றுமே தோன்றவில்லை. அது வெளிவந்த நாள் என் மொத்த உலகமும் சின்னாபின்னம் ஆகியிருந்தது. நான் இப்படிப்பட்ட படங்களில் நடிக்கிறேன் என்று என்னை அறிந்தவர்கள் யாருக்கும் தெரியாது என்பதால் தான் இதில் இயங்கிக்கொண்டு இருந்தேன். பலலட்சம் பெண்கள் தாங்கள் கலவியில் ஈடுபடுவதைப் படமாக எடுக்க ஒப்புக்கொள்கிறார்கள். அவர்களின் பெயர்கள் வெளியே வருவதே இல்லை. அவர்களை யாரும் அடையாளம் கண்டு கொள்வதுமில்லை. அவர்கள் யாரென்று யாருக்கும் தெரிவதில்லை. என்னுடைய அசுத்தமான சிறு ரகசியம் என்னோடு மட்டுமே இருக்கும் என்பதாலேயே இதில் இருந்தேன். இந்தக் காணொளி எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு விட்டது.

நே: அது படத்தைத் தயாரித்தவர்கள், வெளியிட்டவர்கள் பார்வையில் பெரும் வெற்றி. எடுத்த உடனே லட்சக்கணக்கான பேர் பார்த்திருந்தார்கள்.

மியா: என்னை “குடுவைக்குள் ஒளிரும் மின்னல்” என்று அழைத்தார்கள்.

நே: உங்கள் வாழ்க்கையின் யதார்த்தமோ வேறு. ஹிஜாப் அணிந்த போர்ன் நட்சத்திரத்தின் முகம் உலகத்துக்கே தெரிந்திருந்தது.

மியா: ஆமாம் . நிறையக் கொலை மிரட்டல்கள் ஐ எஸ் ஐ எஸ் அனுதாபிகள் என்று சொல்லிக்கொண்டவர்களிடம் இருந்து குவிந்தது. நான் தலை துண்டித்துக் கிடப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, ‘அடுத்து நீ தான்டி’ என்று நாள் குறித்தார்கள்.

நே: தனியாளாக இதை எதிர்கொண்டிருப்பீர்கள். உங்கள் குடும்பத்தோடு கூட இதைப்பற்றிப் பேச முடியாது என்பது உங்களை வெலவெலத்து போக வைத்திருக்கும் அல்லவா?

மியா : இல்லையில்லை. பயமாகத்தான் இருந்தது. ஆனால், அதனை நகைச்சுவையோடு தான் எதிர்கொண்டேன். அந்த மிரட்டலுக்கு வேடிக்கையாக இப்படிப் பதில் சொன்னேன், “என் மார்பகங்களை வெட்டாதவரை ஒன்றும் பிரச்சினையில்லை. அவை விலை மதிப்பில்லாதவை” .

நே: இது நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. என் வாழ்க்கையே சின்னாபின்னம் ஆகியிருந்தது என்று சொன்னீர்கள். நீங்கள் செய்ததற்கு எந்தளவுக்குத் தனிப்பட்ட அளவில் பொறுப்பெடுத்துக் கொள்வீர்கள்.

மியா: 100 % நான் தான் பொறுப்பு. நான் எடுத்த முடிவு. அந்தத் துறை குறைகளால் ஆனது பெண்கள் இந்தக் குழிக்குள் விழாமல் தடுக்க நாம் எதையாவது செய்ய வேண்டும். ஆனால், இறுதியாக அந்த முடிவு என்னுடைய முடிவு.

நே: உங்களைப் பணம் கொட்டுகிற இயந்திரமாகத் தான் பார்த்தார்கள் இல்லையா. உங்களுக்கு என்று ஆலோசகர்கள், வழக்கறிஞர் என்று யாருமே இல்லையா?

மியா: அப்படித்தான் பார்த்தார்கள். 21 வயதில் எந்தப் பெண்ணுக்கு ஆலோசகர், வழக்கறிஞர் எல்லாம் இருக்கிறார் சொல்லுங்கள்.

நே: இது எவ்வளவு மன அழுத்தத்தை உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளவே கேட்கிறேன். இது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நீங்கள் இப்போது சலனமில்லாமல் காணப்படுகிறார்கள். அதனைக் கடந்து வந்திருப்பீர்கள். ஆனாலும், அந்த மன உளைச்சலில் ரணங்கள் இன்னமும் இருக்கின்றனவா

மியா: ஆமாம். குறிப்பாகப் பொது இடங்களுக்குப் போகிற போது அந்த உளைச்சல் என்னை நெரிக்கிறது. என்னை அப்படியே மக்கள் வெறித்துப் பார்க்கிறார்கள். என்னுடைய ஆடைக்குள் துளைத்துக் கொண்டு பார்ப்பதாக உணர்கிறேன். எனக்குள் ஆழமான அவமானத்தை அது உண்டாக்குகிறது. நான் எப்படி உணர்கிறேன் தெரியுமா? எனக்கென்று இருந்த அக உரிமை (privacy) எதுவும் கிடையாது. நான் இவர்களுக்கு ஒரு கூகுள் தேடல் தூரம் மட்டுமே..

நே: இந்தப் புகைப்படங்களை நீங்கள் இணையத்தில் இருந்து அகற்ற முடியாது. அது உங்களுடைய மனதுக்கு உளைச்சலை தரும் ஒன்று என்றாலும் யாருடைய பார்வையில் இருந்தும் அவற்றைக் காணடிக்க முடியாது. இதே நிலைமைதான் பிற போர்ன் நடிகர்களுக்கும் இல்லையா?

மியா: நான் கண்முன் இதனைக் காண்கிறேன். சமீபத்திய நேர்முகத்திற்குப் பின்பு பலர் தொடர்பு கொள்கிறார்கள். பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்ட பெண்கள், போர்ன் துறைக்குள் இழுத்து வரப்பட்டவர்களின் கேவல்கள் அவை. எப்படி இந்தப் பெண்களின் வாழ்க்கை சீரழிந்துபோயிருக்கிறது என்றும், இந்த ஒப்பந்தங்களால் ஆண்கள் மட்டும் எப்படிக் கொழிக்கிறார்கள் என்றெல்லாம் தெரியவருகிறது. இவையெல்லாம் “நாம வெளிப்படையா பேசுனதால என்னைப்போலவே உணருற மத்த பொண்ணுங்க கூடப் பேச முடியுது” என்று தோன்றவைக்கிறது. என்னளவிற்கு ஆழமாகக் காயப்படாவிட்டாலும், பாதுகாப்புணர்வு இல்லாமல் தவிப்பது, தாங்கள் விரும்பாத ஒன்றை கட்டாயத்தின் பேரில் செய்வதைப் புரிந்து கொள்கிறார்கள்.

நே: உங்களுக்கு இந்தத் தளம் கிடைத்து இதைக்குறித்து எல்லாம் பேசுகிறீர்கள். கடந்த காலத்தில் இருந்து வேறுபட்டுச் சமூகம் எப்படிப் போர்னோகிராபியை பார்க்கிறது என்பதையும், அதில் ஈடுபடுபவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் மாற்ற முனைகிறீர்கள் எனக்கருதலாமா ?

மியா : பெண்கள் எப்படிப் போர்ன் துறைக்குள் இழுத்து வரப்படுகிறார்கள் என்பது மாற்றப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். பெண்களாகவே விரும்பினால் மட்டுமே உள்ளே வர முடியும், அவர்களை யாரும் அழுத்தம் தந்து இழுத்து வரமுடியாது என்று நிலைமை மாற வேண்டும். அங்கேயே, அதே இடத்தில் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று கட்டாயப்படுத்த இயலாது. அதனை ஒரு வழக்கறிஞர் படித்துப் பார்க்க வேண்டும், பொறுமையாக வீட்டில் சில நாட்கள் படித்துப் பார்த்துவிட்டு ஒப்புக்கொள்ள வசதி வேண்டும்.

நே: உலகம் முழுக்கப் பல்வேறு நாடுகள் ‘போர்ன்மயமாக்த்தில்’ சிக்குண்டு கிடக்கின்றன. அதுவும் குறிப்பாக இளைஞர்கள் இவற்றில் மூழ்கிப்போவது ஆண், பெண் இருதரப்புக்கும் இடையேயான உறவை, அணுகும் விதத்தைப் பெருமளவில் அரித்து அழிக்கிறது என்கிற பார்வை ஒரு தரப்பிடம் நிலவுகிறது . உங்களின் பார்வை என்ன ?

மியா : நிச்சயமாகப் போர்ன் உறவுகளைச் சீர்குலைக்கிறது. போர்ன் வீடியோக்களைப் பார்த்துவிட்டு அதனையே தங்கள் வாழ்வினில் வரும் பெண்களிடம் ஆண்கள் எதிர்பார்ப்பது அபத்தமானது. காணொளியில் காண்பிக்கப்படுவது உண்மையில்லை. அவ்வளவு கச்சிதமானவர் யாருமில்லை. ஒரு புதன்கிழமை இரவு இத்தகைய நம்ப முடியாத செயல்களைக் காதலிக்கும் ஒருவரிடம் யாராலும் செய்ய முடியாது.

நே: நாம் நிறையப் பேசிவிட்டோம். கரடுமுரடான பயணமாக இருந்திருக்கும். மிகக் குறுகிய காலம் இருந்த ஒரு துறையில் இயங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்னமும் உலா வருவதைக் கடந்து வேறுபட்ட வாழ்க்கையை, உங்களைப் போர்னில் ஈடுபட்டவர் என்கிற கோணத்தில் இருந்து பார்க்காத உறவுகளை அடைந்திருக்கிறீர்கள் அல்லவா?

மியா: என்னைப்பற்றி எதுவுமே கேள்விப்பட்டிருக்காத ஒரு ஆணை கண்டடைந்தது பெரும்பேறு. அது அற்புதமானது. நாங்கள் பேச ஆரம்பித்த பிறகு, இதைக்குறித்துச் சொன்னேன். “நாம் பேச ஆரம்பித்த பிறகு உன்னைப்பற்றித் தேடினேன். 5 மில்லியன் பேர் பின்தொடரும் உன்னைப்பற்றிக் கூகுள் செய்யாமல் இருக்க நான் ஒன்றும் முட்டாள் இல்லை” என்று அவர் சொன்னார். என்னுடைய கடந்த காலத்திற்குப் பிறகு டேட்டிங் செய்வது கடினமானதாக இருந்தது. ஆண்கள் யாரும் கிடைக்கவில்லை என்றல்ல பொருள். அதற்குள் மூழ்கிப்போய் இருக்காத ஒருவரை கண்டடைவது சவாலானதாக இருந்தது. புரியும் என்று எண்ணுகிறேன்.

நே: 21 வயது மியாவை ஃபுளோரிடா நகரத்தில் நிறுத்தி ‘நீங்கள் அழகாக இருக்கீங்க நீங்க அட்டகாசமா தெரியுறீங்க. எங்ககூடச் சேர்ந்து வேலை செய்வீங்களா’ என்று ஒரு இளைஞன் நிறுத்தி பேசுகையில், மியாவிடம் நீங்கள் பேச முடியும் என்று வைத்துக் கொள்வோம். என்ன சொல்வீர்கள்?

மியா: உன்னுடைய பர்ஸில் இருக்கும் ஆயுதம் காத்துக்கொண்டிருக்கிறது. அதனை உபயோகப்படுத்து. அங்கிருந்து ஓடிவிடு மியா

நே: மியா காலிஃபா, hardtalk நிகழ்வில் உங்களோடு உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல.

மியா : என்னை அழைத்தமைக்கு நன்றி!

தமிழில் : பூ.கொ.சரவணன்

ஆண்கள் அழலாம்- சக ஆண்களுக்குச் சச்சினின் மனந்திறந்த மடல்


விரைவில் நீங்கள் தந்தையாக, கணவனாகக் கூடும். அண்ணனாக, தோழனாக, வழிகாட்டியாக, ஆசிரியராக இருப்பீர்கள். முன்மாதிரியாக வாழ்ந்து காட்டப் போகும் நீங்கள் தைரியமிக்கவராக, உறுதி உடையவராக, வீரமும், வலிகளைத் தாங்கும் வல்லமை உள்ளவராக உருவெடுக்க உள்ளீர்கள். நீங்கள் அச்சம், சந்தேகங்களை எதிர்கொள்ள நேரிடும். பெரும் துயரங்களை அனுபவிப்பீர்கள். நீங்கள் நிச்சயமாகச் சில வேளைகளில் தோற்றுப்போவீர்கள். உடைந்து அழுது விட வேண்டும் எனத்தோன்றும். எல்லாவற்றையும் கொட்டித்தீர்த்து விடலாம் எனத்துடிப்பீர்கள்.

ஆனால், கண்டிப்பாகக் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு உறுதிமிக்கவராக நடிப்பீர்கள். ஏனெனில், அதைத்தான் ஆண்கள் செய்ய வேண்டும். ஆண் பிள்ளைகள் அழக்கூடாது என்று சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஆண்மகன் அழுதால் பலமிழந்து விடுவான் என நம்ப வைக்கப்படுகிறோம். நானும் இதை உளமார நம்பி வளர்ந்தேன். அத்தகைய நம்பிக்கை தவறென நான் உணர்ந்து கொண்டதாலே உனக்கு இம்மடலை எழுதுகிறேன். என் போராட்டங்கள், வலிகள்தான் நீங்கள் அறிந்த சச்சினை உருவாக்கின. அவையே என்னைச் செதுக்கின.

16/11/2013. நான் ஆடுகளத்தில் நின்ற அந்நாளை இன்னமும் மறக்கவில்லை. அதைக்குறித்து நீண்ட காலமாக யோசித்துக் கொண்டிருந்தேன் என்றாலும் எதுவும் பெவிலியன் நோக்கி கடைசியாக நடைபோடும் அக்கணத்திற்கு என்னை எதுவும் தயார்படுத்தவில்லை. ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும் நான் மூழ்கிக்கொண்டிருந்தேன். தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது . எல்லாம் முடியப்போகிறது எனும் அச்சவுணர்வு சூழ்ந்தது. மண்டையில் என்னென்னவோ ஓடிக்கொண்டிருந்தன. எதையும் உள்ளேயே அடக்கி வைத்துக்கொள்ள இயலவில்லை. நான் அதைத்தடுக்கத் துளியும் போராடவில்லை. உலகத்தின் முன் உடைந்து அழுதேன். ஆச்சரியப்படும்வகையில், ஒரு வகையான அமைதியை உணர்ந்தேன். அப்படி என்னை வெளிக்காட்டியதால் இன்னமும் வலிமை கூடியவனாக, எனக்குக் கிடைத்தவற்றுக்கெல்லாம் நன்றியுடையவனாக உணர்ந்தேன். நான் போதுமான அளவு ஆணாக உணர்ந்தேன்.

கண்ணீர் சிந்தி பிறர் முன் அழுவது அவமானத்துக்குரிய ஒன்றல்ல. உங்களை வலிமைமிக்கவராக மாற்றும் ஒன்றை ஏன் ஒளித்துவைக்க வேண்டும்? ஏன் கசிந்தொழுகும் கண்ணீரை மறைக்க முயல்கிறீர்கள். உங்களின் வலியை, நீங்கள் காயப்பட்டிருப்பதை வெளிக்காட்ட அதீத தைரியம் வேண்டும். அன்றைய காலையைப் போல நீங்களும் தீரமிக்கவராக, மேம்பட்டவராக வெளிப்படுவீர்கள். ஆண்கள் இவற்றைச் செய்யலாம், செய்யக்கூடாது என விதிக்கப்பட்டிருப்பவற்றை, நம்புபவற்றைக் கடந்து வாருங்கள் என உங்களை அழைக்கிறேன். நீங்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் இத்தகைய அச்சமின்மை உங்களுக்கு வாய்க்கட்டும் என வாழ்த்துகிறேன். – சச்சின் டெண்டுல்கர்.

தமிழில்: பூ.கொ.சரவணன்

ஒரு மொழியாக்கம் 10 ஊடகங்களில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. சச்சினிற்கும், ஊடக நண்பர்களுக்கும் நன்றி.

இந்து தமிழ் திசை: https://www.hindutamil.in/news/sports/526440-there-is-no-shame-in-showing-your-tears-so-why-hide-a-part-of-you-that-actually-makes-you-stronger-sachin-tendulkar.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt

புதிய தலைமுறை: http://www.puthiyathalaimurai.com/news/sports/75907-sachin-tendulkar-pens-an-open-letter-to-fellow-men.html

காணொளி: https://youtu.be/plZUUBLo2IQ

Asiaville தமிழ்: https://tamil.asiavillenews.com/article/sachin-tendulkar-writes-open-letter-to-men-of-today-and-tomorrow-21397

News7 தமிழ்: https://twitter.com/news7tamil/status/1197209009280798720?s=20

தினத்தந்தி: https://www.dailythanthi.com/amp/News/TopNews/2019/11/21171219/No-shame-in-showing-tears-its-ok-for-men-to-cry-Sachin.vpf

NDTV தமிழ்: https://www.google.com/amp/s/www.ndtv.com/tamil/i-was-wrong-sachin-tendulkars-note-to-the-men-of-today-and-tomorrow-read-it-2136369%3famp=1&akamai-rum=off

கலைஞர் செய்திகள்:
https://www.kalaignarseithigal.com/viral/2019/11/21/sachin-writes-letter-to-his-fellow-mens-on-international-mens-day

Times தமிழ்: https://www.timestamilnews.com/amp/details/Men-cry-without-worrying-about-others-sachin-tendulkar-revealed-14816

தமிழ் வணக்கம்: https://tamilvanakkam.com/2019/11/21/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88/

நமது டிவி: https://www.namadhutv.com/news/sachin-tendulkar-said-men-s-can-cry-don-t-be-shy/17420

மொழியாக்கம் செய்தவர் பெயரைச் சொல்லாமல் சிலர் பகிர்ந்திருக்கிறார்கள். வேறு யார் பெயரையோ போடவில்லை என்கிற அளவில் மகிழ்ச்சி. 😀 🙂

அம்பேத்கரை அறிதல்


பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியாவின் முதன்மையான அரசியல் அறிfவியல் அறிஞர்களில் ஒருவர். ப்ரின்ஸ்டனில் முனைவர் பட்டம் பெற்ற அவர் ஹார்வர்ட், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். ஆழமான பார்வைகளுக்கும் கூர்மையான கருத்துக்களுக்கும் பெயர் பெற்ற அவரின் ‘Ambedkar-Slayer of All Gods’ கட்டுரையின் முக்கியமான சில பகுதிகள்:

ஏன் அம்பேத்கர் நம்மை குத்திக்கிழிக்கிறார்?:

தலைவர்களின் பிறந்த நாள்கள், வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூறும் நாட்கள் போன்றவை அப்போதைய நிலைமையை உணர்ந்து கொள்ளவும், வெற்றி, தோல்விகளைச் சீர்தூக்கிப் பார்க்கவும் வாய்க்கும் தருணங்களாகவே பெரும்பாலும் திகழ்கின்றன. இப்படிப்பட்ட அளவுகோல்கள், வெற்றி-தோல்விகளுக்குள் அண்ணல் அம்பேத்கரை அடக்க முயல்வது முந்திரிக்கொட்டைத்தனமானதும், முட்டாள்தனமானதும் ஆகும். மகத்தான தலைவர்கள் பலரைப் பொறுத்தவரை, ஒரு பண்பாட்டின் தர அளவுகோல்கள் லட்சியங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப அவர்கள் எந்த அளவுக்கு வாழ்ந்தார்கள் என்றே நாம் அவர்களைச் சீர்தூக்கிப் பார்க்கிறோம். அண்ணல் அம்பேத்கரைப் பொறுத்தவரை இது தலைகீழான ஒன்று. ஒட்டுமொத்த பண்பாடே தன்னை மதிப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டிய அளவுகோல் அவரே. நம்முடைய ஆதர்சங்களால் அவரை எடை போட முடியாது.

அம்பேத்கர் எனும் ஆளுமையின் ஆதர்சங்களால்தான் நம்மை நாமே மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும். அம்பேத்கருடன் உறவாடுவதென்பது அவரை மதிப்பிடுவதென்பதல்ல; நம்மை மதிப்பிட்டுக் கொள்வதும், நாம் ஏன் இன்னமும் அவரின் நீதிக்கான அறைகூவலை, பகுத்தறிவுக்கான வாதத்தை, அமைப்புகள் குறித்த ஆழமான கற்பனைகளைப் பற்றிக்கொள்ளவும், முகத்துக்கு நேராக எதிர்கொள்ளவும் மறுக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதும் ஆகும். அம்பேத்கர், நம்மை நாமே பார்த்துக்கொள்ள அஞ்சுகிற கண்ணாடி. அவரின் இருப்பு நம்முடைய மோசமான மனசாட்சியையும்,மோசமான நம்பிக்கைகளையும் பற்றி நமக்குத் தொடர்ந்து நினைவுறுத்துகிறது.

தலித் அல்லாதோர் தாங்கள் ஏன் அம்பேத்கர் குறித்து எழுத வேண்டும் என்கிற மனதளவிலான விலக்கலை மேற்கொண்டிருக்கிறார்கள். பல்லாண்டுகளாக நமக்கு அசௌகரியமான உணர்வைக் கொடுத்துக் கொண்டிருந்த ஆளுமையாகத் திகழும் அவரைக் கண்டுகொள்ளாமல் தவிர்த்தோம். ஒரு பெருந்தலைவரை ஓரங்கட்ட சமூகம் முயன்றாலும், அவர் அதைத் தாண்டி வெல்வதால் அவரது பரிவாரத்தில் இணைந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். அம்பேத்கரைப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சிகள் அவரை வசப்படுத்தி, கட்டுப்படுத்தும் முயற்சி என்னும் ஐயத்தோடு நோக்கப்படுகிறது. அம்பேத்கரைக் கடவுள்போல ஆக்குவது அவரின் புரட்சிகரமான கருத்துக்களை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பதற்கான எளிமையான, செய்கையே. அம்பேத்கரை பாஜக அபகரித்துக் கொள்வதற்கான முயற்சிகளில் இது வெளிப்படையாகத் தெரிகிறது. காங்கிரஸ் அவரை ஓரங்கட்டியதும், பாஜக அவரை அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வதும் நமக்குப் பலவற்றைச் சொல்லாமல் சொல்கின்றன. குறைந்தபட்சம் இப்பொழுதாவது அவர் குறித்து அதிகம் பேசுகிறார்கள். இப்படிப்பட்ட பெயரளவிலான போற்றுதல்கள் அவை பெரிதளவில் பயன் தராது என்பதை உணர்த்துவதோடு நின்றுவிடவில்லை. அம்பேத்கர் முன் நாம் தலைகுனிந்து வணங்கி நிற்பதன் மூலம் அவர் நம்முடைய ஆன்மாவைக் குத்திக் கிழிப்பதிலிலிருந்து தப்பிக்க எண்ணுகிறோம்.

அம்பேத்கர் தேசவிரோதியா?:

அவர் வாழ்நாள் முழுக்க அநீதியை அம்பலப்படுத்துவதை அயராமல் செய்தார். ஒரு செயல்நோக்கமோ, தேசமோ, அதிகாரமோ, கலாச்சாரமோ, செல்வமோ அநீதியைச் சற்று மூடி மறைக்க முயன்றாலும் அவற்றை ஏற்றுக்கொண்டு, அவற்றுக்கு அர்ப்பணிப்போடு இருக்க முடியவே முடியாது என்பதில் அம்பேத்கர் தெளிவாக இருந்தார். அருண் ஷோரி முதலிய விமர்சகர்கள் அம்பேத்கர் தேசியவாதி இல்லை என்கிறார்கள். ‘நீதியின் அடித்தளத்தின் மீது எழுப்பப்படாத ஒரு தேசம் தேசமே அல்ல’ என்றதில் அம்பேத்கரின் ஆளுமை பிரமிக்க வைக்கிறது. அவர், கிட்டத்தட்ட எல்லாச் சித்தாந்தங்களும் தலித்துகள் ஒடுக்கப்படுவதை மூடி மறைக்கும் சூழ்ச்சிகளாக நிகழ்ந்ததைக் கண்டு கொதித்தார். சித்தாந்தங்களின் நுண்மையான விவாதங்கள் எனும் பனிமூட்டத்தில், தலித் அடக்குமுறை எனும் உள்ளார்ந்த உணர்வு மூடி மறைக்கப்படுகிறது என்பதை அவர் புலப்படுத்தினார். தலித்துகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மூர்க்கமான வன்முறை, தந்திரமான ஒடுக்குமுறை, தினசரி அவமானங்கள் ஆகியவற்றை நாம் கண்கொண்டு பார்ப்பதே இல்லை. தலித்கள் மீதான வன்முறைகளை அப்படி நடப்பதாக முழுமையாக யாரும் ஒப்புக்கொண்டதே இல்லை. அப்படியே ஒப்புக்கொண்டாலும், அந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் முக்கியத்துவத்தைப் பொய் வேடத்தாலும், தற்காப்புத் தொனியின் மூலமும் இருட்டடிப்பு செய்துவிடுவதை அவர் சுட்டிக்காட்டினார். காந்தியை கடுமையாகத் தாக்கிய அம்பேத்கர் அதைவிடக் கூடுதலான கடுமையோடு நேருவை நோக்கி முக்கியமான விமர்சனத்தை இப்படி வைத்தார்:

இந்திய சமூகத்தின் மையமாக உள்ள இந்த வன்முறையின் இருப்பை நேரு ஒப்புக்கொள்ள மறுக்கிறார். ‘நேருவைப் பாருங்கள். அமெரிக்காவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான ஜெபர்சனின் விடுதலை அறிவிப்பில் அவர் உத்வேகம் பெறுவதாகப் பெருமிதம் கொள்கிறார். இந்தியாவில் உள்ள ஆறு கோடி தீண்டப்படாத மக்களின் நிலை குறித்து எப்போதாவது சஞ்சலமோ, அவமானமோ நேரு அடைந்திருக்கிறாரா? அவரின் எழுதுகோலிலிருந்து ஊற்றெடுக்கும் இலக்கிய வெள்ளத்தில் எங்கேனும் அவர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றனவா?’. அம்பேத்கர் தலித் அல்லாத மக்களை நோக்கித் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். ‘தாங்கள் எப்படிப்பட்ட அநீதியை மேற்கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் உணர்வதே இல்லை!’. இன்றுவரை நாமும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.#

#பல்வேறு வகைகளில், காந்தியைவிட இந்தியாவை அதிகமாக அகிம்சையோடு பிணைத்தவர் அண்ணல் அம்பேத்கரே ஆவார். தலித்துகளை அரசமைப்புச் சட்ட முறைகளின்படி இயங்க வேண்டும் என்று ஒப்புவித்ததன் மூலம் அவர் அதை நிகழ்த்தினார். இது தங்களின் கைகளைக் கட்டிப்போட்டிருப்பதாகச் சில தலித் புரட்சியாளர்கள் முணுமுணுக்கிற அளவுக்குத் தாக்கம் செலுத்தியுள்ளது.

பிராமணியம் மீதான பெரும்போர்:

இந்துச் சமூகத்தின் மேற்புறத்தில் மிதக்கும் குப்பைக் கூளமல்ல வன்முறை. அந்தக் குப்பையைச் சுத்தப்படுத்தினால் இந்துச் சமூகத்தின் தெளிவான, சுத்தமான நீர்நிலை தென்படும் என்பது புரட்டு. வன்முறையே இந்துச் சமூகத்தின் அடையாளம், அதன் இயங்குசக்தி. அம்பேத்கரைப் பொறுத்தவரை நீதியை அடைய இந்து மதத்தின் மீது கிட்டத்தட்ட ஒரு போரை அறிவிப்பதே வழி என்று அவர் கருதியதைப் பூசிமெழுக முடியாது. காந்திக்கு எழுதிய பதிலில் அம்பேத்கர் இப்படி எழுதினார்: ‘நான் மகாத்மாவிடம் உறுதியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்துக்கள், இந்து மதம் மீது நான் அருவருப்பு, அவமதிப்பு மிகுந்த உணர்வுகளை வெளிப்படுத்துவது அவர்களின் தோல்வியால் மட்டும் அல்ல. இந்துக்கள், இந்து மதம் மீது நான் அருவருப்புக் கொள்ளக் காரணம் அவர்கள் தவறான லட்சியங்களைக் கொண்டவர்களாக, மோசமான சமூக வாழ்வை மேற்கொள்வதாக உளமார உணர்ந்துகொண்டேன். இந்து மதம், இந்துக்களுடனான எனது பிரச்சினை என்பது அவர்களின் சமூக நடத்தையில் உள்ள குறைபாடுகள் பற்றியதல்ல. அது மேலும் அடிப்படையானது. அது இந்துக்கள், இந்து மதத்தின் ஆதர்சங்களைப் பற்றியது.

அம்பேத்கர் தன்னுடைய விமர்சனத்தில் தாக்க முனைந்தது உலகத்திலேயே மிகவும் ஆச்சரியப்படுத்துவதும், சிறைப்படுத்துவதுமான தத்துவ அமைப்பான பிராமணியமே ஆகும். பிராமணியம் அல்லாத இந்துக் கருத்தியல் முறைகளையும் அது பெரும் தீமையாய்ப் பற்றிக்கொண்டதால் பிராமணியத்தை அக்குவேறு ஆணிவேராகக் கழற்றி எறியாமல் நீதி என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இந்து மதம் இருக்கிறது.

அம்பேத்கரின் பெரும்பாலான படைப்புகளை மீண்டும் வாசிக்கையில் மிக முக்கியமான தேடல் ஒன்று புலப்படுகிறது; அது சாதி என்கிற கொடூரமான ஒடுக்குமுறை அமைப்பை எது உற்பத்தி செய்தது என்பதைப் புரிந்து கொள்ளும் ஓயாத முயற்சி. அம்பேத்கரின் பெரும்பாலான ஆய்வுக்கட்டுரைகள் அவற்றின் சமூகவியல் ஆழம், வரலாற்றுக் கூர்மையால் அசரடிக்கின்றன. ஆரியர் படையெடுப்பால் அடிமைப்படுத்துதல் ஏற்பட்டது எனும் கோட்பாட்டை அவர் நிராகரித்தார். சாதி அமைப்பு குறித்து இனத்தை அடிப்படையாகக் கொண்டு தரப்பட்ட எல்லா வகையான விளக்கங்களையும் அவர் நிராகரித்தார். சாதி என்பது தொழில்கள் சார்ந்து எழுந்தது என்பது போன்ற விளக்கங்களை அவர் கடுமையாகச் சாடினார். சாதி என்பது தொழில்கள் அடிப்படையிலான அமைப்புமுறை அல்ல; அது தொழிலாளர்களை அடுக்குமுறையில் வைத்து அடிமைப்படுத்தும் முறையாக இயங்கியது என்பதே இந்தக் கடுமைக்குக் காரணம். அம்பேத்கர் எனும் வரலாற்றாளர், இந்தியவியல் அறிஞரின் பலங்களுக்குள் போவது இந்தக் கட்டுரையின் இலக்கு அல்ல. அர்விந்த் ஷர்மாவின் ‘BR Ambedkar, on the Aryan invasion and the Emergence of the Caste System in India’ எனும் கட்டுரையின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

சாதியை அழித்தொழித்தல்:

அம்பேத்கரின் ஆய்வுகளின் மூலம் இரு முக்கியமான கூறுகள் தெரிய வருகிறது. சாதி அமைப்பின் வினோதமான தன்மையைப் பொருளியல், தொழில்முறை சார்ந்த விளக்கங்களால் விளக்க முடியாது. சாதியமைப்பின் அடிப்படை பிராமணர்களால் அதிகாரத்தின் செயல்பாடாகத் திணிக்கப்பட்ட கொடூரமான தொடர் பிரதிநிதித்துவப்படுத்தல்களால் ஆனது. தீண்டப்படாத மக்களின் முன்னேற்றத்துக்கான வழிகளான அதிகாரம், பொருளாதார வளம், கல்வி ஆகிய மூன்றும் அவர்களுக்கு மறுக்கப்பட்டதன் மூலம் சாதியமைப்பு தொடர்ந்து உயிர்த்திருக்கிறது. சாதி அடுக்குமுறையிலுள்ள ஒவ்வொரு பிரிவினரும் தனக்குக் கீழுள்ள இன்னொரு பிரிவினரை ஒடுக்குவதன் மூலம் இன்பம் காணும் கொடூரமான அமைப்பு முறையாக அது திகழ்கிறது. சாதியமைப்பு நிரந்தரமான பாகுபாட்டில் களிப்புக் கொள்கிறது. இதனால்தான் பிராமணியம் மீதான அறச்சீற்றம் அம்பேத்கரிடமிருந்து வெளிப்படுகிறது. எந்த வகையிலும் பிராமணியம் உருவாக்கிய அடுக்குமுறைக்கு நியாயம் கற்பிக்க முடியாது. அதிகாரத்தைத் தெளிவாக, எளிமையாகத் திணிக்கும் முறை அது. இந்த அதிகாரம் ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது; இந்த ஒட்டுமொத்த கருத்தாக்கத்தை அடித்து நொறுக்கினால் மட்டுமே விடுதலை சாத்தியம்.

அம்பேத்கர் நம்மை மேலும் மேலும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் இந்து அடையாளத்தின் அற, உளவியல் கூறுகளைத் தன்னுடைய விமர்சனங்களால் தோண்டி எடுக்கிறார். இந்து அடையாளத்தைக் கட்டமைப்பதில் பங்கு வகிக்கும் பல்வேறு அடுக்கு வன்முறை, எதிர்ப்பு ஆகியவற்றைத் தோலுரித்துக் காட்டுகிறார். அவரே சாதி அமைப்போடு தொடர்புடைய பாலின வன்முறை, மதவாதம் ஆகியவற்றைக் கேள்வி கேட்ட முதன்மையான சிந்தனையாளர். அவரின் ஆரம்பக் காலக் கட்டுரைகளில் அக மண முறையானது சாதியமைப்புக்கு மையம் மட்டுமல்ல. அதுவே பெண்களை, கைம்பெண்களை, மணமாகாத பெண் குழந்தைகளைக் கட்டுப்படுத்தி அதன்மூலம் சாதி அடையாளத்தைக் காக்க முயல்கிறது என அம்பேத்கர் வெளிப்படுத்தினார். அவர் எழுதுவதைப்போல, சாதியின் பிரச்சனை, ‘கூடுதலான ஆண்கள் கூட்டல் கூடுதலான பெண்கள்’ ஆகும். இந்த வகையில் பெண்களைக் கட்டுப்படுத்துவது சாதியின் மையமானது. அவரின் கருணையற்ற வாள் வீச்சாக மதவாதம் என்பது இந்து அடையாளத்தை உருவாக்குவதற்கான ஒரு வழிமுறையாகும் என்கிற வாதம் அமைந்தது. அவர் அதிர்ச்சி தரும் ஒரு உண்மையைப் புலப்படுத்துகிறார். ஒரு சாதியினர் மற்றொரு சாதியினரோடு இணைத்துத் தன்னை உணர்வதில்லை. ஒரு இந்து-முஸ்லிம் கலவரம் வரும் பொழுதுதான் அவர்கள் ஒன்றாக உணர்கிறார்கள். தங்களுடைய உள்ளார்ந்த பாகுபாட்டைத் தாண்டி தங்களுடைய அடையாளத்தை நிலைப்படுத்த இந்துக்களுக்கு ஒரு எதிரி தேவைப்படுகிறார்.

அம்பேத்கரின் மதம் எது? :

இந்திய மரபின் மையமாக அகிம்சையை நிறுத்துவது நம்முடைய வன்முறையற்ற வரலாற்றின் விவரிப்பு அல்ல. அதற்கு மாறாக, வன்முறையே வரலாற்றின் மையமாக இருந்துள்ளது என்பதற்கான சாட்சி அது. சமூகவியல் அறிஞர் ஆர்லாண்டோ பாட்டர்சன் பண்டைய கிரேக்கத்தில் விடுதலை சார்ந்த முறையான உரையாடல் ஏற்படக் காரணம் அந்தச் சமூகம் அடிமை முறையால் கட்டமைக்கப்பட்டு இருந்ததுதான் என்கிறார். விடுதலை போற்றப்பட்டதன் காரணம் சமூகத்தில் நிலவிய அடிமைத்தனத்தை மறுதலிக்கும் முயற்சியே ஆகும். சமூகத்தில் வன்முறை உள்ளார்ந்து நிறைந்திருந்ததன் அடையாளமே அகிம்சை சார்ந்த உரையாடல். பிராமணியம் புத்த மதத்தின் வன்முறை சார்ந்த விமர்சனத்தை உள்வாங்கியது என்றாலும் அதற்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டது. அம்பேத்கர் தீண்டாமையை மாட்டுக்கறியோடு தொடர்புபடுத்தினார். ஆதிக்க ஜாதியினர் தீண்டப்படாதோரிடம் வெளிப்படுத்தும் வினோதமான அருவருப்பை அவர்கள் மாட்டு இறைச்சி உண்பதன் மூலமே விளக்க முடியும். தீண்டப்படாதோர் மீது அவர்களுக்கிருந்த ஆழ்ந்த வெறுப்பை விளக்க அம்பேத்கர் முயன்றார். அது வெறுமனே சமத்துவமின்மை, அடக்குமுறையோடு உள்ள உறவு அல்ல. அது தூய்மைவாதத்தைக் கைப்பற்றும் பணிக்கு உதவியது. இந்த வரலாறு தெரியாதவர்கள்தான் கல்விக்கூடங்களில் மாட்டு இறைச்சி சார்ந்து நிகழும் போராட்டங்களைப் புரிந்துகொள்ளத் தவறுவர்.#

#மனிதத்தை உண்மைக்கான தேடலின் மையமாக, அளவுகோலாக மாற்றும் அவரின் தேடல் தீவிரமாகத் தொடர்ந்துகொண்டே இருந்தது. கடவுளை அழித்து ஒழிப்பதோடு மட்டுமல்லாமல், கண்ணுக்குப் புலப்படாதவற்றைத் தேடிச்செல்லும் எல்லா வகையான தேடலையும் மாய்த்துவிட முயலும் அளவுக்கு அந்தத் தேடல் தீவிரமானதாக இருந்தது. அம்பேத்கரின் பல்வேறு தேவைகளுக்குப் புத்த மதம் பயன்பட்டது. எந்த அறரீதியான, வரலாற்றுரீதியான மோதலைச் சுற்றி இந்திய வரலாறு கட்டமைக்கப்பட்டது அதன் மைய அச்சாகப் புத்த மதம் இருந்தது. புத்தம் பிராமணியத்தின் கயமைகளைத் தோலுரித்துக் காண்பித்த மாற்று மரபாக இருந்தது. அது பிராமணியத்தால் அடக்கப்பட்டது. சமூக எதிர்ப்பின் ஒரு நடைமுறை செயல்பாடாகப் புத்த மதத்துக்கு மாறுவது அமைந்தது. புத்த மதத்தில் விடுதலை,சமத்துவம், சமூக இணக்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு புரட்சிகரமான சமூக அறமாக அதை மறு உருவாக்கம் செய்ய முனைந்தார். புத்த சங்கத்தில் இணக்கமாகக் கூட்டுறவோடு பல்வேறு மக்கள் ஒன்றிணைந்து இயங்கினார்கள். அதனால் புத்த மதத்தின் சங்கம் ஜனநாயக அமைப்புக்கான மாதிரியாகத் தோன்றியது. அறிஞர்கள் அம்பேத்கர் புத்த மதத்தைக் காரணக் காரியங்கள், கர்மா, சுயம் ஆகிய மெய்யியல் சார்ந்த கேள்விகளற்றதாகக் கட்டமைக்க முயன்றார் என்கிறார்கள்.

முனைவர் ஐஸ்வரி குமார் தனது மிக முக்கியமான புத்தகமான Radical Equality: Ambedkar, Gandhi and the Risk of Democracy (Stanford University Press)-இல் புலப்படுத்துவதைப்போல அம்பேத்கர் பல வகைகளில் புரட்சிகரமானவர். அவர் ஏன் புரட்சிகரமானவர்? ஜனநாயகம் குறித்து உணர்ச்சிவசப்படாத, தயவு தாட்சண்யமில்லாத பார்வையை அவர் கொண்டிருந்தார். சிந்தனையாளர் க்ராட்வேயின் ‘அரசமைப்பு அறநெறி’ என்கிற கோட்பாட்டைத் தனதாக்கிக் கொண்ட ஒரே இந்திய சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கர் மட்டுமே. அந்தக் கோட்பாட்டின்படி அரசாங்கம் என்பது அறத்தின் அடிப்படையிலான சுயக்கட்டுப்பாடு, வெவ்வேறு கருத்துகளுக்கு மரியாதை தருவது, கட்டற்ற உரையாடல் ஆகியவற்றைக் தன்னுடைய கூறுகளாகக் கொண்டது. எனினும், அரசமைப்பு அறமானது ஜனநாயகப் பண்புகளற்ற ஆழமான நிலத்தின் மேற்பகுதி மண் மட்டும் செழிப்பாக இருப்பதைப் போன்றதே ஆகும் என்று அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிட்டார்.

இந்து மதத்தை அம்பலப்படுத்தல்:

அம்பேத்கர் நம்மை மேலும் மேலும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் இந்து அடையாளத்தின் அற, உளவியல் கூறுகளைத் தன்னுடைய விமர்சனங்களால் தோண்டி எடுக்கிறார். இந்து அடையாளத்தைக் கட்டமைப்பதில் பங்கு வகிக்கும் பல்வேறு அடுக்கு வன்முறை, எதிர்ப்பு ஆகியவற்றைத் தோலுரித்துக் காட்டுகிறார். அவரே சாதி அமைப்போடு தொடர்புடைய பாலின வன்முறை, மதவாதம் ஆகியவற்றைக் கேள்வி கேட்ட முதன்மையான சிந்தனையாளர். அவரின் ஆரம்பக் காலக் கட்டுரைகளில் அக மண முறையானது சாதியமைப்புக்கு மையம் மட்டுமல்ல. அதுவே பெண்களை, கைம்பெண்களை, மணமாகாத பெண் குழந்தைகளைக் கட்டுப்படுத்தி அதன்மூலம் சாதி அடையாளத்தைக் காக்க முயல்கிறது என அம்பேத்கர் வெளிப்படுத்தினார். அவர் எழுதுவதைப்போல, சாதியின் பிரச்சனை, ‘கூடுதலான ஆண்கள் கூட்டல் கூடுதலான பெண்கள்’ ஆகும். இந்த வகையில் பெண்களைக் கட்டுப்படுத்துவது சாதியின் மையமானது. அவரின் கருணையற்ற வாள் வீச்சாக மதவாதம் என்பது இந்து அடையாளத்தை உருவாக்குவதற்கான ஒரு வழிமுறையாகும் என்கிற வாதம் அமைந்தது. அவர் அதிர்ச்சி தரும் ஒரு உண்மையைப் புலப்படுத்துகிறார். ஒரு சாதியினர் மற்றொரு சாதியினரோடு இணைத்துத் தன்னை உணர்வதில்லை. ஒரு இந்து-முஸ்லிம் கலவரம் வரும் பொழுதுதான் அவர்கள் ஒன்றாக உணர்கிறார்கள். தங்களுடைய உள்ளார்ந்த பாகுபாட்டைத் தாண்டி தங்களுடைய அடையாளத்தை நிலைப்படுத்த இந்துக்களுக்கு ஒரு எதிரி தேவைப்படுகிறார்.

இந்திய மரபின் மையமாக அகிம்சையை நிறுத்துவது நம்முடைய வன்முறையற்ற வரலாற்றின் விவரிப்பு அல்ல. அதற்கு மாறாக, வன்முறையே வரலாற்றின் மையமாக இருந்துள்ளது என்பதற்கான சாட்சி அது. சமூகவியல் அறிஞர் ஆர்லாண்டோ பாட்டர்சன் பண்டைய கிரேக்கத்தில் விடுதலை சார்ந்த முறையான உரையாடல் ஏற்படக் காரணம் அந்தச் சமூகம் அடிமை முறையால் கட்டமைக்கப்பட்டு இருந்ததுதான் என்கிறார். விடுதலை போற்றப்பட்டதன் காரணம் சமூகத்தில் நிலவிய அடிமைத்தனத்தை மறுதலிக்கும் முயற்சியே ஆகும். சமூகத்தில் வன்முறை உள்ளார்ந்து நிறைந்திருந்ததன் அடையாளமே அகிம்சை சார்ந்த உரையாடல். பிராமணியம் புத்த மதத்தின் வன்முறை சார்ந்த விமர்சனத்தை உள்வாங்கியது என்றாலும் அதற்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டது. அம்பேத்கர் தீண்டாமையை மாட்டுக்கறியோடு தொடர்புபடுத்தினார். ஆதிக்க ஜாதியினர் தீண்டப்படாதோரிடம் வெளிப்படுத்தும் வினோதமான அருவருப்பை அவர்கள் மாட்டு இறைச்சி உண்பதன் மூலமே விளக்க முடியும். தீண்டப்படாதோர் மீது அவர்களுக்கிருந்த ஆழ்ந்த வெறுப்பை விளக்க அம்பேத்கர் முயன்றார். அது வெறுமனே சமத்துவமின்மை, அடக்குமுறையோடு உள்ள உறவு அல்ல. அது தூய்மைவாதத்தைக் கைப்பற்றும் பணிக்கு உதவியது. இந்த வரலாறு தெரியாதவர்கள்தான் கல்விக்கூடங்களில் மாட்டு இறைச்சி சார்ந்து நிகழும் போராட்டங்களைப் புரிந்துகொள்ளத் தவறுவர்.

நவீன உலகுக்கும், பழங்காலத்து உலகுக்குமிடையே உள்ளே பெரும் வேறுபாடாக மனிதனை மையப்படுத்தல் இருக்கிறது. நம்மை அப்படியே உறையவைக்கும் வாக்கியமாக, ‘என் சமூகம் இன்னமும் பழங்காலச் சமூகமாகவே உள்ளது, இதில் மனிதர்களைப் பற்றிய அக்கறையை விடக் கடவுள்கள் பற்றிய கவலையே முக்கியமாக உள்ளது.’ என்கிற அம்பேத்கரின் வரி உள்ளது. அது ஆறாத துன்பத்தோடு அவரின் நிலையை வெளிப்படுத்துகிறது. மனிதனைவிட வேறொன்று மேலானது என்பது மனிதத்துக்கான சாவுமணி. இந்த அவலமான நிலையை நாம் வென்றெடுக்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர் எல்லாக் கடவுள்களையும் அழித்து ஒழிக்கக் களம் கண்டார்.

அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியதை இந்தப் பின்னணியிலேயே காண வேண்டும். மனிதத்தை உண்மைக்கான தேடலின் மையமாக, அளவுகோலாக மாற்றும் அவரின் தேடல் தீவிரமாகத் தொடர்ந்துகொண்டே இருந்தது. கடவுளை அழித்து ஒழிப்பதோடு மட்டுமல்லாமல், கண்ணுக்குப் புலப்படாதவற்றைத் தேடிச்செல்லும் எல்லா வகையான தேடலையும் மாய்த்துவிட முயலும் அளவுக்கு அந்தத் தேடல் தீவிரமானதாக இருந்தது. அம்பேத்கரின் பல்வேறு தேவைகளுக்குப் புத்த மதம் பயன்பட்டது. எந்த அறரீதியான, வரலாற்றுரீதியான மோதலைச் சுற்றி இந்திய வரலாறு கட்டமைக்கப்பட்டது அதன் மைய அச்சாகப் புத்த மதம் இருந்தது. புத்தம் பிராமணியத்தின் கயமைகளைத் தோலுரித்துக் காண்பித்த மாற்று மரபாக இருந்தது. அது பிராமணியத்தால் அடக்கப்பட்டது. சமூக எதிர்ப்பின் ஒரு நடைமுறை செயல்பாடாகப் புத்த மதத்துக்கு மாறுவது அமைந்தது. புத்த மதத்தில் விடுதலை,சமத்துவம், சமூக இணக்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு புரட்சிகரமான சமூக அறமாக அதை மறு உருவாக்கம் செய்ய முனைந்தார். புத்த சங்கத்தில் இணக்கமாகக் கூட்டுறவோடு பல்வேறு மக்கள் ஒன்றிணைந்து இயங்கினார்கள். அதனால் புத்த மதத்தின் சங்கம் ஜனநாயக அமைப்புக்கான மாதிரியாகத் தோன்றியது. அறிஞர்கள் அம்பேத்கர் புத்த மதத்தைக் காரணக் காரியங்கள், கர்மா, சுயம் ஆகிய மெய்யியல் சார்ந்த கேள்விகளற்றதாகக் கட்டமைக்க முயன்றார் என்கிறார்கள். ஒருவர் சமூக அறத்தை கைக்கொள்ளவோ, அல்லது போலியான மெய்யியலுக்கு அடிமைப்பட்டோ இருக்க முடியும். இரண்டையும் ஒருங்கே உடையவராக இருக்க முடியாது என்று புத்த மதத்துக்கு மாறியதன் மூலம் அம்பேத்கர் அறிவித்தார். மதமாற்றம் மனிதத்தை மீட்கும் பெருஞ்செயலாகும்.

அம்பேத்கர் பெரும்பாலும் புத்த மதத்தைச் சமூக அறமாகவே கண்டார். புத்த சங்கங்களின் அமைப்பு முறையோடு அவர் தன்னுடைய கொள்கையான சகோதரத்துவதைக் கொண்டு போய் இணைத்தார். இது வெறும் விபத்தில்லை. புத்தர் பிராமணியத்தின் சடங்குகளை நிர்மூலம் ஆக்கினார், அம்பேத்கர் புத்த மதத்தை மெய்யியலின் எந்தத் தடயமும் இல்லாத ஒன்றாக மாற்ற முயன்றார். மெய்யியல் சார்ந்த தேடல்களில் மனிதன் எதோ ஒரு பெரிய ஆற்றலின் விளைவாக, நுண்பொருளை தேடுபவனாக மாறிவிடுவதைத் தவிர்க்க அம்பேத்கர் முனைந்தார். அவர் மீண்டும், மீண்டும் மந்திர தாயத்தைப் போலத் தன்னுடைய வழிகாட்டும் ஒளிவிளக்காகச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்துவது ஆச்சரியமில்லை. அவர் இன்னமும் குறிப்பாகச் சகோதரத்துவதை உண்மையோடு ஒப்பிட்டார். ‘உண்மையும் சகோதரத்துவமும் ஒன்றே’ என்றார். எல்லாவகையான தேடல்களுக்கும் ஒரு மையப்புள்ளி உண்டு அது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். இந்த மதத்தை மட்டுமே அம்பேத்கர் ஏற்றுக்கொள்வார்.

உண்மையான ஜனநாயகம் எது:

விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றையும் புரட்சிகரமாக அம்பேத்கர் பற்றிக்கொள்கிறார். அதனாலேயே, அம்பேத்கர் நம் காலத்தின் பெரும் போராட்டங்களில் ஒன்றான ‘ஜனநாயகத்தின் பண்பு என்ன?’ என்பதன் மைய ஆளுமையாகத் திகழ்கிறார். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அம்பேத்கர் அறிவார்ந்த பங்களிப்பை வழங்கினார். அதுவே அரசமைப்பு சட்டத்தின் போதாமைகள் குறித்து அம்பேத்கர் கொண்டிருந்த தெளிவான பார்வையை நாம் கண்டுகொள்ளாமல் போகக் காரணமாக இருக்கக் கூடாது. முனைவர் ஐஸ்வரி குமார் தனது மிக முக்கியமான புத்தகமான Radical Equality: Ambedkar, Gandhi and the Risk of Democracy (Stanford University Press)-இல் புலப்படுத்துவதைப்போல அம்பேத்கர் பல வகைகளில் புரட்சிகரமானவர். அவர் ஏன் புரட்சிகரமானவர்? ஜனநாயகம் குறித்து உணர்ச்சிவசப்படாத, தயவு தாட்சண்யமில்லாத பார்வையை அவர் கொண்டிருந்தார். சிந்தனையாளர் க்ராட்வேயின் ‘அரசமைப்பு அறநெறி’ என்கிற கோட்பாட்டைத் தனதாக்கிக் கொண்ட ஒரே இந்திய சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கர் மட்டுமே. அந்தக் கோட்பாட்டின்படி அரசாங்கம் என்பது அறத்தின் அடிப்படையிலான சுயக்கட்டுப்பாடு, வெவ்வேறு கருத்துகளுக்கு மரியாதை தருவது, கட்டற்ற உரையாடல் ஆகியவற்றைக் தன்னுடைய கூறுகளாகக் கொண்டது. எனினும், அரசமைப்பு அறமானது ஜனநாயகப் பண்புகளற்ற ஆழமான நிலத்தின் மேற்பகுதி மண் மட்டும் செழிப்பாக இருப்பதைப் போன்றதே ஆகும் என்று அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிட்டார்.

அம்பேத்கரின் இந்த வாசகங்கள் எழுபது வருடங்கள் கடந்த பின்னர், இப்பொழுது நம் முன் நின்று கொண்டு நம்மைக் கடுமையாகச் சாடுவதைப்போல இருக்கிறது : ‘அரசமைப்புச் சட்டத்தின் வடிவத்தைத் துளிகூட மாற்றாமல், ஆட்சிமுறையின் வடிவத்தை மட்டும் மாற்றுவதன் மூலம் அரசமைப்பு சட்டத்தின் ஆன்மாவில் இருந்து முற்றிலும் வேறுபட்ட, ஒவ்வாத ஆட்சிமுறையைத் தர முடியும். அதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவைச் சீர்குலைக்க முடியும்.’

அதேபோல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கான பொறுப்புமிகுந்த அரசாக இருக்க வேண்டியதில்லை. அவர், ‘காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்தது என்ன?’ நூலில் எழுதுவதைப் போல, ‘வயது வந்த அனைவருக்குமான வாக்குரிமை மட்டுமே மக்களுக்கான, மக்களாலான அரசை கொண்டு வந்துவிட முடியாது.’ எல்லாவற்றுக்கும் மேலாக, ஜனநாயகத்தின் மிக முக்கியமான முரண்பாட்டை அவர் உணர்ந்திருந்தார்: ஆழமான சமூக, பொருளாதாரச் சமத்துவமின்மைகளுக்கு இடையே ஜனநாயக சமத்துவத்தை ஏற்படுத்த முயல்வது. இப்படிப்பட்ட முரண்பாடுகளின் போரை வெகுகாலத்துக்கு எந்த ஜனநாயகமும் தாங்க முடியாது.

சமூகநீதி என்பது தலித்துகளை அதிகாரப்படுத்தலில் இருக்கிறது என்பதையும், அப்படிப்பட்ட அதிகாரப்படுத்தலுக்கு எல்லா வகையான அதிகாரங்களிலும் தலித்துகளுக்குப் பங்கு வேண்டும் என்பதிலும் அம்பேத்கர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாக இருந்தார். மற்ற அமைப்பு முறைகள் பொருளாதார வளம், ஆயுதம், கல்வி ஆகிய பரிமாணங்களில் ஒன்று, இரண்டு பரிமாணங்களில்தான் விலக்குதலை மேற்கொண்டன. ஆனால், ஜாதி அமைப்பில் மட்டும்தான் தலித்துகளைப் பொருளாதாரப் பலம், ராணுவம், கல்வி ஆகிய அனைத்து தளங்களிலும் ஒதுக்கி வைப்பது ஒரே சமயத்தில் நடைபெற்றது. அதனால் அது மிகக்கொடுமையான அடக்குமுறையாக இருந்தது.

அம்பேத்கர் கல்வியை மட்டுமே அதிகாரத்துக்கான திறப்பாகக் காணவில்லை. மஹர் ராணுவப்பிரிவை உருவாக்கி, விரிவுபடுத்தினார். பொருளாதார வளத்திலும் தலித்துகளுக்குப் பங்கு கிடைப்பதற்கான வெளிகளை அவர் கட்டமைக்க முயன்றார். இவையெல்லாம் வெறும் விபத்துக்கள் அல்ல. இவை அனைத்துக்கும் மேலாக, இவற்றை அடைய அரசு அதிகாரத்தில் பங்கு வேண்டும். தலித்துகளுக்குச் சட்டமியற்றும் சபைகளில் நியாயமான இடத்தைப் பெறுவதற்கான அவரின் வாழ்நாள் போராட்டத்தின் பின்னால் இந்தப் புரிதல் இருந்தது. திறமையானவர்கள், தகுதியானவர்கள் என்கிற கருத்தாக்கம் உண்மையில் பரம்பரை, பரம்பரையாகப் பெறப்பட்ட வாய்ப்புகளின் மீது எழுப்பப்பட்ட ஒன்று என்று முதன்முதலில் அப்பட்டமாக அம்பலப்படுத்தியவர்களில் அம்பேத்கரும் ஒருவர். திறமை என்பது தானே வருவதில்லை, அதற்குப் பின்னால் பல்வேறு காரணிகள், வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை இத்தனை காலம் கழித்தும் அழுத்திச் சொல்ல வேண்டிய நிலைமை இருப்பது அவரின் கொள்கைகளிலிருந்து நாம் எவ்வளவு தூரம் தள்ளியிருக்கிறோம் என்பதற்குச் சாட்சியாகும்.

அம்பேத்கர் தொடர்ந்து நம்மை அசைத்துப் பார்ப்பவராக இருக்கிறார். அவர் எல்லா வகையான அரசியல்கள், அவற்றோடு தொடர்புடைய பிரமைகளைக் கேள்விக்குட்படுத்துகிறார். அம்பேத்கர் பாரம்பரியம், அதிகாரம், இந்து மதம், ஜனநாயகம். எல்லாவற்றுக்கும் மேலாக மெய்யியியல் என்கிற பெயரில் நிகழ்த்தப்படும் நேர்மையற்ற, அபத்தமான சொற்பொழிவுகள் ஆகியவை குறித்த நம்முடைய பிரமைகளைக் கடுமையாகக் கேள்விக்கு உட்படுத்துகிறார். இப்பொழுது இருக்கும் சூழலில், தேசபக்தியை நீதியைவிட முக்கியத்துவப்படுத்துவது குறித்த அவரின் அவநம்பிக்கை மிகுந்த குரலுக்குச் செவிமடுத்து அவசியமாகிறது. ‘தேசியம் என்பது ஒன்றும் புனிதமானது அல்ல. அது கேள்விகளுக்கு அப்பாற்பட்ட கொள்கையும் அல்ல. ஆகவே, மற்ற எதைவிடவும் அதிமுக்கியமான ஒன்றாக தேசியத்தை மட்டும் தேர்ந்தெடுத்து கட்டாயப்படுத்தி ஏற்க வைப்பது ஏற்புடைய ஒன்று அல்ல.’

அவரின் சிந்தனைகளின் மையத்தில் பெரும் சோகத்தை ஊற்றெடுக்க வைக்கும் ஒரு கேள்வி எழுகிறது: மற்ற எவரைவிடவும் மனிதர்களின் கயமைகளை, அடக்குமுறைகளை அனுபவித்த ஒருவர் எப்படி நம்பிக்கையைக் கைவிடாதவராக இருந்தார்? எந்தப் புற ஊன்றுகோல்களையும் அவர் நம்பவில்லை, வரலாற்றின் இயங்கியலிலோ, மெய்யியலின் நிம்மதியிலோ, மதத்தின் ஆறுதல்களிலோ, போலி அறிவியலின் நிச்சயத் தன்மைகளிலோ அவர் பல நூறு ஆண்டுகாலத் துயரங்களிலிருந்து தப்பிக்கும் நம்பிக்கை இருப்பதாக நம்பாதது அவரின் அழியா தீரத்துக்குச் சான்றாகும். ஒரு பண்பில் அவர் காந்தியைப் போலவே தோன்றுகிறார்: நம்முடைய மனசாட்சியின் அறிவார்ந்த குரலைவிடச் சமூகச் செயல்பாட்டிற்குச் சிறந்த அடித்தளம் எதுவும் இல்லை.

முழுமையாகப் படிக்க: https://www.facebook.com/100000632559754/posts/2359118834119179/?app=fbl

தமிழில்: பூ.கொ.சரவணன்.

அண்ணல் அம்பேத்கர் தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்


அண்ணல் அம்பேத்கர் தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்:

ரமா, நீ எப்படியிருக்கிறாய் ரமா.

இன்று முழுக்க உன்னையும், யஷ்வந்தையும் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். உன்னைப்பற்றி எண்ணுகையில் உருக்குலைந்து போகிறேன். சமீப காலங்களில் என்னுடைய உரைகள் பெரும் விவாதங்களை எழுப்பியிருக்கின்றன. வட்ட மேசை மாநாட்டில் நான் நிகழ்த்திய உரைகள் நன்றாகவும், ஊக்கமூட்டுவதாகவும் இருந்ததாகச் செய்தித்தாள்கள் குறிப்பிட்டுள்ளன. அதற்கு முன்னால், இந்த மாநாட்டில் என்னுடைய பங்கு என்ன எனப் பிரதிபலித்துக் கொண்டிருந்தேன். நம் நாட்டின் ஒடுக்கப்பட்ட குடிமக்களின் முகங்கள் கண்முன் நின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இவர்கள் வலியிலும், துயரத்திலும் உழன்று அல்லல்படுகிறார்கள். தங்களுடைய துயரங்களுக்கு முடிவோ, விடிவோ இல்லையென்று நம்புகிறார்கள். நான் அதிர்ந்து போனேன் என்றாலும், இந்தத் தீமைக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருக்கிறேன். பெரும் அறிவுறுதியை பெற்றவனாக உணர்கிறேன். என்னுடைய மனதில் பல சிந்தனைகள் நிழலாடுகின்றன. இதயம் பல வகையான உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது.

நான் நம் வீட்டையும், உங்கள் எல்லாரையும் காணத்துடிக்கிறேன். உன்னை எண்ணி பிரிவுழல்கிறேன். யஷ்வந்தின் நினைவு வாட்டியெடுக்கிறது. என்னை வழியனுப்ப கப்பல் வரை வந்தாய். உன்னை வரவேண்டாம் என நான் சொல்லியும், எனக்குப் பிரியாவிடை கொடுக்க ஓடோடி வந்தாய். சுற்றியிருந்த மக்கள் என்னை ஆரவாரத்தோடு வழியனுப்பி வைப்பதை கண்கூடாகப் பார்த்தாய். நீ நன்றியுணர்வால் நிறைக்கப்பட்டவளாக, உணர்ச்சிவயப்பட்டவளாகக் காட்சியளித்தாய். உன்னுடைய உணர்வுகளைச் சொற்களைக்கொண்டு வெளிப்படுத்த இயலாமல் நின்றாய். நீ பேச நினைத்ததை எல்லாம் உன் விழிகள் தெரியப்படுத்திவிட்டன. நீ உதிர்க்கும் சொற்களைவிட உன்னுடைய மௌனம் பலவற்றைப் பேசியது. உன் நாவினில் சொற்கள் பூத்தன,எனினும், உன் விழித்துளிகளே அச்சொற்களின் முழுப்பொருளாகும். அந்தக் கண்ணீர்த்துளிகள் வாய்மொழி வெளிப்படுத்த இயலாதவற்றையெல்லாம் பேசின.

லண்டனின் காலை வேளையில் இந்த எண்ணங்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது, அழுதுத்தீர்த்து விட வேண்டும் என்றிருக்கிறது. நான் கிடந்து தவிக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய் ரமா? நம் யஷ்வந்த் நலமா? அவன் அப்பா எங்கே என்று கேட்கிறானா? அவனுடைய மூட்டுவலி மட்டுப்பட்டிருக்கிறதா? நம்முடைய நான்கு குழந்தைகளை இழந்து நிற்கிறோம். யஷ்வந்த் மட்டுமே நமக்காக உயிர்த்திருக்கிறான். அவனே உன் தாய்மையின் முகம். அவனை நாம் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவன் மீது எப்போதும் ஒரு கண் வைத்துக்கொள் ரமா. யஷ்வந்திற்கு நிறையக் கற்பி. இரவு அவனை எழுப்பிப் படிக்க வை. என் தந்தை என்னை இரவில் எழுப்பிப் படிக்க வைப்பார். என்னைத் தவறாமல் எழுப்ப வேண்டுமென்பதற்காக அவர் தூக்கந்தொலைந்து விழித்திருப்பார். அவர்தான் எனக்கு இந்த ஒழுக்கத்தைப் பயிற்றுவித்தார். நான் படிக்க எழுந்ததும் அவர் உறங்கப்போய் விடுவார். இரவு போயும் போயும் எழ வேண்டுமா என எனக்கு ஆரம்பத்தில் சோம்பேறித்தனமாக இருக்கும். படிப்பதைவிடத் தூங்குவதே சுகமானது இல்லையா. ஆனால், இப்போது திரும்பிப்பார்க்கையில், உறக்கத்தை விடவும் கல்வியே வாழ்க்கைக்கு முக்கியமானதாக மாறியிருக்கிறது. இதற்கான பெரும்பாலான பாராட்டுகள் என் தந்தையைச் சேர வேண்டும். நான் படிப்பில் ஆர்வமிக்கவனாக இருக்க வேண்டும் என்பதற்காக என் தந்தை எண்ணற்ற தியாகங்கள் புரிந்தார். என் வாழ்வில் விடியல் மலர்வதற்காக அவர் அல்லும், பகலும் ஓயாமல் உழைத்தார். அவரின் உழைப்பின் கனிகள் தற்போது காய்த்துக்குலுங்குவதைக் காண்கிறேன். இன்று அதைக்குறித்து நான் பேருவகைக் கொள்கிறேன் ரமா.

ரமா, அதற்கு இணையாக யஷ்வந்தும் கல்வியில் கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும். அவன் உள்ளம் புத்தகங்கள் மீது தீராத் தாகத்தைக் கொண்டிருக்குமாறு தூண்டிவிட வேண்டும். ரமா, பணம், ஆடம்பரம் ஆகியவற்றால் பயனொன்றுமில்லை. உன்னைச்சுற்றி அவற்றைக் கட்டாயம் கண்ணுற்றுக் கொண்டே இருப்பாய். இத்தகைய சுகங்களை நாடி மக்கள் ஓயாமல் அலைகிறார்கள். இந்த ஒற்றை இலக்கில் மட்டுமே இம்மக்களின் வாழ்க்கை தேங்கி விடுகிறது. அவர்கள் வேறு எந்த முன்னேற்றம், வளர்ச்சியையும் நாடுவதில்லை. இத்தகைய வாழ்க்கையில் நாம் திருப்தியடைந்து விடக்கூடாது ரமா. நம்மைச்சுற்றி வேதனையைத் தவிர வேறொன்றுமில்லை. வறுமை மட்டுமே நம்முடைய துணைவனாக இருக்கிறது. பிரச்சினைகள் நம்மைவிட்டு விலகுவதேயில்லை. அவமானம், வஞ்சிப்பு, ஏளனம் நம் நிழலைப்போலப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நம்மை இருட்டும், துயரக்கடலும் மட்டுமே சூழ்ந்திருக்கின்றன.

நாமே நம்முடைய மீட்பர்களாக இருக்க வேண்டும். நாமே நமக்கு வழிகாட்டியாக மாற வேண்டும். நாம் தேர்ந்தெடுத்த பாதையில் தீபங்களை ஏற்ற வேண்டும். இந்த வெற்றி நோக்கிய பாதையில் நாமே நடை போடுவோம். சமூகத்தில் நமக்கென்று இடம் எதுவுமில்லை. நமக்கான இடத்தை நாம் தான் உருவாக்க வேண்டும். நம் நிலைமை இப்படியிருப்பதால், யஷ்வந்த்துக்கு உயர்ந்த கல்வியை நீ வழங்க வேண்டுமென விரும்புகிறேன். அவன் முறையாக ஆடையணிவதை உறுதிசெய்வதோடு, சமூகத்தில் பண்புநலன்களோடு பழகவும் பயிற்றுவிக்கவும். நீ அவன் மூளையில் லட்சியத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

உன்னைப்பற்றியே ஓயாமல் நினைத்துக்கொண்டிருக்கிறேன். யஷ்வந்த் குறித்தும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். உன்னை நான் புரிந்து கொள்ளவில்லை என எண்ணிவிடாதே ரமா. உன் வேதனையை நான் உணர்கிறேன். உதிரும் இலைகளைப் போல உன் உடல்நலம் தேய்வதையும், உன் உயிர் மரம் காய்ந்து சருகாவதையும் அறிவேன். ஆனால்,நான் என்ன செய்ய இயலும் ரமா? எப்போதும் விலக மறுக்கும் வறுமை ஒருபுறம் இழுக்கிறது, மற்றொருபுறம் என்னுடைய பிடிவாதமும், உறுதிமிக்கச் சபதமும் நிற்கிறது. அறிவைத் தேடியடைய வேண்டும் எனும் என்னுடைய சபதம்.

வேறு எதைப்பற்றியும் கவலைப்படாமல் அறிவுத்தேடலில் என்னை மூழ்கடித்துக்கொண்டு விட்டேன். என்னைத்தாங்கும் வலிமைமிக்கத் தூணாக நீயே இருக்கிறாய். என்னுடைய உலகத்தைக் கவனித்துக்கொள்கிறாய். உன் கண்ணீரைக்கொண்டு என் மனவுறுதியை வளர்த்தெடுக்கிறாய். இதனால்தான் எல்லையற்ற அறிவுப்பெருங்கடலில் எந்தத் தடையுமின்றி நான் ஊறித்திளைக்க முடிகிறது. நான் சத்தியமாகக் கொடுமைக்காரன் இல்லை ரமா. என் அறிவு வேட்கையைச் சளைக்காத தேடலின் மூலம் தணித்துக் கொண்டிருக்கிறேன். இதிலிருந்து திசைதிருப்பும் எதுவும் என்னைக் காயப்படுத்துகிறது. என் அமைதியை சீர்குலைத்து, கோபம்கொள்ள வைக்கிறது. எனக்கும் இதயம் உள்ளது ரமா, நான் பரிதவிக்கிறேன், ஆனாலும், புரட்சிக்கு என்னை ஒப்புக்கொடுத்திருக்கிறேன். இந்த உயரிய லட்சியத்திற்காக என் உணர்ச்சிகளைத் தீயிட்டு பொசுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இதனால், நீயும், யஷ்வந்தும் கூடச் சமயங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பது உண்மை. ஆனால், இந்த மடலை ஒரு கையால் எழுதிக்கொண்டே இன்னொரு கரத்தால் உன் கண்ணீரைத் துடைக்கிறேன். நம்ம செல்ல “பட்லே”வை (யஷ்வந்த்) பார்த்துக்கொள் ரமா. அவனை அடிக்காதே. நான் அவனை அடித்திருக்கிறேன். அதை ஒருக்காலும் அவனுக்கு நினைவுபடுத்தாதே. அவன் உன்னுடைய பிரிக்கமுடியாத பகுதி.

இந்தச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மத, உளரீதியான பக்கச்சார்புகள், சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அறவே வேரறுக்கும் வழியைக் கண்டடைய வேண்டும். இவை அன்றாட வாழ்வில் ஆழமாக ஊறிப்போயிருக்கின்றன. இவற்றை மொத்தமாக எரித்திட வேண்டும். மீண்டுவர முடியாதவகையில் புதைத்திட வேண்டும். இவற்றைச் சமூகத்தின் ஞாபகம், கலாச்சாரத்தில் இருந்தும் கூட அறவே அகற்ற வேண்டுமென விரும்புகிறேன்.

ரமா, இந்த மடலை படித்துக்கொண்டிருக்கும் போதே உன் விழிகளில் வழியும் நீரின் ஈரத்தை உணர்கிறேன். நீ திக்குமுக்காடிப் போயிருக்கிறாய் என எண்ணுகிறேன். உன் இதயம் கனத்துப்போயிருக்கும். உன் உதடுகள் நடுங்கிக்கொண்டிருந்தாலும், உன் உணர்ச்சிகளுக்கு நீ சொல்ல முயல்பவற்றைக் கடத்தும் வார்த்தைகள் கிடைக்கவில்லை. நீ அத்தகைய உடைந்துவிடக்கூடிய உணர்ச்சிகரமான நிலையில் இருக்கிறாய்.

ரமா, நீ என் வாழ்க்கையில் இல்லையென்றால் என்னாகி இருக்கும்? நீ என் துணையாக உடன்வராமல் போயிருந்தால் என் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும்? வாழ்க்கையில் சொத்து சுகமே முக்கியம் என எண்ணுபவளாக இருந்திருந்தால், என்னைத் தனியே தவிக்கவிட்டு போயிருப்பாள். யாராவது எப்போதும் பசியால் வாடவும், பம்பாயில் பசுமாட்டின் சாணியைத் தேடியலையவும், அதை வறட்டியாக்கி அடுப்பெரிக்கவும் யாராவது விரும்புவார்களா? வீட்டில் கிழிந்து போன துணிகளை ஒட்டுப்போட்டுக் கொண்டும், வறுமைக்கொடுமையில் நான் கொட்டும், ‘ஒரே ஒரு வத்திப்பெட்டி தான் மாதம் முழுவதற்கும்’ அல்லது ‘இருக்கிற அரிசி,பருப்பு, உப்பை வச்சு மாசக்கடைசி வரை ஓட்டித்தான் ஆகணும்’ முதலிய சொற்களைத் தாங்கிக்கொள்வார்கள்?

என்னுடைய ஆணைகளை நீ கடைபிடிக்காமல் முரண்டுபிடித்திருந்தால் என்னாகி இருக்கும்? நான் உடைந்து போன உள்ளத்தோடு, என் சபதத்தைக் காப்பாற்ற முடியாதவனாகப் போயிருப்பேன். முற்றிலும் நிலைகுலைந்து, எண்ணிப்பார்க்க கூட முடியாத அளவுக்கு என் கனவுகள் சுக்குநூறாகியிருக்கும். ரமா, என் வாழ்வில் நான் தேடுவதையெல்லாம் தொலைத்திருப்பேன். எல்லாமும், என்னுடைய எல்லா உள்ளக்கிடக்கைகளும் நிறைவேறாமல், காயப்பட்டுப் போயிருப்பேன். சிறு பதரைப்போலப் பொருளற்றவனாக இருந்திருப்பேன்.

உன்னையும், என்னையும் பார்த்துக்கொள். சீக்கிரம் ஊர் திரும்பிவிடுவேன். கவலைப்படாதே.

என்னுடைய நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

உன்னுடைய,
பீமாராவ்,
லண்டன்,
30 டிசம்பர் 1930

(அண்ணல் அம்பேத்கர் தன்னுடைய மனைவி ரமாபாய்க்கு எழுதிய இக்கடிதம் மூன்று மொழிகளைக் கடந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கரியர் யஷ்வந்த் மனோகர் எழுதிய ‘ரமாய்’ எனும் ரமாபாய் குறித்த வரலாற்று நூலில் மராத்தி மூலம் காணக்கிடைக்கிறது.இம்மடலை பரத் யாதவ் இந்தியில் மொழியாக்கம் புரிந்தார். அதனைத் தோஷ் ஆங்கிலத்திற்கு மொழிமாற்றினார்.)

தமிழில்: பூ.கொ.சரவணன்

மகாத்மா ஜோதிபாய் புலேவும், இந்தியாவில் சமூகப் புரட்சியும்


பேராசிரியர் கெயில் ஆம்வேட் அவர்கள் 1971-ல் EPW-ல் எழுதிய கட்டுரையை Critical Quest பதிப்பகம் மறுபதிப்பு செய்துள்ளது. இக்கட்டுரை புலே குறித்து கவனப்படுத்துபவை முக்கியமான வாதங்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மண்ணில் களமாடிய மற்ற சமூக சீர்திருத்தவாதிகளின் வரிசையில் புலே அவர்களை வைத்து பார்க்க கூடாது. அவரின் சிந்தனைகள், பார்வைகள், ஆர்வங்கள் அக்காலத்தில் இயங்கிய மேல்சாதி சமூக சீர்திருத்தவாதிகளிடம் இருந்து முற்றாக வேறுபட்டதாக இருந்தது. உயர்சாதியினரின் ‘தேசிய புரட்சி’ என்பது மேட்டுக்குடி, உயர்சாதி பாரம்பரியத்தை தேசியம் என்று இணைத்து கொண்டு முன்னிறுத்தியது. இதற்கு மாறாக விவசாயிகளின் நலன், சாதி ஒழிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான சமூக புரட்சியை ஜோதிபாய் புலே முன்மொழிந்தார்.

இந்தியாவின் இந்து கலாசாரம், சாதி அமைப்பை பிராமணியத்தை சார்ந்திருந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்திய மரபில் நீக்கமற கலந்து விட்ட சாதி அமைப்பு, மூட நம்பிக்கைகள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை வேரறுக்க கனவு கண்ட வகையில் புலே அவர்களே இந்திய மறுமலர்ச்சியின் முதன்மையான ஆளுமையாக கொண்டாடப்பட வேண்டும். அவரின் சிந்தனைகளே இந்தியாவின் சமூக புரட்சிக்கான முதல் எதிர்க்குரல்.

புலே எந்த அளவுக்கு தீர்க்கமான பார்வை கொண்டிருந்தார் என்பதை ஒரே ஒரு எடுத்துக்காட்டின் மூலம் உணரவைக்கலாம். அவரின் எழுத்துக்களில் ‘இந்து’ என்கிற பதத்தை அவர் பயன்படுத்துவதே இல்லை. இந்து கலாசாரத்தின் பகுதியாக தன்னை கருதிக்கொண்டு தன்னுடைய வாதங்களை முன்வைக்காமல் ஒட்டுமொத்த மரபையும் பகுத்தறிவு, சமத்துவ தராசுகளில் நிறுத்தி பார்த்து கூராய்வு செய்தார் புலே. இதனால் அவர் கள நிலைமை உணராத ஒருவர் என்று எண்ணிவிடக் கூடாது. அவர் எளிய மக்களின் மொழியிலேயே பேசினார். அவர்களின் பிரச்சினைகளில் தன்னுடைய கவனத்தை குவித்தார். அவர் சமூகத்திற்கு வெளியே நின்றபடி கனவுலகில் உலவிக்கொண்டு உரையாடவில்லை. பிரமாணிய கலாசார மரபிற்கு வெளியே இருந்து தன்னுடைய போரை முன்னெடுத்தார்.

ஒட்டுமொத்த சாதி அமைப்பும், அடக்குமுறை நிரம்பியிருக்கும் குடும்ப அமைப்பும் சமத்துவத்திற்கு எதிரானது. ஆகவே அவற்றை நிராகரிக்க வேண்டும். ஒட்டுமொத்த மூட நம்பிக்கைகளும், மத பாரம்பரியங்களும் பகுத்தறிவோடு நோக்கப்படுகையில் தூக்கி எறியப்பட வேண்டியவை. மத எழுத்துக்களை ஏற்க வேண்டியதில்லை. அவற்றின் அதிகார அரசியலை துடைத்து எறிய வேண்டும். புலேவின் பார்வையில் இந்து மத நூல்கள் எல்லாம் கடந்த கால இந்திய வரலாறு குறித்து மிகக் குறைந்த புரிதலை தரும் கர்ண பரம்பரை கதைகள். அதைத்தாண்டி அவற்றால் பயன் எதுவும் இல்லை. அவை மக்களின் மனங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு ஆரியர்கள், பிராமணர்கள் திணித்தவை.

இப்படி பிராமணிய மரபை முற்றாக நிராகரித்த புலே அதன் இடத்தில் புரட்சிகர கலாசாரம் ஒன்றை முன்மொழிந்தார். அதனை சர்வஜனிக் சத்திய தர்மம் என்று அழைத்தார். (சமூகத்தின் உண்மையான தர்மம்). இந்த தர்மம் ஆனது அனைவருக்கும் ஆனது. சமூகத்தின் அற அடிப்படை வாய்மை, பகுத்தறிவில் பிணைந்திருக்க வேண்டும். தன்னுடைய மக்கள் அனைவரையும் சமமாக நடத்தாமல், பிரித்து அணுகும் மரபு அருவருப்பானது. சமத்துவத்தை விரும்புவனே நமக்கான இறைவனாக இருக்க இயலும். ஆகவே, இறைவனுக்கும், நமக்கும் இடையே தரகர்/அர்ச்சகர் தேவை கிடையாது.

புலேவை கிறிஸ்துவ மிஷனரிக்களின் கைக்கூலி என்று வசைபாடினார்கள். ஆனால், அவர் உயர்சாதி சமூக சீர்திருத்தவாதிகள் அளவுக்கு கூட இயேசு குறித்து அக்கறை காட்டவில்லை. அவர் கிறிஸ்துவ மதத்திற்கும் மாறவில்லை. மதம் குறித்த மரபான கேள்விகளில் அவர் தன் மனதை செலுத்தவில்லை. புலேவின் காலத்தில் பிராமணர் அல்லாத மராத்தி சமூகத்தில், குன்பிக்கள் எனும் நிலத்தை உழுபவர்களும், மராத்தாக்கள் என்பது அவர்களை சுரண்டுபவர்கள், அடக்கி ஆள்பவர்களையும் குறித்தது. இத்தகைய மராத்தாக்களை தெறிக்கும் அங்கதத்தோடு புலே எள்ளி நகையாடுகிறார்.
கடைக்கோடி மனிதனையே சமூகத்தின் மையமாக மாற்ற வேண்டும் என்று புலே வாதிட்டார். அவர் குலம்கிரி நூலில் பிராமணிய மரபு சமத்துவத்திற்கு எதிரானது என்று கூர்மையாக பேசுகிறார். சமூகத்தில் பிராமணிய கலாசாரம் மிகக் கடையவர்கள் என்று கருதிய தீண்டப்படாதோர், பெண்கள் குறித்தே புலே அக்கறை செலுத்தினார் என்பது விபத்தில்லை. அவரின் சிந்தனை எதோ அரவணைப்புவாதம் கொண்ட மேல்தட்டு பார்வையில்லை. விவசாய தொழிலாளர்கள், தீண்டப்படாதோர் ஆகிய இருவரையும் பிராமணிய அடிமைத்தனத்தில் சிக்கி பாடுபடுபவர்களாக அவர் கருதினார். அவரின் சத்தியசோதக் இயக்கம் அவரின் காலத்திற்கு பிறகு அவரை பின்பற்றியவர்களாக சொல்லிக்கொண்டவர்கள் தங்களை சாதி இந்துக்கள் என்று அழைத்து கொண்ட காலத்தில் தான் தலித்துகளின் எழுச்சி அம்பேத்கரின் வழிகாட்டுதலில் வேறு திசையில் தீவிரமாக பயணித்தது எனலாம்.

புலே பெண் விடுதலையை தன்னுடைய மூச்சாக கொண்டிருந்தார். அவரின் தோள் சேர்ந்து பணியாற்றியவர் கிருஷ்ணராவ் பாலேகர் . பெண் விடுதலையை ஆதரித்து ஆண்-பெண் வேறுபாடுகளை விமர்சித்து தாராபாய் ஷிண்டே எழுதிய நூலை கூர்மையாக பாலேகர் தாக்கி எழுதினார். தன்னுடைய தளபதி என்று கூட பார்க்காமல் அவரின் விமர்சனத்தை கடுமையாக புலே தாக்கி எழுதினார். அத்தாக்குதல் பிராமணர்கள் மீதான அவரின் எழுத்தை விட கோபத்தோடு வெளிப்பட்டது.பாலேகர் பண்டைய, அடக்குமுறையின் உருவமாக திகழ்கிற குடும்ப முறையின் குரலாக வெளிப்படுகிறார், வீட்டோடு பெண் கட்டிப்போட பட்டுள்ளார். கணவன்-மனைவி உறவானது புதிய பாதையில் சமத்துவம் மிக்கதாக பயணிக்க வேண்டும் என்று எழுதினார் புலே. இந்த கருத்து மோதல்களை தாண்டி தன்னுடைய மரணம் வரை புலேவின் இயக்கத்தில் பங்காற்றினார் பாலேகர் என்பது கவனத்துக்கு உரியது. குடும்பத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்வரை சமூக சமத்துவம் என்பது சாத்தியமே இல்லை என்று புலே தெளிவாக உணர்ந்திருந்தார்.

ஆரியர்களும், ஆரியர் அல்லாதோரும்:

ஒரு முழுமையான கருத்தியல் என்பது அடிப்படை விழுமியங்கள் கொண்டதாக மட்டும் தேங்கி விடாது. அது சமூகத்தின் தற்கால நிலை குறித்து அக்கறை காட்டி, அதனை மாற்ற முனையும். அதையே புலேவும் செய்தார். எப்படி சாதி அமைப்பு தோன்றியது என்பது குறித்து தன்னுடைய கருதுகோளை புலே முன்வைத்தார். புலேவின் பார்வையில் பிராமணர், பிராமணர் அல்லாதோர் நலன்கள் என்பதை சமரசப்படுத்தி கொள்ள வாய்ப்பே இல்லை. ஆதிக்கம் செலுத்தும் மேட்டுக்குடியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தே ஆக வேண்டும். புலே ‘பிராமண வெறுப்பு’ கொண்டிருந்தார் என்பது , சுரண்டிக்கொண்டிருந்த முதலாளிகள் மீது மார்க்சியர்கள் வெறுப்பு கொண்டிருந்தது என்பதை ஒத்ததே ஆகும் என்கிறார் கெயில் ஆம்வேட்.

புலேவின் ஆரியர் அல்லாதோர் குறித்த கருத்துகள் கலாசார, இன கூறுகளில் தான் கவனம் செலுத்தியது. பொருளாதார, அரசியல் கூறுகள் பெரிதாக கவனித்தில் கொலப்படவில்லை. அவர் காலத்தில் காலனியத்தின் பொருளாதார போக்குகள், அரசியல் தீர்வுகள் குறித்து அறிவது எளிதான ஒன்றாக இருக்கவில்லை. எனவேதான், அவரின் அக்கறை கலாசார, இன விஷயங்களில் நிலைபெற்றது. சாதி அமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் இருந்த பிராமணர்கள் அறிவை தங்களின் தனிச்சொத்தாக ஆக்கி கொண்டார்கள். இவர்களை அந்நியர்கள், படை எடுத்து வந்த ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்று புலே கருதினார். இவர்கள் சாதி அமைப்பை கொண்டு இம்மண்ணின் பூர்வ குடிகளை அடிமைப்படுத்தி விட்டார்கள். இவர்களிடம் தேங்கியிருக்கும் அதிகாரம், அறிவு அனைவர்க்கும் உரியதாக மாற்றப்பட்டே ஆகவேண்டும்.

எது தேசிய கலாசாரம் என்கிற கேள்வி எழுந்த போது மேல்சாதியினர், மேல்தட்டு வர்க்கத்தினர் பிரிட்டிஷார் இந்தியா என வரையறுத்ததை இந்தியா என்று ஏற்றுக்கொண்டார்கள். இந்தியாவின் கலாசாரம் என்பது இந்து கலாசாரம். அது வேத காலத்தில் ஆரிய மக்களின் படைப்பில் எழுந்தது என்றார்கள். இந்த மரபின் பிரிக்க முடியாத பண்பாக வர்ணாசிரம தர்மத்தை கருதினார்கள். ஆரியர் அல்லாதோர், இஸ்லாமியர், பழங்குடியினர், கீழ் சாதியினர், விவசாயிகள் ஆகியோரின் மரபுகளை இழிவான ஒன்றாக கருதினார்கள், தரம் தாழ்த்தி அணுகினார்கள்.

ஆரிய இனம் குறித்த கருதுகோள்கள் ஜெர்மனியில் ஒப்பீட்டு ஆய்வாளர்களின் மத்தியில் தோன்றியதை, இந்துக்களும்-பிரிட்டிஷாரும் ரத்த உறவுகள் கொண்டவர்கள் என்று மாக்ஸ் முல்லர் பிரபலப்படுத்துவதில் போய் நின்றது. இதை அப்படியே எடுத்துக்கொண்டு, ஆரிய இனம், கலாசாரமே உயர்ந்தது, உன்னதமானது. அதன் ஆன்மீக பண்பை மேற்கின் இந்தோ ஐரோப்பியர்கள் தொலைத்து விட்டார்கள் என்றார்கள். காட்டுமிராண்டிகளாக இருந்த ஆரியர் அல்லாதோர் ஆரிய பண்பாட்டின் காற்று பட்டே பண்பட்டார்கள். பிளந்து கிடந்த இந்திய சமூகத்தை சாதியே பிணைத்து என்பது அவர்களின் பார்வை. மேற்கின் பகுத்தறிவு சாதி அமைப்பை கேள்வி கேட்டது என்றால், மேற்கின் இனவெறி சாதி அமைப்பிற்கு வலிமை சேர்த்தது.

இரு பிறப்பாளர்கள் ஆன பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகியோர் மட்டுமே ஆரியர்கள் என அழைக்கப்பட்டார்கள். சூத்திரர்கள், தீண்டப்படாதோர், பழங்குடியினர் ஆரியர் அல்லாதோரின் வழித்தோன்றல்கள் எனப்பட்டார்கள். ஆரிய இனம் என்கிற கருதுகோளை அப்படியே ஏற்காத தயானந்தர் முதலியோர் கூட திராவிடர்கள், சூத்திரர்கள், பழங்குடியினர், இஸ்லாமியர் ஆகியோர் கலாசார, அற, அறிவுக்கூறுகளில் ஆரியர்களை விட கீழானவர்கள் என்றே கருதினார்கள். திலகர் இப்படி எழுதினார்:

ஆரியர்கள் வட துருவத்தில் இருந்து புதிய நிலங்களை தேடி நிலநடுக்கோட்டை நோக்கி பயணித்தார்கள். ஆரியர் அல்லாத இனங்களை ஆரியர்கள் வென்றது, கொன்றது, செரித்துக் கொண்டது ஆகியவை ஆரியர்களே உயர்ந்த, அவசியமான இனம் என்பதை வெளிப்படுத்துகிறது

இந்திய தேசியத்தின் அடிப்படையாக ஆரிய, வடமொழி மரபை முன்னிறுத்தியதன் மூலம் மேல்சாதி இந்துக்களின் குரல், கலாசாரமே வலுப்படுத்தப்பட்டது. வங்க அறிவுஜீவிகள் காளியை தங்களுடைய போராட்ட அடையாளமாக முன்னிறுத்தி வெகுமக்கள் மரபுகளை தூற்றினார்கள். திலகர் சித்பவன பிராமணர்களின் தெய்வமான கணபதியை சுற்றி இந்து தேசியத்தை பின்னினார். சிவாஜியை தனதாக்கி கொண்ட திலகர் அவரை பிராமணர்களின் பேச்சின் கேட்டு ஆண்டவராக, இஸ்லாமியர்களின் எதிரியாக முன்னிறுத்தினார். காந்தியின் ராம ராஜ்யம் இந்தியாவில் பெருமளவில் கவனம் பெற்றாலும், தமிழ் மண்ணில் திராவிடர்களை கொன்றொழித்த ஆரியனாக இராமன் அணுகப்பட்டான். சம்புகன் என்கிற சூத்திர பிள்ளை பிராமண நெறியை பின்பற்ற முயன்றதற்காக கொன்ற ஆதிக்க சாதி வெறி கொண்ட ஒருவனாக இராமன் பெரும்பான்மை மகாராஷ்டிர மக்களுக்கு திகழ்ந்ததை கெயில் ஆம்வேட் சுட்டிக்காட்டுகிறார்.

ஆரிய கலாசாரமே உயர்ந்தது. அந்த இனம் தந்த பங்களிப்பே வேதங்கள், வர்ணாசிரமம் என்கிற வாதத்தை மகாத்மா புலே நேருக்கு நேர் எதிர்கொண்டார். எதை பண்டைய நாகரிகத்தின் துவக்கம் என்று வாதிட்டார்களோ அதனையே அடிமை முறையின் துவக்கம் என்று சாடினார் புலே. பிரிட்டிஷார், இஸ்லாமிய ஆட்சி அந்நியர் ஆட்சி என்பதை தாண்டி அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வந்த ‘இரானி-ஆரிய-பட்’கள் குறிப்பாக பிராமணர்கள் அந்நியர்களே. உயர்சாதியினர், பழமைவாத மதம், வேதங்கள், புராணங்கள் முதலிய அனைத்தும் மூட நம்பிக்கைகள் மட்டுமல்ல, அவை இந்த நிலத்திற்கு அந்நியமானவை. அவை ஆதிக்கத்தின் ஆயுதங்கள்.
புராணங்கள் புலேவின் சிந்தனையில் மறுவாசிப்புக்கு ஆட்பட்டன. தசாவதாரம் மண்ணின் மைந்தர்களை ஆரியர்கள் அடிமைப்படுத்திய கதைகள் என்று புலே நிறுவினார். நரசிம்ம அவதாரம் ஒரு அப்பாவி இளவரசனின் மனதை நஞ்சாக்கி தன்னுடைய தந்தையையே கொல்லத்தூண்டிய கதை என்றார். உச்சமாக வாமன அவதாரம் இம்மண்ணின் எளியவர்கள், விவசாயிகள் ஆகியோரின் தலைவரான பலியை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ளும் ஆவணம் என்று புலே கருத்துரைத்தார். பலி வந்திட இன்பம் பெருகும் என்கிற மகாராஷ்டிரா பழமொழியும் இந்த வாசிப்பும் ஒன்றிணைந்து கொண்டன. இதனால் மதத்தை நோக்கி மக்களை புலே திருப்பினார் என்று தவறாக எண்ணிக்கொள்ள கூடாது.
பிராமணியத்தின் கதையாடலை வேறொரு கதையாடலின் மூலம் எதிர்கொள்ளும் எதிர்ச்செயல்பாடே இது. மேலும், கீழ் சாதியினரின் தெய்வங்களான காண்டோபா, ஜோதிபா, மார்த்தாண்ட், கல்பாஹிரி ஆகியோரை நெகிழ்வான பார்வையோடு அணுகிய அவர் சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட தெய்வங்களை புறந்தள்ளினார்.

புலேவின் காலத்திற்கு பிறகு இந்த ஆரியர் அல்லாதோர் அடையாளத்தை சூத்திரர்கள் ஆகிய பெரும்பான்மை மராத்தியர்கள் புறந்தள்ளினார்கள். இந்து தேசிய ஒற்றுமைக்கு இனப்போர் என்கிற கருத்தாக்கம் தடையாக இருந்தது ஒருபுறம், இடைநிலை சாதியினர் இருபதாம் நூற்றாண்டில் தங்களை சத்திரியர்கள் என்று அழைத்துக்கொண்டார்கள். புலேவும் சத்திரியர்கள் பூர்வகுடிகள் என்று எழுதினார். ஆனால், அவர் அந்த அடையாளத்தை உயர்த்திப்பிடிக்கவில்லை. இவர்களோ ஆரியர்களின் வழித்தோன்றல்கள் ஆகிய சத்திரியர்கள் என்று அறிவித்துக்கொண்டார்கள். அடிமைத்தனம், சூத்திரர்கள், ஆரியர் அல்லாதோர் முதலியவை திமுகவின் இனவாத கருத்துகள் என்கிற வட இந்தியாவின் குரலையே இவர்களும் வழிமொழிந்தார்கள் என்று கெயில் ஆம்வேட் கவனப்படுத்துகிறார்.

புலே வெறுமனே மகாராஷ்டிராவோடு தன்னுடைய மாற்று அரசியலை குறுக்கிக்கொண்டவர் இல்லை. அதற்கு மாறாக குலம்கிரி நூலை அமெரிக்காவில் அரங்கேறிக்கொண்டிருந்த அடிமை முறை ஒழிப்பிற்கு அர்ப்பணித்தார் என்பது அவரின் உலகளாவிய பார்வையை காட்டுகிறது. பண்ணையார்கள், செல்வந்தர்கள், மேல்சாதியினர் ஆகியோரின் பக்கம் நிற்காமல் கீழ்சாதியினர், விவசாயிகள், பழங்குடியினர் பக்கம் குரல் கொடுத்து புலே தனித்த ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார். அவரின் கருதுகோள் சாதி அமைப்பை இந்தியாவிற்கு அந்நியமானது என்று தாக்கி, ஒரு ‘ஜனநாயகமயமான தேசிய கலாசாரத்திற்கு’ ஆன அடிப்படையை தந்தது. அதன் மீது சமத்துவ கோபுரத்தை அவரின் வழித்தோன்றல்கள் கட்டி எழுப்பாமல் போனாலும் அடித்தளம் வலுவாகவே இருக்கிறது என்கிறார் ஆம்வேட்.

புலேவின் பொருளாதார, சமூக தடுமாற்றங்கள்:

புலே அறிவுச்சுடராக எழுந்த காலத்தில் பிராமணர் அல்லாதோரில் இருந்து மாற்றுச்சிந்தனையை முன்வைப்பவர்களே பெரிதாக எழுந்திருக்கவில்லை. அப்படி புலே போன்றவர்கள் எழுந்தாலும் நுண்மையான மாற்று கலாசார கருத்தாக்கத்தை ஆழமாக, நுண்மையாக வைக்க காலம் கைகூடியிருக்கவில்லை. கடைக்கோடி மக்களோடு உடனடி உரையாடல் மேற்கொண்டு அவர்களை முன்னோக்கி அழைத்து செல்வதே அவசரத்தேவை என்கிற ரீதியில் தன்னுடைய ‘சர்வஜனிக் சத்திய தர்மம்’ நூலில் புலே எழுதுகிறார். எனினும், அவரின் எழுத்துகள் விவசாயக்கூலிகளின் வறுமையை பேசியது. கவிதையும், பரப்புரையும் இணைந்து கொண்டு பிரச்சினைகளின் வேர்களை, அவற்றுக்கான தீர்வுகளை கவனப்படுத்தியது.

இந்தியாவின் மேல்சாதி அறிவுஜீவிகள் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இந்தியர்கள் சுரண்டப்படுவதாக சொன்ன போது, புலே மிகச்சரியாக இந்திய விவசாயி பிரமாண மேட்டுக்குடியினர், காலனிய ஆட்சியாளர்கள் என்று இருதரப்பாலும் சுரண்டப்படுவதை கவனப்படுத்தினார். தொழில்மயமாக்கல் இந்தியாவின் பிரச்சினைகளை தீர்க்கும் என்ற காலத்தில் விவசாயத்தின் பிரச்சினைகள், உழுபவர்கள் எதிர்கொள்ளும் பாடுகள் குறித்து புலே பேசினார்.

புலே ஆங்கிலேயரை எதிர்த்த மேல்சாதி அறிவுஜீவிகளை போலவே ஆங்கிலேய ஆட்சியை விமர்சனப்பார்வையோடு அணுகினார். இந்தியாவின் வளங்களை சுரண்டிக்கொண்டு போவதையும், தேசத்தை வறுமையில் உழலவிட்டு, உள்ளூர் கலைகள், தொழில்களை நசிய விட்டதையும் கவனத்தில் கொண்டார். ஆங்கிலேய அதிகார வர்க்கத்தை சாடிய அவர், அந்த அதிகாரத்தை கீழ்நிலையில் சுவைத்து, சுரண்டுபவர்களாக பிராமணர்கள் இருப்பதையும் கருத்தில் கொண்டார். மேல்சாதியினர் ஆங்கிலேயரை மட்டும் தாக்கிய போது, ஆங்கிலேயரின் ஆட்சியின் கனிகளை சுவைக்கும் மேல்சாதியினரையும் இணைத்து புலே சாடினார். ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பான்மையை மேல்சாதியினர் தங்களுடைய கல்விக்கு பயன்படுத்திக்கொண்டு விவசாயிகள் வறுமையில், வேதனையில் உழல்வதை கவனப்படுத்தினார் புலே.

புலே மார்க்சியர்களை போல விவசாயிகள், தொழிலாளிகளுக்குள் நிலவிய வர்க்க பேதங்களை கருத்தில் கொள்ளவில்லை. தொழிற்சாலைகளில் பாடுபடும் தொழிலாளர்கள் குறித்தும் அவர் பேசவில்லை. அவரின் காலத்தில் பொருளாதார புரட்சி முதலிய சிந்தனைகள் வளர்ந்திருக்கவில்லை தொழில்மயமாக்கம் இந்தியாவின் பிரச்சினைகளை தீர்த்து விடாது, விவசாயத்தில் அக்கறை காட்ட வேண்டும். நீர்நிலைகள் விரிவாக்கம், அறிவியல் முறையில் கால்நடை வளர்ப்பு, மண் பாதுகாப்பு திட்டங்கள் என்று புலேவின் கனவுகள் விரிந்தன. நவீன தொழில்நுட்பங்கள் கிராமங்களை வந்தடைய வேண்டும் என்றும் அவர் விரும்பினார். ஆனால், அவர் விவசாயத்தில் பலன்கள் விளைந்தாலும் அதையும் ஒரு மேட்டுக்குடி கைப்பற்றிக்கொள்ளும் என்பதை கருத்தில் கொள்ள தவறினார்.
வைஸ்ராய் வருகைக்கு ஆயிரம் ரூபாயை வாரி இறைப்பதை எதிர்க்கிறவராக இருந்தாலும், புலே ஆங்கிலேயரிடம் அடித்தட்டு மக்களின் கல்வி, முன்னேற்றத்துக்காக உதவி கேட்டு நின்றார். தங்களுக்கான அடிமை பாபுக்களை உருவாக்கி வேலை வாங்கிக்கொண்டிருந்த ஆங்கிலேயரிடமே கல்வியின் கதவுகளை திறக்க உதவுங்கள் என்று புலே கேட்க நேர்ந்தது. அதற்கான மனமும், நிதி ஒதுக்கீடும் ஆங்கிலேயருக்கு இருக்கவில்லை. மேலே இருந்து மேற்கொள்ளப்படும் முன்னேற்ற செயல்பாடுகள் பலன் தராது என்று தெளிவாக பேசிய புலே, அனைவர்க்கும் கல்வியை வழங்க வேண்டும் என்று கோரினார்.

புலே வட்டன், குல்கர்னி முதலிய சாதி முறையை கட்டிக்காக்கும் முறைகளை ஒழிப்பது, அப்பதவிகளை அனைவர்க்கும் திறந்து விடுவது ஆகியவற்றுக்கு தீவிரமாக குரல் கொடுத்தார். பல தார மணம், குழந்தை திருமணம், விபசாரம் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படவும் முழங்கினார்.

புலே சமூக மாற்றத்துக்காக ஆங்கிலேயரை நம்பியிருந்தது அவரின் போதாமை. அவர் பிராமணர் அல்லாதோர் அதிகார பீடங்களை கைப்பற்றிக் கொள்ளும் போது மாற்றங்கள் நிகழும் என்று நம்பினார். பிராமணர்களின் மக்கள் தொகைக்கு ஏற்பவே அவர்களுக்கு அதிகாரத்தில் இடம் தரப்பட வேண்டும் என்று அவர் எழுதினார். இது முடிவல்ல, துவக்கம் என்கிற தெளிவு அவருக்கு இருந்தது. புலே பிராமணர் அல்லாதோர் இயக்கத்தை சமூக மாற்றத்துக்கான கருவியாக மாற்றிக் காட்டினார். அதே வேளையில் அவருக்கு பின் வந்தவர்கள் அதனை பொருளாதார, அரசியல் தளங்களில் மாற்று சக்தியாக மாற்ற தவறி விட்டார்கள். ஆங்கிலேய அரசு சமூக மாற்றத்துக்கு தயாராக இல்லை, மேல்சாதி தேசியவாதிகள் போராட்டங்கள் கைமீறிப் போகாமல் பார்த்து கொண்டார்கள் (வரி கொடாத போராட்டம், குத்தகை மறுப்பு போராட்டமாக மாற அவர்கள் அனுமதிக்கவில்லை என்பது ஒரு எடுத்துக்காட்டு). அதிகாரத்தின் கனிகளை பிராமணர் அல்லாதோர் சுவைத்தார்கள், ஆனால், கிராமங்களின் ஏற்றத்தாழ்வுகளை அவர்கள் சமப்படுத்தவில்லை.
குல்கர்னி முதலிய இடங்களை தாங்களும் பங்கிட்டு கொண்டார்கள், கிராம வழிபாட்டு உரிமைகளை பெற்றார்கள். ஆனால், பாட்டீல் மாநாடுகளுக்கு ஆதரவி தந்து கொண்டே, மகர்களை அடிமைப்படுத்தும் வட்டன் முறையை அம்பேத்கர் எதிர்த்த போது அவருக்கு ஆதரவு தர மறுத்தார்கள்.

ஆண்-பெண், பல்வேறு சாதியினர், கிராமம்-குடும்பம் என்று பல தளங்களில் மாற்றமும், சமத்துவமும் ஏற்பட வேண்டும் என்கிற புலேவின் கனவு புறந்தள்ளப்பட்டது. புரட்சிகர மனப்பான்மை கொண்ட சத்திய சோதக் சமாஜ இளைஞர்கள் தங்களுடைய மூத்தவர்கள் அதிகாரத்தை பிடித்து கொண்டிருப்பதை கண்டார்கள். அவர்கள் அந்நிய ஆட்சியில் இருந்து உடைத்து வெளியேறும் விடுதலை போராட்டத்தை விட்டு முன்னோடிகள் விலகியிருப்பதாக எண்ணிக்கொண்டு தேசிய நீரோட்டத்தில் கலந்தார்கள். புலேவின் சமூகப் புரட்சி கனவு அப்படியே இருக்கிறது.

புலே ஆரியர் அல்லாதோர் கருத்தாக்கத்தை கூர்மையாக, செறிவாக முன்வைத்தார். ஆரிய இனத்தவர்கள் வெள்ளையர்களோடு தொடர்புடையவர்கள் எனப்பட்ட காலத்தில் ஆரியர் அல்லாதோரை கறுப்பின மக்களை தொடர்புபடுத்தி கொண்டு சமத்துவக்குரலை அவர் எழுப்பினார். உறிஞ்சி கொழுத்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதி குழுவினரை அதிகாரத்தை விட்டு அகற்றினாலே ஒடுக்கப்படும் மக்கள் முன்னேற முடியும் என்கிற சிந்தனையை முதலில் முன்மொழிந்தவர் என்கிற வகையில் இந்திய சமூக சிந்தனை மரபில் புலே மிக முக்கியமான இடத்தை பெறுகிறார்.

Jotirao Phule and The ideology of Social Revolution in India- Gail Omvedt
Critical Quest
பக்கங்கள் நாற்பது
விலை 30

கொரோனாவை எதிர்கொள்ள வரலாற்றிலிருந்து சில பாடங்கள் – முனைவர் ஸ்ரீநாத் ராகவன்


நான் இன்றைக்கு இந்தியா தன்னுடைய வரலாற்றில் இருந்து கொரோனா வைரஸ் கொள்ளை நோயை எப்படி எதிர்கொள்வது எனப் பாடம் படிக்கலாம் என்று உரையாற்ற இருக்கிறேன். இந்தியா பேரிடர் ஒன்றை எதிர்கொண்டிருக்கிறது. இந்நோயை அரிதான ஒன்று, நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் ஒன்று என்றெல்லாம் வர்ணிப்பதை கண்டோம். இந்த நோயை பதினான்காம் நூற்றாண்டின் கருப்பு மரணங்கள், ஸ்பானிஷ் ப்ளூ, முதலாம் உலகப்போருக்கு அடுத்து தாக்கிய இன்ப்ளூயன்சா நோய்த் தொற்று ஆகியவற்றோடு ஒப்பிடுகிறார்கள். இந்தியாவும் 1918-19 ஆண்டுகாலத்தில் பாதிக்கப்பட்டது.

எனினும், வரலாற்றாசிரியர்கள் வரலாற்றில் இருந்து எளிமையான படிப்பினைகளை எடுத்துக் கொள்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. எங்களுடைய வரலாற்று ஆய்வு முறைகள், இரு வேறு நிகழ்வுகளை ஒப்பிடும் போது அவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளைப் பற்றி மட்டும் கவனம் செலுத்தாமல், அவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சொல்லித் தருகின்றன. இந்த எச்சரிக்கையை மனதில் வைத்துக் கொண்டு, கடந்த காலங்களில் இந்தியா இப்படிப்பட்ட கொள்ளை நோய்கள், தேசிய அவசரநிலைகளை எதிர்கொண்ட விதத்தில் இருந்து பாடங்கள் படிக்க இயலும்.

நான் குறிப்பாக மூன்று வெவ்வேறு முக்கியமான வரலாற்று நிகழ்வுகளைக் கவனப்படுத்த உள்ளேன். இவை ஒவ்வொன்றுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருந்தாலும், இவற்றில் இருந்து நாம் வெவ்வேறு படிப்பினைகளைப் பெற முடிகிறது. முதலாவதாக 1896-ல் இந்தியாவை ஆட்டிப்படைக்க ஆரம்பித்த பிளேக் நோய் அடுத்த இருபதாண்டுகளுக்குத் தொடர்ந்ததைப்பற்றிப் பேசுவோம். அதற்கடுத்து 1918-19 காலத்தில் நிகழ்ந்த இன்ப்ளூயன்சா கொள்ளை நோய், இறுதியாக இரண்டாம் உலகப்போர் காலத்தை இந்தியா அணுகிய விதம், பல்வேறு விஷயங்களை அணிதிரட்டிய பாங்கு என்று பயணிப்போம்.

(புகைப்பட நன்றி: விகடன்)

முதலாவதாகப் பிளேக் நோயை எடுத்துக் கொள்வோம். இந்நோய் 1896 கடல் வழியாக இந்தியாவிற்கு வந்து சேர்ந்தது. இரண்டாண்டுகள் கழித்து, இந்நோயின் வீரியத்தைப் பிரிட்டீஷ் அரசாங்கம் உலகெங்கும் பரவியிருந்த தன்னுடைய வியாபாரத்தை அசைத்துப் பார்க்க ஆரம்பித்த போதுதான் உணர்ந்து கொண்டது. இந்தியாவின் பம்பாய் நகரங்களில் இருந்து கல்கத்தா, கராச்சி என்று பிளேக் நோய் படிப்படியாகப் பரவ ஆரம்பித்தது. அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அது பல்வேறு சிறு நகரங்கள், கிராமப்புறங்கள் என்று கிளை பரப்பிக் கொண்டே சென்றது. 1901-ல் பிரிட்டிஷ் இந்திய அரசின் கணக்குப்படி இரண்டரை லட்சம் மக்கள் இந்நோயால் மடிந்து போயிருந்தார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் பத்து லட்சம் பேர் பிளேக் நோயால் இறந்தார்கள். இன்னும் இருபது ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் பிளே காவு வாங்கியவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டிருந்தது.

இந்தத் தொற்றுநோயின் வேகத்தைக் கண்டு திகைத்த பிரிட்டிஷ் அரசாங்கம் நோய் பரவ ஆரம்பித்த இரண்டாம் ஆண்டில் இருந்தே கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருந்தது. நோயாளிகள், கப்பல்கள், தொடர்வண்டிகளைச் சோதிப்பது, சிறைப்பிடிப்பது என்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பிளேக் பாதிக்கப்பட்டவர்கள் என்று கருதப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டார்கள். வீடுகள், பொதுச் சொத்துக்களைப் பிளேக் பாதிப்புக்கு ஆளான போது அழித்தார்கள். எல்லா வகையான யாத்திரைகள், திருவிழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. மக்கள் பெருந்திரளாகக் கூடுவது தடை செய்யப்பட்டது. இத்தகைய கடுமையான, தீவிரமான நடவடிக்கைகள் இந்திய மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பின. குறிப்பாகப் பத்திரிகைகள் அரசின் போக்கை கடுமையாகச் சாடி எழுதின.

கட்டாயப்படுத்தித் தனிமைப்படுத்துவது, வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்ப்பது, இன்னபிற தடுப்பு நடவடிக்கைகளை தேசிய தலைவர் திலகர் கண்டித்தார். புனேவில் இருந்து வெளிவந்த அவரின் கேசரி இதழில் அரசின் போக்கு விமர்சிக்கப்பட்டது. திலகர் உள்ளிட்ட தலைவர்கள் பிளேக் நோயை அரசு அறிவியல்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். அதேவேளையில், சர்வாதிகாரப்போக்கோடு, தான்தோன்றித்தனமாக எடுக்கப்படும் முடிவுகள் மக்களை அரசிடம் இருந்து அந்நியப்படுத்தி விடும் என்று கருதினார்கள். அவர்களின் அச்சம் சரியென்பதை நிறுவும் விதமாக நோய் ஏற்பட்ட 1896-ல் இருந்து அடுத்தடுத்த ஐந்தாண்டுகளில் மருத்துவமனைகள் உடைத்து நொறுக்கப்பட்டன. பிளேக் நோய்க்காக மக்களைப் பரிசோதிக்க வந்த மருத்துவர்கள் தாக்கப்பட்டார்கள், கல்கத்தா, பம்பாய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கலவரங்கள் வெடித்தன. பிளேக் நோய் குறித்துப் பலதரப்பட்ட வதந்திகள் உலவ ஆரம்பித்தன. அரசின் அடக்குமுறையும், இந்த வதந்திகளும் கைகோர்த்துக் கொண்டன.

பிரிட்டீஷ் அரசாங்கம் பிளேக் நோய்த்தொற்றை எதிர்கொண்ட விதம் அரசாங்க அதிகாரம், பலம், சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி ஆகியவற்றின் போதாமைகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஒரு வழியாகப் பிரிட்டிஷ் அரசு மக்களுக்குப் பெரும் இன்னல்களைத் தரும் தவிர்க்க முடியாத நடவடிக்கைகளை எடுக்கும் போது உள்ளூர் தலைவர்களின் உதவியை நாடினார்கள். அவர்களின் ஒத்துழைப்பு மக்களுக்கு இடரைத் தரும் நடவடிக்கைகளை அமல்படுத்தி அதன்மூலம் பெருமளவில் பிளேக் நோயை எதிர்க்க உதவியது.

நாம் பார்க்க இருப்பது 1918-ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய இன்ப்ளூயன்சா கொள்ளை நோய். இந்தக் கொள்ளை நோய் தான் பல்வேறு வகைகளில் தற்போதைய COVID-19 நோய்ப் பரவலோடு ஒப்பிடத்தக்கது. இரண்டு தொற்றுகளும் உலகம் முழுக்கப் பரவின என்பதோடு இரண்டுமே ப்ளூ வகை நோய்த்தொற்றாகும். மேற்சொன்ன இன்ப்ளூயன்சா காய்ச்சலால் உலகம் முழுக்க ஐந்து கோடி மக்கள் இறந்தார்கள். இந்தியாவின் 1921 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இதில் 1.2 -1.3 கோடி மக்கள் இந்தியாவில் இறந்து போனார்கள்.மக்கள் தொகை கணக்கெடுப்பில் மரணங்களின் எண்ணிக்கை குறைத்தே மதிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. பின்னர் மக்கள் தொகை ஆய்வாளர்கள், பொருளாதார அறிஞர்கள் ஒரு கோடியே எழுபது லட்சம் முதல் 1 கோடியே எண்பது லட்சம் மக்கள் இந்தியாவில் மட்டும் ப்ளூ கொள்ளைநோயால் இறந்து போனார்கள் என்கிறது. அதாவது உலகத்தில் நிகழ்ந்த மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்பட்டது.

இந்தக் கொள்ளை நோய் இந்தியாவை என்ன செய்தது என்பது குறித்துக் காத்திரமான வரலாற்று ஆய்வுக்காக இப்பேரிடர் காத்துக் கொண்டிருக்கிறது. இதில் இருந்து நாம் பெறுவதற்குப் பல்வேறு பாடங்கள் உள்ளன என்றாலும் நான் ஒன்றே ஒன்றை தொட்டுக்காட்ட விரும்புகிறேன். இதனைக் குறித்து நம்மிடம் போதுமான தரவுகள் இருக்கின்றன. இந்த நோய் எப்படி வெவ்வேறு பகுதிகள், தரப்பினரை வெவ்வேறு விதமாகப் பாதித்தது என்பதைக் காண்போம். முதல் உலகப்போரில் உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக இறந்து போனவர்களை விட அதிகமாக 1.7-1.8 கோடி மக்கள் இந்நோயால் இந்தியாவில் இறந்து போனார்கள். இதில் பெரும்பாலான மரணங்கள் இந்தியாவின் வடக்கு, வடமேற்கு, மத்திய பகுதிகளில் நிகழ்ந்தன. அதிலும், இன்னும் நுணுகி பார்த்தால் உள்ளூர் அளவிலும் நோயின் தாக்கம் வெவ்வேறு பகுதிகளுக்கு ஏற்ப மாறுபட்டிருந்தது.

உத்திர பிரதேசம் அப்போது ஐக்கிய மாகாணங்கள் என்று அறியப்பட்டிருந்தது. இப்பகுதியில் ஆயிரத்துக்கு இருபது பேர் நோயால் பீடிக்கப்பாட்டார்கள். ஆக்ராவில் மட்டும் பத்திற்கு ஏழு பேர் ப்ளூ தாக்குதலுக்கு ஆளானார்கள். வயதை அளவுகோலாக வைத்துக் கொண்டு பார்த்தால் பம்பாய் மாகாணத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களில் பெரும்பாலானவர்கள் இருபது முதல் நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் (42%). கரோனா நோய்த்தொற்று வயதானவர்களிடம் அதிகம் காணப்படுவதில் இருந்து இது மாறுபட்டு நிற்கிறது. அன்றைய ப்ளூ தொற்றில் பம்பாய் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் 20% மட்டுமே. பொதுவாக இன்ப்ளூயன்சா நோயால் முதியவர்களே அதிகம் பாதிக்கப்படும் போது, ஏன் இந்தத் தடவை மட்டும் இளையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள் என்கிற கேள்விக்கு விடைதர முடியாமல் ஆய்வாளர்கள் இன்றுவரை திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நோயின் தாக்கம் பாலின அடிப்படையிலும் மாறுபட்டது. பம்பாய் மாகாணத்தில் அதிகமான இறப்புகள் நிகழ்ந்த இருபது -நாற்பது வயதினரில் ஆண்களை விடப் பெண்களின் மரண அளவு 12-14% கூடுதலாக இருந்தது. கொள்ளை நோய்க்காலங்களில் கூடப் பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்யத் தலைப்பட்டதோடு, குடும்பத்தினரை பார்த்துக் கொள்ளும் பொறுப்புக்கும் ஆளாக்கப்பட்டார்கள். இதனால் அவர்கள் கூடுதலாக இறந்து போனார்கள். வர்க்க, சாதி அடிப்படையிலும் மரண அளவுகள் மாறுபட்டன. ஏழைகளும், கீழ் சாதியினர் எனக் கருதப்பட்டவர்களும் அதிகளவில் இறந்து போனார்கள். அவர்களின் வாழிடங்கள் போதுமான சுகாதாரம் இன்றி இருந்தன என்பதோடு அவர்கள் சிறிய இடத்திற்குள் பல பேர் நெருக்கமாக வாழ வேண்டிய நிலையில் இருந்தார்கள். பலர் திறந்தவெளியில் தூங்க வேண்டிய அளவுக்கு வறுமை ஆட்டிப்படைத்தது. அவர்களிடையே மனித தொடர்பு அதிகமாக இருந்தது நோயை வேகமாகப் பரப்பியது.

இது போதாது என்று பம்பாய் மாகாணத்தில் ப்ளூ நோயோடு பஞ்சமும் கைகோர்த்துக் கொண்டது. கொள்ளை நோயால் விவசாயத் தொழிலாளர் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. தொழிலாளர் தட்டுப்பாட்டால் உணவு உற்பத்தியானது 1917-ஐ ஒப்பிடும் போது அடுத்தாண்டு இருபது சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தது. பம்பாய் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பஞ்சம் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று அறிவிக்க வேண்டியிருந்தது. இதனால் உணவுத் தட்டுப்பாட்டோடு ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்பட்டது. இது நோயின் தாக்கத்தை அதிகப்படுத்தி மேற்சொன்ன மரணங்களுக்கு வழிவகுத்தது. இந்நோயை போலவே கொரோனா வைரஸ் கொள்ளைநோயின் தாக்கமும் பல தரப்பட்ட மக்களிடையே வெவ்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனைக் கணக்கில் கொண்டு அரசாங்க திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

இறுதியாக, இன்னொரு நோய்த்தொற்று/கொள்ளை நோய் குறித்து நான் பேசப்போவதில்லை. இரண்டாம் உலகப்போர் காலத்துக்குச் செல்ல இருக்கிறோம். கொரோனா பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் சூழலில் அதற்கு எதிரான நடவடிக்கைகள் போரோடு உருவகப்படுத்தப்படுகின்றன. கொரோனாவுக்கு எதிராகப் போரில் இருக்கும் நாம் மக்களை, நம்முடைய ஆற்றல் வளங்களைத் திரட்டி அதற்கு எதிராகப் போரிட வேண்டும் என்று பேசப்படுகிறது.

இந்தியா இரண்டாம் உலகப்போரின் போது எப்படிப் பல தளங்களில் அணி திரட்டியது என்பது நமக்கு வழிகாட்டியாகத் திகழ்வதோடு மட்டுமல்லாமல் சில எச்சரிக்கைகளையும் வழங்குகிறது. இடர் சூழ்ந்த காலத்தில் அப்போதைய அரசு இந்தியாவின் வர்த்தக நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பல்துறை வல்லுநர்களோடு கைகோர்த்துக் கொண்டு இயங்கியது. எப்படி அரசு அணிதிட்டியது என்பதற்கு மோசமான பக்கமும் உண்டு. அது ஒரு புறம் என்றால், ஜப்பானுடன் போர் வலுத்த 1942 ஐ ஒட்டிய காலத்தில் இந்திய அரசு அமைப்புரீதியாகப் பல்வேறு புதுமைகளைப் புரிந்தது. பல்வேறு கமிட்டிகள், குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் சில அறிவுரை வழங்குவதாக இருந்தன. வேறு சில அதிகாரமிக்கவையாகவும் திகழ்ந்தன. இந்தக் குழுக்களில் வர்த்தகத் தலைவர்கள், குடிமைச் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள், பல்துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்தக் குழுக்களில் இடம் பிடித்தார்கள். இந்தக் கமிட்டிகள், குழுக்கள் அரசாங்கத்தின் வெவ்வேறு உறுப்புகளோடு இணைந்து இயங்கின. இந்த அரசாங்க உறுப்புகள் போர்க்காலத்தில் இந்திய பொருளாதாரத்தைத் துடிப்போடும்,முனைப்பாகவும் வைத்திருக்கும் பணியில் ஈடுபட்டிருந்தன.

குறிப்பாக, இன்றைக்குக் கிட்டத்தட்ட களத்தில் தென்படாத ஒரு முயற்சி அப்போது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. உலகப்போர் துவங்கிய இரண்டு ஆண்டுகள் வரை கூட இந்தியாவிடம் மெஷின் கருவிகளை உற்பத்தி செய்யும் திறன் இருக்கவில்லை. அதற்குமுன்பு வரை எல்லா மெஷின் கருவிகளையும் வெளியில் இருந்தே இறக்குமதி செய்து கொண்டிருந்தோம், உலகப்போர் வேகமெடுத்த காலத்தில் அரசு வெவ்வேறு குழுக்கள், கமிட்டிகளோடு சேர்ந்து இயங்கி ஐந்து நிறுவனங்களை மெஷின் கருவிகள் தயாரிக்கக் கண்டறிந்தது. அவற்றிற்கு நிதியுதவி, தர வழிகாட்டுதல், விலை நிர்ணயம் ஆகியவற்றில் வழிகாட்டப்பட்டது. மேலும், அவற்றிடம் இருந்து அரசு கருவிகளைக் கொள்முதல் செய்யும் என்றும் உறுதி தரப்பட்டது.

எண்ணி பதினான்கே மாதங்களில் 1942-43 காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மெஷின் கருவிகள் உற்பத்தியில் இந்தியாவில் ஈடுபடத் துவங்கியிருந்தன. இது போர்க்காலத்தில் மட்டுமல்லாமல் அதற்கடுத்த காலத்திலும் இந்திய தொழில் நிறுவனங்கள், தொழில்மயமாக்கலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், போர்க்காலத்தில் அரசு எப்படிப் போக்குவரத்தை முறையாக ஒருங்கிணைத்து அத்தியாவசிய சேவைகள் சென்று சேர்வதை உறுதி செய்தது என்பதும் நம்மை ஈர்க்கிற ஒன்று. பல்வேறு நீர்வழி போக்குவரத்துகள் ஏற்படுத்தப்பட்டன. சாலைகள், தொடர்வண்டிப் பாதைகள் இணைக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை தனியார்வசம் இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசாங்க முயற்சிகள் தனியாரோடு ஒருங்கிணைந்து முனைப்பாகச் செயல்படுவதற்கான வழிகாட்டுதல்கள் இங்கிருந்து பெற இயலும்.

இப்போது உலகப்போரின் எச்சரிக்கையூட்டும் பக்கத்திற்குச் செல்வோம். இரண்டாம் உலகப்போர் காலத்தில் வங்கத்தில் பெரும்பஞ்சம் ஏற்பட்டதைப் பலரும் அறிவோம். அதிகம் அறியப்படாத இன்னொரு பஞ்சம் திருவிதாங்கூர் பகுதியில் ஏற்பட்டது. அன்றும், இன்றும் மக்கள் வெவ்வேறு இடங்களுக்குப் பெருமளவில் இடம்பெயர்கிற சூழலில் நமக்கான படிப்பினைகள் இப்பஞ்சங்களில் பொதிந்து இருக்கின்றன. இந்த இரண்டு பஞ்சங்களிலும் உணவுத் தட்டுப்பாடு என்பது பஞ்சத்திற்கு முதன்மையான காரணம் அல்ல. உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் வகையில் பல்வேறு விநியோக சங்கிலிகள் அறுந்து போயின என்பது உண்மை. ஆனால், அடிப்படையான பிரச்சனை இந்திய ஏழைகளின் வாங்கும் திறன் பெருமளவில் வீழ்ந்தது என்பதிலேயே இருந்தது. அதுவும் போர்க்காலத்தில் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்த பின்னணியில் இதனைப் பொருத்தி பார்க்க வேண்டும்.

நாம் இன்று வேறுபட்ட சூழலில் இருக்கிறோம். உலகப்போர் காலத்தில் மக்களைத்திரட்டிபோர் புரிய முயன்றது அரசு. இப்போது மக்களை வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வைத்து அதன்மூலம் நோய் பரவலை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளால், ஏழைகளின் வாங்கும் திறன் குறைந்திருக்கிறது, குறையும், வங்க, திருவிதாங்கூர் பஞ்சங்களில் இருந்து நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது தான். போர், பேரிடர் காலத்து நடவடிக்கைகள், அணிதிரட்டல்களால் ஏழை எளியவர்களின் வாங்கும் திறன் வீழ்ச்சியடையும். அத்தகைய சூழலில் அவர்களின் வாங்கும் திறனை பேணிப்பாதுகாக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்படவேண்டும். பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் சொல்வதைப் போல அவர்களுக்கு உரிய கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். இவற்றின் மூலமே இந்தப் பேரிடரில் இருந்து பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாமல் நாம் வெளியேற இயலும்.

வரலாற்றாசிரியர் A.J.P. டெய்லர் வரலாற்றில் இருந்து நாம் எப்படிப் புதிதாகத் தவறுகள் செய்யலாம் என்று மட்டுமே கற்றுக்கொள்ள இயலும் என்று சொன்னார். இந்தளவிற்கு வரலாற்றை அவநம்பிக்கையோடு அணுக வேண்டியதில்லை. வரலாற்றில் இருந்து அதுவும் குறிப்பாக இந்தியா வரலாற்றில் இருந்து நல்ல, மோசமான பாடங்களை நாம் கற்றுக்கொள்ள இயலும். இத்தகைய சவாலான காலங்களில் எப்படி அரசின் கொள்கைகள், செயல்முடிவுகள் எச்சரிக்கையாக இருந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாகவும் வரலாறு திகழக்கூடும்.

வரலாற்றாசிரியர் ஸ்ரீநாத் ராகவன் அசோகா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். நேரு காலத்து இந்தியா, வங்கப்போர், இரண்டாம் உலகப்போரின் வரலாறு என அவரின் ஆய்வுகள் பரந்துபட்டவை. இந்த உரை Carnegie Endowment க்காக நிகழ்த்தப்பட்டது.

புகைப்பட நன்றி: தி இந்து

தமிழில்: பூ.கொ.சரவணன்

கொரோனா காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ள…


என்னுடைய ஆசிரியர் மருத்துவர் சி.என்.தெய்வநாயகம் அவர்கள் இல்லையென்கிற எண்ணம் வாட்டுகிறது. அவருடைய வகுப்புகளில் நான் நேரடியாகப் பயிலவில்லை என்றாலும், பயிற்சி மருத்துவர் காலத்திலிருந்து அவரோடு நெருங்கிய தொடர்புண்டு. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவருடைய வீட்டிற்குச் சென்று காரசாரமாக விவாதிப்பது வழக்கம். மதியம் சூடான அறுசுவை உணவு எல்லையற்ற அன்போடு மேடத்தால் பரிமாறப்படுகையில் கதகதப்புக் கவிந்திருப்பதாக உணர்வேன்.

சி.என்.டியிடம் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். கவனம் செலுத்தி படிப்பது, கற்றதை மனங்கொள்ளும் வகையில் கற்பிப்பது, நோயாளிகளை அக்கறையோடு கவனித்துக் கொள்வது, ஆகச்சிறந்த பராமரிப்பைத் தருவது எனப்பல. அவர் தவறெனக் கருதிய அணு ஆயுதம், அதிகார மையங்கள் என அனைத்தையும் தொடர்ந்து எதிர்த்து இயங்கினார். மேலும் உலகச் சுகாதார நிறுவனம் காசநோய்க்கு அறிவுறுத்திய DOT சிகிச்சை முறையையும் எதிர்த்தார். அவரின் இத்தகைய போராட்டங்களில் நானும் தோள் கொடுத்திருக்கிறேன். ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை அருவருப்போடு ஒதுக்கி, அவர்களுக்குச் சிகிச்சை மறுக்கப்பட்ட காலத்தில் அவர்களைக் கவனித்துக்கொள்ளப் பெரும் மையமொன்றை இந்தியாவில் உருவாக்கினார். ஒவ்வொரு ஹெச்ஐவி நோயாளியையும் அரவணைத்து, ஆறுதல்படுத்துவார். அவர் அடிப்படையில் ஹெச்ஐவி நிபுணர் கிடையாது. ஹெச்ஐவியில் தேர்ச்சிமிக்க “சிறப்பு மருத்துவர்கள்” நோயாளிகளை வெறுத்தொதுக்கிய போது, தானே முயன்று ஹெச்ஐவி சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றார். அவர் நோயாளிகளைப் பரிசோதித்து, நோயை அறியும் பாங்கின் கச்சிதத்தை நான் இன்னும் எட்டவில்லை.

நான் திசைமாறி எதைஎதையோ பேசுகிறேன். மிகச்சிறந்த மருத்துவ மாணவராக அவர் எந்தத் துறையை வேண்டுமானாலும் மேற்படிப்புக்குத் தேர்வு செய்திருக்கலாம் (அப்போது பலரும் இருதயவியல் மருத்துவராக முண்டியடித்தார்கள்). ஆனால், இவரோ பல லட்சம் மக்களின் உயிர் குடித்துக்கொண்டிருந்த காசநோயினை எதிர்த்துப் போராட முடிவெடுத்தார். அப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் வண்ணம் நுரையீரல் மருத்துவம் பயின்றார். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் ஆகச்சிறந்த மருத்துவமனைகளுக்கு அவர் பணியாற்றப் போயிருக்கலாம். அவர் இந்தியாவிற்குத் திரும்ப வந்து, அரசு மருத்துவராக இயங்கினார்.

அவருக்கே காசநோய் ஏற்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட முறை காசநோய் சிகிச்சை எடுத்துக்கொள்ள நேர்ந்தது. ஒரு முறை கடுமையான காசநோய் தாக்குதலால் பல மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தார். இப்படி அவருக்குக் காசநோய் வருவதைக் குறித்து அக்கறையோடு உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டினேன். தான் ஒப்புக்கொடுத்துக் கொண்ட சேவையில் இப்படிப்பட்ட ஆபத்துகள் இருக்குமென நன்றாகத்தெரியும் என ஒன்றும் நடக்காததைப் போலப் பேசினார். அவர் இத்தனைக்கும் பிறகும், தன் நோயாளிகளின் மீதான அக்கறையை விடுத்ததே இல்லை. அவர் மீண்டெழுந்து ஏழை காசநோயாளிகள்/ஹெச்ஐவி நோயாளிகளை அதே வேகத்தோடு கவனித்துக்கொண்டார். நோய்த்தொற்றுகள் அவரின் ஊக்கத்தைக் குலைக்க இயலவில்லை.

நான் ஏராளமான இளைய சி.என்.தெய்வநாயகங்களைக் காண்கிறேன். பெரும் தீரம், உத்வேகத்தோடு அவர்கள் கொரோனா வைரஸிற்கு எதிராகப் போராடுகிறார்கள். தங்களிடம் பால் மணம் மாறாத பச்சிளங்குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டுப் பெண் மருத்துவர்கள் இரவு, பகல் பாராமல் உழைக்கிறார்கள். இத்தனை இளைய சி.என்.டிக்களுக்கும் தலைவணங்குகிறேன். நாம் துவளாமல் போராடுவோம். உங்களின் பணியே நம் பெருஞ்சொத்து. இந்த உலகின் அத்தனை புதிய சி.என்.தெய்வநாயகங்களுக்கும் என் மனம்நிறைந்த வாழ்த்துகள். – மருத்துவர். அமலோற்பவநாதன் ஜோசப்

முதன்மைப் பதிவு: https://www.facebook.com/1486394836/posts/10216832061182282/?app=fbl

தமிழில்: பூ.கொ.சரவணன்.

அம்பேத்கரை அறிவோம் : வழக்கறிஞர் அம்பேத்கர்


‘சட்ட மேதை அம்பேத்கர்’, ‘இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை’ என்றும் மெச்சப்படுகிற அண்ணலின் இந்த இரு பட்டங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டிருக்கும் அற்புதம் ஒன்றுள்ளது. அது வழக்கறிஞர் அம்பேத்கர். ரோஹித் தே யேல் பல்கலையில் வரலாற்றுத் துறையில் பணியாற்றுகிறார். அவர் ‘People’s Constitution’ என்கிற தலைப்பில் எளிய மக்கள் எப்படி இந்தியாவின் அரசியலமைப்பை செதுக்கினார்கள் என்கிற நூலை எழுதியுள்ளார். அவரின் தேடலில் அம்பேத்கர் எப்படிப் பிரமிக்க வைக்கும் மனிதம் மிக்க வழக்கறிஞராக ஒளிர்ந்தார் என்பது தெளிவாகிறது.

‘சட்ட பயிற்சியும், பொது வாழ்வும் என் வாழ்வின் இரு மின்னோட்டங்கள். இவற்றில் நேர்திசை/மாறுதிசை மின்னோட்டம் எதில் என் வாழ்க்கை முடியுமா எனத் தெரியவில்லை.’- அம்பேத்கர் ஜலந்தரில் அக்டோபர் 15,1956-ல் ஆற்றிய உரையிலிருந்து…

அம்பேத்கர் வாழ்க்கையில் அவரின் பன்முக ஆளுமை பற்றிப் பலரும் பேசி காணமுடிகிறது. அவரின் அரசியல் செயல்பாடுகள், வரலாறு, சமூகம் குறித்த எழுத்துகள், சட்ட வல்லுநர், இந்திய அரசியலமைப்பு சட்ட மேதை என்றெல்லாம் அப்பட்டியல் நீள்கிறது. ஆனால், வழக்கறிஞராக அவரின் வாழ்வும், பணியும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது.

இத்தனைக்கும் அம்பேத்கர் 1916 சட்டம் படிக்கக் கிரேஸ் இன்னிற்குள் நுழைந்தார். அவருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நின்று போனதால் சட்டப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இந்தியா திரும்பினார். எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, சிடேன்ஹாம் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக வேலை பார்த்தார். வெளியே ட்யூசன் நடத்தி அதில் கிடைத்த பணத்தைச் சேமித்து 1923-ல் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு வழக்கறிஞர் ஆனார்.

நண்பரிடம் கடன்வாங்கிய ஒரு சிறிய இடத்தில் பம்பாயில் தன்னுடைய அலுவலகத்தை அண்ணல் அம்பேத்கர் திறந்தார். அம்பேத்கர் வழக்கறிஞராக நீதிமன்றங்களில் செயல்பட்ட விதத்தால் இருமுறை பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்புகள் வந்தன. அவற்றை அம்பேத்கர் ஏற்கவில்லை. இத்தனைக்கும் அவரின் பொருளாதார நிலைமை சொல்லிக்கொள்ளும்படி இருக்கவில்லை. காந்தி, ஜின்னா, நேருவைப் போல அவருடைய சட்டப்படிப்பிற்கு அவருடைய குடும்பம் செலவு செய்யக்கூடிய நிலையில் இருக்கவில்லை. தானே பொருளீட்டி அதன்மூலம் அவர் வழக்கறிஞர் ஆனார்.

இந்தியாவில் சமூக, அரசியல் தளங்களில் சுதந்திரமாகச் செயல்பட வழக்கறிஞர் தொழிலே உதவுகிறது என்பது அம்பேத்கரின் பார்வை. இதனால் தான் தன்னுடைய விடுதலை உணர்ச்சியை நீதிபதி பதவி மழுங்கடித்துவிடும் என்று கருதி ஹைதராபாத் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகும் வாய்ப்பை ஏறெடுத்தும் அவர் பார்க்கவில்லை.

சட்டம் படிப்பது சவாலாக இருந்தது ஒருபுறம் என்றால், வழக்கறிஞராகக் கோலோச்ச குடும்ப, சமூகத் தொடர்புகள் தேவைப்பட்டன. காந்திக்கு அவருடைய சமூக உறவுகள் வழக்கறிஞர் தொழிலில் கால் ஊன்ற உதவின. மோதிலால் நேரு தன்னுடைய அண்ணனின் வழக்கறிஞர் தொழிலில் இணைந்து கொண்டார். அம்பேத்கருக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வாதியாக இருப்பதே வருமானம் அதிகமாகத் தரும் என்கிற சூழலில் தொடர்புகள் இல்லாததால் பிரதிவாதியின் வழக்கறிஞராக இருக்கிற முடிவையே அம்பேத்கர் எடுத்தார்.

அவரின் சட்டப் பயிற்சிக்கான முக்கியமான காரணம் அது சமூகச் சேவையில் ஈடுபடத் தடையாகாது என்பதோடு, பிற பணிகளில் ஈடுபடப் போதுமான நேரத்தை வழங்கும் என்பதும் காரணமாக இருந்தது. அம்பேத்கர் எந்தளவிற்குப் போராட வேண்டியிருந்தது என்பதை ஜனவரி 9, 1929-ல் வெளிவந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்திக்குறிப்பு வெளிப்படுத்துகிறது. ஜின்னா 2.5 லட்சம் மதிப்புள்ள திவால் நோட்டீஸ் வழக்கில் ஆஜரானார். அம்பேத்கரோ 24 ரூபாயை தராமல் ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமியர் ஒருவருக்காக வாதாடினார். அம்பேத்கர் அரசியல் களத்திலும் இயங்குகிற ஒருவராக இருந்ததோடு, வழக்கறிஞர் தொழிலை வருமானம் ஈட்டுகிற மூலமாக அவர் பார்க்காதது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக, அம்பேத்கர் சமூக உரிமைகளுக்காக நீதிமன்றங்களில் வாதாடிய முன்னோடியாகத் திகழ்கிறார். அந்த நினைவு கூர்ந்தே ஆகவேண்டிய பயணத்தில் நடைபோடுவோம்.

அம்பேத்கர் பங்குபெற்ற பெரிய குற்றவியல் வழக்கு என்றால் பிலிப் ஸ்ப்ராட் எனும் கம்யூனிச தலைவர் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் தொடுத்த தேசத்துரோக வழக்கை சொல்லலாம். இந்த வழக்கில் அம்பேத்கர் ஜுனியராகப் பங்குகொண்டார். ஸ்ப்ராட் ‘இந்தியாவும், சீனாவும்’ என்கிற படைப்பில் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராகச் சீனர்களைப் போல ஆயுதமேந்தி இந்தியர்கள் போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து இருந்தார். திலகர், அன்னி பெசன்ட் முதலியோரின் மீது கடந்த காலத்தில் தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்குகளை மேற்கோள் காட்டி அரசாங்கத்திற்கு எதிரான வெறுப்பை வளர்க்கவில்லை, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மட்டுமே அவர் எழுதினார் என்கிற வாதம் முன்வைக்கப்பட்டது.

தன்னை ஐரோப்பியர்கள் இருக்கும் ஜுரி முன்பு நிறுத்த வேண்டாம் என்று ஸ்ப்ராட் வாதிட்டார். அம்பேத்கர், ஜின்னா உள்ளிட்டோரின் உழைப்பால் அவர் விடுதலையானார். தேசியவாதிகளைக் கடுமையாக விமர்சித்த ஸ்ப்ராட்டின் விடுதலையைக் கொண்டாடிய விழாவிற்குத் தலைமை தாங்கியவர் சரோஜினி நாயுடு. இடதுசாரிகளோடு பல வேளைகளில் முரண்பட்ட அம்பேத்கரும், தேசியவாதியான சரோஜினி நாயுடுவும் தேசியவாதிகளைக் குத்திக் கிழித்த இடதுசாரியான ஸ்ப்ராட்டிற்கு ஆதரவாக ஏன் அப்படி நடந்து கொண்டார்கள்? அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான எதிராளியின் உரிமையைக் காப்பதன் அவசியத்தை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

அம்பேத்கர் இடதுசாரிகளை அவர்களிடையே நிலவும் உயர்சாதி ஆதிக்கம், வன்முறை ஆதரவு ஆகியவற்றுக்காக விமர்சித்தாலும் தொழிலாளர் யூனியன்களோடு பல்வேறு தருணங்களில் இணைந்து இயங்கினார். தொழிலாளர் தலைவர்கள்,தொண்டர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில் அம்பேத்கர் முதல் ஆளாக நின்று வாதாடினார். V.B. கர்னிக் , மணிபென் கரா, B.T.ரணதிவே, அப்துல் மஜித் முதலிய கம்யூனிச தலைவர்கள் ஆலைத் தொழிலாளர்களைப் போராட்டம் செய்யத் தூண்டிவிட்டதாகவும், அது சமூகத்திற்குக் கேடாக முடிந்ததாகவும் வழக்குப் பிரிட்டிஷ் அரசால் தொடரப்பட்டு இருந்தது.

அம்பேத்கர் வழக்கில் கம்யூனிச தோழர்களுக்காக வாதாடினார். குறுக்கு விசாரணையின் உச்சம் என்கிற அளவுக்கு அரசுத்தரப்பை தன்னுடைய கூர்மையான கேள்விகளால் அண்ணல் துளைத்து எடுத்தார். மிகவும் மெனக்கெட்டு அரசு தயாரித்து இருந்த சாட்சிகள் அம்பேத்கரின் வினாக்கள், துல்லியமான தாக்குதல்கள் முன்பு சரிந்து விழுந்தன. இந்தப் போராட்டங்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தின என்கிற முதலாளிகளின் வாதத்தை அவர்களின் வாயாலேயே பொய்யென்று அம்பேத்கர் நிறுவிய மேதைமையைப் பத்திரிகைகள் சிலாகித்து எழுதின.

இதோடு நில்லாமல், சத்தியாகிரகிகளுக்காகவும் அம்பேத்கர் வாதாடி வென்றார். சிர்னார் வனப்பகுதியில் சத்தியாகிரகிகள் போராட திரண்டார்கள். காவல்துறை கண்மூடித்தனமாகத் துப்பாக்கி சூட்டை நடத்தியது. இதனை அடுத்து மூண்ட கலவரத்தில் நான்கு அரசு அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள். நாற்பத்தி ஏழு பேர் மீது கொள்ளை, கொலை, சட்டத்துக்குப் புறம்பாகக் கூடியது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் படித்தது. அம்பேத்கர் அரசுத்தரப்பை கதிகலங்க வைத்தார் என்றால் மிகையில்லை. அரசாங்கத்தின் அடக்குமுறையை அம்பலப்படுத்தினார். காவல்துறையின் வன்முறையை ஆதாரங்களோடு நிறுவினார். ஆயிரக்கணக்கான பேர் சேர்ந்து தீட்டிய சதித்திட்டம் என்கிற அரசாங்க வாதம் எவ்வளவு நகைப்புக்குரிய ஒன்று என்பதைத் தன்னுடைய வாதத்திறமையால் நிறுவினார். அரசியல்ரீதியாக முரண்பட்ட இருதரப்பின் சமூக உரிமைகளுக்காகச் சளைக்காமல் அவர் சமராடினார் என்பதே நெகிழ வைக்கிறது.

கேசவ் ஜெத்தே என்பவர் பிராமணிய அடிமைச்சிந்தனைகளைத் தூக்கிப்பிடித்த திலகர், சிபுலுங்கர் முதலிய தலைவர்களை “Deshache Dushman” நூலில் தேசத்தின் எதிரிகள், கழுதைகளின் பிள்ளைகள் என்றெல்லாம் தாக்கி எழுதினார். இந்நூல் தடை செய்யப்பட்டதோடு, ஒரு பிராமணர் அவதூறு வழக்கினை தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜரான அம்பேத்கர் அவதூறு வழக்கை இறுக்கமாகப் பொருள் கொள்ள வேண்டும் என்று வாதிட்டார். அவதூறு செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் திலகர் உள்ளிட்ட யாரும் உயிரோடு இல்லை. மேலும், அவதூறு செய்யப்பட்டவர்களோ அவர்களோடு தொடர்புடையவர்கள் மட்டுமே வழக்கைத் தொடர முடியும் என்பதால் இந்த வழக்கில் தண்டனை வழங்க முடியாது என்று சாமர்த்தியமாக வாதிட்டார். வழக்கு பிசுபிசுத்துப் போனது.

மகளிர் நலம், முன்னேற்றம் சார்ந்து இயங்கிய கார்வே மீது ஆபாசத்தைப் பரப்பியதாக வழக்குப் போடப்பட்டது. காரணம் இதுதான் : அவர் குடும்பக் கட்டுப்பாடு, பாலியல் நலம் குறித்த பரப்புரை நூல்களைப் பதிப்பித்தார். இந்த வழக்கில் அம்பேத்கர் மீண்டும் காலனிய சட்டத்தை இறுக்கமாகவே பொருள்கொள்ள வேண்டும் என்கிற வாதத்தை முன்வைத்தார். ஆபாச எழுத்து என்பது மலினமானவர்களின் மனதை களங்கப்படுத்தக்கூடிய படைப்பையே குறிக்கும். இந்த நூல் பொதுப் புழக்கதிற்கான ஒன்று கிடையாது. ஆகவே,. இது ஆபாசம் இல்லை என்று அம்பேத்கர் வாதாடினார். நீதிமன்றம் அதனை ஏற்க மறுத்தது. இந்த வழக்கிற்குப் பின் குடும்பக் கட்டுப்பாட்டைச் செயல்படுத்த வேண்டும் என்றொரு மசோதாவை அம்பேத்கரின் கட்சி பம்பாய் சட்டமன்றத்தில் முன்மொழிந்தது.

பேராசிரியர் அனுபமா ராவ் பார்வையில் அம்பேத்கர் சமூக உரிமைகளைக் குறித்த நவீன கருத்தாக்கத்தை நீதிமன்றங்களில் முன்னெடுத்து அதன்மூலம் மதத்தை ஜனநாயகப்படுத்த முயன்றதோடு, பழமைவாதம், அடையாளத்தில் ஊறிப்போயிருந்த காலனிய ஆட்சிக்கும் சவால் விட்டார். சௌதார் குளத்தைத் தலித்துகள் பயன்படுத்த சட்டப்போராட்டத்தை முன்னெடுத்த போது அது பொதுச்சொத்து என்பதை முதலில் நிறுவினார். அதன்பின்னர், இஸ்லாமிய கசாப்புக் கடைக்காரர் அக்குளத்தைக் காலங்காலமாகப் பயன்படுத்தி வருவதை ஆதாரத்தோடு நிறுவினார். இதன்மூலம், மாமிசம் உண்பவர்கள் அசுத்தமானவர்கள் அதனால் அனுமதிக்கவில்லை என்கிற உயர்சாதியினரின் ‘தூய்மைவாத’த்தை அம்பேத்கர் தவிடுபொடியாக்கினார். பொதுச் சொத்து என்கிற வாதத்தின் மூலம் தலித்துகளுக்கும் சட்ட உரிமை உண்டு என்பதை நீதிமன்றம் தீர்ப்பாக எழுத அம்பேத்கர் அவ்வழக்கில் அடிகோலினார்.

தனிமனித உரிமைகளைப் பெரும்பான்மையின் ஆதிக்க மனப்பான்மையிடமிருந்து காக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு காங்கிரஸ் அரசு பம்பாயில் முப்பதுகளில் கொண்டு வந்திருந்த மதுவிலக்குச் சட்டத்திற்கு எதிராகப் போராடினார். ஒரு கிறிஸ்துவரை மது புட்டியோடு பிடித்துச் சிறையில் தள்ளிய வழக்கில் அச்சட்டமே திரும்பப் பெறப்பட்ட பிறகும் வழக்கு தொடுத்து தனி மனிதர்களைத் தொல்லைப்படுத்துகிற அநீதியை தோலுரித்துக் காட்டினார். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் சுதந்திரமான போக்குக் கொண்டவர்கள் என்கிற பார்வையோடு விடுதலைக்கு முன்பே நீதிமன்றத்தில் அண்ணல் வாதாடினார் என்பது பிரமிக்க வைக்கிறது.

அம்பேத்கர் ஏழை, எளியவர்களுக்காகத் தொடர்ந்து வழக்கறிஞராகப் பணியாற்றினார். கட்டணமே வாங்கிக்கொள்ளாமல் பல ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயத்தை நீதிமன்றங்களில் எதிரொலித்தார். தொழிலாளர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தருவதற்காகப் பல வழக்குகளில் அவர் நீதிமன்ற படியேறினார். ரயில்வே தொழிலாளர்களின் உரிமைகளுக்காகச் சட்டப்போராட்டங்களை நிகழ்த்தினார். பல்வேறு தூக்குத் தண்டனை கைதிகளின் வழக்குகளில் தானே முன்வந்து வாதாடினார். இவர்களில் பெரும்பான்மையானோர் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டால் அவ்வழக்குகள் நேரடியாக உயர்நீதிமன்றம் வரை போகும் என்றாலும் வாதாட வழக்கறிஞர்கள் இல்லாமல் திணறுவார்கள். அவர்களைக் காக்கும் மீட்பராக அம்பேத்கர் தானே முன்வந்து வழக்குகளை எடுத்து நடத்தினார்.

மிகச் சொற்பமான கட்டணமோ, அல்லது இலவசமாகவோ வழக்குகளை எளியவர்களுக்காக அம்பேத்கர் தொடர்ந்து நடத்தினார். அவரைப் பார்க்க வரும் ஏழை, எளியவர்களுக்குத் தன்னுடைய அறையில் தங்க வைத்து, உணவளித்து அரவணைக்கும் பெருமனதும் அண்ணலுக்கு இருந்தது. அவரின் இத்தகைய அறவுணர்வும், தயாள மனமும் துலா பீமாண்ணா வாக் பனவாலையே மற்றும் வக்கீல் டாக்டர் ஜலி முதலிய மராத்திய நாட்டுப்புற பாடல்களில் இன்றும் போற்றப்படுகின்றன. ‘ஏழைகளின் வக்கீல்’ என்று அம்பேத்கர் நினைவுகூரப்படுகிறார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போராட்டக்காரர்கள், எளிய மக்களைக் காக்கும் பொருட்டுச் சட்டங்களை இறுக்கமாகப் பொருள் கொள்ள வேண்டும் என்று வாதிட்டார் அம்பேத்கர். விடுதலைக்குப் பிறகு அரசியலமைப்புச் சட்டத்தை விரித்துப் பொருள் கொண்டு மக்களின் சுதந்திரம், சமத்துவத்தைக் காக்க வேண்டும் என்று வாதிட்டார். காமேஷ்வர் சிங் வழக்கில் ‘அரசியலமைப்பின் ஆன்மாவை’ காக்கும் வகையில் சட்டத்தினைப் பொருள் கொள்ள வேண்டும் என்று அம்பேத்கர் கருத்துரைத்தார். இக்கருத்தினை வந்தடைய நீதிமன்றங்களுக்கு இருபது ஆண்டுகளுக்கு மேலானது.

அம்பேத்கரின் வழக்கறிஞர் பரிமாணம் ஏன் இருட்டிலேயே இருந்தது அல்லது ஏன் மறக்கப்பட்டது என்பது சிந்தனைக்குரியது. அம்பேத்கர் பம்பாய் சட்டக்கல்லூரியில் பேராசிரியராக, முதல்வராகப் பணியாற்றினார். சித்தாத் கல்லூரியை நிறுவி பல முதல் தலைமுறை தலித் வழக்கறிஞர்களை உருவாக்கினார். சமூக, அரசியல் நீதியில் தண்ணி தோய்த்துக் கொண்ட ஒரு வழக்கறிஞர் அர்ப்பணிப்புணர்வோடு சமூக நீதி நாடி இயங்குவது சட்ட அறிவின் பரப்பினை விரிவாக்கிக் கொண்டே போகும் என்பதற்கு அம்பேத்கரின் வாழ்வு உன்னதமான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று ரோகித் தே தன்னுடைய ஆய்வுக்கட்டுரையை முடிக்கிறார். வழக்கறிஞர் அம்பேத்கரினை தொடர்ந்து நினைவுக்கூர்வோமாக.

முழு கட்டுரை இங்கே: https://www.academia.edu/34592004/Lawyering_as_Politics_The_Legal_Practice_of_Dr._Ambedkar_Bar-at-Law

கட்டுரையாசிரியர்: ரோஹித் தே.

கட்டுரைச் சுருக்கம் தமிழில் : பூ.கொ.சரவணன்

அம்பேத்கரின் கீதை


அம்பேத்கரின் கீதை

பேராசிரியர் மீரா நந்தா எழுதிய ‘அம்பேத்கரின் கீதை’ எனும் கட்டுரையின் சாரம் இங்கே தரப்படுகிறது. கீதை, பிராமணிய தத்துவ மரபுகள் குறித்து ஆழமான பார்வைகளை மீரா நந்தா முன்வைக்கிறார். நான் அம்பேத்கர் கீதையை அணுகிய விதத்தை மையப்படுத்தும் பகுதிகளை மைய இழையாகக் கொண்டு இந்த அறிமுகத்தை எழுதுகிறேன். முழுமையான கட்டுரையை வேண்டுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்:

பிரதமர் மோடி உலகத் தலைவர்களுக்குப் பகவத் கீதையைப் பரிசளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அப்போதைய அயலுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ் இந்தியாவின் அடையாளமாக அப்புனித நூல் உயர்ந்து விட்டதைக் காட்டுகிறது என்கிற ரீதியில் பேசினார் . வெவ்வேறு மத மற்றும் அரசியல் தலைவர்கள் இந்தியாவின் தேசிய நூலாக (ராஷ்ட்ரிய கிரந்தமாக) பகவத் கீதையை அறிவிக்க வேண்டும் என்று கோரினார்கள். கீதையை அரசு நடத்தும் பள்ளிகளில் பாட நூலாக வைக்க வேண்டுமென்றும் குரல்கள் எழுகின்றன. இந்தியா மதச்சார்பற்ற நாடு அல்லவா என்கிற எதிர்ப்புகளைச் சமாளிக்க, இஸ்லாமியர்கள்,கிறிஸ்துவர்கள், இறை மறுப்பாளர்கள் ஆகியோரும் பின்பற்றக் கூடிய தத்துவ வெளிச்சங்கள், மானுட விழுமியங்கள் அந்நூலில் உண்டு என்றும் இந்துத்துவத் தலைவர்கள் பேசுகிறார்கள்.

இளவயதினருக்கு அறநெறியை போதிக்கக் கீதை உகந்த நூலா? இந்தியா அதிகாரப்பூர்வமாகப் பின்பற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் சுதந்திரவாத, ஜனநாயக பண்புகள் இதில் இருக்கிறதா? இந்தியாவிற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம், பகவத் கீதை என்று இரு தேசிய நூல்கள் இருக்க முடியுமா? இந்தக் குழப்பத்தில் இருந்து தெளிவு பெற அம்பேத்கரை விட ஆகச்சிறந்த வழிகாட்டி யார் உள்ளார்? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஆக்கிய வரைவுக் குழுவின் தலைவராக மட்டுமல்லாமல், இந்து மதத்தை உதறித்தள்ளிய ‘தீண்டப்படாதவர்’ என்கிற வகையில் அம்பேத்கரின் கீதை குறித்த பார்வை முக்கியமானது.

எப்படி அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தை எழுதிய தாமஸ் ஜெபர்சன் பைபிளில் உள்ள நம்ப முடியாத அற்புதங்களை எல்லாம் வெட்டித் தள்ளினாரோ அதே போல அண்ணல் அம்பேத்கர் கீதையை எப்படி அணுகினார் என்று அறிந்து கொள்வது அவசியமாகிறது. அண்ணல் அம்பேத்கர் புத்தர், ஜான் டூயி ஆகியோரை நேசித்தார். அயராமல் சாதியை அழித்தொழிக்கத் தன்னை ஒப்புக்கொடுத்து கொண்டவர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களுள் ஒருவர். இத்தகைய மாண்புமிக்க அம்பேத்கர் கீதையை எப்படிப் பகுப்பாய்வு செய்திருப்பார். அம்பேத்கரின் கீதை எப்படி இருக்கும்?

அம்பேத்கர் கீதையைப் பற்றித் தனியாக எந்த நூலையும் எழுதவில்லை. திலகர், அரவிந்தர், காந்தி உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள் கீதைக்கு உரை எழுதினாலும் அம்பேத்கர் அப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபடவில்லை. அவர் கீதை குறித்து என்ன எண்ணினார் என்பதைப்பற்றி ஆங்காங்கே காணக் கிடைக்கிறது. மேலும், மதங்கள் கண்மூடித்தனமாக நம்பச்சொல்பவை எப்படிச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைக் குறித்து அவர் ஆழமாகச் சிந்தித்தார். இவற்றைப் பகுத்தறிவை கொண்டு கூராய்வு செய்ய வேண்டும் என்கிற அம்பேத்கரின் அணுகுமுறை எந்தப் புனித நூலையும் காண்பதற்கான தெளிவான கண்ணாடி.

அம்பேத்கரின் தேடலை ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம் – நீதி. எல்லாவகையான இறை அடிப்படையிலான அதிகாரமுறைகளும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு, நீதி எனும் உரைகல்லில் அவற்றை உரசிப்பார்க்க வேண்டும் என்று அம்பேத்கர் கருதினார். அவரின் ‘இந்து மதத்தின் தத்துவ’த்தில் தெளிவுபடுத்துவதைப் போல , இந்த நவீன உலகத்தில் எந்த மதத்தின் அறம் , நியாயம் குறித்த விழுமியங்களை நீதியின் தராசில் நிறுத்திப் பார்க்க வேண்டும். அம்பேத்கரை பொறுத்தவரை நீதி என்பதற்குள் சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் பிணைந்திருக்கிறது. ‘ஒரு தனிமனிதனுக்கு நீதி வழங்காத ஒன்று சமூகத்திற்குப் பயன்மிக்கதாக இருக்க முடியாது ’ என்கிற அவரின் நீதி குறித்த அளவுகோல், சமூக இணக்கத்தைக் காப்பாற்றுவதால் வர்ணாசிரம முறை தேவை என்கிற பலரின் பார்வையைத் தூக்கி தூர எறிகிறது. அம்பேத்கரின் அறிவு வெளிச்சத்தில் கீதையை அணுகுவது அவசியமாகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு நூலை நவீன காலத்தின் அளவுகோல்களைக் கொண்டு அளவிடுவது அநியாயமாகத் தோன்றலாம். இந்தக் காலத்திற்கும் பொருந்தும் கருத்துகள் அதில் இருப்பதால் அதனைப் பாட நூலாகப் படிக்கலாம் என்கிற பார்வையை வேறெப்படி எதிர்கொள்ள முடியும்? கீதையில் சோசியலிசம், முதலாளித்துவ மேலாண்மை, அகிம்சை, அணு குண்டு என்று எல்லாமும் பொதிந்து இருக்கிறது என்றெல்லாம் கீதையின் மீது ஏற்றப்பட்டிருப்பவற்றைப் படிப்படியாகத் தோலுரிக்க இந்த அணுகுமுறை உதவும். இந்து மத நூல்களுக்கும், சாதிக்கும் தொடர்பே இல்லை என்று அமெரிக்கப் பாட நூல்களை மாற்றி எழுதும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் காலத்தில் இத்தகைய கூர்மையான தேடல் தவிர்க்க முடியாத ஒன்று.

‘சாதியை அழித்தொழிக்கும் வழி’ நூலில் நால்வர்ண முறையானது பிளாட்டோவின் கருத்தாக்கத்துக்கு வெகு நெருக்கமானதாக இருக்கிறது என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார்:

‘பிளாட்டோவை பொறுத்தவரை இயற்கையாகவே மனிதர்கள் மூன்று வகுப்புகளில் அடங்குவர். சில தனிநபர்களை வெறும் வெட்கைகளே செலுத்தியதாகப் பிளாட்டோ கருதினார். அவர்கள் உழைக்கும், வர்த்தம் செய்யும் வர்க்கங்கள் என்று வகைப்படுத்தினார். பிறர்…தீரமிகுந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களே போர்களில் இருந்து காப்பவர்களாக, நாட்டில் அமைதியை நிலைநாட்டுபவர்களாகப் பிளாட்டோ அடையாளப்படுத்தினார். உலகத்து விஷயங்களுக்குப் பின்னுள்ள அடிப்படைக் காரணங்களை உள்வாங்கிக் கொள்ளும் வேறு சிலருக்கு இருந்தது. இவர்களை மக்களுக்கு நீதிபரிபாலனம் புரிகிறவர்கள் என்று பிளாட்டோ அறிவித்தார்.’

இயற்கையாகவே என்கிற பதம் கருத்தில் நிறுத்த வேண்டிய குறிச்சொல். சிந்தனையாளர் கண்டோர்செட் வார்த்தைகளில் சொல்வது என்றால், கீதையும், பிளாட்டோவும், ‘அரசியல் ஏற்றத்தாழ்வு எனும் குற்றத்தை புரிகையில் இயற்கையைத் தங்களுடைய கூட்டாளி ஆக்கிக்கொள்கிறார்கள்.’ இந்த ஏற்றத்தாழ்வுகளை இயற்கையானவை என்று நிறுவ பிளாட்டோவும், பகவான் கிருஷ்ணனும் “கண்ணியமான பொய்” ஒன்று அவிழ்த்து விடுகிறார்கள். பிளாட்டோ உலோகங்களைக் கொண்டு கதை அளக்கிறார். கிருஷ்ணர் குணம், கர்மா, மறுபிறப்பு கருதுகோளுக்குத் தன்னுடைய ஆசிகளை வழங்குகிறார். அதென்ன பிளாட்டோவின் பொய்?

சாக்ரடீஸ் மனித ஆன்மா மூன்று பகுதிகளைக் கொண்டது என்றார். உணவுக்கும், காமத்துக்கும் அலைந்து திரியும் கீழான வேட்கைகள் கொண்டு திரியும் பகுதி ஒன்று என்றால் மதிப்பும், அதிகாரமும் நாடும் பகுதி மற்றொன்று. இவற்றுக்கு அடுத்தபடியாக அறிவை நாடும் ‘தத்துவ அரசர்கள்’ மூன்றாவது பகுதி. வேட்கை மிக்கவர்கள் மன்னர்கள் ஆகிவிடக் கூடாது என்பதற்காகக் கல்வியறிவு பிறப்போடு தொடர்புடைய ஒன்று எனச் சாக்ரடீஸ் வரையறுக்கிறார். இதனை எப்படி உழைப்பவர்களை நம்ப வைப்பது? அவர்கள் தங்கள் வகுப்புகளைத் தாண்டி வேறெங்கும் திருமண உறவு கொள்ளாமல் எப்படித் தடுப்பது. பிளாட்டோ தன்னுடைய ‘கண்ணியமான பொய்யை’ இங்குத் தான் சொல்கிறார். இறைவன் எல்லாப் பிள்ளைகளையும் ஒரே மண்ணில் இருந்தே படைத்தார். என்ன சிலரை தங்கத்தைக் கலந்தும், சிலரை இரும்பு, சிலரை பித்தளை கலந்தும் படைத்து விட்டார். ஒவ்வொருவரும் இறைவனின் படைப்பு என்றாலும், பரிசுத்தமான உலோகங்களினால் ஆனவர்கள் உயர்குடியில் பிறப்பார்கள், அவர்களே ஆளவேண்டும் என்றது அந்தப் பொய். கடவுள், உங்கள் வாழ்க்கை நிலைக்கு நீங்கள் எப்படிப்பட்ட பண்பு கொண்டவராக இருக்க வேண்டும் என்று படைத்தாரோ அப்படி மட்டும்தான் இருக்க இயலும்.

அப்படியே பிளாட்டோவின் மூன்று உலோகங்கள் கதைக்குப் பதிலாகக் கீதையின் மூன்று குணங்கள் என்பதைப் போடுங்கள். இறைவன் உலோகத்தைக் கலக்கிற கதைக்குப் பதிலாகக் கர்மா, மறுபிறப்பு எனும் ‘இயற்கையான’ நிகழ்வுகளை நிரப்பிக் கொள்ளுங்கள். இது தான் கீதை கட்டவிழ்த்து விடும் ‘கண்ணியமான பொய்’. தன்னுடைய பொய்யை யாராவது நம்புவார்களா என்று பிளாட்டோ வெளிப்படையாகக் கவலைப்பட்டார். பகவத் கீதையைக் கிருஷ்ணர் தானே படைத்ததாக அறிவிக்கிறார். பிளாட்டோவின் சிந்தனை செயல்பாட்டிற்கு வரவில்லை, ஆனால், கீதையின் சாரம் இன்றும் பொதுப் புத்தியில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.

அம்பேத்கரின் நிறைவடையாத ‘புரட்சி மற்றும் எதிர்ப்புரட்சி’யில் ‘கீதை ஒரு மத நூல் அல்ல. அது தத்துவ விசாரணையிலும் ஈடுபடவில்லை. மதத்தின் கண்மூடித்தனமான நம்பிக்கைகளைத் தத்துவ அடிப்படைகளைக் கொண்டு நியாயப்படுத்தவே அது முயல்கிறது’ என்கிறார். நால்வர்ண படிநிலை என்கிற அடக்குமுறை அடுக்குநிலையை மூன்று குணங்கள் என்கிற தத்துவ அடிப்படைகளைக் கொண்டு காப்பாற்ற முயல்வது அம்பேத்கரை கவலை கொள்ள வைத்தது.

கீதை ஒரு வர்ணத்தில் பிறந்தவர் தனக்கு விதிக்கப்பட்ட தொழிலை செய்வதற்கு எந்த நியாயமும் இல்லை என்றாலும் அதனைச் செய்தே ஆகவேண்டும் என்கிறது. பிறரின் தொழிலை புரிய முயல்வதைவிட அதுவே மேம்பட்டது என்கிறது. எவ்வளவு மோசமான தொழிலாக இருந்தாலும் தன்னுடைய பிறப்பிற்கு விதிக்கப்பட்ட தொழிலை ஒருவர் செய்வதால் எந்தப் பாவமும் அவரை அண்டுவதில்லை என்கிறது கீதை. உயரிய குணங்களைப் பிராமணர்களுக்கு என்றும், அஞ்சாமல் போரிடும் பண்பு சத்திரியர்களுக்கு உரியது என்றும் கூறிவிட்டு, வர்த்தகத்தில் ஈடுபடுவது வைசியர்களின் பணி, எல்லாருக்கும் ஊழியம் செய்வது சூத்திரர்களின் அடிப்படை பண்பு என்று சொல்லிச் செல்கிறது.

அம்பேத்கர் தன்னுடைய ‘இந்து மதத்தின் தத்துவ’ த்தில் மனுஸ்மிருதியை யாரும் படிப்பதில்லை, அதை யாரும் தூக்கிப்பிடிப்பதில்லை என்று கருதுபவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறார். அனைவரும் படித்து, பின்பற்றும் பகவத் கீதை ‘மனுஸ்மிருதியின் மறுவடிவம்’ மட்டுமே. வேதம், மனுஸ்மிருதி, கீதை மூன்றும் ஒரே மாதிரி நெய்யப்பட்டு இருக்கிறது. அவற்றை ஒரே இழை இணைப்பதோடு, அவை ஒரே துணியைக் கொண்டு நெய்யப்பட்டிருக்கின்றன என்கிறார் அம்பேத்கர்.

உன் வர்ணத்துக்கு விதிக்கப்பட்ட செயலானது நியாயமற்றது என்றாலும் அதனைச் செய்தே ஆகவேண்டும் என்கிற கீதையின் கருத்து அப்படியே மனுஸ்மிருதியிலும் காணப்படுகிறது. ஒன்று இன்னொன்றை சார்ந்தே வாழ்கிறது என்கிற அளவுக்கு அவற்றின் கருத்துகள் தொடர்புடையவையாக உள்ளன. கீதையின் ‘கண்ணியமான பொய்யை’ நோக்கி தன்னுடைய கவனத்தைத் திருப்புகிறார் அம்பேத்கர். துளி கூட நியாயமற்ற ஒரு செயலை தன்னுடைய வர்ணத்திற்கு விதிக்கப்பட்ட ஒன்று என்பதற்காக ஒருவன் செய்தால் மட்டுமே அவன் மோட்சம் அடைவான் என்று ஏன் கீதை சொல்கிறது என்று கேள்வி எழுப்புகிறார். ஒருவன் தன்னைக் கிருஷ்ணரின் மீதான பக்தியில் தோய்த்துக் கொண்டால் அவனுக்கு மோட்சம் கிட்டாது. இத்தனைக்கும் ‘எல்லா உயிர்களும் நானே, அன்பில் திளைத்த பக்தியோடு என்னோடு கலப்பவர்களில் நானும், என்னில் அவர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்’ என்று கண்ணன் கீதையில் சொல்கிறாரே? பின் ஏன் கிருஷ்ணர் ‘ஒரு சூத்திரன் எவ்வளவு சிறந்தவனாக இருந்தாலும், தன்னுடைய வர்ணாசிரம கடமையை மீறி, உயர் வர்ணத்தினருக்கு அடிமை வேலைகளைச் செய்து வரத் தவறினால் அவனுக்கு மோட்சம் இல்லை” என்கிறார்? என்று ‘கிருஷ்ணனும், கீதையும்’ என்கிற தன்னுடைய படைப்பில் அம்பேத்கர் கேட்கிறார்.

‘நானே நான்கு வர்ணங்களையும் குணம், கர்மாவோடு படைத்தேன். நானே அவற்றைக் கொண்டு செயல் நிகழ்த்துபவன். எனினும்,மாற்றமில்லாத நான் எதையும் செய்யாமல் வாளாயிருக்கிறேன். ‘ என்று கீதையில் கிருஷ்ணன் சொல்கிறார். கீதையைத் தாங்கிப் பிடிப்பவர்கள் இந்தக் குணம் என்பதைப் பண்புநலன்கள் என்றும், கர்மா என்பதை உங்கள் செயல்கள் என்றும் திரித்துப் பொருள் கொண்டார்கள். கீதையிலோ பிற புனித நூல்களிலோ சாதி என்கிற சொல்லே காணப்படவில்லை, வர்ணம் மட்டும் இருப்பதால் காந்தி முதலியோர் ‘சாதிக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பில்லை’ என்று ஒரே போடாகப் போட்டார்கள். ஒரு காலத்தில் எல்லா வர்ணங்களும் நன்மை பயப்பதாக, நியாயமானதாக, சமமிக்கதாக இருந்தது, அப்படி விதிக்கப்பட்டவற்றை உளமார செய்வது இறைவன் முன்பு சம மதிப்பை வழங்கும். ஒரு காலத்தில் மனிதர்களிடையேயும் அவை அனைத்தும் சமமாக மதிக்கப்பட்டன என்றெல்லாம் காந்தி கருதினார்.

அதாவது, கீதையை ஒழுங்காகப் படித்தால் யாரும் பிறப்பால் பிராமணர், சூத்திரர் கிடையாது,. அவர்களின் குணங்களும், செயல்களுமே அவர்களை வெவ்வேறு வர்ணங்களைச் சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்தின. உண்மையான வர்ணாசிரம முறையில் எல்லா வர்ணங்களும் சமமான மதிப்பும், இடமும் பெற்றிருந்தன என்றும் இவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறார்கள். இன்னமும் எளிமையாகச் சொல்வது என்றால், கீதையில் தகுதியின் அடிப்படையிலேயே வர்ணங்கள் அமைக்கப்பட்டன. காலப்போக்கில் அவை இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், ஆங்கிலேயர்கள், மேற்கத்திய நவீனத்துவத்தைப் பின்பற்றியவர்கள் செய்த குழப்பங்களால் தான் இன்றைக்கு இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இவையெல்லாம் கீதையை ஒழுங்காகப் படிக்காமல், அல்லது வசதிக்கு ஏற்ப பொருள் கொள்வதால் நிகழ்கிற குழப்பங்கள் அன்றி வேறொன்றுமில்லை. கீதை மீண்டும், மீண்டும் ஆன்மாவை தவிர மற்ற அனைத்தும் மூன்று குணங்களால் ஆனது என்று வலியுறுத்துகிறது. குணங்களே எல்லா வேலையையும் செய்யும், மனிதன் அதன்முன்பு சக்தியற்றவன் என்றே கீதை கற்பிக்கிறது. அர்ஜுனனின் குணம் அவனைப் போரிட வைக்கும் என்று அது அறிவிக்கிறது.

கீதையின் இறுதி அத்தியாயத்தில் மூன்று குணங்கள் எல்லா மனிதர்களிடம் காணப்பட்டாலும் குறிப்பிட்ட குணம் அதீதமாகக் காணப்படுவதைக் கொண்டு மனிதர்களைக் கிருஷ்ணன் வகைப்படுத்துகிறார். உயர்ந்த சத்வ குணம் கொண்ட பிராமணர்கள் அறிவை நாடி இயங்குவர், ரஜோகுணம் கொண்டவர்கள் அதிகார வேட்கைமிக்கச் சத்திரியர்கள், தாமச குணங்கள் ஓரளவிற்கு இருப்பவர்கள் இழிவான தொழில்களைச் செய்யும் நிலைக்கு உழைப்பவர்களைத் தள்ளுகிறது, தாமச குணம் மிகுந்தவர்கள் மேற்சொன்ன மூன்று வர்ணங்களுக்குச் சேவையாற்றிய காலந்தள்ள வேண்டிய சூத்திரர்கள் என்கிறது.

எந்தக் குணம் அதீதமாக இருக்கிறதோ அதுவும் கர்மாவோடு கட்டப்பட்ட ஒன்று என்கிறது கீதை. எங்கே பிறக்க வேண்டும், என்ன வர்ணத்தில் பிறக்க வேண்டும் என்பதெல்லாம் இறைவன் தீர்மானித்தது அதனை மாற்ற இறைபக்தியை நாடுவது என்றெல்லாம் முயற்சிக்கலாம். ஆனால், பலனை எதிர்பார்க்கக் கூடாது. உங்களுடைய சத்வ குணத்தை அதிகரிக்க முயற்சி செய்யலாம், அடுத்தடுத்த பிறப்புகளுக்குக் காத்திருந்து மோட்சம் நோக்கிய பாதையை நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். பிளாட்டோ சொன்னதிலாவது கடவுள் தான் யார் தங்கம், இரும்பு என்பதைத் தீர்மானிக்கிறார். இங்கே ஒரு வர்ணத்தில் பிறப்பது உன்னுடைய தலையெழுத்து. அதற்கு உன்னுடைய கடந்த காலக் கர்மாவே காரணம் என்று கீதை கூடுதலாகக் கதை அளந்தது. கர்மாப்படியே வெவ்வேறு வர்ணங்களில் இறைவனின் ஆதரவோடு பிறக்கிறோம் என்பது இந்திய பொதுப் புத்தியில் பதிந்திருந்திருக்கிறது. என்றாலும், காந்தி முதலிய இந்து மதச் சிந்தனையாளர்கள் அப்பட்டமாகப் பிறப்பின் அடிப்படையிலான வர்ணாசிரமத்தை கட்டிக் காக்கும் கீதையின் குரலை வேறு வகைகளில் பொருள் கொண்டு பூசி மெழுகுகிறார்கள்.

சாதி என்பது இந்து மதத்தின் அடிப்படை கிடையாது. அத்தகைய பாகுபாடு எதுவும் அதில் கிடையாது, எல்லாரின் உள்ளேயும் இறைத்தன்மை பொதிந்திருக்கிறது என்பவர்களுக்கு அம்பேத்கரின் எளிமையான பதில் ஒன்று ‘சாதியை அழித்தொழிக்கும் வழியில்’ கிடைக்கிறது:

‘இத்தகைய சச்சரவுகளில் சரண் புகுந்து கொள்வதில் எப்பயனும் இல்லை. மக்கள் எதை நம்ப வேண்டும் என்று சொல்லித் தரப்பட்டு இருக்கிறதோ அப்படியெல்லாம் சாஸ்திரங்கள் சொல்லவில்லை என்பதால் எந்தப் பயனும் இல்லை…மக்கள் எப்படிச் சாஸ்திரங்களைப் புரிந்து கொள்கிறார்கள் என்பதே முக்கியமானது…. நாம் சாஸ்திரங்களைப் புறந்தள்ளுவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் அதிகாரத்தையும் மறுதலிக்க வேண்டும்.’ என்று அறிவிக்கிறார்.

கீதை தகுதிக்கும், செயல்களுக்குமே மரியாதை செலுத்தச் சொல்கிறது என்று மட்டும் பேசிக்கொண்டிருக்காமல், கடந்த பிறப்புகளின் கர்மவினைகள் அடுத்தடுத்த பிறப்புகளுக்கும் தொடர்கிறது என்று சாதாரண இந்துக்கள் நம்புவதை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நயவஞ்சகமும், கொடூரமும் மிக்கப் பாகுபாடுகள், அடுக்குநிலைக்கான அதிகாரத்தை வழங்கும் மெய்யியலையே மறுதலிக்க வேண்டும்.

அம்பேத்கர் ‘சாதியை அழித்தொழிக்கும் வழி’யில் ‘பகுத்தறிவும், அறநெறியும் ஒரு சீர்திருத்தவாதியின் அம்பறாத்தூணியில் உள்ள ஆகச்சிறந்த ஆயுதங்கள். இவற்றை அவன் எடுக்க விடாமல் தடுப்பது என்பது அவனைச் செயல்படவிடாமல் கட்டிப்போடுவதே ஆகும்.’ தன்னுடைய வாழ்நாள் முழுக்கச் சாதியை நியாயப்படுத்தும் தங்களுடைய நம்பிக்கைகளைக் கேள்வி கேட்குமாறு அம்பேத்கர் அயராது வலியுறுத்தினார். அவற்றுக்கு அடிப்படையாக அமைந்தவற்றை நிராகரித்துவிட்டு, தங்களுடைய நம்பிக்கைகளுக்கு எதிராக இயங்கும்படி அறைகூவல் விடுத்தார்.

அம்பேத்கர் தன்னுடைய பெரும் உழைப்பின் மூலம், இந்து மதத்தின் அதிகாரப்பூர்வ புனித நூல்கள் கேள்வி கேட்பதை பெரும் குற்றமாக ஆக்கி வைத்திருப்பதைக் கவனப்படுத்துகிறார். அவருடைய ‘சாதியை அழித்தொழிக்கும் வழி’ நூலில் ‘மனுஸ்மிருதி மூன்றைக் கொண்டு மட்டுமே சமூகத்தில் நிலவிவரும் நம்பிக்கைகளைச் சீர்தூக்கி பார்க்க அனுமதிக்கிறது. அவற்றைக் கொண்டு மட்டுமே நடைமுறைகளையும் ஆராய வேண்டும் என்று மனுநூல் சொல்கிறது. அவை முறையே சுருதி (வேதத்தில் தென்படுவது), ஸ்மிருதி (நினைவுகளால் கடத்தப்படும் மரபு), காலங்காலமாக எது நன்னடத்தை என்று சமூகத்தால் கருதப்பட்டுக் கடத்தப்படுவது. தர்க்கம், கேள்விகளால் நம்பிக்கைகள், நடைமுறைகளை எதிர்கொள்பவர்கள் ‘நாத்திகர்கள்’ என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள்.’ என்பதை அடுக்கிச் செல்கிறார்

மனு எழுதிக்கொடுத்ததைக் கீதை அப்படியே ஒப்பிக்கிறது. சந்தேகப்படுபவர்கள் அசுர வயிற்றில் பிறப்பார்கள் என்று அது எச்சரிக்கிறது. கீதையின் பதினாறாவது அத்தியாயத்தில் கண்ணன் சொல்வதைப் பாருங்கள். தன்னை நம்பாதவர்களைப் பேராசை பிடித்தவர்கள், கபடதாரிகள், எதற்கும் லாயக்கற்றவர்கள் என்றெல்லாம் முத்திரை குத்துகிறார். இது பண்டைய காலத்தின் லோகயாதவாதிகள் உள்ளிட்ட நாத்திகர்களைக் குறிக்கப் பயன்படும் அதே சொற்கள். இவர்கள் அசுர வயிற்றில் பிறப்பதோடு, இழிந்த இடத்தையே சென்று சேர்வார்கள் என்று கீதை சொல்கிறது. இதில் இருந்து தப்பிக்க ‘நூல்களே (சாஸ்திரங்கள்) எது சரி, தவறு என உனக்கு வழிகாட்டட்டும். அந்த நூல்கள் நீ எதைச் செய்ய வேண்டும் என்று வகுத்தளித்து இருக்கிறதோ அந்தத் தொழில்களை நெறிபிறழாமல் நீ செய்ய வேண்டும்’ என்று வழிகாட்டுகிறது கீதை.

அம்பேத்கர் ‘மனுஸ்ம்ருதியின் மறுவடிவம்’ என்று கீதையை விளிப்பது எவ்வளவு கச்சிதமானது என்பதை மேற்சொன்னவை தெளிவுபடுத்துகிறது. கேள்விகள் கேட்பவர்களைக் கண்டிக்கிற வகையில் மனுவின் குரலை மட்டும் கீதை எதிரொலிக்கவில்லை. கூடுதலாக, அது பகுத்தறிவாளர்கள், லோகாயதாவதிகளை நாத்திகர்கள், ராட்சதர்கள் என்று அழைக்கும் ராமாயண, மகாபாரத மொழியையும் கொண்டிருக்கிறது. ராமாயணத்தில் ஜாபாலியும், மகாபாரதத்தில் சார்வாகனும் அதிகாரபீடங்களை நோக்கி கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார்கள். அதனால் அவர்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டு, கொலை செய்யப்படுகிறார்கள்.

கிருஷ்ணனும், மனுவும் இன்னொரு பாடம் எடுக்கிறார்கள். இது கயமையின் உச்சம் என்று அம்பேத்கர் எண்ணினார். இருவருமே அறிவையும், ஞானத்தையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்கிறார்கள். பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்யும் கர்மத்தை பற்றி அர்ஜூனனுக்குப் போதித்த பின்பு, பலனை எதிர்பார்த்து உழைப்பவர்களுக்கு இந்த அறிவைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கிறார் கிருஷ்ணர். மனு இன்னமும் அப்பட்டமாக, பல முறை வேதம் பயின்றவர்கள் அதனைப் பிறருக்குக் கற்றுத்தரக்கூடாது என்று தடை விதிக்கிறான்.

ஏன் இத்தகைய தடை ? அம்பேத்கர், ‘கிருஷ்ணனும், கீதையும்’ எனும் தன்னுடைய எழுத்தில், எதிர்-பரப்புரை எதுவும் நிகழாமல் தடுக்கவே இந்தத் தடை என்கிறார். இந்தச் சடங்குகள், விதிகளுக்கு எதிரான கிளர்ச்சி நிகழாமல் தடுக்கவே இந்த ஏற்பாடு. ஆனால், இவற்றின் ‘அறிவு வெளிச்சத்தை’ பகிர்ந்து கொள்ள மறுக்கும் மனப்பான்மையைக் கண்டு பொங்கி எழுகிறார். இந்து சமூக அமைப்பின் பெருங்குற்றத்தை இப்படித் தோலுரிக்கிறார், ‘வேறெந்த சமூகமும் தன்னுடைய பெரும்பான்மை மக்கள் மத நூல்களைப் படிக்கக் கூடாது என்று தடை விதிக்கும் குற்றத்தை புரியவில்லை. வேறெந்த சமூகமும் தன்னுடைய பெரும்பான்மை மக்கள் கல்வி கற்பதை தடுக்கும் குற்றத்தில் ஈடுபடவில்லை. கடைக்கோடி மனிதன் கல்வி கற்க முயல்வதை வேறெந்த சமூகமும் தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவிக்கவில்லை..’ .

அரசியலமைப்பை ஆக்கிய அம்பேத்கர் ‘ மக்களின் மனங்கள் இதயங்களில் புரட்சி வராமல் சுதந்திரவாத,ஜனநாயகத் தன்மை கொண்ட அரசியலமைப்பு சட்டமானது ‘சாணக் குவியல்களின் மீது கோபுரங்களைக் கட்டுவதைப் போல’ என்று தெளிவாக அறிந்திருந்தார். ஜான் டூயின் மாணவரான அம்பேத்கர் சமூகப் புரட்சியை வென்றெடுக்க, ‘எந்த நம்பிக்கையையும் அதனை ஆதரிக்கும் அடிப்படைகளையும் முனைப்பாக, இடையறாது, கவனமாகக் கேள்விக்கு உட்படுத்திச் சிந்திப்பது’ முதன்மையானது என்று கருதினார்.

முடிவாக அம்பேத்கரின் கீதை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும். கீதையின் ஆன்மாவான சதுர்வர்ணம் நீதியுணர்வு மிக்கதா என்கிற சோதனையில் தேறாது. அதன் தத்துவ அடிப்படைகளான குணமும், கர்மாவும் அம்பேத்கரின் பகுத்தறிவு சோதனையில் தோற்றுப்போகும். அதிகபட்சமாக, கிருஷ்ணனின் கீதா உபதேசத்தில் காணப்படும் பௌத்த பண்புகளான நிர்வாணம்,மைத்ரி (அன்பின் வழிப்பட்ட இரக்கம்) ஆகியவற்றை மட்டும் ஏற்றுகொண்டிருப்பார். அதனையும் கூட நீதி, பகுத்தறிவு ஆகியவற்றில் நிறுத்தி பார்த்தே அம்பேத்கர் ஏற்றிருப்பார். இந்த அணுகுமுறையே அவரின் புத்தரும், தம்மமும் படைப்பில் காணப்படுகிறது. பிராமணர்களின் ஆதிக்கத்திற்குச் சவால்விட்ட பௌத்தத்துக்கு எதிரான எதிர்-புரட்சிகளை அணிதிரட்டிய ஒன்றாகக் கீதையை அம்பேத்கர் கருதினார். இப்போது கீதையை தேசிய நூலாக்க முயல்வது, அம்பேத்கரின் நீதி, பகுத்தறிவு மிக்க அரசியலமைப்புச் சட்டம் மேல் சாதி இந்து மேலாதிக்கத்துக்கு விடும் சவாலை எதிர்கொள்ளும் நம் கால எதிர்-புரட்சி என்று கருத வேண்டியிருக்கிறது.

தமிழில் : பூ.கொ.சரவணன்

கொரோனாவிற்கு ஹைட்ராக்ஸி குளோராகுயின் மருந்தா?


ஹைட்ராக்ஸி குளோராகுயினைக் கொரோனாவை எதிர்கொள்ளும் Prophylaxis ஆக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரை செய்துள்ளது. எளிய மொழியில் சொல்வதென்றால், Prophylaxis என்பது அடிப்படை நோய்த்தடுப்பு முறையாகும். இதுவரை நோயால் பாதிக்கப்படாதவர்கள் இதனை உட்கொள்ள வேண்டும். ஆனால், மிக முக்கியமாக ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த Prophylaxis ஐ நோய்த்தொற்று/நோய்க்கு ஆளாகக் கூடிய ஆபத்து/அதிக ஆபத்து உள்ளவர்கள் மட்டுமே உட்கொள்ள வேண்டும். தடுப்பூசி ஒரு வகை prophylaxis எனலாம்.

இன்னொரு வகையான prophylaxis உண்டு. அதனை chemo-prophylaxis என்போம்.
இந்த முறையில், நோய் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய ஆபத்துள்ளவர்களுக்குக் குறிப்பிட்ட வேதிப்பொருட்கள்/மருந்துகள் பரிந்துரைக்கப்பட்ட அளவில் செலுத்தப்படுகிறது. இந்த முறைக்கு நல்ல எடுத்துக்காட்டு வாராவாரம் குழந்தைகள், பெண்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை தருவது. மலேரியா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு doxycycline தருவது இன்னொரு எடுத்துக்காட்டாகும்.

தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கொரோனாவிற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை chemo- prophylaxis ஆகப் பரிந்துரைத்துள்ளது. அது மிகத்தெளிவாக யார் இம்மருந்தை உட்கொள்ள வேண்டும் என வரையறுக்கிறது:

1. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய்த்தொற்று இருப்பதாகச் சந்தேகத்தின் பெயரில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், பிற சுகாதாரப்பணியாளர்கள் இதை உட்கொள்ளலாம்.

2. கொரோனா நோய் இருப்பதாக உறுதியான நபரின் குடும்ப உறுப்பினர்கள் (அவர்களோடு தொடர்புக்கு ஆளானவர்கள்) இதனை உண்ணலாம்.மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது ‘இந்த வேதிப்பொருளை பதிவு செய்யப்பட்ட மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்’.

இந்த மருந்தை மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் வாங்கக் கூடாது. இப்படிச்சொல்ல காரணம் என்ன? இந்த மருந்து மோசமான பின்விளைவுகளை உண்டாக்கக் கூடும். அதனால் உயிருக்கு ஆபத்தான நிலை வரலாம்.ஆகவே, ஹைட்ராக்ஸி குளோரோகுயினை தேடி அலையாதீர்கள். மருந்துக்கடை உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு இம்மருந்தை முறையான மருத்துவரின் பரிந்துரையின்றி வழங்க வேண்டாம். – அரவிந்த் காந்தி பெரியசாமி, மூத்த உள்ளுறை மருத்துவர், சமூக மற்றும் நோய்த்தடுப்புத்துறை, PGIMER, சண்டிகர்.தமிழில்: பூ.கொ.சரவணன்