இந்தி முதல் இன்றுவரை – வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுவது !


வரலாறு என்றாலே வருடங்களும், கடுப்பேற்றும் பெயர்களும் என்று நம் மனதில் பதிந்து போயிருக்கிறது இல்லையா? வரலாறு என்பது விறுவிறுப்பான ஒன்று என நம்ப முடிகிறதா? எதுக்காக வரலாறு எல்லாம் தெரிஞ்சுக்கணும் என்று கடுப்பாக கேட்டிருக்கிறீர்களா? ஒரு மூன்று மணி நேரத்தை மட்டும் கடன் கொடுங்கள். அப்புறம் பாருங்கள்:


Bored of textbook history? Ever wondered why history is important? Why history cannot be left unexplored? Fascinating, riveting journey guaranteed. Do lend your ears.

வரலாறு குறித்த மிக எளிய, வசீகரிக்கும் உரை இது என என்னால் சொல்ல முடியும். ஏன் இந்தித்திணிப்பை தமிழகம் எதிர்க்கிறது? அடையாள அரசியல் வரலாற்றில் எப்படி இருக்கிறது? வன்முறையும், அடையாளமும் குறித்து எப்படிப் புரிந்து கொள்வது? கடந்த கால வரலாற்றைக் கொண்டு நிகழ்காலத்தைத் தீர்மானிப்பது ஏன் ஆபத்தானது? ஔரங்கசீப் எப்படிப்பட்டவர்? மொகலாயர்கள் வெறுக்கப்பட வேண்டியவர்களா? வரலாறைப் புரிந்து கொள்ள சில நூல்கள் போதுமா? இந்தி முதல் இன்றுவரை ஒரு பிரமிக்க வைக்கும் பயணம். வாருங்கள். 🙂
Image result for வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுவோம்
Why TN opposes Hindi imposition? What is the Link between identity and violence? What are the problems in dealing with today’s problems by taking inspiration from past? How to view legacy of Aurangzeb, Mughals? From medieval to modern times a magisterial journey. Lets hear 🙂

ராமர் பாலம் என்பது ராமர் கட்டியதா? இதிகாசங்களை வரலாறாகக் கருதலாமா? ஹிட்லர் கொண்டாடப்பட வேண்டியவரா? போஸ் மகத்தான தலைவரா? காந்தி போஸுக்கு துரோகம் செய்தாரா? ஏன் இஸ்ரேல் மத்திய கிழக்கில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது? வரலாற்றின் வழியாக விடை தேடுவோம்.

Did Rama built Ram Sethu bridge? Can epics be treated as history? Why some people celebrate Hitler? Would we have been better had Bose succeeded? Did Gandhi betray Bose? Why Israel reigns supreme in middle east? Lets explore through the lens of history.

 
மதச்சார்பின்மைக்கும் மன்னர்களுக்கும் என்ன தொடர்பு? நேரு, அம்பேத்கர், பெரியார் சந்திக்கும் நெகிழவைக்கும் வரலாற்றுத் தருணம் எது? சாதியமைப்பு குறித்த அம்பேத்கரின் பார்வை என்ன? பெண்ணியமும் பெரியாரும் – ஒரு வரலாற்றுப் பார்வை. ஏன் காந்தி இன்றைக்கும் தேவை? ஏன் ராணுவ ஆட்சி ஆபத்தானது? வாஜ்பாயி நேரு குறித்து என்ன நினைத்தார்? விறுவிறுவென ஒரு பயணத்திற்குக் காதுகொடுங்கள்.

Are our kings truly secular? There was a moment when Nehru, Ambedkar and Periyar met in making history. What was that momentous occasion? What are Ambedkar’s views on caste? Why is Gandhi’s non-violence still needed? Why military rule won’t suit India? What is the link between Periyar and Feminism? Vajpayee had something interesting to say about Nehru. What is that? A riveting, surprising travel through the pages of Indian history. Do hear.

 
அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்வைக்கொண்டு பொதுவாழ்வை அணுகலாமா? வ உ சியின் சாதனைக்கடலின் ஒரு துளியை உணர்வோமா? எம்ஜிஆர் எப்படி ஆட்சி புரிந்தார்? அது என்ன ‘Idea of India’? வரிசைகட்டும் வினாக்கள், அசரவைக்கும் பதில்கள். செவிமடுங்கள்.
 
 
 
 
அவசியம் வாசிக்க வேண்டிய சில வரலாற்று நூல்கள் என்ன? அமர்த்தியா சென் சொல்லும் ‘Country of First Boys’ யார்? இன்னும் இன்னும்… பள்ளிக்காலத்திற்குப் பிந்தைய புத்தக வாசிப்புப் பயணம் குறித்த ஒரு ஐந்து நிமிட சிற்றுரையும் உண்டு.

வங்கதேசம் உருவான சர்வதேச வரலாறு


 

1971 A GLOBAL HISTORY OF CREATION OF BANGLADESH நூல் அறிமுகம். பாகம் 1:

போர்கள் இல்லாத உலகம் வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். ஆனால், போர்கள் நடந்து முடிந்த பின்னால் மாபெரும் வெற்றி என்றோ, பெருந்தோல்வி என்றோ கதைகள் எழுதப்படுகின்றன. சிலரை நாயகனாக, சிலரை வில்லனாக ஆக்கும் கருப்பு, வெள்ளை கதைகள் தான் போர்கள் சார்ந்து பெரும்பாலும் உலவி வருகிறது. வரலாறு ஆனால் அத்தனை எளியது இல்லை. ‘போர்களைப் புரிந்து கொள்வோம்.’ என்கிறார் ராணுவ வரலாற்று ஆசிரியர் ஸ்ரீநாத் ராகவன்.

 

Image result for 1971 war a global history

 

இந்தியாவின் முன்னணி ராணுவ வரலாற்று ஆசிரியரான அவர் இரண்டாம் உலகப்போரில் இந்தியாவின் பங்களிப்பு, 1971 போர் குறித்த சர்வதேச வரலாறு, நேரு காலத்தில் போரும், அமைதியும் என்று வெவ்வேறு தலைப்புகளில் மிக முக்கியமான நூல்களை எழுதியிருக்கிறார். அவரின் 1971 இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்த நூலை வாசித்து முடித்தேன்.

நூல் லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்தில் துவங்குகிறது. இந்தியாவுடன் ஏற்பட்ட எல்லை பிரச்சனையைப் போரில் கொண்டு போய்ப் பாகிஸ்தான் நிறுத்தியது. அந்தப் போரை சோவியத் ரஷ்யா சமாதானம் செய்து வைத்து முடித்த ஆறே வருடத்தில் ஏன் இன்னொரு போர் ஏற்பட்டது? மேற்கு, கிழக்கு என்று பாகிஸ்தான் இரு பகுதிகளாகப் பிரிந்து கிடந்தது. இந்தியா நடுவில் இருக்க, மனதளவிலும், நாடு என்கிற உணர்விலும் வேறுபடும் பல்வேறு தருணங்கள் இரு பகுதிகளுக்கு இடையே நடந்தன.

ஜின்னா 1948 ஆம் வருடம் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழியாக உருது மட்டுமே இருக்கும் என்றார். 1956-ல் பாகிஸ்தானின் பிரதமரும், வங்காளி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட குவாஜா நஜிமுதீன் உருது மொழி மட்டுமே அதிகாரப் பூர்வ மொழி என்று அறிவிக்க வங்கதேச மாணவர்கள் போராட்டங்களில் குதித்தார்கள். ரத்த வெள்ளம் ஓடியதற்குப் பின்பு வங்கமொழியும் தேசிய மொழியானது. கிழக்கு பாகிஸ்தானின் சணல் ஏற்றுமதியில் கிடைத்த வருமானம் மேற்கு பாகிஸ்தானை வளப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. 1954-1960 காலத்தில் மேற்கின் வளர்ச்சி 3.2% லிருந்து 7.2% ஆக உயர்ந்தது. கிழக்கு பகுதியின் வளர்ச்சி 1.7% லிருந்து 5.2% என்கிற அளவுக்கே உயர்ந்தது. பல்வேறு சலுகைகள் மேற்கு பகுதிக்கே வாரி இறைக்கப்பட்டன. அதிகாரம் பெரும்பாலும் மேற்கு பாகிஸ்தான் வசமே இருந்தது.

வங்கதேசம் என்கிற நாடு உருவாக இந்த மாற்றாந்தாய் மனோபாவமே காரணம் என்று சொல்லப்பட்டாலும் வங்கதேச உருவாக்க வரலாறு என்பது ஸ்ரீநாத் ராகவனின் பார்வையில், ‘சந்தர்ப்பம், தற்செயல், தேர்வு, வாய்ப்பு’ ஆகியவை ஒருங்கே கைகூடி வந்ததால் உண்டான ஒன்று. பாகிஸ்தானை அறுபதுகளில் அயூப் கான் ஆண்டுக் கொண்டிருந்தார். பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும் ராணுவ ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். மாணவர்களுக்குப் பல்கலையில் கல்வி புதிய விழிப்புணர்வை தந்தது. ஒரு முறை தேர்வில் தவறினால் ஒரே முறை மட்டுமே மீண்டும் தேர்வு எழுத அனுமதி முதலிய விதிகள் கடும் அதிருப்தியை உண்டு செய்தன. 86.5 லட்சமாக இருந்த வறியவர்கள் எண்ணிக்கை 93.3 லட்சமாக உயர்ந்து நின்றது. தலைமை பொருளாதார அறிஞரின் வார்த்தைகளில், நாட்டின் 66% தொழில்வளம், 87% வங்கி, காப்பீட்டு வளங்கள் 22 குடும்பங்களிடம் குவிந்து கிடந்தன.

ஒரு சிறு பொறி தான். பல்வேறு இளைஞர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். நாடே ரணகளம் ஆனது. எதிர்ப்பின் வெம்மை தாங்காமல் அயூப் கான் விலகி யாஹ்யா கான் எனும் ராணுவத் தளபதிக்கு வழிவிட்டார். ஜனநாயகம், புது அரசமைப்புச் சட்டம் வரும்வரை மட்டுமே தான் பதவியில் இருப்பேன் என்று யாஹ்யா கான் வாக்குத் தந்தார். தேர்தல் வந்தது.

Image result for yahya bhutto

கிழக்குப் பாகிஸ்தானில் அவாமி முஸ்லீம் லீகின் தலைவர் முஜிபுர் ரஹ்மான் ஆறு அம்சத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று போர்க்குரல் கொடுத்தார். உண்மையான கூட்டாட்சி வேண்டும், ராணுவம், வெளியுறவு ஆகியவை மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும், இரு தனித்தனி நாணயங்கள், தனி நிதிக் கொள்கைகள், தனி அயல்நாட்டுப் பரிவர்த்தனைகள் நிகழ அனுமதி வேண்டும். கிழக்கு பாகிஸ்தானுக்குத் தனிப்படையை வைத்துக்கொள்ள அங்கீகாரம் வேண்டும் என 1966-ல் கொடுத்த கோஷங்களை மீண்டும் எழுப்பினார். கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் அவர் பின்னால் அணிவகுத்தார்கள். மேற்கு பாகிஸ்தானில் பூட்டோ களத்தில் இருந்தார்.

தேர்தல் முடிவுகள் வந்தன. யாரும் எதிர்பாராத வகையில் முஜிபுர் ரஹ்மானின் கட்சி கிழக்குப் பாகிஸ்தானில் 160/162 என்று வென்று இருந்தது. மேற்கு பாகிஸ்தானில் 81/138 என்கிற அளவிலேயே பூட்டோ கட்சி வென்றது. ஆட்சி அமைக்க முஜிபுர் உரிமை கோரினார். பூட்டோவுடன் இணைந்து ஆட்சி அமையுங்கள் என்று யாஹ்யா கான் அடம்பிடித்தார். சிந்தும், பஞ்சாபும் தங்களுடைய ஆதிக்கத்தை இழந்துவிடும், ஆகவே, முஜிபுரின் கட்சி தனித்து ஆட்சி அமைக்கக் கூடாது என்று பூட்டோ கிளம்பினார். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க தேசிய கவுன்சிலின் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று முஜிபுர் கோரினார். இவர்களுக்கு அதிகாரத்தைத் தரவேண்டுமா எனக் கடுப்பாக யாஹ்யா கான் பார்த்தார். ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார்.

ஆறு அம்ச திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முஜிபுர் உறுதியாக இருந்தார். தேசிய கவுன்சிலை காலவரையறை இல்லாமல் ஒத்தி வைத்தார் யாஹ்யா. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்துவது போலப் பாவனைச் செய்துகொண்டே, படைகளை ஆசீர்வதித்துக் கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார்கள். அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பிணங்கள் விழுந்தன. மொத்தமாக அப்பகுதியின் அமைதி குலைந்து போனது. அப்பகுதி மாணவர்கள் அமர் சோனா பங்களா (என் இனிய பொன் வங்கமே) எனும் தாகூரின் பாடலை தேசிய கீதம் என அறிவித்தார்கள். தனி நாடு என முழங்கினார்கள்.

முஜிபுர் தனி நாடு என்று எங்கேயும் உச்சரிக்கவில்லை. ராணுவச்சட்டத்தை நீக்கிவிட்டு, படைகளைத் திரும்பப் பெறுங்கள். ராணுவம் நடத்திய துப்பாக்கி சூடுகள் மீது விசாரணை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் அதிகாரத்தைக் கைமாற்றுவது ஆகிய கோரிக்கைகளை மட்டுமே அவர் வைத்தார். அது நிச்சயம் முடியாது என்று யாஹ்யா-பூட்டோ செயல்களால் சொன்னார்கள். ராணுவத்துக்கு இறங்கி ஆடுங்கள் என்று உத்தரவு தந்தார் யாஹ்யா. முஜிபுர் கைது செய்யப்பட்டார். படுகொலைகள், பாலியல் வன்முறைகள் அரங்கேற ஆரம்பித்தன.

பரவலாக இந்தியாவில் சொல்லப்படும் கதை, இந்திரா வங்கதேசத்தைக் கச்சிதமாகத் திட்டமிட்டு சாதித்தார் என்பதே ஆகும். ஆனால், வரலாறு வேறு வகையாக இருக்கிறது. இந்திரா பாகிஸ்தானில் பிரச்சனை ஆரம்பித்த பொழுது, தன்னுடைய கட்சியில் ஏற்பட்ட பிளவை சமாளிக்கப் போரடிக் கொண்டு இருந்தார். ‘வறுமையே வெளியேறு’ என்கிற கோஷத்தோடு அவர் மீண்டும் மிருக பலத்தோடு ஆட்சிக்கு வந்திருந்தார்.

வங்கதேசம் என்கிற நாடு உருவாக வேண்டாம் என்பதே முதலில் இந்தியாவின் கருத்தாக இருந்தது. தனியாக உருவாகும் வங்கதேசம் அப்படியே மேற்கு வங்காளத்தையும் சேர்த்துக்கொண்டால் என்னாவது என்பது முதல் கவலை. அடுத்து அசாம் வேறு கிளம்பலாம் என்பது அடுத்தக் கவலை. காஷ்மீர் உள்நாட்டு சிக்கல் என்று தொடர்ந்து அழுத்திச் சொல்லிவிட்டு, இப்பொழுது பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது எப்படி என்பது அடுத்தத் தலைவலி. நைஜீரியாவின் BIAFRA எனும் பிரிவினை இயக்கம் நடைபெற்ற பொழுது அரங்கேறிய இனப்படுகொலைகளை ஐநா கண்டுகொள்ளவில்லை.ஆகவே, தனி நாட்டை எல்லாம் எதற்கு உருவாக்கி தலைவலியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே இந்தியா நினைத்தது.

மேலும், இந்திய ராணுவத் தளபதி மானெக்ஷாவின் கூற்றுப்படி, ‘ஏதேனும் செய்யுங்கள் தளபதி. உடனே போர் தொடுங்கள். போர் ஆரம்பித்தாலும் கவலையில்லை.’ என்று இந்திரா கெஞ்சிக்கேட்டும் அவர் போகவில்லை. ஆனால், இது உண்மையில்லை என்று ஆவணங்கள் நிரூபிக்கின்றன. பாகிஸ்தான் ராணுவம் நவீனமயமாகி இருந்தது. 90-120 நாட்கள் இந்தியாவுடன் போர் செய்யும் அளவுக்கு அதனிடம் வலிமை இருப்பதாக இந்திராவிடம் அறிக்கை தரப்பட்டு இருந்தது. ‘ஆயுதங்களைக் குவித்துக்கொண்டு போரில் பருவமழைக்குப் பின்னர் இறங்கலாம். அப்பொழுது பனிக்காலம் என்பதால் இமயமலையைக் கடந்து சீனா வர முடியாது.’ முதலிய வாதங்களை மானெக்ஷா வைத்தததால் இந்திரா பின்வாங்கினார் என்று ராணுவத் தளபதி சொன்னாலும், இந்திராவோ, அரசின் அதிகார மையங்களோ போரில் குதிப்பதை பற்றி அப்பொழுது யோசிக்கவே இல்லை என்பதே உண்மை.

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் அகதிகள் என்கிற எண்ணிக்கையில் பல லட்சம் மக்கள் இந்தியாவிற்கு இனப்படுகொலையால் தஞ்சம் புகுந்தார்கள். அதிலும் இந்துக்களைக் குறிவைத்து தாக்குவது தொடர்ந்தது. வந்த அகதிகளில் 80% இந்துக்கள் என்பது இதனைத் தெளிவுபடுத்தும். ஆனால், இதை இப்பொழுது வெளிப்படுத்தினால் இதை ‘இந்து-முஸ்லீம்’ பிரச்சனையாகப் பாகிஸ்தான் மாற்றும் என்று இந்திரா உணர்ந்திருந்தார். வாஜ்பேயியை அழைத்து, இதை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். IDSA அமைப்பின் தலைவராக இருந்த சுப்பிரமணியம் உடனே இறங்கி அடித்தால், வெற்றி பெற்றுவிடலாம். ஒரு தனி நாட்டை உருவாக்கிவிடலாம் என்று அறிவுரை சொன்னார். யாரும் கேட்பதாக இல்லை.

இதற்குச் சற்று முன்பு தான் ரஷ்யா-சீனா உறவு உருக்குலைந்து இருந்தது. செக்கோஸ்லோவாக்கியாவில் ராணுவத்தைக் கொண்டு அரசை அடித்துத் துவம்சம் செய்த கையோடு சோவியத் ரஷ்யா ‘பிரெஷ்னேவ் சாசனம்’ என்று ஒன்றை அறிவித்தது. உலகில் எங்கெல்லாம் சோசியலிசம் சரியாக அமல்படுத்தப்படவில்லையோ அங்கெல்லாம் வந்து சரி செய்யும் பொறுப்பு எங்களுக்கு உண்டு. சீனாவுக்கு வியர்த்தது. உசுரி நதிக்கரையில் இருபடைகளும் மோதிக்கொண்டன. பலத்த சேதத்தை இரு தரப்பும் சந்தித்தன. மீண்டும் சில மோதல்கள். உறவு முறிந்து போனது.

அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகர் கிஸ்ஸிங்கர் அகமகிழ்ந்து போனார். யாஹ்யா கானை அழைத்துச் சீனாவுடன் உறவு ஏற்படுத்த உதவுமாறு கேட்டார். தூதுவராக யாஹ்யா சென்று /வந்தார். சீனா பொறுமையாகவே அடியெடுத்து வைத்தது. இன்னொருபுறம் அமெரிக்க அதிபர் நிக்ஸன் இந்தியாவிற்குப் பயணம் வந்து போனார். ‘செவ்வாய் கிரகத்துக்குச் சேர்ந்து போவோம்.’என்றெல்லாம் உற்சாகம் பொங்க பேசினார். ஆனால், 1965 போருக்குப் பின்னால் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு ஆயுத விநியோகம் கிடையாது என்கிற விதியை தற்காலிகமாகப் பாகிஸ்தானுக்கு மட்டும் தளர்த்தினார். சீனா லட்சியம்.

கிழக்குப் பாகிஸ்தானில் நிலைமை மோசமாகி இருந்தது. சட்டத்தைத் தூக்கிப்பிடித்து, மாகாண சுயாட்சியைத் தரவேண்டும் என்று முஜிபுர் தரப்புக் கேட்டாலும், மூன்றே கட்சிகள் தான் இனி இருக்கும். அவாமி லீக் தடைசெய்யப்பட்டது. முஜிபுர் பொதுவாழ்வில் ஈடுபட வாழ்நாள் தடை என்று அறிவித்தார் யாஹ்யா. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க என்று தானே ஒரு குழுவை வேறு நியமித்தார். கண் துடைப்பு என்று கிழக்குப் பாகிஸ்தான் மக்களுக்குத் தெரியும். ராணுவ டாங்கிகள் வெறியாட்டம் ஆடிக்கொண்டு இருந்தன.

ரஷ்யா-இந்தியா போட்டுக்கொண்ட இருபது ஆண்டுகால நட்புணர்வு, ஒத்துழைப்பு ஒப்பந்தம் தான் அமெரிக்கா-சீனாவை இந்தியா-பாகிஸ்தான் போரில் ஈடுபடாமல் தடுத்தது என்பது பரவலாகச் சொல்லப்படுவது. உண்மையில் நடந்தது இன்னும் சிக்கலானது. சோவியத் ரஷ்யா ஒரு தனி நாடு உருவாவதை விரும்பவில்லை. சீனாவின் ஆதிக்கத்தை அது அதிகப்படுத்தும் என்பது ஒரு கவலை. இரண்டாவது நீர்த்துப்போன பூர்ஷ்வாக்கள் என்றே வங்கதேசம் நாடி போராடியவர்களை அவர்கள் நம்பினார்கள். இவை அனைத்துக்கும் மேலாக அமெரிக்கா-ரஷ்யா இருவரும் இந்தச் சிக்கலை அணுகியதில் ஒரு முக்கிய வேறுபாடு இருந்தது. அமெரிக்கா இதைப் பனிப்போரின் நீட்சியாகக் கண்டது. ரஷ்யாவோ அகதிகள் சிக்கல் தனி, பாகிஸ்தானின் அரசியல் சிக்கல் தனி என்று பிரித்துப் பார்த்தது.

இந்தியாவுடன் அந்த ஒப்பந்தத்தைப் போட்டுக்கொள்ளலாம் என்று வெகுகாலமாக ரஷ்யா கேட்டது. எனினும், உள்நாட்டில் நிலைமை தனக்குச் சாதகமாக இல்லாத சூழலில் அதனை அப்பொழுதைக்குச் செய்ய இந்திரா மறுத்தார். கிஸ்ஸிங்கர், ‘இந்தியா பாகிஸ்தான் மீது பாய்ந்தால் சீனா அதன் உதவிக்கு வரும்.’ என்று இந்திய தூதுவர் L.K.ஜாவை எச்சரித்தார். அவ்வளவு தான். வெகுகாலமாக இழுத்தடித்து ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து போட்டது.

 

Image result for indira mujib bhutto

பாகிஸ்தானில் பத்திரிக்கையாளராக இருந்த அந்தோணி மாஸிகரென்ஸ் கிழக்கு பாகிஸ்தானுக்குச் சென்று பார்த்த பொழுது பத்து நாட்களில் எப்படிப்பட்ட இனப்படுகொலை நடக்கிறது என உணர்ந்து /கொண்டார். தன்னுடைய நாட்டை விட்டு குடும்பத்தோடு வெளியேறினார். லண்டனின் ‘சண்டே டைம்ஸ்’ இதழில் இனப்படுகொலை என்கிற தலைப்பில் 5000 வார்த்தைகளில் அவர் எழுதிய கட்டுரை பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இங்கிலாந்து, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகளில் அம்மக்களுக்கு அனுதாபம் பெருகியது.

Image result for 1971 war
மோசமான பொருளாதாரச் சிக்கலில் பாகிஸ்தான் சிக்கியிருந்தது. தரவேண்டிய கடன்கள் கழுத்தை நெரித்தன. பொன்முட்டை கிழக்குப் பாகிஸ்தான் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருந்தது. உலகம் முழுக்க இருந்த வங்காளிகளைப் பணம் அனுப்ப வேண்டாம் என்று போராளிகள் கேட்டுக்கொண்டது வேறு பெரிய சேதத்தை உண்டு செய்தது. அமெரிக்கா நான் இருக்கிறேன் என்று நிதியுதவி செய்தது. சீனா மசிந்து கொடுத்து விடாதா என்று ஓரமாக வேறு கவனித்துக் கொண்டிருந்தது. சீனா என்ன தான் நினைத்துக் கொண்டிருந்தது?

சீனப்போருக்கு பின்னரும் இந்திய-சீன உறவினில் சிக்கல்கள் தொடர்ந்தன. எல்லையில் சமயங்களில் மோதிக்கொண்டன. சீனா உறவை சீர் செய்யலாம் என முயன்ற பொழுது இந்திரா அதற்கு ஒப்பவில்லை. இன்னமும் சீன வெறுப்பு உச்சத்தில் உள்ளது என உணர்ந்திருந்தார். எனினும் தொடர்ந்து சீனாவுடன் இந்தியா தொடர்பில் இருந்தது. சீனா பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீரின் கில்கிட் பகுதியில் சாலையை அமைத்த பொழுதும் இந்தியா பெரிதாக எதிர்க்கவில்லை.

சீனா பற்றியெரிந்த கிழக்குப் பாகிஸ்தான் சிக்கலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. காரணங்கள் பல. ரஷ்யாவை போலவே சீனாவும் வங்கப்போராளிகளைப் பூர்ஷ்வாக்கள் என எண்ணியது. சீன பாகிஸ்தான் உறவின் முதல் விதையைப் போட்டது சுஹ்ரவர்த்தி எனும் கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரதமர். அப்பகுதியில் பலர் சீன அனுதாபிகளாக இருந்தார்கள். மேலும் 2 சீன ஆதரவு கட்சிகள் கிழக்குப் பாகிஸ்தானில் செயல்பட்டன. உள்நாட்டுப்போர் தன் ஆதரவாளர்களை அழித்து ஒழிப்பதையும் சீனா கண்டது. சீனா நேரடியாகக் களத்தில் இறங்கவோ, பெரிதாகவோ மிரட்டவில்லை. காரணம் மாவோ!

கலாச்சாரப் புரட்சியின் என்கிற பெயரில் பல லட்சம் சீனர்கள் இறக்க காரணமானார் மாவோ. கட்சி, அரசு ஆகியவற்றுக்கு எதிராக ராணுவத்தைக் களமிறக்கியதன் மூலம் ராணுவம் நாட்டில் முதன்மையானது என்கிற நிலையை உண்டாக்கினார். அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வரவிருப்பது லின் பியாவோ எனும் ராணுவ தளபதி எனக் கருதப்பட்டது. மாவோவிற்கு அரிப்பெடுத்தது. தன் நாற்காலி ஆட்டம் காண்பதாக உணர்ந்தார். லின் பியாவோவை எப்படியேனும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று காய்கள் நகர்த்தினார். அவரோ அசராமல் அரசுக்கு நேர்மையாக இருப்பதாகக் காட்டிக்கொண்டார். அவரின் மகன் அவசரப்பட்டு ஒரு கிளர்ச்சியை நடத்த முயன்றார். மாவோ அனைவரையும் ஒழித்துக்கட்ட கிளம்பினார். லின் பியாவோ தப்பித்து ஓட வேண்டியதாயிற்று. ராணுவத்தின் பெருந்தலைகள ஒழித்துக் கட்டிவிட்டு பெருமூச்சு விட்டார் மாவோ. அதே காலத்தில் தான் பாகிஸ்தான் உள்நாட்டுப்போரில் தள்ளாடிக்கொண்டு இருந்தது.

 

Image result for srinath raghavan bangladesh

இந்தியா கொரில்லா போர் முறையைப் போராளிகளுக்கு அளித்துக் கொண்டிருந்தது. முக்தி பாஹினி, முஜிப் வாஹினி என இடதுசாரிகளைக் கொண்ட படை எனப் பிரிந்து கிடந்த பல்வேறு குழுக்களுக்குப் பயிற்சி அளித்தது. எனினும் அது போதுமானதாக இல்லை. ஒரு கோடிக்கும் மேல் அகதிகள் இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்திருந்தார்கள். எவ்வளவு தான் தாங்குவது? என இந்தியா உலக நாடுகளிடம் கேட்டது. ஐநா சில எச்சரிக்கை, கொஞ்சம் களப்பணி என்பதோடு நின்று கொண்டது. இரு வல்லரசுகளும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தன.

இந்தியா தன்னுடைய வீரர்களைச் சத்தமே இல்லாமல் போராளிகள் இடையே கலந்து மறைமுகப் போரை நடத்திக்கொண்டு இருந்தது. பாகிஸ்தான் மேற்கு பக்கமிருந்து இந்தியாவைத் தாக்கியது. ஒரு பெண் ஆளும் தேசம் தானே எனக் கொக்கரித்தார்கள். ‘CRUSH INDIA’எனக் கார்களில் அணிந்து கொண்டு திரிந்தார்கள். ஒரு முஸ்லீம் பத்து இந்தியர்களுக்குச் சமம் என நம்பினார்கள்.

போர் துவங்கியது என இந்தியா அறிவித்தது. மேற்கு எல்லையைக் காத்துக்கொண்டு கிழக்கில் படைகள் முன்னேறின.சிட்டகாங், குல்னா முதலிய துறைமுகங்களைக் கைப்பற்றுவது; முக்கிய நதி வழித்தடங்கள், விமானத் தளங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றுவது; நெல்லிக்காய் மூட்டையைக் கலைப்பது போலப் பாகிஸ்தான் வீரர்களைப் பிரித்து நசுக்குவது எனத் திட்டம் வகுக்கப்பட்டது. எனினும் டாக்காவை கைப்பற்றும் திட்டமில்லை. பத்மா, ஜமுனா, மேக்னா என ஏதேனும் ஒரு நதியை கடந்தாக வேண்டிய பெரும் சவால் இருந்தது. முடிந்தவரை பகுதிகளைக் கைப்பற்றி அங்கே தற்காலிக அரசை கொண்டுவருவது என்பதே இந்தியாவின் திட்டமாக இருந்தது. எனினும் ஒரு வித்தியாசமான வெற்றிக் காத்திருந்தது.

ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா, இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்த வேண்டும்; தங்களின் பகுதிகளுக்குத் திரும்ப வேண்டும்; அரசியல் தீர்வு நோக்கி நகர வேண்டும் எனத் தீர்மானம் கொண்டு வந்தது. சாரம் இந்தியாவிற்கு இதிலென்ன வேலை. ரஷ்யா வீட்டோ மூலம் தடுத்தது. பொதுச் சபையில் 104-11 எனத் தீர்மானம் நிறைவேறி இந்தியா அழுத்தத்துக்கு ஆளானது.

அமெரிக்கா கொதித்தது. சீனா களமிறங்க வேண்டும் எனத் தூண்டி விட்டார்கள். வாயை மட்டும் மென்றது சீனா. ஆயுதங்களை அமெரிக்கா நேரடியாகக் கொடுக்கத் தடையிருந்தபடியால் ஈரான் ஜோர்டான் மூலம் முயன்றது. ரஷ்யாவுக்குப் பயந்து கொண்டு ஈரான் நேரடியாக ஆயுதங்கள் அனுப்ப மறுத்தது.

‘சீக்கிரம் முடித்துத் தொலையுங்கள்’ என இந்தியாவிடம் சோவியத் ரஷ்யா சொன்னது. அமெரிக்கா தன்னுடைய மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை இந்தியப்பெருங்கடல் பகுதிக்கு அனுப்பியது. இந்தியப்படைகளுக்கு உத்வேகம் தரும் வகையில் ஒன்று நடந்தது.

 

Image result for 1971 war

கிழக்குப் பாகிஸ்தானில் போராடிக் கொண்டிருந்த பாகிஸ்தான் படைகளின் மேஜர் ஜெனரல் ராவ் ஃபர்மான் அலி கான் ஒரு கோரிக்கை கடிதம் எழுதினார். உடனே போர் நிறுத்தம், 72 மணிநேர பரஸ்பர அமைதி, ராணுவ வீரர்கள், மக்கள் ஆகியோரை அவரவரின் பகுதிகளுக்கு அனுப்ப அனுமதிப்பது, பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக எந்தத் தண்டனையும் அளிக்கப்படக்கூடாது என நீண்ட அதன் செய்தி- ‘தோல்வியின் விளிம்பில் பாகிஸ்தான்!’. யாஹ்யா கான் அதைக் கிழித்துப் போட்டாலும் வீடு கலகலத்து விட்டது.

டாக்கா நோக்கி இந்தியப்படைகள் விரைந்தன. போலந்து போரை நிறுத்தவும் எனத் தீர்மானம் கொண்டு வந்தது. சோவியத் ரஷ்யாவின் நட்பு நாடு அது. செய்தி இந்தியா முடித்துக் கொள்ளவும் என்பதே அது. பிரிட்டன் பிரான்ஸ் என இந்திய ஆதரவுப்போக்கு நாடுகளும் தீர்மானம் கொண்டு வந்தன. போலந்து தீர்மானத்தில் முஜிபுர் ரஹ்மான் உடன் தான் பேச்சுவார்த்தை எனும் அறிவுறுத்தல் வரைவில் இருந்தாலும் இறுதி வடிவில் இல்லாமல் போயிருந்தது. இந்தியாவிற்கு வேலையில்லை, வங்கதேசம் கனவு என்பது செய்தி.

 

Image result for indira mujib bhutto

போலந்து தீர்மானத்தை ஏற்கவும் என யாஹ்யா ஐநாவில் இருந்த பூட்டோவுக்குத் தொலைபேசியில் உத்தரவிட்டார். ‘ஹலோ என்ன கேக்கலையே’ என மழுப்பினார் பூட்டோ. ‘தெளிவாகக் கேட்கிறது’ என்ற ஆபரேட்டரை வாயை மூடும்படி பூட்டோ சொன்னார். போலந்து தீர்மானத்தைக் கிழித்துப் போட்டார். 93000 பாகிஸ்தான் படைவீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர். பூட்டோவுக்கு ராணுவம் வலுவிழந்து தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான காய் நகர்த்தலை முடித்த திருப்தி. வங்கதேசம் உருவானது.

அமெரிக்கா இந்தியாவிடம் சீனா உதவிக்கு வரும் எனப் பொய் சொல்லாமல் போயிருந்தால் இந்தியா ரஷ்யாவோடு ஒப்பந்தம் செய்திருக்காது. சீனாவின் உள்நாட்டுக் குழப்பம் தடுத்திருக்காவிட்டால், அமெரிக்கா பாகிஸ்தானை திவாலாகாமல் காத்திருக்காவிட்டால், போலந்து தீர்மானத்தைப் பூட்டோ கிழிக்காமல் இருந்திருந்தால் வங்கதேசம் உருவாகியிருக்காது.

ஊழல், செயல்திறமின்மை முஜிபுர் ரஹ்மான் ஆட்சியில் மிகுந்து போராட்டங்கள் வெடித்தன. அவசரநிலையைக் கொண்டு வந்தார். குடும்பத்தோடு ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியா சுப்ரமணியம் சொன்னதைப்போல முதலிலேயே போரில் அடித்து ஆடியிருந்தால் பல லட்சம் மக்கள் இறந்திருக்க மாட்டார்கள். ராணுவம், அரசியல்வாதிகள், இடதுசாரிகள், கட்சிகள் இடையே அவநம்பிக்கை மிகுந்திருக்காது. நாடு விடுதலைக்குப் பின்பு அப்படி அவலங்களைச் சந்திருக்காது. வங்கதேச உருவாக்கம் இந்திராவின் மகத்தான ராணுவ வெற்றி, மிக மோசமான ராஜதந்திர தோல்வி.

 

Image result for srinath raghavan

 


1971 A GLOBAL HISTORY OF CREATION OF BANGLADESH
ஶ்ரீநாத் ராகவன்
பக்கங்கள் 358
விலை 599
PERMANENT BLACK

போஸ் தூக்கிலிடப்பட்டாரா? நேரு தான் இதற்கு காரணமா?


போஸ் மரணத்தில் நேருவுக்கு தொடர்பு இருப்பது போன்ற கருத்தை உண்டு செய்யும் ஒரு பேட்டி இன்றைய தமிழ் இந்துவில் வந்திருக்கிறது.
https://twitter.com/PUKOSARAVANAN/status/727016224429760512

இந்தப் பேட்டிக்கு வரிக்கு வரி மறுப்பு சொல்லுகிற அளவுக்கு எக்கச்சக்க பிழைகள்.
/ ஜப்பானில் இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி உருவாக்கியிருந் தார். அந்த படை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போரிட்டு மணிப்பூர் வரை முன்னேறி கைப்பற்றியிருந்தது. இந்த சமயத்தில்தான் ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதனால் போரில் இருந்து ஜப்பான் பின்வாங்கியது./ போஸ் படைகள் மகத்தான வெற்றியை நோக்கி சென்றது அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சால் தடைபட்டது போன்ற தோற்றம் இந்த வரியில் ஏற்படுகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த ராணுவ வரலாற்று ஆசிரியரான Srinath Raghavanதன்னுடைய புதிய புத்தகத்தில் ஆசியாவில் ஜப்பான் தன்னுடைய மிகப்பெரிய தோல்வியை போஸால் சந்தித்தது என்று பதிவு செய்கிறார். நேதாஜி படைகளை முன்னின்று நடத்தும் திறமையற்றவர் எனக்கருதிய ஜப்பான் களத்தில் அவரைப் போரிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது என்பதை சுட்டிக்காட்டுகிறார் Sunil Khilnani. (http://www.bbc.co.uk/programmes/b072jfcz) மேலும் இம்பால் போர் நடைபெற்றது நாற்பத்தி நான்கில், அணுகுண்டு வீசப்பட்டது அதற்கு அடுத்த வருடம். பசும்பொன் தேவர் எப்படி இத்தனை ஆயிரம் பேரை அவ்வளவு தூரத்துக்கு பிரிட்டிஷ் கண்ணில் மண்ணைத் தூவி அனுப்பினார்? போர்க்காலத்தில் கப்பல் போக்குவரத்து தமிழகத்துக்கும், ஜப்பானுடன் போர் நடந்து கொண்டிருந்த பகுதிகளுக்கும் இல்லை என்று சுட்டிக்காட்டுகிறார் பி.ஏ.கிருஷ்ணன்

இது இருக்கட்டும். /இந்திரா காந்தி ஆட்சியின்போது நேதாஜி உயிரோடு இருக்கிறாரா என்பதைக் கண்டறிய ‘கோஸ்லா’ விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனில் நேருவிடம் சுருக் கெழுத்தாளராக இருந்த ஷியாம்லால் ஜெயின் அளித்த வாக்குமூலத்தில் போஸ் அவர்களை நேரு காட்டிக்கொடுக்கிற வகையில் அட்லீக்கு கடிதம் ஒன்றை டிக்டேட் செய்ய, அதை தான் அடித்ததாக ஷியாம்லால் ஜெயின் சொல்கிறார். ஆசப் அலியோடு நேரு நடுவில் ஆசப் அலியின் இல்லத்தில் பேசியதாகவும் குறிப்பிடுகிறார். காண்க:http://www.dailypioneer.com/…/nehru-termed-bose-your-war-cr…

அந்த கடிதத்தினை மோடி அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஒவ்வொன்றாக எடுத்துக்கொள்வோம் கடிதம் டெல்லியில் இருந்து எழுதப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆசப் அலியின் வீட்டில் இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டதாகவும் ஷியாம்லால் ஜெயின் சொல்கிறார்.

முதலில் தேதி டிசம்பர் 26, 1946 அன்று இந்தக்கடிதம் ஆசப் அலி முன்னிலையில் அடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆசப் அலி அதற்கு முந்திய நாள் சென்னையில் காமராஜர் ராஜாஜி கோஷ்டி சிக்கலை தீர்க்கும் வேலையில் இருந்தார். கடிதம் அடிக்கப்பட்டதாக சொல்லப்படும் நாளில் அவர் மும்பையில் படேலை சந்தித்து உரையாடினார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ். அவர் அடுத்த நாள் தான் டெல்லிக்கு கிளம்பிச் செல்கிறார் என்பதும் செய்தித்தாள் செய்திகளின் மூலம் தெளிவாக புலப்படுகிறது. டெல்லியில் கடிதம் அடிக்கப்பட்ட நாளில் ஆசப் அலி இல்லை!

 

சரி நேரு இருந்தால் கூட போதுமே. கதையை முடித்துவிடலாம் என்று கருதினால் அதற்கும் வழியில்லை. நேரு இந்தியா முழுக்க சுற்றுப்பயணத்தில் அப்பொழுது இருந்தார். கல்கத்தா, பாட்னா என்று பயணம் மேற்கொண்டிருந்த நேரு இருபத்தி ஆறு டிசம்பர் முதல் இருபத்தி ஒன்பது டிசம்பர் வரை அலகாபாத்தில் இருந்திருக்கிறார். மதன் மோகன் மாளவியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் அனுப்பியிருக்கிறார். மகளுடன் இணைந்து ‘DISCOVERY OF INDIA’ நூலின் பிழை திருத்தும் பணியை டிசம்பர் 29 அன்று அலகாபாத்தில் மேற்கொண்டு இருக்கிறார். ஆக, அவர் டெல்லியில் இந்தக் கடிதம் எழுதப்பட்ட்ட காலத்தில் இருக்கவில்லை.

ஆதாரங்களுக்கு காண்க:

https://raattai.wordpress.com/…/nehru-was-in-allahabad-fro…/

கோஸ்லா கமிட்டியின் முன்னால் இந்த வாக்குமூலத்தை ஷியாம்லால் ஜெயின் வழங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால், கோஸ்லா கமிட்டியின் இறுதியின் அறிக்கையில் இந்தக் கடிதம் பற்றிய சிறுகுறிப்பு கூட இல்லை. இந்த வாக்குமூலம் தரப்பட்டதாக சொல்லப்படும் முதல் கதை போஸின் உறவினர் பிரதீப் போஸ் வாஜ்பேயிக்கு 1998-ல் எழுதிய கடிதத்தில் தான் முதன்முதலில் இடம்பெறுகிறது. அதை வாஜ்பேயி அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதை ஏன் என்று யோசித்துக் கொள்ளலாம்.http://www.telegraphindia.com/116…/…/nation/story_65592.jsp…

இந்த ஷியாம்லால் குறிப்பிடும் கடிதத்தில் சோவியத் ரஷ்யா வெறும் ரஷ்யா என்று தற்கால வழக்கில் இருக்கிறது. அதேபோல நேதாஜியை போர்க்குற்றவாளியாக ஆங்கிலேய அரசு அறிவிக்கவில்லை. அவரை போர்க்குற்றவாளி என்று இந்தக்கடிதம் பிழையாக குறிப்பிடுகிறது. அதேபோல எல்லா கடிதங்களிலும் இருக்கும் நேருவின் கையெழுத்து இந்தக் கடிதத்தில் இல்லை.

இதற்குப் பிறகு வாய்மொழிக் கதைகளாக வழங்கப்படும் சிலவற்றை கட்டுரை சொல்லிச்செல்கிறது. அவற்றுக்கு ஆதாரங்கள் எழுபது வருடங்களாக கிட்டவில்லையா என்ன? இறுதியாக ரஷ்யாவில் வைத்து ஸ்டாலின் போசை கொடுமைப்படுத்தினார் என்று உண்மையை மட்டுமே பேசும் சுப்ரமணிய சுவாமி சொன்னதை ஆதாரமாக சுட்டுகிறது கட்டுரை. ரஷ்யாவுக்குள் போஸ் நுழைந்திருக்கிறாரா என்று அறிய இந்திய அரசு கேட்ட கேள்விக்கு ‘அவர் இங்கே நுழையவில்லை.’ என்று சோவியத் அரசு பதில் தந்திருக்கிறது.http://www.ndtv.com/…/netajis-death-grandnephew-releases-se…

மேலும் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் போஸ் குறித்து ரஷ்ய அரசு எந்த ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்று கையை விரித்துவிட்டது.
போஸ் மரணத்தில் நேருவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த ஒரே ஒரு கடிதமும் போலியானது என்று வரலாற்று ஆசிரியர்கள் உறுதி செய்கிறார்கள். தரவுகளும் இது புனையப்பட்ட கடிதம் என்பதை நிறுவுகிறது. ஜப்பான் இந்த வருட இறுதியில் தன்னிடம் இருக்கும் இரண்டு கோப்புகளை வெளியிடுகிறது. மேலும் மூன்றுநாடுகளிடம் இந்திய அரசு கோப்புகளை வெளியிடச்சொல்லி கேட்டிருக்கிறது. அதுவரை போஸ் விஷயத்தில் நேரு தவறிழைக்காத மனிதர் என்று உறுதிபடச்சொல்லலாம். முக்குலத்தோர் ஓட்டுக்களை வாங்கும் முனைப்பில் இருக்கும் ஒரு சங்கத்தலைவரின் பேட்டியின் கருத்துக்களை ஒருமுறை சரிபார்த்துவிட்டு பதிப்பித்து இருக்கலாம் Tamil The Hindu

மாவோயிஸ்ட்கள் ஆதிவாசிகளின் பாதுகாவலர்கள் இல்லை!


மக்கள் சிவில் உரிமைகள் கூட்டமைப்பின் முப்பத்தி ஆறாவது ஜெயபிரகாஷ் நாராயணன் நினைவு சொற்பொழிவில் வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா ‘சுதந்திர இந்தியாவில் ஆதிவாசிகளின் அவலகரமான நிலைமை’ எனும் தலைப்பில் உரையாற்றினார். அதன் எழுத்து வடிவம் இது:
 மக்கள் சிவில் உரிமைகள் கூட்டமைப்பு நடத்தும் இந்த ஜெயபிரகாஷ் நாராயணன் பேசுவதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. இந்த அமைப்பின் நெடிய பயணத்தில் நான் முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக இணைந்து பயணிக்கிறேன். சுப்பாராவ் அவர்கள் ‘நாம் குற்றவாளிகள்’ என்கிற தலைப்பில் வெளியிட்ட துண்டறிக்கை எண்பத்தி நான்கின் சீக்கிய படுகொலைகளின் பின்னால் இருந்த அநீதியை உலகுக்குப் புலப்படுத்தியது. பாகல்பூரில் இஸ்லாமிய நெசவாளர்கள் எத்தகு கொடிய வன்முறைக்குச் சக இந்துக்களால் ஆட்படுத்தப்பட்டார்கள் என்பதை நேரில் காணும் வாய்ப்பு இந்த அமைப்பாலேயே எனக்குக் கிடைத்தது. சுற்றுச்சூழல் குறித்துக் கவனம் பெரிதாக ஏற்படுவதற்கு முன்பே சுரங்கப் பணிகளால் காடுகள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன, காடுகள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நேரிடும் சிக்கல்கள் என்பன குறித்து விரிவான அறிக்கைகள் வெகுகாலத்துக்கு முன்னரே அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.
Displaying IMG_0455.JPGDisplaying IMG_0455.JPG
ஜெயபிரகாஷ் நாராயணனை ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் மகத்தான போராளியாகப் பலருக்குத் தெரியும். அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் அவர் நடத்திய தீரமிகுந்த இரண்டாவது விடுதலைக்கான போரும் மறக்க முடியாத ஒன்று. அவர் அதே சமயம் காஷ்மீரிகள், நாகாக்கள் ஆகியோரோடு இந்திய அரசு பேசுவதற்கான, உரையாடல் நிகழ்த்தி சமரசம் செய்து கொள்வதற்கான சூழலை உருவாக்கித் தந்தவர். அவர் காஷ்மீர் சிக்கலில் சொன்னதை நேரு, சாஸ்திரி, இந்திரா என்று யாரேனும் கேட்டிருக்கலாம். படேல் ‘மோசமான தலைவலி’ என அழைத்த காஷ்மீர் சிக்கல் பெரும் இன்னலைத் தரும் தீராத மைக்ரேன் தலைவலியாக மாறியிருக்காது. மேலும், ஜெ.பி கிராம சுயாட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று விடுதலைப் பெற்ற காலத்திலேயே நேருவுக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தினார். வெறுமனே, பிரிட்டனின் நாடாளுமன்ற, வெஸ்ட்மினிஸ்டர் பாணியிலான ஜனநாயகமே முழு ஜனநாயகம் என்பது குறைபாடுள்ள பார்வை எனச் சரியாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆதிவாசிகளின் நிலைமை சுதந்திர இந்தியாவில் மிகுந்த கவலைக்கிடமான ஒன்றாக இருக்கின்றது. இந்த வரலாறு விடுதலைக்கு ஒரு வருடத்துக்கு முன்னரே துவங்கி விடுகிறது. 13/12/46 அன்று நேரு வழிநடத்திய இடைக்கால அரசு அரசமைப்பு சட்டக்குழுவின் முன்னால் ‘குறிக்கோள் தீர்மானங்கள்’ விவாதத்துக்கு வந்தன. இன்றைக்கு அடிப்படை உரிமைகள், வழிகாட்டு நடைமுறைகள் எனக் கொண்டாப்படும் யாவும் அதில் அடங்கியிருந்தன. நேரு அவற்றை அறிமுகம் செய்து பேசுகிற பொழுது,
‘சமூக, பொருளாதார, அரசியல் நீதி உறுதி செய்யப்படும். வாழ்க்கை நிலை, வாய்ப்புகள் ஆகியவற்றில் சமமான வாய்ப்புகள் வழங்கப்படும். அனைவரும் சட்டத்தின் முன்னர்ச் சமமாக நடத்தப்படுவர். கருத்துரிமை, வழிபாட்டு உரிமை, கல்வி உரிமை, ஒரு இடத்தில் கூடும் உரிமை, விரும்பும் செயலை செய்யும் உரிமை ஆகியவை சட்டம், பொது நீதிக்கு உட்பட்டு வழங்கப்படும். அதே சமயம், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட, பழங்குடிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரின் பாதுகாப்பு விடுதலை இந்தியாவில் உறுதி செய்யப்படும்.’ என்று வாக்களித்தார்.
இந்தத் தீர்மானங்கள் குறித்துப் பழமைவாதியான புருஷோத்தமதாஸ் தாண்டன், இந்துத்வவாதியான ஜனசங்கத்தின் ஷ்யாமபிரசாத் முகர்ஜி, பட்டியல் ஜாதியினரின் தலைவரான அம்பேத்கர், எம்.ஆர்.ஜெயகர், பொதுவுடைமைவாதியான மினு மசானி, பெண்கள் இயக்கத் தலைவரான ஹன்சா மேத்தா, இடதுசாரியான சோம்நாத் லஹிரி என்று பலரும் இந்தத் தீர்மானங்களை விவாதித்தார்கள். ஒருவர் இந்தத் தீர்மானம் குறித்துப் பேச எழுந்தார்.
அவர் இந்திய ஹாக்கி அணியில் கலக்கியவரும், கிறிஸ்துவராக இருந்து பின்னர் அம்மதத்தை விட்டு வெளியேறியவரும் ஆன பழங்குடியினத் தலைவர் ஜெய்பால் சிங். அவர் பின்வருமாறு பேசினார்:
ஒரு காட்டுவாசியாக, ஆதிவாசியாக நான் இந்தத் தீர்மானத்தின் நுணுக்கங்களை நான் உணர்ந்திருப்பேன் என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள். என் பகுத்தறிவு, என்னுடைய மக்களுடைய பகுத்தறிவு நாம் விடுதலைச் சாலையில் இணைந்து பயணித்துப் போரிடவேண்டும் என்று சொல்கிறது. நெடுங்காலமாக ஒரு குழு மோசமாக இந்தியாவில் நடத்தப்பெற்றது என்றால் அது நாங்கள் தான். அவமானம் தரும் வகையில் நடத்தப்பட்டும், நிராகரிக்கப்பட்டும் நாங்கள் 6,000 வருடங்கள் அடக்குமுறையில் வாழ்ந்து வருகிறோம். சிந்து சமவெளி நாகரிகத்தின் குழந்தையான நான் எங்களுக்குப் பின்னர்ச் சிந்து சமவெளிக்கு வந்து எங்களைக் காட்டுப் பகுதியை நோக்கி நீங்கள் துரத்தினீர்கள் எனச் சொல்லமுடியும்.
என் மக்களின் வரலாறு முழுக்கத் தொடர் சுரண்டல், தங்களின் இருப்பிடத்தை விட்டு ஆதிவாசிகள் அல்லாத இந்திய குடிகளால் வெளியேற்றப்படுவது ஆகியவற்றால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வரலாறு நெடுக போராட்டங்கள், குழப்பங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. என்றாலும், பண்டித நேருவின் வார்த்தையை நான் நம்புகிறேன். நீங்கள் எல்லாரும் விடுதலை இந்தியாவின் சமமான வாய்ப்புகளை வழங்கி யாரையும் புறக்கணிக்காமல் செயல்படும் புதிய அத்தியாயத்தைப் படைக்கப்போவதாகச் சொல்லுவதை முழுமையாக நம்புகிறேன்.
இந்த உரை நிகழ்த்தப்பட்டு எழுபது வருடங்கள் ஆகிவிட்டது. ஆதிவாசிகளின் நிலைமை இந்தியாவில் எப்படியிருக்கிறது?அவர்கள் இன்னமும் சுரண்டப்படுகிறார்கள், புறக்கணிக்கப்படுகிறார்கள், தங்களின் நிலங்களை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். பத்து கோடி பழங்குடியின மக்களில் 85% பேர் மத்திய இந்தியாவிலும் 15% பேர் வடகிழக்கிலும் வாழ்கிறார்கள். இவற்றில் 1.2 ஆதிவாசி என்கிற சொல் நிலத்தின் ஆதிக்குடிகள் எனப் பொருள்படும். குஜராத்தில் துவங்கி ஒரிசா வரை மத்திய இந்தியாவில் பழங்குடியினர் பெரும்பாலும் மலைப்பகுதிகளில் வசிக்கிறார்கள். இவர்களை ஆதிவாசிகள் என்று இந்த உரையாடலில் அழுத்தமாக அழைப்பேன்/ சமவெளியில் வசிக்கும் மக்களுடன் அவர்களுக்கு இணக்கமான உறவு இருந்தது. தேன், மருத்துவப் பச்சிலைகள் தந்துவிட்டு உப்பு முதலிய பிற பொருள்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களின் உறவு இருந்தது.
 ஆங்கிலேயர் காலத்தில் ஆதிவாசிகள் மீதான சுரண்டல் வேகமெடுத்தது.
தொடர்வண்டிகள் ஏற்படுத்தி ஆங்கிலேயர்கள் ஆதிவாசிகளின் நிம்மதியான வாழ்க்கையைக் குலைத்தார்கள். அவர்கள் உருவாக்கிய சாலைகள், தொடர்வண்டிகள் அதுவரை நுழைய முடியாமல் இருந்த ஆதிவாசிகள் பகுதிக்குள் வியாபாரிகள், ஒப்பந்தக்காரர்கள் நுழைந்தார்கள். அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. அம்மக்கள் சுரண்டப்பட்டார்கள். இதற்கு எதிரான தீவிரமான எழுச்சிகள், ஆயுதப்போராட்டங்கள் எழுந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சந்தால் புரட்சியில் (1830-1850) துவங்கி பிரஸா முண்டா (1890) தலைமையிலான கலகம், ஆந்திராவில் ஆலடி சீதாராமா ராஜூ (1920) இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கும் வரை போராட்டங்கள் வெவ்வேறு வகையில் எழுந்தன.
விடுதலை கிடைத்த பொழுது ஆதிவாசிகளுக்கு ஒரு ‘புதிய அத்தியாயம்’ காத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. மக்களியல் ஆய்வாளர் அரூப் மகாராத்தா பல்வேறு தரவுகளை ஒப்பிட்டு அதிர்ச்சி தருகிறார். ஆதிவாசிகள், தலித்துகள் இருவரும் ஒப்பிடப்படுகிறார்கள். கல்வியறிவில் முறையே 23, 30 % என்கிற அளவிலும், பள்ளியை விட்டு விலகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் 62, 48 சதவிகிதத்திலும் 50, 40 என்கிற சதவிகிதத்தில் அவர்களின் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் நிலையும் உள்ளது. இவை ஆதிவாசிகள் மிக மோசமான நிலையில் இருப்பதையும் அவர்கள் நிலை அவர்களைப் போலவே கடும் அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றுக்கு ஆளாகும் தலித்துகளை விட மோசமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.
ஆதிவாசிகள் மிக மோசமான சூழலில் வாழ்கிறார்கள். அடிப்படை சமூக வசதிகளான நல்ல குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி, சுத்தமான கழிப்பறைகள் கூட அவர்களுக்குப் பெரும்பாலும் கிடைப்பதில்லை. சமூகவியல் கூறுகள் நமக்குச் சொல்வது ஒன்றுதான். புதிய அத்தியாயம் எதுவும் இம்மக்களுக்கு எழுதப்படவில்லை. தலித்துகளுக்கு அடிப்படை வசதிகள் மிகவும் மோசமான அளவுக்கே கிடைக்கிறது. அதைவிட அவலமான சூழலில் ஆதிவாசிகளின் நிலைமை உள்ளது. அதே சமயத்தில் அரசின் கொள்கைகள் ஆதிவாசிகளை அடிக்கடி புலம்பெயர வைக்கிறது.
 ஆதிவாசிகள் வாழும் காடுகள் செம்மையானவை, அங்கே நெடிய நதிகள் விரிந்து ஓடுகின்றன, எண்ணற்ற தனிமங்கள் இந்தப் பகுதிகளில்
மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. இவை மூன்றையும் சேர்த்து ‘ஆதிவாசிகளின் முப்பெரும் சாபம்’ என்று சொல்வேன். விடுதலைக்குப் பிறகு தொழில்மயமாக்கல், வளர்ச்சி ஆகியவை வேகமெடுத்தது. அப்பொழுது தொழிற்சாலைகள், அரசு சுரங்குகள், அரசு நீர்மின் திட்டங்கள் ஆகியவை இப்பகுதிகளைக் கூறுபோட்டு எழுந்தன. சமவெளி மக்களின் நல்வாழ்வுக்கு இம்மக்கள் பலிகொடுக்கப்பட்டார்கள். எத்தனை லட்சம் மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகி இருப்பார்கள் என்பது குறித்துப் பல்வேறு கணிப்புகள் உள்ளன. அதே சமயம், 1.2 கோடி வரை மிதமான அளவீடுகளும் அதிகபட்சமாக 1.5 கோடி வரையும் இந்த எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. எப்படியிருந்தாலும், மிக அதிக எண்ணிக்கையிலான ஆதிவாசிகள் தங்களின் இருப்பிடங்களை விட்டு அரசின் கொள்கைகளால் துரத்தப்படுகிறார்கள் என்பது மட்டும் உறுதி.
631b5950-0d94-411b-ab01-b363a816044a
இந்திய மக்கள் தொகையில் எட்டு சதவிகித எண்ணிக்கையில் உள்ள ஆதிவாசிகள் நாற்பது சதவிகித அளவுக்கு இடப்பெயர்வுக்கு உள்ளாகும் ஆபத்தில் இருப்பதாகச் சமூகவியல் அறிஞர் வால்டர் பெர்னாண்டஸ் கண்டறிந்து உள்ளார். அதாவது இடப்பெயர்வுக்கு உள்ளாவதற்கு ஆதிவாசிகள் அல்லாத மக்களைவிட ஐந்து மடங்கு அதிகம். இப்படிச் செய்யப்படும் இடப்பெயர்வில் ஒழுங்கான இழப்பீடோ, வசதிகளோ தரப்படுவதில்லை. இம்மக்கள் தங்களின் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை, கிராமத்தை, நிலத்தை, மொழியை, நாட்டுப்புற பாடல்களை, இசையை முப்பெரும் சாபத்தால் இழந்து வெளியேற நேரிடுகிறது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடர்வண்டிப்பாதைகள், சாலைகள் அமைப்பதற்கு ஆதிவாசிகளின் வனங்களுக்குள் அரசு நுழைய முயற்சித்த பொழுது கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இத்தனைக்கும் விடுதலைக்குப் பிந்தைய இந்திய அரசைப் போலப் பெரிய அணைகளையோ, கனிம வள சுரண்டலையோ ஆங்கிலேய அரசு ஆதிவாசிகளின் வாழ்விடங்களில் மேற்கொள்ளவில்லை. காடுகளின் வளங்களையே அது அள்ளிக்கொண்டு போனது.
விடுதலைக்குப் பிந்தைய முதல் பதினைந்து வருடங்களில் வளர்ச்சி திட்டங்கள்
பழங்குடியின மக்களின் வாழ்விடங்களின் வழியாக மேற்கொள்ளப்பட்ட பொழுது அம்மக்கள் போராட்டங்களை நடத்தவில்லை. புதிதாக எழுந்திருக்கும் அரசு தங்களின் வாழ்க்கையை முன்னேற்றி வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துப் போகும் என்று நம்பினார்கள். விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று சிறைக்குச் சென்று நாட்டுக்காகத் தியாகம் செய்த தலைவர்கள் நாட்டை ஆள்வது அவர்களுக்கு நம்பிக்கை தந்தது. பிறருக்கு மக்களுக்குத் தங்கள் நிலங்களைக் கொடுத்தால் தங்களின் வாழ்க்கையும் முன்னேறும் என்று உளமார அவர்கள் நம்பினார்கள். கல்வி, முன்னேற்றம், அடிப்படை வசதிகள் தங்களுக்குக் கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். வேலைவாய்ப்புகள், கல்லூரிகளில் இடம் ஆகியவற்றைக் கூட அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஓரளவுக்குத் தன்மானம் மிகுந்த வாழ்வை அவர்கள் எதிர்நோக்கினார்கள். அந்த நம்பிக்கை பொய்க்க ஆரம்பித்த பொழுது தான் கிளர்ச்சிகள் ஏற்பட்டன.
1966-ல் பிரவீர் சந்திர பன்ஜ் தியோ தலைமையில் விடுதலை இந்தியாவின் ஆதிவாசி கிளர்ச்சி முதல்முறையாக நிகழ்த்தப்பட்டது. அரசின் வனக்கொள்கைகளுக்கு எதிராக ஆதிவாசிகளை அந்த முன்னாள் பழங்குடியின மகாராஜா அணிதிரட்டினார். போலீஸ் இரும்புக்கரம் கொண்டு அவர்களை அடக்கியது/ பிரவீர் சந்திர பன்ஜ் தியோ தன்னுடைய ஊரான ஜந்தர்பூரில் சுட்டுக்கொல்லப்பட்டார். எழுபதுகளில் நிலவுரிமை சார்ந்து பூமி சேனா, முன்னாள் பாதிரியார்கள் ஆதிவாசிகளின் நில, வன உரிமைகளைக் காக்க நடத்திய கஷ்டகாரி சங்கத்தனா இயக்கங்கள் இயங்கின. ஜார்கண்ட் இயக்கம் பழங்குடியின தலைவரான ஜெய்பால் சிங்கின் கருத்தாக்கமான தனிப் பழங்குடியின மாநிலம் என்பதை அமைக்கும் நோக்கத்தோடு எழுந்தது. மத்திய இந்தியாவின் பீகார், ஒரிசா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் இருக்கும் இருபது மாவட்டங்களை ஒன்றாக இணைத்து ஒரு மாநிலத்தை அமைக்க அவர் விரும்பினார். 56-ல் மாநில மறுசீரமைப்புக் குழுவிடம் அந்த வைத்த பொழுது அது ஏற்கப்படவில்லை. ஜெய்பால் சிங்கின் மாநிலமான பீகாரில் இருந்த பழங்குடியின மாவட்டங்கள் கனிமங்கள், வன வளங்களைக் கொடுத்தார்கள். ஆதிவாசிகள் அல்லாத பிராமணர்கள் அவர்களை ஆண்டார்கள். அவர்களின் சுரண்டலை எதிர்த்து இம்மக்கள் போராடினார்கள். அந்தப் போராட்டம் நிகழ்ந்தது. அது வன்முறையைப் பயன்படுத்தியது.
எண்பதுகளில் பெரும்பாலும் ஆதிவாசிகளை உள்ளடக்கிய நர்மதா பச்சோ அந்தோலன் இயக்கம் மேதா பட்கரால் துவங்கி மேற்கொள்ளப்படுகிறது. நர்மதா அணையின் மீது கட்டப்படும் சர்தார் சரோவர் அணைக்கு எதிராக இந்த இயக்கம் இயங்குகிறது. இந்த அணைக்கு எதிரான இயக்கம் வித்தியாசமானது. நதியின் மீது கட்டப்படும் அணையின் பயன்கள் பெரும்பாலும் குஜராத்துக்குச் செல்கிறது. ஆனால், பாதிக்கப்படும் மக்கள் மத்திய பிரதேச மாநிலத்தைப் பெரும்பாலும் சேர்ந்தவர்கள். அதிலும் அறுபது சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்கள் பழங்குடியினர். இந்தப் போராட்டம் இன்றுவரை தொடர்கிறது/.
இந்த அநீதிகள், இடப்பெயர்வுக்கு எதிரான போராட்டங்களை எல்லாம் விடப் பெருமளவில் நிகழும் இன்னொரு கிளர்ச்சி மாவோயிஸ்ட்கள், நக்சலைட்கள் ஆகியோரால் முன்னெடுக்கப்படுகிறது. 67-ல் மேற்குவங்கத்தின் நக்சல்பாரியில் பழங்குடியினரையும் உள்ளடக்கி எழுந்த இந்த இயக்கம் வன்முறையைத் தன்னுடைய முறையாகக் கையாண்டது. அந்த அமைப்பு தன்னுடைய போராளிகளாக ஆதிவாசிகளை மாற்றிக்கொண்டது. முதலில் மாவோயிச இயக்கங்கள் மேற்கு வங்கத்தில் கானு சன்யால், சாரு மஜூம்தார் ஆகியோரால் துவங்கப்பட்டது. ஆந்திராவில் நாகி ரெட்டியின் தலைமையில் ஸ்ரீகாகுளம், அதிலாபாத் மாவட்டங்களில் இந்தக் கிளர்ச்சி எழுந்தது. ஆரம்பத்தில் இருந்தே மாவோயிஸ்ட இயக்கம் பழங்குடியினரின் பகுதிகளில் இயங்கியது. அது அவ்வப்பொழுது எழுச்சி பெற்று மீண்டும் அடக்கப்படும். 6o களிலிருந்து தற்போது வரை பல்வேறு மத்திய இந்திய மாவட்டங்களில் இந்த இயக்கம் பழங்குடியினரை அங்கமாகக் கொண்டு இயங்குகிறது. மகாராஷ்டிராவின் கச்சிரோலி, சத்தீஸ்கரின் பஸ்தார், ஒரிசாவின் கலஹாண்டி, கோராபுட், ஜார்க்கண்டின் பெரும்பான்மை மாவட்டங்களில் இந்த இயக்கம் இயங்கி வருகிறது.
அறுபதுகளில் இருந்து சுரண்டல், இடப்பெயர்வு ஆகியவற்றுக்கு உள்ளானதற்கு எதிராகக் கிளரச்சிகளில் பல்வேறு பகுதிகளில் ஆதிவாசிகள் இயங்கி வருகிறார்கள். இவை மூன்று வகையில் நடைபெறுகின்றன. ஆதிவாசிகளின் பாரம்பரிய தலைவர்கள் பிரவீர் சந்திர பன்ஜ் தியோவைப் போன்றோர் வழிநடத்துவது நடக்கிறது. சமூகச் சேவை இயக்கங்களான கச்டகாரி சங்கத்தன், நர்மதா பச்சோ அந்தோலன் முதலிய இயக்கங்கள் அமைதிவழியில் இன்னொருபுறம் செயல்படுகின்றன. ஆயுதம் ஏந்தி மாவோயிஸ்ட்கள், நக்சலைட்கள் போராடுகிறார்கள்.
இம்மக்களைப் போலவே கொடுமையான அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றுக்கு உள்ளாக்கப்படும் ஆதிவாசிகளின் போராட்டங்கள் ஆச்சரியம் தரும் வகையில் அமைதி வழியில் நடக்கிறது. அவர்களின் நலன்களைப் பேசும் அரசியல் தலைவர்களான கன்ஷி ராம், ராம் விலாஸ் பஸ்வான் மாயாவதி முதலியோர் எழுந்தார்கள். மாயவாதி மூன்று முறை உபியின் முதல்வராக இருந்துள்ளார். அடுத்துவர இருக்கும் தேர்தலிலும் அவர் முதல்வர் ஆவார் என்கிறார்கள். பல்வேறு கூட்டணி அரசுகள், மாநில அரசுகளைத் தலைமையேற்று நடத்துவதும் தலித் தலைவர்களால் செய்யப்பட்டது.
மாயாவதி 2006-ல் நடந்த உத்திர பிரதேச சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் பெரும்பான்மை பெற்றார். அம்மக்கள் சட்டரீதியான வழிமுறைகளையே தங்களின் எழுச்சிக்கு பயன்படுத்துகிறார்கள். ஆதிவாசிகளைவிட ஏன் தலித்துகள் ஏன் சட்டரீதியான வழிமுறைகளைச் சிறப்பாகப் பயன்படுத்துகிறார்கள்? ஆதிவாசிகள் மாவோயிஸ்ட்கள், சமூகச் சேவை இயக்கங்களைக் கொண்டு தங்களின் எழுச்சியை மேற்கொள்ள முயல்கிறார்கள். தலித்துகள் சமயங்களில் மாவோயிஸ்ட்களுடன் இணைந்தாலும் பெரும்பாலும் அமைதி வழியில் போராடுகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு. பல்வேறு காரணங்கள் இருந்தாலும் நான் இரண்டு காரணங்களை முன்வைக்கிறேன். ஒன்று வரலாற்று ரீதியானது, இன்னொன்று புவியியல் சார்ந்தது.
அப்பட்டமாக, நேராகச் சொல்வது என்றால் இதற்குக் காரணம் அண்ணல் அம்பேத்கர். ஆதிவாசி அம்பேத்கர் ஒருவர் அவர்களுக்குக் கிட்டவில்லை. ஆதிவாசிகளுக்கு ஒரு தேசிய தலைவர் இன்னமும் கிடைக்கவில்லை. அவரின் காலத்தில் மகாராஷ்டிராவில் மட்டுமே தலைவராகப் பார்க்கப்பட்ட அம்பேத்கர் இந்தியாவின் தலைவராக நேசிக்கப்பட்டு, போற்றப்பட்டுக் கொண்டாடப்படுகிறார், மறுகண்டுபிடிப்புக்கு அவர் உள்ளாகி இருக்கிறார். பிற தலைவர்கள் மாநிலத்தலைவர்களாகவோ, கட்சியின் முகமாகவோ மாற்றப்பட்டுவிட்ட சூழலில் அவர் இந்தியா முழுக்க இருக்கும் தலித்துகளின் நம்பிக்கை ஒளியாக உள்ளார். சுரண்டலுக்கு, ஒடுக்குமுறைக்கு எதிரான அவரின் வெற்றிகரமான போராட்டம் அவரை முன்மாதிரியாக ஆக்கியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தைப் பெருமளவில் உருவாக்கிய அம்பேத்கர் கல்வி, மக்களை ஒன்று சேர்த்தல், அமைதி வழியில் கிளர்ச்சி செய்வது ஆகியவற்றின் மூலம் தன்னுடைய மக்களுக்காகப் போராடினார். அம்பேத்கர் எப்பொழுதும் அரசமைப்புச் சட்டத்தின் வழியில் இயங்கினார். சத்தியாகிரகத்தில் கூட அவர் ஈடுபட்டார். கல்வி, அமைப்புகளைக் கொண்டு இயங்க அவர் காட்டிய வழியில் தலித்துகள் இயங்குகிறார்கள். அப்படியொரு வழிகாட்டும் தலைவர் ஆதிவாசிகளுக்கு இல்லை.
மேலும், ஆதிவாசிகள் பல்வேறு மொழிகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் கொண்டவர்களாக உள்ளார்கள். அவர்களின் மீதான வன்முறைகள், சுரண்டல்கள் பல்வேறு வடிவங்களை எடுக்கின்றன. அவர்கள் அனைவரும் தங்களின் சிக்கல்கள் ஒன்றே என்று இந்திய அளவில் அணிதிரளவில்லை. அதே சமயம் ஆதிக்க ஜாதி இந்துக்களின் கொடுமைகளுக்கு ஆளாகும் தலித்துகள் இந்திய அளவில் திரண்டு போராடுவது நிகழ்கிறது.
புவியியல் ரீதியாக ஆதிவாசிகள் பீடபூமியின் பகுதிகளில் பெரும்பாலும் வசிக்கிறார்கள். ஆந்திராவில், மகாராஷ்டிராவில் 9%, தமிழகத்தில் 1% என்று இருக்கும் அவர்கள் இந்தியாவின் பழங்குடியின மாநிலம் என அறியப்படும் சத்தீஸ்கரில் கூட 30% என்கிற அளவில் தான் இருக்கிறார்கள். தலித்துகளோ இந்தியா முழுக்கப் பரவியிருக்கும் சிறுபான்மையினராக உள்ளார்கள். அவர்கள் 350 – 400 மக்களவைத் தொகுதிகள் வரை வாக்குவங்கி கொண்டவர்களாக உள்ளார்கள். தமிழகத்தில், கர்நாடகாவில், ஆந்திராவில் என்று பல்வேறு மாநிலங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் பத்துச் சதவிகிதம் அளவுக்கு ஓட்டுக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சாபில் இது இருபது சதவிகிதத்தைக் கடந்து அவர்களின் எண்ணிக்கை இருக்கிறது. ஆதிவாசிகளோ அதிகபட்சம் எழுபது தொகுதிகளில் மட்டுமே காணப்படுகிறார்கள். இவ்வாறு ஒப்பிடுவதால் தலித்துகள் கொடுமைக்கு ஆளாவதில்லை என்று நான் சொல்வதாக எண்ணிக்கொள்ளாதீர்கள். தலித்துகள் கடும் அநீதிகள், சுரண்டல்கள், அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு அனுதினமும் ஆளாக்கப்படுகிறார்கள். அதே சமயம், அவர்கள் தங்களின் போராட்டத்தைத் தேர்தல் அரசியல், சட்ட ரீதியிலான வழிமுறைகளின் மூலம் மேற்கொள்கிறார்கள்.
நியாயமான, கவலையளிக்கும், நேர்மையான தங்களின் பிரச்சனைகளுக்கு அமைதி வழியில் போராடுவது., கருத்தை முன்னிறுத்துவது ஆகியவற்றைச் செய்கிறார்கள். ஆதிவாசிகள் மாவோயிஸ்ட்களுடன் இணைந்து கொண்டு வன்முறையில் ஈடுபட்டு தங்களின் உரிமைகளைப் பெற்றுவிட முடியும் என்று எண்ணுகிறார்கள்.
முஸ்லீம்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளானாலும் அவர்கள் பெரும்பாலும் ஆயுதம் ஏந்துவது கிடையாது. அவர்கள் மாநில, நாடாளுமன்ற தேர்தல்களில் முக்கியமான தேர்தல் சக்தியாக உள்ளார்கள். எனினும், ஆதிவாசிகள் இவர்கள் இருதரப்பினரையும் விடக் கடுமையான ஒடுக்குமுறை, அநீதிகளுக்கு ஆளாகிறார்கள். அதேசமயம், அவர்கள் இந்தியாவில் மிகக்குறைந்த கவனமே பெறுகிறார்கள். அவர்கள் குறித்துப் பேச வேண்டிய அரசு, அதிகாரிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள். பல்கலை பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள் பெருமளவில் அவர்களை இந்தியாவின் சமமான குடிமக்களாக ஆக்க செயல்படுவதில்லை. இஸ்லாமியர்கள், தலித்துகள் குறித்தும் பெரிதாகக் கவனம் தரப்படுவதில்லை என்பது கவலை தருவது. தலித்துகள், முஸ்லீம்கள் மத்திய அமைச்சரவையில் பாஜக அரசைத் தவிர்த்து இடம்பெறுவது நிகழ்கிறது. முக்கியமான அமைச்சரவைகள், ஜனாதிபதி பதவி முதலிய அரசமைப்புப் பதவிகள் அவர்களுக்குக் கிட்டியிருக்கிறது. அதேசமயம் எந்த ஆதிவாசியும் இப்படிப்பட்ட இடங்களைக் கூட அடையவில்லை. தலித், முஸ்லீம் சிக்கல்கள் தேசிய பிரச்சனையாகக் காணப்படுகிற பொழுது, ஆதிவாசிகள் சிக்கல் உள்ளூர் பிரச்சனையாகவே முடிக்கப்பட்டு விடுகிறது.
அரசு, ஆதிவாசிகள் அல்லாத பிற குடிமகன்கள் ஆதிவாசிகளின் நலனில், போராட்டங்களில் கவனம் செலுத்தாமல் போனதால் ஏற்பட்ட மிகப்பெரிய இடைவெளியை தங்களுடையதாக மாவோயிஸ்ட்கள் மாற்றிக்கொண்டார்கள். ஆதிவாசிகளின் பகுதியில் மாவோயிசம் செழிப்பதற்கு வரலாறு, புவியியல் ஆகியவற்றோடு வேறொரு முக்கியக் காரணமும் உள்ளது. சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியில், தேச கட்டமைப்பில், ஜனநாயக அமைப்பில் ஆதிவாசிகள் மிகக்குறைவாகப் பெற்று, மிகப்பெரிய அளவில் இழந்திருக்கிறார்கள். ஆகவே, அந்தக் கடும் அதிருப்தியை மாவோயிஸ்ட்கள் தங்களுடையதாக மாற்றிக்கொள்வதில் வெற்றிக் கண்டிருக்கிறார்கள். ஆதிவாசிகளின் நலன்களைக் குறித்துக் குரல் கொடுப்பதை மாவோயிஸ்ட்கள் செய்வதாகக் காட்டிக்கொள்கிறார்கள்.
மாவோயிஸ்ட்கள் புவியியல் ரீதியாக வெற்றிகரமாக இயங்குவதற்கு ஆதிவாசிகள் வசிக்கும் மலைகள், வனங்கள் உதவுகின்றன. அவர்களின் கொரில்லா போர்முறைகளுக்கு அதுவே உகந்த நிலம். திடீரென்று தோன்றி தாக்கிவிட்டு மறைந்துவிட முடியும். காவல்துறையைச் சுட்டுக் கொல்வதோ, எதிர்பாராத தருணத்தில் அரசியல் தலைவர்களை அழிப்பதோ இந்த நிலப்பரப்பில் சுலபமான ஒன்றாக இருக்கிறது. மேலும் காவல்துறை ஒரு மாநில எல்லையைக் கடந்து நகர முடியாது என்பதால் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஆந்திரா என்று மாநிலம் விட்டு மாநிலம் தாவி தப்பிக்கும் போக்கும் ஆதிவாசிகளிடம் உள்ளது.
மிகக்குறைவாகப் பெற்று, அதீதமாக இழந்த பழங்குடியினர் மாவோயிஸ்ட்கள் கட்டுப்பாட்டில் உள்ளார்கள். அரசு எப்படி இவர்களை எதிர்கொள்வது. அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுபவனான நான் மாவோயிஸ்ட்களின் வன்முறையை ஏற்க மறுக்கிறேன். ஒரு கட்சி ஆட்சி ரஷ்யா, சீனாவில் எப்படிப்பட்ட படுகொலைகள், ரத்த வெள்ளம், கொடுமை, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்தன என்பதை உலக வரலாற்றின் மாணவனாக அறிவேன். அதனால் நான் மாவோயிஸ்ட்களை நிராகரிக்கிறேன். எப்படி ஒரு ஜனநாயக அரசு மாவோயிசத்தை எதிர்கொள்வது.
இருவழிகள் உள்ளன. காவல்துறையைக் கொண்டு இவர்களைக் கட்டுப்படுத்துவது ஒரு புறம் நிகழவேண்டும். மாவோயிஸ்ட்களைத் தனிமைப்படுத்தி, ஓரங்கட்டி, சரணடைய சொல்லவேண்டும், அவர்கள் அப்பொழுதும் வன்முறையைப் பின்பற்றுவார்கள் என்றால் அவர்களைச் சுட்டு வீழ்த்த வேண்டும். இன்னொரு புறம் வளர்ச்சியின் கனிகள் பழங்குடியின மக்களைச் சென்றடைய வேண்டும். நல்ல பள்ளிகள், மருத்துவ மையங்கள், சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும். PESA எனப்படும் கிராம சுயாட்சியை இப்பகுதிகளுக்குப் பரவலாக்க வேண்டும். ஐந்தாவது பட்டியலில் கனிம வளங்களின் மூலம் கிடைக்கும் லாபத்தில் பாதியை பகிர்ந்து கொள்ள இடமிருப்பதாக ஏ.எஸ்.சர்மா எனும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சொன்னதைப் பின்பற்ற வேண்டும்.
இவை இரண்டிலும் மத்திய அரசு தவறியிருக்கிறது. காவல்துறை செயல்பாட்டை அது அவுட் சோர்ஸிங் செய்கிறது. உங்கள் ஊரைச் சேர்ந்த மிக மோசமான உள்துறை அமைச்சர் என நான் உறுதியாகக் கருதும் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில், சல்வா ஜூடும் எனும் அநீதி சத்தீஸ்கரில் அரங்கேற்றப்பட்டது. மாநில ஆளும் பாஜக, மத்திய காங்கிரஸ் ஆகியவை கூட்டு சேர்ந்து இதனை அரங்கேற்றின. பதினான்கு முதல் இருபத்தி ஒரு வயது பழங்குடியின இளைஞர்கள் கையில் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டு மாவோயிஸ்ட்கள், பழங்குடியினர் எதிர்கொள்ளப்பட்டார்கள். இடதுசாரிகள் மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரித்து வந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் வங்க, இந்து, பத்ரோலக் கட்சி போலவே நடந்து கொள்வதால் இதற்கு எதிராகப் பெரிதாக எதுவும் முயலவில்லை. இது அரசமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தான் ஓய்வு பெறும் நாளன்று நீதிபதி ராவ் தலைமையிலான பெஞ்ச் அது சட்டத்துக்குப் புறம்பானது எனத் தீர்ப்பளித்துச் சல்வா ஜூடுமை கலைக்கும்படி சொன்னது. சத்தீஸ்கர் அரசு மத்திய அரசின் ஆசியோடு வேறு பெயர்களில் அடக்குமுறை சாம்ராஜ்யத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு காவல்துறையின் கையில் இல்லாமல் அது இப்படித் தவறாக அவுட் சோர்சிங் செய்யப்படுவது கவலைக்குரியது.
ஆதிவாசிகள் நம்முடைய பொருளாதார அமைப்பில் பெரும் கொடுமைக்கும், ஒடுக்குமுறைக்கும், துரத்தியடிக்கப்படுவதற்கும் உள்ளாகிறார்கள். அரசின் கட்டுப்பாட்டில் பொருளாதாரம் இருந்த பொழுது கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளானார்கள் என்றால், தாரளமயமாக்கல் காலத்தில் வளர்ச்சி என்கிற பெயரில் அவர்கள் அடித்து விரட்டப்படுகிறார்கள். பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் பரவியிருக்கிறார்கள் என்றாலும், ஓடிஸா எடுத்துக்காட்டுத் தாராளமயக்காமல் என்ன செய்திருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்கும். பதினைந்து வருடங்களுக்கு முன்வரை அங்கே மாவோயிஸ்ட்கள் தாக்கம் இல்லை. ஆனால், ஒரிசா அரசு சுரங்க நிறுவனங்களோடு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டது. பாக்சைட் முதலிய பல்வேறு தனிமங்கள் வெட்டியெடுக்கப்பட ஆதிவாசிகள் தங்களின் வாழ்விடங்களை விட்டு அதிகாரத்தைக் கொண்டு விரட்டியடிக்கப்பட்டார்கள். இப்பொழுது ஆறு மாவட்டங்கள் மாவோயிஸ்ட்கள் கட்டுப்பாட்டில் ஓடிசாவில் உள்ளன.
மாவோயிஸ்ட்களை எதிர்கொள்ள அரசு பாதுகாப்பை உறுதி செய்து, வளர்ச்சியில் ஆதிவாசிகளுக்குப் பங்கைத் தரவேண்டும். இதற்கு மாறாகக் கண்காணிக்கும், அச்சுறுத்தல் தரும் அடக்குமுறை அரசாக ஒருபுறமும், இன்னொரு புறம் உலகமயமாக்கல் காலத்தில் வளர்ச்சியின் கனிகளைச் சற்றும் ஆதிவாசிகளுக்கு வழங்கும் முயற்சிகளை மேற்கொள்ளாத புறக்கணிப்பை அரசு செய்கிறது. அரசும், குடிமக்களும் நிரப்பத் தவறிய இடத்தை மாவோயிஸ்ட்கள் பிடித்துக் கொண்டார்கள்.
அதேசமயம், ஏழைகளை விடுவிப்பவர்கள் என்றோ, பழங்குடியினரின் பாதுகாவலர்கள் என்று மாவோயிஸ்ட்கள் என எண்ணிக்கொள்ள வேண்டாம்.
ஆதிவாசிகள் தண்டகாரண்யம் பகுதியை விடுதலை பெற்ற பகுதியாக்க கனவு காண்கிறார்கள். சுக்மா, பஸ்தார் முதலிய மாவட்டங்களில் பரவியுள்ள அவர்கள் மத்தியில் உள்ள அரசை நீக்கிவிட்டுத் தாங்கள் ஆள பகல் கனவு காண்கிறார்கள். அவர்களின் போராட்டம் காடுகளில் வெற்றிகரமாக இயங்கலாம். சமவெளிக்கு வந்தால் அவர்கள் ராணுவத்தால் நசுக்கப்படுவார்கள். அதேபோலப் பழங்குடியினரிடம் கிடைக்கும் ஆதரவு விவசாயிகள், மத்தியவர்க்க மக்கள் ஆகியோரிடம் அவர்களுக்குக் கிடைக்காது. அவர்களின் சாகசம் மிகுந்த கனவு ஓரளவுக்குக் கிளர்ச்சியையும் பெருமளவில் அச்சத்தையும் ஒருங்கே எனக்குத் தருகிறது. எங்கெல்லாம் மாவோயிஸ்ட்கள் வருகிறார்களோ அங்கெல்லாம் கடும் வன்முறை நிகழ்கிறது. அரசும், அவர்களுக்கும் இடையே அப்பாவி ஆதிவாசி மக்கள் சிக்கி சீரழிகிறார்கள்.
அரசைப் போலவே சிறுவர்களை அவர்கள் தங்களின் படையில் சேர்க்கிறார்கள். மக்கள் கல்வி கற்க விரும்பாததால் பள்ளிகளைக் குண்டு வைத்து தகர்க்கிறார்கள். ஜெயபிரகாஷ் நாராயண் கனவு கண்ட கிராம சுயராஜ்யம் அவர்களின் எழுச்சிக்குத் தடை என்பதால் ஜனநாயக முறைப்படி நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்படும் கிராமத்தலைவர்கள் கடத்தி கொல்லப்படுகிறார்கள். அவர்கள் அமைதிவழி அரசமைப்பு வழிமுறை, அரசு அதிகாரத்தின் அடையாளமாக, வளர்ச்சியைக் கொண்டு வருபவர்களாக இருப்பதால் கிராமத் தலைவர்களைக் கொல்கிறார்கள். தகவல் சொல்லுபவர்கள், இருபக்கமும் நிற்காமல் அமைதியாக இருக்கும் அப்பாவிகள் ஆகியோர் மாவோயிஸ்ட்களால் கொல்லப்படுவது பலபேரால் நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வினை ஆற்றும், ஜனநாயகம், அரசமைப்புக்கு எதிரான, வன்முறை, ரத்த வெறி மிகுந்த கருத்தாக்கம் ஒன்றே மாவோயிஸ்ட்களால் முன்னெடுக்கப்படுகிறது. எனவே. இவர்களைக் கனவு நாயகர்களாக, தன்னிகரில்லா தலைவர்களாகக் கொண்டாடுவது அபத்தமானது.
ஏன் மாவோயிசம் ஆதிவாசிப்பகுதியில் வளர்ந்துள்ளது என்பதையும், ஆதிவாசிகள் நம்முடைய ஜனநாயகத்தில் மற்ற எல்லாச் சிறுபான்மையினரை விடவும் கடும் அடக்குமுறை, அநீதிகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அதேசமயம், மாவோயிஸ்ட்களை அதற்கான தீர்வு என்று எண்ணிக்கொள்ளக் கூடாது. சமூகச் சேவை இயக்கங்கள், மருத்துவர்கள். பல்வேறு அதிகாரிகள் மருத்துவ வசதிகள், கல்வி ஆகியவற்றை ஜனநாயக முறையில் பழங்குடியினருக்கு வழங்க முடியும் எனச் செய்துகாட்டியுள்ளார்கள். அதை நாம் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். காங்கிரஸ் அரசு கொண்டுவந்த வன உரிமைச் சட்டம் தீரமிகுந்த பழங்குடிகள் அமைச்சரால் ஏற்பட்டது. அதை மற்ற அமைச்சர்கள் நிறைவேற்ற தயாராக இல்லை. அதே போல, இப்பொழுதைய அரசு வன உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகும் செயல்களை தொடர்ந்து செய்கிறது, அனுமதிக்கிறது.
என்னுடைய உரையின் இறுதிப்பகுதிக்கு வந்துள்ள நான் ஆதிவாசிகளின் அவலகரமான நிலையை எட்டுப் புள்ளிகளில் முக்கியமாக நிகழ்வதாகக் காண்கிறேன். அது இன்னமும் அதிகமாக இருக்கும் என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டும்.
வளமிகுந்த வனங்கள், நெடிய நதிகள், கனிம வளங்கள் ஆகிய மூன்றும் ஒன்றாகச் சேர்ந்த பகுதிகளில் வாழும் ஆதிவாசிகள் தாராளமயமாக்கல் காலத்தில் முப்பெரும் சாபத்துக்கு உள்ளாகி விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
தேசிய இயக்கத் தலைவர்களான காந்தி முதலியோர் பெண்கள்., இஸ்லாமியர்கள், தலித்துகள் ஆகியோருக்காகப் பேசினாலும் ஆதிவாசிகளைக் கண்டுகொள்ளவில்லை. அண்ணல் அம்பேத்கரும் கூட ஆதிவாசிகளின் நலனில் அக்கறையில்லாதவராக, கடுமையான கருத்துக்களைக் கொண்டவராக இருந்தார். இதனால் அவர்கள் நலன் கவனம் பெறவே இல்லை.
மக்கள்தொகையில் குறிப்பிட்ட சில பகுதியில் அவர்கள் அடங்கிவிடுவதால் தேர்தல் அரசியலில் அவர்கள் கவனிக்கப்படுகிறவர்களாக இல்லை.
அவர்களுக்கு இருக்கும் இட ஒதுக்கீட்டையும் அவர்களைவிட நன்றாக ஆங்கிலம் அறிந்த வடகிழக்கு பழங்குடியினர் கைப்பற்றிக்கொள்கிறார்கள். மேலும், கிறித்துவ, இந்து., மாவோயிச மிஷனரிக்களுள் சிக்கிக்கொண்டு அவர்கள் பரிதவிக்கிறார்கள். அம்மக்களின் எண்ணற்ற தாய்மொழிகளில் பிள்ளைகள் கல்வி கற்க முடியாமல் இந்தி, ஓடியா முதலிய மொழிகளில் கல்வி கற்கும் அவலமும், தங்களின் மகத்தான கலாசார வளங்களை இழக்கும் கொடுமையும் அரங்கேறுகிறது.
ஆதிவாசிகளுக்கு உத்வேகம் தரும், அகில இந்திய அளவில் ஒன்று திரட்டும் ஒரு தலைவர் அம்பேத்கரை போலக் கிடைக்கவில்லை.
திறன், அறிவு, சுற்றுச்சூழல், பல்லுயிர் வளம் ஆகியவற்றைக் கொண்டு வளர்ச்சியை அடையும் எடுத்துக்காட்டுகள் இன்னமும் அவர்களிடையே எழும் சூழலும், வாய்ப்பும் இல்லை. தலித்துகளில் தொழில்முனைவோர் எழுவதைத் தேவேஷ் கபூர் முதலியோர் படம்பிடித்துள்ளார்கள். ஆதிவாசிகள் வளர்ச்சியின் பாதையில் எப்பொழுது செல்லமுடியும் எனத் தெரியவில்லை.
அரசு அதிகாரிகள். காவல்துறையினர், வனத்துறை அலுவலர்கள் எல்லோரும் இம்மக்களின் நியாயமான சிக்கல்கள் குறித்துப் பாராமுகம் கொண்டவர்களாகவே உள்ளார்கள்.
தங்களின் போராட்ட நெருப்பு எரிய எரிபொருளாக ஆதிவாசிகளை மாவோயிஸ்ட்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் வன்முறையை அரசும் கடும் வன்முறையால் எதிர்கொள்கிறது. வளர்ச்சி என்பதை மறந்ததைப் போல அரசு நடந்து கொள்கிறது.
வரலாற்று ஆசிரியர்கள் ஜோசியர்கள் இல்லை. அதேசமயம், தற்போதைய ஆதிவாசிகளின் நிலைமை கவலைக்கிடமானதாக உள்ளது. அது வருங்காலத்தில் செம்மையுறும் என்கிற நம்பிக்கையை மட்டும் வெளிப்படுத்தி உரையை முடிக்கிறேன். நன்றி!
தமிழில்: பூ.கொ.சரவணன்

இந்தியாவை எதிர்பார்த்தல் பாகம்-2


சேகர் குப்தா நூலின் அறிமுகத்தின் இரண்டாவது பகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வீழ்ச்சி, மோடியின் எழுச்சி, அன்னா ஹசாரே முதல் ஆம் ஆத்மி வரையிலான பகுதிகளைக் காண்போம்.

இந்திராவின் காலத்தில் இடதுசாரிகளும், இடதுசாரிப் பார்வையும் இந்தியாவின் தொழில்துறையை, நாட்டைப் பாதித்தது என்பது குறித்துக் கூர்மையான விமர்சனங்களை முன்வைக்கிறார். 97 சதவிகித வருமான வரியும், 31 சதவிகித பண வீக்கமும் தான் இடதுசாரிகளின் சாதனை என்று போட்டு துவைக்கிறார். எமெர்ஜென்சியின் பொழுது இந்திராவின் பக்கம் மூச்சே விடாமல் நின்ற வரலாறும் இவர்களுக்கு உண்டல்லவா என்று நியாயமான கேள்வியை எழுப்புகிறார்.

இரண்டாவது ஆட்சிக்காலத்தில் எப்படிக் காங்கிரஸ் தன்னுடைய சீரான நிர்வாகத்தை இழந்தது என்பதற்குப் பல்வேறு உதாரணங்கள் தருகிறார். ஆர்டில்லரி துப்பாக்கிகளை 23 வருடங்களாக வாங்காமல் இருப்பதையும். கையெழுத்து கூட இல்லாமல் சிபிஐ இயக்குனர் வழங்கிய ஆயுத விற்பனையாளர்கள் குறித்த துண்டுச்சீட்டு புகாரை வைத்துக்கொண்டு ஆயுத கொள்முதலையே மறந்திருப்பதையும் சாடுகிறார். மன்மோகன் சிங்கை 39/3 என்கிற நிலையில் களமிறங்கும் திராவிட் என்று குறிப்பிடுகிறார். ஒரு நாளைக்குப் பதினெட்டு மணிநேரம் உழைத்தும், அவரின் அலுவலகத்துக்கு உண்மையான அதிகாரங்கள் இல்லாததால் அவரின் செயல்பாடுகள் வீணாகப் போய்விட்டன. வாஜ்பேயி வலுமிகுந்த பிரதமர் அலுவலகத்தை வைத்துக்கொண்டு ஆறு மணிநேரம் மட்டுமே உழைக்க வேண்டியிருந்தது என்று சுட்டிக்காட்டுகிறார்.

பிரதமர் அலுவலகத்தின் சீர்திருத்தங்களைச் சோனியா காந்தி தலைமையிலான சட்டத்துக்குப் புறம்பான தேசிய ஆலோசனை குழு தடுத்தது. முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதல் அரசுக்கு எதிரான பார்வையையே எப்பொழுதும் கொண்ட தீர்வுகள் அற்ற சமூகச் சேவகர்கள் குழு ஆகியோர் அடங்கிய இக்குழு அரசை முடக்கிப் போடுவதில் முக்கியப் பணியாற்றியது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனின் பேட்டி கண்ட அனுபவத்தைக் குப்தா சொல்வதில், ‘ஐயோ! ஐயோ’ என்கிற கடுப்பு மிகுந்த நகைச்சுவை மிளிர்கிறது. காந்தியை கோட்சே கொல்லவில்லை, நேரு தான் பின்னால் இருந்து சுட்டார். அப்பொழுது தான் அவர் பிரதமராகத் தொடரமுடியும் என்பதே காரணம். இதற்கு ஆதாரம் ஒரு ஆந்திர பிரதேச அதிகாரியி நினைவலைகளில் உள்ளது. அவரின் பெயரும், புத்தகத்தின் பெயரும் மறந்துவிட்டது என்று சுதர்சன் காமெடி செய்கிறார். உச்சபட்சமாகப் பாபர் மசூதியை கரசேவகர்கள் இடிக்கவில்லை, உள்ளே இருந்து குண்டு வைத்துக் காங்கிரஸ் தான் தகர்த்தது என்ற தருணத்தில் சேகர் குப்தா தலையில் அடித்துக்கொண்டாரா தெரியவில்லை.

முதலீட்டு கமிஷனின் தலைவராக இருந்த ரத்தன் டாடா நிரந்தரத் தொடர்புகளுக்காக நீரா ராடியாவை நாடவேண்டி இருந்தது என்றால் அரசும், முதலாளிகளும் எப்படித் தொடர்பற்றுக் கிடக்கிறார்கள் எனப் புலனாகிறது என்று கவலைகொள்கிறார். ரகுராம் ராஜன் தன்னுடைய ‘FAULTLINES’ நூலில் இந்தியாவின் புதிய கோடீஸ்வரர்கள் ஐடி, உற்பத்தி துறைகளில் இருந்து வராமல் அரசை அதிகமாக வளைக்கும் வாய்ப்புள்ள, அரசியல்வாதிகள் செல்வாக்கு செலுத்தும் கட்டுமானம், ரியல் எஸ்டேட், சுரங்கத்துறை ஆகியவற்றில் இருந்து வருவதைச் சுட்டி நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை, தெளிவான சட்ட அமலாக்கம் என்று பல முனைகளில் இயங்க வேண்டியதன் தேவையை அழுத்திப் பதிகிறார்.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், கடன் தள்ளுபடி தான் காங்கிரசுக்கு வெற்றியை வாங்கித் தந்தது என்றால் கொடிய வறுமை மிக்கப் பீகார், ஒரிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் ஏன் எண்பத்தி ஆறு இடங்களில் 19 இடங்களைக் காங்கிரஸ் வென்றது என்றும், BIMARU மாநிலங்களில் 48/208 என்று மட்டுமே காங்கிரஸ் ஏன் வெல்லமுடிந்தது என்றும் கேள்விகள் எழுப்புகிறார். வன உரிமைகள் சட்டம் தான் வெற்றியை தந்தது என்றால் பழங்குடியினரின் நாற்பத்தி ஏழு தொகுதிகளில் ஏன் 19-ல் மட்டும் காங்கிரஸ் வென்றது? நகர்ப்புறங்களே காங்கிரஸ் கட்சிக்கு பெரிய வெற்றியை தந்ததை அவர் சுட்டிக்காட்டி பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்று அறிவுறுத்துகிறார்.

இஸ்லாமியர்கள் எப்பொழுதும் பாஜகவுக்கு எதிரானவர்கள் என்று காங்கிரஸ் கருதுவதை ஏற்க முடியாது. பாஜக தன்னுடைய மந்திர், மோடி, இந்துத்வா ஆகியவற்றைக் கைக்கொள்ளாமல் வளர்ச்சியை முன்னிறுத்தியே பீகார் சட்டசபை தேர்தலில் 91/102 எனக் கலக்கியதை சுட்டிக்காட்டுகிறார். சமச்சீரான வளர்ச்சி அற்புதங்களைச் செய்யக்கூடும்.

மன்மோகன் சிங் என்கிற நைட்வாட்ச்மேன் விக்கெட் விழாமல் ஆடிவிட்டு, பின்னர் முக்கிய மட்டையாளராகத் தாங்கள் கருதும் ராகுல் காந்தியை களமிறக்கலாம் என்று காங்கிரஸ் எண்ணுவது எப்பொழுதும் சாத்தியமாகாது என்று சரியாகக் கணிக்கிறார். எஸ்.எம்.கிருஷ்ணாவை ஆளுநர் ஆக்குங்கள், இந்தி பகுதியில் இருந்து எந்தப் பெருந்தலையும் காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் இருக்கவில்லை என்பதை ஷீலா தீட்சித்தை கொண்டுவந்து சரி செய்யுங்கள், ராஜ்ய சபாவில் தொடர்ந்து நான்கு முறை பதவி பெற்றுக்கொண்டிருக்கும் குழப்பத்துக்கும், ஜால்ராவுக்கும் பெயர் போனவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள் என்று அவர் சொன்னதை எதையாவது காங்கிரஸ் கேட்டிருக்கலாம்.

ராபர்ட் ப்ளாக்வெல் என்கிற அமெரிக்கத் தூதர் சொன்ன கதையை அமைச்சர்கள் செயல்படாமல் போய் அவர்களின் இடத்தை எடுத்துக்கொண்டஅதிகாரிகள் குறித்து விளக்க சொல்கிறார். பொது மருத்துவர்களைப் போன்ற அதிகாரிகள் அடுத்த நாள் சிறப்பு மருத்துவர் வரும்வரை முதலுதவியே தரவேண்டும், சிறப்பு மருத்துவர் ஒளிந்துகொண்டால் நோயாளி பொது மருத்துவரிடமே மாட்டிக்கொள்ள வேண்டியது தான் என்று கிண்டலடிக்கிறார்.

இந்திய வங்கித்துறை ஐந்து லட்சம் கோடியை எரிசக்தி துறையில்முடக்கிவிட்டு மீட்கமுடியாமல் இருப்பதையும், இரும்பு, நிலக்கரி ஆகியவற்றை வெட்டி எடுக்கப் போடப்பட்ட தொடர் தடைகளால் ஒரு லட்சம் கோடி எஃகு உற்பத்தி முடங்கியதையும், ஆ.ராசா, தயாநிதி மாறன் போன்ற ஒழுங்கான கொள்கை தெளிவில்லாத ஆட்களால் மூன்று லட்சம் கோடி பணம் தொலைதொடர்பு துறையில் கடனாக இருப்பதையும், பத்து லட்சம் கோடி கடன்களை அரசின் மெத்தனமான கொள்கையால் வங்கிகள் இழக்க கூடிய நிலை நிலவுவதையும் குட்டிக்காட்டுகிறார்.

தேசிய ஊரக நலத்திட்டத்தில் பல கோடி ஊழலுக்குக் காரணமான குஷ்வாகா எனும் பிஎஸ்பி அமைச்சரை பாஜக கட்சியில் சேர்த்துக் கொண்டதை சுட்டிக்காட்டி பெரிய திட்டங்கள் இல்லாமல் திணறுகிறது என்று கருதுவதாகச் சொல்கிறார். அமித் ஷா பெரிய வெற்றியை பெற்றுத்தர மாட்டார் என்றும் அடித்துப் பேசுகிறார்.

கூட்டாட்சி தத்துவத்தில் பெருமளவு நம்பிக்கை கொண்ட வாஜ்பேயி எல்லா மாநில முதல்வர்களையும் கொள்கைகள் சார்ந்து ஒன்றாக அமரவைத்து பேச முயன்று தோற்றதை சொல்லி காங்கிரஸ் தலைமையிலான அரசு மாநிலங்களை மதிப்பதை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். ராபர்ட் வதேராவை காக்க காங்கிரஸ் முயல்வதை அத்தனை அங்கதத்தோடு சேகர் குப்தா சாடுவதைக் கட்டுரையாக வாசிக்கவேண்டும்.

நிர்பயா வன்புணர்வு நிகழ்ந்த பொழுது கண்ணீரோடு கூடிய பல்லாயிரம் மக்களிடம் பேச ஏன் ஒரு அமைச்சரோ, எம்பியோ, முதல்வரோ எட்டிப்பார்க்காத அளவுக்கு மக்களிடம் இருந்து ஏன் காங்கிரஸ் துண்டித்துக்கொண்டது என்று கேட்கிறார். கோபக்கார மக்களையும், காவல்துறையையும் சந்திக்கவிட்டுவிட்டுச் சுகமாக வேடிக்கை பார்ப்பதுதான் ஒரு அரசின் கடமையா என்று சாட்டையைச் சுழற்றுகிறார்.

இந்தியாவின் முக்கியமான ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு ஏன் ஆட்சிப்பணி அதிகாரிகளை மட்டுமே நியமிக்க வேண்டும்? தொழில்துறையைச் சார்ந்தவர்கள், பேராசிரியர்கள், நிர்வாகிகள் என்று பலரும் உள்ளே வருவது சிறப்பான நிர்வாகத்தைத் தரும். மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்த பொழுது மக்களை மின்சாரம், தண்ணீர், தானியம், எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு உண்மையான விலையைச் செலுத்த வைப்பது தான் பெரிய சவால் என்றதையும் அதை ஓரளவுக்கு அவர் செயல்படுத்தியதையும் பாராட்டுகிறார். குடும்ப ஆட்சியாகப் போய்விட்ட காங்கிரஸ் அதற்கு எதிராக வளர்ந்த ஆந்திர சந்திரபாபு நாயுடு குடும்பம், தமிழகக் கருணாநிதி குடும்பம், மகாராஷ்டிராவின் தாக்கரே குடும்பம், மேகலாவியின் சங்மா குடும்பம், பஞ்சாபின் பாதல் குடும்பம், பீகாரின் லாலு குடும்பம், உபியின் முலாயம் யாதவ் குடும்பம், கர்நாடகத்தின் கவுடாக்கள் என்று குடும்ப அரசியலை எதிர்கொள்ளாமல் நின்றதும், உட்கட்சி ஜனநாயகத்தை வளர்க்காமல் போனதும் அதன் வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்று படம்பிடிக்கிறார்.

சஞ்சய் தத்துக்காகக் கட்ஜூ முதல் கடைக்கோடி ஹிந்தி ரசிகன் வரை களம் புகுந்து ஆதரவு தருவதை அடித்துத் துவைக்கிறார். சிறைகளில் ஜாமீன் கட்ட முடியாமல் பல்வேறு அடித்தட்டு மக்கள் வாடுகிறார்கள், சந்தேகத்தின் பெயரில் பல்லாயிரம் இஸ்லாமியர்கள் அடைக்கப்பட்டு அநியாயமாகத் துன்புறுகிறார்கள், தலித்கள் கொடுமைக்குச் சிறைகளில் உள்ளாகிறார்கள். இவர்கள் மீதெல்லாம் இல்லாத கரிசனம் குற்றவாளி என ஏற்றுக்கொள்ளப்பட்ட சஞ்சய் தத்துக்கு மட்டும் ஏன் என வினவுகிறார். ஷைனி அகுஜா தன்னுடைய பணிப்பெண்ணை வன்புணர்வு செய்து சிறைமீண்டு வந்து படத்தில் நடிக்கிற பொழுது வராத அருவருப்பு டெல்லி வழக்கின் பொழுது மட்டும் வருவது நம்முடைய மந்தைத்தனத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் என்று விமர்சிக்கிறார்.

மாவோயிஸ்ட்கள் எதிர்ப்பில் அரசு மெத்தனமாக, ஒழுங்கான திட்டமிடல் இல்லாமல் செயல்படுவதே 76 துணை ராணுவ வீரர்கள் இறக்க காரணம் என்று குறிப்பிடுகிற குப்தா, துணை ராணுவத்தினர் இறக்கிற பொழுது ராணுவத்தினர் இறக்கிற பொழுது எழுகிற உணர்ச்சி எழும்புவது இல்லையே ஏன் என வினவுகிறார். சீருடைகள் நம்முடைய சீற்றத்தை தீர்மானிக்கின்றனவா? எனக் கேட்பதோடு, பினாயக் சென் மீதான வழக்கும், அதன் தீர்ப்பும் தவறானவை என்றாலும் அவரை அரசின் திட்டமிடல் குழு ஒன்றில் நியமிப்பது ராணுவத்தினருக்கு என்ன செய்தியை சொல்லும் என்கிறார். ஹர்ஷ் மந்தர் எனும் தேசிய ஆலோசனை குழுவின் உறுப்பினர் நடத்தி வரும் ஆதரவற்றோர் இல்லத்தின் நிர்வாகியாக ராமகிருஷ்ணா எனும் மாவோயிஸ்ட் தலைவரின் மனைவி இருந்ததைச் சுட்டிக்காட்டி அரசு தன்னுடைய போரில் குழம்பியிருக்கிறது, மாவோயிஸ்ட்கள் அதனை உணர்ந்து அடிக்கிறார்கள் என முடிக்கிறார்.

பாஜக எப்படி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக எதிர்க்கட்சியாக இருந்தது என்று அடுக்குகிறார். பாகிஸ்தானுடன் சமாதானமாகப் பேச்சு வார்த்தை நடத்த முயன்ற காங்கிரசை கோழை என்று கத்துகிற பாஜக, வாஜ்பேயி பாகிஸ்தான் உருவாக அடித்தளமிட்ட லாகூர் தீர்மானம் போடப்பட்ட இடத்தில் நின்றபடி, பாகிஸ்தான் என்கிற நாடு அமைதியும், வளமும் பெற்று சிறக்க வேண்டும் என்ற பொழுது ஆர்.எஸ்.எஸ். முதல் பாஜக வரை அமைதியாகவே இருந்தன என்று சுட்டிக்காட்டுகிறார். பொதுத்துறையின் செயல்படாத பிரிவுகளைத் தனியாருக்கு விற்பதை வீரியமாக அருண் ஷோரி செய்தார், இப்பொழுது காங்கிரஸ் செய்ய முனைகிற பொழுது ஓலம் எழுகிறது. GST எனும் இந்தியாவின் பொருளாதரத்தை மாற்றக்கூடிய சட்டத்தை மோடி ஆசீர்வாதத்தோடு எதிர்ப்பது நடக்கிறது. அணு குண்டு வெடித்த பாஜக அரசு அணு ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது ஏன் என்று வினவுகிறார்.

இஸ்ரத் ஜகான் மரணத்தை வெறும் முஸ்லீம் இந்து பிரச்சனையாகக் காங்கிரஸ் கட்டமைத்து தவறான அரசியலை முன்னெடுக்கிறது என்கிற குப்தா, பஞ்சாபில் தீவிரவாதிகளை எதிர்கொள்ளக் கடத்தலுக்குக் கடத்தல், கொலைக்குக் கொலை என்று அஜித் தோவல், கே.பி.எஸ்.கில் அடித்து நொறுக்கி சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டதை நினைவுபடுத்துகிறார். நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் என்கவுண்டரில் சந்தேகத்தின் பெயரில் அப்பொழுது கொல்லப்பட்டார்கள். காங்கிரஸ் காலத்தில் நிறைய என்கவுண்டர்கள் டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா ஏன் காஷ்மீரிலும் நடந்திருக்கின்றன. அவற்றின் அயோக்கியத்தையும் சேர்த்தே விசாரிக்க வேண்டும் அல்லவா என்று கேட்கிறார்.

திரிபுராவில் எண்பத்தி எட்டில் TNV எனும் தீவிரவாத அமைப்பு தேர்தலுக்கு ஒருவாரம் முன்பு 91 வங்காளிகளைக் கொன்றது, சீர்குலைவுற்ற பகுதி சட்டம் போட்டுக் கடுமையாகச் செயல்படுவது போல ராஜீவ் காந்தி அரசு காட்டிக்கொண்டது. தேர்தலில் அரிதிலும் அரிதாகக் காங்கிரஸ் வென்றது. பின்னர் அந்த அமைப்பின் தலைவருக்கு மன்னிப்பும், மறுவாழ்வும் தந்த நாடகம் என்ன? என்று அதிரவைக்கிறார். மொத்தத்தில், குஜாரத் முதல் படுகொலையும் இல்லை, இறுதியும் இல்லை. பாராளுமன்றத்துக்குப் பதில் சொல்லும் அமைப்பாக உளவுத் துறையை மாற்றாமல் சத்தங்கள் மட்டும் போடும் அரசியல் தீர்வுகளைத் தராது என்று முடிக்கிறார்.

2009-10 வரை ஒரளவுக்குச் சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்த எஃகு உற்பத்தி ஐமுகூட்டணியின் இறுதிக்காலத்தில் பெரும் சிக்கலுக்கு உள்ளானதையும், இறுதி மூன்று வருடங்கள் பல மில்லியன் டன் இரும்புத்தாது, நிலக்கரி இறக்குமதி அதிகரித்து இருப்பதையும்,பாக்சைட் தனிமம் பெருமளவில் இருந்தும் அலுமினிய இறக்குமதி நோக்கித் தள்ளப்படும் நிலையில் இருப்பதைச் சொல்லி, தின்ஷா படேல் எனும் சுரங்கத்துறை அமைச்சர் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டு இருப்பதையும் காட்டுகிறார்.

ராகுல் காந்தி சிறைத்தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் உடனே பதவி இழக்கிறார்கள் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை மாற்ற அவசரச்சட்டம் கொண்டுவந்த பொழுது அதை எதிர்த்து தடுத்தார். A.P.வெங்கடேஸ்வரன் எனும் அயலுறவுத் துறை செயலாளர் சொன்ன தகவலும், ராஜீவ் காந்தி சொன்ன தகவலும் மாறுபடுகிறது என்று ஒரு பாகிஸ்தானிய நிருபர் கேள்வி கேட்டதும் அங்கேயே அவரை அப்பதவியை விட்டு நீக்கம் செய்தார் அவசரக்கோல ராஜீவ். வெங்கடேஸ்வரன் இன்னமும் நான்கு வருடம் பதவிக்காலம் இருந்தும் தன்மானத்தோடு ஒட்டுமொத்தமாக அரசுப்பணியை விட்டு விலகினார். அதுபோல மன்மோகன் செய்வாரா என்று சீண்டுகிறார் சேகர் குப்தா.

கூட்டணி தர்மத்துக்காக ராஜாவின் ஊழலையும், தொடர்ந்து தவறுகள் செய்தும் தட்டிக்கேட்காமல் விட்ட கல்மாடி காமன்வெல்த்தில் களவாடியதும், ஆதர்ஷ் ஊழலை அரசு சரிவர முதலிலேயே தடுக்காததும் அதன் பெயரைக் கெடுத்தன என்கிறார் குப்தா. அதோடு, BSNL நல்ல வளர்ச்சியில் இருந்த பொழுது அதைப் பங்குச்சந்தையில் இறக்காமல் விட்டு ஊழலை மலிய வைத்து விட்டாகிற்று.

மன்மோகன் எப்பொழுதும் திராவிட் போல அமைதியாக இருப்பதே அவர் குணம், ஹர்ஷ் மேத்தா ஊழலில் அவருக்குப் பங்கிருக்கிறதா என்று கேள்வி எழுந்த பொழுது, ‘எது நீங்கள் தொடங்கும் புள்ளி என்பதைப் பொறுத்தது’ என்றே அவர் பதில் சொன்னார். பங்குச்சந்தை வீழ்ந்து கொண்டிருந்த பொழுது நான் நிம்மதியாக உறங்குவது இதனால் கெடாது என்று அவரால் சொல்லமுடிந்தது.

லோக்பால் உச்சநீதிமன்றம் துவங்கி சகலரையும் கேள்விகேட்கும் அமைப்பாகப் பார்ப்பது சர்வாதிகாரம் இல்லையா எனக்கேட்கிறார். எங்கும் எப்பொழுதும் நீதிபதியின் அனுமதி இல்லாமல் நுழைந்து சோதனை செய்யும் உரிமையைத் தானே AFSPA எனும் கொடுஞ்சட்டமும் கொண்டிருக்கிறது? நேர்மைக்காகப் போராடுவதாகச் சொல்லும் அர்விந்த் கேஜ்ரிவால் ஒன்பது லட்ச ரூபாயை பணிக்காலத்தில் வேறு வேலைக்குப் போனதற்குச் செலுத்த வேண்டியிருந்தது. அதைத் தரமாட்டேன் என்று இழுத்து பிடித்து நின்றது எப்படி நேர்மையாகும்? பூஷண் தந்தை-மகன் இணையருக்கு மாயாவதி எளியோருக்கு வழங்கப்படும் வீட்டை வெகுமதி போல வழங்கிய பொழுது, தந்தார், எடுத்துக்கொண்டோம் என்றது எவ்வளவு கயமைத்தனமானது? தான் பெற்ற அரசு விருதைக் கொண்டு டிக்கெட்டில் சலுகை பெற்றுக்கொண்டு, முழுத்தொகையைத் தன்னுடைய புரவலர்களிடம் கிரண் பேடி பெற்றது ஊழல் இல்லையா? இவர்களா ஊழலை எதிர்க்க வந்துவிட்டார்கள் என்று பொரிகிறார்.

நீதிபதிகள், ஆட்சிப்பணி அதிகாரிகள் தவிர்த்து அளவில்லாத நேர்மை கொண்ட ஆட்கள் ஆறு பேரை தேர்வு செய்வோம் என்பது முன்னைய இரு பிரிவில் நேர்மைக் குறைவு உண்டு, அங்கே பெரும்பாலும் நேர்மையானவர்களே இல்லை என்கிற தொனியை அல்லவா தருகிறது என்று கேட்கும் குப்தா, தனக்கான அங்கத்தினரை தேர்வு செய்ய இளம் நீதிபதிகளைப் பயன்படுத்திக்கொள்வதும், லோக்பால் ஆட்களைப் பதவியை விட்டு அனுப்புகிற பொழுது ஐந்து மூத்த நீதிபதிகள் முடிவெடுக்க வேண்டும் என்று குழப்ப சட்டமாக லோக்பால் இருக்கிறது எனச் சுட்டிக்காட்டுகிறார்.

புரட்சி என்பது ஒரு சட்டத்தின் மூலம் நடப்பதில்லை. இடதுசாரிகளை ஆட்சியைவிட்டு மோசமான நிர்வாகத்துக்காக எண்பத்தி நான்கு சதவிகிதம் மக்கள் திரண்டு வந்து ஓட்டளித்து அனுப்பிவைத்ததையும், மாவோயிஸ்ட்கள் மிகுந்த பகுதியில் PCAPA எனும் தீவிர இடதுசாரிகள் ஆதரவு கட்சியின் வேட்பாளரை ஜார்கிராம் எனும் தொகுதியில் எண்பத்தி சதவிகித வாக்காளர்கள் நிராகரித்து மம்தா கட்சி நபரை தேர்ந்தெடுத்ததைச் சுட்டிக்காட்டும் குப்தா தெற்கு டெல்லி, தெற்கு மும்பையில் முறையே நாற்பத்தி மூன்று, நாற்பத்தி எட்டுச் சதவிகிதம் மக்கள் மட்டுமே ஓட்டளித்து உள்ளார்கள். ஜனநாயகத்தின் அடிப்படையையே நம்பாமல் ஒரு சர்வாதிகிற லோக்பால் தீர்வுகள் தந்துவிடும் என்று இவர்கள் நம்புவது வேடிக்கையானது என்கிறார்.

விபி சிங் ராஜீவ் காந்தியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த பொழுது,செந்த் எனும் ஓட்டைப் போட்டு வீட்டுக்குள் திருடன் நுழைவதை போல ராஜீவ் திருடிவிட்டார். உங்களின் வரியில் தான் அரசு இயங்குகிறது என்று சொல்லிவிட்டு, தீப்பெட்டியை கையில் எடுத்து இந்த இருபத்தி ஐந்து பைசா தீப்பெட்டியில் ஐந்து காசு அரசு எடுத்து உங்களுக்குப் பள்ளி,. சாலைகள் தருகிறது. ஆயுதங்களும் வாங்குகிறது. அந்த உங்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது எனப் புரியவைத்து காங்கிரசுக்கு எதிரான அலையை உண்டு செய்தார். அப்படிப்பட்ட தலைவர்கள் குறைந்து போன இடத்தையே ஆதிக்க மனோபாவம் மிக்க அன்னா ஹசாரே போன்ற ஆட்கள் கைப்பற்றிக்கொண்டதாகச் சேகர் குப்தா சொல்கிறார்.

ஷாந்தி பூஷன் ‘மதுகோடா, ஆ.ராசா போன்றவர்கள் பிரதமர் பதவிக்கு வராமல் லோக்பால் தடுக்கும் என்கிறார். அவரின் பார்வையில் பழங்குடியினர், தலித்துகள் பலரும் ஊழல்மயமானவர்கள் என்கிற மத்தியவர்க்க பார்வையே இருக்கிறது. இவர்கள் தான் அதிகம் சுரண்டப்படுகிறார்கள்., இவர்களின் பிரதிநிதிகளுக்கு இடம் மட்டும் தந்தால் போதுமா? அவர்களின் மீதான மேல்தட்டுப் பார்வையை விலக்கிக் கொள்ளாமல் எப்படித் தீர்வுகள் சாத்தியம். இந்தியா ஒன்றும் சிங்கப்பூர் இல்லை ஒரு வடிவம் எல்லாவற்றுக்கும் தீர்வாக, இங்கே பலதரப்பட்ட சிக்கல்கள், மக்கள், சவால்கள் உள்ளன. அவற்றை உணராமல் பேசுவது தவறாகும். பங்காரு லக்ஷ்மன் எனும் தலித்தும், திலீப் சிங் ஜுடியோ எனும் ராஜபுத்திரரும் ஊழல் வழக்கில் சிக்கி பாஜகவில் பதவி இழந்தார்கள். ஆதிக்கச் சாதியினரான ஜூடியோ மீண்டும் அரசியலில் ஒங்க முடிந்தது. லக்ஷ்மன் காணமல் போனார். சச்சார் அறிக்கை இந்தியாவில் இஸ்லாமியர்கள் மிக அதிகமாக நிறைந்திருக்கும் இடம் சிறைச்சாலைகள் என்று சொல்கிறது. ஊழல் வழக்கில் பெரும்பாலும் இடைநிலை சாதியினர், தலித்துகள் மாட்டுவதற்கு அவர்கள் மட்டுமே தவறு செய்கிறார்கள் என்பது காரணமா? நிச்சயம் இல்லை. இங்கே ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிரான பார்வை வேரூன்றி இருக்கின்றது என்பதே காரணம் என்று நெத்தியடி அடிக்கிறார். இந்த மக்கள் ஆதிக்க ஜாதியினர் முன்னின்று நடத்தும் அன்னா ஹசாரே இயக்கம் போன்றவற்றைச் சந்தேகத்தோடு பார்ப்பது தவறொன்றும் இல்லை என்கிறார் சேகர் குப்தா.

சேகர் குப்தாவின் எழுத்துக்களின் மீதான விமர்சனங்களுக்குச் செல்லலாம். இவரின் மிகப்பெரிய பலம் எனப் பலர் நினைக்கும் அவரின் வாதத்திறமையே அவரின் நடுநிலைமையைக் குலைக்கிறது. ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி எழுதுகிறார் என்றால் தன்னுடைய பார்வை என்னவோ அதை மட்டுமே நிறுவும் அவர் இன்னொரு தரப்பின் நியாயத்தை மறந்தும் பதியமாட்டார். நரசிம்ம ராவ் இடிப்பின் பொழுது பூஜையில் அமர்ந்தார், அது முடியும்வரை எழவில்லை என்கிற செய்தியை காலுக்குள் நசுக்கிவிடுவார். ரிலையன்ஸ் நிறுவனம், ப.சிதம்பரம் இருவரின் மீதும் தனிக்கரிசனம் அவருக்கு உண்டு என்கிற குற்றச்சாட்டு உண்மைதானோ என்று எண்ணும் வகையிலேயே கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.

நேருவின் காலத்தில் அரசு வலதுசாரிகளைக் கட்சியை விட்டு திட்டமிட்டு அகற்றியதே பொருளாதார மந்தநிலைக்குக் காரணம் என்று சொல்கிற சேகர் குப்தா அந்த வளதுசாரிகளில் பலரும் ஊழல்மயமாக, மதவாதிகளாக இருந்ததை மறந்தும் சொல்லமாட்டார். நேருவின் காலத்தில் யாரும் பெரும்பாலும் மாற்றுப் பொருளாதார மாற்றைத் தீவிரமாக முன்வைத்துச் செயல்படுத்திக் காண்பிக்கவில்லை என்பதும், அவர் விரும்புகிற ஜகதீஷ் பகவதி முதலிய பொருளாதார வல்லுனர்களே நேருவின் காலத்தில் இந்திய பொருளாதாரம் சிறப்பாகவே இருந்தது என்று சான்றிதழ் தருவதைக் குப்தா கணக்கில் கொள்ளமாட்டார். இடதுசாரிகளை விமர்சிக்கவேண்டும் என்று வந்த பிறகு நேருவில் இருந்தே துவங்குவதே தானே சரியாக இருக்க முடியும்? தரவுகளாவது, இன்னொரு பக்கம் தர்க்கங்களாவது..

கட்ஜூ செய்தி நிறுவனங்களை முறைப்படுத்த முயன்றதை சாடவந்த குப்தா தன்னுடைய இதழை மட்டுமே செய்தித் துறையின் முகம் என்பது போலப் பேசுகிறார். அதில் புரையோடிப் போயிருக்கும் ஊழல்கள், தவறுகள், செம்மையான ஒழுங்குமுறைக்கான தேவைகள் குறித்து மூச்சுகூட விடவில்லை.

ரிலையன்ஸ் நிறுவனம் ‘crony capitalism’-ல் முன்னணி நபர் எனத்தெரிந்தும் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை விமர்சனமாக இல்லை. ஏன் ரிலையன்ஸ் அப்படிச் செய்தது என்று ஒரு தேர்ந்த மக்கள்தொடர்பு அலுவலர் போலவே சேகர் குப்தா ஆதரித்து எழுதிச்செல்கிறார். ரிலையன்ஸ் இயற்கை எரிவாயு சிக்கலில் எப்படி விலைகளை அநியாயமாகக் கூட்டி கொள்ளை லாபம் பார்க்கப்பார்த்தது என்பது குறித்துக் கள்ள மவுனம், ஆனால், அதே நிறுவனத்தின் தொழில் பாதிக்கப்பட்டால் கதறுகிறார். அம்பானிக்காக ஐயோ அதானியை மோடி கண்டுகொள்கிறாரே எனப் புலம்புகிறார். பழங்குடியின மக்கள் எப்படிக் கனிமங்களை வெட்டியெடுக்கும் துறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களின் மறுவாழ்வு எப்படிச் சாத்தியமில்லாமல் போகிறது என்றும் பேச மறந்த சேகர் குப்தா சுரங்கப்பணியில் ஈடுபடும் நிறுவனங்களின் கவலையைப் பிரதிபலிப்பதை கச்சிதமாகச் செய்கிறார்.

அத்வானி பொய்யே சொல்லாதவர் என்பதில் துவங்கி பாஜகவின் மூத்த தலைவர்கள் பல வருடங்களாக இஸ்லாமியர்களுக்கு எதிராக எதுவும் பேசியதில்லை என்று அநியாயத்துக்குப் பொய் சொல்கிறார். ப.சிதம்பரம் நேர்மையின் உச்சம் என்று மனசாட்சியே இல்லாமல் எழுதுகிறார். FCRA எனும் கொடிய சட்டத்துக்குக் காரணமான ப.சிதம்பரத்தை எந்த இடத்திலும் சாடாமல் அதை விமர்சித்தவரின் கருத்தை மட்டும் போகிற போக்கில் பதிகிற வாதத்திறமையைச் சேகர் குப்தாவிடம் கண்டு அசந்து போவீர்கள்.

இந்திய அரசாங்கத்தின் வன்முறைகள், அது நிகழ்த்திய நிறுவனக்கொலைகள் எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் வகையில் ‘அப்படித்தான் அரசு ஜீவித்திருக்கும்!’ என்கிற தொனியில் அப்பட்டமாகப் பேச சேகர் குப்தாவால் மட்டுமே முடியும். நீரா ராடியா டேப்புகளில் சம்பந்தப்பட்ட பர்கா தத்தைப் பற்றி விமர்சனங்கள் எதுவுமில்லை. தற்போது அவருடன் இணைந்து ஒரு நிறுவனத்தைத் துவங்கியிருக்கிறார் சேகர் குப்தா. ஆர்.ஆர்.எஸ். அமைப்பில் தன்னுடைய இளமைக் காலத்தில் இயங்கிய சேகர் குப்தா ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும், பாஜகவையும் தனித்துக் காண்பிக்கிற பணியை அவ்வப்பொழுது கஷ்டப்பட்டுச் செய்கிறார். மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை, VHP-ஐ விலக்கி வைத்தவர் என்று சொல்கிற அவரின் வாதம் கண்முன்னாலேயே சரிவதை கண்டுகொண்டு தான் இருப்பார்.

சேகர் குப்தாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைக் கொண்டே இந்த வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவையே அவரின் சிறந்த கட்டுரைகள் என்று அவர் எண்ணுவது அவரின் மனவோட்டத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. ‘அரசை வழிபடும் அறிவுஜீவி’ என்று சேகர் குப்தாவை சொல்லலாம் என்றாலும் அதற்கான நியாயங்கள் அவரிடம் இருப்பதே அவரின் வாதங்களோடு சமயங்களில் முரண்பட நேர்ந்தாலும் ரசிக்க வைக்கிறது.

— withShekhar Gupta and N.r narayanamurthy infosys.

 

விவேகானந்தர் பொன்மொழிகள்


இந்துமதத் துறவியாக மட்டுமே இன்று சிலரால் முன்னிறுத்தப்படும் விவேகானந்தரின் சிந்தனையும், எண்ணப்போக்கும், தொலைநோக்கும், புரட்சிக்குரலும் பிரமிக்க வைப்பவை. அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்மொழிகள் 25

வாய்மை எந்தச் சமூகத்துக்கும் மரியாதை செலுத்துவதில்லை. வாய்மையைச் சமூகம் மதிக்க வேண்டும். இல்லையேல் அந்தச் சமூகம் அழிந்துபோகும்.

இளம் நண்பர்களே! வலிமையோடு இருங்கள் என்பதே என் அறிவுரை. நீங்கள் பகவத் கீதை படிப்பதன் மூலம் சொர்க்கத்தை நெருங்குவதை விடக் கால்பந்து ஆடுவதன் மூலம் வேகமாக அடைய முடியும். இவை தைரியமிகுந்த வார்த்தைகள்; இருந்தாலும் உங்களை நேசிப்பதால் இதனைச் சொல்கிறேன். … தோள்களின் வலிமை கூட்டுங்கள். தசைகளை மேலும் உறுதிப்படுத்துங்கள்.

முரடர்களை எதிர்கொள்ளுங்கள். இதுவே வாழ்க்கைக்கான பாடம். கடுமையனவற்றைத் தீரத்தோடு எதிர்கொள்ளுங்கள். குரங்குகளைப் போல வாழ்க்கையின் துயரங்கள் நாம் அஞ்சி ஓடாத பொழுது பின்னோக்கி செல்லும்.

ஒரு சிந்தனையை எடுத்துக்கொள்ளுங்கள். அதை வாழ்க்கையாக்கி கொள்ளுங்கள். அதைப்பற்றிக் கனவு காணுங்கள், அதனோடு வாழுங்கள். உங்கள் மூளை, தசை,நரம்பு, எல்லாப் பாகங்களும் அந்தச் சிந்தனையால் நிரம்பி வழியட்டும். இதுவே வெற்றிக்கான வழி.


உயர்ந்த பொருட்கள் உங்கள் காலடியில் உள்ளன, ஏனெனில், நீங்கள் தேவலோக நட்சத்திரங்கள். எல்லாம் உங்கள் காலடியில் உள்ளன. உங்களில் கைகளில் அள்ளி விண்மீன்களை நீங்கள் விரும்பினால் விழுங்க முடியும். இதுவே உங்களின் உண்மையான பண்பு. வலிமையோடு இருங்கள். எல்லா மூடநம்பிக்கைகளையும் கடந்து விடுதலையுற்று இருங்கள்.

நாம் ‘என்னைத் தீண்டாதே’ என்பவர்களாக இருக்கிறோம். நம்முடைய மதம் சமையலறையில் இருக்கிறது. நம்முடைய கடவுள் சமையல் சட்டியில் இருக்கிறார், நம்முடைய மதம்,’நான் புனிதமானவன், என்னைத் தீண்டாதே’ என்பதாக இருக்கிறது. இது இன்னுமொரு நூறு ஆண்டுகாலம் தொடர்ந்தால் நாம் எல்லாரும் பைத்தியக்கார விடுதியில் தான் இருப்போம்.

எல்லா விரிவடைதலும் வாழ்க்கை. சுருங்கிக்கொள்ளுவது எல்லாம் மரணம். எல்லா அன்பும் விரிவடைதல். சுயநலம் என்பது சுருங்கிக்கொள்ளுதல். இதுவே வாழ்க்கையின் ஒரே சட்டமாகும். அன்பு செய்கிறவர் வாழ்கிறார், சுயநலத்தோடு இருப்பவன் இறக்கிறான். அன்புக்காக அன்பு செய்யுங்கள், அதுவே வாழ்க்கையின் ஒரே சட்டம் என்பதற்காக அன்பு செய்யுங்கள். சுவாசிப்பதற்காக அன்பு செய்யுங்கள். இதுவே சுயநலமற்ற அன்பு, செயல் அனைத்துக்குமான ரகசியமாகும்.

ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரை, கல்வியறிவு அற்றவர்களை, செருப்பு தைக்கும் தொழிலாளியை, தெரு பெருக்குபவரை, மறந்து விடாதீர்கள். அவர்களும் ரத்தமமும் சதையாலும் ஆன நம்முடைய சகோதரர்கள். வீரம் மிகுந்தவர்களே, தீரத்தோடு, தைரியம் பூண்டு இந்தியன் என்பதற்குப் பெருமை கொள்ளுங்கள். பெருமையோடு, ‘நான் இந்தியன், ஒவ்வொரு இந்தியனும் என் சகோதரன்!’ என்று ஆராவரியுங்கள்.

நீங்கள் சுயநலம் அற்றவரா என்பதே இப்போதைய கேள்வி. ஆமாம் என்றால் எந்த ஒரு மதப்புத்தகத்தையும் படிக்காமலேயே, எந்த ஒரு தேவாலயத்திற்குள்ளோ கோயிலுக்குள்ளோ போகாமலேயே நீங்கள் முழுமையானவர் ஆகிறீர்கள்.

கோடிக்கணக்கான மக்கள் பசியிலும், அறியாமையிலும் உழல்கிற பொழுது அவர்களின் நசிவில் கற்றுவிட்டு அவர்களின் குறைகளுக்குச் செவிமடுக்காமல் இருக்கிற ஒவ்வொரு மனிதனையும் நான் தேசத்துரோகியாகவே கருதுவேன்.

வெற்றி பெற உங்களுக்கு அளவில்லாத உத்வேகமும், முனைப்பும் இருக்க வேண்டும். “நான் பெருங்கடலைப் பருகுவேன்’ என்று உத்வேகம் மிகுந்த ஆன்மா கூறவேண்டும்; “என் விருப்பத்தில் மலைகள் பொடிப்பொடியாகும்!’ அப்படியொரு ஆற்றலோடு இருங்கள்; அப்படியொரு முனைப்போடு முன்னேறுங்கள். ஓயாமல் உழையுங்கள், உங்களின் இலக்கை அடைவீர்கள்.

பொதுமக்கள் தங்களின் அன்றாடப் போராட்டங்களை எதிர்கொள்ள உதவாத கல்வி, அவர்களின் பண்பின் ஆற்றலை வெளிப்படுத்தாத கல்வி, வாரிக்கொடுக்கும் தயாள உள்ளத்தைத் தராத கல்வி, சிங்கத்தின் தீரத்தை தராத கல்வி – கல்வி எனப்படும் தகுதியுடையது அல்ல. தன்னுடைய சொந்தக் கால்களில் ஒருவன் நிற்கச் செய்வதே உண்மையான கல்வியாகும்.

யாரையும் நிந்தனை செய்யாதீர்கள். உங்களால் முடியுமென்றால் உதவிக்கரம் நீட்டுங்கள். இல்லை என்றால், கைகளைக் கூப்பி உங்கள் சகோதரர்களை வாழ்த்தி அவர்களின் பாதையில் அவர்களைச் செல்ல அனுமதியுங்கள்.

கோழையும், மூடனுமே ‘இது என்னுடைய விதி’ என நொந்து கொள்வார்கள். ஆனால், வலிமை மிகுந்தவன் எழுந்து நின்று ‘என் விதியை நான் தீர்மானிப்பேன்’ என்பான். வயதாகிக்கொண்டிருப்பவர்கள் தான் விதியைப் பற்றிப் பேசுவார்கள். இளைஞர்கள் ஜோதிடத்தை நோக்கி செல்வதில்லை.

கண்மூடித்தனமாக எதையும் நம்புவது ஆன்மாவை அழிப்பதாகும். நீங்கள் நாத்திகவாதியாகக் கூட இருங்கள், ஆனால், எதையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்

‘கடவுளை நம்பாதவனை நாத்திகன் என்றது பழைய மதம்,தன்னை
நம்பாதவனை நாத்திகன் என்கிறது புதிய மதம் !

மனதார தங்களை ஒப்புவித்துக்கொண்ட, நேர்மையான, ஆற்றல் மிகுந்த சில இளைஞர்கள் நூறு வருடங்களாகப் பெருங்கூட்டம் செய்ய முடியாதவற்றை ஒரே வருடத்தில் செய்து முடிப்பார்கள்.

பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்

எப்பொழுதும் நாயகனாக இருங்கள். எப்பொழுதும் ‘எனக்கு எந்த அச்சமுமில்லை.’ என்று சொல்லுங்கள். ‘அச்சப்படாதீர்கள்’ என்று அனைவர்க்கும் சொல்லுங்கள்.

நம்மை யார் அறிவற்றவர்கள் ஆக்கியது? நாமே தான். நாம் கண்களை மூடிக்கொண்டு இருட்டாக இருக்கிறது என்று அழுகிறோம்.

உங்கள் மூளை அளவில்லா ஆர்வத்தோடு இருக்கும் என்றால் எதையும் சாதிக்க முடியும். மலைகள் அணுக்களாக இடிந்து விழும்.

பாறையைப் போல உறுதியாக நில்லுங்கள். நீ அழிவில்லாதவன். நீயே சுயம், பிரபஞ்சத்தின் கடவுள் நீ.

‘ஒரு விதவையின் கண்ணீரைத்
துடைக்க முடியாத, ஓர் அநாதையின் வயிற்றில் ஒரு கவளம் சோற்றை இட முடியாத
கடவுளிடத்திலோ,சமயத் திலோ எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை கிடையாது’

இந்த உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.

நீ ஒன்றை பெறுவதற்குத் தகுதியுடையவனாக இருக்கிறாய் என்றால் அதை அடையவிடாமல் தடுப்பதற்கு, பிரபஞ்சத்தில் உள்ள எந்தச் சக்தியாலும் முடியாது.

மதம், அரசியல், வன்முறை- இந்துத்வா!


ராம் புனியானி அவர்கள் தொகுத்த ‘religion,power and violence’ என்கிற நூலை வாசித்து முடித்தேன். இந்துத்வ அரசியல் தன்னை எவ்வாறு சமகாலத்தில் வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதைப் பல்வேறு கோணங்களில் ஆராயும் நூல் இது. சோவியத் ரஷ்யா இருந்தவரை அதனை எதிரியாகக் காட்டி அமெரிக்கா உலக அரசியலில் இயங்கியது. அதன் வீழ்ச்சிக்குப் பிறகு எண்ணெய் வளமிகுந்த நாடுகளில் தன்னுடைய ஆதிக்கத்தைத் தொடரவும், உலகில் தன்னுடைய இருப்பைஉறுதிப்படுத்திக்கொள்ளவும் வசதியாக அதற்கு ‘இஸ்லாம் மீதான போர்’ என்பது பயன்பட்டது. இஸ்லாம் மதமே வன்முறைமயமானது போன்ற வாதங்களும், இஸ்லாமில் இருப்பவர்கள் தீவிரவாதிகள் என்கிற பார்வையும் முன்வைக்கப்பட்ட சூழலில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் அந்நியர்கள் அவர்கள் ஆதிக்க இனமான இந்துக்களுக்கு அடங்கியே நடக்க வேண்டும் என்று இந்துத்துவாவின் முழக்கம் இன்னமும் வலுப்பெற்றது.

இந்து மதத்தைப் பொறுத்தவரை மைய சனாதன மதம் சாய்பாபாவை பார்ப்பனமயமாக்கியது, பழங்குடியினர் தெய்வமான பூரி ஜெகன்னாதரையும் தனதாக்கிக் கொண்டது. சிறு தெய்வங்களைப் பெருதெய்வங்களாகவோ, அல்லது காணடிக்கவோ செய்தது. பக்தி இயக்கம் வடமொழியின் ஆதிக்கத்தில் இருந்து விலக்கி பக்தியை மக்களின் மொழிகளான தமிழ், அவாதி, மராத்தி ஆகியவற்றில் பரப்பியது. பிராமணிய எதிர்ப்பும் அதன் பேசுபொருளானது. ஒரே தெய்வம் உண்டு என்று அவை முழங்கின; இஸ்லாமிலும் இந்தியாவைப்
பொறுத்தவரை சூபிக்கள் இந்த மண்ணின் கலாசாரக் கூறுகளை உள்வாங்கி இஸ்லாமை பரப்பினார்கள். ஜாதி எதிர்ப்பு, தீண்டாமை அழிப்பு என்பவற்றை முன்னிறுத்தி பக்தி இயக்கங்கள் தோன்றினாலும் உயிர்க்கொலையின்மை, ஒரே கடவுள் மீதான நம்பிக்கை என்று தங்களை அறியாமலே அவை காலப்போக்கில் சனாதன தர்மத்தை வலுப்படுத்தின.

நேருவிய சோசியலிசம் மக்களின் வறுமையைப் போக்க பெருமளவில் தவறிய நிலையில் அதற்கு மாற்றான பொருளாதார முறையைக் காங்கிரசோ, இடதுசாரிகளோ முன்வைக்கவில்லை. காங்கிரசில் இருந்த எஸ்.கே.பாட்டீல் அப்படியொரு யோசனையை முன்னெடுத்த போதும், அடுத்து வந்த தேர்தலில் அவர் தோற்றுப்போனதால் அது சாத்தியமாகாமல் நின்று போனது. இடதுசாரிகள் தங்களுக்கான அரசியல் தருணங்களைக் கோட்டை விட்டார்கள். மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நெருக்கடி நிலை காலத்தில் அவர்கள் பெருமளவில் அரசுக்கு ஆதரவு தந்தார்கள், அல்லது மவுனம் சாதித்தார்கள். விடுதலை இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாளர் போராட்டமான ரயில்வே ஊழியர் போராட்டம் இடதுசாரிகள் நடத்தியதில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்,

ஜனசங்கம் மட்டுமே மதக்கலவரங்களுக்குக் காரணம் என்று ஒற்றைப்படையாக முடித்துவிட முடியாது. பிவாண்டி, சூரத், பீகார் ஷெரிப் ஆகிய இடங்களில் நடைபெற்ற கலவரங்களில் காங்கிரஸ் அரசுகளின் கைங்கரியம் உண்டு என்பது தான் உண்மை. உச்சபட்சமாக இந்திராவின் படுகொலையின் பின்னர்ச் சீக்கியர்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நிகழ்த்தப்பட்டது. ஒரு மாற்றுப் பொருளாதாரத்தை முன்வைக்காதது, காங்கிரசின் போலி மதச்சார்பின்மை ஆகியவை இந்துத்துவ அரசியலை வளர்த்தெடுக்கக் களம் அமைத்துக் கொடுத்தன.

இஸ்லாம் வாளால் தான் இந்தியாவில் பரவியது என்று வலதுசாரிகள் தொடர்ந்து சொல்கிறார்கள். இந்து ஆலயங்களை அவர்கள் மதக்காரணங்களுக்காக அழித்தார்கள் என்று மட்டுமே அழுத்திச் சொல்லும் அவர்கள் அதில் பெரும்பாலும் கொள்ளையிடும் எண்ணமும், அரசியல் காரணங்களும் முந்தியிருந்தன என்பதை மறைக்கிறார்கள். காஷ்மீரின் அரசன் ஹர்ஷர், பர்மர் அரசனான சுபவர்மன் ஆகியோர் எண்ணற்ற இந்து, சமண ஆலயங்களை அழித்தது சொல்லப்படுவதில்லை. சிவாஜியின் கப்பற்படையில் முக்கியத் தளபதிகளான தௌலத் கான், சித்தி மிஸ்ரி, அவரின் அயலுறவு செயலர் முல்லா ஹைதர் என்று பலரும் இஸ்லாமியர்கள் என்பது சொல்லப்படாது. இந்துக்கள் இஸ்லாமியர்களால் பெருமளவில் மதமாற்றப்பட்டார்கள் என்கிற வாதத்தை நிருபிக்கும் புள்ளிவிவரங்கள் இல்லை, மாறாக இஸ்லாமியர்களின் ஆட்சி என்று பொதுவாகச் சொல்லப்படும் சுல்தானிய, முகலாய ஆட்சிக்குப் பின்னரே வெள்ளையர் காலத்தில் தான் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பெருகியது. தென்னகத்தில் இஸ்லாம் வியபாரத்தாலும், வடக்கில் சூபிக்களாலும் பெருமளவில் பரவியது.

இஸ்லாம் ஒற்றைப்படையான மதம் என்றும், அதில் எந்தப் பன்முகத்தன்மையும் இல்லையென்று தொடர்ந்து சொல்லப்படுகிறது. உள்ளூர் அரேபிய (இஸ்லாமுக்கு முந்தைய) கலாசாரங்களான சுன்னத், பழங்குடியின மரபுகள் சேர்க்கப்பட்டன. பல்வேறு இடங்களில் தேவதைகள், தீய ஆவிகள் ஆகிய மைய இஸ்லாமின் நம்பிக்கைக்கு மாறான கூறுகள் அந்தந்த பகுதிகளில் இணைந்து கொண்டன. ஆங்கிலேயர் தங்களின் இனமே உயர்ந்தது என்கிற போக்கில் வாதங்களைக் கிறிஸ்துவ மிஷனரிக்கள் மூலம் வைத்த பொழுது அதை எதிர்க்க ஒற்றைப்படையான இந்து மதத்தை உயர்ஜாதி குறிப்பாகப் பார்ப்பன அறிவுஜீவிகள் முன்னிறுத்தினார்கள். ஜேம்ஸ் மில் வரையறுத்த மதங்களின் அடிப்படையில் வரலாற்றைப் பிரித்துப் பார்க்கும் போக்கை உள்வாங்கிக் கொண்டார்கள். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பண்பாடுகள் நிராகரிப்புக்கு உள்ளாகின.

இந்துமதம் என்பது ஒற்றைப்படையானதாகச் சமைக்கப்படும் வேலைகள் துவங்கின.
சூபி பிரிவு பௌத்தம், வேதாந்தம், யோகம் ஆகியவற்றின் பண்புகளை உள்வாங்கிக் கொண்டது. கபீர் பந்தி எனும் கபீரின் பிரிவு இந்து-முஸ்லீம்களை ஒன்று சேர்த்தது. சூபி துறவிகளான பிர்களை வழிபடுவதும் ஏற்பட்டது. இஸ்மாயிலிஸ் எனும் இஸ்லாமின் பிரிவு இந்து மதத்தின் பல்வேறு கூறுகளைத் தனதாக்கி கொண்டது. அதன் கோஜா பிரிவு ஓம் என்பதற்கு இணையாக அலி என்பதைக் குறிப்பிட்டது. கல்கி அவதாரம் அரேபியாவில் தோன்றியது என்றும் அறிவித்தது. குரானை அதர்வ வேதத்தோடு ஒப்பிடுவதும், நபிகளை மகாதேவருடனும், அலியை விஷ்ணுவுடனும் ஒப்பிடுவதும் அந்தப் பிரிவின் வழக்கமாக இருந்தது.

வங்கத்தில் சூபிக்களும், வைணவ பக்தி இயக்கத்தினரும் ஜாதியை எதிர்த்தார்கள். மலாதார் பாசு எனும் காயஸ்த வகுப்பை சேர்ந்த கவிஞரை பர்பக் எனும் சுல்தான் ஸ்ரீ கிருஷ்ணவிஜயா நூலை எழுத ஆதரித்தார். ஈட்டன் எனும் வரலாற்று அறிஞர் இஸ்லாம் கான் எனும் முகலாய ஆளுநர் வங்கத்து இந்துக்களை மதமாற்றுவதை அனுமதிக்கவில்லை என நிறுவுகிறார். சத்யா பிர், மானிக் பிர் முதலிய துறவிகள் இரண்டு மதத்தவராலும் வங்கத்தில் வழிபடப்படுகிறார்கள். சுந்தரவனக்காடுகளில் பான் பீபி எனும் தெய்வம் இஸ்லாமியர், இந்துக்கள் இருவருக்கும் உரியவர். இஸ்லாமியர்கள் அந்தத் தெய்வத்துக்கு மூலிகை கிரீடம், பின்னப்பட்ட முடி, கழுத்து சங்கிலி, குர்தா, பைஜாமாக்கள் அணிவிக்கிறார்கள். இந்துக்களின் இடத்தில் அவள் கிரீடம், பிற ஆபரணங்கள் அணிந்து காணப்படுகிறாள். வடக்கு வங்காளத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் இருவரும் கங்கை மாதாவை மீன்பிடிக்கப் போகையில் வழிபடுகிறார்கள். தக்ஷிண ரே என்கிற வனதெய்வமும் இருவரின் பொது வழிபாட்டுக்கு உரியது. சௌதி அரேபியாவின் இஸ்லாமியர்களைப் போல் அல்லாமல் மணிப்புரி இஸ்லாமியர்கள் பெற்றோரின் உடன் பிறந்தவரின் மகன்/மகளை மணக்கும் வழக்கமில்லை, கேரளாவின் மாப்பிள்ளைமார்கள் மத்திய ஆசியாவின் இஸ்லாமியர்களைப் போல் இல்லாமல் தாய்வழி மரபையே பின்பற்றுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.-ம், விடுதலைப் போராட்டமும்:
இந்திய விடுதலைப் போரில் பங்காற்றியதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சொல்லிக்கொள்கிற வகையில் அது பெரிதாக எதனையும் செய்யவில்லை என்பதோடு, ஆங்கிலேயருக்கு ஆதரவான போக்கையே பெரும்பாலும் எடுத்துள்ளது என்பதும் கசப்பான உண்மை. ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ். தலைவராக விடுதலைப் போரில் பங்காற்றினார் என்று சொன்னாலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒத்துழையாமை போராட்டத்தில் பங்குகொண்ட அவர் காந்தியின் வழிகாட்டுதலுக்கு மாறாக வக்கீல் வைத்து வாதாடி சீக்கிரமே சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

உப்புச் சத்தியாகிரகத்தில் பங்குகொண்ட பொழுது அங்கே சிறைக்குள் போய் அமைப்புக்கு ஆள் திரட்டவே அவ்வாறு சிறை புகுந்ததாக அவர் எழுதியுள்ளார். மற்ற எந்தப் புள்ளியிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்கான சுவடுகள் எதுவுமில்லை. காங்கிரஸ் கட்சியை முஸ்லீம்களைத் திருப்திப்படுத்த செயல்படுகிற ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்று குற்றஞ்சாட்டிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இந்தப் பிரிவினையைத் தூண்டிவிட்டு குளிர் காய்ந்த ஆங்கிலேயரை எதுவுமே விமர்சிக்கவில்லை என்பதும், கிறிஸ்துவர்களாக, இஸ்லாமியர்களாக மாறிய இந்நாட்டு மக்களை அந்நியர்கள் என்று கூறிவிட்டு, அவர்களை விட அதிக அந்நியமும், அயோக்கியத்தனமும் மிகுந்த ஆங்கிலேயருக்குச் சலாம் போட்ட சரித்திரம் ஆர்.எஸ்.எஸ். எனும் அற்புத அமைப்பினுடையது.

பட்டியல் ஜாதியினர், பெண்கள்,பழங்குடியினர் ஆகிய விளிம்புநிலை மக்கள் சார்ந்து ஆர்.எஸ்.எஸ். செயல்படும் விதம் இன்னொரு அதிர்ச்சி அத்தியாயம். பட்டியல் ஜாதியினரை அம்பேத்கர் நவீன மனு என்றும், இந்தியாவில் தோன்றிய புத்த மதத்தில் இணைந்தவர் என்று சொல்லியும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையில் பயன்படுத்திக்கொள்கின்றனர். குஜராத் படுகொலைகளில் பழங்குடியினர், தலித்துகள் ஈடுபடுத்தப்பட்டது இதற்கு ஒரு ஆதாரம். ரக்ஷாபந்தன், ராமநவமி முதலிய விழாக்கள் தலித் குடியிருப்புகளில் கொண்டாடுவது, ஜெய் பீம் என்று சொல்லி பாடம் நடத்த ஆரம்பித்து இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தோடு முடிப்பது இவர்களின் பாணி.

அது ஏன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாக்பூரில் எழுந்தது என்கிற கேள்வி எழலாம். இதற்கு ஆய்வாளர் பிரளய் கானுங்கோ பதில் தருகிறார்,’ மகாராஷ்டிராவில் படித்த ஆதிக்கச் சாதியினரில் (பார்ப்பனர் என்று வாசிக்க) நான்கில் ஒருவர் இங்கேயே இருந்தார்கள். இங்கே இருந்து ஹிதவாதா, மகாராஷ்டிரா முதலிய இதழ்கள் வெளிவந்தன. பல கல்விநிலையங்கள் இருந்தன. இடைநிலை சாதியினர் எழுச்சி பெற்றதால் போன்ஸ்லே முதலிய அரசர்களிடம் உயர் பதவிகளில் இருந்த பிராமணர்கள் எப்படியேனும் தங்களின் இடத்தை மீட்க விரும்பினார்கள். அம்பேத்கர் தலைமையில் பட்டியல் ஜாதியினர் திரண்டதும்

அவர்களின் செயல்வேகத்தை அதிகப்படுத்தியது’.
பழங்குடியினரை கிறிஸ்துவ மத மாற்றத்தில் இருந்து தாய்மதத்தை நோக்கி திருப்பி வனாஞ்சல் என்கிற பெயரில் களம் புகுந்தன சங்க பரிவாரங்கள். ஜார்கண்டில் உள்ள பலமு மாவட்டத்தில் இருந்தே அயோத்தியின் கரசேவைக்கு அதிகபட்ச பழங்குடியினர் அனுப்பட்டார்கள் என்கிற செய்தியை வாசிக்கிற பொழுது காலாட்படையாக அப்பாவிகள் எப்படி வலைவிரித்துச் சிக்கவைக்கப்படுகிறார்கள் என்கிற வேதனையே ஏற்படுகிறது.

பாரதமாதா, கவ்மாதா, கங்காமாதா என்று பல்வேறு அடையாளங்களைக் கொண்டு நிகழ்த்திய விழாக்கள் தந்த உந்துதலில் தான் பாஜக கரசேவையில் ஈடுபட்டது. மேலும், குஜராத் ஜில்லா பரிஷத் தேர்தலில் 27% இடங்களை மட்டுமே வென்றதால் தான் முஸ்லீம் மீதான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதன் விளைவாகக் குஜராத்தில் பெரும் வெற்றியை பாஜக பெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கிறிஸ்துவர் என்பதால் அதைக்கொண்டும் கிறிஸ்துவ வெளிநாட்டு சக்திகள் இந்தியாவைக் கைப்பற்ற முயல்கின்றன என்று பிரச்சாரம் செய்தன இந்துத்வா அமைப்புகள்.

பெண்களுக்கு எதிரான வன்முறையில் இந்து, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை. அறுபதாயிரம் பெண்களைக் கும்ப மேளாவில் ஆண்கள் விட்டுவிட்டுப் போனது நடந்தது. முட்டா என்கிற பெயரில் தற்காலிக திருமணங்களை இஸ்லாமிய குருமார்கள் நடத்துகிறார்கள். சதி முறையை ஆதரிக்கும் உலக அமைப்பின் தலைமையகம் சிக்காகோவில் உள்ளது. பொதுச் சிவில் சட்டம் என்பதில் இஸ்லாமியப் பெண்களை இணைக்காமல் அவர்களுக்கான சமத்துவத்தை அடிப்படைவாதிகள் தொடர்ந்து மறுக்கிறார்கள். பர்தா அணியும் வழக்கமில்லாத காஷ்மீர் பெண்கள் அவற்றை அணியும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அதை மீறிய மூன்று பெண்களை ரஜுவ்ரி மாவட்டத்தில் சுட்டுக்கொண்டார்கள். லஷ்கர் இத் தொய்பா அமைப்புக் காஷ்மீரில் பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது என்று அறைகூவல் விடுத்தது.

தலித்துகளுக்கு எதிரான பார்வையையே தன்னகத்தே இந்துத்வா கொண்டுள்ளது. அகிலப் பாரதிய வித்யா பரிஷத் எனும் பரிவார அமைப்பு குரு சபைகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இடத்தைப் பெற வேண்டும், பிராமணிய சமூக அமைப்பு ஏற்பட வேண்டும், ஏழைகளுக்கு ஓட்டுரிமை கூடாது, மேல்தட்டினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும், சிறுபான்மையினர் இரண்டாம் தரக்குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு ‘அற்புதமான’ கனவுகளை முன்வைத்தது. திலகர் காலத்தில் இருந்து சித்பவன பிரமணர்கள் பெஷ்வாக்கள் காலத்தில் தலித்துகளைக் கழுத்தில் துடைப்பத்தோடு, சட்டியோடும் அலையவிட்ட கொடிய காலத்தை நோக்கி திருப்பவே பேராவல் கொண்டார்கள். தாங்களே உயர்ந்த இனம் என்கிற இனப்பெருமையை வேறு திலகர் முன்வைத்தார். பூரி சங்கர மடத்தின் மடாதிபதி, மீண்டும் இந்து மதத்துக்கு வந்த பழங்குடியினர், தலித்துகள் மலிவான விலையில் கோயில்களைக் கட்டி அங்கே வழிபட வேண்டும், மற்ற இந்துக்களோடு மண உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தினார். வளர்ச்சியைக் கொண்டுவருகிறோம் என்று பேசினாலும் அது யாருக்கான வளர்ச்சியாக இந்துத்வா கனவு காண்கிறது என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

தொடர்ந்து பொதுச் சிவில் சட்டம் குறித்துப் பேசும் பலரும் இஸ்லாமியர் இடையே நடக்கும் பலதார திருமணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அதைச் சரி செய்யவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்கிற அதே சமயம் வேறு சில கவலைதரும் தகவல்களையும் கணக்கில் கொள்ளவேண்டி இருக்கிறது. இந்தியாவில் அதிக இருதார திருமணங்கள் இந்துக்களிடையே காணப்படுகிறது. இருதார திருமணங்கள் செய்த ஆண்கள் சரளா முட்கல், ப்ரியா பாலா முதலிய வழக்குகளில் ஹோமம், சப்தபடி முதலிய பிராமணிய திருமணச் சடங்குகளைச் செய்து திருமணம் செய்து கொள்ளாததால் அவர்களின் இரண்டாவது திருமணம் திருமணமே அல்ல என்று கச்சிதமாகக் கணவன்மார்களை நீதிமன்றம் விடுவித்தது.

ஷா பானுவுக்கு ஜீவனாம்சம் தர கோர்ட் உத்தரவிட்டும் ராஜீவ் காந்தி இஸ்லாமிய சட்டத்தை மீண்டும் பழமைக்குக் கொண்டு செல்லும் வகையில் சட்டம் இயற்றினார். ஆனால், தற்போதைய தீர்ப்புகள் அந்தச் சட்டத்தை இஸ்லாமிய பெண்களுக்குச் சாதகமாகக் கோர்ட் பயன்படுத்துகிறது என்பதைத் தெளிவாக்குகிறது.

இஸ்லாமியர்கள் கல்வி கற்பது என்றாலே நமக்கு மதராஸாக்கள் மட்டுமே நினைவுக்கு வருகின்றன. ஆனால், ஷா வாலியுல்லா, சையது அகமது கான், தியோபந்திக்கள், அலிகார் பல்கலைக் கழகம், ஜமியா மிலியா இஸ்லாமியா என்று பல்வேறு நபர்கள், அமைப்புகள் இஸ்லாமியர்களிடையே கல்வியைக் கொண்டு சேர்க்க பாடுபட்டார்கள்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ள முப்பதுக்கு முந்தைய காலத்தில் மெட்ராஸ், வங்காளம் ஆகிய பகுதிகளில் இந்துக்களை விட இஸ்லாமியர்கள் அதிகச் சதவிகிதத்தில் கல்வி பெற்றுள்ளது புலனாகிறது. காரன்வாலிஸ் நிரந்தர நில சீர்திருத்தம் கொண்டுவந்து பல இந்துக்களை ஜமீன்தார்கள் ஆக்கி இஸ்லாமியர்களை வேலை இழக்க செய்தார். பாரசீகம் பெற்றிருந்த அதிகாரப்பூர்வ இடம் ஆங்கிலத்துக்கு வழங்கப்பட்ட பின்பு பல இஸ்லாமியர்கள் பணி இழந்தார்கள். விடுதலைக்கு முன்னால் பல்வேறு நிதி வளம் மிக்க, கல்வி அறிவு பெற்ற இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் சென்று சேர்ந்ததும் நடந்தது. இங்கே இந்தியாவில் இயங்கிய இஸ்லாமிய கல்வி இயக்கங்கள் மேல்தட்டு இஸ்லாமியர்ளான அஷ்ரப்களையே பெருமளவில் குறிவைத்தது. இன்றைக்கு ஒரு வலுவான தலைமை, மத்திய வர்க்கம் இல்லாமல் இஸ்லாமியர்கள் கல்வியில் பெருமளவில் பின்தங்கியிருக்கிறார்கள்.

தனிகா சர்க்காரின் ஆய்வுகள் பெண்கள் எவ்வாறு பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்க் கலவரங்களில் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் பெருமளவில் இந்துத்வ அமைப்பினரால் ஈடுபடுத்தப்பட்டனர் என்று காட்டுகிறது. அம்பேத்கரின் மண்ணான மகாராஷ்ட்ராவில் தலித் தலைவர்களே ஜீவன்சக்தி-பீம்சக்தி என்று சொல்லி இந்துத்துவ சக்திகளோடு கைகோர்த்துள்ளார்கள்.
பல்வேறு பேராசிரியர்கள் எழுதியிருக்கும் இந்த நூல் வெளிவந்து பத்தாண்டுகள் ஆனதால் சில பகுதிகள் தேவைப்படததாகத் தோன்றலாம். மற்றபடி முக்கியமான ஒரு தொகுப்பு.
விலை: 380
SAGE PUBLICATIONS
RELIGION,POWER AND VIOLENCE-Expression of politics in contemporary times
Edited by: Ram Punyani

வந்தே மாதரம் தந்தவரின் வாழ்க்கை!


வந்தே மாதரம் எனும் எழுச்சி கீதத்தை இயற்றியவர் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா ஆவார். (சாட்டர்ஜி என்றும் குறிப்பர்; ஆங்கிலேயருக்கு வாயில் சட்டோபாத்யாயா,பண்டோபாத்யாயா முதலியவை நுழையாததால் சாட்டர்ஜி,பானர்ஜி என அழைக்க ஆரம்பித்தார்கள்).

துணை ஆட்சியராக ஆங்கிலேய ஆட்சியில் வேலை பார்த்த பங்கிம் சந்திரர் அப்பொழுது வங்க இலக்கியத்தில் ராஜாராம் மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஆகியோரால் ஏற்பட்ட புது எழுச்சியால் ஈர்க்கப்பட்டார். பெரும்பாலான வங்க நூல்கள் வடமொழியின் பாடல்கள், கதைகளின் மொழிபெயர்ப்பாக இருந்த காலத்தில் புத்தம் புதுப் படைப்புகளை வங்கமொழியில் அவர் எழுதினார்.
அதிகாரியாக இருந்த காலத்தில் பார்த்த விஷயங்களைத் தன்னுடைய ஆரம்பகட்ட நாவல்களில் காட்சிப்படுத்தினார். பங்களாதர்ஷன் என்கிற இதழில் பலருக்கும் எழுத வாய்ப்பளித்தார். வங்கத்தில் ஏற்பட்ட இந்து மதத்திற்கு எழுச்சி உண்டாக்கும் வேலைகளில் தானும் இணைய வேண்டும் என்று 1880 களில் இருந்து அது சார்ந்த நோக்கத்தில் நாவல்களை எழுதினார்.

வங்கத்தில் இஸ்லாம் வாளால் பெரும்பாலும் பரவவில்லை என்ற பொழுதும், இந்து-முஸ்லீம்கள் எதிரிகள் என்பது போல நாவல்களைக் கட்டமைத்தார். இந்து-முஸ்லீம் ஒற்றுமை என்பது சாத்தியமில்லை என்று நம்பிய அவர் இந்து கலாசாரம், மறுமலர்ச்சி என்று கருதிக்கொண்டு இந்து மன்னர்கள் இஸ்லாமிய மன்னர்களை வெல்வது போன்ற கதைகளை நாவல்களில் முன்னிறுத்தினார்.

வரலாற்று நோக்கில் இல்லாமல் கற்பனையான அம்சங்களை உண்மை போல ராஜ்சிங்கா, சீத்தாராம், மிருணாளினி நாவல்களில் எழுதினார்.
ஆங்கிலேய அரசில் அதிகாரியாக இருந்த பொழுது பங்கிம் சந்திர சாட்டர்ஜி ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த சன்யாசி புரட்சியைக் கொண்டு ஆனந்த மடம் நாவலை கட்டமைத்தார். அடுத்தடுத்த பதிப்புகளில் மேலே இருந்த அதிகாரிகளுக்கு அஞ்சி ஆங்கிலேயருக்கு எதிரான குறிப்புகளை நீக்கிவிட்டு, இஸ்லாமியர்கள் மட்டுமே வில்லன்கள் போலவும், அவர்கள் மீது நடந்த தாக்குதல்கள், போராட்டம் ஆகியன நூலில் பிரதானமாக மாறின. இதில் தான் வந்தே மாதரம் பாடல் இடம்பிடித்தது.

இப்படி அந்த நூலின் ஐந்தாவது பதிப்பில் எழுதினார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி, ”உண்மையான மதம் முப்பத்தி முக்கோடி தேவர்களை வழிபடுவதில் உள்ளது. இந்து மதம் அறிவைக்கொண்டுள்ளது. ஆங்கிலேயர்கள் நல்ல ஆசிரியர்கள். ஆகவே, நாம் ஆங்கிலேய ஆட்சி நிலைப்பதற்கும், அது உடையாமல் இருப்பதற்கும் துணை புரியவேண்டும். அவர்கள் ஆட்சியில் தான் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். புத்திசாலிகளே! நம்முடைய மதத்தைப் பரப்ப உதவிகரமாக இருக்கும் அவர்களை எதிர்த்து போரிடுவதை நிறுத்திவிடுங்கள்.” என்று எழுதினார்.

காங்கிரஸ் கூட்டத்தில் 1896 இல் தாகூர் இப்பாடலை பாடினார்; காமா இந்திய தேசியக்கொடியை வடிவமைத்த பொழுது நடுவே வந்தே மாதரம் எனும் வரிகள் இடம் பெறுமாறு செய்தார்.
வங்கப்பிரிவினை ஏற்பட்ட பொழுது மக்கள் ஹூக்ளி நதியில் மூழ்கியபடி கூட்டம் கூட்டமாக உணர்ச்சி பெருக்கோடு வந்தே மாதரம் பாடலை ஒரு சேர பாடினார்கள். அப்பாடலை பாட ஆங்கிலேய அரசு தடைவிதித்தது. இப்பாடலின் முதல் இரண்டு பத்திகளில் சிக்கலில்லை; அதற்கடுத்த பத்தியில் இந்திய திருநாட்டைத் துர்கையோடு ஒப்பிட்டு பாடல் இயற்றப்பட்டதால் எல்லாரும் ஏற்கும் பாடலாக இது மாறுவதைத் தடை செய்தது. 1908இல் நடந்த முஸ்லீம் மாநாட்டில் இப்பாடலை பாட கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

1923-ம் ஆண்டுக் காக்கிநாடாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், விஷ்ணு திகம்பர் ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாட முயன்றார். அப்போது, காங்கிரஸ் காரியக் கமிட்டித் தலைவராக இருந்த மௌலானா முஹம்மது அலி, இந்தப் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது, அதனால் இந்தப் பாடலைப் பாட அனுமதிக்க முடியாது என்று தடுத்து நிறுத்தினார். தாகூர் நேதாஜிக்கு எழுதிய கடிதத்தில் உருவ வழிபாட்டைக் கொண்டிராத பிற மதத்தவர் இப்பாடலால் புண்படுவர் என எச்சரித்தார். காந்தியும் எல்லாருக்குமான தேசம் இந்தியா என உறுதியாகச் சொன்னார். தேசிய கீதமாக ஜன கண மன ஆனது. வந்தே மாதரம் தேசியப்பாடலாக முதல் இரு பத்திகளோடு ஏற்கப்பட்டது. பி பி சி நடத்திய கருத்துகணிப்பில் உலகின் தலைசிறந்த பாடல்களில் இரண்டாம் இடத்தை இப்பாடல் வென்றது. வந்தே மாதரம் என்றால் தாய் மண்ணே வணக்கம் எனப்பொருள்.

அப்பாடலின் முதல் இரு பத்திகளின் மொழிபெயர்ப்பு
அன்னையே வணங்குகிறோம்
இனிய நீர்
இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப்பச்சை வயல்களின் மாட்சிமை
தாங்கிய எங்கள் தாயே
உன்னை வணங்குகிறோம்
வெண்மதியின் ஒளிபொழிந்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
நிறைந்த எங்கள் தாயே
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
உன்னை வணங்குகிறோம்.