எது மகத்தான அஞ்சலி?


ஒரு மகத்தான எழுத்தாளன் இறக்கின்ற பொழுது அரசு துக்க தினம் அனுசரிக்காமல் போனதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. கர்நாடகத்தில் மூன்று நாட்கள் அனந்தமூர்த்திக்குத் துக்கம் அனுசரித்தார்கள் என்று பொங்குகிற நாம் இந்தச் சமூகத்தில் எழுத்துக்களை எந்த அளவுக்குக் கொண்டாடுகிறோம்? பைரப்பாவின் நாவல்கள் கர்நாடகாவில் வந்த முதல் நாளே விற்றுத் தீர்ந்து அடுத்தப் பதிப்புக்கு அடுத்த நாளே தயாராகிறார்கள்.

நம்மில் பாதி மக்கள்தொகை கொண்ட கேரளாவின் மலையாள மனோரமா செய்தித்தாளின் விற்பனை மட்டுமே முப்பது லட்சம் பிரதிகள்.. தமிழகத்தின் டாப் மூன்று செய்தித்தாள்களையும் கூட்டினால் தான் அவ்வளவு பிரதிகளைத் தொடமுடியும். பல வருடங்களாக நூலகங்களில் புத்தகக் கொள்முதல் என்பது நடப்பதே இல்லை. ஒரு பெரிய நூலகத்தைச் சத்தமேயில்லாமல் சாகடித்துக்கொண்டிருக்கிறோம். உறுப்பினர் அட்டையில்லாமல் உள்ளேயே வைத்து அழகு பார்க்க புத்தகங்கள் என்ன நகைக்கடை பொம்மையா?

எத்தனை கல்லூரிகளில் பாடப்புத்தகங்களைத் தாண்டிய நூல்களை விற்கும் கடைகள் உண்டு? அப்படியே இருந்தாலும் அதில் எத்தனை பேர் வாங்கப்போகிறோம்? எழுத்தாளனை கடவுள் போல எல்லாம் கொண்டாட வேண்டாம், சமூகத்தின் சிந்தனைப் போக்கை மாற்றத்தை உண்டு செய்வதற்காக அவனை நினைத்துப் பார்க்கிறோமா?

கல்லூரிகளுக்குப் போனால் செய்தித்தாளை எத்தனை பேர் தொடுகிறீர்கள் என்று கேட்டால் எண்ணி பத்து பேர் கையைத்தூக்கினால் அதிகம். கடைசிப் பக்கம் கிரிக்கெட் செய்தி, இல்லையென்றால் இணைப்பில் வரும் சினிமாச் செய்தி இதுதானா சமூகம்? ‘மக்கள் கேட்பதைத்தான் தருகிறோம்’ என்று ஒரு பக்கம் ஊடகமும், ‘எல்லார் படிப்பதைத் தான் நானும் படிக்கிறேன்.’ என்று இன்னொரு பக்கம் நாமும் மந்தை கோஷம் போடுவோம்.

சென்னையின், உங்கள் ஊரின் முக்கியமான நூலகங்கள் எதுவென்று தெரியுமா? முக்கியமான சாப்பாட்டுக்கடைகளும், துணிக்கடைகளும், மால்களும் எங்கு இருக்கின்றது என்று நமக்குத்தெரியாமல் போன நாள் உண்டா? ஒவ்வொரு டிவி நிகழ்ச்சியிலும் நடிகர்கள் என்ன சாப்பிட்டார்கள், எங்கே கடலை போட்டார்கள், எங்கெங்கு சுற்றினார்கள், யாருடன் நட்போடு இருக்கிறார்கள் என்று கேட்பவர்கள், ‘என்ன நல்ல புத்தகம் படித்தீர்கள்’ என்று கேட்கலாமே? ‘நம்ம தலை என்னமோ சொல்லுது! வாங்கிப்படிப்போம்’ என்றாவது வாங்கிப் படிப்பார்கள். பிரபலமான டாக் ஷோக்களில் புத்தக அறிமுகம் ஒன்றை செய்யலாம். அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் போதும். காலையில் ராசிபலன், சமையல் வரிசையில் நிகழ்த்தப்படும் நீண்ட புத்தக அறிமுகத்தைக் கண்டாலே தெறித்து ஓடுவான் கடைக்கோடி மனிதன்.

கல்யாணம் என்றால் இளைஞர்களுக்கு என்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது எனக் கேட்டுப் பாருங்கள், ‘கடுப்பு, ஹனிமூன், மேட்டர், சமையல், அலுப்பு, கட்டுப்பாடு’ இப்படி எதெதையோ சொல்வார்கள். பலர் கிளர்ச்சியோடு அதற்குத் தயாராவார்கள். பெண் கருவுற்று இருக்கும் பொழுதும், பிள்ளை பிறந்த பின்னும் எப்படிப் பார்த்துக்கொள்வது, எப்படி நடந்து கொள்வது என்று சொல்லித்தருகிறோமா? பணத்தைக் கட்டி சேர்த்துவிடு, அதோடு உன் பாடு முடிந்தது..என்றல்லவா எண்ணம் வளர்ந்திருக்கிறது. குழந்தைகள் கார்ட்டூன் சேனல்களிலும், வீடியோ கேம்களிலும் மூழ்கிக்கிடக்கிறார்கள் என்று குறைபடும் நீங்கள் அவர்களுக்குக் கதைப்புத்தகங்களை வாங்கித் தந்திருக்கிரீர்களா? ஒரு நூலகத்தில் கொண்டு போய் அழகான நூல்களை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்களா? நீங்களே படித்துக் காண்பித்துக் கண்கள் விரிய அவர்களுக்குக் கதைகள் சொல்லிதர முயற்சித்து உள்ளீர்களா?

ஒரு எழுத்தாளனை ஒரு நாள் துக்க தினம் அனுசரித்தோ, அரசு மரியாதை செய்தோ சடங்காய் நினைவுகூர்வதற்குக் கேட்பது இருக்கட்டும். எத்தனை எழுத்தாளர்களைத் தேடியிருக்கிறோம். மின் வடிவில் பல புத்தகங்கள் வந்த பின்பு எவ்வளவு தேடித் படித்திருக்கிறோம்? கடவுள், தனிமனித வழிபாடு ஆகியவற்றை எதிர்த்த தலைவர்களையே கடவுளாக்கி. தனிமனித வழிபாடு செய்வதில் பழகிப்போன நாம் போகவேண்டிய தூரம் பெரிது. காரையும், பைக்கையும் விறுவிறுவென ஓட்டும் நீங்கள் அதைக் கொஞ்சம் திருப்பிப் புத்தகக்கடைகள் பக்கமும் எட்டிப்பாருங்கள். மகத்தான, பிடித்த எழுத்தாளர்களின் நூல்களை வாங்கிப் படியுங்கள். பரிசளியுங்கள், விமர்சியுங்கள், நண்பர்களோடு வாட்ஸ்ஆப்பில், சமூக வலைதளத்தில் பகிருங்கள். இதைவிட வேறென்ன பெரிய அஞ்சலி இருக்க முடியும்?

இவை போதும்!


சில கடிதங்கள் அப்படியே அனுப்பப்படாமல்
உள்ளறையில் காத்திருக்கின்றன
சில சொற்கள் நெஞ்சுக்குழிக்குள்
ஊர்க்குளம் தப்பிய மீனாய் குதிக்கின்றன
சில போர்கள் அறிவிக்கப்படாமல்
நடத்தப்படும்
சிதறிக்கிடக்கும் கொப்புளங்கள்
யாரின் கண்ணீரால் நனையவோ வெம்பிச்சிரிக்கும்
எப்பொழுதும் நடக்கும் சாலைகளில் சில குருவிகள் நமக்காக
பாடக்காத்திருக்கும்
விழாக்களின் இருக்கைகள் வெறித்திருக்கையில்
ஒரு வானம் அளவுக்கு பரவிட நினைவுகள்
கிடந்தும்
வீட்டின் அலமாரியில் ஒதுங்கி நின்றழுத இடம் போதும்!

என்றென்றும் ஜெயகாந்தன்!


ஜெயகாந்தன்-தமிழில் விளிம்புநிலை மக்களைப் பற்றிப் பேசிய, குறிப்பாகப் பெண்களின் வாழ்க்கையை, மனவெளியை படம் பிடித்துக்காட்டிய எழுத்துச்சிங்கம் இனிமேல் இல்லை.

‘எழுத்தாளன் ஒரு சட்டத்தின் துணைகொண்டு, ‘இது சரி… இது தப்பு…’ என்று தீர்ப்பும் தண்டனையும் அளிக்கும் சாதாரண ஒரு நீதிபதி அல்ல. வஞ்சிக்கப்பட்டவர்களிடமும், தண்டிக்கப்பட்டவர்களிடமும், சபிக்கப்பட்டவர்களிடமும் குடிகொண்டுள்ள மனித ஆத்மாவையே நாடிச்செல்ல வேண்டும்’ என்று அவர் சொன்ன வார்த்தைகளிலேயே அவரின் எழுத்துக்கள் விவரிக்கப்பட்டு விட்டது. விவேகானந்தரையும், காந்தியையும், மார்க்ஸையும் இணைத்து ஏற்றுக்கொண்ட அபூர்வமான மனப்போக்கு அவருடையது.

அவரின் நூல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்ட பொழுது கூடிய பெண்களின் கூட்டமே அவர் எழுத்தால் அவர்களின் உலகை எப்படிப் படம் பிடித்திருந்தார் என்பதன் வாழ்நாள் சாட்சி. அவர் தமிழர்களைக் கடுமையாக விமர்சித்தார். தமிழ் வெறி கூடவே கூடாது என்றார். இவர்களிடம் நல்ல குணம் எதுவென்று தேடுகிறேன் என்றார். படிக்கிற மாதிரி தமிழில் எதுவுமில்லை என்று சொன்னார். ஆனாலும், தமிழர்கள் அவரைக் கொண்டாடித் தீர்த்தார்கள். அது அவர் எழுத்தும், ஆளுமையும் நிகழ்த்திய மாயம்.

தொழுப்பேடு நிலையத்தில் நாகேஷ் உடன் இணைந்து பிச்சைஎடுக்க முனைந்த அந்தப் பரிசோதனை மனம் எழுத்திலும் தொடர்ந்தது. அக்கினிப் பிரவேசத்துக்கு எதிர்ப்பு எழுந்த பொழுது சில நேரங்களில் சில மனிதர்கள் எழுதிய அந்த ‘நான் இப்படித்தான்!’ என்கிற அந்தக் கம்பீரம் அலாதியானது. உங்கள் மகளின் காதல் திருமணத்தை எதிர்த்தீர்கள் என்று கேள்விப்பட்ட பொழுது அதிர்ச்சியாக இருந்தது. ஒரு அப்பாவின் பதைபதைப்பு அது என்று என் தந்தை சொன்னார். இருக்கலாம்.

உங்கள் மரணச்செய்தியை என் தோழர்கள் சிலருக்கு அழைத்துச்சொன்னேன். அழுதார்கள். “நீங்கள் தமிழர்கள் உணர்ச்சிகரமானவர்கள்.” என்றிருப்பீர்கள். எழுத்துக்களில், மீனாட்சி நிலையத்தின் உங்கள் நூல்களில் மூழ்கிக்கொண்டே இந்தத் துயரக்கணத்தைக் கடக்க வேண்டும்.

பெரியாரையும், திராவிட இயக்கத்தையும் கடுமையாகப் பெரியார் முன்னிலையில் விமர்சித்துப் பேசிய கூட்டத்தின் நினைவை இப்படிப் பகிர்ந்திருப்பார் ஜெயகாந்தன். ‘பின்னர் அவர் என்னை அழைத்தார். மிக மரியாதையாக, ஓர் ஆஸ்திக சமாஜத்தைச் சேர்ந்த மடாதிபதி போல, மிகவும் பண்போடு, இருபத்து நான்கு வயதே ஆன என்னை, “வாங்க, ஐயா!” என்று கரங்கூப்பி அழைத்தார். அக்காலத்திலெல்லாம் நான் யாரையும் காலில் விழுந்து வணங்கியதில்லை. ஆனால், அப்படி ஓர் உணர்வு எனக்கு அப்போது தோன்றியது உண்மை! அவர் என்னை விசாரித்தார். “நீங்க பிராமணப் பிள்ளையா?” “இல்லை” என்றேன். “ரொம்பச் சந்தோஷம்!” என்றார். நான் விடை பெற்றுக் கொண்டேன்.”

எண்பதுகளில் எழுதிய நீங்கள் அதோடு விட்டிருக்கலாம். மீண்டும் ஏன் எழுதினீர்களோ என்று வருத்தம் அவ்வப்பொழுது ஏற்படுவது உண்டு. தமிழர்களின் எண்ணப்போக்கில் பெருத்த சலனங்கள், புனித பிம்பங்களின் மீதான அசராத தாக்குதல்கள், எழுத்தால் அப்படியே வாசகனை கைகட்டி உட்கார வைக்கும் கம்பீரம் எல்லாவற்றையும் நினைத்தபடியே நீர் வழிய உங்கள் புத்தகத்தை தடவத்தான் முடிகிறது.

நாளை வரை சாகாமல் இரு!


நீங்களும் தவறுகள் செய்கிறவராக இருக்கிறீர்கள்.
அதனால் தான் நாம் சமமானவர்கள்.
யாரேனும் உடைகையில்
யாரோ சிலர் நொறுக்கி விலகுகையில்
கரங்குவித்து சிரித்துவிட்டு
வெளியேறும் நமக்குப் பின்னால் பொத்தான்கள் பிய்யும் சப்தம்…
அலமாரியில் மரணத்துக்கான மலர்கள்
சாளரம் திறக்கையில் முத்தங்கள் ஏந்தியபடி
எதிர்வீட்டுப் பூனை
அதன் கைநகம் தடவி கீறல் ஒன்றைப் பெறுகையில்
எவரெவரோ நிமிர்ந்துச் சிரித்தார்கள்.
கத்தரிக்கும் வேலைகளில் கூட தெரியும்
கொலைத்தொழில் புரிவதைவிட
கோபம்கொண்டு ரசித்தபடி
ஒரு கண்ணாடியை காயப்படாமல் பொறுக்குவதாக
எச்சில் படாமல் முத்தம் தருவதாய்
வாகன நெருக்கத்தில் ஒரு மழலையின் அழுகையை கண்டுபிடிப்பதாய்
பிரியம் காட்டுகிறீர்கள் நீங்கள்..
எதனால் நாம் சமமென்று தெரியவில்லை.
அதனால்,
அதையே அடிக்கடிச் சொல்லி
நீங்கள் அழுகையில் ஒரு பேருந்தில் ஏறிப்போகிறேன் நான்.
நாளை வரை சாகாமல் இருங்கள்!

வந்தே மாதரம் தந்தவரின் வாழ்க்கை!


வந்தே மாதரம் எனும் எழுச்சி கீதத்தை இயற்றியவர் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா ஆவார். (சாட்டர்ஜி என்றும் குறிப்பர்; ஆங்கிலேயருக்கு வாயில் சட்டோபாத்யாயா,பண்டோபாத்யாயா முதலியவை நுழையாததால் சாட்டர்ஜி,பானர்ஜி என அழைக்க ஆரம்பித்தார்கள்).

துணை ஆட்சியராக ஆங்கிலேய ஆட்சியில் வேலை பார்த்த பங்கிம் சந்திரர் அப்பொழுது வங்க இலக்கியத்தில் ராஜாராம் மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஆகியோரால் ஏற்பட்ட புது எழுச்சியால் ஈர்க்கப்பட்டார். பெரும்பாலான வங்க நூல்கள் வடமொழியின் பாடல்கள், கதைகளின் மொழிபெயர்ப்பாக இருந்த காலத்தில் புத்தம் புதுப் படைப்புகளை வங்கமொழியில் அவர் எழுதினார்.
அதிகாரியாக இருந்த காலத்தில் பார்த்த விஷயங்களைத் தன்னுடைய ஆரம்பகட்ட நாவல்களில் காட்சிப்படுத்தினார். பங்களாதர்ஷன் என்கிற இதழில் பலருக்கும் எழுத வாய்ப்பளித்தார். வங்கத்தில் ஏற்பட்ட இந்து மதத்திற்கு எழுச்சி உண்டாக்கும் வேலைகளில் தானும் இணைய வேண்டும் என்று 1880 களில் இருந்து அது சார்ந்த நோக்கத்தில் நாவல்களை எழுதினார்.

வங்கத்தில் இஸ்லாம் வாளால் பெரும்பாலும் பரவவில்லை என்ற பொழுதும், இந்து-முஸ்லீம்கள் எதிரிகள் என்பது போல நாவல்களைக் கட்டமைத்தார். இந்து-முஸ்லீம் ஒற்றுமை என்பது சாத்தியமில்லை என்று நம்பிய அவர் இந்து கலாசாரம், மறுமலர்ச்சி என்று கருதிக்கொண்டு இந்து மன்னர்கள் இஸ்லாமிய மன்னர்களை வெல்வது போன்ற கதைகளை நாவல்களில் முன்னிறுத்தினார்.

வரலாற்று நோக்கில் இல்லாமல் கற்பனையான அம்சங்களை உண்மை போல ராஜ்சிங்கா, சீத்தாராம், மிருணாளினி நாவல்களில் எழுதினார்.
ஆங்கிலேய அரசில் அதிகாரியாக இருந்த பொழுது பங்கிம் சந்திர சாட்டர்ஜி ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த சன்யாசி புரட்சியைக் கொண்டு ஆனந்த மடம் நாவலை கட்டமைத்தார். அடுத்தடுத்த பதிப்புகளில் மேலே இருந்த அதிகாரிகளுக்கு அஞ்சி ஆங்கிலேயருக்கு எதிரான குறிப்புகளை நீக்கிவிட்டு, இஸ்லாமியர்கள் மட்டுமே வில்லன்கள் போலவும், அவர்கள் மீது நடந்த தாக்குதல்கள், போராட்டம் ஆகியன நூலில் பிரதானமாக மாறின. இதில் தான் வந்தே மாதரம் பாடல் இடம்பிடித்தது.

இப்படி அந்த நூலின் ஐந்தாவது பதிப்பில் எழுதினார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி, ”உண்மையான மதம் முப்பத்தி முக்கோடி தேவர்களை வழிபடுவதில் உள்ளது. இந்து மதம் அறிவைக்கொண்டுள்ளது. ஆங்கிலேயர்கள் நல்ல ஆசிரியர்கள். ஆகவே, நாம் ஆங்கிலேய ஆட்சி நிலைப்பதற்கும், அது உடையாமல் இருப்பதற்கும் துணை புரியவேண்டும். அவர்கள் ஆட்சியில் தான் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். புத்திசாலிகளே! நம்முடைய மதத்தைப் பரப்ப உதவிகரமாக இருக்கும் அவர்களை எதிர்த்து போரிடுவதை நிறுத்திவிடுங்கள்.” என்று எழுதினார்.

காங்கிரஸ் கூட்டத்தில் 1896 இல் தாகூர் இப்பாடலை பாடினார்; காமா இந்திய தேசியக்கொடியை வடிவமைத்த பொழுது நடுவே வந்தே மாதரம் எனும் வரிகள் இடம் பெறுமாறு செய்தார்.
வங்கப்பிரிவினை ஏற்பட்ட பொழுது மக்கள் ஹூக்ளி நதியில் மூழ்கியபடி கூட்டம் கூட்டமாக உணர்ச்சி பெருக்கோடு வந்தே மாதரம் பாடலை ஒரு சேர பாடினார்கள். அப்பாடலை பாட ஆங்கிலேய அரசு தடைவிதித்தது. இப்பாடலின் முதல் இரண்டு பத்திகளில் சிக்கலில்லை; அதற்கடுத்த பத்தியில் இந்திய திருநாட்டைத் துர்கையோடு ஒப்பிட்டு பாடல் இயற்றப்பட்டதால் எல்லாரும் ஏற்கும் பாடலாக இது மாறுவதைத் தடை செய்தது. 1908இல் நடந்த முஸ்லீம் மாநாட்டில் இப்பாடலை பாட கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

1923-ம் ஆண்டுக் காக்கிநாடாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், விஷ்ணு திகம்பர் ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாட முயன்றார். அப்போது, காங்கிரஸ் காரியக் கமிட்டித் தலைவராக இருந்த மௌலானா முஹம்மது அலி, இந்தப் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது, அதனால் இந்தப் பாடலைப் பாட அனுமதிக்க முடியாது என்று தடுத்து நிறுத்தினார். தாகூர் நேதாஜிக்கு எழுதிய கடிதத்தில் உருவ வழிபாட்டைக் கொண்டிராத பிற மதத்தவர் இப்பாடலால் புண்படுவர் என எச்சரித்தார். காந்தியும் எல்லாருக்குமான தேசம் இந்தியா என உறுதியாகச் சொன்னார். தேசிய கீதமாக ஜன கண மன ஆனது. வந்தே மாதரம் தேசியப்பாடலாக முதல் இரு பத்திகளோடு ஏற்கப்பட்டது. பி பி சி நடத்திய கருத்துகணிப்பில் உலகின் தலைசிறந்த பாடல்களில் இரண்டாம் இடத்தை இப்பாடல் வென்றது. வந்தே மாதரம் என்றால் தாய் மண்ணே வணக்கம் எனப்பொருள்.

அப்பாடலின் முதல் இரு பத்திகளின் மொழிபெயர்ப்பு
அன்னையே வணங்குகிறோம்
இனிய நீர்
இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப்பச்சை வயல்களின் மாட்சிமை
தாங்கிய எங்கள் தாயே
உன்னை வணங்குகிறோம்
வெண்மதியின் ஒளிபொழிந்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
நிறைந்த எங்கள் தாயே
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
உன்னை வணங்குகிறோம்.

அன்புள்ள ஆசிரியர்களுக்கு ஒரு மாணவனின் கடிதம்…


 • மோசமாக மாணவர்களை நடத்திய ஆசிரியர்கள் பற்றிப் பல்வேறு செய்திகள் காதில், கண்ணில் பட்டபடி இருக்கின்றன. கல்விமுறையில் மாணவர்களை ஒரு வகுப்பின் சாக்பீஸ் அளவுக்குக் கூடப் பலர் மதிப்பதில்லை என்பது எத்தனை வருத்தமானது? வகுப்பில் மாணவன் கைகட்டிக்கொண்டு தான் பதில் சொல்ல வேண்டும். எதிர்த்துக் கேள்வி கேட்கக்கூடாது. சிரித்துவிடக் கூடாது. ஆண்,பெண் குழந்தைகளாகப் பாகுபாடு காட்டி சமூகத்தின் செயல்பாட்டில் இவர்களும் பங்குவகிப்பார்கள். ஆனாலும், அவ்வப்பொழுது காயத்துக்கு மருந்து போட்ட ஆசிரியர்களையும் இங்கே காண முடிந்திருக்கிறது.

  அவர் சமீபத்தில் ஒரே ஒரு வகுப்பு எடுத்தார். எதோ ஒரு நகைச்சுவையை இயல்பாக என்னை நோக்கி வீசினார். “இப்படிலாம் நீங்க இருந்தா என்னாகும் பூ.கொ.?” என்று கேட்டார். “நாசமாகிடும் சார்!” என்று நான் சொன்னேன். இருபத்தி மூன்று வயதில் நிற்கும் என்னை அப்படியே தலையை இரண்டு கரங்களாலும் பற்றி அணைத்துக்கொண்டார். “அப்படிலாம் சொல்லக்கூடாது செல்லக்குட்டி. நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும். நல்லா வருவீங்க…” என்ற பொழுது சட்டென்று குழந்தையாக மாறிப் போனது போல இதமாக இருந்தது.

  காகிதப் படகில் சாகசப்பயணம் நூலில் பெ. கருணாகரன்அண்ணனும் இதே போலத் தவறு செய்த தன்னை முத்தம் கொடுத்து அன்பு செய்த ஆசிரியரை சொல்லி உருகியிருப்பார். மரி என்கிற ஆட்டுக்குட்டியில் அன்புக்காக ஏங்கும் அடவாடி போலக் காட்சி தரும் அந்த வழித் தவற இருந்த மகளைக் கேள்விகள் கேட்காமல் அன்பு செய்யும் ஆசிரியர் போல ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரே ஒருவர் இருந்து விட்டார்.

  கல்வித்துறைக்குள் ஆசிரியர் பட்டம் பெற்றவர்களை மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். எத்தனையோ பொறியியல் முடித்த இளைஞர்கள் துவங்கி பலர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். குறுகிய காலத்தில் பயிற்சி அளித்து, ஆரம்பக்கல்வியைப் பயிற்றுவிக்க அவர்களைக் களத்தில் நிச்சயம் இறக்கலாம். ஆசிரியராக அதற்கு முன்னர் அனுபவம் இல்லாத Kannan Rajagopalan அவர்கள் பாடம் எடுத்தால் மெய்மறந்து அமர்ந்திருக்கலாம். யாரேனும் சரியாக விடை சொன்னால், பாக்கெட்டில் என்ன இருந்தாலும் எடுத்து அப்படியே கொடுத்துவிடும் அவரைப் போல சகல மாணவர்களையும் ஊக்குவிப்பவர்கள் இங்கே தேவைப்படுகிறார்கள். அதிலும் பதில் சொல்லத்தயங்கியபடி அமர்ந்திருக்கும் பிள்ளைகளை நோக்கி அவரின் அன்புக்கரங்கள் நீளும். பறவைக்கூட்டம் பறக்கையில் பறவைகள் முன்னும், பின்னும் நகர்ந்து நெடும்பயணத்தை முன்னெடுக்கும். பின்னால் இருக்கும் கூண்டுக்கிளியின் சிறகுகளை நீங்கள் திறந்துவிட முடியும் தெரியுமா?

  வகுப்பில் யாரேனும் ஒருவனை எழுப்பி விட்டு இறுதி வரை நிற்க வைக்கிற காவல் நிலையங்களாகப் பலர் திகழ்வதைக் கண்டு பதைபதைத்திருக்கிறதா? என்னமோ வரக்கூடாத இடத்தில் இருந்து, வந்து சேர்ந்த அழுக்கைப் போலப் பிள்ளைகளைப் பார்க்கும் பார்வையால், தேர்வில் வாங்கும் மதிப்பெண்ணால் மட்டுமே எடை போட்டு என்ன ஆகப் போகிறது? தராசுகள் எப்பொழுது தாழ்ந்தே இருக்கிற பொழுதே அது நியாயத்தட்டில்லை என்று இத்தனை ஆண்டுகளில் புலப்பட்டு இருக்க வேண்டாமா?

  ஏ.கே.ஜார்ஜ் வகுப்பில் எழுந்து நின்று வணக்கம் சொல்வதையே வெறுப்பவர். வகுப்பில் பதில் சொல்லாமல் நிற்பதையும் அவர் கடுமையாக நினைக்கிறவர். “பதில் தப்போ, சரியோ வாயைத் திறந்து சொல்லணும். எதுக்குப் பயம். நினைச்சதை சொன்னா என்ன?” என்று அவர் கேட்பார். கேள்விகளைக் கேட்காமல் வெறும் பதில்களை மட்டும் சொல்பவர்களாக மாற்றப்பட்டு விட்டவர்கள் நாங்கள் என்றாலும், ஒரே ஒருவர் தேர் வடத்தை இழுக்கப் பார்க்கிறார். கொஞ்சம் நகர்த்திப் பார்க்கலாம் தான்…

  ” மூலசூத்திரங்களை மனப்பாடம் பண்ணுகிறவர்களுக்கு நடுவே, இந்தா பார்முலா, பாடத்தைப் புரிஞ்சுக்கிட்டு கணக்குப் போடு..” என்ற முட்கல் அதே சைக்கிளில் சிரித்தபடி தெரிகிறார். புத்தகத்தைத் திறந்து வைத்துக்கூட விடை தேடி தேர்வு எழுது என்று அப்படியாவது கற்றுக்கொள்ளட்டும் என்று சொன்ன industrial biotechnology மாணவர்களின் கதைகளைக் கேட்கிற பொழுது அந்த மாதிரியான முயற்சிகள் முயலாமலே பழமையைக் காப்பது விரக்திச் சிரிப்பை தந்தது.

  ஆசிரியர்களுக்கு மதிப்பிடும் முறை பெரும்பாலான இடங்களில் கிடையாது. அப்படியே இருந்தாலும் அதிலும் தனிப்பட்ட வன்மம் தான் பெரும்பாலும் வெளிப்படும். “நீ நல்லா படிக்கல!” என்று மாணவனை நோக்கி சொல்ல ஆசிரியரால் முடிகிறது என்றால் மரியாதை அளவுகோல்களைத் தாண்டி, “நீங்க நடத்துறது புரியலை!” என்று கண்ணியத்தோடு மாணவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்ய எத்தனை ஆசான்கள் அனுமதிப்பார்கள். அல்லது சுற்றியிருப்பவர்கள்? கணபதி அய்யா அதை எப்பொழுதும் செய்தார். அவர் நடத்தும் ஒன்று புரியவில்லை என்ற கணத்தில் வேறொரு ஆசிரியரை அனுப்பி வைத்துப் பின்னர்ப் புரிந்ததா என்று கேட்டு திருப்தி பட்டுக்கொண்டார்.

  வகுப்பில் சந்தேகம் கேட்டால் அடுத்த வகுப்பில் சொல்வதாகவோ, இல்லை எதிர்க்கேள்வி கேட்டோ அமரவைக்கும் ஆசிரியர்களில் எத்தனை பேர் இருக்கிற ppt தாண்டி படிக்கிறார்கள். “எனக்கும் தெரியாது! கத்துக்கொடுங்க! சேர்ந்து படிக்கலாம்…”என்ற பாஸ்கர் பாபுஜி சார் போல மாணவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள முனைகிற ஆளுமைகள் எவ்வளவு குறைவாக உள்ளார்கள்? கற்றல் என்பது இருவழிப்பயணம் என்று சொன்னால் மட்டும் போதுமா? அப்படியே மாணவனை மட்டும் சாப்பிடும் கருந்துளையாக இருந்தால் எப்படி?

  வகுப்பில் பாடங்களைத் தாண்டி எத்தனை ஆசிரியர்கள் பேசுகிறார்கள். சமூகச் சிக்கல்களைப் பற்றியும், தன்னுடைய நியாயமான கவலையையும் பதிவதோடு மாணவர்களின் கருத்துக்களையும் ஒரு கோப்பைத் தேநீர் சாப்பிட்டபடி கேட்கும் ஆசான்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கத்தானே செய்கிறார்கள். நீங்களும் மாணவர்களை நோக்கி அடிக்கப் பலமான செங்கல்களாகப் பாடங்களைச் சூளையில் சூடேற்றுவதற்கு நடுவில் கொஞ்சம் இதமாகக் கதைகள் பேசலாம் இல்லையா?

  மாணவர்களைக் குழந்தைகளாகப் பார்த்து அவர்களின் சிக்கல்களைக் காது கொடுத்து கேட்கும் ஆசிரியர்கள் எத்தனை பேர்?கொலைக்களத்தில் நிற்கும் தண்டனை நிறைவேற்றும் நபரைப் போல எத்தனை கடுகடுப்பும், கோபமும், அதிகாரமும் இங்கே காணப்படுகிறது? பிள்ளைகள் அப்புறம் எப்படி அணுகுவார்கள்?

  மாணவன் வகுப்புக்கு வராமல் போனாலோ, கொஞ்சம் அட்டூழியம் செய்தாலோ, தவறு செய்து மாட்டினாலோ உடனே காய்ந்து விட வேண்டியதில்லை. குற்றம் கடிதலில் படிப்படியாக அவன் பக்கம் என்ன தவறு, அவனைத் தண்டித்தால் என்ன நடக்கும், கொஞ்சம் பேசிச் சரி செய்ய முடிகிறதா என்று முயன்று பார்ப்பதில் தீர்வுகள் பெரும்பாலும் கிட்டும்.

  அந்தப் பள்ளி தலைமைஆசிரியையைப் பல முறை சந்தித்திருக்கிறேன். ஆறு வயது குழந்தை முதல் ப்ளஸ் ஒன் பிள்ளை வரை யாவரும் அஞ்சாமல், சிரித்தபடி அவரிடம் குறைகளைச் சொல்ல முடியும். எப்பொழுதும் முகம் சுளிக்க மாட்டார், கண்டிப்பைக் கூட மெதுவாய் பரவும் காலை வெப்பம் போலத் தான் காட்டுவார். கண்ணீர் விட்டு அழுது, அவர் வைத்த நம்பிக்கைக்காகத் தங்களுக்குப் பிடித்தவற்றில் மின்னியவர்கள் பலரைத் தெரியும்.

  எதிரே இருக்கும் பிள்ளை களிமண்ணோ, கரித்துண்டோ, குப்பையோ இல்லை. நீங்கள் அதைச் சிற்பமாக, வைரமாக, அழகிய பொருளாகவோ மாற்றுவதாகக் கவிதை பாடவேண்டாம்.
  கவலைகளும், அவநம்பிக்கையும் ததும்பி வழியும் சமூகத்தின் சுழலில் எலி ஓட்டத்தில் ஓடப்போகும் பிள்ளையாக அவர்களை மாறவிடாமல் உங்களின் கணநேரக் கரிசனமும், ஜனநாயக அணுகுமுறையும் காப்பாற்றக்கூடும். “எதுவுமே வாய்ப்பில்ல தம்பி!” என்று சொல்லலாம் நீங்கள். ஏதேனும் வாய்ப்புகள் இருக்கிற ஒரே நம்பிக்கை பீடமாக நீங்கள் இருப்பதால் தான் மண்டியிட்டு இப்படியொரு முறையீடு!

  காத்திருப்புடன்,

  நல்ல ஆசிரியர்களால் கற்றுக்கொண்டே இருக்கும் மாணவன் ஒருவன்

ராம் மனோகர் லோகியா


ராம் மனோகர் லோகியா இந்திய அரசியல் வரலாற்றின் மகத்தான ஆளுமைகளில் முக்கியமானவர். உத்திர பிரதேசத்தில் ஹார்ட்வேர் தயாரிக்கும் குடும்பத்தில் பிறந்த அவர் மராத்தி,வங்காளி மொழிகளில் புலமை பெற்றார். விடுதலைப்போரில் காந்திய வழிகளால் ஈர்க்கப்பட்டுச் சைமன் கமிஷன் எதிர்ப்பு ஊர்வலங்களில் கலந்து கொண்டார். ஜெர்மனிக்கு உயர்படிப்புப் படிக்கப் போன பொழுது புகழ்பெற்ற சோசியலிச அறிஞர் வெர்னெர் சோம்பர்ட் வழிகாட்டுதலில் ‘உப்பின் பொருளாதாரம் !’ என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்தார். லீக் ஆப் நேஷன்ஸ் அமைப்பின் கூட்டத்துக்குள் நுழைய முயன்று ஆங்கிலேய ஆளுகைக்கு உட்பட்ட தேசம் என்பதால் அனுமதி மறுக்கப்படவே அதற்கு எதிராகக் குர்ல கொடுத்தார். நாடு திரும்பியதும் காங்கிரஸ் கட்சியின் உள்ளேயே காங்கிரஸ் சோசியலிச கட்சியை ஆரம்பித்தார்.

காங்கிரஸ் கட்சியின் அயலுறவுக்கொள்கையின் தலைவராக அவரின் இருபத்தி ஆறு வயதில் நியமிக்கப்பட்டார். இந்தியாவின் அயலுறவுக்கொள்கைக்கான ஆரம்பகால வடிவம் வழங்குவதில் அவரும் முக்கியப் பங்காற்றினார். அதற்குப் பின்னர் உலகப்போரில் ஆங்கிலேயரை அவர் எதிர்த்துக் குரலம் கொடுக்கக் கைது செய்யப்பட்டார். காந்தியின் கடும் எதிர்ப்பால் அவர் விடுதலை செய்யப்பட்டார். வெள்ளையனே வெளியேறு இயக்க காலத்தில் இருபத்தி ஒரு மாதம் தலைமறைவு வாழ்க்கை நடத்தி ஆசாத் தஸ்த் என்கிற இதழையும்,ரகசிய ரேடியோ நடத்துவதையும் உறுதி செய்தார். நேபாளம் வரை விடுதலைப்போரை கொண்டு சென்று அப்பகுதியை இந்தியாவுடன் இணைக்க முயன்றார். பின்னர்க் கைது செய்யப்பட்டுக் கடும் இன்னல்களுக்கு உள்ளானார். விடுதலை அடைந்த பின்பு கோவாவுக்குள் இரண்டு முறை நுழைந்து கிளர்ச்சி உண்டாக்கி அப்பகுதியை இந்தியாவுடன் இணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். மூன்றாம் முறை காந்தி மற்றும் நேருவின் வேண்டுகோளால் நுழையாமல் அமைதி காத்தார்.

காங்கிரஸ் விடுதலைக்குப் பின்னர் எளிய மக்களை விட்டு விலகி விட்டது என்று குற்றம் சாட்டி கட்சியை விட்டு விலகி சோசியலிச கட்சியை ஆரம்பித்தார். பல்வேறு பிரிவு மற்றும் இணைப்புக்கு பிறகு சம்யுக்தா சோசியலிச கட்சியாக அவரின் கட்சி பெயர் பெற்றது. கம்யூனிசம் மற்றும் முதலாளித்துவம் இரண்டிடம் இருந்தும் சம தூரத்தில் நிற்க வேண்டும் என்பது அவரின் பார்வையாக இருந்தது. இரண்டு முறைகளிலும் உற்பத்தி முறைகளில் பெரிய வித்தியாசமில்லை. முதலாளித்துவத்தில் முதலாளிகள் முடிவுகள் எடுத்தால் கம்யூனிசத்தில் அரசாங்கம் எல்லா அதிகாரத்தின் புள்ளியாக இருக்கிறது. எளிய மக்களின் வாழ்வில் பெரிய மாற்றம் ஒன்றும் இரண்டு முறைகளாலும் ஏற்படுவதில்லை. பெரிய இயந்திரங்கள் என்கிற மாதிரியை மேற்கு நம்மின் மீது திணிக்கப் பார்க்கிறது. ஆகவே,தொழில்நுட்பத்தைக் கூட்டுறவு மற்றும் குழுக்கள் மூலம் கிராமங்களுக்குச் சிறிய இயந்திரங்களின் மூலம் கொண்டு சேர்த்து சாதிக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். ஓட்டளிப்பு,கிளர்ச்சி செய்தல் மற்றும் கடும் உழைப்பு ஆகியவற்றைக் குறிக்கும் வாக்குப்பெட்டி,சிறை,மண்வெட்டி ஆகியவற்றை அவர் அடையாளமாகப் பயன்படுத்தினார். நிதி மூலங்கள் கிராமங்கள்,மாவட்டங்கள் ஆகியவற்றுக்குப் பிரித்து வழங்கப்பட வேண்டும் என முழங்கிய அவர் அரசியல் மற்றும் பொருளாதார இடங்களில் அறுபது சதவிகிதம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அவர் ஆங்கிலத்தைத் துறந்து இந்தியை மக்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்று அயராது பாடுபட்டார். ராமாயண மேளாவை நடத்தி இந்திய மொழிகளுகுள்ளான உரையாடலை அதிகப்படுத்த விரும்பினார். பெண்ணுரிமைக்காகவும் அவர் குரல் ஓங்கி ஒலித்தது. காஷ்மீரில் இந்தியாவின் உரிமையை ஆதரித்த அவர் அங்கே நடந்த ஜனநாயக மீறல்களைச் சாடினார். பாகிஸ்தானோடு இந்திய முஸ்லீம்களை இணைத்து பேசுவது பெருந்தவறு என்பது அவரின் பார்வையாக இருந்தது. கம்யூனிசதின் போராட்ட முறைகளைக் கைக்கொள்கிற அதே சமயம் அதன் வன்முறையைத் துறப்பதை அவர் வலியுறுத்தினார். ஜாதி அமைப்பை புரிந்து கொண்டு இந்தியாவுக்கான சோசியலிச மாதிரியை அவர் முன்மொழிந்தார். ஆதிக்கச் சாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு உழைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார்.

சீனப்போரில் நேரு தோற்ற போன  அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். “நேருவுக்கு மட்டும் ஒரு நாளைக்கு அரசு இருபத்தைந்து ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறது. அவரின் நாய்களுக்குக் கூட அரசுதான் செலவு செய்ய வேண்டும் போல !” என்று அவர் அதிரடித்தார். மூன்று பஅனாவில் மக்கள் வாழும் அவலச்சூழல் உள்ளது என்று அவர் சொல்ல நேரு அதை மறுத்து பதினைந்து அனாவில் மக்கள் வாழ்கிறார்கள் என்று பதில் தந்தார். அதை இவர் ஆதாரங்களோடு மறுக்கத் திட்ட கமிஷன் இன்னமும் கவனமாகச் செய்ய அது வழிவகுத்தது. அவரின் வாழ்க்கை போராட்டங்களால் நிரம்பி இருந்தது. ஜாதி ஒழிப்புக்கு அவர் இயங்கினார், அங்கே கம்யூனிஸ்ட்கள் கோட்டை விட்டுவிட்டார்கள் என்பது அவரின் வருத்தம்.

வடகிழக்கு மக்களை அருங்காட்சியக பொருட்கள் போல நேரு பார்ப்பதாகச் சொல்லி அப்பகுதிகளுக்குள் அவர் நுழைய முயன்று கைதுக்கு உள்ளானர். கர்நாடகாவில் நடந்த தொழிலாளர் போராட்டம்,உத்திர பிரேதசத்தில் நடந்த நீர் வரி ஏற்றத்துக்கு எதிரான போராட்டம்,மணிப்பூருக்குத் தனிச் சட்டசபை கோரி போராட்டம் என்று அவரின் போராட்டங்கள் நீண்டுகொண்டே இருந்தன. சிறை போய் வருவது அவருக்கு நெருக்கமான நிகழ்வாக ஆகிவிட்டு இருந்தது. நிறவெறிக்கு எதிராக அமெரிக்காவின் மிசிசிபியில் வெள்ளையர்கள் மட்டுமே நுழையக்கூடிய உணவகத்தில் நுழைந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அவர் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அப்பொழுது அவரின் மன்னிப்புக் கேட்கப்பட்ட பொழுது “இந்த மன்னிப்பை சுதந்திர தேவி சிலையிடம் கேளுங்கள் !” என்று கம்பீரமாகச் சொல்லிவிட்டு நடந்தார். 1956 இல் அண்ணல் அம்பேத்கர் மற்றும் லோஹியா இருவரும் அடுத்தத் தேர்தலில் இணைந்து பணியாற்ற கலந்தாலோசிதார்கள். துயரகரமாக அம்பேத்கர் இறந்துவிட ஒரு அற்புத சங்கமம் நிகழாமலே போனது.