மனோன்மணியம் பெ.சுந்தரனார் அவர்களின் அரிய பணிகள்


:
தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் பெ.சுந்தரனாரின் (சுருக்கமாகப் பெ.சு,) அறிவுலகப் பணிகள் குறித்து, ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்கள் ‘மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்’ என்கிற குறுநூலை எழுதியுள்ளார். நாற்பத்தி இரண்டு ஆண்டுகளே வாழ்ந்த பெ.சு நாடகாசிரியர், ஆய்வாளர், உரைநடை எழுத்தாளர் என்கிற பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். அவர் மொத்தமாக ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியவை 650 பக்கங்களில் அடங்கிவிடும். ஆனால், தமிழ் இலக்கிய வரலாற்றின் கால ஆராய்ச்சி, கல்வெட்டு ஆய்வு ஆகியவற்றுக்கு வித்திட்டவர் என்கிற சிறப்புக்கு உரியவர்.
தன்னுடைய மனோன்மணியம் நாடக நூலில் தன்னை, ‘அடியேன் கடையேன்; அறியாத சிறியேன்; கொடுமலையாளக் குடியிருப்பு உடையேன்’ என்று அடக்கமாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்த்த பெ.சு. தன்னுடைய தமிழார்வத்தால் திருவனந்தபுரத்தில் இருந்து மாட்டுவண்டி ஏறி செங்கோட்டை அடைந்து அங்கிருந்து சென்னை வரை பயணம் செய்து தமிழறிஞர்களைக் கண்டு, அறிவுப்பசி ஆற்றிக்கொண்டார். அன்றைய சமஸ்தான மன்னரின் உதவியோடு லண்டனில் இருந்து ஆங்கில நூல்களை வரவைத்து வாசித்து இருக்கிறார்.

களக்காட்டில் இருந்து ஆலப்புழைக்குக் குடிபெயர்ந்த வேளாளர் குடும்பம் என்றாலும் தமிழையும், சைவத்தையும் பெ.சுவின் குடும்பம் மறக்கவில்லை. திருவிதாங்கூர் அரசர்களின் மொழி வெறுப்பற்ற தன்மை இதற்குக் காரணம் என்று ஆதாரங்களோடு கவனப்படுத்துகிறார் அ.கா.பெருமாள். பெ.சு வரலாறு, தத்துவம் பயின்றார். தத்துவத்தில் 1880-ல் முதுகலை பட்டம் பெற்றார். சட்டம் பயின்றாலும் அப்படிப்பை அவர் முடிக்கவில்லை. பெ.சு. அவர்கள் திருநெல்வேலி ம.தி.தா. இந்துப்பள்ளியின் தலைமைப்பொறுப்பில் இருந்த போது தமிழை முறையாகக் கற்றதோடு, ஸ்ரீ கோடகநல்லூர் சுவாமிகளிடம் சித்தாந்த சாத்திரங்களைக் கற்றுத்தேர்ந்ததோடு தானே சுயமாகத் தமிழ் இலக்கியங்களைப் படித்துள்ளார். திருவனந்தபுரம் கல்லூரியில் பயின்ற போது தமிழ்த்துறைக்குப் புத்தகங்களை வாங்கியுள்ளார்.

திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியின் தத்துவத்துறை பேராசிரியராக இருந்த முனைவர் ராபர்ட் ஹார்வி இங்கிலாந்து போக வேண்டி இருந்த போது தன்னுடைய இடத்திற்குப் பெ.சுவை பரிந்துரை செய்தார். 1878-1882 வரை தத்துவ ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் மூன்றாண்டுகள் சமஸ்தான மன்னரால் பிறவகைச் சிரஸ்தார் என்னும் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இது அரசு நிர்வாகம் தொடர்புடையது. இப்பணி காலத்தில் தான் பல்வேறு கோவில்களுக்குப் பயணம் செய்து, கல்வெட்டுகள், ஆவணங்களைப் பெ.சு. ஆய்வு செய்துள்ளார். 1885-1897 வரை ஹார்வியின் பரிந்துரையால் மகாராஜா கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார். நன்றி மறவாமல் தன்னுடைய வீட்டிற்கு ஹார்விபுரம் என்று பெயரிட்டதோடு, தன்னுடைய மனோன்மணியம் நாடகத்தை அவருக்கே சமர்ப்பித்தார்.

நாடகாசிரியர்:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் புராணங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தமிழ் நாடகங்கள் எழுந்தன. தமிழகத்தில் அக்காலத்தில் 327 நாடகங்கள் வெளிவந்ததாக ஒரு ஆய்வுக்குறிப்புண்டு. பெ.சு இத்தகைய நாடகங்களைப் படித்துள்ளார். லிட்டன் பிரபு எழுதிய ரகசிய வழி கதையின் தழுவலாகத் தன்னுடைய மனோன்மணியம் நாடகத்தைப் பெ.சு எழுதினார். பெ.சுவின் நாடகம் எளிமை, விறுவிறுப்பு, அமைப்பிற்காகப் பரவலாகப் படிக்கப்பட்டது. இந்நாடகத்தை அரங்கேற்றும் நோக்கத்தோடு பெ.சு எழுதவில்லை, வாசிப்பின்பத்திற்காகவே அதனை இயற்றியதாக அவரே குறிப்பிட்டுள்ளார்.

வெண்பா, கலிப்பா, குறள் வெண்செந்துறை, வஞ்சிப்பா என்று பல்வேறு பாவினங்கள் விரவிவர இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இந்நூலை தத்துவப் பின்னணியோடு பெ.சு படைத்தார். ‘இல்லறம், துறவறம், பக்தி ஞானம் முதலிய மோட்ச சாதனங்கள்’ பாத்திரங்களின் மூலம் உருவகப்படுத்தி இந்நாடகம் அமைந்தது.

Image result for சுந்தரம் பிள்ளை ncbh
இந்நாடகத்தில் திருக்குறள் பல்வேறு இடங்களில் மேற்கோள் காட்டப்படுகிறது. ‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக்கு ஒருநீதி’ என்கிற வரி நூலில் இடம்பெறுகிறது. ‘பத்துப்பாட்டில் மனம் பற்றியவர் பிற நூற்களைப் பற்றமாட்டார்’ என்று பெ.சு சிலிர்க்கிறார். மனோன்மணியம் நாடகம் பல்வேறு பல்கலைகழகங்களில் பாடநூலாக வைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்ட சிறப்புக்கு உரியது.

ஆய்வறிஞர்:
கரைக்கோட்டை, ஒழுகினசேரி சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரன் கோவில் கல்வெட்டுகள் என்று பலவற்றைப் பெ.சு. படியெடுத்து உள்ளார். ஆங்கிலத்தில் பத்துப்பாட்டு, திருவிதாங்கூரின் ஆரம்பகால வரலாறு, ஞானசம்பந்தர் காலம், உதிரியான சில கல்வெட்டுகள், நம்பியாண்டார் நம்பியின் காலம் முதலிய கட்டுரைகளை எழுதினார். பத்துப்பாட்டின் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகிய மூன்று நூல்களையும் பெ.சு மொழிபெயர்த்துள்ளார்.

திருவிதாங்கூர் வரலாறு கட்டுரையில் கொல்லம் ஆண்டு என்கிற வழக்கம் எப்படி வந்தது என்பதைக் கல்வெட்டுகளைக் கொண்டு ஆய்வு செய்து புதியதொரு பார்வையை முன்வைக்கிறார். அக்கட்டுரையில் சமூக நோக்கோடும் பெ.சு எழுதியுள்ளார். திருவிதாங்கூர் வரலாற்றில் ஆரியப்பண்பாடும், ஆரியருக்கு முந்தைய திராவிடப்பண்பாடும் இணைந்தே உள்ளன என்கிற பெ.சு கன்னியாகுமரி முதல் பறவூர் வரை பயணிக்கும் ஒருவன் பழம் திராவிட மரபைக் காணமுடியும் என்கிறார். திருவிதாங்கூர் பகுதியின் வேணாட்டு மன்னர்களின் காலத்தைப் பெருமளவில் துல்லியமாக முதலில் கணித்தவர் பெ.சு. சம்பந்தர் காலம் கட்டுரையில் அவரின் காலத்தைச் சமூகச்சூழல், சமூக வரலாறு, அரசியல் வரலாறு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பெ.சு கண்டறிந்துள்ளார். ஆதி சங்கரரின் நூல்கள், மத்தவிலாச பிரகசனம் ஆகியவற்றைக்கொண்டு சம்பந்தர் காலம் ஏழாம் நூற்றாண்டு என்று நிறுவுகிறார். ராஜராஜன் காலமே நம்பியாண்டார் நம்பி காலம் என்றும் வாதிடுகிறார்.

ராமாயணத்தின் சாதி குறித்துக் கூர்ந்து நோக்கிய பெ.சு. அது குறித்து வெ.சு. முதலியாரிடம் பேசினார். அதைக்குறித்து எழுதவுள்ளதாகச் சொன்னாலும் அதற்குள் அமரரானார். ஆகவே, பெ.சுவின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வான்மீகி ராமாயணம் குறித்துக் கட்டுரை வரைந்தார் வெ.சு.முதலியார். ‘அதில் ராமாயணம் ஆரியச்சார்புடையது. ஆரியர் என்பவர் தமிழ் பிராமணர், வட இந்திய சாதியர் சிலரைக் குறிக்கும் சொல். ஆரியர் அல்லாத அநாரியர் தென்னிந்தியக் குடிகள் ஆவர்.’ என்றதோடு, ‘பெண்ணைச் சிறைப்பிடித்தும் ராவணன் கொல்லவில்லை, திராவிடப்பெண்ணான சூர்ப்பநகையை லட்சுமணன் துரோகம் செய்தவன். விபீஷணன் என்ற திராவிடன் துரோகம் செய்தவன்; அதற்காக ஆழ்வார் பட்டம் பெற்றவன். ஆரியர்கள் திராவிடர்களை இழிவானவர்கள் எனச் சொல்லி நம்பும்படி ஆக்கிவிட்டார்கள்’ என்றும் குறிப்பிட்டார்.

உரைநடையாசிரியர்:
உரைநடையில், ‘சாத்திர சங்கிரகம் என்னும் நூற்றொகை விளக்கம்’ என்கிற ஒரே நூலை எழுதினார். இந்நூலில் கலைச்சொல்லாக்கம் உண்டு. இதைக்குறித்துப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, ‘தமிழ்ச்சுடர்மணிகள்’ நூலில். ‘….சுந்தரம்பிள்ளை தன் நூலில் தமிழ் மொழிபெயர்ப்புச் சொற்களைத் தந்திருக்கிறார். வடசொற்களை விலக்கும் கருத்தே இவரிடம் கிடையாது. தமிழின் வளர்ச்சிக்கும், தமிழ் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் வேண்டுவன செய்தவர்களில் சுந்தரம் பிள்ளை தலைசிறந்தவர்’ என்று புகழாரம் சூட்டுகிறார்.

கவிஞர்,கட்டுரையாசிரியர்:
பெ.சு. ஒரு நற்றாயின் புலம்பல், பொதுப்பள்ளி எழுச்சி, அன்பின் அகநிலை முதலிய பல்வேறு கவிதைகளையும் இயற்றியுள்ளார். ஒரு நற்றாயின் புலம்பல் மணமாக வேண்டிய தினத்தன்று இறந்து போன மகள் குறித்து அரற்றும் அன்னையின் அழுகுரல். பொதுப்பள்ளி எழுச்சி தத்துவ நோக்கோடு அறியாமைத் துயிலில் இருந்து எழுப்பிய இறைவனை நோக்கி பாடப்பட்டது. அன்பின் அகநிலை விவிலியத்தின் புனித பவுல் கருத்துகள் அடிப்படையில் எழுதப்பட்டவை. சீவராசிகளின் இலக்கணமும், பிரிவும், மரங்களின் வளர்ச்சி, புஷ்பங்களும் அவற்றின் தொழிலும் முதலிய மூன்று அறிவியல் கட்டுரைகளையும் பெ.சு எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் ‘Hobbes, the father of English ethics’. ‘Bentham, The Juristic Moralist’, ‘A scene from A Tamil play’, H.T.Wills முதலிய கட்டுரைகள் எழுதினார்.

தன்னுடைய மனோன்மணியம் நாடகத்தின் துவக்கத்தில்’தமிழ் மொழியின் இலக்கியங்களை அழியாமல் பாதுகாத்த திருச் சி.வை.தாமதோரன் பிள்ளை, உ.வே.சாமிநாத அய்யர் ஆகிய இருவரையும் வணங்குகிறேன். கல்வி, கேள்வி, அறிவு முதலியவற்றால் சிறியவனாகிய நான் மனோன்மணியம் என்னும் நாடகத்தைப் படித்திருக்கிறேன்.’ என்று தன்னடக்கத்தோடு குறிப்பிடுகிறார். உ.வே.சா மனோன்மணியத்தைப் பற்றி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு அப்படைப்பில் குறைகள் உண்டு என்றதை பெ.சு அறிந்தார். கடிதம் எழுதி குறைகளை அறிந்து கொண்டு அவற்றைத் தீர்க்கவும் செய்தார். மேலும், திருவிதாங்கூர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்ற வருமாறு உ.வே.சாவிற்கு அன்போடு அழைப்பு விடுத்தார்.

தமிழக அரசு அவரின் தமிழ்த்தெய்வ வாழ்த்தை தமிழ்த்தாய் வாழ்த்தாக ஆக்கியது. அவரின் மூலப்பாடலில், ‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமை’ என்கிற வரி வடமொழி வெறி நிலவிவந்த காலத்தில் எதிர்க்குரலாக ஒலித்துள்ளது. மொழிவாரி மாநிலங்கள் உருவான போது, நாஞ்சில்நாடு தமிழர்க்கு உரியது என்று தன்னுடைய மனோன்மணியம் நூலில் பெ.சுந்தரனார் குறிப்பிட்டு இருந்தது கவிமணி, ஜீவா, ம.பொ.சிவஞானம் ஆகியோரால் மேற்கோள் காட்டப்பட்டு இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.

நாற்பத்தி இரண்டு வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து போன பெ.சுந்தரனாருக்கு அஞ்சலியாக அவர் உ.வே.சாவுக்கு எழுதிய கடிதத்தின் இறுதி வரிகளே அமையக்கூடும்: ‘நம்மனையார் தேகநிலையைக் கருதும்போது இருதலைக்கொள்ளியினுள் எறும்பு என்றே உண்மையாய் எண்ண வேண்டியதாக இருக்கிறது. உழைத்தால் சரீர உபாதை துணிபாக நிற்கிறது. உழைக்காவிட்டால் சரீரமிருந்து என்ன பயனென்ற சோகமும் அப்படியே ஏது செய்ய? கடவுள் இச்சைபோல நடக்கட்டும்’

மிக முக்கியமான ஆளுமையின் பன்முகத்தன்மையை அற்புதமாக அறிமுகப்படுத்துகிறது அறிஞர் அ.கா.பெருமாளின் இக்குறுநூல்.

மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம் -அ.கா.பெருமாள்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
பக்கங்கள்: 82
விலை: 70

1 thoughts on “மனோன்மணியம் பெ.சுந்தரனார் அவர்களின் அரிய பணிகள்

  1. Sumala திசெம்பர் 2, 2018 / 11:06 பிப

    சிறப்பு!

பின்னூட்டமொன்றை இடுக