தலித் அடையாளமே என்னைச் செதுக்கியிருக்கிறது. – சட்ட அறிஞர் அனுராக் பாஸ்கர் நேர்முகம்



பல கோடி விளிம்புநிலை மக்களின் கனவுகளின் அடையாளமாக என்னுடைய ஹார்வர்ட் டிகிரி திகழ்கிறது.”- அனுராக் பாஸ்கர்

அனுராக் பாஸ்கர் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் இருந்து தன்னுடைய LL.M. பட்டத்தை 2019-ல் பெற்றிருக்கிறார். அவர் ஏன் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தார், நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராக  வேலை பார்த்த அனுபவம், ஹார்வர்ட் நோக்கிய பயணம், ஹார்வர்ட் மாணவர்களைத் தேர்வு செய்யும் முறை, அவரின் எதிர்காலத்திட்டங்கள் குறித்து விரிவாக உரையாடினோம்.

அனுராக் பாஸ்கர் தன்னுடைய LL.M. பட்டத்தை ஹார்வர்ட் சட்டக் கல்லூரியிடம் இருந்து பெற்றிருக்கிறார். இவர் லக்னோவில் உள்ள டாக்டர். ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ( RMLNLU) B.A. LL.B பட்டங்களை 2012-17 காலத்தில் பெற்றார். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராக ஜூலை 2017-18 காலத்தில் பணியாற்றினார். அனுராக் கூர்மையான அறிவுத்திறமிக்கப் படைப்புகளுக்குச் சொந்தக்காரர். பல்வேறு ஆய்விதழ்களில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. செய்தித்தாள்களில் தொடர்ந்து தன்னுடைய கருத்தோவியங்களைத் தீட்டிய வண்ணம் உள்ளார். அவருடைய கட்டுரைகள் The Wire, LiveLaw, The Print, EPW முதலிய பல்வேறு இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இனி அவரின் பயணம் குறித்து உரையாடுவோம்.

கேள்வி: ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் இருந்து LL.M. பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துகள். எப்படி உணர்கிறீர்கள்?

அனுராக் : திக்குமுக்காடிப் போயிருப்பதாக உணர்கிறேன். என்னுடைய பட்டமளிப்பு விழா மே 30, 2019 ல் நடைபெற்றது. நான் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றுவிட்டேன் என்பதை நம்பவே ஒரு வாரம் ஆனது. இரண்டாண்டுகளுக்கு முன்புவரை, நான் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயில்வேன் என்று கனவுகூடக் கண்டதில்லை. அமெரிக்காவை எட்டிப் பார்க்க வேண்டும் என்று கூட எனக்குப் பட்டதில்லை. எண்பதுகளில் எங்கள் வீட்டிற்குச் சவால்மிக்கக் காலம். உத்தரப் பிரதேசத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தின் குக்கிராமத்தில் இருந்து வேலை தேடி லக்னோவிற்கு என் அப்பா அடிக்கடி நாற்பது கிலோமீட்டர்கள் கால் வலிக்க, வலிக்கச் சைக்கிள் மிதிப்பார். என் அப்பாவை பொறுத்தவரை லக்னோ சென்று வருவது என்பது வெளிநாட்டிற்குப் போய்வருவதாகும். நான் லக்னோவில் சட்டப்படிப்புப் படித்துக்கொண்டிருந்த போது, வேலையின் பொருட்டு டெல்லிக்கு இடம்பெயர வேண்டும் என்பது எனக்கு வெளிநாட்டிற்குப் போகிற ஒன்றாகவே தோன்றியது. அந்தச் சைக்கிள் பயணத்தில் இருந்து ஹார்வர்ட் வரையிலான இப்பயணத்தை வந்தடைய என் குடும்பம் நெடுந்தூரம் நடந்திருக்கிறது. தற்போது நான் கலவையான உணர்வுகளில் ஆட்பட்டுள்ளேன்.

கேள்வி: நீங்கள் ஏன் சட்டம் பயில முடிவு செய்தீர்கள்? உங்கள் குடும்பத்தில் யாரேனும் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்களா?

அனுராக்: இல்லை ! நான் முதல் தலைமுறை வழக்கறிஞர்.

நான் சட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்கிற முடிவெடுக்க ஒரு வரலாற்று ஆளுமையே முதன்மையான காரணம். அவர் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர். பள்ளிக்காலங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் படைத்தளித்த தலைமை சிற்பி டாக்டர் அம்பேத்கர் என்கிற மனப்பிம்பம் என்னைப் பெருமளவில் ஊக்கப்படுத்தியது. அவரின் வாழ்வானது சட்டம் பயின்று அதன்மூலம் சமூகத்தில் மாற்றத்திற்கான கருவியாக மாறவேண்டும் என்கிற கனவினை விதைத்தது. ஆனால், சட்டப்படிப்பை தேர்ந்தெடுப்பது அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. என்னுடைய பெற்றோர் நான் பொறியியல் பயில வேண்டும் என்று விரும்பினார்கள். அடிக்கடி, நடுத்தர வர்க்க/அடித்தட்டு நடுத்தர வர்க்க மற்றும் பொருளாதாரத்திலோ, சமூகத்திலோ பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த தனி நபர்களின் முதல் போராட்டம் தங்களுடைய குடும்பங்களிலேயே துவங்குகிறது. நாம் விரும்பிய பாடத்தைப் படிக்கப் பெற்றோரின் சம்மதத்தைப் பெறுவதற்குப் போராட வேண்டியிருக்கிறது. என்னுடைய பெற்றோர் நான் விரும்பிய வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்க ஒப்புக்கொண்டதற்காக அவர்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன்.

கேள்வி: ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் (RMLNLU) உங்களுடைய எத்தகைய அனுபவம் கிட்டியது?

அனுராக்: செறிவான அனுபவம்! சமூக நீதியின் முன்னோடியான டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் சிந்தனைகள், வாழ்க்கை குறித்து அறிந்து கொள்ள இப்பல்கலைக்கழகம் உதவியது. மேலும், எனக்குள் இருந்த ஆற்றலை வெளிக்கொணரவும் RMLNLU பெருமளவில் கைகொடுத்தது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த உட்கட்டமைப்புக் கொண்ட பல்கலைக்கழகங்களில் என் கல்விக்கூடமும் ஒன்று. அங்கே உள்ள நூலகத்தில் குவிந்துள்ள நூல்கள் அறிவின் ஊற்று. எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் மகத்தானவர்கள். எனினும், RMLNLU கல்வி நிறுவனமாக இன்னமும் தன்னுடைய முழு ஆற்றலை வெளிப்படுத்தவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அங்குக் கிட்டிய சில நல்ல நண்பர்கள் எனக்கு உற்ற துணையாக இத்தனை ஆண்டுகாலம் ஆதரவளித்து வருகிறார்கள்.

கேள்வி: RMLNLU-ல் வகுப்பறை பாடங்களைத் தாண்டி வேறென்ன மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபட்டீர்கள் என்று சொல்ல முடியுமா?

அனுராக்: பொதுவாகச் சட்டக்கல்லூரி மாணவர்கள் வழக்காடுவது, விவாதம் புரிவது ஆகியவற்றில் மின்னுவார்கள். நான் இந்தி பேசும் பின்னணியில் இருந்து வந்தமையால், எனக்குச் சரளமான ஆங்கிலம் கைவரவில்லை. இதனால், பேச்சுப்போட்டிகளில் பங்கெடுக்கவோ, பொதுக்கூட்டங்களில் பேச வேண்டிய அவசியமிருக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவோ எனக்குத் தயக்கமாக இருக்கும். இதைக்கண்டு திகைத்து போய் நிற்காமல், என்னுடைய பிற திறன்களைப் பட்டை தீட்டிக்கொண்டேன்.

RMLNLU-வில் படித்த காலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்தினேன். இது எனக்குள் தலைமைப்பண்பை வளர்த்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு நபர்களோடு தொடர்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. களத்தில் அரும்பெரும்  சேவைகளைப் புரிந்து கொண்டிருக்கும் செயல்பாட்டாளர்கள், அரசுப்பதவி வகிப்பவர்களைத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிட்டியது. பின்தங்கிய குழந்தைகளின் கல்வி உரிமைகளுக்காகப் பாடுபடும் டாக்டர். சந்தீப் பாண்டே (ராமன் மகசேசே விருதினை 2002-ல் பெற்றவர்), உத்திர பிரதேச குழந்தை உரிமைப்பாதுகாப்பு ஆணையத்தின் மேனாள் தலைவர் திருமதி. ஜூஹி சிங் ஆகியோரோடு இணைந்து பணியாற்றியதை நெகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன். மனித உரிமைகள் வழக்கறிஞரான ஆதித்யா ஸ்ரீவத்ஸவா வழிகாட்டுதலில் களத்தில் பயிற்சி பெறும் வாய்ப்புக் கிட்டியது. அவருடைய உதவியோடு புந்தேல்கண்ட் பகுதியில் விவசாயத் தற்கொலைகளைக் கவனப்படுத்தவும், அதற்குப் பின்னுள்ள காரணங்களை ஆவணப்படுத்தவும் முடிந்ததைப் பெரும் பேறாக எண்ணுகிறேன். என்னுடைய பல்கலையின் இணைப் பேராசிரியரான முனைவர். KA பாண்டேவுடன் இணைந்து இந்தியாவின் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களைச் சமூகத் தணிக்கை புரியும் செயல்பாட்டை இந்தியாவிலேயே முதன்முறையாக செய்து முடித்தோம். மேற்சொன்ன அமைப்பு ரீதியான திறன்களைத் தாண்டி, ஆய்வுத்திறன், எழுத்தாற்றல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினேன். என்னுடைய பல்கலைக்கழகப் படிப்பின் இறுதியாண்டில் பெருமைமிக்க Economic & Political Weekly இதழில் நான் எழுதிய நான்கு கட்டுரைகள் வெளிவந்தன.

கேள்வி: நீங்கள் RMLNLU-வில் சட்டம் பயின்ற போது ஏழு வெவ்வேறு நீதிபதிகளுடன் பணியாற்றினீர்கள். எது இத்தனை நீதிபதிகளிடம் பயிற்சி பெற உங்களைத் தூண்டியது?

அனுராக்: என்னுடைய மூன்றாவது செமஸ்டரின் போது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி (தற்போது ஓய்வு பெற்றுவிட்ட) இம்தியாஸ் முர்டாசாவிடம் பயிற்சி பெற்றேன். அவருடன் நிகழ்த்திய உரையாடல்கள் நீதிபதிகள் பணியாற்றும் முறையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து எப்போது, எவ்வளவு முடியுமோ அப்போதெல்லாம் பல்வேறு நீதிபதிகளிடம் பயிற்சி பெறவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். அவர்களுடைய ஆக்கங்களுக்கு என்னாலான பங்களிப்பினை புரிந்தேன்.’Philadelphia’ திரைப்படத்தில் வரும் வசனம் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன், “ அடிக்கடி அது அமைவதில்லை. எங்காவது, எப்போதாவது அரிதாகத்தான் நீதி வழங்குவதில் நீ பங்கேற்க இயலும். அது நிகழும் போது ஏற்படும் பரவசம் அதியற்புதமானது.” அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் நான் வெவ்வேறு துறை வழக்குகளைக் கையாளும் நீதிபதிகளின் கீழ் பணியாற்ற விண்ணப்பித்தேன். இதன்மூலம் பலதரப்பட்ட வழக்குகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, நான் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி DY சந்திரசூட் வழிகாட்டுதலில் பணியாற்றியதும், லக்னோ உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் தேவேந்திர உபத்யாயா, ராஜன் ராய், AR மஸூதி ஆகியோரிடம் பணியாற்றியதும் சுவாரசியம் கூட்டுபவையாக இருந்தன.

கேள்வி: இதே காரணத்தினால் தான் உச்சநீதிமன்றத்தில் ஓராண்டு சட்ட உதவியாளராக பணிபுரிந்தீர்களா?

அனுராக்: நவம்பர் 2013-ல் எங்கள் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு அலகாபாத் தலைமை நீதிபதியாக DY சந்திரசூட் பங்கேற்றார். அவர் பேசியதை கேட்டது முதல் அவர் ஊக்கமூட்டும் ஆளுமையாக எனக்கு ஆனார். அவரிடம் உச்சநீதிமன்றத்தில் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே மேற்சொன்ன பணிக்கு விண்ணப்பித்தேன். அவரிடம் நேரடியாகக் கற்றுத்தேறும் வாய்ப்பில்லாமல் போயிருந்தால் வேறேதேனும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பேன்.

கேள்வி : நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் எப்படிப்பட்டதாக இருந்தது ?

அனுராக்: அது அசாதாரணமான ஒன்றாக இருந்தது என்று எண்ணுகிறேன். சட்ட உதவியாளர்களில் நான் பெரும் நல்வாய்ப்பு பெற்றவன் என்றே உணர்கிறேன். அவர் செவிமடுத்த பல்வேறு புகழ்பெற்ற அரசியலமைப்பு சட்ட வழக்குகளில் ஜூலை 2017-18 காலத்தில் நேரடியாகப் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது. நீதிபதி சந்திரசூடின் அனுபவங்களை அவர் அடிக்கடி தன்னுடைய சட்ட உதவியாளர்களிடம்  பகிர்ந்து கொள்வார். அதிலிருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன். நான் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதனைப் பதிவு செய்வதற்காக நீதிபதி சந்திரசூட் கோபித்துக் கொள்ளமாட்டார் என்று எண்ணுகிறேன்.

நீதிபதி சந்திரசூட் ஒருமுறை தன்னுடைய தந்தையும், காலஞ்சென்ற நீதிபதியுமான YV சந்திரசூட் குறித்த தன்னுடைய நினைவலைகளில் மூழ்கினார். அவருடைய தந்தை அப்போது இளம் வழக்கறிஞராக இருந்தார். அவர் பம்பாயில் உள்ள ஒரு கஃபேவிற்கு அடிக்கடி செல்வார். (அனேகமாகக் காலா கோடா கஃபே/வேஸைட் இன்). அங்கே நண்பகல் வேளையில் ஒரு மனிதர் எப்போதும் அமர்ந்திருப்பதைக் காண்பார். அம்மனிதர் தனக்குள்  தோன்றும் கருத்துகளைச் சளைக்காமல் எழுதிக்கொண்டும், குறிப்பெடுத்துக் கொண்டும் இருப்பார். அந்த மாமனிதர் டாக்டர். அம்பேத்கர். நீதிபதி YV சந்திரசூட் தான் டாக்டர் அம்பேத்கர் வாதாடிய வழக்கில் அவருக்கு எதிர்தரப்பில் நின்று வாதாடிய நினைவுகளை ஆசையோடு அசைபோடுவாராம்.

கேள்வி: கடந்த செப்டம்பர் 2018-ல் விஞ்ஞான் பவனில் உரையாற்றும் போது நீதிபதி சந்திரசூட் உங்களைக்குறித்துக் குறிப்பிட்டார். அவர் உங்களுடைய சமூகப் பின்னணி குறித்தும் பேசினார். உங்களுக்குத் தயக்கமில்லை என்றால், அதைக்குறித்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

அனுராக்: “ஆம். நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன். என்னுடைய பல்வேறு அடையாளங்களில் அதுவும் ஒன்று. எனினும், என்னுடைய வாழ்க்கையின் பெரும்பாலான தேர்வுகளைத் தலித் அடையாளமே செதுக்கியிருக்கிறது. ஹார்வர்டில் பட்டம் பெற்றது என்பது என்னைப்பற்றிய ஒன்று என்பதையும் தாண்டியது. இந்தப் பல்கலைக்கழகத்தில் எனக்குத் தனிப்பட்ட அளவிலும், வழக்கறிஞராகவும் கிட்டிய அனுபவங்கள் முக்கியமானவை என்பதோடு என்னுடைய ஹார்வர்ட் நோக்கிய இந்தப் பயணமானது இன்னமும் சமூகத்தின் கடைக்கோடியில் வாழவேண்டிய நிலைக்கு இன்றுவரை தள்ளப்பட்டிருக்கிற பல கோடி மக்களின் கனவுகளின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்த ஹார்வர்டில் பெற்ற LL.M. பட்டமானது, மருத்துவ மேற்படிப்பை முடிக்கும் முன்பே தற்கொலைக்குத் தள்ளப்பட்ட டாக்டர். பாயல் தட்விக்குச் சமர்ப்பணம். இந்தப் பட்டமானது ரோஹித் வெமுலாவிற்கான என்னுடைய அஞ்சலி. அவருடைய இறுதிக்கடிதம் அறவுணர்வுமிக்கதாகத் திகழவேண்டிய தேசத்தினுடைய மனசாட்சியை நோக்கி சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் முன்முடிவுகளை அறவே அழிக்க வேண்டியதை தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கும். குதிரையில் ஏறி சவாரி செய்ததற்காகவும், மீசை வைத்துக் கொண்டதற்காகவும் கொல்லப்பட்ட, இது போன்ற எண்ணற்ற அநீதிகளை அன்றாடம் சந்திக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த எம்மக்களுக்கான பட்டம் இது. பஞ்சம் தாக்கிய பகுதிகளில் நீர்நிலைகளைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்ட தலித்துகளுக்காக இப்பட்டம். இது ஒடிசாவில் ஃபனி புயலில் பாதிக்கப்பட்டும், புயற்காலப் பாதுகாப்பு உறைவிடங்களுக்குள் அனுமதி மறுக்கப்பட்டும், நிவாரண உதவிகள் தரப்படாமலும் அல்லல்படுத்தப்படும் தலித்துகளுக்கான பட்டம். நான் ஹார்வர்டில் பட்டம் பெற்றது எண்ணற்றோரை ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன். என்டிடிவியில் தோன்றிய பதினான்கு வயது சிறுமி சுனைனா உள்ளிட்ட பெருங்கனவுகள் கொண்ட அனைவருக்கும் எட்டாததாகத் தோன்றும் எல்லைகளையும் தொட்டுவிட இது உத்வேகம் தரும் என்று நம்புகிறேன்.”

கேள்வி : ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் LL.M. பட்டம் பெறுவதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்தும் விரிவாகச் சொல்லுங்கள்.

அனுராக் : ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் சேர்வதற்கான தேவைகள், இடம் பிடிப்பதற்கான தகுதிகள் இந்தத் தளத்தில் காணக்கிடைக்கும்: https://hls.harvard.edu/dept/graduate-program/llm-admissions/https://hls.harvard.edu/dept/graduate-program/llm-admissions
பல்வேறு கட்டத் தேர்வுகளுக்கான காலக்கெடு, பாடப்பொருட்களைக் கீழ்கண்ட சுட்டியில் காணலாம்: https://hls.harvard.edu/dept/graduate-program/llm-application-deadlines-and-materials/

. மேலும் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் ஒருவர் : தற்குறிப்பு (CV/Résumé); தன்னைக்குறித்த வினாக்களுக்கு விரிவான அறிக்கை ( Personal statement question); மதிப்பெண் பட்டியல்கள், குறைந்தபட்சம் இரண்டு பேரின் பரிந்துரை கடிதங்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும். தன்னைக்குறித்த வினாக்களுக்கு விரிவான அறிக்கை A, B என்று இருபிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருக்கும். முதல் பகுதியில், விண்ணப்பிப்பவர் தனக்குப் பிடித்த துறையில் காணப்படும் முக்கியமான பிரச்சனை ஒன்றையோ, ஒரு நாடு/பகுதி/உலகம் எதிர்கொள்ளும் சட்டச்சிக்கல் ஒன்று குறித்து விவரிக்க வேண்டும். பின்னர் இது சார்ந்து தத்துவார்த்த வரைவு ஒன்றையோ, அச்சிக்கலை எதிர்கொள்ளும் அணுகுமுறையையோ பரிந்துரைக்க வேண்டும். இந்தச் சட்டக்கட்டுரையானது முழுக்க முழுக்க விவரணையாக அமையாமல் பகுத்தாய்வது, ஒழுங்குமுறைகளை (normative) அணுகுவதில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையானது நீங்கள் எடுத்துக்கொண்ட சட்டச்சிக்கல் குறித்து அசலான, ஆழமான புரிதலை வெளிக்கொணர வேண்டும். தேவையான மேற்கோள்கள், தேவையென்றால் விளக்கத்தோடு கூடிய அடிக்குறிப்புகள் இடம்பெறலாம். பகுதி B ஆனது ‘தன்னைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கை’ பிற LL.M பட்டங்களில் அமைவதை ஒத்திருக்கும். இதில் விண்ணப்பிப்பவர் ஏன் ஹார்வர்டில்  LL.M பட்டம் பெற விரும்புகிறார் என்பதையும், இப்பட்டம் பெறுவது அவர்களின் கடந்தகாலச் செயல்பாடுகள், வருங்காலத் திட்டங்களை எப்படி இணைக்கிறது என்றும் பேச வேண்டும். மேலும், மனதைக்கவரும் தனிப்பட்ட கதையொன்றையும் இப்பகுதியில் எழுத வேண்டும். ஹார்வர்ட் சட்டக்கல்லூரிக்குள் வெற்றிகரமாக நுழைந்த பிறரும், நானும் சட்டத்தின் குறிப்பிட்ட கூறுகளோடும், எங்களுடைய பணி அனுபவங்களையும் இணைத்து இப்பகுதியை எழுதியிருந்தோம். விண்ணப்பிப்பவர் அடிப்படையில் கீழ்கண்டவற்றை விளக்கி எழுத வேண்டும்: (1) ஏன் LL.M பட்டம் பயில விரும்புகிறார், (2) என்னென்ன பாடங்களைப் பயில விருப்பம், ஏன்?, (3) பிற போட்டியாளர்களை ஒப்பிடும் பொது நீங்கள் எப்படி வேறுபட்டவர்/தனித்துவமானவர், (4) நீங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனம்/நிறுவனங்கள் ஏன் உங்களுக்கு இடமளிக்க வேண்டும் , மற்றும் (5) நீங்கள் பெற விரும்பும் கல்வியானது உங்களைத் தாண்டி சமூகத்திற்குப் பயனளிக்கும் ஒன்றாக எப்படித் திகழும்?. விண்ணப்பிப்பவர் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பேராசிரியரிடம் பயில விரும்பினால் அதனை முறையாகக் கவனப்படுத்த வேண்டும், அல்லது மேற்சொன்ன அறிக்கையோடு அந்த விருப்பத்தைத் தனியே இணைக்க வேண்டும். மேற்சொன்ன இரு பகுதிகளும் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஹார்வர்ட் LLM விண்ணப்ப படிவத்தில் இன்னும் இரண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். பலதரப்பட்ட சட்டப்பிரிவுகளில் குறிப்பிட்ட துறைகளைத் தேர்வு செய்ய வேண்டும், அவற்றை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று கீழ்கண்டவாறு விளக்க வேண்டும்: “இந்தத் துறைகளில் ஏன் உங்களுக்கு ஆர்வம் என்று தயவுசெய்து தெரிவியுங்கள், மேலும், இவை எப்படித் தொழில்சார்ந்த இலக்குகளோடு தொடர்புடையவை என்றும் குறிக்கவும்.” (குறிப்பு: உங்களுடைய பதிலை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கையை மேற்கோள் காட்ட வேண்டாம்.) அடுத்தக் கேள்வி: “உங்களுடைய திட்டங்கள் குறித்து விரிவாகக் கூறவும். உங்களுடைய வருங்காலப் பணிகளை எந்த நாடு/நாடுகளில் மேற்கொள்ள விரும்புகிறீர்கள்? ( (குறிப்பு: உங்களுடைய பதிலை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கையை மேற்கோள் காட்ட வேண்டாம்.)

கேள்வி : ஹார்வர்டில் பயில்வதற்கான வழிமுறைகள் குறித்தும், உங்களுடைய பார்வையையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஹார்வர்ட் சட்டக் கல்லூரி இந்திய மாணவர்களுக்கு ஏதேனும் உதவித்தொகைகளை வழங்கி உதவுகிறதா?

அனுராக் : ஹார்வர்ட் சட்டக் கல்லூரி ஹார்வர்டில் படிக்கப் போதுமான வசதி இல்லாத மாணவர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப நிதியுதவி வழங்குகிறது. எனக்கு $52000 டாலர் நிதியுதவி கிட்டியது (இந்திய மதிப்பில் ஏறத்தாழ 36 லட்சம்). இதைக்கொண்டு கல்விக்கட்டணத்தில் 80% செலுத்த முடிந்தது மீதமிருந்த கட்டணத்தை வங்கிக்கடனை கொண்டு செலுத்தினேன் ஹார்வர்ட் வழங்கும் நிதியுதவி போக இன்லாக்ஸ் உதவித்தொகை, ஃபுல்ப்ரைட் உதவித்தொகை ஆகியவை உள்ளன. மேலும், வட்டியில்லா கடனாக உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளும் உண்டு (டாடா அறக்கட்டளை போன்றவை).

கேள்வி: ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் பயின்ற அனுபவத்தைப் பற்றிக் கூறுங்கள்

அனுராக்: ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது எனக்குள் கனன்று கொண்டிருந்த கனவு. நம்முடைய கனவுலகில் நிஜமாகவே சஞ்சரிப்பது என்பது உலகத்தின் அற்புதமான உணர்ச்சிகளில் ஒன்று.

ஹார்வர்ட் பல்வேறு அரிய  வாய்ப்புகளை வாரி வழங்கிக்கொண்டே இருந்தது. அதில் கொட்டிக்கிடக்கும் அனைத்து வாய்ப்புகளையும் LL.M. பட்டப்படிப்பிற்கான ஒன்பதரை மாதத்தில் பயன்படுத்துவதும், அறிவுக்கடலில் முத்துக் குளிப்பதும் மலைப்பூட்டுகிற ஒன்று. என்னுடைய சகா ஒருவர் குறிப்பிட்டதைபோன்று “ஹார்வர்ட்டின் ஒட்டுமொத்த எல்லையைத் தொட்டுணரவும், அதன் அனுபவங்களை முழுமையாக அள்ளிக்கொள்ளவும் ஆக்டோபஸாகத் தான் இருக்க வேண்டும்”. மகத்தான சில பேராசிரியர்களிடம் படிக்க நேர்ந்தது என்னுடைய அதிர்ஷ்டம். வகுப்புகளைத் தாண்டி என்னுடன் உடன் பயின்ற மாணவர்கள் பலதரப்பட்ட கலாசாரங்கள், சமூகப் பின்புலங்களில் இருந்து வந்திருந்தார்கள். அவர்களிடம் ஏராளமாகக் கற்றுக்கொண்டேன். துல்லியமாகச் சொல்வதென்றால், என்னுடன் 65 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்றார்கள். இவர்கள் சட்டக்கல்வி, சட்டத்துறை ஆய்வு, அரசாங்க பணி, நீதித்துறை, சர்வதேச அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், தனியார் துறையினர் என்று பல்வேறு பின்னணிகளில் இருந்து வந்தவர்கள்.

எடுத்துக்காட்டாக நான் அஷுடோஷ் சலீல் (மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முனைப்பான  அரசு அதிகாரி), ஷீலா செய்ல் (ஐம்பது வயதாகும் மகாராஷ்டிரா மாநில காவல்துறை அதிகாரி) உள்ளிட்ட ஊக்கமூட்டும் ஆளுமைகளுடன் இணைந்து வகுப்புகளில் பங்கெடுப்பேன், என்னுடைய கருத்துகளை அவர்களோடு பரிமாறிக்கொள்வேன் என்றோ எப்போதும் எண்ணியதில்லை. மேலும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பிற கல்லூரிகளிலும் (கென்னடி கல்லூரி போன்றவை), பிளெட்சர் கல்லூரியிலும் இணைந்து பயிலும் வாய்ப்பும் உண்டு. இதனால் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வெவ்வேறு கல்லூரிகளில் வெவ்வேறு பாடங்களைப் பயிலும் மாணவர்களோடு தொடர்புகொள்ள இயலும். அமெரிக்கா வந்ததால் நான் வெகுவாக மதிக்கும், நெருக்கமாகப் பின்பற்றும் பேராசிரியர் மைக்கேல் சாண்டெல் (நம் காலத்தின் கற்றறிந்த தத்துவ அறிஞர்), டாக்டர் ரகுராம் ராஜன் (ரிசர்வ் வங்கியின் மேனாள் ஆளுநர்) ஆகியோரை சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிட்டியது.

கேள்வி : நீங்கள் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் என்னென்ன பாடங்களைக் கற்றுத்தேர்ந்தீர்கள்?

அனுராக் : 2018 செப்டம்பர்-டிசம்பர் காலத்தில் பேராசிரியர் டேவிட் வில்கின்ஸ் நடத்திய ‘சட்டத் தொழில்’ பாடம், ஜென்னி ஸுக் ஜெர்சனின், ‘அரசியலமைப்புச் சட்டம்: அதிகாரப் பகுப்பு, கூட்டாட்சி மற்றும் பதினான்காவது சட்டதிருத்தம்’, பேராசிரியர் லூஸி வைட்டின், ‘வறுமை, மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சி’, பேராசிரியர் ஸ்டீபனி ராபின்சனின் , ‘நிறப்பாகுபாட்டில் இருந்து நிறக்குருட்டுத் தன்மை, அதிலிருந்து நிறத்தை மறுவரையறை செய்வது : மாறிக்கொண்டே இருக்கும் இனம் குறித்த கருதுகோள்களோடு அமெரிக்காவின் போராட்டங்கள்’ முதலிய பாடங்களைப் பயின்றேன். :. 2019-ன் பிப்ரவரி – ஏப்ரல் காலத்தில் மைக்கேல் க்ளார்மேனின் ‘அரசியலமைப்பு சட்ட வரலாறு II: அமெரிக்காவின் புனரமைப்புக் காலத்தில் இருந்து சிவில் உரிமைகள் இயக்கம் வரை’ , பேரசிரியர் லாரன்ஸ் லெஸ்ஸிக்கின், ‘அரசியலமைப்பு சட்டங்களின் ஒப்பீடு’, பேராசிரியர் டயானா ரோசென்ஃபீல்டின் ’பாலின வன்முறை, சட்டம் மற்றும் சமூக நீதி’ ஆகிய பாடங்களைக் கற்றுத் தேர்ந்தேன். மேலும், தத்துவம் சார்ந்து பேராசிரியர்கள் ராபர்டோ உங்கெர், மைக்கேல் பொயட் ஆகியோர் நடத்திய, ‘மேற்கத்திய, கிழக்கத்திய தத்துவங்களில் வாழ்வியல் ஒழுக்கங்கள்’ எனும் பாடத்தையும் கற்றறிந்தேன்.

கேள்வி : ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் உங்களால் மறக்க முடியாத நினைவு என்று ஏதேனும் உண்டா?

அனுராக் : ஒட்டுமொத்த ஹார்வர்ட் அனுபவமே மறக்க முடியாத ஒன்று தான். எனினும், சில தருணங்கள் இன்னமும் உரமேற்றுவதாக, ஊக்கப்படுத்துவதாக அமைந்தன. குறிப்பாக மூன்று தருணங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலாவது அனுபவம் இது:

2018-ம் ஆண்டில் அரசியலமைப்பு சட்ட வகுப்பின் இறுதி வகுப்பு பேராசிரியர் ஜென்னி ஸுக்ஜெர்சன் தன்னுடைய வலிமையான உரையோடு வகுப்பை முடித்துவைத்தார். அவர் நம் சமகாலத்தின் அரசியலமைப்பு சட்ட நெருக்கடிகள் குறித்தும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுபவர்களாக நாங்கள் கைக்கொள்ள வேண்டிய பாத்திரத்தை குறித்தும் விரிவாக உரையாற்றினார் அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து அவர் பேசிக்கொண்டே இருக்கையில் உணர்ச்சிவசப்பட்டவராகத் தென்பட்டார். அவர் தன்னுடைய வகுப்பை, “நமக்கும், கொடுங்கோன்மைக்கும் இடையேயான தடுப்புச்சுவராக அரசியலமைப்பு சட்டமே உள்ளது” என்று சொல்லியவாறு நிறைவுசெய்த போது கிட்டத்தட்ட அழுதுவிட்டார். இப்படி அரசியலமைப்புச் சட்டத்தினைப் பாதுகாக்க பற்றுறுதியும், பிணைப்பும் கொண்ட அந்த ஆசிரியையின் அர்ப்பணிப்பும், இப்பெரும்பணிக்கு நம்மை ஒப்புக்கொடுத்துக் கொண்டுள்ளோம் என்கிற உணர்வும் மெய்சிலிர்க்க வைத்தது.

இரண்டாவது, பட்டமேற்பு விழாவிற்கு ஆயத்தமாகும் மாணவர்களுக்கு நிகழ்த்தப்படும் பேராசிரியர் மைக்கேல் க்ளார்மேனின் ‘இறுதி சொற்பொழிவு’. இது ஏப்ரல் 2019-ல் நிகழ்ந்தது. அந்த உரையில் பேராசிரியர் க்ளார்மேன் தற்போதைய தலைமுறை அரசியல், சமூக நிலப்பரப்பில் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் சூழலில், கடந்த காலத்தில் சிவில் உரிமைகளுக்காக அயராது போராடிய வழக்கறிஞர்களின் வாழ்க்கை நம்பிக்கையையும், மீண்டெழும் வலிமையையும் நமக்கு வழங்குவதைக் கவனப்படுத்தினார். சிவில் உரிமைகள் சார்ந்த பேராசிரியரின் ஆய்வுகள் பிரமிக்க வைப்பவை.

மனதுக்கு நெருக்கமான மூன்றாவது நினைவு என்பது அமெரிக்காவின் மேனாள் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா மீது எனக்கு இருக்கும் ஈர்ப்பு. 1990களில் ஹார்வர்ட் சட்ட கல்லூரியில் இருந்து ஒபாமா பட்டம் பெற்றார் என்பதால், அவரோடு நெருங்கிப் பழகிய பேராசிரியர்களிடம் இருந்து அவர் குறித்த கதைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவா எனக்குள் கனன்று கொண்டிருந்தது. பேராசிரியர் வில்கின்ஸ் ஒபாமா குறித்துச் சொல்லும் போது, தன்னுடைய சட்டப்படிப்பிற்குப் பின்பு சமூகத்திற்காகப் பாடுபடவேண்டும் என்கிற சிந்தனைத் தெளிவு ஒபாமாவிற்கு அப்போதே இருந்தது என்றார். ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் டீனாக இருந்த பேராசிரியை மார்த்தா மினோவ் பராக் ஒபாமா வகுப்பில் அடிக்கடி பேசமாட்டார், ஆனால், அவர் பேச எழுந்தால் அதில் தொனிக்கும் உறுதி அனைவரையும் அவர் குரலுக்குச் செவிமடுக்க வைக்கும் என்று நினைவுகூர்ந்தார். இவை போக, எனக்குப் பிடித்த பேராசிரியர்களோடு மத்திய உணவிற்கு வெளியே போவது என் ஞாபக அடுக்கினால் நீங்காத நினைவாக ஆழப்பதிந்திருக்கிறது.

கேள்வி: உங்களுடைய ராம் மனோகர் லோகியா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஹார்வர்ட் சட்டக் கல்லூரிக்குள் நுழைந்த முதல் மாணவர் நீங்கள் தான். அனேகமாக, ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயின்று L.L.M பட்டம் பெற்ற முதல் தலித் ஆளுமையும் தாங்களாக இருக்கக்கூடும். எப்படி உணர்கிறீர்கள்?

அனுராக் : இந்தக் கேள்விக்குத் தெளிவாகப் பதில் சொல்ல டோபி மக்வொயர் நடிப்பில் வெளிவந்த ஸ்பைடர் மேன் படத்தில் எனக்குப் பிடித்த வசனம் உதவும்.. அதில் பீட்டர் பார்க்கர், “வாழ்க்கை எனக்காக எதை என்ன வேண்டுமானாலும் வைத்திருக்கட்டும், ‘பேராற்றலோடு பெரும் பொறுப்பும் வந்து சேர்கிறது.’ என்கிற வார்த்தைளை நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என்பான். என்னுடைய வெற்றி, சாதனைகளுக்கும் மேற்சொன்ன வசனம் பொருந்தும் என்றே எண்ணுகிறேன்.

ஒவ்வொரு வெற்றியோடும், பெரும் பொறுப்பும் வந்து சேர்கிறது. இந்தப் பொறுப்பானது கிட்டிய பாடங்களை மேம்பட்ட எதிர்காலத்தை அனைவருக்கும் கட்டியெழுப்புவது மட்டுமல்ல. எப்போது எல்லாம் தேவை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நம்மிடையே உள்ள விரிசல்கள், வேறுபாடுகளை (Fault-lines) பகுத்தாய்ந்து அவற்றை ஏற்றுக்கொள்வதும் பொறுப்பில் அடங்கும். இதே நேரத்தில், இத்தனை காலம் எனக்கு ஆதரவாக இருந்த மனிதர்களை நன்றியோடு நினைவுகூர்வது அவசியமாகிறது. குறிப்பாக எனக்கு எப்போதும் உற்ற வழிகாட்டியாகவும், ஆதரவுக்கரம் நீட்டுபவர்களாகவும் திகழ்ந்த முனைவர் பூனம் ஜெயந்த் சிங், முனைவர் பூஜா அவஸ்தி, திவ்யா திரிபாதி, அபூர்வா விஸ்வநாத், ஸ்ரீ அக்னிஹோத்ரி, சவிதா தேவி ஆகிய ஆறு பெண்களை நினைவுகூர்ந்து நன்றிகூற விரும்புகிறேன்.

கேள்வி: உங்களின் எதிர்காலத்திட்டங்கள் என்ன?

அனுராக் : அன்றாடம் பாதாள சக்கடைகளையும், மலக்குழிகளையும் சுத்தம் செய்யும் போது இறந்துபோகும் நம்முடைய குடிமக்கள் குறித்த செய்திகளைப் படித்துக்கொண்டே இருக்கிறோம். பசியால் குடிமக்கள் இறப்பது குறித்து வாசிக்கிறோம். வெவ்வேறு துறைகளில் ஒரே நேரத்தில் இயைந்து இயங்க வேண்டிய இத்தகைய பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. ஆகவே, நான் அறிவுத்துறை, சட்டப்போராட்டம், செயல்திட்டத்திற்கான கொள்கைகளைத் திட்டமிடல், அரசியல் ஆகியவற்றில் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். நான்கு தளங்களிலும் தீவிரமாக இயங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதை உணர்ந்திருக்கிறேன். என் தொழில் சார்ந்த புத்தம் புதிய மைல்கற்களைக் கண்டடைவதன் மூலம், இத்துறைகளில் பரவலாகப் பங்களிக்க முனைய வேண்டும். ஹார்வர்ட் சட்டப் பள்ளியின். 2019-ம் ஆண்டின் வகுப்பறை நாள் விழாவில் மே 29 அன்று தலைமையுரை ஆற்றிய பேராசிரியர் ரிச்சர்ட் லாசரஸ், “உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் பெற்ற ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் பட்டத்தைக் கொண்டு மதிப்பிட்டுக் கொள்ள வேண்டாம். இந்தப் பட்டத்தைக் கொண்டு வாழ்வில் என்னவெல்லாம் செய்யப் போகிறீர்கள் என்பதிலேயே வாழ்வின் உண்மையான மதிப்பு பொதிந்திருக்கிறது.” என்றார். ஆகவே, இந்தியாவிற்குத் திரும்பி இயங்க ஆர்வமாகக் காத்திருக்கிறேன்.

உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள்

அனுராக்: நன்றி

இக்கட்டுரை ‘நீலம்’ டிசம்பர் 2020 இதழில் வெளிவந்தது. ஆசிரியர் குழுவிற்கு மனம்நிறைந்த நன்றிகள்.

நன்றி: livelaw இணைய  இதழ் 
தமிழில்: பூ.கொ.சரவணன்

1 thoughts on “தலித் அடையாளமே என்னைச் செதுக்கியிருக்கிறது. – சட்ட அறிஞர் அனுராக் பாஸ்கர் நேர்முகம்

  1. சங்கர சரவணன் ஜனவரி 18, 2021 / 10:51 முப

    மொழிபெயர்ப்பு சிறப்பு தம்பி. தரமான பணிகளை தொடர்ந்து செய்யும் தம்பிக்கு வாழ்த்துகள் -சங்கர சரவணன்

பின்னூட்டமொன்றை இடுக