பெண் குழந்தையைப் பொத்தி வளர்ப்பவரா நீங்கள்? ‘தங்கல்’ திரைப்படத்தைப் பாருங்கள்!


ஹரியானாவின் கதை இந்தியாவின் பெரும்பான்மை பெண்களின் கதையும் உண்டு. ஹரியானாவில் ஆண்:பெண் விகிதாசாரம் இந்தியாவிலேயே குறைவான ஒன்று. குழந்தைத் திருமணங்கள் அங்கு அன்றாட யதார்த்தம். காப் பஞ்சாயத்துகள் எனப்படும் வடநாட்டு கட்டப் பஞ்சாயத்துகள் நவ நாகரீக ஆடை அணிகிற பெண்களைத் தண்டிப்பது, சாதி அமைப்பை வலுவாகத் தூக்கிப் பிடிப்பது, ஆணவப் படுகொலைகளைக் கூட்டாகச் செய்வது ஆகியவற்றைத் தொடர்ந்து செய்கிறவை. ‘முட்டிக்குக் கீழ்தான் மூளை’ என அந்த மாநில ஆட்களை எள்ளி நகையாடுகிற அளவுக்கு நிலைமை மோசம். அப்படிப்பட்ட ஊரில் இருந்து தன்னுடைய மகள்களை மகத்தான சாதனைகளை நோக்கி நகர்த்தும் ஒரு தந்தையின் நிஜக்கதைதான் தங்கல்.

(கதையின் நெகிழ்வான தருணங்கள் இங்கே பேசப்பட இருக்கிறது. படத்தை இன்னமும் பார்க்காதவர்கள் படிப்பதை தவிர்க்கலாம்.)

ஒரு பெண்ணை எப்படி வளர்ப்பது? கண்ணின் மணியாக, கோழி தன்னுடைய குஞ்சை அடைகாப்பது போல வளர்ப்பது தான் பெரும்பாலான குடும்பங்களின் மனப்போக்கு. “ஐயே பொட்டப்பொண்ணு!” எனப் பல குடும்பங்கள் கதறுவது ஊரக இந்தியாவின் உண்மை முகம். காரணம் வரதட்சணை கொடுத்துப் பெண்ணை எப்படியேனும் கட்டிக் கொடுப்பது என்பதே அந்தப் பெண்ணுக்குத் தாங்கள் செய்யக்கூடிய மகத்தான சேவை என்று பதிய வைக்கப்பட்டு இருக்கிறது.
தன்னளவில் நிராசையான இந்தியாவிற்குச் சர்வதேச பதக்க கனவை தன் மகள்களின் வழியாகச் சாதிக்க நினைக்கும் மகாவீர் சிங்கிடம் அவரின் மனைவி கேட்கிறார்,
“இப்படிக் கிராப் வெட்டி ஆண் பிள்ளைகள் போல ஷார்ட்ஸ் போட்டு வளர்த்தால் எந்தப் பையன் கட்டிப்பான்?”

Image may contain: 5 people, people standing

“என் பொண்ணுங்களுக்கு ஏத்த மாப்பிள்ளைக்கு அலைய மாட்டேன். அவங்களைத் தைரியமா, நம்பிக்கையுள்ளவங்களா வளர்ப்பேன். அவங்களுக்கான மாப்பிளைகளை அவங்களே தேடிப்பாங்க.” என்று அந்த மல்யுத்த நாயகன் சொல்கையில் சிலிர்க்கிறது.

பெண்கள் வெளியிடங்களில் புழங்குவதே பெரும்பாலும் தடுக்கப்பட்ட மாநிலத்தில் ஆண்களுடன் மகளை மல்யுத்தம் செய்ய வைக்கிறார். ஊரே எள்ளி நகையாடுகிறது. வகுப்பில் ஆண் பிள்ளைகள் சீண்டுகிறார்கள். ஆனால், தேசியளவில் தங்கப் பதக்கத்தை ஜெயித்து வருகையில் ஊரே திரண்டு தங்களின் மகளாக வாரியணைத்துக் கொள்கிறது.
பெண்களை அழகுக்காக மட்டுமே ஆண்கள் ரசிப்பார்கள் என்பது பொதுபுத்தி. சமீபத்தில் பி.சாய்நாத்தின் ‘PARI’ தளத்துக்காகப் பருத்தி வயல்களில் இருந்து பாராலிம்பிக்ஸ் நோக்கி என்கிற கட்டுரையை மொழிபெயர்த்தேன். அதில் வளர்சிக் குறைபாடு உள்ள அம்பிகாபதி எனும் பெண் தேசிய அளவில் சாதித்த பொழுது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை இப்படிப் பதிவு செய்திருந்தார்: “எனக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே ஊரில் இருக்கிறது. ஒவ்வொருமுறை வெற்றியோடு அவர் திரும்புகிற பொழுது எண்ணற்ற கட்டவுட்களுடன் எங்க ஊரின் ரசிகர்கள் (பெரும்பாலும் ஆண்பிள்ளைகள்) வரவேற்கிறார்கள். “ புற அழகைத் தாண்டி அளப்பரிய சாதனைகள் சார்ந்தும் சமூகம் கொண்டாடும் என நம்பிக்கை தரும் தருணங்கள் அவை.

மகாவீர் சிங் பெண்ணியவாதி இல்லை. அவரின் மனைவியை வீட்டு வேலைகளே செய்ய வைக்கிறார். போயும், போயும் பெண் குழந்தை பிறந்ததே என்று முதலில் வருந்துகிறார். “எதுனாலும் தங்கம் தங்கம் தான்” எனத் தெருச்சண்டையில் மகள்கள் ஈடுபடும் பொழுது உணர்கிறார். எதிர்த்து ஆட பெண்கள் இல்லாத களத்தில்,, ஆண்களோடு மோதவிட்டு வார்த்து எடுக்கிறார். வாய்ப்புகள் இல்லை, வீட்டை விட்டு எப்படி வெளியே அனுப்புவது என அஞ்சும் பெற்றோர்கள் அந்தக் காட்சியில் விழித்துக் கொள்ளலாம்.

தந்தைக்கும், பயிற்சியாளருக்கும் இடையேயான போராட்டத்தில் சிக்கிக் கொள்ளும் மகாவீர் சிங் ‘எந்தத் தேர்வும் எனக்கு இல்லை.’ என்று வயிற்றைக் கழுவ வேலையில் தன்னுடைய மல்யுத்த கனவுகள் மலர்ந்த காலத்தில் தங்கிவிட்டார். அவரின் சர்வதேச கனவுகள் சாம்பலானது. மகள் சாதிக்கிறாள் என்று தெரிந்ததும் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கையோடு மல்யுத்தம் செய்கிறார்.

இந்தியாவின் தனிநபர் பதக்கங்களில் பெண்களின் பங்களிப்பு ஆண்களைவிட மேம்பட்டதாக இருக்கிறது. போதுமான வாய்ப்புகள் இன்மை, ஏளனம், வறுமை என்று பலவற்றை ஆண் வீரர்களைப் போல அவர்கள் எதிர்த்துப் போராடுவது ஒருபுறம் இவை அனைத்துக்கும் மேலே மகாவீர் சிங் சொல்வதைப் போல, “கேவலம் பொண்ணு” என்று பார்க்கும் சமூகத்தின், ஆண்களின் அன்றாடப் போரை எதிர்த்து கத்தி சுழற்றிய தங்கங்கள் அவர்கள்.

இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த கறிக்கடை பாய் கோழிக் கறியை குறைந்த விலையில் மகாவீர் சிங்கின் மகள்களுக்குத் தருகிறார். உச்சபட்ச காட்சிக்கு முன்னால் தன்னுடைய மகள்கள், “அப்பா அக்கா ஆடுறதை பாக்கணும்!” என்று கேட்டுக் கொண்டதற்காகப் பாய் அவர்களை வண்டியேற்றி அழைத்து வருகிறார். மகாவீர் சிங் சொல்கிறார், ‘மகளே! நீ நாளைக்கு நன்றாக ஆடவேண்டும்., உன்னை யாரும் மறக்கவே முடியாதபடி ஆடவேண்டும். உன் தங்கம் பல பெண்களை
அடக்குமுறைகளை, அடுப்படியைத் தாண்டி அடித்து ஆட உற்சாகப்படுத்தும்.’

Image result for dangal

சீதையைப் போல இரு, தமயந்தியைப் போல இரு, பெண்ணாய் இரு.” என்றெல்லாம் சொல்லாமல், ‘பி.டி. உஷாவைப் போல வா, அஞ்சு பாபி ஜார்ஜ் போல அசத்து, தீபிகா போல அடித்து ஆடு, சிந்து போல பெருமை தேடித் தா, சானியா போல சரித்திரம் படை.’ என ஊக்குவிக்க படம் சொல்லித் தருகிறது.

நிஜ நாயகன் மகாவீர் சிங்குக்கும், கீதா, பபிதா எனும் தங்கத் தாரகைகளுக்கும், அமீர் கானுக்கும், இந்தப் படக்குழுவினருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். கிரிக்கெட்டை தாண்டி பல்வேறு விளையாட்டுகளின் மீதும், பெண்களைப் பொத்தி வளர்க்கும் போக்கை மாற்றிக் கொள்ளவும் இந்தப் படம் ஊக்கப்படுத்தும்.

எளிமையான வாழ்க்கையைக் கேட்காதீர்கள், எதிர்த்து போராட மகள்களுக்குச் சொல்லித் தாருங்கள். பஞ்சு மெத்தையில் மடியில் படுக்க வைக்காதீர்கள். மண்ணில் மிருகங்களோடு வாழவேண்டிய நிலையில் நம்பிக்கை தாருங்கள். ஆடைகளிலும், முடியிலும், பெண்ணின் ஆடம்பரத் திருமணத்திலும் இல்லை குடும்பத்தின் பெருமை என்று அடித்துச் சொல்கிறது இந்தப் படம்.

இயக்குனர் மகேந்திரனும், சினிமாவும்


சினிமாவும் நானும்’ என்கிற இயக்குனர் மகேந்திரன் அவர்களின் நூலை வாசித்து முடித்தேன். விகடனில் மாணவ நிருபராக இருந்த பொழுது அவரை நேர்முகம் செய்ய ஆசைப்பட்டேன். அலைபேசியில் அவரை அழைத்துப் பேசிய கணத்தில் அந்தக் குரலில் இருந்த தணிவும், நெருக்கமும் இந்த நூலிலும் பரவியிருக்கிறது. இத்தனை நேர்மையும், கரிசனமும் ததும்ப எழுத முடியுமா என வியக்கிற இடங்கள் நூலில் ஏராளம்.

ஏழு மாதத்தில் குறைப்பிரசவ குழந்தையாகப் பிறந்தார் மகேந்திரன். குறைப்பிரசவ குழந்தைகள் பிறந்தால் பிழைக்காது எனக்கருதி கொண்டுபோய்ப் புதைப்பதே வழக்கம். அதையே மகேந்திரனின் அப்பாயியும் செய்யச் சொல்லியிருக்கிறார். மகேந்திரனை தன்னுடைய அடிவயிற்றின் கதகதப்பில் மூன்று மாதம் தன்னுடைய பிள்ளையைப் போலக் காத்த மருத்துவர் சாரா அம்மாவால் தான் நமக்கு அவர் கிடைத்தார்.

இளம்வயதில் நோஞ்சானாக இருந்த மகேந்திரன், ‘வாத்துக்கால்’ என்று நையாண்டி செய்யப்பட்டார். கல்லூரியில் நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் என்று இருட்டிய பின்பு ஆடுகளத்தில் ஓடி தலைசிறந்த தடகள வீரராகப் பெயர் எடுத்தார். எம்.ஜி.ஆர். ‘நாடோடி மன்னன்’ திரைப்பட வெற்றி விழாவில் கலந்து கொள்ள மதுரைக்கு வந்திருந்தார். அவரை அப்படியே மகேந்திரனின் கல்லூரிக்கு அழைத்து வந்தார்கள்.

எம்.ஜி.ஆர் தான் பேசமாட்டேன் என்றும், மாணவர்களைப் பார்க்க வருகிறேன் என்று நிபந்தனையோடு வந்தார். மகேந்திரனுக்கு முன்னால் பேசிய மாணவர்கள் ரசிகர்களால் கூச்சலிட்டு இறக்கப்பட்டார்கள். அடுத்து மகேந்திரனின் முறை. அன்றைக்குச் சில நாட்களுக்கு முன்னர்த் தான் கல்லூரியில் வரம்புமீறி பழகியதற்காகக் காதல் ஜோடி மீது முதல்வர் நடவடிக்கை எடுத்திருந்தார். அதைக் குறிப்பிட்டு, ‘சினிமாவில் டூயட் பாடிக்கொண்டு ஊரே பார்க்கிற மாதிரி காதல் செய்கிற எம்ஜிஆரை மட்டும்தான் யாரும் கண்டுகொள்வதில்லை…’ என்கிற ரீதியில் பேச ஆரம்பிக்கக் கைதட்டல் பறந்தது. ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்ட மகேந்திரன் தமிழ் திரைப்பட உலகின் நாடகப்போக்கை கிழித்துத் தொங்கவிட்டார். நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் எம்ஜிஆரையும் ரசிகர் ஆக்கி பேசி முடித்தார் அவர். அது பிற்காலத்தில் அவரைப் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குத் திரைக்கதை எழுதும் பொறுப்பை எம்ஜிஆர் வழங்கும் அளவுக்குத் தாக்கம் செலுத்திய பேச்சாக இருந்தது.

 

Image may contain: 1 person

சினிமா மோகத்தில் சிக்கிக்கொள்ளும் இளைஞர்களை நோக்கி மகேந்திரன் தோழமை நிறைந்த குரலில் மீட்க பலவற்றைப் பேசுகிறார். தன்னுடைய வீட்டுக்கதவை யாரேனும் தட்டும் பொழுது மகேந்திரனே திறப்பார். அதைக்கண்டு பலரும் அதிர்ச்சி அடைவார்கள். “என் வீட்டு கதவை நான் திறக்காமல் யார் திறக்க வேண்டும்?” எனக்கேட்கிற மகேந்திரன், ‘சினிமா ஜோடனைகளின் மீது எழுப்பப்பட்டு இருக்கிறது. சினிமா உலகம் தேவலோகமும் இல்லை, இங்கே நடிப்பவர்கள் தேவதூதர்களும் இல்லை…நம் நாட்டில் விவசாயி, அன்றாடங்காய்ச்சி எனப்பலரும் பட்டினி கிடக்கிறார்கள். அது அவர்களின் வாழ்க்கை. ஆனால், நடிகன் பட்டினி கிடந்த கதையைச் சொல்லி பின்னர் முன்னேறியதை பேசுகையில் தேவையில்லாத கவர்ச்சி ஏற்படுகிறது. பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என்று சினிமாவில் ஜெயிக்க வருகிறீர்கள். விலைமதிப்பற்ற இளமை, ஆரோக்கியம் ஆகியவற்றை அடமானம் வைத்து ஜெயிக்க முடியாது. பட்டினியில் கவர்ச்சி கொள்ளாமல், அவர்களின் வெற்றிக்கான அடிப்படைகள், காரணங்கள் நாடி பயணியுங்கள்’ என்கிறார்.

திறமை, தன்னம்பிக்கை ததும்ப இதில் தான் இயங்குவேன் என்று இலக்கு வைத்துக்கொண்டு செயல்பட இளைஞர்களை அறிவுறுத்துகிறார். அதேசமயம், வாழ்க்கையில் பாதுகாப்பான வேலையில் ஈடுபட்டுக்கொண்டே தன்னுடைய கதைகளை வாழ்க்கையில் கண்டெடுத்து செதுக்க இயலும் என்று நம்பிக்கை தருகிறார். உலகத் திரைப்படங்களைப் பார்த்து பிரதி எடுக்காமல், அவற்றின் மூலம் கற்றலின் பரப்பை விரிவுபடுத்த வழிகாட்டுகிறார்.

‘சினிமாவில் பிரபலமாவதும், பெரிய ஆளாவதும் பெரிய விஷயமே. அப்படி ஆகமுடியாது போனால் ஒன்றும் குறைபாடு இல்லை. சினிமா தவிர்த்தும் வாழ்க்கை மிக உன்னதமானது, பெருமையுடையது. பிரபலமில்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியமில்லை. வீணாகாத வாழ்க்கை வாழ்ந்தால் போதும்.’ என்று அறிவுறுத்துகிறார்.

Image may contain: 3 people

தமிழ் சினிமாவில் பெண்களை டூயட் பாட மட்டுமே பயன்படுத்துவதைக் கவர்ச்சி என்பதைவிட அவர்களைச் சிறுமைப்படுத்தும் காரியம் என்கிறார். பெண்கள் மோசமாகத் திரையில் காட்டுவதைக் கண்டு மோசமான படம் என்று பொருமும் பெண்கள் கூட, ‘திரையில் நடிக்கும் பெண்கள் நம்மைப் போன்றவர்கள் தானே. அவர்களை இப்படிப் படத்தில் அலங்கோலமாகக் காட்டுகின்றார்களே!’ என்று யோசிப்பதில்லை எனப் பதிகிறார். பாடல் காட்சிகள் வருந்தும்படி உள்ளன. ‘இருப்பதைத் தானே காட்டுகிறோம்.’ என்பவர்களை நோக்கி காரமாக, ‘நமது வீடுகளில் படுக்கை அறைகளுக்கும், குளியல் அறைகளுக்கும் கதவுகள் எதற்கு? திறந்தே கிடக்கட்டுமே…உண்மைகளை ஏன் மறைக்க வேண்டும்?’ எனச் சொல்ல முடியுமா?’ என வினவுகிறார்.

உமா சந்திரனின் ‘முள்ளும்,மலரும்’ எனும் ஜனரஞ்சக நாவலை முழுமையாகப் படிக்காமல் தன்னுடைய மனப்போக்குக்கு ஏற்றவாறு அதை முள்ளும் மலரும் எனப் படமாக்கினார் மகேந்திரன். முள்ளும் மலரும் எதிரெதிர் பதமாகப் பயன்படுத்தப்படவில்லை. காளி எனும் முள் போன்ற கதாபாத்திரமும் மலரும் என்கிற பொருளிலேயே ‘முள்ளும், மலரும்’ எனும் தலைப்புத் தரப்பட்டது.

படத்தின் இறுதிக்காட்சியிலும், ‘உங்களை எனக்குப் பிடிக்கலை’ என்று சரத்பாபுவிடம் ரஜினி சொல்வதாக வரும் காட்சியில் ‘எப்படி இறுதிக்காட்சியில் மாறாமல் இருப்பார்?’ என்று சரத்பாபு கோபித்துக் கொண்டு நடிக்க மறுத்தார். காட்சிகளின் மூலம் படம் சொன்ன விதத்தைப் பார்த்துவிட்டு, ‘பாவி மண்ணள்ளி என் தலையில போட்டுட்டியே’ என்று தயாரிப்பாளர் வேணு செட்டியார் கதறியிருக்கிறார். ‘செந்தாழம் பூவில்’ பாட்டின் ஆரம்பகாட்சியை எடுக்கப் பணம் தர மறுத்தார் அவர். கமலின் பேருதவியால் படம் திரைக்கு வந்தது. மாபெரும் வெற்றி பெற்ற அந்தப் படத்தில் பின்னணி இசையில் பெரிய அளவில் முதல்முறையாக இளையராஜா மிரட்டினார் என்கிறார் மகேந்திரன்.

‘சிற்றன்னை’ எனும் புதுமைப்பித்தனின் கதையை உள்வாங்கி உதிரிப் பூக்கள் திரைப்படமாக எடுக்க முனைந்தார் மகேந்திரன். இறந்த பொழுது போடும் உதிரிப் பூக்கள் தலைப்பா என்று விமர்சித்தனர். தலைவிரி கோலமாக, பொட்டு அழிந்த நிலையில் நாயகி காட்சியளிக்கும் போஸ்டரை ஓட்டியதையும் கிண்டல் செய்தார்கள். புதுமைப்பித்தனை காசாக்கி விட்டார் என்கிற சர்ச்சையும் எழுந்தது. அனைத்தையும் தாண்டி ஓடியது. ரஷ்ய அரசு படத்தின் தரத்தை கேள்விப்பட்டுத் தானே வாங்கி ரஷ்யாவில் மொழிபெயர்த்து மக்களுக்குப் போட்டுக்காட்டியது.

கன்னடத்தில் ராசியில்லாத நடிகை எனச் சொல்லப்பட்ட அஸ்வினியை தன்னுடைய படத்தில் தைரியமாகப் போட்ட மகேந்திரன் சொல்கிறார், ‘படத்தின் கதையும், திரைக்கதைக்கான ட்ரீட்மென்ட்டும் தான் படத்தின் வெற்றியை தீர்மானிக்கும். இவை அல்ல.’ பூட்டாத பூட்டுக்கள் படத்தில் தேவையான நடிகர்கள் கிடைக்காமல் போனது, கைகொடுக்கும் கை படத்தில் விருப்பத்துக்கு மாறாக வைக்கப்பட்ட உச்சபட்சக் காட்சி படத்தின் தோல்விக்கு வழிவகுத்தது என்று எழுதினாலும் இந்தப் படங்களின் தோல்விக்குத் தானே காரணம் என்கிறார் மகேந்திரன்.

மகேந்திரன் சட்டம் படிக்கச் சென்னை வந்தார். ஏழு மாதத்துக்கு மேல் அத்தை அனுப்ப பணமில்லை என்று சொன்னதும் திமுகச் சார்பு இன முழக்கம் இதழில் திரை விமர்சனம் எழுத அமர்ந்தார். அப்பொழுது எம்ஜிஆர் அழகப்பா கல்லூரியில் மகேந்திரன் பேசிய பேச்சை நினைவுபடுத்தி அவரைத் திரையுலகுக்குள் அழைத்து வந்தார். என்றாலும், சீக்கிரமே இதழியல் பக்கம் சென்றார் மகேந்திரன். துக்ளக் இதழில் புலனாய்வு இதழியலில் பின்னினார். கிளைவ் விடுதியில் காவல்துறை நடத்திய அத்துமீறல் கோவையில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூடு, சிதம்பரத்தில் உதயகுமார் என்கிற மாணவனின் மரணத்துக்கு அடிகோலிய காவல்துறை செயல்கள் என்று திமுக ஆட்சியின் பல்வேறு தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார் மகேந்திரன்.

அலுவலகத்துக்குச் சீக்கிரம்பொ வந்துவிடும்து சோ அரைமணிநேரம் தாமதமாக வந்தார். அவரைக் காண வந்த செந்தாமரை, எஸ்.ஏ.கண்ணன் மகேந்திரனை ஏற்கனவே அறிந்ததால் அவரிடம் நாடகம் கேட்டார்கள். அப்பொழுது படித்த டிட்பிட்ஸ் இதழின் தாக்கத்தில் சொன்ன கதை, விரிந்து விருட்சமாகி சிவாஜி நடிக்கும் தங்கப் பதக்கம் படமானது. சௌத்ரி என்கிற வடநாட்டு பெயரை என் சிவாஜிக்கு வைத்தார் என்று யாருமே கேட்கவில்லை.

எம்ஜிஆரின் பசியாற்றும் தன்மை, மகேந்திரனின் மகள் குணமாக மொட்டையடித்துக் கொண்ட சோவின் அன்பு, கமலின் உதவியால் இயக்குனர் ஆனது என்று பலவற்றை மகேந்திரன் பதிகிறார். சிவாஜி மிகைநடிப்பை விடுத்து வீரபாண்டியன் படத்து வசனத்தைப் பேசிக் காண்பித்து அது எடுபடாது எனப் புரிய வைத்ததைப் பதிவு செய்கிறார். தங்கப் பதக்கம் படத்தில் தான் சொன்னபடியே வசனம் குறைத்து, உணர்வால் நெகிழ வைத்த நடிகர் திலகத்தை நினைவுகூர்கிறார். குள்ளமான உருவம் கொண்ட சிவாஜி எப்படி உயரமாகத் தோன்றுகிறார் என்கிற ஐயத்தை அவரிடமே கேட்டார். ‘நான் ஹீல்ஸ் செருப்பு போடுறதில்லை. நான் பின்னங்காலை அழுத்தி உயரமாகக் காட்டிக்கலை. மனதார உணர்ந்து, வேடத்தில் கலந்து பேசுவது கதாபாத்திரத்தில் உங்களை லயிக்க வைக்கிறது. அதனால் உயரமாகத் தெரிகிறேன்.’ என்றாராம்.

சிவாஜி எத்தனையோ வேடங்களில் அர்ப்பணிப்பை செலுத்தி நடித்தார். பல்வேறு ஒப்பனைகளை அவர் மேற்கொண்டார். ஆனால், அதை அவர் பெரிதாகப் பேசியதில்லை. இன்றைய நடிகர்களோ மொட்டை போட்டேன், எடை குறைத்தேன் என்று அவற்றைப் பெரிதாகப் பேசுகிறார்கள். நடிப்புக்கு என்ன செய்தார்கள் என்பதுதான் மையகவலையாக இருக்க வேண்டும் என்கிறார் மகேந்திரன்.

சினிமா என்றால் டூயட், சண்டை என்பதைத் தாண்டி காட்சி, நடிப்பு என மாறவேண்டும் என்கிறார். பெயருக்குப் பின்னால் பட்டங்கள் போட்டுக் கொள்வதை, ‘ஆஸ்கார் வாங்கின சத்யஜித் ரே எந்தப் பட்டத்தையும் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளவில்லை. நீங்களே மாறி மாறி டார்ச் லைட் அடிச்சுக்காதிங்க.’ என்று கடிகிறார்.

Image may contain: 2 people

தமிழ் நாயகிகள் பரங்கிமலை ஜோதி பெண்களைப் போலத் திரையில் உடல் வனப்பை காட்டி போகப் பொருளாக மாற்றப்படுவதைக் கவலையோடு குறிப்பிடுகிறார். பணம் சம்பாதிக்கக் கன்னக்கோல் வைப்பது, திருடன் ஆவது, கள்ளப்பணம் அடிப்பது என்று ஆண்கள் இறங்குகிறார்கள். பெண்களுக்குச் சந்தையில் மதிப்பு குறைவான காலமே இருப்பதால் உடலை காட்டி பொருள் ஈட்ட வைக்கப்படும் நிலையைக் கவனப்படுத்துகிறார்,

சினிமாவுக்கு விருப்பமில்லாமல் வந்த மகேந்திரன் இப்படி எழுதுகிறார் : ‘ஒரே சமயத்தில் பலரைப்பார்த்துப் பேசிக்கொண்டே கைவிரல்களைக் கண்களாகப் பாவித்து அரிவாள்மனையில் காய்கறிகளைத் துண்டுபோட்டு, எதோ ஒரு அனுமானத்தில் சமையல் பண்ணும் தாய்மார்களைப் போலத்தான் என்னுடைய போக்கும்.’ என்றுவிட்டு மேலே சொன்ன எல்லாவற்றையும் அடுக்குகிறார். கட்டாயச் சமையல் என்றாலும் சுவைக்கவே செய்கிறது.
சினிமாவும், நானும்
இயக்குனர் மகேந்திரன்
மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கம்யூனிகேசன்ஸ் வெளியீடு

புகைப்படங்கள் நன்றி: இயக்குனர் மகேந்திரனின் முகநூல் பக்கம்

எஜமான டைனோசர், செல்லப் பிராணி மனிதன்!


The Good Dinosaur திரைப்படம் பார்த்தேன். எதோ கிளிஷேக்கள் நிரம்பிய தமிழ் சினிமாவைப் பார்ப்பது போலப் பல்வேறு இடங்களில் தோன்றியது. மனிதன் பல்வேறு மிருகங்களைத் தனக்குச் சேவகம் செய்யப் பழக்கப்படுத்துகையில் ஒருவேளை டைனோசர் ஒன்றின் காவலனாக ஒரு ஆதிமனிதன் மாறியிருந்தால் எப்படி இருக்கும் என்பதே அடிநாதம்.

பூமியின் மீது மோதி டைனோசர் இனத்தை அழித்த எரிகல் மோதாமல் போய் டைனோசர்கள் வாழ்ந்திருந்தால் எப்படியிருக்கும் உலகம் என்பதைக் கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள். நாயக டைனோசர் பிறக்கும் பொழுதே உடலில் குறைபாடோடு பிறக்கிறது. அதனுடைய தந்தை அதற்கு இயற்கையின் அற்புதத்தையும், ‘நீ எனக்கும் மேலானவன்!’ என்கிற நம்பிக்கையும் ஊட்டுகிறார்.

வெள்ளத்தில் தந்தையை இழந்து அதற்குக் காரணமான மனிதப் பிராணியைத் தேடிக்கொண்டு போகும் நல்ல டைனோசர் அதைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் அனுபவங்கள், சாகசங்கள், தன்னுடைய மூன்று நக மலையை அது மீண்டும் கண்டடைந்ததா? என்பதே கதை. வஞ்சம், சாகசம், அன்பு, பயம் எல்லாமும் கலந்த இந்தக் காட்சி விருந்தில் படத்தின் வேகம் மிகப்பெரிய குறை. பெரிய திருப்பங்களும் கதையில் இல்லை.

ஆனால். மனிதன் என்கிற பெரும்பசி கொண்ட நுகர்வு மிருகத்திடம் உலகம் சிக்காமல் இப்படியே இருந்திருந்தால் இந்த உலகம் இன்னமும் அழகானதாக, பல உயிரினங்கள் வாழ உகந்ததாக இருந்திருக்குமே என்கிற ஏக்கத்தைக் கடத்தியிருப்பதே இத்திரைப்படத்தின் வெற்றிதான்!

காக்கா முட்டை- தமிழர்கள் கொண்டாட வேண்டிய மகத்தான படைப்பு


காக்கா முட்டை படத்தைச் சங்கம் திரையரங்கில் பார்த்த அந்த 105 நிமிடங்களும் அழகானவை. கலைப்படைப்பு பொது மக்களின் வரவேற்பை பெறாது என்பதை அடித்து நொறுக்கியிருக்கிறது இப்படம் என்பதை அவ்வப்பொழுது எழுந்த ஆரவாரமும், இறுதியில் ஒலித்துக்கொண்டே இருந்த கைதட்டலும் உறுதிப்படுத்தின.

பெயர் தெரியாத எத்தனையோ சிறுவர்கள் பள்ளிப்பக்கம் எட்டிப்பார்க்க முடிவதே இல்லை. உலகில் குழந்தைத் தொழிலாளர்கள் மிக அதிகமாக இருக்கும் நாடு நம்முடையது! அப்படிப்பட்ட இரு சிறுவர்களின் பீட்சா சாப்பிட வேண்டும் என்கிற ஆசையும், அது சார்ந்த பயணமும் தான் காக்கா முட்டை கதை. இறுதிவரை சின்னக் காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டையின் உண்மையான பெயர் சொல்லப்படவே இல்லை.

சென்னை வாழ்க்கையில் கிராமத்து பையனாக இருந்துவிட்டு நுழைந்த நான் ஒரு பீட்சா துண்டை என் கல்லூரி வாழ்க்கை காலத்தில் சாப்பிட்டதே இல்லை. விலை அதிகமான உணவகங்களில் போய்ச் சாப்பிட கல்விக்கடனில் படித்த எனக்குத் தைரியம் வந்தது கிடையாது.

லீ மெரிடியன் ஹோட்டலுக்கு என்னுடைய நெருங்கிய நண்பன் அறையில் உறங்கிக்கொண்டு இருந்த என்னை அப்படியே ஷார்ட்ஸ், சாயம் போன டி-ஷர்ட்டோடு சாப்பிட அழைத்துப்போனான். ஓட்டல் பாதுகாவலர் நான் அணிந்திருந்த ஆடைகளோடு உள்ளே நுழைய முடியாது என்று திடமாக மறுத்து அனுப்பி வைத்தார். என் நண்பன் தன்னிடம் பணம் இருக்கிறது, சாப்பிடத்தான் வந்திருக்கிறோம் என்றது அவர் காதுகளை எட்டவேயில்லை. நான்,”முன்னவே வேணாம்னு சொன்னேனே மச்சி!” என்று சலித்துக்கொண்டேன்.

உலகமயமாக்கல் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையின் மீது எத்தகைய தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது என்பதை எந்தப் பிரச்சாரத் தொனியும் இல்லாமல் படம் காட்டிச்செல்லும் கணங்கள் அத்தனை நுண்மையானவை. தாங்கள் விளையாடிக்கொண்டிருந்த மைதானம் கைப்பற்றப்பட்டு அதன் மரங்கள் பீட்சா கடை வருவதற்குச் சாய்க்கப்படுவதற்குக் குழந்தைகள் கைதட்டுவது குழந்தைகளை மட்டுமே சொல்வதாகப் படவில்லை.

மீடியாக்களின் சில நொடிகள் கண்ணீர் விடும் போலி மாய்மாலங்கள், செய்தியை சுட்டு சொந்த சரக்கு போலப் பிரம்மாண்டம் காட்டி பரிமாறும் யுக்தி, பரபரப்புத் தருணங்களில் மட்டும் தலைகாட்டி ஊதிப் பெரிதாக்கும் வழிகள் இயல்பான அங்கதத்துக்கு உள்ளாகி இருக்கின்றன.

சிட்டி சென்டர், ஸ்பென்சர் பிளாசா, எக்ஸ்ப்ரெஸ் அவென்யு முதலிய மால்களில் எத்தனை அழுக்கு உடை அணிந்த, ஏழ்மை மிக்க மக்களைக் காண்கிறோம்? வளர்ச்சி என்பது ஒரு பக்கம் மட்டும் நிறைத்தால் அது வீக்கமில்லையா என்கிற கேள்விகளை வசனங்கள் இயல்பாக எழுப்புகின்றன. சென்னைத்தமிழ் செறிவாகத் திரையில் கடத்தப்பட்டு இருக்கிறது.

A still from the film அரசியல், ஊடகம், நடுத்தர மக்கள், மேட்டுக்குடி என்று அத்தனை பேரின் மீதும் அப்படியொரு மென்மையான சாடல் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. காக்கா முட்டைகளின் அம்மாவாக அசர வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்  சொல்வது போல, “உங்களை கை நீட்டி அடிக்கக்கூடாதுன்னு பாலிசி வெச்சிருக்கேன்.” என்ற வசனம் இயக்குனர் தனக்குத் தானே போட்டுக்கொண்ட மெல்லிய கோடாக படுகிறது.

மேட்டுக்குடியின் வாழ்க்கையைப் பிரதி போட்டு விடத்துடித்து மற்றவற்றை மறந்து அங்கே போய்ச் சேர்கையில் அது ஒன்றுமில்லை என்று உணர்வை பலரும் பெற்றிருந்தாலும் அதைத் திரையில் நச்சென்று சொன்ன கணத்தில் அரங்கமே விசில்கள், கைதட்டல்களால் நிறைந்தது. கதையில் யாவரும் வெகு இயல்பாக வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

எத்தனையோ கொண்டாட்டங்கள், கவனிப்புக்கு பிறகு அந்தச் சேரி குழந்தைகள் மீண்டும் அதே வாழ்க்கைக்குத் திரும்புவதாக முடியும் காக்கா முட்டையின் கதை பல கோடி தம்பி, தங்கைகளின் வாழ்க்கை யதார்த்தம் என்பதை உணர்ந்துவிட்டு வீட்டில் அமர்ந்து காட்சிகளை அசைபோடுங்கள். சிரித்த கணங்களில் சிந்தியிருக்க வேண்டிய கண்ணீர் பற்றிப் புரியும். தமிழின் திரை வரலாற்றில் மிக முக்கியமான மனிதர்களுக்கான மகத்தான படைப்பு காக்கா முட்டை. இதை நெஞ்சாரத் தழுவி வரவேற்பது தமிழர்களின் பெருங்கடமை. இயக்குனர் மணிகண்டனுக்கும், குழுவினருக்கும் மனம் நிறைந்த முத்தங்களும், வாழ்த்துகளும். இந்தக் கட்டுரையை அடித்து முடிக்கையில் பீட்சா விளம்பரம் ஆன்லைனில் சிரிக்கிறது  நல்லா வருவீங்க!

ஆஸ்கர் இந்தியர் சத்யஜித் ரே


சத்யஜித் ரே இணையற்ற திரை நாயகன் ; எளிமையாக வாழ்க்கையை வாழ்ந்த மனிதர் இவர் .மொத்தம் வாழ்நாளில் எடுத்ததே முப்பத்தி ஆறு படங்கள் தான் .ஆனால்,அவர் இந்திய சினிமாவை மடைமாற்றியவர் .அப்பா இளம் வயதிலேயே தவறி விட அம்மாவின் சொற்ப வருமானத்தில் தான் வாழ்க்கை கழிந்தது அவருக்கு .தாகூரின் சாந்தி நிகேதனில் சேர்ந்து ஓவியம் கற்றுத்தேறிய பொழுது அப்படி ஒரு ஆனந்தம் அவருக்கு உண்டானது .அங்கே தாகூரிடம் தன் பிறந்த நாளுக்கு வாழ்த்து பெற போனார் ;ஒரு படபடக்கும் தாளில் ஒரு கவிதை எழுதி தந்து இதை பெரியவன் ஆனதும் படி என்று கொடுத்து விட்டு போய் விட்டார் .

இவர் ஒரு விளம்பர நிறுவனத்தில் மாதம் எண்பது ரூபாய் சேர்ந்தார் .அங்கே நன்றாக போய்க்கொண்டு இருந்தாலும் அடிக்கடி ஆங்கிலேயருக்கும் இந்தியர்களுக்கும் சச்சரவு உண்டானது கூடவே வாடிக்கையாளர்களின் ரசிப்புத்தன்மை வெறுப்பு உண்டு செய்ய வெளியேறினார் மனிதர் .புத்தக நிறுவனம் ஒன்றில் சேர்ந்து அட்டைப்பட ஓவியங்கள் வரைய ஆரம்பித்தார் .நேருவின் டிஸ்கவரி ஆப் இந்தியா நூலுக்கு கூட ஓவியம் வரைந்திருக்கிறார் .

பின் ழான் ரீனோர் எனும் பிரெஞ்சு திரைப்பட இயக்குனரை பார்த்ததும்,பைசைக்கிள் தீவ்ஸ் படமும் அவரை படம் எடுக்கு உந்தி தள்ளியது .தாகூர் கொடுத்த கவிதை தாளை பிரித்து பார்த்தார் ;
“உலகம் முழுக்க 
எத்தனையோ நதிகள் நீர்நிலைகளுக்கு 
சென்று இருக்கிறேன் ;
இறைவா 
ஆனால் 
என் வீட்டின் 
பின்புறம் இருந்த சிறிய புல்லின் 
நுனியில் தவழ்ந்து சிரிக்கும்
பனித்துளியை கவனிக்க 
தவறி விட்டேன் “எனும் வரிகள் அவரை உலுக்கின ..ஆனால் தன் முதல் படத்தை வங்கத்தின் தலை சிறந்த நூலான பதேர் பாஞ்சாலியை படமாக்க முடிவு செய்தார் 

மூன்று வருட போராட்டம் ;நிதி இல்லை .மனைவியின் நகைகளை அடமானம் வைத்தார் .கொஞ்சம் பகுதிகள் எடுத்த பொழுது படம் நின்று போனது ;அரசிடம் படத்துக்கு நிதி கேட்டார் முதல்வர் பி சி ராய் அதிகாரிகளை படத்தை பார்க்க சொன்னார் .”என்ன படம் இது தேறாது !”என்று விட்டனர் .நேரு வரை போய் அரசாங்கத்துக்கு படத்தின் உரிமையை தாரைவார்த்து படமெடுக்க நிதி பெற்றார் .படம் வெளிவந்த பொழுது தான் அதன் மகத்துவம் புரிந்தது .தேசிய விருது கிடைத்தது உலகம் முழுக்க மிகப்பெரும் கவனம் பெற்றது .படத்தை திட்டி நியூ யார்க் டைம்ஸ் எழுதியும் அமெரிக்காவில் படம் ஹவுஸ் புல்லாக ஓடியது .பெரிய நகைமுரண் படத்தை பார்த்து விட்டு அந்த நாவலை எழுதிய ஆசிரியர் ,”என்னய்யா இப்படி சொதப்பி இருக்கே !”என்றாராம் !

அபராஜிதோ தங்க சிங்கம் விருதை பெற்றுத்தந்தது .அவர் குழந்தைகளுக்காக கதைகள் எழுதிய அனுபவம் உள்ளவர் .பெலூடா எனும் கதாபாத்திரம் மறக்கவே முடியாதது ;அறிவியியல் புனை கதைகளும் எழுதியவர் .படமெடுத்து பொருளீட்ட கூடிய தருணத்தில் திரும்ப வந்து சந்தேஷ் எனும் தாத்தா உண்டாக்கிய பத்திரிக்கையை புதுப்பித்து எண்ணற்ற கதைகள் எழுதினார் 

வங்கத்தின் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கையை படம் பிடிப்பதாக அவரின் படங்கள் இருந்தன .வறுமையை படமாக்கி காசு பார்க்கிறார் என விமர்சித்தார்கள் .சிக்கிம் அரச பரம்பரை பற்றி இவர் எடுத்த படத்தை போடவே விடாமல் அரசு தடை செய்தது அவர் ,மரணத்துக்கு பல ஆண்டுகள் கழித்து அப்படம் வந்த பொழுது பார்த்தால் சிக்கிமின் வனப்பை பற்றியே படம் பேசி இருக்கிறது என தெரிந்தது ;படத்தை பார்க்காமலே தடை செய்திருக்கிறார்கள் 

சாருலதா எனும் அவரின் பெண்மொழி பேசும் படத்தில் பைனாகுலரில் கணவன் வருவதை பெண் பார்த்து விட்டு கதவை திறக்கிற ஷாட்டை பதினைந்து நிமிடம் வைத்திருப்பார் .”ஒரு பெண் வாசலுக்கு வந்து கதவைத் திறப்பதை 15 நிமிடம் காட்டவேண்டுமா?: என ஒருவர் கேட்க , “ஒரு பெண் வாசலுக்கு வரும் ஒரு 15 நிமிடத்தை உங்களால் பொறுக்கமுடியவில்லை எனில், இவ்வளவு ஆண்டுகாலமாக வெளியே வராமலேயே இருக்கும் பெண்களைப் பற்றி உங்களுக்குக் ஒன்றுமே தெரியவில்லையா? “என்றார் 

பெரும்பாலும் நல்ல நாவல்களையே படமாக்கினார் .நகர வாழ்வை வெறுத்து காடு புகும் நண்பர்கள் பற்றி ஒரு படம் ,மகளை வேசியாக்கி விடும் அப்பா ,எளிய பெண்ணை தேவியாக்கி விடும் மக்கள்,விமானத்தில் சீட்டு கிடைக்காத காரணத்தால், இரயிலில் பயணம் செய்யும் ஒரு நடிகனுக்கு பொது இடத்தில ஏற்படும் அனுபவங்கள் ,அறிவுத்துணையாக தன் கொழுந்தனை பார்க்கும் பெண் என அவர் எடுத்துக்கொண்ட கதைக்கருக்கள் தனித்துவம் வாய்ந்தவை .ஏலியன் என்கிற கதை ஸ்க்ரிப்டை அமெரிக்க நிறுவனத்தோடு சேர்ந்து எடுக்க முயன்று முடியாமல் நின்று போனது ;அதே பாணியில் ஈ டி படம் வந்த பொழுது அதை தன் கதையின் திருட்டு என் ரே சொன்னார் 

அவருக்கு பிரான்ஸ் அரசு விருது வாங்கி கவுரவித்தது . உலக திரையுலக பிதாமகர் அகிரோ குரோசோவா இப்படி சொல்கிறார்,”ரேவின் படங்களை பார்க்காதவர்கள் வானில் சூரியனையும்,சந்திரனையும் காணாதவர்கள் 

எந்த அளவுக்கு அவருக்கு திரைத்துறை மீது காதல் இருந்தது என சொல்லி இந்த கட்டுரையை முடிக்கலாம் .Ghare Baire. எனும் தாகூரின் கதையின் படமாக்கி கொண்டிருந்த இரண்டு முறை மாரடைப்பு வந்தது மனிதருக்கு .கொஞ்ச நாளில் மீண்டு வந்தவர் எடுத்த ஒய்வு என்ன தெரியுமா ?ஓயாமல் மூன்று படங்கள் இயக்கியது .ஸ்ட்ரெச்சர் ஆம்புலனஸ் தயாராக இருக்கும் மனிதர் படம் எடுத்து கொண்டிருப்பார் .மரணப்படுக்கையில் இருந்த பொழுது வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் அறிவிக்கப்பட்டது .அவரால் போக முடியாததால் ஆஸ்கர் அவர் படுக்கைக்கே வந்து சேர்ந்தது .ரே உலகை இந்தியாவை நோக்கி திருப்பியவர்

ஜாக்கி சானிடம் படிக்க பத்து பாடங்கள் !


ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து திரை விருந்து ஜாக்கிசான் படங்களில் எப்பொழுதும் நமக்குண்டு. அவரின் பிறந்தநாளான இன்று அவரிடம் இருந்து அறிய பத்து பாடங்கள் :

துவக்கத்தால் துவளாதே :
பிறக்கும் பொழுது ஐந்து கிலோ எடையோடு இருந்தார் அவர். மருத்துவர் ஏழையான இவரின் பெற்றோரால் வளர்க்க முடியாது என்று தத்து கேட்டார். கொடுக்க முடியாது என்று கம்பீரமாக இவரை தூக்கிக்கொண்டு வந்து விட்டனர். வேலைக்காக ஆஸ்திரேலியா நோக்கி அவர்கள் நகர்ந்த பின்பு ஹாங்காங்கில் கூலி வேலை செய்து தன்னுடைய வாழ்க்கையை நகர்த்த வேண்டிய கட்டாயம் ஜாக்கிக்கு உண்டானது. இன்றைக்கு ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் அவர் !

செய்வதில் சிறந்திடு :
மூன்று வேளை சூப் குடிக்க கூட வருமானம் போதாமல் போனதால் அம்மா,அப்பாவுடன் சேர்ந்திருக்க ஆஸ்திரேலியா கிளம்பினார். போர்க்கலைகள் கற்றிருந்தபடியால் அங்கே ஸ்டன்ட்மாஸ்டராகவே வேலை கிடைத்தது. நடுநடுவே ஹோட்டலில் வேறு வேலை பார்த்து அப்பா அம்மாவுக்கு தொல்லை தராமல் இருந்தார். ஆனாலும்,செய்கிற ஸ்டன்ட்களில் உயிரைக்கொடுத்து செயல்பட்டார். வில்லி சான் என்பவரின் கவனம் திரும்பியது. நாயகனாக நடிக்கும் ‘ ‘fist of fury’ படத்தின் வாய்ப்பு ஒரே ஒரு டெலிகிராம் மூலம் வந்து சேர்ந்தது.

சுயத்தை நம்பு :
ஹாங்காங்கில் சில படங்களில் நடித்தாலும் அவை பெரிதாக ஓடவில்லை. யோசித்து பார்க்கையில் தன்னுடைய திறமையை முழுமையாக இயக்குனர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று அவருக்கு புரிந்தது. ஆக்ஷன் என்றால் முகத்தை சீரியஸ் ஆகவே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் உடைத்து அதில் நகைச்சுவையை புகுத்தினார். தன்னுடைய ஐடியாக்களை படத்தில் இணைத்து நடிக்க பாக்ஸ் ஆபிஸ் ஹிட்கள் குவிந்தன.

உண்மையை சொல் ! உயர்ந்து நில் :
ஆரம்ப காலத்தில் போர்னோ படத்தில் ஜாக்கி நடித்தார் என்று கிசுகிசுக்கப்பட்ட பொழுது ,”ஆமாம் ! வாய்ப்புகள் தேடிக்கொண்டு இருந்த பொழுது அப்படி படத்தில் நடிக்கவே செய்தேன். அதில் எனக்கு வருத்தமொன்றும் இல்லை.” என்று சொன்னார் ஜாக்கி. அவரின் ஆங்கிலம் சகிக்கலை என்று விமர்சகர்கள் எழுதிய பொழுது ,”அதுவும் சரியே ! ஸ்டன்ட் செய்வதை விட ஆங்கிலம் பேசுவது கடினமான ஒன்றே !” என்று ஒப்புதல் தந்தார் ஜாக்கி !

பிடிக்காவிட்டாலும் காத்திரு :

ரஷ் ஹவர் எனும் அமெரிக்க படத்தில் நடித்தார் ஜாக்கி சான். அமெரிக்காவின் கதை சொல்லும் பாணி,அவர்களின் நகைச்சுவை எதுவுமே பிடிக்காமலே அப்படத்தில் நடித்திருந்தார். அடுத்த படம் அதே சீரீசில் வந்த பொழுது நல்ல சம்பளம் என்று நடிக்க ஒப்புக்கொண்டார். “எனக்கு பிடிக்கவில்லை தான் ; அதற்காக வருகிற வாய்ப்பை கைவிட நான் முட்டாள் இல்லை !” என்று பிற்காலத்தில் சொன்னார் அவர். 

உடைவது உன்னதம் பெறவே ! :

இடுப்பு எலும்பு உடைந்து இருக்கிறது,முகமே சின்னாபின்னம் ஆகியிருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்கள் கையெடுத்து கும்பிட்டு அனுப்புகிற அளவுக்கு எல்லா பாகமும் காலி ஆகி இருக்கிறது ஜாக்கி சானுக்கு. ஒரு முறை மண்டையோட்டில் அடிபட்டு எட்டு மணிநேர போராட்டமே அவரை மீட்டது. அந்த ஓட்டையை செயற்கை பூச்சின் மூலம் அடைத்துக்கொண்டு நடிக்க அவர் மீண்டும் வந்த பொழுது பலருக்கு நெஞ்சடைத்தது.

வழிகளைத் தேடாதே ! உருவாக்கு :
போலீஸ் ஸ்டோரி படத்தில் இவருடன் நடிக்க வந்த ஸ்டன்ட் ஆட்கள் அநியாயத்துக்கு அடிபட்டு நடிக்கவே மறுத்தார்கள். வேறு வழியே இல்லை என்று எல்லாரும் கை விரித்த பொழுது தானே ஸ்டன்ட் பயிற்சி பள்ளி ஆரம்பித்து ஆட்களை உருவாக்கினர் ஜாக்கி. அவர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு முழு மருத்துவ செலவை அவரே ஏற்றுகொள்ள படம் அதிவேகத்தில் உருவானது.
Photo: ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து திரை விருந்து ஜாக்கிசான் படங்களில் எப்பொழுதும் நமக்குண்டு. அவரின் பிறந்தநாளான இன்று அவரிடம் இருந்து அறிய பத்து பாடங்கள் :

துவக்கத்தால் துவளாதே :
பிறக்கும் பொழுது ஐந்து கிலோ எடையோடு இருந்தார் அவர். மருத்துவர் ஏழையான இவரின் பெற்றோரால் வளர்க்க முடியாது என்று தத்து கேட்டார். கொடுக்க முடியாது என்று கம்பீரமாக இவரை தூக்கிக்கொண்டு வந்து விட்டனர். வேலைக்காக ஆஸ்திரேலியா நோக்கி அவர்கள் நகர்ந்த பின்பு ஹாங்காங்கில் கூலி வேலை செய்து தன்னுடைய வாழ்க்கையை நகர்த்த வேண்டிய கட்டாயம் ஜாக்கிக்கு உண்டானது. இன்றைக்கு ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் அவர் !

செய்வதில் சிறந்திடு :
மூன்று வேளை சூப் குடிக்க கூட வருமானம் போதாமல் போனதால் அம்மா,அப்பாவுடன் சேர்ந்திருக்க ஆஸ்திரேலியா கிளம்பினார். போர்க்கலைகள் கற்றிருந்தபடியால் அங்கே ஸ்டன்ட்மாஸ்டராகவே வேலை கிடைத்தது.   நடுநடுவே ஹோட்டலில் வேறு வேலை பார்த்து அப்பா அம்மாவுக்கு தொல்லை தராமல் இருந்தார். ஆனாலும்,செய்கிற ஸ்டன்ட்களில் உயிரைக்கொடுத்து செயல்பட்டார். வில்லி சான் என்பவரின் கவனம் திரும்பியது. நாயகனாக நடிக்கும் ' 'fist of fury' படத்தின்   வாய்ப்பு ஒரே ஒரு டெலிகிராம் மூலம் வந்து சேர்ந்தது.

 
சுயத்தை நம்பு :
ஹாங்காங்கில் சில படங்களில் நடித்தாலும் அவை பெரிதாக ஓடவில்லை. யோசித்து பார்க்கையில் தன்னுடைய திறமையை முழுமையாக இயக்குனர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று அவருக்கு புரிந்தது. ஆக்ஷன் என்றால் முகத்தை சீரியஸ் ஆகவே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் உடைத்து அதில் நகைச்சுவையை புகுத்தினார். தன்னுடைய ஐடியாக்களை படத்தில் இணைத்து நடிக்க பாக்ஸ் ஆபிஸ் ஹிட்கள் குவிந்தன.

உண்மையை சொல் ! உயர்ந்து நில் :
ஆரம்ப காலத்தில் போர்னோ படத்தில் ஜாக்கி நடித்தார் என்று கிசுகிசுக்கப்பட்ட பொழுது ,"ஆமாம் ! வாய்ப்புகள் தேடிக்கொண்டு இருந்த பொழுது அப்படி படத்தில் நடிக்கவே செய்தேன். அதில் எனக்கு வருத்தமொன்றும் இல்லை." என்று சொன்னார் ஜாக்கி. அவரின் ஆங்கிலம் சகிக்கலை என்று விமர்சகர்கள் எழுதிய பொழுது ,"அதுவும் சரியே ! ஸ்டன்ட் செய்வதை விட ஆங்கிலம் பேசுவது கடினமான ஒன்றே !" என்று ஒப்புதல் தந்தார் ஜாக்கி !

பிடிக்காவிட்டாலும் காத்திரு :

ரஷ் ஹவர் எனும் அமெரிக்க படத்தில் நடித்தார் ஜாக்கி சான். அமெரிக்காவின் கதை சொல்லும் பாணி,அவர்களின் நகைச்சுவை எதுவுமே பிடிக்காமலே அப்படத்தில் நடித்திருந்தார். அடுத்த படம் அதே சீரீசில் வந்த பொழுது நல்ல சம்பளம் என்று நடிக்க ஒப்புக்கொண்டார். "எனக்கு பிடிக்கவில்லை தான் ; அதற்காக வருகிற வாய்ப்பை கைவிட நான் முட்டாள் இல்லை !" என்று பிற்காலத்தில் சொன்னார் அவர்.  

உடைவது உன்னதம் பெறவே ! :

இடுப்பு எலும்பு உடைந்து இருக்கிறது,முகமே சின்னாபின்னம் ஆகியிருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்கள் கையெடுத்து கும்பிட்டு அனுப்புகிற அளவுக்கு எல்லா பாகமும் காலி ஆகி இருக்கிறது ஜாக்கி சானுக்கு. ஒரு முறை மண்டையோட்டில் அடிபட்டு எட்டு மணிநேர போராட்டமே அவரை மீட்டது. அந்த ஓட்டையை செயற்கை பூச்சின்  மூலம் அடைத்துக்கொண்டு நடிக்க அவர் மீண்டும் வந்த பொழுது பலருக்கு நெஞ்சடைத்தது.

வழிகளைத் தேடாதே ! உருவாக்கு :
போலீஸ் ஸ்டோரி படத்தில் இவருடன் நடிக்க வந்த ஸ்டன்ட் ஆட்கள் அநியாயத்துக்கு அடிபட்டு நடிக்கவே மறுத்தார்கள். வேறு வழியே இல்லை என்று எல்லாரும் கை விரித்த பொழுது தானே ஸ்டன்ட் பயிற்சி பள்ளி ஆரம்பித்து ஆட்களை உருவாக்கினர் ஜாக்கி. அவர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு முழு மருத்துவ செலவை அவரே ஏற்றுகொள்ள படம் அதிவேகத்தில் உருவானது.

வெல்லும் வரை விடாதே  :
டிராகன் லார்ட் படத்தில் ஜியான்ஜி கேம் பற்றிய ஒரு காட்சியில் ஜாக்கி எதிர்பார்த்தது போல காட்சி அமையவே இல்லை. எத்தனை டேக்குகள் எடுத்து அந்த காட்சியை ஓகே செய்தார் அவர் தெரியுமா ? மூச்சைப்பிடித்து கொள்ளுங்கள் :  2900 !

சொந்த காலில் நில் மகனே ! :
தன்னுடைய பல நூறு கோடி சொத்துக்கு தன் மகன் வாரிசில்லை என்பதில் தெளிவாக இருக்கிறார் ஜாக்கி. " அவன் சம்பாதித்து வாழட்டும். நான் ஈட்டியவை அறக்காரியங்களுக்கு பயன்படட்டும் !" என்று சொல்கிற ஜாக்கி முழுச்சொத்தையும் அந்த மாதிரி பணிகளுக்கே எழுதி வைக்க போவதாக அறிவித்திருக்கிறார். தன்னுடைய பிள்ளையை இளமைக்காலத்தில் ராணுவத்துக்கு அனுப்பி பண்பட வைத்தார் !  

பாணியை மாற்று ! :
பல வருட காலமாக ஆக்ஷனில் கலக்கிக்கொண்டு இருந்த ஜாக்கி அப்படிப்பட்ட படங்களில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். "எனக்கு இப்படிப்பட்ட படங்களில் இனிமேல் நடிக்க முடியாது ! வயதாகி விட்டது. நான் வெறும் ஆக்சன் ஸ்டார் மட்டுமில்லை ; நான் ஒரு உண்மையான நடிகன் என்று நிரூபிக்க விரும்புகிறேன். என் மீது இருக்கும் இமேஜை உடைக்கவே ஆசை. ஆசியாவின் ராபர்ட் டி நிரோ என்று பெயர் எடுக்க ஆசை எனக்கு ! என்னால் நடிக்கவும் முடியும். அதை சீக்கிரமே காண்பீர்கள் !" என்றிருக்கிறார் அவர். அது தான் ஜாக்கி சான் !
வெல்லும் வரை விடாதே :
டிராகன் லார்ட் படத்தில் ஜியான்ஜி கேம் பற்றிய ஒரு காட்சியில் ஜாக்கி எதிர்பார்த்தது போல காட்சி அமையவே இல்லை. எத்தனை டேக்குகள் எடுத்து அந்த காட்சியை ஓகே செய்தார் அவர் தெரியுமா ? மூச்சைப்பிடித்து கொள்ளுங்கள் : 2900 !

சொந்த காலில் நில் மகனே ! :
தன்னுடைய பல நூறு கோடி சொத்துக்கு தன் மகன் வாரிசில்லை என்பதில் தெளிவாக இருக்கிறார் ஜாக்கி. ” அவன் சம்பாதித்து வாழட்டும். நான் ஈட்டியவை அறக்காரியங்களுக்கு பயன்படட்டும் !” என்று சொல்கிற ஜாக்கி முழுச்சொத்தையும் அந்த மாதிரி பணிகளுக்கே எழுதி வைக்க போவதாக அறிவித்திருக்கிறார். தன்னுடைய பிள்ளையை இளமைக்காலத்தில் ராணுவத்துக்கு அனுப்பி பண்பட வைத்தார் ! 

பாணியை மாற்று ! :
பல வருட காலமாக ஆக்ஷனில் கலக்கிக்கொண்டு இருந்த ஜாக்கி அப்படிப்பட்ட படங்களில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். “எனக்கு இப்படிப்பட்ட படங்களில் இனிமேல் நடிக்க முடியாது ! வயதாகி விட்டது. நான் வெறும் ஆக்சன் ஸ்டார் மட்டுமில்லை ; நான் ஒரு உண்மையான நடிகன் என்று நிரூபிக்க விரும்புகிறேன். என் மீது இருக்கும் இமேஜை உடைக்கவே ஆசை. ஆசியாவின் ராபர்ட் டி நிரோ என்று பெயர் எடுக்க ஆசை எனக்கு ! என்னால் நடிக்கவும் முடியும். அதை சீக்கிரமே காண்பீர்கள் !” என்றிருக்கிறார் அவர். அது தான் ஜாக்கி சான் !

இந்திய சினிமாவின் தந்தை பால்கே


பிப்ரவரி 16: தாதா சாகேப் பால்கே நினைவு தின சிறப்பு பகிர்வு..
 

இந்திய சினிமாவின் தந்தை தாதா சாகேப் பால்கே மறைந்த தினம் இன்று .தாதா சாகேப் பால்கே 1870இல் நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார். ஓவியம், சிற்பம், அகழ்வாராய்ச்சி என பல விஷயம் கற்றவர், ராஜா ரவிவர்மாவிடம் லித்தோகிராப் வரையும் பணியில் ஈடுபட்டார் . பம்பாய் சர்.ஜே.ஜே. கலைப்பள்ளியில் புகைப்படம் எடுக்கும் முறையையும், இயற்கைக் காட்சிகளைக் கொண்டு சித்திரம் தீட்டும் முறையையும் படிப்படியாகக் கற்றார்.

மேஜிக் செய்து வயிற்று பிழைப்பை ஓட்டினார் . அப்பொழுது தான் லூமியர் சகோதரர்கள் கிறிஸ்துவின் வாழ்வு என்கிற படத்தை மக்களுக்கு போட்டு காட்டினார்கள், இங்கே இதைப்பார்த்து தான் பால்கே அசந்து போனார். படம் எடுக்க வேண்டும் என்று மனிதருக்கு ஆர்வம் பற்றிக்கொண்டது.

அந்த படத்தை போல படமெடுக்க வேண்டும் என சினிமா கொட்டகையில் வேலைபார்த்து பல படங்களை பார்த்தார் . படங்கள் பெரும்பாலும் மவுனம் தான் ;இடையிடையே அலுக்காமல் இருக்க நாடக கலைஞர்கள், இசை வல்லுனர்கள் ஆகியோர் உதவுவார்கள். கதையை விளக்கி சொல்வார்கள். அப்படிதான் போய்க்கொண்டு இருந்தது .

சின்ன சின்ன படங்கள் எடுத்து பழகிய பின் ,இவர் இங்கிலாந்துக்கு கப்பலேறி வால்டன் ஸ்டுடியோவில் சினிமா கற்றுக்கொண்டு திரும்பினார் ; அதோடு நில்லாமல் வில்லியம்சன் கேமரா ஒன்றை வாங்கிக்கொண்டு வந்தார் . இன்றைக்கு போல அன்றைக்கு திரைப்படம் எடுப்பது சுலபமான காரியமில்லை . படத்தில் நடிப்பதை பலர் பாவம் என எண்ணினார்கள் . மக்கள் பெரும்பாலும் நாடகங்களில் மூழ்கி இருந்த காலம் அது .பெண்கள் நாடகங்களில் பெரும்பாலும் நடிக்க அனுமதிக்கப்படாமல் இருந்தார்கள் . இவர் படம் பார்த்து பார்த்து பார்வை மங்கி இந்தியா வந்திருந்தார் .

இவர் சாமான்களை விற்று ராஜா ஹரிச்சந்திரா படம் எடுக்க ஆரம்பித்தார். நடிகர்கள் பஞ்சம் உண்டானது ; பெண் வேடத்திற்கு ஆண்களை பிடித்தார். நடிக்க பலர் வீட்டில் பிள்ளைகளை அனுப்ப மறுத்தார்கள் .ஆகவே தான் நடிப்பு பேக்டரி நடத்துவதாக சொல்லி அவர்களை கூட்டி வந்தார் . ஒரே ஆளாக எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம், காஸ்ட்யூம், விநியோகம் எல்லாமே இவர் தான்
. நடிகர்களை அந்த கதாபாத்திரமாகவே ஆக்க ரொம்ப பிரயத்தனப்பட்டார் .

பெண் வேடம் பூண்டவனை சேலை கட்டியே நடமாட விட்டார் ;பெண் போன்ற நளினத்தை அவனிடமிருந்து வெளிக்கொணர்ந்தார். ஸ்திரிபார்ட் நடிகர்களின் நடிப்பு இயல்பாக அமைய வேண்டும் என்பதற்காக அவர்கள் நாள் முழுவதும் சமையல்வேலை மற்றும் வீ‘ட்டுவேலைகள் செய்துவர வேண்டும். எப்போதுமே புடவை கட்டிக் கொண்டுதான் இருக்க வேண்டும், கூந்தல் வளர்த்துக் கொள்ள வேணடும் பெயரைக் கூட மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டார் . தனது ஹிந்துஸதான் பிலிம் கம்பெனி மூலம் பால்கே 75 படங்களை தயாரித்தார் அவர் ;பேசும் படங்கள் வந்ததும் இவரால் தாக்குபிடிக்க முடியவில்லை; நொடிந்து போனார் .

இவரின் மனைவி ஏகத்துக்கும் உதவிகரமாக இருந்தார் .அவரே பல தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக்கொண்டு வேலை பார்த்தார் .கணவர் கேட்ட பொழுதெல்லாம் நகைகளை கொடுத்தார் . பசி வறுமை எல்லாம் வாட்டி எடுத்தன ;வீட்டு சாமான்களை அடமானம் வைத்து ஜீவனம் நடத்தினார் .வறுமையில் நாசிக்கில் கவனிப்பு இன்றி மறைந்து போனார் .அவரை இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்கிறோம் .அவரின் முதல் படம் வந்து நூற்றாண்டு ஆகி விட்டது .அவரின் பெயரால் இந்தியாவின் மிக உயரிய திரை விருது வழங்கப்படுகிறது .

சிவாஜி கணேசன் மற்றும் பாலசந்தர் இவ்விருதை தமிழகத்தில் இருந்து பெற்றிருக்கிறார்கள் .சினிமா வெளிச்சத்தை மக்கள் பார்க்க தன் வாழ்வை இருட்டில் தோய்த்து கொண்ட அவரின் நினைவு நாள் இன்று

சார்லி சாப்ளின் எனும் சரித்திரம் !


துளி மீசை கொண்டிருந்த இருவர் உலகை ஆட்டிப்படைத்தார்கள். ஒருவர் ஹிட்லர்,இன்னொருவர் சாப்ளின். ஒருவர் பத்தாண்டுகளில் காணாமல் போய்விட்டார். இன்னொருவர் காலங்களைக்கடந்து கண்கலங்க வைப்பார் 

அப்பாவும் அம்மாவும் பிரிந்த பொழுது பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு அம்மாவிடம் வந்து சேர்ந்தது .க்ளப்களில் திருமணத்துக்கு முன் பாடிக்கொண்டிருந்த அவர் மீண்டும் பாடப்போன பொழுது குரலே பண்ணிய குறும்புகள் எல்லாரையும் கவர்ந்துவிட்டன. காசுகளை அவர்கள்வீசிய பொழுது அள்ளிக்கொள்ள குனிந்த அந்த நாயகனை வாழ்க்கை தொடர்ந்து குட்டிக்கொண்டு தான் இருந்தது

பிரிந்த பெற்றோர்,துரத்திய வறுமை ,பசி ,தோற்ற காதல்கள் ,மனநலம் குன்றி நின்ற தாய்,கல்வியே கிடைக்காத வாழ்க்கை இவ்வளவும் இருந்தும் அதன் ஒரு சாயல் கூட இல்லாமல் ஸ்க்ரீனில் ரசிகனை சிரிக்க வைத்த நாயகன் அவர் .

மார்க் சென்னெட்டிடம் நடிக்க சேர்ந்து வேகமான படம் எடுத்துக்கொண்டு இருந்தவரிடம் நிதானமான தன் பாணியை காப்பாற்றி கொண்ட இவரின் தனித்துவம்;அன்றைய ஹாலிவூட் நடிகர்களில் அதிக பணம் பெற்ற பொழுதும் ஒற்றை அறையில் வாழ்ந்த எளிமை ,ஒரே வருடத்தில் பன்னிரெண்டு படங்கள் எடுத்து எல்லாவற்றிலும் சமூகத்தின் வலியை சொன்ன சினிமா போராளி !

ஹைட்டியுடன் நிறைவேறாத காதல் ,உலகமே கொண்டாடியும் மனநலம் குன்றிய அம்மாவுக்கு தான் புகழின் உச்சத்தில் இருப்பதை புரிய வைக்க முடியாமல் கதறி அழுத பொழுது அவரின் மனநிலையை நீங்கள் யூகித்து கொள்ளலாம் .

பேசும் படங்கள் உலகை முற்றுகையிட்ட பொழுது மவுனமாக ரசிகனிடம் மவுனப்படங்களின் மூலம் சாதிக்க முடியும் என சவால் விட்டார் .ஒரு அரங்கு கூட கிடைக்காமல் தடுத்தார்கள் .எப்பொழுதும் நிரம்பாத ஹென்றி சி. கோவன் அரங்கு தான் கிடைத்தது ;சிட்டி லைட்ஸ் திரையிடப்பட்டது கூட்டம் அரங்கை தாண்டி அலைமோதியது ; அவரின் மாஸ்டர் பீஸ் என உலகம் கொண்டாடியது .
அரசுகள் கலையின் மூலம் குரல் கொடுக்கும் கலைஞர்களை எதிரியாகவே பார்த்திருக்கின்றன. அதிலும் சாப்ளின் எனும் மகா கலைஞனுக்கு அமெரிக்கா,பிரிட்டன் என்று அவரை நாடுகள் துரத்திக்கொண்டே இருந்தன

வாழ்க்கை முழுக்க அழுகையால் அவரின் அகவாழ்வு நிரம்பி இருந்தது. ஸ்க்ரீன் முன் தோன்றிவிட்டால் அது எதையும் காட்டாமல் சாப்ளின் மட்டுமே தெரிவார். “”நான் மழையில் தான் நடக்கிறேன் ;நான் அழுவது உலகுக்கு அப்பொழுது தான் தெரியாது” என்று சொன்னார் அவர்.

பசி என்றால் என்னவென்று சாப்ளினுக்கு தெரியும்,வறுமை என்பது என்னவென்று அனுபவித்து உணர்ந்தவர் அவர். எப்படி ஒரு நாயை போல தொழிலாளியின் வாழ்க்கை கழிகிறது என்று ஒரு படத்தில் காட்டினார் என்றால் உலகின் தலைசிறந்த
மேதைகள் என கொண்டாடப்பட்ட மக்கள் எழுத்தாளர்களின் எழுத்துக்களை விடாமல் வாசித்தார். அவற்றை திரைக்கு கடத்தினார் அவர்.

தொழிலாளிகளுக்கு நேரும் அநீதிகளை படத்தில் காட்டினார். முதலாளிகளை கிண்டலடித்து மாடர்ன் டைம்ஸ் எடுத்தார் அவர். அதில் எல்லாரும் பேசுவார்கள். சாப்ளின் மவுனமாகவே திரையில் தோன்றுவார். சொந்த மகனின் இறப்பின் வலியைக்கூட திரைப்படமாக எடுக்கும் வித்தை அவரிடம் இருந்தது. அரசாங்கங்களை அவரின் படங்கள் உலுக்கி எடுத்தன. அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து இருந்தாலும் அவர் பிரிட்டன் குடிமகனாகவே இருந்தார். நம்புங்கள்
இன்றைக்கும் ஹவுஸ்புல்லாக ஓடும் அவரின் படங்கள் ஊமைப்படங்கள் அவை பேசிய கதைகள் தான் எக்கச்சக்கம. ஹிட்லரை தி கிரேட் டிக்டேடர் படத்தில் நொறுக்கி எடுத்தார்.

ஹிட்லர் ரஷ்யா மீது பாய்ந்த பொழுது ஜனநாயகம் ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது ; எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் அமெரிக்கா உதவிக்கு போக வேண்டும் என்றார் மனிதர். அப்பொழுதே சந்தேக விதை விழுந்தது. கோர்ட்டில் வழக்கு போட்டு பத்து வருடங்கள் அலைய விட்டார்கள். அடுத்தது அவரின் படங்கள் வேறு அவர் ஏழைகளுக்கு ஆதரானவர் கம்யூனிஸ்ட் என்கிற எண்ணத்தை தீவிரமாக்கின.

அமெரிக்கா நாற்பது வருடங்கள் அவர்கள் தேசத்தில் வாழ்ந்து இருந்தாலும்அவரை மீண்டும் தன் மண்ணுக்குள் இதே தினத்தில் அனுமதிக்க மறுத்தது . அப்பொழுது அவரின் ,”அறச்சிந்தனை களங்கப்பட்டு இருப்பதாகவும் ,அவர் அரசியல் சாய்வு
தன்மை உள்ளவர் “”என்றும் அமெரிக்கஅரசு தெரிவித்தது.சாப்ளின் ,”நான் புரட்சியாளன் இல்லை !மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன் அவ்வளவே !”என்றார்.பின் ஏசுவேஆண்டாளும் அமெரிக்கா போக மாட்டேன் என அவர் தெரிவித்து விட்டு சுவிட்சர்லாந்து தேசத்தில் தங்கிவிட்டார்.

அவரின் ஐரோப்பியாவில் இருந்து தயாரித்த முதல் படத்தை அமெரிக்காவில் வெளியிடவே முடியாத அளவுக்கு அவரை வில்லனாக்கி இருந்தார்கள் ! இறுதியில் இறப்பதற்கு 6 வருடங்கள் முன்பு அவருக்கு சிறப்பு ஆஸ்கர் வழங்கி தன் தவறை ஓரளவிற்கு சரி செய்துகொண்டது அமெரிக்கா. அப்பொழுது அங்கே அரங்கில் இருந்தவர்கள் எழுந்து நின்று பன்னிரெண்டு நிமிடங்கள் கைதட்டினார்கள்.

தி கிரேட் டிக்டேடர் படத்தில் அவர் எத்தகைய உலகத்தை கனவு கண்டார் என்று பேசியிருப்பார் :

ஹான்னா ! நான் பேசுவது உனக்கு கேட்கும் என்று நினைக்கிறேன். மேகங்கள் விலகி சூரியன் இருட்டை விரட்டும் பேரொளியோடு உதிக்கும் அந்த புத்துலகு. வெறுப்பு,பேராசை,மிருகத்தனங்களை கடந்து மனிதர் எழப்போகும் கருணை உலகம் அது. ஒவ்வொரு ஆன்மாவுக்கு சிறகு முளைக்கட்டும். அவன் பறக்கட்டும் . அவன் வானவில்லை நோக்கிச் செல்வான். அந்தப் பயணம் அவனை நம்பிக்கையின் வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும். ஒளிமயமான மாட்சிமை மிகுந்த எதிர்காலம் உனக்கும் எனக்கும் நமக்கும் உரியதாகும்

சாப்ளி நினைவு தினம் இன்று ! 

சினிமா மகாராஜா ஸ்பீல்பெர்க்


ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் டிசம்பர் 18 ,1946 அன்று சின்சினாட்டி நகரில் அமெரிக்காவில் பிறந்தார்.அப்பா கணினி தயாரிப்பில் ஈடுபட்ட மின்னியல் பொறியியலாளர்,அம்மா உணவு விடுதிகளில் பியானோ வாசிப்பாளர் ஆக இருந்தார். ஸ்பீல்பெர்க் அப்பா செல்லம்.அப்பா தன் உடைந்த ஸ்டில் காமிராவை அளித்தது தான் இவர் வாழ்வில் மிகப்பெரிய உந்துதல்.

பள்ளிக்காலத்தில் எட்டுகுட்டி குட்டி படங்களை எடுத்த அனுபவம் உண்டு.இந்த படங்களை வீட்டில் நண்பர்களுக்கு திரையிட்டு காண்பிக்க இருபத்தைந்து சென்ட் வாங்கிக்கொண்டு,தங்கையின் தயாரிப்பில் பாப் கார்னை படத்தின்போது விற்றும் ஜாலியாக இளமைக்காலங்களை கழித்தவர்.ஆனால் எடுத்த படங்கள் எல்லாம் துப்பாக்கி சூடு,போர் என த்ரில் ஆனவை .

தெற்கு கலிபோர்னியா நாடக கல்லூரியில் விண்ணப்பம் போட்டு நிராகரிக்கப்பட்டது.மனம் தளராமல் கலிபோர்னியா மாகாண பல்கலையில் சேர்ந்தார்.ஆனால் அங்கேயும் தொடர்ந்து படிக்கவில்லை,சினிமா ஆர்வம் உந்தித்தள்ள உலகப் புகழ் பெற்ற யுனிவர்சல் ஸ்டுடியோவில் சம்பளம் வாங்காத எடிட்டிங் துறை மாணவராக சேர்ந்து கொண்டார்.ஒரு நாள் கூட விடுமுறை இல்லாத வேலை அது.

யுனிவர்சல் ஸ்டுடியோவுக்காக ஆம்ப்ளின் என்கிற குறும்படத்தை இயக்கியது தான் வாழ்வின் முதல் திருப்புமுனை.இருபத்து ஆறு நிமிடம் ஓடும் இப்படம் கவலைகள் இல்லாத ஒரு ஹிப்பி இளைஞன் ஒரு பெண்ணோடு பாலைவனத்தை கடப்பதை நகைச்சுவையாக வசனமே இல்லாமல் பின்னணியில் கிடார் இசையை கொண்டு மட்டும் சொல்லும்.இது பலவேறு விருதுகளை ஸ்பீல்பெர்க் பெற உதவியது.

ரொம்பவும் கூச்சசுபாவம் உள்ளவர்.பெரும்பாலும் நண்பர்கள் இல்லாதவர். தன் இளமைக்காலத்தில் தந்தை மற்றும் தாய் விவாகரத்து பெற்று பிறந்ததன் தாக்கமும் ,ஒரு மூத்த அண்ணன் இல்லையே என்கிற ஏக்கமும் தான் உலக புகழ் பெற்ற ஈடி படம் எடுக்க உந்துதல் எனவும் சொன்னார்.

கடுமையாக தன் படங்களுக்கு உழைப்பார்.ஒவ்வொரு படமும் ஒரு மேஜிக்!அப்படி தான் பார்க்கிற ரசிகர்கள் உணரவேண்டும் என்பார்.அதிலும் குழந்தைகளுக்கான படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம் !அப்படி எடுத்த படங்கள் தான் ஜுராசிக் பார்க்,ஈடி,டின்டினின் சாகசங்கள் போன்றவை.

புத்தகங்கள் படிப்பதை விரும்பாதவர். நன்றாக உற்று கவனிப்பார்.பலபடங்களை ஒரே வாரத்தில் பல முறை பார்த்தும் விடுவார்.கதை சொல்லி குழந்தைகளை மகிழ்விக்கவும் செய்வார்.ஜாஸ் கதையை படிப்பதற்கு முன் வரை அது ஏதோ பல் சம்பந்தப்பட்ட புத்தகம் என்றே நினைத்துக்கொண்டு இருந்தார்.படித்து முடித்ததும் உடனே படம் எடுக்கலாம் என கிளம்பிவிட்டார்.

வெறும் இல்லாத உலகத்தை காட்டி படத்தை ஒட்டி விடுகிறார் என பிறர் சொன்னதும் சிண்ட்லர்ஸ் லிஸ்ட் எனும் ஹிட்லரிடம் இருந்து ஆயிரம் யூதர்களை காப்பாற்ற போராடும் சிண்ட்லர் எனும் மனிதனின் கதையை கருப்பு வெள்ளையில் சொல்லி கண்ணீர் வரவைத்தார் !அந்த படத்திற்காக சிறந்த இயக்குனருக்கு ஆன ஆஸ்கரை பெற்றார் . இப்படத்தின் மூலம் பெறப்பட்ட வருமானத்தை ஷோஆ அறக்கட்டளையை நிறுவி ஹிட்லரின் ஹோலோகாஸ்ட் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து விட்டார் .

ட்ரீம்வொர்க்ஸ் எனும் குழந்தைகளுக்கான அனிமேஷன் நிறுவனத்தை நிறுவி உள்ளார்.இவருக்கு ஏழு குழந்தைகள் .ஒரு அனிமேஷன் படத்தை தயாரிப்பதற்கு முன் தன் பிள்ளைகளிடம் கதைன் சொல்லி அவர்கள் கண்கள் ஒளிர்கிறதா எனபார்த்த பின்பே அதை படமாக எடுக்க சம்மதம் சொல்வார் .அதை ஆறு வருடங்களுக்கு முன்விற்று விட்டார்.

“திரைய ரங்கில் படம் பார்க்கிற ஐநூறு ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தை மாதிரி மாறி என் படத்தை ரசிக்க வேண்டும் அது தான் என் குறிக்கோள்” என சொல்கிற நம்பிக்கைக்காரர்.

– பூ.கொ.சரவணன்

ரஜினி மனிதரா ? கடவுளா ? முதல்வரா ?


ரஜினி என்பவர் ஒரு நடிகர். பலருக்கு அவர் கடவுளைப்போன்றவர் ; கருப்பாக,நம்மைப்போன்ற ஒரு சராசரியாக தோற்றமளிக்கும் ஒரு நபர் கோடிக்கணக்கானவர்களின் நாயகனாக மாறமுடியும் என்கிற அற்புதத்தை அவர் நிகழ்த்திக்காட்டினார். கோடிகளில் சம்பாதித்துவிட்டு வெறுந்தரையில் படுத்துக்கொண்டும்,அமைதியைத்தேடி எங்கெங்கோ பயணிக்கிற அளவுக்கு எளிமையும் அவரிடம் உண்டு என்பதும் அவரிடம் ரசிக்கக்கூடிய பண்பு. ரஜினியின் வெற்றியை குருட்டு அதிர்ஷ்டம் என்று எப்பொழுதும் சொல்லிவிட முடியாது. அது ஒரு பிராண்டுக்கான மார்க்கெட்டிங்கை போல கச்சிதமாகவே நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. 

ரஜினி சினிமாவில் ஒரு உச்சம். இந்தியாவில் வேறு எந்த நடிகனை விடவும் அதிகம் கொண்டாடப்படுகிற,ரசிக்கப்படுகிற ஆளுமை அவர். அதே சமயம் அதைத்தாண்டி ரஜினியைப்பற்றி பேச வேண்டி இருக்கிறது. ரஜினி வெறும் நடிகராக இங்கே பார்க்கப்படுவதில்லை. அவரை நம்பி தலைவா என்று பின்னாடி போகிற கூட்டம் அநேகம். அரசியலுக்கு அவர் வந்தால் தங்களின் எல்லா சிக்கல்களும் தீர்ந்துவிடும் என்று நம்புகிற கடைசி சீட் ரசிகன் இன்னமும் இருக்கத்தான் செய்கிறான், காரணம் தமிழ்நாட்டில் மஞ்சள் வெளிச்ச நாயகர்கள் வெறும் சினிமா ஹீரோக்கள் மட்டுமில்லை. வாழ்வின் பிரிக்கமுடியா அங்கம். அவர்களின் முகத்தில் விழித்தால் தான்,அவர்களின் வாழ்க்கையின் சோகங்களுக்கு கண்ணீர் விட்டால் தான் பொழுதே முடியும் பலருக்கு. 

ஜாக்கிசானுக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்குகிறவர் என்று கொண்டாடப்படுகிற அவர் ஒழுங்காக வரி கட்டினாரா என்று என்றாவது கேட்டிருக்கிறோமா ? இவருக்கு இது கொடுத்தார்,அங்கே இது செய்தார்,அது செய்தார்,நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி தருவதாக சொன்னார்,ஏன் எங்க தலைவரை பார்த்து மட்டும் இந்த கேள்வி என்பதையெல்லாம் தாண்டி பதில் தேடினால் கருப்பாக பல கோடிகள் வாங்குகிற ஒரு சராசரி நடிகர் தான் அவரும். அதேபோல தன்னுடைய படத்தை காப்பாற்றிக்கொள்ள பக்கத்து மாநிலத்தவரிடம் மன்னிப்பு கேட்கும் இயல்பான சமரசங்களும் அவரிடம் உண்டு. அவர் ஒரு அமுத சுரபி. அவருக்கு எழுபது வயதானாலும் அவரைப்பற்றி பலர் கவலைகொள்வார்கள். ரஜினி முகம்காட்டினால் அதற்கு வருகிற பிசினஸ் சில நூறு கோடிகளில் ! ஸ்ட்ரெட்ச்சரில் படுத்துக்கொண்டே நடித்தால் கூட போதும் என்கிற அளவுக்கு பாசமானவர்கள். 

ரஜினியின் அரசியல்பார்வை தான் என்ன ? அது வெகு தட்டையானது என்றே பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. மதவாதத்தை சத்தமே இல்லாமல் தூக்கிப்பிடிக்கும் ஒரு கூட்டம் தான் அவரின் ஆதர்சம். “அவங்க வந்தா எல்லாம் சரியாகிடும் !” என்று தொடர்ந்து சொல்லும் மாஸ் ஹிஸ்டீரியா கூட்டத்துக்கும் அவருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ரஜினிக்கு என்று உண்மையில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிக்கொண்டால் இல்லை என்பதே கசப்பான உண்மை. அவரின் வாய்ஸ் ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்னர் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நீங்கள் காணவேண்டும். அவரின் ரசிகர் மன்றங்களில் இருக்கும் பலருக்கு அரசியல் ஆசை இருக்கிறது,அதற்கு ரஜினி பலியாக வேண்டும் என்பதே அவர்களின் பேராவல். அவரின் ரசிகர் மன்றங்களை விட அவரை பெரிதாக ப்ரொமோட் செய்கிற ஒன்று இருக்கிறது-அது ஊடகம். அவரின் பெயரைப்போட்டால் எல்லாம் விற்கும் என்கிற புரிதல் அவர்களுக்கு இருக்கிறது. அதனால் ரஜினி சச்சினைப்போல கடவுள் என்றே அவர்களால் கொண்டாடப்படுவார். ரஜினி தும்மினார் என்பதைக்கூட தலைப்பு செய்தி ஆக்குவார்கள். அவரின் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்வதே ஒரு ஸ்டேட்ஸ் சிம்பள் போலத்தான். 

ரஜினி ஒரு விற்பனைப்பொருள். தொடர்ந்து பலருக்கு காசு தரும் ஒரு பிராண்டின் மார்க்கெட்டிங்கின் அசைக்க முடியா அங்கம் நாமெல்லாம். கூடுதலாக இன்னொன்று.ரஜினி எளிமையாக இருக்கிறார் என்பதைவைத்து வாதம் செய்பவர்களுக்கும்,சாமியார்கள் கொள்ளையடித்தால் என்ன ? நிம்மதி தருகிறார்களே அவர்கள் என்பவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. யார் தான் தப்பு செய்யலை என்பவர்கள் ரஜினியும் தவறுக்குரியவர் என்பதை உணர்ந்து தேவதா விசுவாசம் காட்டாதீர்கள். ரசித்துவிட்டு நகருங்கள்,வெறியனாக இருக்காதீர்கள். பல குடும்பங்கள் இவரை மாதிரி திரை ஆளுமைகளை நம்பி தெருவில் தான் நிற்கிற மாய போதையை இந்த காட்சிஊடகம் உண்டு செய்திருக்கிறது. அதை அப்படியே பத்திரமாக கட்டிக்காக்கிறார்கள். புரிந்துகொள்ளுங்கள் ! ரஜினியின் மீதான எல்லா மரியாதையோடு எழுதப்பட்ட கட்டுரையே இது. ஆக்கப்பூர்வமாக விவாதிக்கலாம். ரஜினியும் மனிதர் என்கிற புரிதலோடு பேசுங்கள். நானும் ரஜினியை ரசிக்கிறேன் அதே சமயம் அது குருட்டு கொண்டாட்டமில்லை