சாவித்திரிபாய் பூலே – கல்விக்கண் திறந்த ஆளுமை


சாவித்திரிபாய் பூலேவின் 125 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்குறிப்பில் இருந்து..

‘வணக்கம். நலமா? என் பெயர் சாவித்திரிபாய் பூலே. என் கதையைச் சொல்கிறேன். இது பல்லாயிரம் பெண்களின் கதை.

என்னுடைய ஊர் சத்தாரா. இப்பகுதியின் அரசர் மூன்றாம் பேஷ்வா பாஜிராவ். ஊர் முழுக்கக் கட்டுப்பாடுகள். கல்வி என்பது பிராமணர்கள் உள்ளிட்ட சாதியினருக்கு மட்டுமே கிடைத்து வந்தது. பெண்கள் நிலைமை மோசம். குழந்தையாக இருக்கும் போதே திருமணம். கணவர் இறந்தால் மொட்டையடித்து ஒதுக்கிவிடுவார்கள். நெருப்பில் தள்ளும் வழக்கமும் உண்டு. படிப்பெல்லாம் சுத்தம். நாங்கள் படித்தால் உருப்பட மாட்டோம் எனச்சொன்னார்கள். ஊரில் பலருக்கும் கடிதம் எழுதுவோம் என்றார்கள். படிக்கிற பெண்ணுடைய கணவரின் சாப்பாட்டில் புழுக்கள் நெளியும். சீக்கிரம் அவர் செத்துடுவார் என்றுகூடச் சொல்வார்கள். நான் சிரித்துக்கொள்கிறேன். எப்படியெல்லாம் ஏமாற்றப் பார்க்கிறார்கள்?

அதை விடுங்கள். என்னுடைய ஊருக்கு போவோம். என்னுடையது விவசாயக் குடும்பம். நான் குளிர்மிகுந்த ஜனவரி மாதத்தில் பிறந்தேன். இளம் வயதில் பள்ளிக்கூடத்தைக் கண்ணில் கூடக் காட்டவில்லை. 9 வயதில் ஜோதிபாய்யோடு திருமணம். புனேவிற்குக் குடிபெயர்ந்தேன்.

அவர் மிஷனரி பள்ளிகளில் கல்வி பயின்றார். எனக்கும் எழுத, படிக்க உதவினார். பல்வேறு கதைகள், அனுபவங்கள். ஒருநாள் பிராமணர் வீட்டுக் கல்யாணம். போன வேகத்திலேயே திரும்பிவிட்டார். ‘நாமல்லாம் சூத்திரனுங்களாம். தீட்டாயிடுச்சாம். விரட்டிவிட்டுட்டாங்க’ எனப் புலம்பினார். எல்லாரையும் படிக்க வைக்க வேண்டும் என அவருக்குக் கனவு. சாதிப்பாகுபாடுகள் படிப்பாலும், விழிப்புணர்வாலும் தான் ஒழியும். நான் மேலும் படித்தேன். ஜோதிபாய் உடனிருந்தார், உற்சாகப்படுத்தினார். அவருடைய நண்பர்களும் பாடம் சொல்லிக்கொடுத்தனர். எனக்குப் படிப்பது சுகமானதாக இருந்தது. இன்னமும் கற்க வேண்டுமென ஆசையாக இருந்தது. ஃபராரி, மிட்செல் எனும் இரண்டு ஆங்கிலேய ஆசிரியைகள் அன்போடு உதவினார்கள். நான் படித்ததைப் பலருக்கும் சொல்லித்தரும் நேரம் எப்போது வரும்?

ஜோதிபாய் பெண்களுக்கான பள்ளியைத் துவங்கினார். ஒரே எதிர்ப்பு. பள்ளிக்கூடத்திற்கு வெளியே ‘ஒழிஞ்சு போங்க’னு கோஷம் போடுவார்கள். என் மாமனாரை தூண்டி விட்டார்கள். ‘நீ எக்கேடோ கெட்டுப்போ. இவளை ஏன் படிக்க வைக்கிறே’ எனக்கேட்டார். இதையெல்லாம் நிறுத்திக்கொள்ளுங்கள், இல்லையென்றால் நடுத்தெரு என்றார். நானும், ஜோதிபாயும் நடுத்தெருவை தேர்ந்தெடுத்தோம். எங்களுக்குள் கல்விக்கனல் எரிகிறது. அது ஒரு வீட்டிற்குள்ளேயே அணைந்து விடலாமா? ஆகாது.

எங்கள் பள்ளிக்கு வந்துகொண்டிருந்த ஒரே ஆசிரியரையும் மிரட்டினார்கள். வேறு வழியில்லை. என்னையே பாடம் நடத்தச் சொன்னார் ஜோதிபாய். பள்ளிக்கு நடந்து போவேன். என் மீது சாணி, அழுகிய காய்கறிகளை வீசுவார்கள். சில நாட்கள் வெற்றிலைப் போட்ட எச்சில் கூடப் பரிசாகக் கிடைத்தது. முதலில் பயமாக இருந்தது. பள்ளியின் பெண் குழந்தைகளின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. பயமெல்லாம் பாசத்தின் முன் பறந்தது. அழுக்குகளை வீசியவர்களிடம் சொன்னேன், “என்னுடைய தங்கைகளுக்குப் பாடம் சொல்லித் தரப்போகிறேன். இந்தக் குப்பைகள் எல்லாம் எனக்கான வாழ்த்து மலர்கள். இறைவன் உங்களை ரட்சிக்கட்டும்’.

என் அண்ணன் என்னைக் கடிந்து கொண்டான். ஏன் இந்த வேண்டாத வேலை என்றான். நான் சொன்னேன்,
“படிக்காமல் இருப்பது முழு மிருகத்தனம். அறிவைப் பெறுவதாலே பிராமணர்கள் மேல்நிலையில் உள்ளார்கள். கல்வியும், அறிவும் அற்புதமானது. கற்றவர் பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் எனப்பட்டாலும் அவரே உயர்ந்தவர். நாங்கள் தீண்டப்படாதோர் கற்க வேண்டும் என உழைக்கிறோம். அதன்வழியே விடுதலை கிட்டும். என் கணவர் பிராமணர்களை எதிர்த்துக்கொண்டு ஏன் தீண்டப்படாதவர்களுக்குக் கற்பிக்கிறார்? அவர்களும் சமமான மனிதர்கள். மானமிகு வாழ்க்கை எல்லாருக்கும் ஆனது. அதற்குக் கல்வி கற்க வேண்டும். அதற்காகவே நானும் கற்பிக்கிறேன். இதிலென்ன தவறு ? நாங்கள் சிறுமிகள், பெண்கள், மகர்கள், மங்குகள் என அனைவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்ப்போம்’ என்றேன்.

ஆரம்பத்தில் பெரிதாகப் பெண்கள் படிக்ற வரவில்லை. இத்தனைக்கும் எங்கள் பள்ளியே இந்தியர்கள் நடத்தும் முதல் பெண்கள் பள்ளி. நானும், ஜோதிபாயும் ஊர் ஊராகச் சுற்றினோம். படிக்க வரும் பிள்ளைகளுக்குப் பரிசுப்பணம் தந்தோம். கிராமம், கிராமமாகப் படிப்பின் அவசியம், நன்மைகளை எடுத்துச் சொன்னோம். கல்வியோடு விளையாட்டுகள், கலைகளைப் பேரன்போடு பகிர்ந்தோம். கூட்டம் பெருகியது.

9 ஆசிரியர்கள், 132 மாணவர்கள், 3 பள்ளிகள். அது கனவின் தொடக்கம். 1851, 1852 காலத்தில் தேர்வுகளை நடத்தினோம். கிட்டத்தட்ட திருவிழா தான். பெண்கள் படித்து, தேர்வில் அசத்துவதைப் பார்க்க 3,000 பேர் கூட்டம். அலையில் எழும் சூரியனாய் எங்கள் பெண்கள் மின்னினார்கள்.

‘பூனா அப்சர்வர்’ எனும் பத்திரிகை 1852 -ல் என்ன எழுதியது? ‘ஜோதிபாய்- சாவித்திரிபாயின் பள்ளியில் அரசுப்பள்ளி மாணவர்களை விடப் பத்து மடங்கு அதிகப் பெண்கள் படிக்கிறார்கள். மிக உயர்ந்த கல்வித்தரம். விரைவில் இப்பெண்கள் பெரும் சாதனைகள் புரிவார்கள்’. 50 க்கும் மேற்பட்ட பெண்கள், அனைவருக்குமான பள்ளிகளை நடத்தினோம்.

எங்கள் இருவருக்கும் குழந்தை பிறக்கவில்லை. ஜோதிபாயை இரண்டாம் கல்யாணம் செய்துகொள்ளச் சொன்னார்கள். அதற்கு அவர், ‘குழந்தை பிறக்கலைனா பொண்ணு தான் மலடியா? ஆம்பிள கிட்டயும் பிரச்சனை இருக்கலாமே. பிள்ளை பொறக்கலைனு பொண்டாட்டி வேற கல்யாணம் பண்ணிக்கிட்டா புருஷனுக்கு எப்படியிருக்கும்? என்னால சாவித்திரியை விட்டுட்டு இருக்க முடியாது’ என்றார்.

பல கைம்பெண்கள் நிலைமை கண்ணீரை வரவைத்தது. சொந்தக்கார ஆண்கள் வதைத்தார்கள். பரிதாபமாகக் கைம்பெண்கள் கர்ப்பமானார்கள். அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களைக் காப்பாற்றினோம். 1853-ல் அப்பெண்களை அரவணைக்க இல்லம் துவங்கினோம்.

கையால் நெய்த ஆடைகளை அணிவது வழக்கம். அவை எளிமையான, ஆனால், கம்பீரமான ஆடைகள். இல்லத்தரசிகளுக்கு ஆடை நெய்யக் கற்றுக்கொடுத்தேன். பொங்கல் பண்டிகை அன்று பெண்கள் அமைப்பைத் துவங்கினேன். மாமியார், மருமகள், அம்மா, மகள் என அனைவரும் வந்தனர். ஒன்றாக அமர்ந்து சொந்தக்காலில் நிற்கப் பழகினோம்.

கைவிடப்பட்ட கைம்பெண் ஒருவரின் மகனை தத்தெடுத்துக் கொண்டோம். யஷ்வந்த் எனப் பெயரிட்டு வளர்த்தோம். மருத்துவம் படித்தபின் ஏழை, எளியவர்கள், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குச் சேவை செய்தான் யஷ்வந்த்.

கண்முன் இன்னொரு அநீதி தெரிந்தது. கணவன் இறந்ததும் கைம்பெண்களுக்கு மொட்டையடித்தார்கள். மனைவி இறந்தால் கணவனுக்கு மொட்டையடிக்கிறோமா? ஏன் பெண்ணுக்கு மட்டும் இந்தக் கொடுமை? சவரம் செய்பவர்களை நாடினோம். வேலை நிறுத்தம் செய்யக் கோரினோம். கூடுதல் கூலி வேண்டியோ, சலுகைகள் நாடியோ அல்ல. கைம்பெண்களின் சமத்துவம் நாடி போராட்டம் நிகழ்ந்தது. சவரக்கத்திகள் ஓய்வெடுத்தன. பல கைம்பெண்களின் கண்ணீர் காணாமல் போனது. அந்தச் சவரத்தொழிலாளர்களை நினைக்கும் போதே பெருமிதம் பூக்கிறது.

1877-ம் ஆண்டு. பெரும் பஞ்சம். மக்கள் பசியால் செத்து மடிந்தார்கள். விலங்குகள் இறந்து தரையில் விழுந்தன. பெரும் உணவுப்பஞ்சம். மக்கள் ஊரைவிட்டு வெளியேறினார்கள். ஆறு, குட்டை, குளம் எல்லாம் வற்றின. தவித்த வாய்க்கு தண்ணீரில்லை. மரங்களில் இலையே தென்படவில்லை. வறண்ட நிலம் பாளம், பாளமாய்ப் பிளந்தது. விஷப்பழங்களை உண்டார்கள், சிலர் சிறுநீரை குடித்தார்கள். மக்கள் உணவுக்காக, தண்ணீருக்காக அழுதார்கள், பின், பரிதாபமாக இறந்தார்கள்.

நாங்கள் கிராமம், கிராமமாகச் சுற்றினோம். இயன்றவரை நீரும், சோறும் தந்தோம். கந்துவட்டிக்கார கொடுமைகளைத் தட்டிக்கேட்டோம். ஏழைப்பிள்ளைகள் தங்கவும், கற்கவும் 52 விடுதியோடு கூடிய பள்ளிகள் திறந்தோம்.

1890-ல் ஜோதிபாய் காலமானார். அவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றேன். ஆணும், பெண்ணும் சமம் எனும் தாமஸ் பெய்னின் ‘Rights of Man’ னின் வரிகளை ஜோதிபாய்ச் சொல்லிக்கொண்டே இருப்பார். அதை எண்ணிக்கொண்டு நானே அவரின் உடலுக்குத் தீமூட்டினேன்.

1897 பெரும் பிளேக் நோய். லட்சக்கணக்கான மரணங்கள். மருத்துவர்கள் சாதி பார்த்தார்கள். ஒடுக்கப்பட்ட சூத்திரர்கள், அதி-சூத்திரர்கள் யாருமின்றி இறந்தார்கள். நானும், யஷ்வந்தும் அசரவில்லை. எங்கள் சத்தியசோதக் அமைப்பினரோடு உழைத்தோம். மருத்துவமனைகள் நடத்தினோம். உயிரைப் பணயம் வைத்து போராடினோம். பிளேக் நோயுற்ற மகர் சிறுவன் ஒருவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. நானே தொட்டுத் தூக்கினேன். அவன் உயிரை காப்பாற்றி விட்டோம். களைப்பாக இருக்கிறது. பிறிதொரு நாள் இன்னமும் சொல்கிறேன். ‘

சாவித்திரிபாய் பிளேக் நோய்க்கு எதிரான போரின் போதே வீர மரணம் எய்தினார். ‘கல்வித்தாய்’, ‘இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்’ எனும் பல்வேறு பெருமைகளுக்கு உரியவர். ‘மாசற்ற ரத்தினங்களின் பெருங்கடல்’ எனும் கவிதை நூல் இயற்றினார். அவரின் கவிதை ஒன்று:

உனக்கு நீயே துணை, ஓயாமல் உழை.
கல்வியும், பொருளும் கொண்டு சேர்.
அறிவிழந்தால் அனைத்தும் அழியும்.
கல்விச்செல்வமின்றிக் கால்நடை விலங்கு நாம்.
சோம்பி அமராதே, எழு, கல்வி கற்றிடுக.
ஒடுக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள் துயர்துடை.
கற்கும் பொன் வாய்ப்பினை பற்றிக்கொள்.
ஆகவே, கற்றிடுக, சாதிச்சங்கிலிகளை உடைத்தெறிக.
பிராமணர்களின் புனித நூல்களை வேகமாகத் தூக்கியெறிக.