இந்தியாவை எதிர்பார்த்தல் பாகம்-2


சேகர் குப்தா நூலின் அறிமுகத்தின் இரண்டாவது பகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வீழ்ச்சி, மோடியின் எழுச்சி, அன்னா ஹசாரே முதல் ஆம் ஆத்மி வரையிலான பகுதிகளைக் காண்போம்.

இந்திராவின் காலத்தில் இடதுசாரிகளும், இடதுசாரிப் பார்வையும் இந்தியாவின் தொழில்துறையை, நாட்டைப் பாதித்தது என்பது குறித்துக் கூர்மையான விமர்சனங்களை முன்வைக்கிறார். 97 சதவிகித வருமான வரியும், 31 சதவிகித பண வீக்கமும் தான் இடதுசாரிகளின் சாதனை என்று போட்டு துவைக்கிறார். எமெர்ஜென்சியின் பொழுது இந்திராவின் பக்கம் மூச்சே விடாமல் நின்ற வரலாறும் இவர்களுக்கு உண்டல்லவா என்று நியாயமான கேள்வியை எழுப்புகிறார்.

இரண்டாவது ஆட்சிக்காலத்தில் எப்படிக் காங்கிரஸ் தன்னுடைய சீரான நிர்வாகத்தை இழந்தது என்பதற்குப் பல்வேறு உதாரணங்கள் தருகிறார். ஆர்டில்லரி துப்பாக்கிகளை 23 வருடங்களாக வாங்காமல் இருப்பதையும். கையெழுத்து கூட இல்லாமல் சிபிஐ இயக்குனர் வழங்கிய ஆயுத விற்பனையாளர்கள் குறித்த துண்டுச்சீட்டு புகாரை வைத்துக்கொண்டு ஆயுத கொள்முதலையே மறந்திருப்பதையும் சாடுகிறார். மன்மோகன் சிங்கை 39/3 என்கிற நிலையில் களமிறங்கும் திராவிட் என்று குறிப்பிடுகிறார். ஒரு நாளைக்குப் பதினெட்டு மணிநேரம் உழைத்தும், அவரின் அலுவலகத்துக்கு உண்மையான அதிகாரங்கள் இல்லாததால் அவரின் செயல்பாடுகள் வீணாகப் போய்விட்டன. வாஜ்பேயி வலுமிகுந்த பிரதமர் அலுவலகத்தை வைத்துக்கொண்டு ஆறு மணிநேரம் மட்டுமே உழைக்க வேண்டியிருந்தது என்று சுட்டிக்காட்டுகிறார்.

பிரதமர் அலுவலகத்தின் சீர்திருத்தங்களைச் சோனியா காந்தி தலைமையிலான சட்டத்துக்குப் புறம்பான தேசிய ஆலோசனை குழு தடுத்தது. முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதல் அரசுக்கு எதிரான பார்வையையே எப்பொழுதும் கொண்ட தீர்வுகள் அற்ற சமூகச் சேவகர்கள் குழு ஆகியோர் அடங்கிய இக்குழு அரசை முடக்கிப் போடுவதில் முக்கியப் பணியாற்றியது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனின் பேட்டி கண்ட அனுபவத்தைக் குப்தா சொல்வதில், ‘ஐயோ! ஐயோ’ என்கிற கடுப்பு மிகுந்த நகைச்சுவை மிளிர்கிறது. காந்தியை கோட்சே கொல்லவில்லை, நேரு தான் பின்னால் இருந்து சுட்டார். அப்பொழுது தான் அவர் பிரதமராகத் தொடரமுடியும் என்பதே காரணம். இதற்கு ஆதாரம் ஒரு ஆந்திர பிரதேச அதிகாரியி நினைவலைகளில் உள்ளது. அவரின் பெயரும், புத்தகத்தின் பெயரும் மறந்துவிட்டது என்று சுதர்சன் காமெடி செய்கிறார். உச்சபட்சமாகப் பாபர் மசூதியை கரசேவகர்கள் இடிக்கவில்லை, உள்ளே இருந்து குண்டு வைத்துக் காங்கிரஸ் தான் தகர்த்தது என்ற தருணத்தில் சேகர் குப்தா தலையில் அடித்துக்கொண்டாரா தெரியவில்லை.

முதலீட்டு கமிஷனின் தலைவராக இருந்த ரத்தன் டாடா நிரந்தரத் தொடர்புகளுக்காக நீரா ராடியாவை நாடவேண்டி இருந்தது என்றால் அரசும், முதலாளிகளும் எப்படித் தொடர்பற்றுக் கிடக்கிறார்கள் எனப் புலனாகிறது என்று கவலைகொள்கிறார். ரகுராம் ராஜன் தன்னுடைய ‘FAULTLINES’ நூலில் இந்தியாவின் புதிய கோடீஸ்வரர்கள் ஐடி, உற்பத்தி துறைகளில் இருந்து வராமல் அரசை அதிகமாக வளைக்கும் வாய்ப்புள்ள, அரசியல்வாதிகள் செல்வாக்கு செலுத்தும் கட்டுமானம், ரியல் எஸ்டேட், சுரங்கத்துறை ஆகியவற்றில் இருந்து வருவதைச் சுட்டி நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை, தெளிவான சட்ட அமலாக்கம் என்று பல முனைகளில் இயங்க வேண்டியதன் தேவையை அழுத்திப் பதிகிறார்.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், கடன் தள்ளுபடி தான் காங்கிரசுக்கு வெற்றியை வாங்கித் தந்தது என்றால் கொடிய வறுமை மிக்கப் பீகார், ஒரிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் ஏன் எண்பத்தி ஆறு இடங்களில் 19 இடங்களைக் காங்கிரஸ் வென்றது என்றும், BIMARU மாநிலங்களில் 48/208 என்று மட்டுமே காங்கிரஸ் ஏன் வெல்லமுடிந்தது என்றும் கேள்விகள் எழுப்புகிறார். வன உரிமைகள் சட்டம் தான் வெற்றியை தந்தது என்றால் பழங்குடியினரின் நாற்பத்தி ஏழு தொகுதிகளில் ஏன் 19-ல் மட்டும் காங்கிரஸ் வென்றது? நகர்ப்புறங்களே காங்கிரஸ் கட்சிக்கு பெரிய வெற்றியை தந்ததை அவர் சுட்டிக்காட்டி பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்று அறிவுறுத்துகிறார்.

இஸ்லாமியர்கள் எப்பொழுதும் பாஜகவுக்கு எதிரானவர்கள் என்று காங்கிரஸ் கருதுவதை ஏற்க முடியாது. பாஜக தன்னுடைய மந்திர், மோடி, இந்துத்வா ஆகியவற்றைக் கைக்கொள்ளாமல் வளர்ச்சியை முன்னிறுத்தியே பீகார் சட்டசபை தேர்தலில் 91/102 எனக் கலக்கியதை சுட்டிக்காட்டுகிறார். சமச்சீரான வளர்ச்சி அற்புதங்களைச் செய்யக்கூடும்.

மன்மோகன் சிங் என்கிற நைட்வாட்ச்மேன் விக்கெட் விழாமல் ஆடிவிட்டு, பின்னர் முக்கிய மட்டையாளராகத் தாங்கள் கருதும் ராகுல் காந்தியை களமிறக்கலாம் என்று காங்கிரஸ் எண்ணுவது எப்பொழுதும் சாத்தியமாகாது என்று சரியாகக் கணிக்கிறார். எஸ்.எம்.கிருஷ்ணாவை ஆளுநர் ஆக்குங்கள், இந்தி பகுதியில் இருந்து எந்தப் பெருந்தலையும் காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் இருக்கவில்லை என்பதை ஷீலா தீட்சித்தை கொண்டுவந்து சரி செய்யுங்கள், ராஜ்ய சபாவில் தொடர்ந்து நான்கு முறை பதவி பெற்றுக்கொண்டிருக்கும் குழப்பத்துக்கும், ஜால்ராவுக்கும் பெயர் போனவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள் என்று அவர் சொன்னதை எதையாவது காங்கிரஸ் கேட்டிருக்கலாம்.

ராபர்ட் ப்ளாக்வெல் என்கிற அமெரிக்கத் தூதர் சொன்ன கதையை அமைச்சர்கள் செயல்படாமல் போய் அவர்களின் இடத்தை எடுத்துக்கொண்டஅதிகாரிகள் குறித்து விளக்க சொல்கிறார். பொது மருத்துவர்களைப் போன்ற அதிகாரிகள் அடுத்த நாள் சிறப்பு மருத்துவர் வரும்வரை முதலுதவியே தரவேண்டும், சிறப்பு மருத்துவர் ஒளிந்துகொண்டால் நோயாளி பொது மருத்துவரிடமே மாட்டிக்கொள்ள வேண்டியது தான் என்று கிண்டலடிக்கிறார்.

இந்திய வங்கித்துறை ஐந்து லட்சம் கோடியை எரிசக்தி துறையில்முடக்கிவிட்டு மீட்கமுடியாமல் இருப்பதையும், இரும்பு, நிலக்கரி ஆகியவற்றை வெட்டி எடுக்கப் போடப்பட்ட தொடர் தடைகளால் ஒரு லட்சம் கோடி எஃகு உற்பத்தி முடங்கியதையும், ஆ.ராசா, தயாநிதி மாறன் போன்ற ஒழுங்கான கொள்கை தெளிவில்லாத ஆட்களால் மூன்று லட்சம் கோடி பணம் தொலைதொடர்பு துறையில் கடனாக இருப்பதையும், பத்து லட்சம் கோடி கடன்களை அரசின் மெத்தனமான கொள்கையால் வங்கிகள் இழக்க கூடிய நிலை நிலவுவதையும் குட்டிக்காட்டுகிறார்.

தேசிய ஊரக நலத்திட்டத்தில் பல கோடி ஊழலுக்குக் காரணமான குஷ்வாகா எனும் பிஎஸ்பி அமைச்சரை பாஜக கட்சியில் சேர்த்துக் கொண்டதை சுட்டிக்காட்டி பெரிய திட்டங்கள் இல்லாமல் திணறுகிறது என்று கருதுவதாகச் சொல்கிறார். அமித் ஷா பெரிய வெற்றியை பெற்றுத்தர மாட்டார் என்றும் அடித்துப் பேசுகிறார்.

கூட்டாட்சி தத்துவத்தில் பெருமளவு நம்பிக்கை கொண்ட வாஜ்பேயி எல்லா மாநில முதல்வர்களையும் கொள்கைகள் சார்ந்து ஒன்றாக அமரவைத்து பேச முயன்று தோற்றதை சொல்லி காங்கிரஸ் தலைமையிலான அரசு மாநிலங்களை மதிப்பதை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். ராபர்ட் வதேராவை காக்க காங்கிரஸ் முயல்வதை அத்தனை அங்கதத்தோடு சேகர் குப்தா சாடுவதைக் கட்டுரையாக வாசிக்கவேண்டும்.

நிர்பயா வன்புணர்வு நிகழ்ந்த பொழுது கண்ணீரோடு கூடிய பல்லாயிரம் மக்களிடம் பேச ஏன் ஒரு அமைச்சரோ, எம்பியோ, முதல்வரோ எட்டிப்பார்க்காத அளவுக்கு மக்களிடம் இருந்து ஏன் காங்கிரஸ் துண்டித்துக்கொண்டது என்று கேட்கிறார். கோபக்கார மக்களையும், காவல்துறையையும் சந்திக்கவிட்டுவிட்டுச் சுகமாக வேடிக்கை பார்ப்பதுதான் ஒரு அரசின் கடமையா என்று சாட்டையைச் சுழற்றுகிறார்.

இந்தியாவின் முக்கியமான ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு ஏன் ஆட்சிப்பணி அதிகாரிகளை மட்டுமே நியமிக்க வேண்டும்? தொழில்துறையைச் சார்ந்தவர்கள், பேராசிரியர்கள், நிர்வாகிகள் என்று பலரும் உள்ளே வருவது சிறப்பான நிர்வாகத்தைத் தரும். மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்த பொழுது மக்களை மின்சாரம், தண்ணீர், தானியம், எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு உண்மையான விலையைச் செலுத்த வைப்பது தான் பெரிய சவால் என்றதையும் அதை ஓரளவுக்கு அவர் செயல்படுத்தியதையும் பாராட்டுகிறார். குடும்ப ஆட்சியாகப் போய்விட்ட காங்கிரஸ் அதற்கு எதிராக வளர்ந்த ஆந்திர சந்திரபாபு நாயுடு குடும்பம், தமிழகக் கருணாநிதி குடும்பம், மகாராஷ்டிராவின் தாக்கரே குடும்பம், மேகலாவியின் சங்மா குடும்பம், பஞ்சாபின் பாதல் குடும்பம், பீகாரின் லாலு குடும்பம், உபியின் முலாயம் யாதவ் குடும்பம், கர்நாடகத்தின் கவுடாக்கள் என்று குடும்ப அரசியலை எதிர்கொள்ளாமல் நின்றதும், உட்கட்சி ஜனநாயகத்தை வளர்க்காமல் போனதும் அதன் வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்று படம்பிடிக்கிறார்.

சஞ்சய் தத்துக்காகக் கட்ஜூ முதல் கடைக்கோடி ஹிந்தி ரசிகன் வரை களம் புகுந்து ஆதரவு தருவதை அடித்துத் துவைக்கிறார். சிறைகளில் ஜாமீன் கட்ட முடியாமல் பல்வேறு அடித்தட்டு மக்கள் வாடுகிறார்கள், சந்தேகத்தின் பெயரில் பல்லாயிரம் இஸ்லாமியர்கள் அடைக்கப்பட்டு அநியாயமாகத் துன்புறுகிறார்கள், தலித்கள் கொடுமைக்குச் சிறைகளில் உள்ளாகிறார்கள். இவர்கள் மீதெல்லாம் இல்லாத கரிசனம் குற்றவாளி என ஏற்றுக்கொள்ளப்பட்ட சஞ்சய் தத்துக்கு மட்டும் ஏன் என வினவுகிறார். ஷைனி அகுஜா தன்னுடைய பணிப்பெண்ணை வன்புணர்வு செய்து சிறைமீண்டு வந்து படத்தில் நடிக்கிற பொழுது வராத அருவருப்பு டெல்லி வழக்கின் பொழுது மட்டும் வருவது நம்முடைய மந்தைத்தனத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் என்று விமர்சிக்கிறார்.

மாவோயிஸ்ட்கள் எதிர்ப்பில் அரசு மெத்தனமாக, ஒழுங்கான திட்டமிடல் இல்லாமல் செயல்படுவதே 76 துணை ராணுவ வீரர்கள் இறக்க காரணம் என்று குறிப்பிடுகிற குப்தா, துணை ராணுவத்தினர் இறக்கிற பொழுது ராணுவத்தினர் இறக்கிற பொழுது எழுகிற உணர்ச்சி எழும்புவது இல்லையே ஏன் என வினவுகிறார். சீருடைகள் நம்முடைய சீற்றத்தை தீர்மானிக்கின்றனவா? எனக் கேட்பதோடு, பினாயக் சென் மீதான வழக்கும், அதன் தீர்ப்பும் தவறானவை என்றாலும் அவரை அரசின் திட்டமிடல் குழு ஒன்றில் நியமிப்பது ராணுவத்தினருக்கு என்ன செய்தியை சொல்லும் என்கிறார். ஹர்ஷ் மந்தர் எனும் தேசிய ஆலோசனை குழுவின் உறுப்பினர் நடத்தி வரும் ஆதரவற்றோர் இல்லத்தின் நிர்வாகியாக ராமகிருஷ்ணா எனும் மாவோயிஸ்ட் தலைவரின் மனைவி இருந்ததைச் சுட்டிக்காட்டி அரசு தன்னுடைய போரில் குழம்பியிருக்கிறது, மாவோயிஸ்ட்கள் அதனை உணர்ந்து அடிக்கிறார்கள் என முடிக்கிறார்.

பாஜக எப்படி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக எதிர்க்கட்சியாக இருந்தது என்று அடுக்குகிறார். பாகிஸ்தானுடன் சமாதானமாகப் பேச்சு வார்த்தை நடத்த முயன்ற காங்கிரசை கோழை என்று கத்துகிற பாஜக, வாஜ்பேயி பாகிஸ்தான் உருவாக அடித்தளமிட்ட லாகூர் தீர்மானம் போடப்பட்ட இடத்தில் நின்றபடி, பாகிஸ்தான் என்கிற நாடு அமைதியும், வளமும் பெற்று சிறக்க வேண்டும் என்ற பொழுது ஆர்.எஸ்.எஸ். முதல் பாஜக வரை அமைதியாகவே இருந்தன என்று சுட்டிக்காட்டுகிறார். பொதுத்துறையின் செயல்படாத பிரிவுகளைத் தனியாருக்கு விற்பதை வீரியமாக அருண் ஷோரி செய்தார், இப்பொழுது காங்கிரஸ் செய்ய முனைகிற பொழுது ஓலம் எழுகிறது. GST எனும் இந்தியாவின் பொருளாதரத்தை மாற்றக்கூடிய சட்டத்தை மோடி ஆசீர்வாதத்தோடு எதிர்ப்பது நடக்கிறது. அணு குண்டு வெடித்த பாஜக அரசு அணு ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது ஏன் என்று வினவுகிறார்.

இஸ்ரத் ஜகான் மரணத்தை வெறும் முஸ்லீம் இந்து பிரச்சனையாகக் காங்கிரஸ் கட்டமைத்து தவறான அரசியலை முன்னெடுக்கிறது என்கிற குப்தா, பஞ்சாபில் தீவிரவாதிகளை எதிர்கொள்ளக் கடத்தலுக்குக் கடத்தல், கொலைக்குக் கொலை என்று அஜித் தோவல், கே.பி.எஸ்.கில் அடித்து நொறுக்கி சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டதை நினைவுபடுத்துகிறார். நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் என்கவுண்டரில் சந்தேகத்தின் பெயரில் அப்பொழுது கொல்லப்பட்டார்கள். காங்கிரஸ் காலத்தில் நிறைய என்கவுண்டர்கள் டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா ஏன் காஷ்மீரிலும் நடந்திருக்கின்றன. அவற்றின் அயோக்கியத்தையும் சேர்த்தே விசாரிக்க வேண்டும் அல்லவா என்று கேட்கிறார்.

திரிபுராவில் எண்பத்தி எட்டில் TNV எனும் தீவிரவாத அமைப்பு தேர்தலுக்கு ஒருவாரம் முன்பு 91 வங்காளிகளைக் கொன்றது, சீர்குலைவுற்ற பகுதி சட்டம் போட்டுக் கடுமையாகச் செயல்படுவது போல ராஜீவ் காந்தி அரசு காட்டிக்கொண்டது. தேர்தலில் அரிதிலும் அரிதாகக் காங்கிரஸ் வென்றது. பின்னர் அந்த அமைப்பின் தலைவருக்கு மன்னிப்பும், மறுவாழ்வும் தந்த நாடகம் என்ன? என்று அதிரவைக்கிறார். மொத்தத்தில், குஜாரத் முதல் படுகொலையும் இல்லை, இறுதியும் இல்லை. பாராளுமன்றத்துக்குப் பதில் சொல்லும் அமைப்பாக உளவுத் துறையை மாற்றாமல் சத்தங்கள் மட்டும் போடும் அரசியல் தீர்வுகளைத் தராது என்று முடிக்கிறார்.

2009-10 வரை ஒரளவுக்குச் சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்த எஃகு உற்பத்தி ஐமுகூட்டணியின் இறுதிக்காலத்தில் பெரும் சிக்கலுக்கு உள்ளானதையும், இறுதி மூன்று வருடங்கள் பல மில்லியன் டன் இரும்புத்தாது, நிலக்கரி இறக்குமதி அதிகரித்து இருப்பதையும்,பாக்சைட் தனிமம் பெருமளவில் இருந்தும் அலுமினிய இறக்குமதி நோக்கித் தள்ளப்படும் நிலையில் இருப்பதைச் சொல்லி, தின்ஷா படேல் எனும் சுரங்கத்துறை அமைச்சர் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டு இருப்பதையும் காட்டுகிறார்.

ராகுல் காந்தி சிறைத்தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் உடனே பதவி இழக்கிறார்கள் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை மாற்ற அவசரச்சட்டம் கொண்டுவந்த பொழுது அதை எதிர்த்து தடுத்தார். A.P.வெங்கடேஸ்வரன் எனும் அயலுறவுத் துறை செயலாளர் சொன்ன தகவலும், ராஜீவ் காந்தி சொன்ன தகவலும் மாறுபடுகிறது என்று ஒரு பாகிஸ்தானிய நிருபர் கேள்வி கேட்டதும் அங்கேயே அவரை அப்பதவியை விட்டு நீக்கம் செய்தார் அவசரக்கோல ராஜீவ். வெங்கடேஸ்வரன் இன்னமும் நான்கு வருடம் பதவிக்காலம் இருந்தும் தன்மானத்தோடு ஒட்டுமொத்தமாக அரசுப்பணியை விட்டு விலகினார். அதுபோல மன்மோகன் செய்வாரா என்று சீண்டுகிறார் சேகர் குப்தா.

கூட்டணி தர்மத்துக்காக ராஜாவின் ஊழலையும், தொடர்ந்து தவறுகள் செய்தும் தட்டிக்கேட்காமல் விட்ட கல்மாடி காமன்வெல்த்தில் களவாடியதும், ஆதர்ஷ் ஊழலை அரசு சரிவர முதலிலேயே தடுக்காததும் அதன் பெயரைக் கெடுத்தன என்கிறார் குப்தா. அதோடு, BSNL நல்ல வளர்ச்சியில் இருந்த பொழுது அதைப் பங்குச்சந்தையில் இறக்காமல் விட்டு ஊழலை மலிய வைத்து விட்டாகிற்று.

மன்மோகன் எப்பொழுதும் திராவிட் போல அமைதியாக இருப்பதே அவர் குணம், ஹர்ஷ் மேத்தா ஊழலில் அவருக்குப் பங்கிருக்கிறதா என்று கேள்வி எழுந்த பொழுது, ‘எது நீங்கள் தொடங்கும் புள்ளி என்பதைப் பொறுத்தது’ என்றே அவர் பதில் சொன்னார். பங்குச்சந்தை வீழ்ந்து கொண்டிருந்த பொழுது நான் நிம்மதியாக உறங்குவது இதனால் கெடாது என்று அவரால் சொல்லமுடிந்தது.

லோக்பால் உச்சநீதிமன்றம் துவங்கி சகலரையும் கேள்விகேட்கும் அமைப்பாகப் பார்ப்பது சர்வாதிகாரம் இல்லையா எனக்கேட்கிறார். எங்கும் எப்பொழுதும் நீதிபதியின் அனுமதி இல்லாமல் நுழைந்து சோதனை செய்யும் உரிமையைத் தானே AFSPA எனும் கொடுஞ்சட்டமும் கொண்டிருக்கிறது? நேர்மைக்காகப் போராடுவதாகச் சொல்லும் அர்விந்த் கேஜ்ரிவால் ஒன்பது லட்ச ரூபாயை பணிக்காலத்தில் வேறு வேலைக்குப் போனதற்குச் செலுத்த வேண்டியிருந்தது. அதைத் தரமாட்டேன் என்று இழுத்து பிடித்து நின்றது எப்படி நேர்மையாகும்? பூஷண் தந்தை-மகன் இணையருக்கு மாயாவதி எளியோருக்கு வழங்கப்படும் வீட்டை வெகுமதி போல வழங்கிய பொழுது, தந்தார், எடுத்துக்கொண்டோம் என்றது எவ்வளவு கயமைத்தனமானது? தான் பெற்ற அரசு விருதைக் கொண்டு டிக்கெட்டில் சலுகை பெற்றுக்கொண்டு, முழுத்தொகையைத் தன்னுடைய புரவலர்களிடம் கிரண் பேடி பெற்றது ஊழல் இல்லையா? இவர்களா ஊழலை எதிர்க்க வந்துவிட்டார்கள் என்று பொரிகிறார்.

நீதிபதிகள், ஆட்சிப்பணி அதிகாரிகள் தவிர்த்து அளவில்லாத நேர்மை கொண்ட ஆட்கள் ஆறு பேரை தேர்வு செய்வோம் என்பது முன்னைய இரு பிரிவில் நேர்மைக் குறைவு உண்டு, அங்கே பெரும்பாலும் நேர்மையானவர்களே இல்லை என்கிற தொனியை அல்லவா தருகிறது என்று கேட்கும் குப்தா, தனக்கான அங்கத்தினரை தேர்வு செய்ய இளம் நீதிபதிகளைப் பயன்படுத்திக்கொள்வதும், லோக்பால் ஆட்களைப் பதவியை விட்டு அனுப்புகிற பொழுது ஐந்து மூத்த நீதிபதிகள் முடிவெடுக்க வேண்டும் என்று குழப்ப சட்டமாக லோக்பால் இருக்கிறது எனச் சுட்டிக்காட்டுகிறார்.

புரட்சி என்பது ஒரு சட்டத்தின் மூலம் நடப்பதில்லை. இடதுசாரிகளை ஆட்சியைவிட்டு மோசமான நிர்வாகத்துக்காக எண்பத்தி நான்கு சதவிகிதம் மக்கள் திரண்டு வந்து ஓட்டளித்து அனுப்பிவைத்ததையும், மாவோயிஸ்ட்கள் மிகுந்த பகுதியில் PCAPA எனும் தீவிர இடதுசாரிகள் ஆதரவு கட்சியின் வேட்பாளரை ஜார்கிராம் எனும் தொகுதியில் எண்பத்தி சதவிகித வாக்காளர்கள் நிராகரித்து மம்தா கட்சி நபரை தேர்ந்தெடுத்ததைச் சுட்டிக்காட்டும் குப்தா தெற்கு டெல்லி, தெற்கு மும்பையில் முறையே நாற்பத்தி மூன்று, நாற்பத்தி எட்டுச் சதவிகிதம் மக்கள் மட்டுமே ஓட்டளித்து உள்ளார்கள். ஜனநாயகத்தின் அடிப்படையையே நம்பாமல் ஒரு சர்வாதிகிற லோக்பால் தீர்வுகள் தந்துவிடும் என்று இவர்கள் நம்புவது வேடிக்கையானது என்கிறார்.

விபி சிங் ராஜீவ் காந்தியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த பொழுது,செந்த் எனும் ஓட்டைப் போட்டு வீட்டுக்குள் திருடன் நுழைவதை போல ராஜீவ் திருடிவிட்டார். உங்களின் வரியில் தான் அரசு இயங்குகிறது என்று சொல்லிவிட்டு, தீப்பெட்டியை கையில் எடுத்து இந்த இருபத்தி ஐந்து பைசா தீப்பெட்டியில் ஐந்து காசு அரசு எடுத்து உங்களுக்குப் பள்ளி,. சாலைகள் தருகிறது. ஆயுதங்களும் வாங்குகிறது. அந்த உங்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது எனப் புரியவைத்து காங்கிரசுக்கு எதிரான அலையை உண்டு செய்தார். அப்படிப்பட்ட தலைவர்கள் குறைந்து போன இடத்தையே ஆதிக்க மனோபாவம் மிக்க அன்னா ஹசாரே போன்ற ஆட்கள் கைப்பற்றிக்கொண்டதாகச் சேகர் குப்தா சொல்கிறார்.

ஷாந்தி பூஷன் ‘மதுகோடா, ஆ.ராசா போன்றவர்கள் பிரதமர் பதவிக்கு வராமல் லோக்பால் தடுக்கும் என்கிறார். அவரின் பார்வையில் பழங்குடியினர், தலித்துகள் பலரும் ஊழல்மயமானவர்கள் என்கிற மத்தியவர்க்க பார்வையே இருக்கிறது. இவர்கள் தான் அதிகம் சுரண்டப்படுகிறார்கள்., இவர்களின் பிரதிநிதிகளுக்கு இடம் மட்டும் தந்தால் போதுமா? அவர்களின் மீதான மேல்தட்டுப் பார்வையை விலக்கிக் கொள்ளாமல் எப்படித் தீர்வுகள் சாத்தியம். இந்தியா ஒன்றும் சிங்கப்பூர் இல்லை ஒரு வடிவம் எல்லாவற்றுக்கும் தீர்வாக, இங்கே பலதரப்பட்ட சிக்கல்கள், மக்கள், சவால்கள் உள்ளன. அவற்றை உணராமல் பேசுவது தவறாகும். பங்காரு லக்ஷ்மன் எனும் தலித்தும், திலீப் சிங் ஜுடியோ எனும் ராஜபுத்திரரும் ஊழல் வழக்கில் சிக்கி பாஜகவில் பதவி இழந்தார்கள். ஆதிக்கச் சாதியினரான ஜூடியோ மீண்டும் அரசியலில் ஒங்க முடிந்தது. லக்ஷ்மன் காணமல் போனார். சச்சார் அறிக்கை இந்தியாவில் இஸ்லாமியர்கள் மிக அதிகமாக நிறைந்திருக்கும் இடம் சிறைச்சாலைகள் என்று சொல்கிறது. ஊழல் வழக்கில் பெரும்பாலும் இடைநிலை சாதியினர், தலித்துகள் மாட்டுவதற்கு அவர்கள் மட்டுமே தவறு செய்கிறார்கள் என்பது காரணமா? நிச்சயம் இல்லை. இங்கே ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிரான பார்வை வேரூன்றி இருக்கின்றது என்பதே காரணம் என்று நெத்தியடி அடிக்கிறார். இந்த மக்கள் ஆதிக்க ஜாதியினர் முன்னின்று நடத்தும் அன்னா ஹசாரே இயக்கம் போன்றவற்றைச் சந்தேகத்தோடு பார்ப்பது தவறொன்றும் இல்லை என்கிறார் சேகர் குப்தா.

சேகர் குப்தாவின் எழுத்துக்களின் மீதான விமர்சனங்களுக்குச் செல்லலாம். இவரின் மிகப்பெரிய பலம் எனப் பலர் நினைக்கும் அவரின் வாதத்திறமையே அவரின் நடுநிலைமையைக் குலைக்கிறது. ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி எழுதுகிறார் என்றால் தன்னுடைய பார்வை என்னவோ அதை மட்டுமே நிறுவும் அவர் இன்னொரு தரப்பின் நியாயத்தை மறந்தும் பதியமாட்டார். நரசிம்ம ராவ் இடிப்பின் பொழுது பூஜையில் அமர்ந்தார், அது முடியும்வரை எழவில்லை என்கிற செய்தியை காலுக்குள் நசுக்கிவிடுவார். ரிலையன்ஸ் நிறுவனம், ப.சிதம்பரம் இருவரின் மீதும் தனிக்கரிசனம் அவருக்கு உண்டு என்கிற குற்றச்சாட்டு உண்மைதானோ என்று எண்ணும் வகையிலேயே கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.

நேருவின் காலத்தில் அரசு வலதுசாரிகளைக் கட்சியை விட்டு திட்டமிட்டு அகற்றியதே பொருளாதார மந்தநிலைக்குக் காரணம் என்று சொல்கிற சேகர் குப்தா அந்த வளதுசாரிகளில் பலரும் ஊழல்மயமாக, மதவாதிகளாக இருந்ததை மறந்தும் சொல்லமாட்டார். நேருவின் காலத்தில் யாரும் பெரும்பாலும் மாற்றுப் பொருளாதார மாற்றைத் தீவிரமாக முன்வைத்துச் செயல்படுத்திக் காண்பிக்கவில்லை என்பதும், அவர் விரும்புகிற ஜகதீஷ் பகவதி முதலிய பொருளாதார வல்லுனர்களே நேருவின் காலத்தில் இந்திய பொருளாதாரம் சிறப்பாகவே இருந்தது என்று சான்றிதழ் தருவதைக் குப்தா கணக்கில் கொள்ளமாட்டார். இடதுசாரிகளை விமர்சிக்கவேண்டும் என்று வந்த பிறகு நேருவில் இருந்தே துவங்குவதே தானே சரியாக இருக்க முடியும்? தரவுகளாவது, இன்னொரு பக்கம் தர்க்கங்களாவது..

கட்ஜூ செய்தி நிறுவனங்களை முறைப்படுத்த முயன்றதை சாடவந்த குப்தா தன்னுடைய இதழை மட்டுமே செய்தித் துறையின் முகம் என்பது போலப் பேசுகிறார். அதில் புரையோடிப் போயிருக்கும் ஊழல்கள், தவறுகள், செம்மையான ஒழுங்குமுறைக்கான தேவைகள் குறித்து மூச்சுகூட விடவில்லை.

ரிலையன்ஸ் நிறுவனம் ‘crony capitalism’-ல் முன்னணி நபர் எனத்தெரிந்தும் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை விமர்சனமாக இல்லை. ஏன் ரிலையன்ஸ் அப்படிச் செய்தது என்று ஒரு தேர்ந்த மக்கள்தொடர்பு அலுவலர் போலவே சேகர் குப்தா ஆதரித்து எழுதிச்செல்கிறார். ரிலையன்ஸ் இயற்கை எரிவாயு சிக்கலில் எப்படி விலைகளை அநியாயமாகக் கூட்டி கொள்ளை லாபம் பார்க்கப்பார்த்தது என்பது குறித்துக் கள்ள மவுனம், ஆனால், அதே நிறுவனத்தின் தொழில் பாதிக்கப்பட்டால் கதறுகிறார். அம்பானிக்காக ஐயோ அதானியை மோடி கண்டுகொள்கிறாரே எனப் புலம்புகிறார். பழங்குடியின மக்கள் எப்படிக் கனிமங்களை வெட்டியெடுக்கும் துறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களின் மறுவாழ்வு எப்படிச் சாத்தியமில்லாமல் போகிறது என்றும் பேச மறந்த சேகர் குப்தா சுரங்கப்பணியில் ஈடுபடும் நிறுவனங்களின் கவலையைப் பிரதிபலிப்பதை கச்சிதமாகச் செய்கிறார்.

அத்வானி பொய்யே சொல்லாதவர் என்பதில் துவங்கி பாஜகவின் மூத்த தலைவர்கள் பல வருடங்களாக இஸ்லாமியர்களுக்கு எதிராக எதுவும் பேசியதில்லை என்று அநியாயத்துக்குப் பொய் சொல்கிறார். ப.சிதம்பரம் நேர்மையின் உச்சம் என்று மனசாட்சியே இல்லாமல் எழுதுகிறார். FCRA எனும் கொடிய சட்டத்துக்குக் காரணமான ப.சிதம்பரத்தை எந்த இடத்திலும் சாடாமல் அதை விமர்சித்தவரின் கருத்தை மட்டும் போகிற போக்கில் பதிகிற வாதத்திறமையைச் சேகர் குப்தாவிடம் கண்டு அசந்து போவீர்கள்.

இந்திய அரசாங்கத்தின் வன்முறைகள், அது நிகழ்த்திய நிறுவனக்கொலைகள் எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் வகையில் ‘அப்படித்தான் அரசு ஜீவித்திருக்கும்!’ என்கிற தொனியில் அப்பட்டமாகப் பேச சேகர் குப்தாவால் மட்டுமே முடியும். நீரா ராடியா டேப்புகளில் சம்பந்தப்பட்ட பர்கா தத்தைப் பற்றி விமர்சனங்கள் எதுவுமில்லை. தற்போது அவருடன் இணைந்து ஒரு நிறுவனத்தைத் துவங்கியிருக்கிறார் சேகர் குப்தா. ஆர்.ஆர்.எஸ். அமைப்பில் தன்னுடைய இளமைக் காலத்தில் இயங்கிய சேகர் குப்தா ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும், பாஜகவையும் தனித்துக் காண்பிக்கிற பணியை அவ்வப்பொழுது கஷ்டப்பட்டுச் செய்கிறார். மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை, VHP-ஐ விலக்கி வைத்தவர் என்று சொல்கிற அவரின் வாதம் கண்முன்னாலேயே சரிவதை கண்டுகொண்டு தான் இருப்பார்.

சேகர் குப்தாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைக் கொண்டே இந்த வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவையே அவரின் சிறந்த கட்டுரைகள் என்று அவர் எண்ணுவது அவரின் மனவோட்டத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. ‘அரசை வழிபடும் அறிவுஜீவி’ என்று சேகர் குப்தாவை சொல்லலாம் என்றாலும் அதற்கான நியாயங்கள் அவரிடம் இருப்பதே அவரின் வாதங்களோடு சமயங்களில் முரண்பட நேர்ந்தாலும் ரசிக்க வைக்கிறது.

— withShekhar Gupta and N.r narayanamurthy infosys.