ஸ்டாலின் எனும் கம்யூனிஸ்ட் ஜார் !


ஸ்டாலின் எனும் கம்யூனிச போர்வை போர்த்திய கொடூரன் மறைந்த தினம் டிசம்பர் பதினெட்டு . அடிப்படையில் ஜார்ஜியா பகுதியில் பிறந்த இவர் ஜார் அரசை எதிர்த்து செயல்பட்டதால் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டார் ; பின் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர் லெனினுடன் இணைந்தார் ட்ராட்ஸ்கி மற்றும் லெனின் இணைந்து 1917 இல் ஏற்பட்டிருந்த ஆட்சியை கவிழ்த்த பொழுது ஓரளவிற்கே பங்காற்றிய இவர் அதற்கு பின் வெற்றிகரமாக லெனின் இடத்தை பிடிக்க காய்கள் நகர்த்தினார்

லெனின் இறந்ததும் அடுத்த இடத்தில் இருந்த ட்ராட்ஸ்கி ஆட்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ட்ராட்ஸ்கியின் திறமையை கண்டு பலர் அஞ்சினார்கள். அவரை ஆளவிட்டால் ஒரே ஆள் ஆதிக்கம் வந்திடும் என்கிற கருத்து இருந்தது. கூட்டாக ஆட்சி செய்ய உகந்த ஆள் என்று ஸ்டாலினை கொண்டு வந்தார்கள். லெனின் தன்னுடைய உயிலில் ஸ்டாலின் அவரின் பதவியை விட்டு நீக்கப்படவேண்டும் என்று எழுதியிருந்தார். அதை யாரும் கேட்கவில்லை. சர்வம் ஸ்டாலின் மயம் ஆனது . 

படிப்படியாக பொலிட்பீரோவை விட்டு தன்னை எதிர்ப்பவர்களை வெளியேற்றினார் ஸ்டாலின். ட்ராட்ஸ்கியை ஆள் வைத்து தூக்கினார் . ஆட்சிக்கு வந்த பின் நாட்டை கட்டமைக்கும் பொறுப்பு அவரின் தலையில் விழுந்தது. “மற்ற வளர்ந்த நாடுகளை விட ஐம்பது நூறு வருடங்கள் பின்தங்கி இருக்கிறோம். இந்த தூரத்தை பத்தாண்டுகளில் கடக்க வேண்டும் !” என்று சபதம் போட்டார். ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டப்பட்டன. முதல் ஐந்தாண்டு திட்டத்தில் நிலக்கரி,இரும்பு,எஃகு,இயந்திரங்களின் வளர்ச்சி பெருக்கப்பட்டது. இருபது வருட காலத்துக்குள் இங்கிலாந்தை இரும்பு மற்றும் எஃகு உற்பத்தியில் முந்தியது சோவியத் ரஷ்யா. 

வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் வந்து சேர்ந்தார்கள். கல்வி விரிவாக்கப்பட்டது. தொழிற்சாலையிலும் கல்வி போதிக்கப்பட்டது. திறன்மிகுந்த தொழிலாளர்கள் உருவாக்கப்பட்டார்கள். அதிகமாக வேலை பார்ப்பவர்களுக்கும்,அதீத உற்பத்தியை சாதித்தவர்களுக்கும் ஸ்டேக்கனோவைட்ஸ் எனப்படும் விருதுகள் தரப்பட்டன.நீர்மின் நிலையங்கள் எழுந்தன . சாதாரண உழைப்பாளிகள் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு வேலை வாங்கப்பட்டார்கள். 

கூட்டு விவசாய முறை கொண்டுவரப்பட்ட சின்ன சின்ன நிலங்கள் எல்லாம் இணைக்கப்பட்டது. சின்ன நிலங்களின் உரிமையாளர்களான குலாக்குகள் விரட்டப்பட்டார்கள்,எதிர்த்தால் காணாமல் போனார்கள். ஆனால்,திட்டம் பெருந்தோல்வி அடைந்தது. விவசாயம் உண்மையில் படுத்தது. தானிய உற்பத்தி வீழ்ந்தது. ஐந்து மில்லியன் மக்கள் பசியால் இறந்த பொழுது பதினேழு லட்சம் டன் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதற்கு பின்னர் இயந்திரமயம் சில ஆண்டுகள் கழித்து உற்பத்தியை அதிகப்படுத்தியது. கால்நடை உற்பத்தி மீள இருபத்தைந்து வருடங்கள் ஆனது. 

எதிரிகள் என சந்தேகப்பட்டு பல லட்சம் சொந்த நாட்டு மக்களை படுகொலை செய்தார். அறிவிக்கபடாத சர்வாதிகாரம் நிலவியது . ரத்தத்தின் மீது . ஹிடல்ருடன் கைகோர்த்து கொண்டார் ;போலந்தை இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் ஒருபுறம் ,இவர் ஒரு புறம் தாக்கினார்கள் .இருவரும் எப்பொழுது இன்னொருவரை கவிழ்க்கலாம் என காத்துக்கொண்டிருந்த பொழுது,இவர்அதிக நிலத்தை கிழக்கு ஐரோப்பாவில் கைப்பற்றுவதை பார்த்தார் ஹிட்லர் -இவர் மீது போர் அறிவித்தார் .

ஸ்டாலின்க்ராட் ,மாஸ்கோ என நீண்ட போரில் பின்வாங்கவே மறுக்காத இரண்டு படைகளும் மோதிக்கொண்டன . உக்ரைனில் இவரின் அட்டூழியம் தாங்காமல் ஜெர்மானியர்களை வரவேற்றார்கள். அவர்களும் இவருக்கு மிஞ்சியவர்களாக இருந்தார்கள். தோல்வியே சந்திக்காத ஹிட்லரை எண்ணற்ற படைகள்,படுகொலை பயம் ஆகியவற்றின் மூலம் வென்று காட்டினார் .நாட்டையே இரும்புத்திரை போல வைத்திருந்த இவர் காலத்து படுகொலைகள் ஹிட்லரின் யூத படுகொலைகளுக்கு அடுத்த இடத்தை நிச்சயம் பெறும் அடுத்து பனிப்போரையும் வேகப்படுத்திய பெருமை இவருக்குண்டு .

இசை,பத்திரிக்கை,எழுத்து என்று எல்லாமும் அரசாங்க புகழ் பாடும் மையங்களாக மாற்றப்பட்டன. சர்ச்சுகள் மூடப்பட்டன ,பாதிரிகள் கொல்லப்பட்டார்கள். என்றாலும் நாற்பதில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் மதநம்பிக்கை உள்ளவர்களாகவே இருந்தார்கள். நாற்பத்தி ஏழு சதவிகித மக்கள் ரஷ்யர்கள் இல்லை. ஆகவே அவர்களுக்கு மொழி மற்றும் கலாச்சாரத்தில் ஓரளவுக்கு விடுதலை தந்தார் ஸ்டாலின். அதே சமயம் ஏதேனும் எதிர்ப்பு கிளம்பினால் ஒரே அடி தான் என்பதை அடிக்கடி செய்து காட்டினார். 
.
உண்மையில் ஸ்டாலினை கம்யூனிஸ்ட் என்றே சொல்லக்கூடாது, லெனின் மற்றும் மார்க்ஸின் கொள்கைகளில் இருந்து வெகுதூரம் தவறிப்போனார் அவர். கட்சியின் தலைவர்கள் முதலாளிகளின் வீடுகளை எடுத்துக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள். மெத்வதேவ் என்கிற வரலாற்றாசியர் சொல்வதைப்போல ஸ்டாலினின் ஆட்சியில் வர்க்க பேதமற்ற ஆட்சி எழுவதற்கு பதிலாக ஜார் மன்னர்கள் ஆட்சியைப்போலவே விவசாயிகள்,தொழிலாளர்கள் சுரண்டப்பட்டார்கள். !