டாடா குழுமத்திடம் இருந்து தன்னம்பிக்கை தரும் கதைகள்


 கல்லூரி மூத்தவர் ஒருவரின் பிறந்தநாளுக்காக என்ன புத்தகத்தை வாங்கலாம் என்று அவரிடமே கேட்டேன். ‘#Tata Stories- 40 Timeless Tales to Inspire You’ என்கிற ஹரிஷ் பட் எழுதிய நூலினை தேர்வு செய்தார். டாடா குழுமத்தின் ‘பிராண்ட் பாதுகாவலராக’ திகழும் நூலாசிரியர் டாடா தொடர்புடைய விறுவிறுப்பான, சுவையான நாற்பது நிகழ்வுகளை அடுக்கிச் செல்கிறார். உத்வேகமூட்டும் கதைகள் என்கிற வரையறை என்பதால் பெருமிதமிக்க, உற்சாகமான நிகழ்வுகளை மட்டுமே சொல்லிச் செல்கிறார். 

டாடா  சுமோ என்கிற பெயரை அடிக்கடி உச்சரித்திருப்போம். சுமோ என்பது என்ன? வெகுகாலமாக ஜப்பானிய தற்காப்பு கலையின் தாக்கத்தில் வைக்கப்பட்ட பெயர் என்றே எண்ணிக்கொண்டு இருந்தேன். சுமந்த் மோல்காவ்கர் எனும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரின் நினைவாகவே அப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. லாபம் என்பதை சந்தையில் கிட்டியவரை அடிப்போம் என்பதாக இல்லாமல், நல்ல தரமான வண்டிகளை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்து பெற வேண்டும் என்பது அவரின் கொள்கையாக இருந்தது. எதிலும் ஆகச்சிறந்த ஒன்றை எட்ட வேண்டும் என்கிற சிந்தனையே  அவரை செலுத்தியிருக்கிறது. புனேவில் டாடா மோட்டார்ஸ் ஆலையை துவக்கிய போது 15 இலட்ச ரூபாய்  செலவில் பெரிய ஏரி  ஒன்றையும் உருவாக்கினார் மிஸ்டர். சுமோ. இன்றைக்கு அது 245 ஏக்கர் ஈரநிலமாக விரிந்து நிற்கிறது. 

ரத்தன் டாடா  ஒரு கனவு கண்டார், “ஜென் கார் அளவில், அம்பாசிடர் போன்ற உள் வசதிகளோடு, மாருதி 800-ன் விலையில் ஒரு காரினை உருவாக்க வேண்டும்”. புதிதாக ஒரு ஆலையை இத்தகைய கார்களை உற்பத்தி செய்ய வைக்க வேண்டுமென்றால் 2 பில்லியன் டாலர் செலவாகும் என்று தெரிந்தது. அது மலைப்பைத் தரும் முதலீடு. சாத்தியமற்றதும் கூட. தீர்வு? ஆஸ்திரேலியாவில் செயலிழந்து போன நிஸான் கார் உற்பத்தி ஆலை ஒன்றை முழுதாக பிரித்தெடுத்து அப்படியே இந்தியாவிற்கு கொண்டு வந்து ஆலையை உருவாக்கினார்கள். ஐந்தில் ஒரு பங்கு செலவில் இண்டிகா இந்தியாவிற்கு கிடைத்தது. 


ஓசூரில் இயங்கும் டைட்டன் நிறுவனத்தை உருவாக்கியவர்  ஸெர்ஸேஸ்  தேசாய். தமிழ்நாடு அரசோடு இணைந்து வர வெறும் கைக்கடிகார நிறுவனம் ஒன்றை உருவாக்கவில்லை. பல நூறு தொழிலாளர்களின் எதிர்காலத்தை உருவாக்கினார். நாமக்கல், கிருஷ்ணகிரி மாணவர்களுக்கு பயிற்சியளித்து உள்ளூரிலேயே தமக்குத் தேவையான தொழிலாளர்களை திறனோடு தயார்படுத்தினார். வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக டைட்டன் பள்ளியையும் உருவாக்கினார். எங்கிருந்தோ ஓசூர் வந்த அவர், அங்கேயே மரணித்தார். தங்களுடைய மைந்தராக அவரை தத்தெடுத்துக் கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அவருக்கு கண்ணீர்விடை கொடுத்தார்கள். 


கோஹினூர் வைரத்தை போல இரு மடங்கு அளவில் பெரிய ஜூப்ளி  வைரத்தினை ஜாம்ஷெட்ஜி டாடாவின் மூத்த மகன் டோரப்ஜி டாடா  தன்னுடைய மனைவி  மெஹெர்பாய்க்கு பரிசாக கொடுத்தார். உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு டாடா குழுமத்தின் உருக்காலைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் தரமுடியாத நிலை 1924-ல் வந்தது. தன்னுடைய சொத்துக்கள், விலை மதிக்க முடியாத காதற்பரிசு அனைத்தையும் அடமானம் வைத்து நிலைமையை சமாளித்தார்கள்  தம்பதிகள். விரைவில் நிலைமை சீரானதும் அனைத்தையும் மீட்டார்கள். 1930, 1932-ல் முறையே மனைவி, கணவன் இறந்து போனார்கள். தங்களுடைய சொத்துக்களை முழுவதும் அறக்கட்டளைக்கு எழுதி வைத்திருந்தார் டோரப்ஜி டாடா. அந்த ஜூப்ளி வைரம் விற்கப்பட்டு அதில் கிடைத்த வருமானத்தில் டாடா மெமோரியல் மருத்துவமனை கட்டப்பட்டது. 


ஏர் இந்தியாவை டாடா  நடத்திய காலத்தில் உலகத்தின் தலைசிறந்த வானூர்தி  சேவை நிறுவனம் என்கிற பெருமிதத்தை பெற்றது. விமான இருக்கைகள் வசதியாக இருக்கிறதா, பரிமாறப்படும் தேநீர் சுவை தரமாக இருக்கிறதா என்று ஒவ்வொன்றையும் ஜே.ஆர்.டி. டாடா  கண்காணித்து ‘நீலக்குறிப்புகளாக’ தன் குழுவினருக்கு வழங்கியது இந்த வெற்றிக்கான முதன்மையான காரணம். மேலும், வானூர்தியின் உள்ளே உள்ள திரைச்சீலைகள் வெளுத்து போகாமல் இருக்கிறதா? இடுக்குகளில் தூசி இல்லாமல் முழுமையான சுத்தம் பேணப்படுகிறதா? கழிப்பறையில் திசு பேப்பர் சரியாக வைக்கப்பட்டு இருக்கிறதா என்று அனைத்தையும் தானே அவ்வப்போது ஆய்வு செய்வதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். சேவை என்பது சொல்லில் இருப்பதல்ல, அது செயல்பாடு சார்ந்தது. 


IISC, TIFR என்று பெரும் பொருட்செலவில் பல்வேறு அறிவியல் அமைப்புகளை உருவாக்கி, அவற்றை கட்டியெழுப்பி பின்னர் தேசத்திற்கு அர்ப்பணித்த பெருமைமிக்க வரலாறும் டாடா குழுமத்திற்கு உரியது. இந்தியாவின் அணுசக்தி திட்டங்கள் துவங்கி முதல் சூப்பர் கணினி வரை பலவற்றில் டாடாவின் அழுத்தமான பங்களிப்பு உண்டு. 


இந்தியாவின் முதல் சூப்பர் கணினி ‘ஏகா’வை உருவாக்குவது என்று டாடா குழுமம் திட்டமிட்டது. குறித்த காலத்திற்குள் பெரும் சவால்களுக்கு இடையே அக்கணினி தயாராகி 20 அக்டோபர் 2007-ல் நின்றது. அந்நேரம் அக்கணினி 97 டெர்ராஃபிளாப்கள்  வேகம் கொண்டதாக இருந்தது. உலகின் டாப் 100 சூப்பர் கணினிகளில் ஒன்றாக மாற இந்த வேகத்தை 100 டெர்ராஃபிளாப்களாக கூட்ட வேண்டும். ரஷ்ய அறிவியல் அறிஞர்களின் உதவியை நாடினார்கள். சார்மினார் சிகரெட்கள், கிங் பிஷர் மதுவகைகள் பரிசுகளாக அவர்களுக்கு சென்றன. தங்களின் நிறுவனங்களின் அனுமதியோடு, அவர்கள் பத்து நாட்களுக்குள் கணினியின் வேகத்தை 118 டெர்ராஃபிளாப்களாக மாற்றி சாதித்தார்கள். இந்தியாவின் முதல் சூப்பர் கணினி கனவு சாத்தியமானது. அக்கணினி சந்திரயான் திட்டத்தில் பெரும் பங்காற்றியது.  


டாடா குழுமத்தை தோற்றுவித்த ஜாம்ஷெட்ஜி டாடா பெருங்கனவுகள் கொண்டவராக இருந்தார். உருக்காலை உருவாக்குவதற்காக அமெரிக்கா சென்றது  ஒருபுறம், மிகப்பெரிய அளவிலான நீர்மின் திட்ட உருவாக்கத்துக்காக நயாகரா அருவி நோக்கி பயணம் என்று இன்னொரு புறம் அவர் சுற்றிச் சுழன்றார். அவர் ஏன் தாஜ் ஹோட்டலை கட்டினார். அவரை நிறத்தை கொண்டு பாகுபடுத்தி ஹோட்டலுக்குள் விடவில்லை என்கிற கதைக்கு எந்த சான்றுமில்லை. தன்னுடைய வியாபாரத்தை பெருக்க இந்த ஹோட்டலை அவர் பார்க்கவில்லை. ஐரோப்பிய நிறுவனம் ஒன்றிடம் குத்தகை விடலாம் என்றே அவர் விரும்பினார். பெரும் வருமானம் ஈட்டும் ஒன்றாக இந்த ஹோட்டலை பார்த்தாரா? இதற்கும் பதில், ‘இல்லை!’ என்பது தான். அவர் லண்டன், பெர்லின், பாரீஸ்  என்று உலகம் முழுக்க அலைந்து, திரிந்து தன்னுடைய தாஜ் ஹோட்டலை இழைத்து, இழைத்து உருவாக்கினார். 26 லட்ச ரூபாய் செலவில் எழுந்த அந்த மாளிகைக்கு அன்றைய தேதியில் பிற தங்குமிடங்களை போன்றே ஆறு ரூபாய் வாடகையை தான் அவரும் வைத்தார். 
வேறென்ன காரணம்? அவரின் உதவியாளர் பிலிமோரியாவின் குறிப்புகளில் அதற்கான விடை இருக்கிறது, “பம்பாய் நகரத்தின் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் முன்னேறிய ஹோட்டல் ஒன்று தவிர்க்க முடியாத தேவை என்று அவர் நம்பினார். வேறெந்த தொழிலதிபரும் இதனுள் நுழையவில்லை என்பதால் தான் செய்து முடிக்க வேண்டிய கடமை என்று அவர் செயல்பட்டார்’. பம்பாயில் உலகததரத்திலான ஒரு ஹோட்டலை எழுப்பினால் உலகமெங்கும் உள்ள மக்கள் இந்நகரத்தை நோக்கி பெருமளவில் வருவார்கள் என்கிற பெருங்கனவு அவரை செலுத்தியது. 

இந்த நூலில் இன்னும் பற்பல சுவையான கதைகளும், ஆளுமைகள் குறித்த எழுத்தோவியங்களும் உண்டு. ஒரே ஒரு கடிதத்தை பற்றி மட்டும் குறிப்பிட்டுவிட்டு இக்கதை மழையில் இருந்து விடைபெறலாம். ஜே.ஆர்.டி.டாடாவின் வாழ்க்கையை செலுத்தும் விழுமியங்கள் யாவை என்று 06-08-1965-ல் பன்சாலி எனும் ஆசிரியர் கேட்டிருந்தார்.
13-09-1965-ல் இக்கடிதத்திற்கு ஜே.ஆர்.டி.டாடா பதில் எழுதினார். அதில், தன்னை ஒரு எளிய மனிதர் என்று சொல்லிக்கொள்ளும் அவர் கீழ்கண்ட விழுமியங்களை பட்டியலிடுகிறார்,


ஆழ்ந்த சிந்தனை, கடின உழைப்பு இரண்டுமில்லாமல் மதிப்புமிக்க எதையும் வாழ்க்கையில் வென்றிட இயலாது. முகத்தின் முன் சொல்லப்படும் துதிகள், கவர்ச்சிமிக்க சொற்களில் ஒருவர் ஏமாந்து விடக்கூடாது. தன்னுடைய சுய அறிவை பயன்படுத்தி தனக்காக தானே சிந்திக்க வேண்டும். 

எடுத்துக்கொண்ட செயல் எத்தனை சிறியதாக இருந்தாலும் அதில் மகத்துவத்திற்கும், கச்சிதத்திற்காகவும் ஒருவர் அயராது உழைக்க வேண்டும். சிறந்ததை விட சற்றே தரங்குறைந்த இரண்டாம் தரம் எதையும் பெற்றுவிட்டதற்காக திருப்தியடையக்கூடாது. 

தாய்நாட்டின் நலன்கள், அதன் மக்களுக்கு பயன்படும் வகையில் இல்லாத சாதனை, வெற்றிகள் பொருளற்றவை. இவை நேர்மையான, முறையான வழியில் பெறப்பட்டவையாக இருக்க வேண்டும். 

சக மனிதர்களிடம் நல்லுறவை பேணுவது தனிப்பட்ட வெற்றிகளை கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல் நிறுவனத்தின் வெற்றிக்கும் இன்றியமையாதது ஆகும்.”