பிரிதலின் பருவகாலம்


அந்திவேளையில் மேகம் தூறுகையில்  விடைபெறல்கள் அமைந்துவிட்டால் நன்றாக இருக்கும். 

சொற்கள் அருகி விக்கி நிற்கையில் பிரிதல்கள் நிகழ்கின்றன. 

அலைபேசியின் ஊடாக அழுது அயர்ந்து போன முகங்கள் உடைந்து மறைகின்றன. 

புன்னகைத்தபடி கையசைத்து விலகுகையில் சன்னலோரம் பிரியமிக்க உறவொன்று  எட்டிப்பார்க்கையில் கேவல்கள் மின்னி அறைகின்றன. 

துயர்மிக்க காலங்களை கடக்கும் வண்ணம் விழாவொன்று நிகழ்கிறது. 

உடைந்தபடி உருகி வழியும் இசைச்சரம் ஒன்றின் தொடர்பறுந்து செவி துடிக்கையில் பிரிவுக்காலத்தின் வெம்மை இளைப்பாறுகிறது.

 ஒவ்வொரு பிரிதலின் கணத்தினிலும் புதிய நடுக்கங்கள் கரம் சேரும். 

ஆயினும், பிரிவைக் கடக்கும் பயணத்தில் புதிதாய் பூக்கும் தழும்பொன்றின் நேசம் மட்டும் எப்போதும்  உடனிருக்கும். – பூ கொ சரவணன்

”Pornstar என அழைப்பது ஈவிரக்கமற்றதாகத் தோன்றுகிறது. நான் அதனைக் கடந்து வர முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.” – மியா காலிஃபாவுடன் ஒரு உரையாடல்


BBC Hard Talk நிகழ்வில் மியா காலிஃபா தன்னுடைய கடந்த காலம், தொடரும் பயணம், அடிப்படைவாதிகளிடம் இருந்து வந்த மிரட்டல்கள், கலவையான உணர்ச்சிகள் என்று பலவற்றைப் பேசினார். (https://www.youtube.com/watch?v=i2qplvJ6SLs) உரையாடலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் மட்டும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

உரையின் மூலத்தை தட்டச்சு செய்து கொடுத்த தோழர் Nivaas Sudhan -க்கு நன்றி !

நேர்முகம் செய்பவர்:

வணக்கம் நான் ஸ்டீபன் சேக்குர். இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளப்போகும் விருந்தினர் மியா காலிஃபா. 16 மில்லியன் followers உடன் instagram -ல் உலா வருகிறார். அவருடைய பெயரை கூகுள் செய்தால் அளவற்ற தேடல் முடிவுகள் தோன்றும். இப்படி உலகப்புகழ் பெற்ற ஒருவராகத் திகழ்வதைக் குறித்து மியா பெருமைப்படவில்லை. இந்தப் புகழ் 2014-ல் ஃபோர்ன் துறையில் பணியாற்ற அவர் செய்து கொண்ட மூன்று மாத ஒப்பந்தத்தால் கிட்டிய ஒன்று.

இத்துறையை விட்டு வெளியேற முடிவு செய்வதற்கு முன்பு வரை 12 காணொளிகளில் மட்டுமே அவர் பங்களித்து இருந்தார். அதில் ஒன்று உலகளவில் அதிர்வலைகளைக் கிளப்பியது. இஸ்லாமிய ஹிஜாப் அணிந்தபடி அவர் உடலுறவில் ஈடுபடுவதாக ஒரு காணொளி காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அது பலத்த கண்டனங்கள், கொந்தளிப்பை சம்பாதித்துக் கொடுத்தது. ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் அவரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள்.

லெபனான் நாட்டில் கிறிஸ்துவப் பெற்றோருக்கு பிறந்த மியா சிறுமியாக இருக்கும் போது குடும்பத்தோடு அமெரிக்காவின் மேரி லாண்ட் பகுதிக்கு இடம்பெயர்ந்து விட்டார். இளம்வயதில் பாதுகாப்பின்மையால் சூழப்பட்டவராக, கட்டுப்பாடுகளுக்கு அடங்க மறுப்பவராகத் திகழ்ந்த மியா தனக்கு நேர்ந்தவை குறித்து மனம்திறந்து உரையாட இருக்கிறார்

நே: எப்படிப் பார்த்தாலும் நீங்கள் மிகவும் புகழ்பெற்ற பெண்மணி. 16 மில்லியன் பேர் உங்களை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள். ஆனால் , இந்தப் புகழிற்கு நீங்கள் போர்ன் துறையில் குறுகிய காலம் ஈடுபட்டதே காரணம். இதை எதிர்கொள்வது உங்களுக்குக் கடினமான ஒன்றாக இருக்கிறதா?

மியா : ஆமாம். நான் அத்துறையை விட்டு வெளியேறியதும் என்னுடைய இன்ஸ்டா கணக்கை அழித்தேன். இல்லை. சரியாகச் சொல்வது என்றால், ஐ எஸ் ஐ எஸ் ஆதரவாளர்கள் என்னுடைய கணக்கை கைப்பற்றி, அதில் தங்களுடைய பரப்புரைகளைப் பதிந்து கொண்டே இருந்தார்கள். இன்ஸ்டாகிராம் அந்தக் கணக்கை தூக்கிவிட்டது. இன்னொரு கணக்கை ஓராண்டிற்கு நான் உருவாக்கவில்லை. உலகம் ஏளனமாகப் பார்க்கும் ஒரு போர்ன் நட்சத்திரம் என்கிற என்னுடைய தலைவிதியை ஏற்றுக்கொண்டேன். என்னைப்பற்றி நிலவும் பார்வையை மாற்ற முயற்சி செய்யலாம் என முடிவு செய்தேன். ஒரு இன்ஸ்டா கணக்கை மீண்டும் துவக்கி, வேறு நல்ல வார்த்தை தோன்றவில்லை என்பதால் influencer ஆக முயன்றேன் எனச் சொல்லலாம்.

நே: உங்கள் பெயரை வேலை நிமித்தமாகக் கூகுள் செய்தால் “போர்ன்ஸ்டார்’” என்று தான் உடனே வருகிறது. இதனை எவ்வளவு முயன்றாலும் உங்களால் கடந்துவிட முடியாத இல்லையா? எவ்வளவு மெனக்கிட்டாலும்

மியா: இது ஈவிரக்கமற்றதாகத் தோன்றுகிறது. நான் அதனைக் கடந்து வர முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.

நே: நீங்கள் அப்படித்தான் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புவதாகச் சொல்லவில்லை. அப்படிதான் இணையம், தொழில்நுட்பம் இயங்குகிறது என்கிறேன்

மியா : கூகுளுக்கு எனக்கும் நல்ல உறவு இல்லை என்பது உண்மை தான். அதனை மாற்ற முயன்று கொண்டே இருக்கிறோம். நான் நடத்துவதாக அறிவித்துக் கொள்ளும் ஒரு தளத்தோடு எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அதனை எந்த வகையிலும் நான் கட்டுப்படுத்தவில்லை. என்னைக் குறித்த விக்கிபீடியா பக்கத்திலும் மியாவின் அதிகாரப்பூர்வ தளம் அது என்றே குறிப்பிடுகிறார்கள். அந்தத் தளத்தை முடக்கச் சட்டப்படி பலமுறை முயன்று பார்த்தாகிவிட்டது. பலமுறை தளத்தை மூட அவர்கள் கேட்பதை தருவதாகப் பேசியும் ஆகிவிட்டது. ஒன்றும் மாறவில்லை.

நே: ஒவ்வொன்றாகப் பேசுவோம். எப்படி லெபனான் நாட்டில் பிறந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து நன்றாகப் படித்து டெக்ஸாஸ் பல்கலைக்குள் நுழைந்த நீங்கள் போர்ன் துறைக்குள் அகப்பட்டுக் கொண்டீர்கள்?

மியா: தாழ்வு மனப்பான்மை பாகுபாடு பார்க்காமல் எல்லாரையும் ஆட்கொள்கிறது என்று நினைக்கிறேன். செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தீர்களா, பெரிய பின்புலம் இல்லாத குடும்பத்தில் வளர்ந்தீர்களா என்பதை எல்லாம் பார்த்துத் தாழ்வுமனப்பான்மை வருவதில்லை. நான் குழந்தையாக இருக்கும்போது பருமனாக மட்டுமே இருந்தேன். கவர்ச்சிமிக்கவளாக அல்லது ஆண்களை வசீகரிக்கும் தகுதி கொண்டவளாக உணர்ந்ததே இல்லை. சிறு சிறு மாற்றங்களைச் செய்த போது, கல்லூரி முதல் ஆண்டில் நான் எடை இழக்க ஆரம்பித்தேன். பட்டப்படிப்பை முடித்த போது ஆளே மாறியிருந்தேன். கிட்டத்தட்ட 50 பவுண்ட் எடை குறைந்த போதும், என் மார்பகங்கள் குறித்தே அதீதமாகக் கவனம் செலுத்தினேன். இந்த எடையை எப்படிக் கிலோகிராம் கணக்கில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை

நே: அது உங்களின் உடற்தோற்றத்தையே மாற்றியிருக்கும் இல்லையா?

மியா: ஆமாம். என்னுடைய மார்பகம் ஏன் இப்படி இருக்கிறது என்பதே மிகப்பெரிய கவலையாக அரித்துக் கொண்டிருந்தது. எது இயல்பான அளவோ அந்தளவுக்கு என்னுடைய மார்பகத்தை மாற்ற முயன்றேன். அது ஒருவழியாக நடந்ததும், ஆண்களின் எல்லாக் கவனமும் என் மீது குவிந்தது. இதை எல்லாம் அதற்குமுன்பு எதிர்கொண்டதே இல்லை. இப்படித் தாழ்வுணர்ச்சியில் உழன்று கொண்டிருந்துவிட்டு முதன்முறையாகக் கிடைத்த அங்கீகாரம், புகழ் மொழிகள் என்னைப் பரவசம் கொள்ள வைத்தன. அதனை இழந்துவிடக்கூடாது என்று விரும்ப ஆரம்பித்தேன்.

நே: முதன்முறை சாலையில் யாரோ கல்லூரிப்படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்த உங்களைப் பார்த்து “போர்ன் தொழிலில் ஈடுபட விருப்பமா” என்று கேட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். வேண்டாம் என்று சொல்லாமல் எது இதற்குள் நுழைய உங்களை உந்தித்தள்ளியது?

மியா: அப்படி யாரும் கேட்கவில்லை. அதற்கு மாறாக, “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. மாடலிங் பண்ண விருப்பமா. உங்க உடல்வாகு அப்படி அசத்தலா இருக்கு. நீங்க nude modeling பண்ணா பிரமாதமா இருக்கும்” என்று பேசினார்கள். நான் ஸ்டூடியோவிற்கு வந்தேன். மியாமியில் அந்த இடம் இருந்தது. அது பார்வைக்கு அவ்வளவு அழகாகக் காட்சியளித்தது. அவ்வளவு சுத்தமாக இருந்தது. வேலை பார்த்தவர்கள் எல்லாரும் அவ்வளவு கனிவாக நடந்து .கொண்டார்கள். அவர்களின் அறைகளில் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்கள் காணப்பட்டன. எனக்குச் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் எதுவுமே இல்லை. எதுவும் என்னைச் சங்கடப்படுத்தவில்லை. முதல் முறை போர்ன் படம் எடுக்கவைக்கவில்லை. “இந்த ஒப்பந்தத்தில் இங்கே கையெழுத்து போடு இன்னும் பிற” என்றே நகர்ந்தது. இரண்டாவது முறை தான் படம் பிடித்தார்கள்

நே: உலக அனுபவம் இல்லாத இளம்பெண்களை வேட்டையாடும் நபர்கள் பற்றிக் குறிப்பிட்டதால்கேட்கிறேன். மேற்சொன்னவை நடந்த போது உங்களுக்கு 21 . இப்போது உங்களுக்கு 26 வயதாகிறது. வயது. இந்தக் கடந்த காலத்தைத் திரும்பிப்பார்க்கையில் ‘நான் இப்படிப் போய்ப் பலியானேனே’ என்கிற உணர்வு ஏற்படுகிறதா? அந்த 21 வயது பெண்ணை அவர்களின் தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டாரகள், அவள் பாதிக்கப்பட்டவள் என்று தோன்றுகிறதா?

மியா: தன்னைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளும் கருவிகள் அப்போது அவள் வசம் இல்லை என்றே உணர்கிறேன். அவளிடம் பொய்களை அள்ளி வீசுகிறார்கள் என்று அவளுக்குத் தெரியவில்லை. பொய்கள் என்பதைவிட அவர்களுக்கு ஏற்றவாறு அவளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். தங்களுக்கு வேண்டியதை அவளைக்கொண்டு முடித்துக் கொண்டார்கள். உண்மையில் என்னைப் பாதிக்கப்பட்டவள் என்று கருதவில்லை. அந்த வார்த்தை எனக்குப் பிடிக்கவில்லை. நான் எடுத்த முடிவுகள் மோசமான முடிவுகள் என்றாலும் அம்முடிவுகளை நான் தான் எடுத்தேன். பெண்கள் அணுகப்படுகிற விதம் மாறவேண்டும் என்று எண்ணுகிறேன்.

நே: பல கோடிகள் புரளும் துறை. இதன் உயிர்நாடியாகக் கேமிராவின் முன்னால் கலவியில் ஈடுபட வேண்டுமென்று பணிக்கப்பட்ட, அதற்கு ஒப்புக்கொண்ட இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் இருக்கிறார்கள். பல கோடி பேரால் பார்க்கப்படும் இந்தக் காணொளிகளின் உருவாக்கத்தை எந்தளவிற்கு உங்களால் கட்டுப்படுத்த இயலும்?

மியா : கிட்டத்தட்ட எதுவுமே இல்லை. அதிகபட்சம் இந்த மேலாடையை அணிய மாட்டேன் என்றுசொல்லலாம். எதைப் படம் பிடிக்கிறார்கள், அதன் உள்ளடக்கம், பேசுபொருள், எங்குப் படம்பிடிக்கப்படும் என்று எதையும் நாங்கள் முடிவு செய்ய முடியாது.

நே: இவற்றைப் பார்க்கும் வெளியாளாக இதில் ஈடுபடுபவரின் ஒப்புதல் அடிப்படையான, முக்கியமான கொள்கையாக இருக்க வேண்டும். நீங்கள் விரும்பாத பாலியல் செயலை உங்களை அவர்கள் செய்யச் சொன்னால் ….

மியா: இல்லை. அவர்களால் உங்களைக் கட்டாயப்படுத்த முடியாது. இல்லவே இல்லை.

நே: சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சுவாரசியமாகப் பேசியிருந்தீர்கள். இந்தப் பாலியல் காணொளிகளுக்காக இயங்குகையில், மொத்தமாக எல்லாமே இருண்டு போனதை போன்ற ஒரு உணர்வு ஏற்படும் என்றும், திரும்பி பார்க்கையில் பல விஷயங்களைத் தெளிவாக நினைவுகூர முடியவில்லை என்றும் சொல்லியிருந்தீர்கள். இந்தத் துறைக்குள் ஆழமாகக் கால் பதிக்க ஆரம்பித்த போது உங்கள் மண்டையில் என்ன ஓடிக்கொண்டிருந்தது

மியா: அந்தப் பேட்டியின் போது எனக்கு அகப்படாமல் போன சொல்- அட்ரினலின். என்னுடைய அட்ரினலின் சுரப்பி அதீதமாகச் சுரந்து எனக்கு என்ன நடக்கிறது என்பதோ, நான் என்னவெல்லாம் செய்வேன் என்று கற்பனை செய்தேனோ அதனைத் தாண்டி என்னென்னவோ செய்து கொண்டிருந்தேன் என்று எண்ணுகிறேன். தலைக்கு ஏறிய அட்ரினலினால் எதையும் திரும்பிப்பார்க்கையில் என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக நினைவுகூர முடியவில்லை.

நே: இதைப்பற்றியெல்லாம் இப்போது பேசுவது சங்கடமாக இருக்கிறதா?

மியா: ஆமாம் ஓரளவிற்கு

நே: நீங்கள் அரேபிய வம்சாவளியில், லெபனானில் பிறந்தவர். அரேபிய கலாசாரம் ஒட்டுமொத்தமாகப் பழமைவாதத்தில்ஆழமாகத் தோய்ந்து போன ஒன்று. அந்தக் கட்டுப்பாடுகள் நிறைந்த படலத்தை உரித்து எறிந்து விட்டு இந்தத் தொழிலில் ஈடுபட வேண்டியிருந்ததா?

மியா: இருக்கலாம். இந்தச் செயல்பாட்டின் ஒரு பகுதி எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு, என்னுடைய எல்லைகளை, பண்புகளைத் தாண்டி எதையேனும் செய்ய வேண்டும் என்கிற விருப்பத்தில் என்னையே நான் அதிரவைக்கிற செயல்களில் ஈடுபட்டேன் என்று எண்ணுகிறேன்.

நே: இது உங்கள் குடும்பத்துக்குத் தெரியாதில்லையா?

மியா: நான் என்ன செய்கிறேன் என்று அவர்களுக்குத் தெரிந்ததும் என்னை மகளே இல்லை என்று தலைமுழுகி விட்டார்கள்.

நே: அது பெருந்துயரமாக இருந்திருக்கும் இல்லையா

மியா: இந்த உலகம் மட்டுமல்ல என்னுடைய குடும்பம், என்னைச் சுற்றியிருந்த மனிதர்கள் எல்லாரும் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இந்தத் துறையை விட்டு வெளியேறிய பின்னர்த் தான் நான் இன்னமும் தனிமையானவளாக உணர்ந்தேன். சில தவறுகளை மன்னிக்க முடியாது என்று உணர்ந்துகொண்டேன் என்கிறேன். காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும். இப்போது நிலைமை எவ்வளவோ பரவாயில்லை.

நே: இந்தத் துறையின் இன்னொரு வகையான இயங்கியல் குறித்துச் சொல்லுங்கள். இந்த அதிகாரம், ஆதிக்கம், பணம். ஆபாசமான ஆண்கள், பெண்கள் குறித்துப் பேசினோம். உங்களுக்குத் தெரிந்தவரை இந்தத் தொழிலில் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் இடத்தில் பெண்கள் இருக்கிறார்களா?

மியா: நிச்சயமாக. இத்துறைக்குள் வருபவர்கள் நெருக்கமாகப் பணியாற்றும் ஒரு பெண்மணி இருக்கிறார். அவர் இனிமையானவர், மரியாதைமிக்கவர், கண்ணியமானவர… விற்பனை, வரிப் பக்கம் பல பெண்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் எப்படி இந்தவேளைக்கு வந்து சேர்ந்தார்கள் என்று கேட்பேன். வாய்வழி செய்தியா? இல்லை நண்பர்களின் மூலமா என்றெல்லாம் கேட்டிருக்கிறேன்.

நே: இந்தத் துறையின் பணம் கொழிக்கும் பக்கம் அசாதாரணமானது இல்லையா? நீங்கள் இஸ்லாமிய ஆடையான ஹிஜாப் அணிந்து கொண்டு தோன்றும் காணொளி pornhub ல் வெளிவந்தது. அதன்மூலம் நீங்கள் நம்பர் 1 போர்ன் நடிகையாக ஆனீர்கள். நீங்கள் நடித்த காணொளிகளைப் பல கோடி பேர் கண்டார்கள். அந்த 12 காணொளிகளுக்கும் உங்களுக்கு மொத்தமாக 12,000 டாலர் மட்டுமே தரப்பட்டது. ஆனால், நீங்கள் பணியாற்றிய Bang Bros நிறுவனம் மற்றும் pornhub இரண்டும் கோடிக்கணக்கான டாலர்களை ஈட்டின. ஏன் இப்படி?

மியா: அது அப்படித்தான். எனக்கு மட்டும் இப்படிச் செய்தார்கள் என்றில்லை. எனக்கு மட்டும் மோசமான ஒப்பந்தமோ, மேலாளரோ கிடைத்தார் என்றில்லை. எனக்கு என்று மேலாளர், ஏஜென்ட் இருந்தார்கள். ஆலோசகர்கள் யாருமில்லை. யாருமே இல்லை.

நே: இல்லையா? உங்களுக்கு 21 வயது தான் ஆகியிருந்தது. குழந்தைப்பருவத்தைக் கொஞ்ச காலத்திற்கு முன்பு கடந்த உங்களுக்கு ஆலோசனை சொல்ல யாருமில்லையா?

மியா : இல்லை. மனித மூளை முழுமையாக வளர்ச்சியடைய 25 வயதாகும். என்னுடைய மூளையில் இருந்த முடிவெடுக்கும் பகுதி முதிர்ச்சி அடைந்திருக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும், எது தவறு என்றெல்லாம் சொல்ல யாருமே இல்லை.

நே: இது போர்ன் தொழிலின் பண்பை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. நீங்கள் ஒரு காணொளியில் தோன்றுவீர்கள். அது சாசுவதமாக இருக்கும். பல லட்சம் பேர் காண்பார்கள். எவ்வளவு நீங்கள் பிரபலம் ஆனாலும், நம்பர் 1 நாயகி என்று ஆனாலும் எந்த உரிமையும் உங்களுக்குக் கிடையாது. எகிறிக்கொண்டிருக்கும் உங்கள் புகழால் உங்களுக்கு ஒரு பயனுமில்லை.

மியா : ஆமாம். ஒன்றுமே கிடைக்காது. இன்றுவரை இந்த ஒப்பந்தங்கள் இப்படித்தான் போடப்படுகின்றன.

நே: இதைப்பற்றிப் பேசியே ஆகவேண்டும். நான் முதலிலேயே நீங்கள் ஹிஜாப் அணிந்து தோன்றிய காணொளி குறித்துப் பேசினேன். அதில் உங்களைத்தவிர மூன்று இளைஞர்களும் தோன்றினார்கள். அது பின்னர்க் கலவி காட்சியாக மாறுகிறது. அது உசுப்பேற்றக் கூடிய ஒன்று என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

மியா: “நீங்க என்னைக் கொல்ல பாக்குறீங்க” என்று நான் சொன்னேன். அவர்கள் கொல்லென்று சிரித்தார்கள்.

நே: நீங்கள் ஏன் இதில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை..

மியா: அச்சுறுத்தல். நான் பயந்து போயிருந்தேன். நான் முடியாது என்று சொன்னால் அவர்கள் என்னைக் கட்டாயப்படுத்த போவது கிடையாது என்று எனக்குத் தெரியும். அப்படி அவர்கள் கட்டாயப்படுத்தினால் அது வன்புணர்வு. என்னை யாரும் கட்டாயப்படுத்திப் புணரப்போவதில்லை. ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது … மனந்திறந்து பேச படபடப்பாக இருந்தது. நீங்கள் ஒரு உணவகத்துக்குப் போகிறீர்கள். சிப்பந்தி “எப்படி இருக்கு சாப்பாடு எல்லாம்?” என்று கேட்கிறார். “சாப்பாடு நல்லாவே இல்லை” என்று முகத்தில் அறைந்தாற்போலச் சொல்ல யோசிப்பீர்கள் இல்லையா. நான் பயந்து போயிருந்தேன். பதற்றமாக உணர்ந்தேன்.

நே: ஆண்களே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துகிற இத்துறையில் அந்த ஆண்களுக்கும், 21 வயது இளம் நடிகைக்கும் இடையேயான அதிகார இயங்கியலில் விருப்பம் என்கிற கருத்தாக்கத்துக்கு அர்த்தமே இல்லை என்கிறீர்களா.

மியா : அதேதான் நான்கு ஆண் தயாரிப்பாளர்கள் இருக்கிற அறையில் நீங்கள் ‘என்னைக் கொல்ல பார்க்கிறீங்க’ என்கிற ரீதியில் எதையோ சொல்கிறேன். அவர்கள் வாய்விட்டு சிரிக்கிறார்கள். அது எதோ ஒரு வகையில் உலுக்கிவிடுகிறது. அதற்குப்பிறகு பேசவோ, மீண்டும் எதையாவது சொல்லவோ வாயே வராது. நிறுவனத்தின் தலைவர், CEO எல்லாம் உட்கார்ந்து கொண்டு ஒப்பந்தத்தைப் படிக்கச் சொல்வார்கள். அவர்கள் முன்னே உட்கார்ந்து கொண்டு படிக்கையில் ஒன்றுமே மண்டைக்கு ஏறாது. யாரோ நம்மை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற எண்ணமே பதற்றத்தை எகிற வைக்கும்.

நே: நீங்கள் படத்தளத்தை விட்டு வெளியேறியதும் இது பேரிடராக மாறப்போகிறது என்று மனம் எச்சரித்ததா?

மியா: அட்ரினல் தலைக்கேறி இருந்ததால் எனக்கு அப்போது ஒன்றுமே தோன்றவில்லை. அது வெளிவந்த நாள் என் மொத்த உலகமும் சின்னாபின்னம் ஆகியிருந்தது. நான் இப்படிப்பட்ட படங்களில் நடிக்கிறேன் என்று என்னை அறிந்தவர்கள் யாருக்கும் தெரியாது என்பதால் தான் இதில் இயங்கிக்கொண்டு இருந்தேன். பலலட்சம் பெண்கள் தாங்கள் கலவியில் ஈடுபடுவதைப் படமாக எடுக்க ஒப்புக்கொள்கிறார்கள். அவர்களின் பெயர்கள் வெளியே வருவதே இல்லை. அவர்களை யாரும் அடையாளம் கண்டு கொள்வதுமில்லை. அவர்கள் யாரென்று யாருக்கும் தெரிவதில்லை. என்னுடைய அசுத்தமான சிறு ரகசியம் என்னோடு மட்டுமே இருக்கும் என்பதாலேயே இதில் இருந்தேன். இந்தக் காணொளி எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு விட்டது.

நே: அது படத்தைத் தயாரித்தவர்கள், வெளியிட்டவர்கள் பார்வையில் பெரும் வெற்றி. எடுத்த உடனே லட்சக்கணக்கான பேர் பார்த்திருந்தார்கள்.

மியா: என்னை “குடுவைக்குள் ஒளிரும் மின்னல்” என்று அழைத்தார்கள்.

நே: உங்கள் வாழ்க்கையின் யதார்த்தமோ வேறு. ஹிஜாப் அணிந்த போர்ன் நட்சத்திரத்தின் முகம் உலகத்துக்கே தெரிந்திருந்தது.

மியா: ஆமாம் . நிறையக் கொலை மிரட்டல்கள் ஐ எஸ் ஐ எஸ் அனுதாபிகள் என்று சொல்லிக்கொண்டவர்களிடம் இருந்து குவிந்தது. நான் தலை துண்டித்துக் கிடப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, ‘அடுத்து நீ தான்டி’ என்று நாள் குறித்தார்கள்.

நே: தனியாளாக இதை எதிர்கொண்டிருப்பீர்கள். உங்கள் குடும்பத்தோடு கூட இதைப்பற்றிப் பேச முடியாது என்பது உங்களை வெலவெலத்து போக வைத்திருக்கும் அல்லவா?

மியா : இல்லையில்லை. பயமாகத்தான் இருந்தது. ஆனால், அதனை நகைச்சுவையோடு தான் எதிர்கொண்டேன். அந்த மிரட்டலுக்கு வேடிக்கையாக இப்படிப் பதில் சொன்னேன், “என் மார்பகங்களை வெட்டாதவரை ஒன்றும் பிரச்சினையில்லை. அவை விலை மதிப்பில்லாதவை” .

நே: இது நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. என் வாழ்க்கையே சின்னாபின்னம் ஆகியிருந்தது என்று சொன்னீர்கள். நீங்கள் செய்ததற்கு எந்தளவுக்குத் தனிப்பட்ட அளவில் பொறுப்பெடுத்துக் கொள்வீர்கள்.

மியா: 100 % நான் தான் பொறுப்பு. நான் எடுத்த முடிவு. அந்தத் துறை குறைகளால் ஆனது பெண்கள் இந்தக் குழிக்குள் விழாமல் தடுக்க நாம் எதையாவது செய்ய வேண்டும். ஆனால், இறுதியாக அந்த முடிவு என்னுடைய முடிவு.

நே: உங்களைப் பணம் கொட்டுகிற இயந்திரமாகத் தான் பார்த்தார்கள் இல்லையா. உங்களுக்கு என்று ஆலோசகர்கள், வழக்கறிஞர் என்று யாருமே இல்லையா?

மியா: அப்படித்தான் பார்த்தார்கள். 21 வயதில் எந்தப் பெண்ணுக்கு ஆலோசகர், வழக்கறிஞர் எல்லாம் இருக்கிறார் சொல்லுங்கள்.

நே: இது எவ்வளவு மன அழுத்தத்தை உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளவே கேட்கிறேன். இது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நீங்கள் இப்போது சலனமில்லாமல் காணப்படுகிறார்கள். அதனைக் கடந்து வந்திருப்பீர்கள். ஆனாலும், அந்த மன உளைச்சலில் ரணங்கள் இன்னமும் இருக்கின்றனவா

மியா: ஆமாம். குறிப்பாகப் பொது இடங்களுக்குப் போகிற போது அந்த உளைச்சல் என்னை நெரிக்கிறது. என்னை அப்படியே மக்கள் வெறித்துப் பார்க்கிறார்கள். என்னுடைய ஆடைக்குள் துளைத்துக் கொண்டு பார்ப்பதாக உணர்கிறேன். எனக்குள் ஆழமான அவமானத்தை அது உண்டாக்குகிறது. நான் எப்படி உணர்கிறேன் தெரியுமா? எனக்கென்று இருந்த அக உரிமை (privacy) எதுவும் கிடையாது. நான் இவர்களுக்கு ஒரு கூகுள் தேடல் தூரம் மட்டுமே..

நே: இந்தப் புகைப்படங்களை நீங்கள் இணையத்தில் இருந்து அகற்ற முடியாது. அது உங்களுடைய மனதுக்கு உளைச்சலை தரும் ஒன்று என்றாலும் யாருடைய பார்வையில் இருந்தும் அவற்றைக் காணடிக்க முடியாது. இதே நிலைமைதான் பிற போர்ன் நடிகர்களுக்கும் இல்லையா?

மியா: நான் கண்முன் இதனைக் காண்கிறேன். சமீபத்திய நேர்முகத்திற்குப் பின்பு பலர் தொடர்பு கொள்கிறார்கள். பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்ட பெண்கள், போர்ன் துறைக்குள் இழுத்து வரப்பட்டவர்களின் கேவல்கள் அவை. எப்படி இந்தப் பெண்களின் வாழ்க்கை சீரழிந்துபோயிருக்கிறது என்றும், இந்த ஒப்பந்தங்களால் ஆண்கள் மட்டும் எப்படிக் கொழிக்கிறார்கள் என்றெல்லாம் தெரியவருகிறது. இவையெல்லாம் “நாம வெளிப்படையா பேசுனதால என்னைப்போலவே உணருற மத்த பொண்ணுங்க கூடப் பேச முடியுது” என்று தோன்றவைக்கிறது. என்னளவிற்கு ஆழமாகக் காயப்படாவிட்டாலும், பாதுகாப்புணர்வு இல்லாமல் தவிப்பது, தாங்கள் விரும்பாத ஒன்றை கட்டாயத்தின் பேரில் செய்வதைப் புரிந்து கொள்கிறார்கள்.

நே: உங்களுக்கு இந்தத் தளம் கிடைத்து இதைக்குறித்து எல்லாம் பேசுகிறீர்கள். கடந்த காலத்தில் இருந்து வேறுபட்டுச் சமூகம் எப்படிப் போர்னோகிராபியை பார்க்கிறது என்பதையும், அதில் ஈடுபடுபவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் மாற்ற முனைகிறீர்கள் எனக்கருதலாமா ?

மியா : பெண்கள் எப்படிப் போர்ன் துறைக்குள் இழுத்து வரப்படுகிறார்கள் என்பது மாற்றப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். பெண்களாகவே விரும்பினால் மட்டுமே உள்ளே வர முடியும், அவர்களை யாரும் அழுத்தம் தந்து இழுத்து வரமுடியாது என்று நிலைமை மாற வேண்டும். அங்கேயே, அதே இடத்தில் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று கட்டாயப்படுத்த இயலாது. அதனை ஒரு வழக்கறிஞர் படித்துப் பார்க்க வேண்டும், பொறுமையாக வீட்டில் சில நாட்கள் படித்துப் பார்த்துவிட்டு ஒப்புக்கொள்ள வசதி வேண்டும்.

நே: உலகம் முழுக்கப் பல்வேறு நாடுகள் ‘போர்ன்மயமாக்த்தில்’ சிக்குண்டு கிடக்கின்றன. அதுவும் குறிப்பாக இளைஞர்கள் இவற்றில் மூழ்கிப்போவது ஆண், பெண் இருதரப்புக்கும் இடையேயான உறவை, அணுகும் விதத்தைப் பெருமளவில் அரித்து அழிக்கிறது என்கிற பார்வை ஒரு தரப்பிடம் நிலவுகிறது . உங்களின் பார்வை என்ன ?

மியா : நிச்சயமாகப் போர்ன் உறவுகளைச் சீர்குலைக்கிறது. போர்ன் வீடியோக்களைப் பார்த்துவிட்டு அதனையே தங்கள் வாழ்வினில் வரும் பெண்களிடம் ஆண்கள் எதிர்பார்ப்பது அபத்தமானது. காணொளியில் காண்பிக்கப்படுவது உண்மையில்லை. அவ்வளவு கச்சிதமானவர் யாருமில்லை. ஒரு புதன்கிழமை இரவு இத்தகைய நம்ப முடியாத செயல்களைக் காதலிக்கும் ஒருவரிடம் யாராலும் செய்ய முடியாது.

நே: நாம் நிறையப் பேசிவிட்டோம். கரடுமுரடான பயணமாக இருந்திருக்கும். மிகக் குறுகிய காலம் இருந்த ஒரு துறையில் இயங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்னமும் உலா வருவதைக் கடந்து வேறுபட்ட வாழ்க்கையை, உங்களைப் போர்னில் ஈடுபட்டவர் என்கிற கோணத்தில் இருந்து பார்க்காத உறவுகளை அடைந்திருக்கிறீர்கள் அல்லவா?

மியா: என்னைப்பற்றி எதுவுமே கேள்விப்பட்டிருக்காத ஒரு ஆணை கண்டடைந்தது பெரும்பேறு. அது அற்புதமானது. நாங்கள் பேச ஆரம்பித்த பிறகு, இதைக்குறித்துச் சொன்னேன். “நாம் பேச ஆரம்பித்த பிறகு உன்னைப்பற்றித் தேடினேன். 5 மில்லியன் பேர் பின்தொடரும் உன்னைப்பற்றிக் கூகுள் செய்யாமல் இருக்க நான் ஒன்றும் முட்டாள் இல்லை” என்று அவர் சொன்னார். என்னுடைய கடந்த காலத்திற்குப் பிறகு டேட்டிங் செய்வது கடினமானதாக இருந்தது. ஆண்கள் யாரும் கிடைக்கவில்லை என்றல்ல பொருள். அதற்குள் மூழ்கிப்போய் இருக்காத ஒருவரை கண்டடைவது சவாலானதாக இருந்தது. புரியும் என்று எண்ணுகிறேன்.

நே: 21 வயது மியாவை ஃபுளோரிடா நகரத்தில் நிறுத்தி ‘நீங்கள் அழகாக இருக்கீங்க நீங்க அட்டகாசமா தெரியுறீங்க. எங்ககூடச் சேர்ந்து வேலை செய்வீங்களா’ என்று ஒரு இளைஞன் நிறுத்தி பேசுகையில், மியாவிடம் நீங்கள் பேச முடியும் என்று வைத்துக் கொள்வோம். என்ன சொல்வீர்கள்?

மியா: உன்னுடைய பர்ஸில் இருக்கும் ஆயுதம் காத்துக்கொண்டிருக்கிறது. அதனை உபயோகப்படுத்து. அங்கிருந்து ஓடிவிடு மியா

நே: மியா காலிஃபா, hardtalk நிகழ்வில் உங்களோடு உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல.

மியா : என்னை அழைத்தமைக்கு நன்றி!

தமிழில் : பூ.கொ.சரவணன்

அண்ணல் அம்பேத்கர் தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்


அண்ணல் அம்பேத்கர் தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்:

ரமா, நீ எப்படியிருக்கிறாய் ரமா.

இன்று முழுக்க உன்னையும், யஷ்வந்தையும் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். உன்னைப்பற்றி எண்ணுகையில் உருக்குலைந்து போகிறேன். சமீப காலங்களில் என்னுடைய உரைகள் பெரும் விவாதங்களை எழுப்பியிருக்கின்றன. வட்ட மேசை மாநாட்டில் நான் நிகழ்த்திய உரைகள் நன்றாகவும், ஊக்கமூட்டுவதாகவும் இருந்ததாகச் செய்தித்தாள்கள் குறிப்பிட்டுள்ளன. அதற்கு முன்னால், இந்த மாநாட்டில் என்னுடைய பங்கு என்ன எனப் பிரதிபலித்துக் கொண்டிருந்தேன். நம் நாட்டின் ஒடுக்கப்பட்ட குடிமக்களின் முகங்கள் கண்முன் நின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இவர்கள் வலியிலும், துயரத்திலும் உழன்று அல்லல்படுகிறார்கள். தங்களுடைய துயரங்களுக்கு முடிவோ, விடிவோ இல்லையென்று நம்புகிறார்கள். நான் அதிர்ந்து போனேன் என்றாலும், இந்தத் தீமைக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருக்கிறேன். பெரும் அறிவுறுதியை பெற்றவனாக உணர்கிறேன். என்னுடைய மனதில் பல சிந்தனைகள் நிழலாடுகின்றன. இதயம் பல வகையான உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது.

நான் நம் வீட்டையும், உங்கள் எல்லாரையும் காணத்துடிக்கிறேன். உன்னை எண்ணி பிரிவுழல்கிறேன். யஷ்வந்தின் நினைவு வாட்டியெடுக்கிறது. என்னை வழியனுப்ப கப்பல் வரை வந்தாய். உன்னை வரவேண்டாம் என நான் சொல்லியும், எனக்குப் பிரியாவிடை கொடுக்க ஓடோடி வந்தாய். சுற்றியிருந்த மக்கள் என்னை ஆரவாரத்தோடு வழியனுப்பி வைப்பதை கண்கூடாகப் பார்த்தாய். நீ நன்றியுணர்வால் நிறைக்கப்பட்டவளாக, உணர்ச்சிவயப்பட்டவளாகக் காட்சியளித்தாய். உன்னுடைய உணர்வுகளைச் சொற்களைக்கொண்டு வெளிப்படுத்த இயலாமல் நின்றாய். நீ பேச நினைத்ததை எல்லாம் உன் விழிகள் தெரியப்படுத்திவிட்டன. நீ உதிர்க்கும் சொற்களைவிட உன்னுடைய மௌனம் பலவற்றைப் பேசியது. உன் நாவினில் சொற்கள் பூத்தன,எனினும், உன் விழித்துளிகளே அச்சொற்களின் முழுப்பொருளாகும். அந்தக் கண்ணீர்த்துளிகள் வாய்மொழி வெளிப்படுத்த இயலாதவற்றையெல்லாம் பேசின.

லண்டனின் காலை வேளையில் இந்த எண்ணங்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது, அழுதுத்தீர்த்து விட வேண்டும் என்றிருக்கிறது. நான் கிடந்து தவிக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய் ரமா? நம் யஷ்வந்த் நலமா? அவன் அப்பா எங்கே என்று கேட்கிறானா? அவனுடைய மூட்டுவலி மட்டுப்பட்டிருக்கிறதா? நம்முடைய நான்கு குழந்தைகளை இழந்து நிற்கிறோம். யஷ்வந்த் மட்டுமே நமக்காக உயிர்த்திருக்கிறான். அவனே உன் தாய்மையின் முகம். அவனை நாம் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவன் மீது எப்போதும் ஒரு கண் வைத்துக்கொள் ரமா. யஷ்வந்திற்கு நிறையக் கற்பி. இரவு அவனை எழுப்பிப் படிக்க வை. என் தந்தை என்னை இரவில் எழுப்பிப் படிக்க வைப்பார். என்னைத் தவறாமல் எழுப்ப வேண்டுமென்பதற்காக அவர் தூக்கந்தொலைந்து விழித்திருப்பார். அவர்தான் எனக்கு இந்த ஒழுக்கத்தைப் பயிற்றுவித்தார். நான் படிக்க எழுந்ததும் அவர் உறங்கப்போய் விடுவார். இரவு போயும் போயும் எழ வேண்டுமா என எனக்கு ஆரம்பத்தில் சோம்பேறித்தனமாக இருக்கும். படிப்பதைவிடத் தூங்குவதே சுகமானது இல்லையா. ஆனால், இப்போது திரும்பிப்பார்க்கையில், உறக்கத்தை விடவும் கல்வியே வாழ்க்கைக்கு முக்கியமானதாக மாறியிருக்கிறது. இதற்கான பெரும்பாலான பாராட்டுகள் என் தந்தையைச் சேர வேண்டும். நான் படிப்பில் ஆர்வமிக்கவனாக இருக்க வேண்டும் என்பதற்காக என் தந்தை எண்ணற்ற தியாகங்கள் புரிந்தார். என் வாழ்வில் விடியல் மலர்வதற்காக அவர் அல்லும், பகலும் ஓயாமல் உழைத்தார். அவரின் உழைப்பின் கனிகள் தற்போது காய்த்துக்குலுங்குவதைக் காண்கிறேன். இன்று அதைக்குறித்து நான் பேருவகைக் கொள்கிறேன் ரமா.

ரமா, அதற்கு இணையாக யஷ்வந்தும் கல்வியில் கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும். அவன் உள்ளம் புத்தகங்கள் மீது தீராத் தாகத்தைக் கொண்டிருக்குமாறு தூண்டிவிட வேண்டும். ரமா, பணம், ஆடம்பரம் ஆகியவற்றால் பயனொன்றுமில்லை. உன்னைச்சுற்றி அவற்றைக் கட்டாயம் கண்ணுற்றுக் கொண்டே இருப்பாய். இத்தகைய சுகங்களை நாடி மக்கள் ஓயாமல் அலைகிறார்கள். இந்த ஒற்றை இலக்கில் மட்டுமே இம்மக்களின் வாழ்க்கை தேங்கி விடுகிறது. அவர்கள் வேறு எந்த முன்னேற்றம், வளர்ச்சியையும் நாடுவதில்லை. இத்தகைய வாழ்க்கையில் நாம் திருப்தியடைந்து விடக்கூடாது ரமா. நம்மைச்சுற்றி வேதனையைத் தவிர வேறொன்றுமில்லை. வறுமை மட்டுமே நம்முடைய துணைவனாக இருக்கிறது. பிரச்சினைகள் நம்மைவிட்டு விலகுவதேயில்லை. அவமானம், வஞ்சிப்பு, ஏளனம் நம் நிழலைப்போலப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நம்மை இருட்டும், துயரக்கடலும் மட்டுமே சூழ்ந்திருக்கின்றன.

நாமே நம்முடைய மீட்பர்களாக இருக்க வேண்டும். நாமே நமக்கு வழிகாட்டியாக மாற வேண்டும். நாம் தேர்ந்தெடுத்த பாதையில் தீபங்களை ஏற்ற வேண்டும். இந்த வெற்றி நோக்கிய பாதையில் நாமே நடை போடுவோம். சமூகத்தில் நமக்கென்று இடம் எதுவுமில்லை. நமக்கான இடத்தை நாம் தான் உருவாக்க வேண்டும். நம் நிலைமை இப்படியிருப்பதால், யஷ்வந்த்துக்கு உயர்ந்த கல்வியை நீ வழங்க வேண்டுமென விரும்புகிறேன். அவன் முறையாக ஆடையணிவதை உறுதிசெய்வதோடு, சமூகத்தில் பண்புநலன்களோடு பழகவும் பயிற்றுவிக்கவும். நீ அவன் மூளையில் லட்சியத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

உன்னைப்பற்றியே ஓயாமல் நினைத்துக்கொண்டிருக்கிறேன். யஷ்வந்த் குறித்தும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். உன்னை நான் புரிந்து கொள்ளவில்லை என எண்ணிவிடாதே ரமா. உன் வேதனையை நான் உணர்கிறேன். உதிரும் இலைகளைப் போல உன் உடல்நலம் தேய்வதையும், உன் உயிர் மரம் காய்ந்து சருகாவதையும் அறிவேன். ஆனால்,நான் என்ன செய்ய இயலும் ரமா? எப்போதும் விலக மறுக்கும் வறுமை ஒருபுறம் இழுக்கிறது, மற்றொருபுறம் என்னுடைய பிடிவாதமும், உறுதிமிக்கச் சபதமும் நிற்கிறது. அறிவைத் தேடியடைய வேண்டும் எனும் என்னுடைய சபதம்.

வேறு எதைப்பற்றியும் கவலைப்படாமல் அறிவுத்தேடலில் என்னை மூழ்கடித்துக்கொண்டு விட்டேன். என்னைத்தாங்கும் வலிமைமிக்கத் தூணாக நீயே இருக்கிறாய். என்னுடைய உலகத்தைக் கவனித்துக்கொள்கிறாய். உன் கண்ணீரைக்கொண்டு என் மனவுறுதியை வளர்த்தெடுக்கிறாய். இதனால்தான் எல்லையற்ற அறிவுப்பெருங்கடலில் எந்தத் தடையுமின்றி நான் ஊறித்திளைக்க முடிகிறது. நான் சத்தியமாகக் கொடுமைக்காரன் இல்லை ரமா. என் அறிவு வேட்கையைச் சளைக்காத தேடலின் மூலம் தணித்துக் கொண்டிருக்கிறேன். இதிலிருந்து திசைதிருப்பும் எதுவும் என்னைக் காயப்படுத்துகிறது. என் அமைதியை சீர்குலைத்து, கோபம்கொள்ள வைக்கிறது. எனக்கும் இதயம் உள்ளது ரமா, நான் பரிதவிக்கிறேன், ஆனாலும், புரட்சிக்கு என்னை ஒப்புக்கொடுத்திருக்கிறேன். இந்த உயரிய லட்சியத்திற்காக என் உணர்ச்சிகளைத் தீயிட்டு பொசுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இதனால், நீயும், யஷ்வந்தும் கூடச் சமயங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பது உண்மை. ஆனால், இந்த மடலை ஒரு கையால் எழுதிக்கொண்டே இன்னொரு கரத்தால் உன் கண்ணீரைத் துடைக்கிறேன். நம்ம செல்ல “பட்லே”வை (யஷ்வந்த்) பார்த்துக்கொள் ரமா. அவனை அடிக்காதே. நான் அவனை அடித்திருக்கிறேன். அதை ஒருக்காலும் அவனுக்கு நினைவுபடுத்தாதே. அவன் உன்னுடைய பிரிக்கமுடியாத பகுதி.

இந்தச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மத, உளரீதியான பக்கச்சார்புகள், சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அறவே வேரறுக்கும் வழியைக் கண்டடைய வேண்டும். இவை அன்றாட வாழ்வில் ஆழமாக ஊறிப்போயிருக்கின்றன. இவற்றை மொத்தமாக எரித்திட வேண்டும். மீண்டுவர முடியாதவகையில் புதைத்திட வேண்டும். இவற்றைச் சமூகத்தின் ஞாபகம், கலாச்சாரத்தில் இருந்தும் கூட அறவே அகற்ற வேண்டுமென விரும்புகிறேன்.

ரமா, இந்த மடலை படித்துக்கொண்டிருக்கும் போதே உன் விழிகளில் வழியும் நீரின் ஈரத்தை உணர்கிறேன். நீ திக்குமுக்காடிப் போயிருக்கிறாய் என எண்ணுகிறேன். உன் இதயம் கனத்துப்போயிருக்கும். உன் உதடுகள் நடுங்கிக்கொண்டிருந்தாலும், உன் உணர்ச்சிகளுக்கு நீ சொல்ல முயல்பவற்றைக் கடத்தும் வார்த்தைகள் கிடைக்கவில்லை. நீ அத்தகைய உடைந்துவிடக்கூடிய உணர்ச்சிகரமான நிலையில் இருக்கிறாய்.

ரமா, நீ என் வாழ்க்கையில் இல்லையென்றால் என்னாகி இருக்கும்? நீ என் துணையாக உடன்வராமல் போயிருந்தால் என் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும்? வாழ்க்கையில் சொத்து சுகமே முக்கியம் என எண்ணுபவளாக இருந்திருந்தால், என்னைத் தனியே தவிக்கவிட்டு போயிருப்பாள். யாராவது எப்போதும் பசியால் வாடவும், பம்பாயில் பசுமாட்டின் சாணியைத் தேடியலையவும், அதை வறட்டியாக்கி அடுப்பெரிக்கவும் யாராவது விரும்புவார்களா? வீட்டில் கிழிந்து போன துணிகளை ஒட்டுப்போட்டுக் கொண்டும், வறுமைக்கொடுமையில் நான் கொட்டும், ‘ஒரே ஒரு வத்திப்பெட்டி தான் மாதம் முழுவதற்கும்’ அல்லது ‘இருக்கிற அரிசி,பருப்பு, உப்பை வச்சு மாசக்கடைசி வரை ஓட்டித்தான் ஆகணும்’ முதலிய சொற்களைத் தாங்கிக்கொள்வார்கள்?

என்னுடைய ஆணைகளை நீ கடைபிடிக்காமல் முரண்டுபிடித்திருந்தால் என்னாகி இருக்கும்? நான் உடைந்து போன உள்ளத்தோடு, என் சபதத்தைக் காப்பாற்ற முடியாதவனாகப் போயிருப்பேன். முற்றிலும் நிலைகுலைந்து, எண்ணிப்பார்க்க கூட முடியாத அளவுக்கு என் கனவுகள் சுக்குநூறாகியிருக்கும். ரமா, என் வாழ்வில் நான் தேடுவதையெல்லாம் தொலைத்திருப்பேன். எல்லாமும், என்னுடைய எல்லா உள்ளக்கிடக்கைகளும் நிறைவேறாமல், காயப்பட்டுப் போயிருப்பேன். சிறு பதரைப்போலப் பொருளற்றவனாக இருந்திருப்பேன்.

உன்னையும், என்னையும் பார்த்துக்கொள். சீக்கிரம் ஊர் திரும்பிவிடுவேன். கவலைப்படாதே.

என்னுடைய நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

உன்னுடைய,
பீமாராவ்,
லண்டன்,
30 டிசம்பர் 1930

(அண்ணல் அம்பேத்கர் தன்னுடைய மனைவி ரமாபாய்க்கு எழுதிய இக்கடிதம் மூன்று மொழிகளைக் கடந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கரியர் யஷ்வந்த் மனோகர் எழுதிய ‘ரமாய்’ எனும் ரமாபாய் குறித்த வரலாற்று நூலில் மராத்தி மூலம் காணக்கிடைக்கிறது.இம்மடலை பரத் யாதவ் இந்தியில் மொழியாக்கம் புரிந்தார். அதனைத் தோஷ் ஆங்கிலத்திற்கு மொழிமாற்றினார்.)

தமிழில்: பூ.கொ.சரவணன்

உயரே, கேம் ஓவர் -போராளிகளின் கதை


கடந்த சில வாரங்களில் ‘உயரே’,’கேம் ஓவர்’ திரைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது. இரு திரைப்படங்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. பார்வதி, டப்ஸி எனப் பெண்களைச் சுற்றியே இக்கதைகள் சுழல்கின்றன. நம்பிக்கையும், வெளிச்சமும், தேடலும் பாய்ந்தோடி கொண்டிருந்த இருவரின் வாழ்விலும் ஆண்களின் வன்மம் மிகுந்த வன்முறையால் அச்சமும், தற்கொலை எண்ணமும் சூழ்கிறது. இதனை எப்படி அவர்கள் எதிர்கொண்டார்கள்? மீண்டார்களா இல்லை மடிந்தார்களா என்பது கதையைச் செலுத்தும் மையச்சரடு எனலாம்.

‘உயரே’ பல வகைகளில் நம் அன்றாட வாழ்க்கையில் கடக்கும் உயரே பறக்க முனையும் பெண்களை இயல்பாக முன்னிறுத்துகிற கதை. அதில் மிகைப்படுத்தல் என்பது கிட்டத்தட்ட எங்கேயும் இல்லை. ஒரு பைலட்டாக மாறிவிட வேண்டும் என்கிற குழந்தைப் பருவக்கனவு பார்வதியை செலுத்துகிறது. எப்போதும் உயரத்தில் உலவ வேண்டும் என்கிற கனவு கண்களில் மின்னுகிறது. அவளின் தந்தை செல்ல மகளின் கனவிற்காகத் துணை நிற்கிறார். உற்ற நண்பனாகத் தந்தை எப்படித் திகழ முடியும் என்பதை அவரின் பாத்திர வார்ப்பின் மூலம் இயல்பாகக் கடத்தி விடுகிறார்கள். தன்னுடைய மகளின் ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் உலகமே தனக்குச் சொந்தமானதை போல அவர் குதூகலிப்பது மனதை நெகிழ வைக்கிறது. தன்னைத் தேய்த்துக் கொண்டு தன் மகளின் பயணத்தில் அவரும் பங்கு கொள்கிறார்.

‘கேம் ஓவர்’ திரைப்படம் இப்படி இதமான அனுபவத்தை எந்தக் கணத்திலும் தருவதில்லை. படபடப்பும், நடுக்கமும், நாடித்துடிப்பை ஏற்றும் இசையும் தான் படம் முழுக்க நம்மைப் பீடிக்கிறது. டப்ஸியின் உலகம் இருளைக் கண்டு அஞ்சுவதாகவே இருக்கிறது. கடந்த காலம் அவரைக் கதவடைத்துக் கொண்டு அருவருப்போடும், ஏளனமாகவும் பார்க்கும் நிகழ்காலத்தைப் பார்க்க விடாமல் தடுக்கிறது. உளவியல் த்ரில்லரா, பேய்ப்படமா, பெண்ணியப் படமா என்று எந்த வகைமைக்குள்ளும் அடங்காமல் ஒரு கேமரின் வாழ்க்கையைப் போராட்டங்களோடு படம் விரித்துச் சொல்கிறது.

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

இரு திரைப்படங்களின் முதல் காட்சியுமே பரபரப்பாகவே துவங்குகிறது. ஒன்று உடைந்து விழப்போகும் விமானத்தைக் காப்பாற்ற முயலும் படபடப்பு தரும் காட்சிகள் வளர்வதைக் காட்டுகிறது. இன்னொன்று ஒரு பெண்ணைக் கொன்று, பந்தாடும் சில்லிட வைக்கும் காட்சிக்கோர்வையைச் சடசடவென்று கண்முன் பரப்பி நம்மையும் அந்த ‘pacman’ ஆட்டத்திற்குள் இழுத்து கொள்கிறார்கள்.

*spoilers ahead*
பள்ளிக்காலக் காதல் பார்வதியின் கனவுகளை முடக்கிப் போட பார்க்கிறது. சந்தேகமும், அதீத கட்டுப்பாடும் பிரியத்தை முறித்துக் கொள்ள முனைகையில் எல்லாம் வாஞ்சையாகக் காதலனை அணைத்து இறுகப்பற்றிக் கொள்கிறார் பார்வதி. ஆனால், மிகைத்த அடக்குமுறை ஒரு கட்டத்தில் பிரிவாக வெடிக்கிறது. பார்வதியின் முகத்தில் அமிலம் வீசுகிறான் அந்தக் கொடூரன். சீக்கிரமே விமானியாகி வானில் சிறகடிக்கப் போகிறோம் என்கிற கனவு குப்புற விழுகிறது.

ஒரு ஆணின் கண நேர உணர்ச்சி வேகம் எப்படிப் பெண்ணின் வாழ்நாள் வேதனையாக மாறிவிடுகிறது என்பதைப் படிப்படியாகக் கண்முன் கொண்டு வருகிறார்கள். அமில வீச்சு தன்னம்பிக்கையும், பெருங்கனவுகளும் கொண்ட ஒரு ஆளுமையை எப்படி உடைத்துப் போடுகிறது என்பதைக் காட்சிகள் கடத்துகின்றன. என்னமோ நம் மேனியில் அமிலம் பட்டு எரிவதை போன்ற பதைபதைப்பை அடுத்தடுத்த கணங்கள் கடத்துகின்றன. நம்முடைய பாலினத்தைக் கடந்து பார்வதியாகவே நாமும் உணர நேர்கிற அளவுக்கு நேர்த்தியான காட்சியமைப்பும், நடிப்பும் இணைகின்றன.

டப்ஸியின் வாழ்வில் இருளும், ஒரு டாட்டூவும் வெளிவரவே முடியாது என்று நம்புகின்ற அளவுக்கான வடுவை ஏற்படுத்துகின்றன. இந்தப் போராட்டத்தில் அவருக்குள் நிகழும் மாற்றங்கள், மனக்கொந்தளிப்புகள், இனிமேலும் உயிரோடிருந்து இருந்து என்ன பயன் என்கிற ஊசலாட்டங்கள் ஆட்கொள்கின்றன. இன்னும் கொஞ்ச தூரம் தான், மீண்டு விடலாம் என்கிற நம்பிக்கையை அவரின் கையில் குத்தியிருக்கும் டாட்டூவே எதிர்பாராத வடிவத்தில் தருகிறது. ‘நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்வுதான் என்று தெரிந்து விட்டால் இறுதியாக ஒரு முறை போராடித்தான் பார்த்துவிடு மகளே’ என்று அந்த நிகழ்வு டப்ஸியோ உந்தித்தள்ளுகிறது. அவரால் அது முடிந்ததா என்பதை இரண்டாம் பாதி அச்சப்பட வைக்கும் திரைக்கதையோடு, ஒரே மாதிரியான காட்சிகளை வெவ்வேறு வகைகளில் கண்முன் நிறுத்தி கதை சொல்கிறது. அஸ்வின் சரவணன் , காவ்யா ராம்குமாரின் திரைக்கதை நம்மை நடுங்கவும், நெருங்கி அந்த உலகை காணவும் வைக்கிறது.

பார்வதியின் பறக்கும் கனவுகள் குப்புற விழுந்த பின்பு அவரின் தற்கொலை எண்ணங்கள் உடனிருப்பவர்களால் தள்ளிப்போகிறது. ‘லட்சம் லட்சமா சம்பாதிக்கலாம்’ என்று முதல் வகுப்பிலேயே ஆசை காட்டும் பட்டப்படிப்பை விட்டு வானமே எல்லை என்று எண்ணிய அவர் வேகமாக வெளியேறுகிறார். சட்டப்போராட்டங்கள் ‘எத்தனை நாளைக்கு இந்த வேதனை’ என்று அவரை உடைந்தழ வைக்கிறது. ஒரு புதிய நம்பிக்கை என்றோ சந்தித்த ஒரு அறிமுகத்தின் மூலம் கிட்டுகிறது. ஆனால், கடந்த காலத்தின் காயங்களுக்குக் காரணமானவனும், சிதைந்து போன முகமும், மீண்டெழ முனையும் அகமும் சந்தித்துக் கொள்ளும் புள்ளிகள் நிலைமையைச் சிக்கலாக மாற்றுகின்றன.

டப்ஸி ஓயாமல் pacman கேமில் தன்னைத் தொலைக்கிறார். அவரின் அச்சங்கள் கனவா, நிஜமா என்று புரியாத ஒரு கேம் உலகத்திற்குள் அவரைத் தள்ளுகிறது. சற்று ஏமாந்தாலும் மரணம் நிச்சயம் என்கிற சூழல். மூன்றே வாய்ப்புகள். அவரோடு பேசக்கூட மறுக்கிற, முகந்தெரியாத இருட்டு மிருகங்கள் கொன்று போட பார்க்கின்றன. ஏளனமும், நசுக்கிவிடுகிறேன் பார் என்கிற வெறி கொண்டும் திரியும் அவற்றோடு தன்னுடைய ஒரே துணையான வேலையாளான கலாம்மா (வினோதினி) உடன் எதிர்கொள்கிறார்.

இரு திரைப்படங்களிலும் குற்றம் புரிந்தவனைச் சிறைக்கு அனுப்பி விட்டாலும் அன்றாடம் அவமானம், குற்றவுணர்வு, வேதனை என்று பலதரப்பட்ட உணர்வுகளை எதிர்கொண்டு கொண்டே இருக்கும் பெண்களின் உலகம் நம்மைப் பதைபதைக்க வைக்கிறது. தண்டனை வாங்கித்தந்துட்டா எல்லாம் சரியாகிடுமா என்கிற கேள்வி ஆண்களின் முகத்தையும், பொதுபுத்தியையும் சேர்த்தே அறைகிறது. உயரே கதையில் ஆண்களின் உதவியோடு பார்வதி மீள்கிறாள். ஆனால், கேம் ஓவரில் தன்னுடைய போராட்டத்தை ஆண்களின் துணையின்றித் தானே வெல்ல முனைகிறார் ஸ்வப்னா (டப்ஸி).

நம்பிக்கையும், கதகதப்பும் வரும் என்று நம்புகிற கணத்தில் தன்மானத்தைக் காவு கேட்கும் நிகழ்வுகள் அரங்கேறுகிற போது, ‘கொஞ்சம் flexible-ஆ இருக்கப் பாரேன்’ என்கிற அறிவுரையை ஏற்க மறுக்கிற பார்வதி நிமிர்ந்து உட்கார வைக்கிறார். அதற்கு அவர் சொல்கிற காரணம் தன்மானத்தை மீட்டெடுக்க முனைபவர்களுக்கான வெளிச்சப்புள்ளி. உடைந்து போன சிதிலங்களில் இருந்து அவர் நடுங்கியபடியே, ரத்தம் சிவந்த, கருகிப்போன முகத்தோடு எழுந்து காக்பிட்டில் உட்கார்கிற கணம் மீண்டும் மீண்டும் கண்முன் நிறைந்து ஒளிர்கிறது. ஒரு பெண்ணிற்குத் தேவை வாழ்க்கை தரும் துணை தான் என்கிற பார்வையை இயல்பாக மனு அசோகனின் இப்படைப்பு நொறுக்குகிறது. உதவுகிறவர்கள் தங்களின் வாழ்க்கையை முழுதாக மீட்கும் மீட்பர்களாக மாற வேண்டியதில்லை என்பதை இயல்பாகப் பார்வதியின் பாத்திரம் புரிய வைக்கிறது.

இரு திரைப்படங்களும் வெவ்வேறு வகையான உணர்வுகளைத் தருகின்ற கதைப்போக்கை கொண்டவை. ஆனால், இரண்டுமே ஆண்களின் வன்முறையையும், பாதிக்கப்பட்டவர்களை நோக்கியே வீசப்படும் ஏளனப்பார்வையையும் ஒட்டியே நகர்கின்றன. இரு கதைகளும் நரகத்திற்குள் விழுந்த பின் நாயகிகள் அத்தனை போராட்டத்தோடு எழுந்து நிற்க முயல்கிறார்கள். பிரமிக்க வைக்கும் வெற்றிகள் அல்ல அவர்களின் பயணத்தின் நோக்கம். தங்களின் ஆளுமையை, சிற்றகல் வெளிச்சத்தைத் தங்களுக்கே உரிய வகையில் திரும்பப் பெற முயலும் போர் அது. உச்சக்காட்சி முடிந்த போது இரு திரைப்படங்களும் கைதட்டல்களைப் பெற்றுக்கொண்டன. இக்கதைகள் ஆண்களாகிய நாம் வாழ முடியாத வாழ்வினை நெருக்கத்தோடும், உண்மையின் சாயலோடும் சொல்கின்றன. குற்றப்பார்வையை நம்மை நோக்கி திரைமொழியில் திருப்பும் இரண்டு முயற்சிகளும் அவற்றின் சிற்சில போதாமைகளைத் தாண்டியும் மகத்தான திரைப்படங்கள்.

கும்பளாங்கி இரவுகள்: கனவிலும் கசடுகள் அகற்றும் கதை


 

மது நாராயணின் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில், நஸ்ரியா தயாரிப்பில் வெளிவந்திருக்கும்
ஷ்யாம் புஷ்கரனின்
‘கும்பளாங்கி இரவுகள்’ திரைப்படம் ஒரு தனித்த அனுபவம். இதற்கு மேல் சிதிலமடைய முடியாது என்கிற அளவுக்குக் குலைந்து போய் நிற்கும் ஆண்கள் மட்டுமே வசிக்கும் ஒரு வீடு தான் கதையின் மையம். குட்டிச்சுவரை கிட்டே நெருங்கும் ஒரு இல்லம். அங்கே கசடுகளும், சச்சரவுகளும், அவநம்பிக்கையுமே சூழ்ந்து நிற்கிறது. ஓரிரு காதல்களும், தன்னை முழுமையான மனிதனாக உணரும் ஒருவரும் இந்த வீட்டின் போக்கை எப்படி மாற்றுகிறார்கள் என்பதே கதை.

இந்தக் கதை ஒரு வகையான மாயக்கதை தான். இதனை யதார்த்தத்தின் பிரதி என்று முழுக்கச் சொல்லிவிட முடியாது. ஆனாலும், தேர்ந்த திரைக்கதையும், வெகு இயல்பாகத் திரையில் வாழும் நடிகர்களும் அலையாத்தி காடுகளும், உப்பங்கழிகளும் நிறைந்த கும்பளாங்கி கிராமத்திற்கே அழைத்துப் போய்விடுகிறார்கள்.
ஏற்றத்தாழ்வுகள் அடிப்படையிலான வன்மத்தையும், முன்முடிவுகளையும் தாங்கிக் கொண்டு திரியும் ‘முழுமையான மனிதர்களை’ இப்படம் பகடி செய்கிறது. அதனைப் பரப்புரைத் தொனியின்றிச் செய்வது தான் இப்படத்தை கலைப்படைப்பாக உயர்த்துகிறது. சீர்குலைந்து போன குடும்பங்களை நாடிச்செல்லும் காதல்கள் வீழவே செய்யும் என்கிற பொதுப் புத்தியை கலைத்து போடுகிறார்கள் கும்பளாங்கி மாந்தர்கள்.
மரபை மீறுகிற ஆவேசம் இன்றி, சிற்சில வரிகளில், முக மாற்றங்களில் அடக்குமுறை கேள்விக்கு ஆளாகிறது.

#spoilers ahead#
‘என் பெற்றோரின் சாபம் தான் நான் இருக்கிற இடத்தை எல்லாம் மண்மேடாக ஆக்கிவிடுகிறது. இந்த வீடும் அப்படி ஆகிடும்’ எனக் கதறுகிற பெண்ணைப் பார்த்து, ‘இதுக்கு மேலே இந்த வீட்டில நாசமா போக என்ன இருக்கு? என்னடா ஃபிராங்கி’ எனச் சௌபின் கேட்கையில் ஊழை வெல்லும் உறுதி திரையில் ஒளிர்கிறது. ‘நான் ஆம்பிளைடி’ என ஷானே நிகாம் முஷ்டி முறுக்குகையில் ‘போடா’ என்று நாயகி புறங்கையால் அவனைத் தள்ளுவது அத்தனை அழகானது. ‘மீன் பிடிக்கிறதெல்லாம் மட்டமான தொழில் இல்லையா?’ என்கிற மேட்டுக்குடியின் கேள்வியை மீனவரின் மகனே கேட்கிற போது, அன்பும், உணவின் சுவையின் நினைவுகளும் மின்ன, ‘எனக்கு மீன்னா உசுரு. மீன் பிடிகிறது கேவலம்னு நான் சொன்னேனா’ என்று அவனுடைய காதலி கேட்கையில் கைதட்டாமல் இருக்க முடியவில்லை. மதங்களைக் கடந்து காதல் கொள்ளும் பெண், %கர்த்தர் நமக்கும் தான் நெருக்கமானவர் % என்கிற கணம் ஆழமானது.

Image may contain: 7 people, including Gowthami, people smiling

‘என்னடீ நான் உனக்கு அண்ணன் இல்லையா’ என்று காதலை குலைத்து போடும் தருணத்தில், ‘நீ அண்ணனாவே இருந்தாலும் வாடி, போடி போடக்கூடாது.’ என்கிற எதிர்க்குரல் ஏன் அத்தனை கம்பீரமானதாக இருந்தது? அதுவரை எதிர்ப்பைக் காட்டாத பெண்ணிற்குள் கனன்று கொண்டிருக்கும் கேள்வித்தீ சுடர்விட்டுப் பரவுகையில் ஊற்றெடுக்கும் வெம்மை தானோ அது?
#spoilers over#

கச்சிதமான மனிதனாக வலம்வரும் ஃபகத் ஃபாசிலின் நடிப்பும், அந்த மிரட்டும் பார்வையும், மிரளவைக்கும் மருட்சியான சிரிப்பும், எதையுமே செய்யாமலே எதையாவது செய்து விடுவாரோ என்கிற படபடப்பை தருகிற காட்சியமைப்பும் மறக்க முடியாத அனுபவத்தை வாரி நிறைக்கின்றன. கும்பளாங்கி இரவுகள் அவநம்பிக்கை, மரணங்கள், கண்ணீர், காழ்ப்புகள் அனைத்தையும் கரைக்கும் வல்லமை மானுடத்திற்கும், நகர முனையும் மாந்தர்களுக்கும் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லிச்செல்கிறது. இந்தக் கதையின் நாயகர்கள் அசகாயசூரர்கள் இல்லை, அவர்கள் மடிகள் நாடி தேம்புபவர்கள். உடன்வர மறுக்கும் உறவுகளின் வலிகளை உணர்ந்து கொள்கிறவர்கள். இடிபாடுகளில் இருந்து எழுந்து புன்னகைப்பவர்கள். படுக்கைக்குள் எட்டிப்பார்ப்பவர்களை எட்டி உதைக்க அஞ்சாதவர்கள். அவசியம் பாருங்கள்.

வெறுப்பற்ற பெண்ணியம் பேசுவது எப்படி?


Nanette என்கிற ஹன்னா காட்ஸ்பியின்’ netflix’ நிகழ்ச்சி எளிமையாகத் துவங்குகிறது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ‘ஸ்டாண்ட் அப் காமெடி’ கலைஞர். வயிறு குலுங்க சிரிக்கப் போகிறோம் என்கிற எண்ணத்தோடு நிகழ்வை காண ஆரம்பித்தேன். முதல் சில கணங்களில் தன்னுடைய இரு நாய்களோடு அமர்ந்து இருந்து விட்டு, ஹன்னா சிட்னியில் உள்ள அரங்கத்துக்குள் நுழைகிறார். அரங்கம் நிரம்பி வழிகிறது. நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் இது.

 

Image result for hannah  nanette

“நான் டாஸ்மானியா மாநிலத்தின் சிறிய நகரத்தில் வளர்ந்தவள். டாஸ்மானியா அற்புதமான இடம். அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால், ஒரு நாள் அந்த மாநிலத்தை விட்டு நான் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்குக் காரணம் ஒரு கடிதம். அன்புள்ள மேடம் என்று துவங்கிய அந்தக் கடிதம் என்னை மாநிலத்தை விட்டு வெளியேற சொன்னது. நான் என்னை ஓரளவிற்கு லெஸ்பியனாக உணர்பவள். என்னுடைய மாநிலத்தில் 1997-வரை தன் பாலின உறவானது சட்டப்படி குற்றம். என் ஊரை பொறுத்தவரை தன்பாலின ஈர்ப்பு மோசமான விஷயம். தன்பாலின உறவில் ஈடுபடுவர்கள் தங்களுடைய மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு ஆஸ்திரேலியாவின் மையப்பகுதிக்கு மொத்தமாக ஓடிபோய் விட வேண்டும். மறந்து கூட மீண்டும் டாஸ்மானியா வரவேண்டும் என்று எண்ணக்கூடாது.

நான் என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சிகளில் லெஸ்பியன் உறவுகள் குறித்தும், என்னைக் குறித்தும் பல்வேறு நகைச்சுவை துணுக்குகளை உதிர்ப்பேன். தன்பாலின உறவுகள் எப்படி அச்சத்தோடும், ஐயத்தோடும் அணுகப்படுகின்றன எனப் பல்வேறு நகைச்சுவை துணுக்குகளைக் கூட்டத்தினர் சிரிக்க வீசிக்கொண்டே இருப்பேன். ….

 

நான் என்னைப்போன்ற லெஸ்பியன் மக்களின் உணர்வுகளை, சிந்தனைகளைப் போதுமான அளவுக்கு மக்கள் முன் கொண்டு சேர்த்ததில்லை என உணர்கிறேன். ஒரு பெண் என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சியின் முடிவில், ‘போதுமான அளவுக்கு லெஸ்பியன் நகைச்சுவை இல்லை’ என்று குறைபட்டுக் கொண்டார். என்னை லெஸ்பியன் நகைச்சுவை கலைஞர் என அறிமுகப்படுத்துகிறார்கள். நான் லெஸ்பியனாக இருப்பதை விட, அதிக நேரத்தை சமைப்பதில் செலவிடுகிறேன். என்னை ஏன் சமையல் கலையில் அசத்தும் நகைச்சுவை கலைஞர் என்று யாரும் அறிமுகப்படுத்துவது இல்லை? நான் அனேகமாக இவ்வகையான நகைச்சுவை நிகழ்ச்சிகளை மொத்தமாக முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

நான் நகைச்சுவை கலைஞராக எப்படி உருவெடுத்தேன்? என்னுடைய கலைப்பயணம் என்னை நானே தாழ்த்தி கொண்டு உதிர்த்த நகைச்சுவை துணுக்குகளின் மூலமே வளர்ந்தது. இப்படி என்னை நானே இழிவுபடுத்துவதை இனிமேல் செய்யப்போவதில்லை. ஏன் என்று உங்களுக்குப் புரிகிறதா? ஏற்கனவே சமூகத்தில் ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டுப்பட்டு இருக்கும் ஒருவர் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் நகைச்சுவைகளை மேடைகளில் உதிர்க்கிறார் என்றால் அது தன்னடக்கமா? இல்லை. அது தன்னைத்தானே அவமானப்படுத்திக் கொள்வது. நான் என் குரலை பிறர் கேட்க வேண்டும் என்பதற்காக, பிறர் என்ன பேச அனுமதிக்க வேண்டும் என்பதற்காக என்னை நானே இழிவுபடுத்திக் கொள்வது. இனிமேல், அதனை ஒருக்காலும் செய்ய மாட்டேன். என்னையோ, என்னைப் போன்றவர்களையோ இழிவுபடுத்தும் விஷயங்களை நகைச்சுவை என்கிற பெயரில் நிச்சயம் மேடைகளில் நிகழ்த்த மாட்டேன்….

Image result for hannah  nanette

என்னை நான் லெஸ்பியன் என்று கூட அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டேன். இந்த அடையாளத்தை விட்டும் நான் வெளியேறக்கூடும். என்னை நான் ‘சோர்ந்து போனவர்’ என்று வேண்டுமானால் அடையாளப்படுத்திக் கொள்வேன். நான் சோர்ந்து போயுள்ளேன் . பாலினம் என்பது இயல்பானதாக இருக்க வேண்டும் என்று திரியும் உங்களைப் போன்றவர்களால் நான் அயர்ச்சி அடைகிறேன். நீங்கள் வேறுபட்டவர்கள். எல்லாரும் உங்களைப் போல இருக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு இயங்குபவர்கள். சாந்தம் கொள்ளுங்கள் அன்பர்களே.

 

கொஞ்சம் முடியோடு பிறந்திருக்கும் பெண் குழந்தையை, ‘ஆம்பிள பிள்ளையா’ எனப் பிறர் கேட்கிறார்கள் என்பதற்காகப் பெண்ணுக்கு உரிய அடையாளங்கள் என்று நீங்கள் கருதும் அடையாளங்களால் ஏன் நிறைக்கிறீர்கள்? யாரும் பெண் குழந்தையை, ஆண் பிள்ளை என்று எண்ணிவிடக் கூடாது என்று இத்தனை அச்சப்படுகிறோம். நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஆண், பெண் என்று பிரித்தே வளர்ப்பதை ஏன் நிறுத்திக்கொள்ளக் கூடாது. ஒரே ஏழு அல்லது பத்து ஆண்டுகள் நாம் அனைவரும் ஒன்றே என்று கருதும் வகையில் ஏன் அவர்களை வளர்க்க கூடாது? ஆணுக்கு பெண்ணுக்கு எக்கச்சக்க ஒற்றுமைகள் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா? நாம் அதைக்குறித்து அக்கறை கொள்வதே இல்லை. நம்முடைய கவனம் முழுக்க வேற்றுமைகளில் மட்டுமே குவிந்து இருக்கிறது. ‘Men are from Mars, Women are for his penis’

Image result for cute kids with pink bands

…..

 

என்னுடைய உருவத்தைப் பார்த்துவிட்டு பலர் என்னை ஆண் என்று எண்ணிவிடுவார்கள். பிறகு உண்மை தெரிந்ததும் அதற்காக வெகுவாக வருந்துவார்கள். விமானத்தில் ஏறிய போது. ‘வாங்க சார்’ என்று அன்போடு விமானப் பணி ஆண் அழைத்தார். பின்னர்ப் பெண் என உணர்ந்து கொண்டு அதிர்ந்து போய் மன்னிப்பு கேட்டார். என்னை ஆண் என்று பிறர் கருதும் கணங்களில் எந்த முயற்சியும் இல்லாமலே பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. அதிகாரம் செலுத்த முடிகிறது….ஆனால், நான் நேர் பாலின உறவு கொள்ளும் வெள்ளையின ஆண் என அறியப்பட விரும்பவில்லை. அப்படிப்பட்ட அடையாளம் எனக்குப் பல மடங்கு கூடுதல் சம்பளத்தைத் தரும் என்றாலும் எனக்கு அந்த அடையாளம் வேண்டாம்….

 

இதுவரை மானுடத்தின் முகமாக இருந்த வெள்ளையின ஆண்கள் காட்டிக்கொண்டார்கள்.  திடீரென்று ‘நீங்களும் மனிதர்களில் ஒரு வகை’ என்பதை நாம் முதன்முறையாக உரக்க சொல்லும் போது அதனை எதிர்கொள்ள மறுக்கிறார்கள். அவர்களை ‘வெள்ளையின ஆண்’ என்று விளித்தால் ‘reverse-racism’ எனக் கதறுகிறார்கள். என்னை, என்னுடைய உருவத்தை, பாலின தேர்வை பல்வேறு வகைகளில் கேலி செய்யும் விதிகளை இயற்றி தந்தவர்கள் நீங்கள். உங்களுடைய படைப்பான விதிகளை உங்களுக்கு வாசிக்கக் கொடுக்கிறோம். அவ்வளவே

 

“ஆண்களை இவ்வளவு வெறுக்கும் நீ, ஏன் எங்களைப் போல ஆடை அணிகிறாய், காட்சி அளிக்கிறாய்” எனக் கேட்கிறார்கள். “மச்சி! உங்களுக்கு நல்ல முன்மாதிரி வேண்டும் இல்லையா. அதற்காகத் தான்”. என்பதே என்னுடைய பதில். உங்களுடைய அடையாளத்தைத் தற்காத்துக் கொள்ள முனையாமல், திறந்த மனதோடு அணுகுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். …

இந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளில் உதிர்க்கப்படும் நகைச்சுவை துணுக்குகளின் வடிவம் எளிமையானது. அவை முதலில் ஒரு பதற்றத்தை உருவாக்கும். பின்னர் ஆச்சரியப்படுத்தும் வகையில் அது முடிவுக்குக் கொண்டு வரப்படும். ஆனால், நான் முழுக்கப் பதற்றங்களால் நிரம்பியிருக்கிறேன். நான் இந்த நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன். ஆனால், எனக்கு வேறென்ன செய்வது என்றும் தெரியவில்லை.

 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கலை வரலாற்றில் நான் பட்டம் பெற்றேன். கலை வரலாற்றை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முயல்வது என்னுடைய உலகம் இல்லை. அது எனக்கான உலகம் இல்லை. கலை என்பது மக்களை மேம்படுத்துவது இல்லையா? என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சி உங்களை மேம்படுத்தும் என்று நான் உறுதி தரமாட்டேன். நாம் உருவாக்கிய கசடுகுகளில் நம்மை முக்கி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

 

ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில், மன உளைச்சலுக்கு உள்ளாகும் கலைஞர்கள் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போகிற போக்கில் சொல்லியிருந்தேன். நிகழ்வு முடிந்ததும் என்னிடம் வந்த ஒரு நபர், “கலைஞர்கள் தான் உணர்வதை அப்படியே வெளிப்படுத்த வேண்டும். அதனை மருந்துகளின் மூலம் கட்டுப்படுத்த முயலக்கூடாது. வான்கா மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தால் உலகம் மெச்சும் ‘சூரிய காந்திகளை’ப் படைத்திருக்க முடியாது ” என்று அறிவுரை தந்தார். நான் கற்ற கலை வரலாறு இப்படிக் கைகொடுக்கும் என்று எனக்கு அதுவரை தெரியாது.

Image result for van gogh sunflowers

 

“வான்கா மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்டார் என்பது உண்மையே. ஆனால், அவர் மருந்துகள் உட்கொள்ளாமல் இல்லை. அவர் மருந்துகளை எடுத்துக் கொண்டார். பல்வேறு மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை தந்தார்கள். அவருக்குச் சிகிச்சை தந்த மனநல மருத்துவர்களின் ஓவியங்களை அவர் தீட்டியுள்ளார். அதிலும் ஒரு ஓவியத்தில் மனநல மருத்துவர் foxglove மலர்களோடு நிற்கிறார். அந்த மலர்கள் வலிப்புக்கு வைத்தியம் பார்க்க உதவுபவை. கொஞ்சம் கூடுதலாக உட்கொண்டால், சுற்றியிருப்பவை அடர்மஞ்சளாக அம்மருந்து தெரிய வைக்கும். ஆகவே, மருந்து உண்டதால் தான் வான்கா சூரியகாந்தியை படைக்க முடிந்தது. நீங்கள் இன்புற ஏன் கலைஞர்கள் துன்பத்தில் உழல வேண்டும். அவர்களின் படைப்புத்திறனுக்குத் துயரம் என்கிற சுமையை ஏன் விதிக்கிறீர்கள். உங்களுக்குச் சூரியகாந்தி வேண்டும் என்றால் காசு கொடுத்து வாங்கி வளர்த்து ரசித்து விட்டுப் போங்கள். கலைஞர்களைக் காவு கேட்காதீர்கள்.” என்றேன்.

 

அவர், ‘ரொம்பக் கொதிக்காதீர்கள்’ என்றார். நான் மென்மையாகச் சொன்னேன். ‘நான் கொதிக்கவில்லை. உணர்வதை வெளிப்படுத்துகிறேன்”. ‘கொதிக்காதே/உணர்ச்சிவசப்படாதே’ என்று என்னிடம் சொல்பவர்கள் எல்லாம் அதைக் காட்டுக்கத்தலில் தான் சொல்கிறார்கள். குசு, மூக்கை பார்த்து ‘உன்கிட்டே ஒரே நாத்தம், சுத்தமா இரு’ என்றதை போலத்தான் இந்த அறிவுரை இருக்கிறது. என்னுடைய உணர்ச்சிகளும், கொதிப்பும் தான் என்னுடைய சிக்கலான வாழ்க்கையில் இவ்வளவு தூரம் வலிமையோடு பயணிக்க உதவியிருக்கின்றன. உணர்வற்று வாழ்வது இயலாத ஒன்று.

 

என் அம்மாவோடு கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தேன். என் வாழ்க்கையின் துயர்கள் குறித்து நகைச்சுவையாக நானும், அவரும் அவ்வப்போது பேசிக்கொள்வோம். அன்றைய தினம் உரையாடல் அப்படிப் பயணிக்கவில்லை. அவர், என்னிடம் மன்னிப்பு கேட்டார். “உங்கள் ஐந்து பேரையும் மத நம்பிக்கை இல்லாதவர்களாக வளர்த்தேன். ஆனால், உன்னை நேர் பாலின ஈர்ப்பு கொண்டவள் என்று கருதிக்கொண்டு வளர்த்து விட்டேன். வேறு எப்படி வளர்ப்பது என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அதற்காக வருந்துகிறேன். என்னை மன்னித்து விடு மகளே. என்னை மன்னித்துவிடு. நீ தன்பாலின ஈர்ப்புள்ளவள் என்று தெரிந்த போது, உன் வாழ்க்கை கடினமானதாக இருக்கும் என்று உனக்கு முன்னரே எனக்குத் தெரியும். உன்னை நேர் பாலின ஈர்ப்புள்ளவளாக மாற்ற முயன்றேன். நான் உன் வாழ்க்கையைத் துயரம் மிக்கதாக ஆக்கிவிட்டேன். இந்த உலகம் தன்னை மாற்றிக்கொள்ளாது எனத் தெரிந்ததால், உன்னை மாற்ற முயன்றேன் மகளே. மன்னித்துவிடு” என்று அரற்றினார்.

 

நான் திகைத்து போனேன். என்னுடைய கதையின் நாயகியாக எப்படி என் அம்மா மாறினார்? வாழ்க்கைப்பயணத்தில் அவர் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார், சிந்தனையில் வளர்ச்சி அடைந்திருக்கிறார். நானோ நகைச்சுவை என்கிற பெயரில் தேங்கிப் போய்விட்டேன். என் கதைகளை நகைச்சுவைகளின் வழியாகச் சொல்ல முயன்று தோற்றுவிட்டேன்…ஏன் தெரியுமா? கதைகளுக்கு ஆரம்பம், மையம், முடிவு என்று மூன்று பகுதிகள். நான் முன்னரே சொன்னதைப் போல நகைச்சுவைக்கோ இரு பகுதிகள் மட்டுமே. என்னுடைய நிஜ வாழ்க்கையின் வலிகளை இந்த நகைச்சுவை சரியாகக் கடத்தவில்லை. நகைச்சுவைக்கு என்று நான் உருவாக்கும் பன்ச்லைன்கள் உண்மையின் வலியை சிதைக்கின்றது.

 

எனக்குள் இன்னமும் என் அடையாளம் குறித்த அவமானம் இருக்கிறது. என் சிந்தனையில் அந்த அவமானம் அறவே இல்லை. ஆனால், என் உணர்சிகளில் அவமானம் இன்னமும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. என் பாட்டியை நான் நெடுங்காலமாக நேரில் பார்க்கவில்லை. என்னுடைய கதையை நான் ஒழுங்காகச் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.

 

நான் வளர்ந்தது டாஸ்மானியாவின் வடமேற்கு பகுதி. அதற்குப் பைபிள் பகுதி என்று பெயருண்டு. 1989-1997 காலத்தில் தன்பாலின சேர்க்கையைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கலாமா என்று பெரும் விவாதங்கள் நிகழ்ந்தன. அது என்னுடைய வளரிளம் பருவமும் கூட. என் பகுதி மக்களில் 70% தன் பாலின சேர்க்கையில் ஈடுபடுவர்களைக் கிரிமினல் சட்டங்களில் சிறையில் அடைக்க வேண்டும் என்பது அவர்களின் பார்வையாக இருந்தது. என்னை வளர்த்த, அன்பு செய்த, நான் நம்பிய மக்கள் தன்பாலின சேர்க்கையைப் பாவமாகக் கருதியது என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தன்பாலின ஈர்ப்புக் கொண்டவர்களைக் கொடூரமானவர்கள், ஈவிரக்கம் அற்றவர்கள், குழந்தைகளோடு உடலுறவு கொள்ளும் காமுகர்கள் என்றெல்லாம் அவர்கள் எண்ணினார்கள்.

Image result for tasmania  anti gay

நான் தன்பாலின ஈர்ப்பு கொண்டவள் என்பது வெளிப்பட்ட போது காலம் கடந்து விட்டிருந்தது. நான் என்னுடைய அடையாளத்தை, தன் பாலின ஈர்ப்பை வெறுப்பவளாக மாறியிருந்தேன். ஒரு ஸ்விட்சை அமுக்கிய உடனே மாறிவிடக் கூடிய உணர்வு அல்ல அது. தன்பாலின ஈர்ப்பை வெறுப்பது உள்ளுக்குள் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டது. இதனால், எங்கள் அடையாளத்தை நாங்களே வெறுக்க ஆரம்பிக்கிறோம். முழுக்க முழுக்க எங்களை நாங்களே வெறுத்து வேகிறோம். அவமானத்தால் கூனிக்குறுகி பத்தாண்டுகள் இருட்டில் இருந்தேன். அந்த இருட்டு என்னைப் பிறர் பார்ப்பதில் இருந்து மட்டும் தான் காக்க முடியும். நான் அவமானத்தில் உழல்வதை அதனால் தடுக்க முடியாது இல்லையா?

ஒரு குழந்தையை அவமானத்தால் மட்டுமே மூழ்கடித்தால், அந்தக் குழந்தையால் தான் சுயமரியாதை உள்ளவள்/ன் என்கிற எண்ணத்தை உள்வாங்கிக் கொள்ளவே இயலாது. தன்னைத் தானே வெறுப்பது என்பது வெளியில் இருந்து ஊன்றப்படும் விதை. அது ஒரு குழந்தையின் மனதில் விதைக்கப்பட்டால், அது முட்செடியாக மாறுகிறது. வேகமாக வளர்ந்து கிளைபரப்பி நிற்கிறது. புவி ஈர்ப்பு விசையைப் போல அது நீக்கமற நிறைந்து விடுகிறது. இயல்பான ஒன்றாகத் தோன்ற ஆரம்பித்து விடுகிறது. என்னுடைய இருட்டை விட்டு வெளியே வந்த போது என்னிடம் நகைச்சுவை இருக்கவில்லை. யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதிலும், என்னை நானே வெறுப்பதிலுமே என் கவனம் இருந்தது. அடுத்தப் பத்தாண்டுகளில் எனக்கான வெளியை கண்டடைந்தேன். ஆனால், என் வாழ்க்கையின் துயர்களை நகைச்சுவைக்கு நடுவே மறைத்துக் கொண்டேன். என்னுடைய கதையை நான் ஒழுங்காகச் சொல்லியே ஆகவேண்டும்,

 

யாரும் கற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத பாடத்தை நான் அதிகவிலை கொடுத்துக் கற்றுக்கொண்டேன். அந்தப் பாடம் தன்பாலின ஈர்ப்பை பற்றியது அல்ல. பொதுவெளியில் மிக முக்கியமான விஷயங்கள் குறித்து நாம் எப்படி விவாதிக்கிறோம்? அது சிறுபிள்ளைத்தனமானதாக, வெறுப்பு வழிவதாக, அழிவுக்கு அறைகூவல் விடுப்பதாக இருக்கிறது. நாம் யாருடன் முரண்படுகிறோமோ அவர்களை விட நியாய உணர்வு மிக்கவர்கள் என்று காட்டிக்கொள்வதில் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறோம். அவர்களின் மனித நேயத்தை நம்முடைய கருத்துக்களின் மூலம் தட்டி எழுப்ப நாம் முனைவதே இல்லை. அறியாமை நம்மிடையே எப்போதும் நடமாடி கொண்டே இருக்கும். யாருக்கும் அனைத்தும் தெரியாது.

……………………………….

நான் உலகத்தை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று என்னுடைய கலை வரலாறு படிப்புக் கற்றுக்கொடுத்தது. இந்த உலகத்தோடு ஒத்துப்போக வேண்டும் என்று நான் மெத்தனப்படவில்லை. கலை வரலாற்றைப் பொறுத்தவரை பெண்கள் இரு வகை மட்டுமே – கற்புக்கரசி, வேசி. ஆணாதிக்கம் சர்வாதிகாரம் இல்லை. அது ஒரு பெண்ணுக்கு இரண்டு தேர்வுகளைத் தருகிறது. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து நாம் உய்ய வேண்டும். மேற்கத்திய ஓவியங்களில் வந்து செல்லும் பெண்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள், சதைப்பிண்டங்கள்…. நான் இந்த உன்னதக்கலையை அதன் உண்மையான பெயர் சொல்லி அலைக்கப்போகின்றேன். அது ‘bullshit’! ஆண்கள் தங்களுடைய ஆசனவாயின் மலர்களை ஏந்தும் ஜாடிகளாகப் பெண்களைக் கருதி வரைந்தவையே இந்த மேற்கத்திய ஓவியங்கள்…

 

நான் பாப்லோ பிகாசோவை வெறுக்கிறேன். அவர் நவீன ஓவியக்கலையின் க்யூபிசத்தைத் தந்தவர் என்பதால் அவரை நீங்கள் வெறுக்கக் கூடாது என்பார்கள். பிகாசோ மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அந்த மனநோயின் பெயர் பெண் வெறுப்பு. பெண் வெறுப்பு மனநோயா என்று நீங்கள் அதிரக்கூடும். ஆம், தன்பாலின ஈர்ப்பற்ற ஆண்களுக்கு இருக்கும் பெண் வெறுப்பு மன நோயே ஆகும். பிகாசோ மனநோயாளி இல்லை என்று கற்றறிந்த அறிஞர்கள் சொல்வார்கள். நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பிகாசோவின் ஒரு மேற்கோள் இது, ‘ஒவ்வொரு முறை ஒரு பெண்ணை விட்டு விலகும் போதும் அவளை எரிக்க விரும்புகிறேன். அந்தப் பெண்ணை, அவள் பிரதிநிதித்துவப்படுத்தும் கடந்த காலத்தை மொத்தமாக அழித்துவிட வேண்டும்.’ அவர் பதினேழு வயதே ஆன மரியா தெரசா வால்டர் என்கிற பெண்ணோடு உடலுறவு கொண்டார். அந்தப் பெண் சட்டப்படி வயது வந்தவர் கிடையாது. பிகாசோவிற்கு அப்போது நாற்பது வயது கடந்து விட்டிருந்தது. அவருக்குத் திருமணமாகி இருந்தது. அதனை நியாயப்படுத்த வேறு செய்தார். ‘ I was on my prime. She was on her prime’ என்று அதை விவரித்தார். இதனைப் படித்த போது எனக்கு வயது பதினேழு. நான் அப்படியே உறைந்து போனேன்.

Image result for pablo picasso marie therese walter

பிகாசோ உருவாக்கிய க்யூபிசம் மகத்தான அற்புதம். அவர் நம்மை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார். இரு பரிமாண தலத்தில் முப்பரிமாண வடிவங்களை வரைய ஓவியர்கள் முயன்று கொண்டிருந்தார்கள். பிகாசோ இப்படி ஒரே ஒரு பார்வையோடு ஓவியங்களை வரைய மாட்டேன் என்று மறுத்தார். ‘உங்களுடைய பார்வைகள் எல்லாத் திசைகளில் இருந்தும் பாயட்டும். மேலிருந்து, கீழிருந்து, உள்ளிருந்து, வெளியில் இருந்து என்று அனைத்து பார்வைகளைக் கொண்டதாகவும் இருக்கட்டும்’ என்று அவர் போட்ட வித்தே ஓவியத்துறையைப் புரட்டி போட்டது. அற்புதம். எத்தகைய கலைஞன். இப்போது சொல்லுங்கள். அவர் படைத்த எத்தனை ஓவியங்கள் ஒரு பெண்ணின் பார்வையில் அமைந்திருந்தன. எதுவுமில்லை. அவை அவரின் பிறப்புறுப்பின் எண்ணங்களைக் கலைடாஸ்கோப் கொண்டு காட்டிய ஓவியங்கள். அவ்வளவே. கலையையும், கலைஞனையும் பிரித்துப் பாருங்கள் என்கிறார்கள். நான் பிரித்துப் பார்க்க மறுக்கிறேன்.

 

ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் இத்தனை கலை வரலாறு உங்களை மூச்சு முட்ட வைக்கும். மன்னிக்கவும். இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பாதிரியார்கள் காமுகர்களாக இருப்பது, ட்ரம் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தியது முதலியவை நகைச்சுவைக்குப் பயன்படும். முன்னொரு காலத்தில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் மோனிகா லெவின்ஸ்கி பன்ச் லைனாகப் பயன்படுத்தப்பட்டார். அவரைக் கேலி செய்ததற்குப் பதிலாக, பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய கிளிண்டனை நகைச்சுவை கலைஞர்கள் மேடைகளில் கிழித்துத் தோரணம் கட்டியிருந்தால், இளம்பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தி விட்டு அதைக்குறித்து அகங்காரத்தோடு அறிவித்துக் கொள்ளும் ஒரு ஆண் அமெரிக்கக் குடியரசு தலைவர் மாளிகையில் உட்கார்ந்திருக்க முடியாது.

 

நம்முடைய நகைச்சுவையின் இலக்காக இருக்க வேண்டும் தெரியுமா. ஒருவரின் நற்பெயர் மீது நமக்கு இருக்கும் அளவுகடந்த வெறி. அனைத்தையும் விட ஒருவரின் புகழ் நமக்கு முக்கியமானதாக இருக்கிறது. மானுடத்தை விடவும் நற்பெயர் நமக்கு முக்கியமானதாகி விடுகிறது. இவ்வாறு வழிபாட்டுத்தன்மையைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது ஒழிய வேண்டும். பிரபலங்களான பிகாசோ, கிளின்டன், ட்ரம்ப், வேய்ன்ஸ்டீன், ரோமன் போலன்ஸ்கி என்று பெண்களை, குழந்தைகளைப் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்திய ஆண்கள் விதிவிலக்குகள் அல்ல. அவர்களே பெரும்பான்மை. அவர்கள் தனிப்பட்ட நபர்கள் அல்ல, அவர்களே சமூகத்தின் உண்மை முகத்தைச் சொல்லும் கதைகள்.

Image result for donald trump clinton polanski

இந்தக் கதைகளின் நீதி என்ன தெரியுமா? ‘நாங்கள் பெண்கள், குழந்தைகள் குறித்துத் துளிகூட அக்கறைப்படுவதில்லை. நாங்கள் ஆண்களின் புகழ் குறித்து மட்டுமே கவலைப்படுகிறோம். அந்த ஆண்களின் மனித நேயம் எங்கே? இந்த ஆண்கள் நம்முடைய வாழ்க்கை கதைகளைப் படிப்பவர்கள். அவர்கள் மனித நேயமற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நாம் அது குறித்துத் துளி கூடக் கவலைப்படவில்லை. இந்த ஆண்கள் தங்களுடைய விலை மதிப்பில்லாத புகழோடு ஒட்டிக்கொண்டு இருக்கும் வரை, இவர்கள் எத்தனை கொடூரமானவர்களாக இருந்தாலும் நாம் கவலை கொள்வதில்லை. புகழ் மீதான உங்களுடைய வெறி கெட்டு ஒழியட்டும். என்னுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள். ம்ம்ம்ம். (பெருமூச்சு விட்டு சிரிக்கிறார்) எனக்குக் கோபம் கொப்பளிக்கிறது இல்லையா. நான் மன்னிப்புக் கோருகிறேன். நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்த அறையில் இருக்கும் சிலர், ‘இந்தப் பெண் தன்னுடைய பதற்றத்தின் மீதான தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து விட்டாள்’ என்று நினைக்கிறார்கள். அது சரி தான். கொஞ்சம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன்.

 

ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் நான் கோபப்படக்கூடாது இல்லையா? தன்னைத் தானே கேலி செய்து கொள்ளும் நகைச்சுவையில் தானே நான் ஈடுபட வேண்டும். எனக்கு நடந்ததை உங்கள் முன் நகைச்சுவை கலக்காமல் சொல்கிறேன். நான் ஒரு பெண்ணுடன் என்னுடைய இளம் வயதில் ஆர்வத்தோடு பேசிக்கொண்டு இருந்தேன். எனக்கு அவளைப் பிடித்து இருந்தது. அவளுக்கு ஒரு காதலன் இருந்தான் போல. நான் பேசிக்கொண்டு இருந்த போதே அந்த இடத்திற்கு வந்துவிட்ட அந்த இளைஞன் என்னை ஆண் என நினைத்துக் கொண்டு தாக்க ஆரம்பித்துவிட்டான். பெண் என்று தெரிந்ததும், ‘அவளா நீயி?’ என்று என்னை அடித்துத் துவைத்தான். நான் ரத்தம் சொட்ட சொட்ட நின்றேன். நான் அவனைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் மருத்துவமனைக்கு ஆவது போயிருக்க வேண்டும். நான் இவை எதையுமே செய்யவில்லை. ஒரு குழந்தையை அவமானத்தால் மட்டுமே நிறைத்தால் அது தான் வாழ்வதற்கான எந்தத் தகுதியும் அற்ற ஒருத்தியாகத் தானே உணரும். மற்றொரு புறம், இன்னொரு மனிதன் என்னை வெறுப்பதற்கும் அனுமதி தருகிறீர்கள்.

 

அந்தச் சம்பவம் நான் தன்பாலின ஈர்ப்பு கொண்டவள் என்பதால் நிகழவில்லை. அது என்னுடைய பெண் அடையாளம் சார்ந்தது. நீங்கள் பெண் என்பதற்கு வைத்திருக்கும் அளவுகோல்களின் படி, நான் வழிதவறிப்போன பெண். நான் தண்டிக்கப்பட வேண்டியவள். இந்த வாழ்க்கைப்போராட்டம் உங்களால் ஏற்பட்ட பதற்றம். இதனை இனிமேலும் என்னால் சுமந்து கொண்டிருக்க முடியாது. உங்களைப் போன்ற ‘இயல்பானவர்களாக’ இல்லாத எங்களுக்குள் இந்தப் பதற்றம் சுட்டெரித்துக் கொண்டே இருக்கிறது. உங்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கும் மனிதர்கள் ஆபத்தானவர்கள் என்பது தானே உங்களுடைய பார்வையாக இருக்கிறது.

 

இந்த அறையில் இருக்கும் ஆண்களே. உங்களுடைய சட்டையை மடித்துக் கொண்டு இந்த அநீதிக்கு எதிராகக் கிளம்புங்கள். சே, என்ன அவமானம் இது! ஒரு லெஸ்பியன் உங்களுக்கு எப்படி ஆடை அணிவது என்று அறிவுரை சொல்கிறாள். இந்த நிகழ்ச்சியின் கடைசி நகைச்சுவையாக இதுவே இருக்கட்டும்.

 

என் வாழ்க்கை முழுக்க நான் ஆண்களை வெறுப்பவள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நான் ஆண்களைச் சத்தியமாக வெறுக்கவில்லை. நான் பெண்கள் ஆண்களைவிட உயர்ந்தவர்கள் என்று என்றைக்கும் எண்ணியதில்லை. அதிகாரம் தலைக்கேறினால் ஆண்களைப் போலவே பெண்களும் நடந்து கொள்வார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், ஆண்களான நீங்கள் ஒட்டுமொத்த மானுட நிலையை நீங்களே கட்டுப்படுத்த வேண்டும் என்று இயங்குகிறீர்கள். அதிகாரம் ஆண்களுக்கு உரியது, மனிதகுல மேன்மை எங்களுடைய பொறுப்பு என்று நீங்கள் ஏகபோக உரிமை கொண்டாடுகிறீர்கள். அப்படித்தான் கதைகளைக் காலங்காலமாகச் சொல்லிக்கொண்டு உள்ளீர்கள். உங்களை நோக்கி எழுப்பப்படும் ஒரு விமர்சனத்தை, ஒரு எளிய நகைச்சுவையை உங்களால் நேருக்கு நேராக எதிர்கொள்ள முடியவில்லையே. உங்களால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பதற்றத்தை வன்முறை இல்லாமல் சீர்செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் சிரமேற்றுக்கொண்ட பணிக்குத் தகுதியானவர்கள் தானா நீங்கள் என்று கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.

 

நான் ஆண்களை வெறுக்கவில்லை. நான் ஆண்களைக் கண்டு அஞ்சுகிறேன். ஒரு அறையில் ஆண்களுக்கு நடுவே ஒரே ஒரு பெண்ணாக நான் இருக்க நேர்ந்தால் எனக்குப் பதற்றம் ஏற்படுகிறது. இப்படி நடந்து கொள்வது வேடிக்கையானது என நீங்கள் எண்ணக்கூடும். அப்படி என்றால், நீங்கள் பெண்களோடு உங்கள் வாழ்க்கை முழுக்க உரையாடி இருக்கவில்லை என்று பொருள். நான் உங்களை வெறுக்கவில்லை. என்னைப்போன்ற பெண்களின் வாழ்க்கையை ஆண்கள் வாழ்ந்திருந்தால் என்னாகி இருக்கும் என்று ஆச்சரியப்படுகிறேன்.

Related image

 

நான் சிறுமியாக இருக்கும் போது, ஒரு ஆணால் பாலியல் சித்திரவதைக்கு ஆளானேன். என்னுடைய பதினேழு வயதில் ஒரு ஆண் என்னை அடித்துத் துவைத்தான். என்னுடைய இருபதுகளில் இரு ஆண்கள் என்னை வன்புணர்வு செய்தார்கள். எனக்கு நடந்தவை சரியானவையே என்று ஏன் சமூகம் கருதியது. ஏன் என்னை மட்டும் குறிவைத்து தாக்கினார்கள். நான் உங்களில் இருந்து வேறுபட்டவள் என்பதால் தானே? இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு என்னை ஆட்படுத்தியதற்குப் பதிலாக, என் வீட்டின் கொல்லைக்குக் கொண்டு போய், நெற்றியில் துப்பாக்கியால் என்னைச் சுட்டு கொன்று இருக்கலாமே? உங்களைப் போல இல்லாமல் வேறுபட்டவர்களாக இருப்பது அத்தனை பெரிய குற்றமா?

 

உங்களிடம் ஒன்றை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். என்னை நீங்கள் பாதிக்கப்பட்டவளாகப் பார்க்க ஆரம்பித்து இருக்கலாம். நான் ஒன்றும் பாதிக்கப்பட்டவள் இல்லை. என்னுடைய கதையை உங்களிடம் சொல்கிறேன். ஏனெனில், என் கதை மதிப்புமிக்கது. நீங்கள் அனைவரும் என் கதையைத் தெரிந்து கொள்ள வேண்டும். நான் என்ன அறிந்து கொண்டேன் என்பதை உங்கள் அனைவரிடமும் தெரிவிக்கவே உங்கள் முன் நிற்கிறேன். எங்களை ஆதரவற்றவர்களாக நிற்க வைத்தாலும் எங்களுடைய மனித நேயம் இறந்து விடாது. இத்தனை வலிகளுக்கு நடுவேயும் நம்பிக்கையோடு இருப்பதே மனிதநேயம் தான். இன்னொரு சக மனிதரை ஆதரவற்றவர்களாக நிற்க வைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்று கருதிக்கொண்டு இயங்குபவர்களே மனிதநேயம் அற்றவர்கள். அவர்களே பலவீனமானவர்கள். அத்தனை அடிகளுக்குப் பிறகும், உடைந்து போகாமல் இருப்பதே உன்னதமான வலிமை.

 

ஒரு பெண்ணை அழிக்கிறீர்கள் என்றால் அவளுடைய கடந்த காலத்தையும் அழிக்கிறீர்கள். என்னுடைய கதையை நான் சாகவிட மாட்டேன். என்னைப்போலப் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையைக் கேட்டிருந்தால் நான் என்ன செய்திருப்பேன். நான் குறை சொல்வதற்காக என் கதையைச் சொல்லவில்லை. பணம், அதிகாரம், புகழ் நாடி என் கதையை உங்கள் முன் கொட்டவில்லை. என்னை வாட்டிக்கொண்டிருக்கும் தனிமையின் வெம்மை சற்றே தணியவே என் கதையைக் கண்ணீரோடு சொல்கிறேன். உங்களோடு என்னைப் பிணைத்து கொள்ளவே என் கதையைச் சொல்கிறேன். என் கதையை நீங்கள் காதுகொடுத்து கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். முரண்சுவையாக, பிகாசோ சொன்னதைப் போல, ‘நாம் வேறுபட்ட சமூகத்தை வரைய துணிவோம்.’ எல்லா வகையான பார்வைகளும் கொண்ட உலகத்தைப் படைக்க முனைவோம். வேறுபாடுகள் கொண்ட சமூகமே நம்முடைய பலம். வேற்றுமைகளே நமக்கான ஆசிரியர். வேறுபாடுகளைக் கண்டு அஞ்சுவீர்கள் என்றால் நம்மால் எதையுமே கற்றுக்கொள்ள முடியாது.

Image result for tasmania  anti gay

 

பிகாசோ எல்லாருடைய பார்வைகளையும் தானே படைத்துவிட முடியும் என்று நம்பியது தான் அவரிடம் இருந்த கோளாறு. அவரின் பார்வையை மட்டுமே கணக்கில் கொண்டதால் தான் நம்மால் ஒரு பதினேழு வயதின் பெண்ணின் பார்வையைக் கவனத்தில் கொள்ளவே இல்லை. ஒரு பதினேழு வயது பெண்ணிடமா உன்னுடைய பலத்தைப் பரிசோதிப்பாய். என்னைப்போன்ற வலிமை மிக்கப் பெண்ணிடம் உன் வேலையைக் காட்டிப்பார் காமுகனே. வரமாட்டாய். உடைந்து, உருக்குலைந்து போய், தன்னைத்தானே செதுக்கிக்கொண்ட பெண்ணை விட உலகில் வலிமை மிக்கவர் யார் உள்ளார்?

[பலத்த கரவொலி]

 

எதோ ஆண்களைக் குற்றவாளி கூண்டில் ஏற்றி நான் கேள்விகளால் துளைப்பதாக உங்களுக்குத் தோன்றலாம். முழுக்க முழுக்க உண்மை. நான் ஒரு வாழ்நாள் முழுக்க அனுபவித்ததை ஒரு மணிநேரம் உங்களுக்குச் சுவைக்கத் தந்தேன். அவ்வளவே. எனக்கு ஏற்பட்ட ரணங்கள் உண்மையானவை, அவை என்னை முடக்கி போட்டன. நான் மீண்டும் தழைக்க முடியாது. அதனால் தான் நான் நகைச்சுவை கலைஞராக இனிமேலும் தொடரக்கூடாது. என்னுடைய பதற்றம் மிகுந்த கதையை நகைச்சுவையால் சொல்லிவிட முடியாது. அதனைக் கோபத்தோடு தான் உரக்க சொல்ல முடியும். நான் கோபத்தோடு இருக்கிறேன். எனக்குக் கோபப்பட எல்லா உரிமையும், நியாயமும் இருக்கிறது. ஆனால், என்னுடைய கோபத்தை மற்றவர்களுக்குப் பரப்ப எனக்கு உரிமையில்லை. நான் அதனை நிச்சயம் செய்யமாட்டேன். கோபமும் நகைச்சுவையைப் போல அனைவரையும் இணைக்கக் கூடியது. முகந்தெரியாத மனிதர்கள் அனைவரும் ஒரே கோபத்தில் ஒன்று சேர முடியும். அது ஆனால் நல்லதில்லை.

 

நகைச்சுவையைப் போலக் கோபம் பதற்றத்தை தணிக்காது. கோபமே ஒரு நச்சான பதற்றம். அது வேகமாகப் பரவும் வியாதி. அதற்குக் கண்மூடித்தனமான வெறுப்பைப் பரப்புவதைத் தாண்டி எந்த நோக்கமும் கிடையாது. என்னுடைய கருத்துரிமை பொறுப்பு மிக்க ஒன்று. நான் பாதிக்கப்பட்டவள் என்பதற்காக என் கோபத்தைப் பரப்புவது எந்த வகையிலும் வளர்ச்சிக்கு உதவாது. வெறுப்பு என்றைக்கும் மேம்பாட்டிற்குப் பயன்படாது.

வாய் விட்டு சிரித்தால் நம்முடைய நோய்கள் விலகாது. கதைகள் நம்மைக் குணப்படுத்தும். நகைச்சுவை கசப்பான கதைகளைத் தேன் தடவி தருகிற ஒன்று. நீங்கள் நகைச்சுவையாலோ, வெறுப்பாலோ ஒன்று திரள வேண்டும் என்று நான் விரும்பவில்லை. என் கதைக்குச் செவிமடுங்கள். என் கதையை ஒவ்வொரு சுய சிந்தனையுள்ள மனிதரும் தனிப்பட்ட முறையில் உணர்ந்து, புரிந்து கொள்ளுங்கள். என் கதை உங்களுடைய கதையைப் போன்றதில்லை. ஆனால், என் கதை உங்களுடைய கதையும் கூட. என் கதையை இனிமேலும் என்னால் சுமக்க முடியாது. என் கதையைக் கோபத்தால் நிறைக்க நான் விரும்பவில்லை. என்னுடைய கதையை அக்கறையோடு பார்த்துக் கொள்ள உதவுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

 

வான்காவின் மகத்தான படைப்பான சூரிய காந்திகள் அவருடைய மனநோயால் நமக்குக் கிடைக்கவில்லை. அத்தனை துயரத்திலும், வலியிலும் அவனை நேசிக்க ஒரு உயிர் இருந்தது. அவன் தம்பியின் அன்பு இந்த நம்பிக்கையற்ற உலகத்தில் பற்றிக்கொள்ள, தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ள வான்காவுக்கு உதவியது. நாம் படைக்க விரும்பும் கதையின் மையமும் அதுதான். ஒருவரோடு ஒருவர் தொடர்புள்ளவர்களாக உணர வேண்டும். பிணைய வேண்டும். நன்றி!

Image result for hannah gadsby netflix

 

கச்சிதமாக இருந்தால் தான் காதல் புரிய வேண்டுமா?


அன்புள்ள மனிதா!

நீ எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறாய்.

எதிர்பார்ப்பில்லாமல் அன்பை பொழிவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள நீ பிறப்பெடுக்கவில்லை. நீ அளவில்லாத அன்பிலே அல்லவா பிறந்தாய். அங்கேயே நீ திரும்பச் செல்வாய்

பிறகு ஏன் இங்குப் பிறந்தாய்?
தனிநபர் மீது தன்னிகரிலா அன்பு பொழிவதை கற்க பிறந்தாய்
உலக அன்பை உணர்ந்திட வந்தாய்
சிக்கல்கள் மிகுந்த பேரன்பை பற்றிக் கற்றிட வந்தாய்
பைத்தியக்கார பேரன்பை பற்றி அறிய பிறந்தாய்
உடைந்த காதலை உய்த்து அறிய உயிர் பெற்றாய்
முழுமையாகப் பிரியத்தைப் பருகிட வந்தாய்
தெய்வீகம் ததும்பும் அற்புதம் அது
அன்பினுள் நயத்தோடு தடுமாறிக்கொண்டே வாழ்வாய்
அத்தனை பேரன்பையும் குழப்பங்கள் விளைவித்து விரித்துரைப்பாய்

நீ கச்சிதமாகக் காதல் புரிய இங்கு வரவில்லை. நீ் கச்சிதமானவளே/னே

இங்கு மனிதனாக மாறி அழகாகக் காதல் புரிக. பிழைகளால்
சிறக்கட்டும் நின் பிரியம்.

காதலின் நினைவுகள் ஏந்தி கசிந்துருகி மீண்டெழுக

ஆனால், எதிர்பார்ப்புகளற்ற காதல் என்கிற கட்டுக்கதையை என்னிடம் சொல்லாதே

உண்மையைச் சொல்லவா? காதல் அலங்காரச்சொற்கள் நாடி அலைவதில்லை
அதற்குப் புகழ்மாலைகள் தேவையில்லை
கச்சிதமாக இருந்தால் தான் காதல் புரிய வேண்டும் என்பதில்லை

அது உன் காதலை கட்டுடைத்து காட்டு என்கிறது
அத்தனை பிரியத்தையும் பொழியச்சொல்கிறது
இந்தக் கணத்தில் மட்டும் வாழ்ந்தபடி, முழுமையாகக் காதல் செய்க எனக்கேட்கிறது

காதல் என்ன சொல்கிறது தெரியுமா?
காதலிப்பவளே/காதலிப்பவனே!
நீ ஜொலித்திடு, பறந்திடு.
நீ புன்னகை. நீ அழு.
காயப்படு, மீண்டு வா. விழுந்திடு, எழுந்து நில்.
ஆடிக்களித்திடு, உழைத்திடு.
நீ நீயாகவே வாழ்ந்திடு.
நீ நீயாகவே மரித்திடுக.

அது போதும்.
அதுவே அதீதமானது. – Courtney A Walsh

தமிழில்: பூ.கொ.சரவணன்.

இளம் பெண்களின் தற்கொலைகளைத் தவிர்க்க முடியாதா?


சிறப்புக் கட்டுரை: இளம் பெண்களின் தற்கொலைகளைத் தவிர்க்க முடியாதா?

இளம் பெண்களின் தற்கொலைகளைத் தவிர்க்க முடியாதா

புதுக்கோட்டை துணை ஆட்சியர் சரயு மோகனசந்திரன்

நான் இங்குத் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஆகின்றன. அப்போதிலிருந்து ஒவ்வொரு வரதட்சணை சாவும், ஆய்வும், விசாரணையும் ஏற்படுத்தும் வலி என் இதயத்தை ஓயாமல் ரணப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இங்கே பொறுப்பேற்ற முதல் பத்து நாட்களில் மட்டும் ஐந்து சந்தேகத்துக்குரிய மரணங்கள்.

எந்தப் பெண்ணாவது தனக்குத் திருமணமான முதல் ஏழு வருடங்களுக்குள் சந்தேகத்துக்கு இடமான முறையில் மரணம் அடைந்தால் அதனை விசாரித்து, வழக்குப் பதிவு செய்ய வேண்டிய பொறுப்பு மாவட்ட துணை ஆட்சியருக்கு உண்டு. இப்படி ஒவ்வொரு முறை விசாரணை நடத்துகிற போதும், நான் உணர்ச்சிப் பெருக்கில் தத்தளிக்கிறேன். இந்தப் பணியில் ஈடுபடக் கிளம்புவதற்கு முன்பு, என் காதில் விழுந்த அறிவுரைகள் எல்லாம், ‘நீ ஒரு அதிகாரியாக உன் கடமையை நிறைவேற்றுகிறாய். அதனால் உணர்ச்சிவசப்படாமல் இரு.’ என்று நீண்டன. ஆனாலும், ஒவ்வொரு முறையும் ஒரு பிணவறையின் கதவருகே நிற்கையிலும் எனக்குள் பல்வேறு எண்ணங்கள் அலையடிக்கின்றன.

என்ன ஆயிற்று இந்தப் பெண்களுக்கு?

நான் நிம்மதியாகத் தூங்கி இரண்டு நாட்களாகிவிட்டன. காயத்ரியின் மரணம் IPC 174இன் கீழ் பதியப்படும் 12ஆவது வழக்கு. அவளுடைய வாழ்க்கை குறித்தும், அதன் நினைவுகள் ஏன் என்னைக் கலங்க வைத்துக்கொண்டே இருக்கின்றன என்பதைக் குறித்தும் பிறகொரு நாள் விரிவாகச் சொல்கிறேன். என்னுடைய ஒட்டுமொத்த தைரியத்தையும் ஒன்று திரட்டிக்கொண்டு, எனக்கு இந்த வழக்குகளில் தூண் போல உறுதுணை புரியும் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்.ராம்குமாரை அழைத்தேன்.

மனதளவில் உடைந்துபோய், குரல் கம்ம அவரிடம், “இந்தப் பொண்ணுங்களுக்கு என்னதான் ஆச்சு டாக்டர்?” எனக்கேட்டேன்.

“எனக்குத் தெரியலை மேடம். உங்களைப் போலத் தான் நானும் திகைச்சு நிக்கிறேன்” என்றார் அவர்

நாங்கள் காயத்ரியின் மரணம் குறித்தும், அவளின் சாவை சுற்றிச் சூழ்ந்திருக்கும் மர்மங்கள் குறித்தும் விரிவாகப் பேசினோம்.

“இதுக்கெல்லாம் எதாச்சும் பண்ண முடியுமா? கவுன்சிலிங் இல்லைனா விழிப்புணர்வு முகாம்கள் எதாச்சும்…” என்று இறுதியாகக் கேட்டேன்

என் கண் முன்னே அந்தப் பெண்களின் முகங்கள் நிழலாடின. இப்பெண்கள் என்னைவிட வயதில் இளையவர்கள். திருமணமாகி, பால் மணம் மாறாத பிஞ்சுகளின் அம்மாக்கள். இப்போது வாழ்க்கையை முடித்துக்கொண்டு விட்டார்கள். பிணவறையில் ஃபார்மலின் வாசனைக்கு இடையே நான் நடக்கிறேன். என் காதுகளுக்குள் வேறு யாருக்கும் கேட்காத குரல்கள் ஒலிக்கின்றன. அவை தங்களுக்கான நீதிக்கு இறைஞ்சும் கெளரி, ரேவதியின் குரல்கள். என் கனவுகளில் இவர்களின் மழலைகள் தங்களுடைய அம்மா இனி திரும்ப வரவே மாட்டார் என்று தெரியாமல் ஓலமிட்டு அழுகின்றன.

“நீங்க கவனிச்சீங்களானு தெரியலை மேடம். நாம பாத்த பெரும்பாலான கேஸ்களில் தற்கொலை முடிவை மாதவிடாய் (பீரியட்) சமயத்திலதான் பெண்கள் எடுத்திருக்காங்க” என்றார் டாக்டர்.

நான் விக்கித்து நின்றேன்.

“நான் பாத்த 90% கேஸ்களில், எந்தப் பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டாங்களோ, அவங்க எல்லாரும் மாதவிடாய் காலத்தில் தான் இருந்திருக்காங்க. இப்படிப்பட்ட நேரத்தில அந்தப் பொண்ணுங்களுக்கு என்னலாம் ஆகுதுன்னு யாருக்காச்சும் புரியுது, தெரியுதுன்னு எனக்குத் தோணலை. இந்த நேரத்தில் எல்லாம், கோபம் ரொம்பப் பொத்துகிட்டு வரும், அது போக ஒரே விரக்தியா இருக்கும். இது எல்லாத்தை விடக் கொடுமை என்ன தெரியுமா? அவங்க குடும்பத்தில் இருக்கிறவங்க இது எதையும் புரிஞ்சுக்காம உயிரை எடுப்பாங்க. இதனால் மனசு உடைஞ்சு போயிடும். நாம பாத்த பெரும்பாலான தற்கொலைகளில் அப்போதான் அவங்களுக்குக் குழந்தையே பிறந்திருக்கு. பிரசவத்துக்குப் பின் ஏற்படுற மனச்சோர்வு பத்தி நமக்கு யாருக்கும் புரிஞ்சுருக்கானே தெரியல.” என்றார் டாக்டர்.

மாதவிடாய் தரும் மனச்சுமைகள்

இங்கே தான் நம் அனைவரும் தோற்றுப்போயிருக்கிறோம். நம்முடைய உலகத்தின் நம்பிக்கைகளும், கட்டுப்பாடுகளும் மாதவிடாய், அதில் வெளியேறும் ரத்தம் ஆகியவற்றை அசுத்தம், புனிதம் இல்லாதது என்று முத்திரை குத்துகிறது. இதனால், எதைக் குறித்துக் கட்டாயம் பேச வேண்டுமோ, அது குறித்துப் பேச மறுக்கிறோம். இந்த மாதவிடாய் நாட்களில் ஒரு பெண்ணிற்கு ஏற்படும் வேதனை சொல்லி மாளாது. மாதவிடாய் நெருங்கும்போது, மனதளவிலும், உடல் அளவிலும் ஏற்படும் அதிர்ச்சிகள் குடும்பங்களில் பேசப்படுவதே இல்லை. பள்ளிக் காலத்தில் எங்களுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர், மாதவிடாய் தலைப்பை எவ்வளவு வேகமாக முடியுமோ, அவ்வளவு வேகமாக நடத்தி முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்த்தார். வாழ்க்கையின் மிக முக்கியமான ஒன்று ஒரு பெரிய பாடப்புத்தகத்தின் இன்னுமொரு பக்கமாக முடிந்து போனது.

இதைப் புரிந்துகொள்ளாமல் போனதற்காக எல்லா ஆண்களையும் நான் நிச்சயம் குறை சொல்ல மாட்டேன். தங்களுடைய அம்மாக்கள், தங்கைகள், தோழிகள் என்று பலரின் சீற்றத்தை இந்த மாதவிடாய் நாட்களில் எதிர்கொள்கிறார்கள். அப்பெண்களால் தங்களுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதை எதிர்கொள்ள ஆண்களாலும் முடியாமல் போகிறது. நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்று அந்த ஆண்கள் கேள்வி கேட்கிறபோது, நம்முடைய மனமும், உடலும் என்ன பாடுபடுகிறது என்று சொல்லாமல் அவர்களைக் கடுமையாகப் புறக்கணிக்கிறோம். இப்படி அதீதமான சிக்கல்கள் எல்லாப் பெண்களுக்கும் ஏற்படுவதில்லை என்றாலும், அப்படி ஏற்படுகிற போது அது குறித்து மனந்திறந்து பேசுவது முக்கியமானது. அப்போது தான் நம்மை இன்னமும் முதிர்ச்சியோடு நடத்தும் சமூகத்தைக் கட்டமைக்க முடியும். என்னுடைய குடிமைப்பணி தேர்வு தயாரிப்புக் காலங்களில் தான், இந்தக் காலங்கள் எப்படிப்பட்ட மன அழுத்தத்தை ஏற்படுத்த முடியும் என்று உணர்ந்து கொண்டேன்.

உங்களுடைய அன்னையை, சகோதரியை, தோழியை இன்னமும் ஆழமாக, தெளிவாகப் புரிந்துகொள்கிறபோது அவர்களை மென்மேலும் நேசிக்க முடியும். அவர்களின் இயல்பான நடத்தை மாறி, அவர்கள் அடக்க முடியாத கோபத்தைக் கொட்டும்போது அவர்களின் ஹார்மோன்கள் உயிரை வதைக்கின்றன என உணர்ந்துகொள்ளுங்கள். நாம் மனந்திறந்து, “நான் மாதவிடாய் காலத்தில (பீரியட்ஸ்ல) இருக்கேன். எனக்குச் சட்டுன்னு கோபம் வருது, பட்டுன்னு சோகமாயிடுறேன்” என்று சொல்வதால் நம்மை யாரும் துளிக்கூட மரியாதைக் குறைவாக நடத்தப்போவதில்லை.

கருப்பையில் பல கட்டிகள் தோன்றுவது, பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் மனசிதைவுகள் குறித்துப் போதுமான விழிப்புணர்வை ஆண்கள், பெண்கள் இருவரிடமும் ஏற்படுத்த வேண்டும். நம் அனைவருக்குமான சமூகத்தை அப்படித்தான் வளர்த்தெடுக்க முடியும். பெண்களாக, இந்த ஆண்களிடம் சொல்வதில் எந்தப் பயனும் இல்லை என்று கூச்சப்பட வேண்டாம். என்னை நம்புங்கள். ஒவ்வொரு ஆணும்- தகப்பனும், தமையனும், தோழனும் அளவற்ற அன்போடு உங்களுக்குத் தோள்தரவே விரும்புவார்கள்.

தமிழில்: பூ.கொ.சரவணன்

ஆணவப்படுகொலையை ஆவணப்படுத்துவது…


அல்ஜசீரா தொலைக்காட்சிக்காக சாதனா சுப்ரமணியம் சங்கரின் ஆணவப் படுகொலை அதையொட்டி நிகழ்ந்த அடுத்தடுத்த நிகழ்வுகளை ஆவணப்படம் ஆக்கியிருக்கிறார்.

கௌசல்யாவின் தம்பி பெற்றோருடன் பிள்ளைகள் இருக்கிற புகைப்படத்தை வெறித்தபடி, கௌசல்யாவை கைகளால் மறைத்தபடி  ‘மூணு பேருதான் குடும்பத்துல’ என்கிறார்.
அவரின் பாட்டியோ, ‘பொம்பள பொண்ணலாம் பத்தாவது மேல படிக்க வைக்க வேணாம். எனபானம் கழுவ விடுங்கன்னு சொன்னேன் …காலேஜீ படிக்க போய் சுயபுத்தி போயிடுச்சு ….மேடை மேடையா ஏறிப்பேசுறா. பேசக்கூடாதது எல்லாம் பேசுறா.  இன்னொரு மேடையில பேசினா வெஷங்குடிச்சு செத்துருவேன்…  நாங்கல்லாம் அவிஞ்சு போகணும்…’ என்கிறார்
சங்கர் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பு வழக்கறிஞர், ‘உசிலம்பட்டில பிறமலைக்கள்ளர் சமூகத்தில பொம்பளை புள்ளயலாம் பிறந்தன்னிக்கே கொன்னுருவாங்க…எங்க ஆளுங்க அப்படிலாம் பண்ணல… முதிர்ச்சியில்லாம கண்டிப்பா வளர்த்தத தப்பா எடுத்துகிட்டு பழிபழிவாங்க பாக்குது’ என நீட்டுகிறார்
கௌசல்யா பேருந்தில் துவங்கிய பிரியம் வளர்ந்ததை மென்னகையோடு நினைவுகூர்கிறார். ‘சங்கர் அவ்ளோ பாசம் காட்டுவான்…அவனளவுக்கு யாருகிட்டவும் அத்தனை அன்பை பாத்ததில்ல’ என நெகிழ்கிறார்.
கௌசல்யாவை பெற்ற அன்னலட்சுமி, தீர்ப்பிற்கு பிறகு விடுதலையான பின்பு பேசுகையில், மகளுக்கு ஒரு தோசை கூட ஒழுங்காக
வாக்கத்தெரியாது என்கிறார். ‘கல்யாணம் இப்ப வேணாம், பொண்ணு படிச்சு வேலை வாங்கட்டும். பிறகு பாத்துக்கலாம்னு நான்தான் சொன்னேன்… லவ் பண்ணலேன்னு சத்தியம் பண்ணா. அப்படி பண்ணா உன்ன கொலை பண்ணிருவேன்னு சொன்னேன்..
சொந்தக்காரங்க இன்னும் ஏன் இரண்டு பேரும்  வெக்கமில்லாம உயிரோட இருக்கீங்கன்னு கேட்டாங்க. ஏன் இப்படி இருக்கா? இவ ஒருத்தியால சாதி ஒழிஞ்சுருமா? எவ்வளவோ பேரு முயற்சி பண்ணியும் போகாத ஒன்னு இவ முயற்சி  பண்ணி வெடிஞ்சிருமா. மாத்திட முடியுமா. நாமதான் மாறிக்கணும்’ என படபடக்கிறார்.
Image result for al jazeera kausalya documentary
கௌசல்யா சங்கர் இல்லாத வாழ்க்கையில் புன்னகைத்தபடி வாழ முனைவதை, ‘நாள் முழுக்க சிறை வளாகத்தில் சுற்றித்திரிந்து சந்தோஷமா இருந்துட்டு நைட்டு  ஜெயிலுக்குள்ள அடையுற கைதி போல தான் என் நிலைமையும்’ என்கிறார்.
அப்பாவியாக மணமான ஆனந்தம் நிறைய சிரிக்கும் புகைப்படத்தை நம்பமுடியாமல் வருடுகிறார். பெற்றோர் மணமான பின்னும் விடுத்த கொலை மிரட்டல்களை நினைவுகூர்கிறார். சாதி ஒழிப்பு லட்சியம் என கண்கள் விரிய முழங்குகிறார்.
தாய் விடுதலை என்கிற செய்தியை பார்த்துவிட்டு ‘தாய்…வாவ்!!! அன்னலட்சுமின்னு போடச்சொல்லுங்க’ என்கிறார் சலனமில்லாமல். ‘என் வழக்கில வர்ற தீர்ப்பை வச்சு ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான சட்டம் வேணும்னு போராடுவேன்’ என தெளிவாக பேசுகிறார்.
தீர்ப்பு வந்தததும்,
‘தேவர் சாதிக்கு பாதுகாப்பு இல்லை’ என குமுறுகிறது ஒரு குரல். படுகொலைக்கான சிறு குற்றவுணர்ச்சியும் யாரிடமும் இல்லை.
‘நீ ஓடிப்போனே. உனக்கு இது தேவைதான்னு நடந்துகிட்டாங்க.
…நான் முன்ன போவேன். நான் இருக்கிறதுலயே பெருசா நினைக்கிறது சாதி ஒழிப்புக்கான என்   பயணம் தான். வெற்றியடைஞ்சுட்டேன்னு நினைக்கல. அதுக்கான அடிக்கல் தான் இது’ என கௌசல்யாவின் நம்பிக்கை மிகுந்த குரல் சாதியத்தின் கொடுங்கரங்களை ஒழிக்கும் பயணத்தில் நம்மையும் உடன் அழைக்கும் தட்ட முடியாத குரல்.
ஆவணப்பட சுட்டி:
ஆவணப்பட இயக்குனர் சாதனா- புகைப்பட நன்றி: தி இந்து
Image result for al jazeera kausalya documentary sadhana

ஒரு அறிமுகம் – கமலா தாஸ்


இந்தியாவின் தனித்துவமான, ஆழமான பெண்ணியக் கவிகளில் முக்கியமானவரான கமலா தாஸ் அவர்களின் சுய சரிதையான ‘என் கதை’ வெளிவந்த நாள் இன்று என்பதை ஒட்டி கூகுள் ஒரு டூடூலை வெளியிட்டு இருக்கிறது. அவரின் சொந்த வாழ்க்கையின் சுவடுகள் கொண்ட ‘ஒரு அறிமுகம்’ கவிதை ஆங்கிலம் வழி தமிழாக்கமாக இதோ:

Celebrating Kamala Das

ஒரு அறிமுகம்- கமலா தாஸ்

எனக்கு அரசியல் தெரியாது, ஆனாலும், நான் பெயர்களையே அறிவேன்
அரசியலில் உள்ளவர்களின் பெயர்களை அறிவேன்
அவற்றை அச்சாரம் பிசகாமல் மீண்டும் மீண்டும் உச்சரிப்பேன்
வாரத்தின் நாட்களைப் போல, மாதங்களின் பெயர்களைப் போல, அவர்கள் பெயர்களை நேருவில் துவங்கி மடமடவென ஒப்பிப்பேன்
நான் இந்தியன், பழுப்பு நிறம், மலபார் மண்ணில் மலர்ந்தவள்
மூன்று மொழிகளில் பேசி, இரண்டில் எழுதி, ஒரு மொழியில் சிந்திப்பவள்
ஆங்கிலம் உன் அன்னை மொழியில்லை, அதனால், அதில் எழுதாதே என்றார்கள்
விமர்சகர்களே, நண்பர்களே, வருகை தரும் உறவுகளே
நீங்கள் எல்லாரும் என்னை ஏன் தனியாக விடக்கூடாது
நீங்கள் அனைவரும் நான் விரும்பும் மொழியில் என்னைப் பேச விடுவீர்களா?
நான் பேசும் மொழி எனதாகிறது
அதன் சிதைவுகள், விபரீதமான வெளிப்பாடுகள்
யாவும் என்னுடையவை, அவை என்னுடையது மட்டுமே
என் மொழி பாதி ஆங்கிலம், பாதி இந்தியன், வேடிக்கையானதும் கூட, என்றாலும், அது சத்தியமானது
நான் எவ்வளவு மானுடம் மிக்கவளோ அத்தனை மானுடம் என் மொழியிலும் வழிகிறது
அம்மொழி எந்தன் ஆனந்தங்கள், காத்திருப்புகள், நம்பிக்கைகளைக் குரலெடுத்துக் கொட்டுகிறது
காக்கைகளுக்குக் கரைதலை போல, சிங்கங்களுக்குக் கர்ஜிப்பதை போல என் மொழி என் பயன் காக்கிறது
அது மனிதரின் பேச்சு
அது மனதின் பேச்சு. அங்குத் தொலையாமல் அருகே தொடரும் பேச்சு அது
விழித்தும், கூர்ந்தும் இருக்கும் மனமது
புயலில் தொலையும் மரங்களின், மழையில் கரையும் பருவகால மேகங்களின்
சிதையில் எரியும் பிணத்தின் கோர்வையற்ற முணுமுணுப்புகளின்
கேளாத, காணாத குரல் அல்ல அது
நான் மழலையாக இருந்தேன்
நான் வளர்ந்து விட்டேன் எனப் பின்னர் அறிவித்தார்கள்
என் தோள்கள் ஊதி பெருத்தன
ஓரிரு இடங்களில் ரோமங்கள் தோன்றின
வேறென்ன கேட்பது என்று தெரியாமல் காதல் வேண்டுமெனக் கேட்ட போது
அவன் பதினாறு வயதினளை படுக்கையறைக்கு அழைத்துப் போய்த் தாழ்ப்பாளிட்டான்
அவன் என்னை அடிக்கவில்லை, என் துயர்மிகு பெண்ணுடல் வதைபட்டதாய் மருகிற்று
என் மார்பகங்களின், கர்ப்பப்பையின் சுமை என்னை நசுக்கியது
நான் பரிதாபமாகச் சுருங்கிப்போனேன்
அதன் பின்….ஒரு சட்டையை, என் தம்பியின் ட்ரவுசரை அணிந்து கொண்டேன்
முடியை வெட்டி, எந்தப் பெண்மையைக் காணாமல் கடந்தேன்
புடவையைப் போர்த்திக்கொள்
பொம்பளையா இரு, பொண்டாட்டியா இரு என்று அவர்கள் சொன்னார்கள்
துணிகளில் வேலைப்பாடுகள் செய்து வீழ்ந்து போ
சமையல்காரியாய் இரு, வேலையாட்களோடு சண்டையிடு
அனுசரித்துப் போ என்று கத்தினார்கள் வகைப்படுத்துபவர்கள்
சுவர்களில் அமராதே
திரைச்சீலைகள் மூடிய சன்னல்களுக்குள் ஊடுருவி பார்க்காதே
ஆமியாய் இரு இல்லை கமலாவாய் இரு
இல்லை மாதவிக்குட்டியாகவே இரு
எதோ ஒரு பெயரை, எதோ ஒரு வேடத்தைத் தேர்வு செய்யும் நேரம் நெருங்கிவிட்டது
கண்ணாமூச்சி ஆட்டங்கள் ஆடாதே
மனச்சிதைவோடு மற்போர் புரியாதே
பெருங்காமம் கொண்ட பெண்ணாகாதே
காதலன் கைவிட்டு அகல்கையில் அழுதழுது அவமானம் கூட்டாதே
நான் ஒரு ஆடவனைக் கண்டேன்,காதலித்தேன்
அவனை எப்பெயர் இட்டும் அழைக்க வேண்டாம்
அவன் எல்லா ஆடவரை போன்றவன்
அவர்களைப் போல அவனுக்கு ஒரு பெண் தேவை
எப்படி ஒவ்வொரு பெண்ணைப் போலவும் பிரியம் நாடி நான் பசலை கொள்கிறேனோ
நதியின் பெரும்பசி பிரவாகம் என்னுள்
ஓயாத அலைகடலின் காத்திருப்பு
நீ யார் என்று அனைவரையும் கேட்கிறேன்
விடை இது தான். நான் தான் அது
தன்னைத்தானே அழைப்பவர்களை இந்த உலகம் முழுக்கக் கண்ணுறுகிறேன்
உறைக்குள் வாள் போல உறைந்து இருக்கிறான்
நான் தனித்துக் குடிக்கிறேன்
நள்ளிரவில், உணவு விடுதிகளில், புதிரான நகர்களில் குடித்துக் கிடக்கிறேன்
நான் தான் சிரிக்கிறேன், நானே காதல் லீலைகள் புரிகிறேன்
பின்னர் நானே அவமானம் கொள்கிறேன்
பொய்கள் பேசி, தொண்டைக்குள் விம்மியபடி பொய்களோடு பிணமாகிறேன்
நானே பாவி, நானே புனிதர்
நான் பிரியத்துக்கு உரியவள்
துரோகங்கள் தாங்குபவள்
உனக்கில்லாத பேரின்பங்கள் எனக்கும் இல்லை
உனக்கில்லாத வலிகள் எனக்குமில்லை
நானே என்னை நான் என அழைத்துக்கொள்கிறேன் .

Image result for MADHAVIKUTTY

தமிழில்: பூ.கொ.சரவணன்