சொற்களில் கவனமாயிருங்கள்,
அதிசய சொற்களிலும் கூட,
ஆச்சரிய சொற்களுக்காக நம்மால் இயன்றதையெல்லாம் புரிகிறோம்,
அவை பூச்சிகள் போல மொய்க்கின்றன,
ஆனால், கொட்டாமல் முத்தமொன்றை ஈந்துவிட்டு அகல்கின்றன.
அவை விரல்கள் அளவுக்கு நல்லவையாகவும் இருக்கக் கூடும்.
நீங்கள் நம்பிக்கையோடு அமரக்கூடிய பாறையாகவும் சொற்கள் திகழலாம்.
அவை மலர்களாகவும், காயங்களாகவும் இருக்கலாம்.
எனினும், நான் சொற்களைக் காதலிக்கிறேன்.
அவை மேற்கூரையிலிருந்து தரை சேரும் புறாக்களாக இருக்கலாம்.
அவை என் மடியில் வீற்றிருக்கும் ஆறு புனித ஆரஞ்சு கனிகள்.
அவை மரங்கள், வேனலின் கால்கள்,
வெய்யோன், அவனின் ஒளிரும் முகம்.
இருந்தாலும், அவை அடிக்கடி என்னைக் கைவிடுகின்றன.
நான் சொல்ல விரும்புபவை தீராமல் என்னுள்ளே இருக்கின்றன,
அத்தனை கதைகள், உருவங்கள், சொலவடைகள்,
ஆனால், சொற்கள் போதுமானதாக இருப்பதேயில்லை,
பிழையானவை என்னை முத்தமிடுகின்றன,
சமயங்களில் கழுகைப் போல வான் ஏகுகிறேன்,
சிறுகுருவியின் சிறகுகளுடன்,
ஆனால், சொற்களின் மீது அக்கறையோடு கனிவாய் இருக்கிறேன்.
சொற்களையும், முட்டைகளையும் கவனமாகக் கையாளவேண்டும்.
அவை உடைந்தால் மீண்டும் உயிர்த்தெழுப்பவே முடியாதவை. – Anne Sexton
தமிழில்: பூ.கொ.சரவணன்