‘ஜெய் பீம்’ இதழிற்காக அண்ணல் அம்பேத்கர் வழங்கிய செய்தி


தந்தை என்.சிவராஜ் அவர்கள் ஆசிரியராக நடத்திய ‘ஜெய் பீம்’ இதழ் ஏப்ரல் 13 1946ல்   பாபாசாகேப் அம்பேத்கரின் அண்ணலின் 55-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. பாபாசாகேப் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி கீழ்கண்ட சிறப்புச்செய்தியை வழங்கினார் :


என்னுடைய 55-வது பிறந்த நாளையொட்டிய சிறப்பிதழிற்கு நான் பங்களித்து என் கருத்துகளை எழுதுமாறு கேட்டுக்கொண்டீர்கள். வெளிநாடுகளில் மக்கள் தங்களுடைய இறைத்தூதர்களின் பிறந்தநாட்களையே கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். கெடுவாய்ப்பாக, இந்தியாவில் மட்டுமே இறைத்தூதர்களுக்கு நிகராக அரசியல் தலைவர்களின் பிறந்த நாட்களும் கொண்டாடப்படுகின்றன. இப்படித்தான் நிலைமை இருக்கிறது என்பது பரிதாபகரமானது. தனிப்பட்ட முறையில் என் பிறந்த நாளை கொண்டாடுவது எனக்கு உவப்புடைய ஒன்றல்ல. உச்சபட்ச ஜனநாயகவாதியான நான், நாயக வழிபாடானது ஜனநாயகத்திற்குப் பெருங்கேடு விளைவிக்கிறது எனக்கருதுகிறேன். ஒரு தகுதிமிக்கத் தலைவன் மீது நேசம், அன்பு, மதிப்பு, மரியாதை ஆகியவற்றைச் செலுத்துவது ஏற்புடைய ஒன்றுதான். அதுவே அத்தலைவனுக்கும் அவர் தொண்டர்களுக்கும் போதுமானது. ஆனால், தலைவர்களை வழிபடுவதை ஒருக்காலும் ஏற்க முடியாது. அது இருதரப்பினரின் ஒழுக்கச்சிதைவிற்கு வழிவகுக்கும். இதுவெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். எப்போது ஒரு அரசியல் தலைவரை இறைத்தூதர்களுக்கு நிகராக முன்னிறுத்துகிறோமோ, அப்போது அவர் இறைத்தூதரைப் போல நடந்து கொண்டு தன்னைப் பின்பற்றுபவர்களுக்குச் செய்தி வழங்க வேண்டும்.

புகைப்பட நன்றி : அம்பேத்கர் அம்பேத் தளம்


நான் உங்களுக்கு என்ன செய்தியை வழங்குவது? அதற்குகுப் பதிலாக ஒரு கிரேக்க புராணக் கதையைச் சொல்லி அதன் நீதியை தங்களுக்குச் சுட்டிக்காட்ட முனைகிறேன். ஹோமர் கிரேக்க இறைவி டெமிடருக்கு இயற்றிய பாடலில் இக்கதை காணக்கிடைக்கிறது. டெமிடர் தன்னுடைய மகளைத் தேடி கேலியோஸ் மன்னனின் அவைக்கு வருகிறார். எளிய செவிலித்தாய் உருவத்தில் வந்திருந்த இறைவியை யாராலும் கண்டுகொள்ள இயலவில்லை. இராணி மெட்டோநிய்ரா அண்மையில் தான் பெற்றெடுத்திருந்த பச்சிளம் குழந்தை டெமோஃபூனை (பிற்காலத்தில் ட்ரைப்ட்டோலமஸ் என அறியப்பட்டவன்) டெமிடரிடம் வளர்த்தெடுக்கக் கொடுக்கிறார்.மொத்த மாளிகையும் உறங்கிய பிறகு, ஒவ்வொரு இரவும், தொட்டிலில் இருந்து மழலையை வாரியெடுத்து, மின்னுகிற தீக்கங்குகளால் ஆன படுக்கையில் கிடத்தி வந்தார். பார்ப்பதற்குக் கொடூரமானதாகத் தோன்றினாலும், உண்மையில் அக்குழந்தையை தெய்வத்தன்மை உடையவனாக ஆக்கும் பேரன்பு, வேட்கையினால் தான் டெமிடர் அப்படிச் செய்தார். தீக்கங்கின் வெம்மையில் சிக்கி படாதபாடுபட்ட மழலை டெமோஃபூன் கொஞ்சம் கொஞ்சமாகப் பலம் பெற்று வளர்ந்து வந்தான். படிபடிப்படியாகச் சற்று தெய்வத்தன்மையும், சற்று கட்டுரமும், சற்று நம்புதற்கரிய மகிமையோடும் அவன் வளர்த்தெடுக்கப்பட்டான்.

இராணி மெட்டோநிய்ரா மாலை வேளை ஒன்றில் பரபரப்புடன் சோதனை நடக்கும் அவ்வறையின் கதவை திறந்து, தேவையற்ற அச்சத்தால் உந்தப்பட்டு வளர்ப்புத்தாயை தள்ளிவிட்டு, பேராளுமையாக மாறிக்கொண்டிருந்த குழந்தையைத் தீக்கங்குகளிலான தொட்டிலில் இருந்து மீட்கிறார். குழந்தை காப்பாற்றப்பட்டாலும் அதன் பேராளுமையையும், தெய்வத்தன்மையையும் இழக்கிறது.


இக்கதை நமக்கு என்ன நீதியைக் கூறுகிறது? என்னைப் பொருத்தவரை , வாழ்வினில் மேன்மையை இன்னல்களையும் தியாகங்களையும் சந்தித்தால் மட்டுமே எட்டமுடியும் எனக்கற்பிக்கிறது. மானுடப்பண்போ, தெய்வத்தன்மையோ அக்னிப்பரீட்சைக்கு ஆளாகாமல் கிட்டுவதில்லை. நெருப்புப் பரிசுத்தப்படுத்துகிறது, உரமேற்றுகிறது. அதேபோல் தான் போராட்டங்களும், துயரங்களும் வலிமை கூட்டும். ஒடுக்கப்பட்ட எந்த மனிதனும் போராட்டங்களும் இன்னல்களும் இன்றி மேன்மையை அடைய இயலாது. அவன் தன் சுகதுக்கங்களையும், தற்போதைய உடனடித் தேவைகளையும் தியாகம் செய்தால்தான் ஓர் நல்ல எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முடியும். விவிலியத்தின் மொழியில் சொல்வதென்றால் வாழ்வின் ஓட்டப்பந்தயத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர். ஏன்? அதற்கான காரணம் தெள்ளத்தெளிவானது. பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கைப்பந்தயத்தில் நிகழ்காலத்தின் இன்பங்களை எதிர்காலத்தேவைகளுக்காகத் தியாகம் செய்யும் தைரியமோ, மன உறுதியோ இல்லாததால் மேன்மையை எட்ட இயலவில்லை.


இக்கதையில் உள்ளதைவிட மேலான,உயர்ந்த அறிவுரை உள்ளதா? எனக்குத் தெரிந்தவரை இதுவே தீண்டப்படாதவர்களுக்கு வழங்கும் சிறந்த, உகந்த அறிவுரையாகும். அவர்களின் போராட்டங்கள், அவர்களின் வேதனைகளை அறிந்தே உள்ளேன். விடுதலைக்கான அவர்களின் போராட்டத்தில் என்னைவிடப் பெரும் இன்னல்களுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என நன்கறிவேன். இத்தனைக்குப் பிறகும், அவர்களுக்கு வழங்க என்னிடம் ஒரே செய்தி தான் உள்ளது. என்னுடைய செய்தி இதுதான்: போராடுங்கள், இன்னமும் போராடுங்கள், தியாகம் செய்யுங்கள், இன்னமும் தியாகம் புரியுங்கள். தியாகங்களுக்கும், துயரங்களுக்கும் துவளாத போராட்டங்கள், இடையறாத போராட்டங்கள் மட்டுமேவிடுதலை அளிக்கும். வேறெதுவும் நமக்கான விடுதலையைப் பெற்றுத்தரப் போவதில்லை.

தீண்டப்படாதவர்கள் ஒன்றுபட்டு எழுந்து,எதிர்க்கத் துணிய வேண்டும். தாங்கள் ஒப்புக்கொடுத்திருக்கும் அரும்பணியின் புனிதத்தை உணர்ந்து , உத்வேகத்தோடு ஒருங்கே உறுதிபூண்டு தங்களின் இலக்கை அடைய முயலவேண்டும். அவர்கள் காரியத்தின் மகத்துவத்தையும் உன்னத நோக்கத்தையும் மனதில் நிறுத்தி பிரார்த்தனையாக இதனைக் கூட்டாக உச்சரிக்க வேண்டும் :


தங்களோடு பிறந்தவர்களை வளர்ப்பதற்கான கடமைக்காகக் களம் கண்டு உயிர்வாழ்பவர்கள் பேறு பெற்றோர். தங்கள் காலத்தின் மலர்களை, உடல்,பொருள், ஆவியின் வலிமையை, தீரத்தை எல்லாம் தங்களின் அடிமைத்தளையை அறுக்க அர்ப்பணித்தவர்கள் பேறு பெற்றொர். நன்மை வரட்டும், தீமை வரட்டும், கோடை சுடட்டும், கடுங்குளிர் வாட்டட்டும், புகழ் பெருகினாலும், அவமானங்கள் அடைந்தாலும் தீண்டப்படாதவர்கள் தங்களுடைய ஆண்மையை மீட்கும் வரை துவளமாட்டோம் என உறுதியோடு உழைப்பவர்கள் பேறுபெற்றோர்”

தமிழில்: பூ.கொ.சரவணன்

பின்னூட்டமொன்றை இடுக