‘அம்பேத்கரும், அரசியலமைப்புச் சட்ட உருவாக்கமும்’ – கிறிஸ்தோஃபி ஜாப்ரிலா’


‘நல்ல உயரம், கட்டுகோப்பான உடல், கரிய நிறம். லாவகமாகவும், துரிதமாகவும் இயங்கும் மூளைக்குச் சொந்தக்காரர். அவர் அறிவின் பேருரு. வெளியே கரடுமுரடாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் மானுடம் மிகைத்த பண்பாளர். இன்னல்கள் இடைவிடாது துரத்தினாலும், எப்போதும் வளைந்து கொடுக்காத, விட்டுக்கொடுக்காத தீரம் மிக்கவர். ஒரு காலத்தில் சமூகத்தில் மேல்தட்டினர் வாழும் பகுதியில் அவர் கீழ்சாதி என்பதால் தங்க கூட இடம் தரப்படவில்லை. அவரின் மனவுறுதியின் தீரம் அவரை மகத்தான இடங்களுக்கு அழைத்துச் சென்றது.’ (ஹரி ஷரண் சப்ரா (தொகுப்பாசிரியர்) Opposition in the Parliament, Delhi, New Publishers, 1952, பக்கம் 142)

மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பத்தி ஐம்பதுகளின் ஆரம்பத்தில் ஒரு பிராமண எழுத்தாளரால் எழுதப்பட்டதாகும். இது அப்போது அம்பேத்கர் தன்னுடைய அரசியல் வாழ்வின் உச்சத்தில் இருந்தார் என்பதைத் தெளிவாக நிறுவுகிறது. இப்படிப்பட்ட அங்கீகாரம் அம்பேத்கருக்கு கிடைத்தற்கு அவர் விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டது ஒரு காரணம். அதைவிட முக்கியமாக, தேசத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டிய பொறுப்புக்கு உரிய ‘வரைவுக்குழு’வின் தலைவராக அம்பேத்கர் திகழ்ந்ததும் காரணம். அந்த வரைவுக்குழுவில் சட்ட நிபுணரான அம்பேத்கர் உன்னதமான உச்சத்தை எட்டினார். அதுவே அம்பேத்கரின் வாழ்வின் பெருமைமிகு காலமாகும். இறுக்கமான சூட், டை, வட்ட வடிவிலான கண்ணாடி, கச்சிதமாக வாரப்பட்ட தலைமுடி, கையில் அரசியலமைப்புச் சட்டம் என்கிற அம்பேத்கரின் உருவமே பொதுமக்களின் மனக்கண்ணில் இன்றும் அகலாமல் ஆழமாகப் பதிந்திருக்கிறது. இப்படி அம்பேத்கரை சிலையாகச் செதுக்குவதும் வழக்கமானது. 1

தீண்டப்படாத சாதியை சேர்ந்த ஒருவர் தேசிய அரசியலில் மாபெரும் தாக்கம் செலுத்துகிற நிலையை அடைந்தார் என்பதே உயர் சாதி இந்துக்களிடமிருந்து கசப்பான விமர்சனங்களை ஊற்றெடுக்க வைக்கப் போதுமானதாக இருந்தது. அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் அம்பேத்கர் மிக முக்கியமான பங்காற்றினார் என்பதையே நிராகரிக்கிற அளவிற்குச் சிலர் சென்றார்கள்.

அம்பேத்கர் ‘போலி மனுவா’?

அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவிற்கு அம்பேத்கர் நியமிக்கப்பட்டதால், அவருக்கு ‘நவீன மனு’ என்கிற பட்டம் சூட்டப்பட்டது. இப்பட்டம் மனுநீதியை இயற்றிய புரதான மனுவை நினைவுபடுத்தியது. மனுநீதியை 1927-ல் நடைபெற்ற மகத் சத்தியாகிரகத்தின் போது அம்பேத்கர் எரித்தார் என்பதை நினைவுகூர்ந்தால் இந்தப்பட்டம் வேடிக்கையான ஒன்றாகத் தெரியும்.
அம்பேத்கர் குறித்த தன்னுடைய குற்றப்பத்திரிகையில் அருண் ஷோரி, அம்பேத்கரை ‘போலி மனு’ என்று முத்திரை குத்துகிறார். அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் பல்வேறு துணை குழுக்கள் உருவாக்கிய சட்டப்பிரிவுகளைச் செப்பனிடும் பொறுப்பு மட்டுமே வரைவுக்குழுவிற்கு இருந்தது. வரைவுக்குழுவின் பரிந்துரைகளையும் கூட அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முழு அமர்வு விவாதித்தே முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால், அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் அம்பேத்கர் எந்த வகையிலும் தாக்கம் செலுத்தவில்லை என்பது அருண் ஷோரியின் வாதம். மேலும் அம்பேத்கர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் இல்லை. அக்கட்சியினருக்குள் தான் ஒவ்வொரு சட்டப்பிரிவின் முக்கியமான அம்சங்கள் தீர்மானிக்கப்பட்டன என்பது அருண் ஷோரியின் வாதம்.2 அம்பேத்கர் துணை குழுக்கள், வரைவு குழு, முழு அமர்வு ஆகிய பல இடங்களில் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் தோற்கிற பக்கமே இருந்தார் என்று ஷோரி வாதிடுகிறார். அருண் ஷோரியின் இக்கருத்துகள் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் அம்பேத்கரின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுகின்றன என்பதே என்னுடைய வாதமாகும். காங்கிரஸ் தலைவர்கள் முன்னரே பேசி வைத்துக்கொண்டு சில சட்டப்பிரிவுகளை வேகமாக நிறைவேற்ற முயன்றார்கள் என்று அம்பேத்கர் அவ்வப்போது குறைபட்டுக்கொண்டார் என்றாலும், அம்பேத்கர் மற்றவர்கள் உருவாக்கிய சட்டப்பிரிவுகளை வெறுமனே செப்பனிடுவதொடு மட்டும் நின்றுவிடவில்லை. 3

அருண் ஷோரி அம்பேத்கரை சித்தரிக்கும் விதத்தில் இருந்து அறிஞர்கள் ஹெச்.எஸ்.வர்மா, நீதா வர்மா முற்றிலும் முரண்படுகிறார்கள். அம்பேத்கர் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட அவரின் ஆட்சி நிர்வாகத்திறனும், அரசியல் தாக்கமும் தான் காரணம் என்று இவர்கள் வாதிடுகிறார்கள்.4 அம்பேத்கரை வரைவுக்குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கக் காரணமான சம்பவத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். 1946-ல் சபையில் விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த போது, அம்பேத்கரின் தலையீடு பலரையும் கவர்ந்தது. நேரு அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முன் அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கங்களைப் பட்டியலிட்டார். சபையின் இன்னொரு உறுப்பினராக ஜெயகர் ஒரு பிரச்சினையை எழுப்பினார் பாகிஸ்தானா, இந்தியாவா என்று இன்னமும் ஊசலாடிக்கொண்டிருந்த முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் சபையில் இணைவதா, வேண்டாமா என்று முடிவெடுக்காத நிலையில் இந்தத் தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றார் ஜெயகர். அடுத்து எழுந்த அம்பேத்கர், மிகவும் அற்புதமானதொரு ஒரு உரையை நிகழ்த்தினார். அந்த உரை நடுநிலைமையோடு திகழ்ந்ததோடு, அம்பேத்கருக்கு இருந்த கச்சிதமான, ஆழ்ந்த சட்ட அறிவையும் புலப்படுத்தியது. அம்பேத்கர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சமரசத்தீர்வை முன்வைத்தார். ஆகவே, அம்பேத்கரின் திறமையினால் தான் அவரை அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் தலைவராக நியமித்தார்கள் என்று வர்மாக்கள் வாதிடுகிறார்கள்.

அடுத்ததாக, நாம் அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் செயல்பாட்டை மறு ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இக்குழு அடிப்படையான சட்டங்களை இயற்றுகிற பணியில் ஈடுபடவில்லை. பல்வேறு துணைக்குழுக்கள் பரிந்துரைத்த சட்டப்பிரிவுகளை, செம்மைப்படுத்தி, செப்பனிட்டு அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முன்னால் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பே வரைவுக்குழுவுக்கு உரியது. சபையானது பல்வேறு வரைவுகளை வாசிக்க வேண்டிய சூழல்கள் ஏற்பட்டன. அப்போதெல்லாம் சட்டப்பிரிவுகள் குறித்து நிகழ்ந்த விவாதங்களை நெறிப்படுத்தி, வழிநடத்தும் பணியில் வரைவுக்குழுவின் உறுப்பினர்கள், அதிலும் அடிக்கடி அம்பேத்கரே ஈடுபட்டார். மேலும், அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் வரைவுக்குழுவின் உறுப்பினராகவும், பதினைந்து குழுக்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களின் உறுப்பினராகவும் திகழ்ந்த வெகு சில உறுப்பினர்களில் அம்பேத்கரும் ஒருவர்.5 ஆகவே, அம்பேத்கரால் அனைத்து சட்டப்பிரிவுகள் சார்ந்து நடைபெற்ற விவாதங்களையும் கவனிக்க முடிந்தது. சிறுபான்மையினர் உரிமைகள் உள்ளிட்ட மிக முக்கியமான சட்டப்பிரிவுகள் சார்ந்த விவாதங்களையும் கூர்ந்து நோக்க முடிந்தது.

பல்வேறு குழுக்களின் பரிந்துரைகள் வரைவுக்குழுவின் தலைவர் என்கிற முறையில் அம்பேத்கருக்கும், குழுக்களின் செயலாளராகத் திகழ்ந்த எஸ்.என்.முகர்ஜிக்கும் (இவருக்கு இறுதியாக அம்பேத்கர் நெகிழவைக்கும் புகழாரத்தைச் சூட்டினார்) அனுப்பி வைக்கப்பட்டன. இவர்கள் சட்டப்பிரிவுகளைத் திருத்தியமைப்பதோடு,பல சட்டப்பிரிவுகளுக்கு விளக்கங்கள் தேவைப்படுகிற போது அவற்றைப் பல்வேறு குழுக்களிடம் இருந்து பெறுகிற பொறுப்பும் இருவருக்கும் உரியதாக இருந்தது. அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளவே இல்லை. இதனால், இந்தத் திருத்தியமைக்கும் பணிச்சுமைகள் பெரும்பாலும் அம்பேத்கரின் தோளிலேயே விழுந்தன. இந்த வரைவுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான டி.டி.கிருஷ்ணமாச்சாரி நவம்பர் 1948-ல் சபையின் முன்னால் இப்படிப் பேசினார்:

‘நீங்கள் வரைவுக்குழுவிற்கு நியமித்த ஏழு உறுப்பினர்களில் ஒருவர் பதவியை விட்டு விலகியதால், அந்த இடத்துக்கு வேறொரு நபரை நியமனம் செய்தீர்கள். ஒரு உறுப்பினர் காலமானார். அவரின் இடம் நிரப்பப்படவில்லை. இன்னொரு உறுப்பினரோ அமெரிக்காவில் இருந்தார். அவரின் இடத்திற்கும் யாரும் கொண்டுவரப்படவில்லை. இன்னொரு நபரோ அரசாங்க அலுவல்களில் மும்முரமாக மூழ்கிவிட்டார். ஓரிரு உறுப்பினர்கள் டெல்லியில் இருந்து வெகுதூரம் தள்ளியிருந்தார்கள். அவர்களின் உடல்நலக்குறைவால் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியவில்லை. இறுதியாக, அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் ஒட்டுமொத்த பொறுப்பும் டாக்டர்.அம்பேத்கரின் தலைமேல் விழுந்தது. இப்பணியை மெச்சத்தக்க வகையில் சிறப்பாகச் செய்து முடித்திருக்கும் டாக்டர். அம்பேத்கருக்கு நாம் அனைவரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.’ 6
அம்பேத்கர் மட்டுமே அரசியலமைப்புச் சட்டத்தை எழுதவில்லை என்றாலும், அதன் உருவாக்கத்தின் எல்லாக் கட்டங்களிலும் அவரின் கைவண்ணம் இருந்து கொண்டே இருந்தது. அவர் குழுக்களின் பரிந்துரைகளைத் திருத்தியமைப்பதோடு நிம்மதியடையவில்லை. சபையின் முழு அமர்வில் கலந்து கொண்டு, பொறி பறக்கும் விவாதங்களில் சட்டப்பிரிவின் ஒரு வரைவு ஏன் மற்றொன்றை விட மேம்பட்டது என விளக்கினார். விவாதங்களின் போக்கையே தொடர்ந்து திசைமாற்றும் பணியிலும் அவர் அயராது ஈடுபட்டார். ஆகவே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உருவாக்கத்தில் அம்பேத்கர் மிக முக்கியமான பங்காற்றினார். இதுவே, ஏன் அருண் ஷோரி அவர் மீது இத்தனை வன்மமிகுந்த விமர்சனங்களை வைக்கிறார் என்பதை விளக்குகிறது. அருண் ஷோரியின் இன்னொரு வாதமான, காந்திய சிந்தனைகளை அம்பேத்கர் புறந்தள்ளினார் என்பதில் ஓரளவிற்கு நியாயம் இருக்கிறது.

காந்தியை பழிதீர்த்த மேற்கத்திய ஜனநாயகவாதி:

அம்பேத்கர் இளவயதில் வெளிநாட்டில் படித்த போது தான் உள்வாங்கிக்கொண்ட விழுமியங்களையும், அரசியல் மாதிரிகளையும் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் நியாயப்படுத்தினார். அவர் தாராளவாத ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவராகத் திகழ்ந்தார். அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டப்பிரிவில், இந்தியாவைச் ‘சோசியலிஸ்ட்’ என அறிவிப்பதில் துவங்கி, இந்திய குடியரசை முழுவதும் மாற்றியமைக்க முயன்ற இடதுசாரிகளை அம்பேத்கர் எதிர்த்தார். அப்படி, இந்தியக்குடியரசை சோசியலிஸ்ட் என்று அறிவித்து விட்டால், ‘அது ஜனநாயகத்தை எளிதாக அழித்துவிடும்’ என்று அவர் எண்ணினார்.7 மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசே எது மிகச்சிறந்த சமூக அமைப்பு என்பதை முடிவு செய்ய வேண்டும். இதனை, அவர் நவம்பர் 19, 1948 அன்று கீழ்கண்டவாறு விளக்கினார்:

‘ நாம் நம்முடைய அரசியலமைப்பு சட்டத்தின் வாயிலாக அரசியல் ஜனநாயகத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். எந்த வகையிலும் எந்த ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவும் தொடர்ந்து சர்வாதிகாரத்தோடு கோலோச்ச கூடாது என்கிற காரணத்துக்காகவே அரசியல் ஜனநாயகத்தை உருவாக்கியுள்ளோம். நாம் அரசியல் ஜனநாயகத்தை நிறுவி விட்டோம் என்பதால், லட்சியவாதமிக்க பொருளாதார ஜனநாயகத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்று விருப்பப்படுகிறோம்… […] [இப்போது], பொருளாதார ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்குப் பல்வேறு மக்கள் பல்வேறு வழிகளைக் கைக்கொள்ளலாம் என்று நம்புவார்கள். தனி உரிமை கோட்பாடே மிகச்சிறந்த பொருளாதார ஜனநாயகம் என்று சிலர் நம்புகிறார்கள்; வேறு சிலரோ சோசியலிச அரசே மிகச்சிறந்த பொருளாதார ஜனநாயகம் என்று கருதுகிறார்கள்; இன்னும் சிலர், கம்யூனிச சிந்தனைகளே மிகக் கச்சிதமான பொருளாதார ஜனநாயக வடிவம் என்று எண்ணுகிறார்கள் […] [இப்படிப்பட்ட சூழல்களில்] வழிகாட்டு நெறிமுறைகளில் நாங்கள் பயன்படுத்தியிருக்கும் மொழி திட்டமிட்டே இறுக்கமானதாக, நிலையானதாக எழுதப்படவில்லை. பல்வேறு வகையான சிந்தனைகள் கொண்ட பல்வேறு மக்களுக்குப் போதுமான இடத்தை வழங்கியுள்ளோம். லட்சியவாதமிக்க பொருளாதார ஜனநாயகத்தை அடைய அவரவரும் அவர்களின் சொந்த வழியில் முயற்சிக்கலாம். அவர்களின் வழியே பொருளாதார ஜனநாயகத்தை எட்டுவதற்கு மிகச்சிறந்த வழியாகும் என்று பொதுமக்களை நம்பவைக்க அவர்கள் முயலட்டும்.’8

இந்த வாதத்திற்குத் தன்னை உளமார ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக, இயற்கை வளங்கள் அனைத்தையும் தேசியமயமாக்க வேண்டும் என்கிற அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை அவர் எதிர்த்தார். அந்தச் சட்டத்திருத்தம் வாக்களிப்பிற்குக் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது அம்பேத்கர் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் எத்தகைய அறரீதியான வல்லமை மிக்கவராக திகழ்ந்தார் என்பதற்கு அடையாளமாகத் திகழ்கிறது.9 அம்பேத்கர் தாராளவாத ஜனநாயகத்தின் மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரமாக ஒரு சம்பவம் நடைபெற்றது. எப்போதும், வரைவுக்குழுவால் இறுதி செய்யப்பட்ட சட்ட வடிவத்தை நியாயப்படுத்துவதையே அம்பேத்கர் செய்வார். ஆனால், ஒருமுறை அவ்வாறு சட்ட வடிவத்தைத் தாக்கல் செய்த போது, அதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென்று முழு அமர்வை கேட்டுக்கொண்டார். அவர் தாக்கல் செய்த சட்டவடிவத்தைத் திருத்தி, அரசு நிர்வாக அதிகாரத்தையும் , நீதித்துறையையும் முழுமையாகப் பிரித்தே வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.10 சில உறுப்பினர்கள், அரசின் அதிகாரத்துக்கு ஆதரவாக வாதிடுவதாகச் சொல்லிக்கொண்டு, நீதித்துறையின் மிகக்கடுமையான கட்டுப்பாடு அரசை பலவீனப்படுத்தும் என்றார்கள். நிற்க கூட நேரமின்றிப் பிரதமராக பல்வேறு பொறுப்புகளோடு இயங்கிக்கொண்டு இருந்த நேரு கூட, அம்பேத்கரின் சட்ட திருத்தத்தை ஆதரிக்கும் பொருட்டு விவாதத்தில் கலந்து கொண்டார்.11 இதன் விளைவாக, அம்பேத்கரின் பரிந்துரை ஏற்கப்பட்டு, இந்த முழுமையான அதிகாரப் பிரிப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் சட்டப்பிரிவு 50 ஆனது. பிரிட்டிஷ் நீதித்துறையின் தாக்கத்தில் ஒரு நீதிபரிபாலன முறையை ஏற்படுத்தி இருப்பதை அம்பேத்கர் பின்னர் நியாயப்படுத்திப் பேசினார்.12 அதிகாரங்களைப் பிரித்து வைப்பது, எந்த வகையிலும் அரசை பலவீனப்படுத்தி விடாது என்பது அவரின் பார்வையாக இருந்தது.

கூட்டாட்சி முறையினால் ஏற்படும் அதீதமான அதிகாரப்பரவலாக்கம், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு பொதுவான அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்துவதைப் பாதிக்கும் என்பதால் அம்பேத்கர் வலிமைமிக்க மத்திய அரசையே ஆதரித்தார். எடுத்துக்காட்டாக, மாநிலங்களுக்குக் கூடுதலான சுயாட்சி கிடைத்தால், தீண்டாமை ஒழிப்பை கட்டாயமாக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவை அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரி அமல்படுத்தாமல் போகக்கூடும் என்று வாதிட்டார்.13 காந்தியவாதிகள் கிராமத்தில் இருந்து துவங்கி எல்லா மட்டத்திலும் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்கிற பார்வை கொண்டிருந்தார்கள். இதனால், அதிகாரத்தை மையப்படுத்த வேண்டும் என்கிற முடிவு, இயல்பாகவே காந்தியின் ஆதரவாளர்களைக் காயப்படுத்தியது. மிகவும் தீவிரமான காந்தியவாதிகளின் பரிந்துரைகளை அம்பேத்கர் புறந்தள்ளினார், அல்லது அவற்றின் தாக்கத்தை மட்டுப்படுத்தினார். இவ்வாறு அம்பேத்கர், மகாத்மா காந்தியின் மறைவுக்குப் பிறகு அவரைப் பழிதீர்த்துக் கொண்டார்.

அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு, அரசியலமைப்புச் சட்டத்தை எழுத உபயோகப்படுத்திய எழுத்துக்கள் பெரும்பாலும் காந்திய பார்வை கொண்டவையாக இருக்கவில்லை. நேரு கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கங்கள் குறித்த தீர்மானத்தில் மகாத்மா காந்தியின் தாக்கம் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தென்பட்டது. பல்வேறு குழுக்கள், துணைக்குழுக்களின் அறிக்கைகள் (இவற்றில் முக்கியமான குழுக்கள், துணைக்குழுக்களுக்கு நேரு, படேல் தலைமை தாங்கினார்கள்) காந்தி குறித்து மூச்சே விடவில்லை. இவற்றால் மட்டுமே, நவம்பர் 1948-ல் அம்பேத்கர் சமர்ப்பித்த அரசியலமைப்புச் சட்டத்தில் காந்தியத்தின் முத்திரை இல்லாமல் போனது என்பதற்கு இல்லை. அம்பேத்கர் தாக்கல் செய்த சட்ட வடிவத்தில், மலைப்பை ஏற்படுத்தும் வகையில் 315 சட்டப்பிரிவுகள் இருந்தன. இதனால் தான், அம்பேத்கர் அப்பட்டமான நிறைவோடு, ‘உலகத்தின் வேறு எந்த அரசியலமைப்பு சட்டமும் இத்தனை பெரிதில்லை.’ என்றார்.14 அதற்குப் பின்னர், அம்பேத்கர், அரசியலமைப்புச் சட்டத்தில் கிராமங்களுக்கு இடமில்லை என்கிற காந்தியவாதிகளின் விமர்சனத்தைக் கீழ்கண்டவாறு தவிடுபொடியாக்கினார்:

‘வரைவு அரசியலமைப்பு சட்டத்தின் மீது வைக்கப்படும் இன்னுமொரு குற்றச்சாட்டு உண்டு. அது பண்டைய இந்திய ஆட்சியமைப்பை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்பதே அந்தக் குற்றச்சாட்டாகும். புதிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பண்டைய இந்து அரசை மாதிரியாகக் கொண்டு உருவாக்கியிருக்க வேண்டும் என்கிறார்கள். மேற்கின் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டதற்குப் பதிலாக, புதிய அரசியலமைப்புச் சட்டத்தைக் கிராம, மாவட்ட பஞ்சாயத்துகளை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பி இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இன்னும் சிலர், இன்னமும் தீவிரமான காந்தியப்பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் எந்த மத்திய, மாநில அரசுகளும் அவர்களுக்கு வேண்டாம். அவர்களுக்கு இந்தியாவில் ஏராளமான கிராம அரசுகள் மட்டும் இருந்தால் போதுமானது. அறிவார்ந்த இந்தியர்கள் கிராம சமூகத்தின் மீது கொண்டிருக்கும் காதல் பரிதாபப்படும்படியாக இல்லாவிடினும், அளவில்லாததாக இருக்கிறது. […] கிராமம் என்னவாக இருக்கிறது? உள்ளூர் பெருமிதம் ஊற்றெடுக்கும் சாக்கடையாக, அறியாமை, குறுகிய மனப்பான்மை, வகுப்புவாதத்தின் கிடங்காக அல்லவா இருக்கிறது. வரைவு அரசியலமைப்புச் சட்டம் கிராமத்தை தூக்கி எறிந்துவிட்டு, தன்னுடைய அடிப்படையாகத் தனிமனிதனை ஏற்றிருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.’15

தமிழில்: பூ.கொ.சரவணன்

(இப்பகுதிகள் ‘அம்பேத்கரும், சாதி ஒழிப்பும்’ எனும் மொழியாக்கத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. நூலை வாங்க: https://www.amazon.in/Ambedkarum-Saathi-Ozhippum-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/dp/9386737663/ref=mp_s_a_1_1?keywords=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&qid=1574734728&sprefix=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87&sr=8-1#mediaMatrix_secondary_view_div_1574734735906)

பின்னூட்டமொன்றை இடுக