‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப்போகும்’ மாயக்கதை மஞ்சும்மல் பாய்ஸ்


‘கண்மணி அன்போடு’ பாடல் என் வாழ்வின் தாலாட்டுப்பாடல். இசைஞானி இளையராஜாவின் எத்தனையோ அருட்கொடைகளில் இப்பாடல் இன்னமும் அணுக்கமானது. உடைந்து அழும் காலங்களில் ஜானகியின் குரல் போல இருட்குகைகளில் இருந்து மீட்கும் வேறொரு கீதம் என்னளவில் இல்லை. ஒரே நேரத்தில் நெகிழ வைத்தபடியே, சிலிர்ப்பினை உடலெங்கும் தரும் பாட்டுடைச்செய்யுள். இந்த ஆண்-பெண் காதல் கீதம் அபிராமியின் கீதம் மட்டுமா? அது நம் தனிமைக் காலத்தின் உடன்வரும் உற்ற துணை. கசந்து போன வாழ்வின் கடைசி வெளிச்சம். கைகோர்த்து எம்பித்தள்ளும் கனிவின் மொழி. ‘Magical’ என்பதற்கான பொழிப்புரை இப்பாடல். 

இளையராஜாவின் இந்த கீதத்திற்கு கமல்-ஜானகி மட்டுமா உயிர் கொடுத்தார்கள்? இயக்குனர் சிதம்பரம் கேரளாவின் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மூலம் ‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப்போகும்’ மாயக்கதையை நிகழ்த்தியிருக்கிறார். எத்தனையோ மலையாளத் திரைப்படங்களுக்கு சென்னைத் திரையரங்குகளில் ஆரம்ப நாட்களிலேயே பார்வையாளனாக சென்றிருக்கிறேன். ஒரு வார நாளில் அரங்கு நிறைந்த கூட்டத்தை என் நினைவுக்கெட்டிய காலத்தில் கண்டதில்லை. இப்படத்தைக் காண மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. வைத்த கண் வாங்காமல் கமர்ஷியல் படங்களின் இலக்கணமெதுவும் இல்லாத இப்படத்தில் மக்கள் அமிழ்ந்து போயிருந்தார்கள்.


இத்திரைப்படம் உண்மையின் சாயலோடு இருப்பது மட்டும் இதன் வெற்றிக்குக் காரணமில்லை. அது எளிய மனிதர்களின் அசாத்திய சாதனையை திரையில் படைத்தளிப்பதில் நுணுக்கமாக வெற்றி பெற்றிருக்கிறது. வெற்றி, தோல்விக்கு இடையே சிக்கிக்கொண்ட கயிறு இழுக்கும் போட்டி 900 அடி ஆழ பள்ளத்தின் மரணப்பாதையில் அரங்கேறும் அதிசயம் இப்படம். 

இம்மனிதர்களுக்கு அரசின் துணையில்லை. மீட்பர்கள் வருவதில்லை. இறைவன் காட்சி தருவதில்லை. அவநம்பிக்கைமிக்க சொற்கள் மட்டுமே பரிசளிக்கப்படுகின்றன.  சாத்தானின் சமையலறை எனக் கர்ண பரம்பரைக் கதைகள் அச்சுறுத்துகின்றன. ‘அதனால் என்ன? என்னாகும் பார்த்து விடலாம்!’, என சக நண்பனின் மீதான பேரன்போடு துச்சமென வாழ்வுக்கும், மரணத்திற்கும் இடையேயான நண்பர்களின் புத்துயிர்ப்பு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. 

‘சாவைப் பாத்துட்டு வந்த இவன் தெய்வத்துக்கு சமமானவன். கும்பிட்டுக்கோ தாயி’ என்கிற ஒரு வரி மானுட யத்தனத்தை கடத்திவிடுகிறது. தேவலாயங்களும், இறை வழிபாட்டாளர்களும் கைத்தொழுது வணங்கும் தெய்வீக காதலை நிகழ்த்துபவர்கள் காதலர்கள் அல்ல, நண்பர்கள். அவர்களின் வாழ்த்துப்பாடல் இளையராஜாவின் இறவா கீதம். அவசியம் திரையரங்கத்தில் பாருங்கள். நம் காயங்களை ஆற்றும் அற்புதக்கதை இது. வாழ்வின் நறுங்கனவும் கூட. 

உண்மை நாயகர்கள் சிஜூ, சுபாஷ்

பின்னூட்டமொன்றை இடுக