இந்தியாவும், உலகமும் -2


உருவாகிறது அயலுறவுக் கொள்கை!

ஆங்கிலேய அரசு இந்தியாவைக் காலனி ஆதிக்கத்தில் சுரண்டியது என்பது ஒருபுறம், இன்னொரு புறம் அது எடுத்த முடிவுகள், செய்த போர்கள், உடன்படிக்கைகள் இந்தியாவின் அயலுறவில் இன்னமும் தாக்கத்தை உண்டு செய்கின்றது. பிரிட்டன் அரசு சீனாவுடன் சமரச போக்கையும், இந்தியாவில் இருந்த ஆங்கிலேய ஆட்சி சலுகைகளைப் பெறவேண்டும் என்று எண்ணியது. இந்த இரண்டு மாறுபட்ட போக்குகள் சீனாவுடனான உறவை குழம்பிய நிலையிலேயே வைத்துக் கொண்டது. திபெத், அக்சாய் சின் ஆகியவற்றுக்கான எல்லைகளை வலிமைமிகுந்த காலனிய சக்தியாக மக்மோகன் கோடு, ஜான்சன் கோடு ஆகியவற்றின் மூலம் வகுத்தார்கள்.  அதனை சீனா ஏற்க மறுத்து இந்தியாவைப் போர்க்களத்தில் எதிர்கொண்டது. இன்னமும் அந்த எல்லைச் சிக்கல் தீராமலே இருக்கிறது.

பிரிட்டன் சுற்றி இருக்கும் மற்ற வலிமை வாய்ந்த தேசங்களின் தாக்குதலில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தடுப்புத் தேசங்களை உருவாக்கியது. இந்திய துணைக் கண்டத்தில் இரான், ஆப்கன், திபெத்தை வெளிவட்டத்திலும், பூட்டான், நேபாளம், சிக்கிம் ஆகியவற்றை உள்வட்டத்திலும் உருவாக்கி தன்னைத் தற்காத்துக் கொள்ள முயன்றது. இந்தியா பிரிட்டனின் ஆதிக்கத்தை இன்னமும் சத்தமில்லாமல் தொடர முயல்வதாகக் கருதுவதற்கு இடமளிக்கும் செயல்பாடுகள் இந்தியாவால் அவ்வப்பொழுது மேற்கொள்ளப்படுகின்றன.

 

இந்தியாவில் வெளியுறவுத்துறை பற்றிய சிந்தனை விடுதலைக்கு முந்தைய காலத்திலேயே தலைவர்களிடையே நிலவி வந்திருக்கிறது. கேசவ சந்திர சென், தயானந்தர், தாதாபாய் நவ்ரோஜி, ஜி.வி.ஜோஷி, பெரோஸ்ஷா மேத்தா, தின்ஷா வாச்சா, கோகலே என்று பலரும் பல்வேறு வகைகளில் இந்தியாவின் அயலுறவு கொள்கை எப்படி அமையவேண்டும் என்று தங்களின் சிந்தனை, கருத்துக்களை முன்வைத்தார்கள். காந்தி, நேரு அதை மேன்மேலும் செம்மைப்படுத்தினார்கள். அதில் தேசப்பெருமிதம் வந்துவிடாமல் தடுக்கும் வகையில் தாகூரின் தேசபக்தி குறித்த கூர்மையான விமர்சனங்கள் அமைந்தன.

இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த பின்பு அயலுறவு துறை அமைச்சராகத் தான் உயிருடன் இருந்த காலம்வரை நேருவே இருந்தார். வெளிநாட்டு தூதுவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்களைத் தானே நேர்முகம் செய்வதை நேரு வழக்கமாக வைத்திருந்தார். ஆசியாவின் மகத்தான சக்தியாக இந்தியா மாறவேண்டும் என்கிற கனவு அவரிடம் இருந்தது. கிரிஜா சங்கர் பாஜ்பாய் எனும் முதல் வெளியுறவுத் துறை செயலாளர் அப்பணியில் தானும் தீவிரமாக ஈடுபட்டார்.

நேரு முதல் நேற்று வரை இந்தியாவின் அயலுறவுக் கொள்கை:

இந்தியாவின் அயலுறவுக் கொள்கையைச் செதுக்கியவர் என்கிற முறையில் நேருவை அணுகுவதில் எண்ணற்ற பார்வைகள் காணப்படுகின்றன. நேரு உலக அமைதி, ஆயுத ஒழிப்பு என்று இயங்கி தேசநலனை கோட்டை விட்டார் என்கிறது ஒரு தரப்பு. நேரு அணிசேராக் கொள்கையின் மூலம் ஒரு கனவுலகில் வாழ்ந்தார் என்பது இன்னொரு கருத்து. அணிசேராக்கொள்கை என்கிற போர்வையில் இந்தியாவுக்கு எது தேவையோ அதைச் சாதிக்கும் சாதுரியமே நேருவிடம் இருந்தது என்பது இன்னுமொரு வாதம். நேரு கனவுக்காரராக இருந்தாலும் அவர் நாட்டின் நிலவரத்தால் சாமர்த்தியமான செயல்பாடுகளை மேற்கொண்டார் என்பது ஒரு தரப்பு. உலகம் முழுக்க ஆயுதப்போர்களைத் தவிர்க்க வேண்டும் எனக் குரல் கொடுத்த நேரு, கோவாவை ஆயுதங்களின் மூலம் கைப்பற்றிக்கொண்டார். ஒருபுறம் அணு ஆயுத ஒழிப்புக்கு குரல் கொடுத்துக் கொண்டே இந்தியா அணுகுண்டு தயாரிப்பதற்கான அடிப்படை அவரால் இடப்பட்டது.

ஐநா சபையில் இந்தோனேசியா மீது ஹாலந்து போர் தொடுப்பதைத் தடுக்கும் செயலை அவர் செய்தார். காங்கோவில் அமைதியை நிலைநாட்டவும் அவர் உதவினார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்குக் காஷ்மீர் சிக்கலை ஐநா நியாயமாக நடந்துகொள்ளும் என்று எண்ணி கொண்டு சென்றார். ஐநா அவரின் வரிகளிலேயே கவலைதரும் வகையிலும், மன உளைச்சல் தரும் வகையிலும் பொறுப்பற்று நடந்து கொண்டது. எனினும், ஐநாவுடன் நல்லுறவை அவர் தொடர்ந்து பேணினார். அதேசமயம் இரு தரப்பையும் கண்டித்த ஐநாவிடம் மீண்டும் காஷ்மீர் சிக்கலை கொண்டு போகக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.

நேரு இரண்டு வல்லரசுகளின் அதிகாரப் போட்டியில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதால் நேரு அணிசேராக் கொள்கையைக் கையிலெடுத்தார். ஒரு பக்கம் ரஷ்யாவுடனும், இன்னொரு பக்கம் பிற வலிமைமிகுந்த ஐரோப்பிய தேசங்களுடனும் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துகொண்டார். கொரியப் போரில் எந்தப் பக்கமும் அணிசேராமல் நடுநிலையாக நடந்து கொண்டது அவருக்கு நற்பெயரை தந்தது. ஆனால், சீனப் போர் இந்தியாவின் அணிசேராக் கொள்கையை மொத்தமாகத் தகர்த்தது. அமெரிக்காவிடமும், இன்னபிற நாடுகளிடமும் ஆயுதங்கள் பெற்று இந்தியா தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது. ஆயுத ஒழிப்பில் பரவலாக நேரு இயங்கினாலும் வளர்ந்த நாடுகள் அதற்குப் போதுமான ஆதரவு தராதது சீனாவின் அணு ஆயுத முன்னெடுப்புகள் இந்தியாவையும் அதனை நோக்கி செலுத்தியது.

இந்திராவின் இரும்புக்கரம்:

இந்திரா காந்தி சாதுரியமான, ராஜதந்திரம் மிக்க அயலுறவுக் கொள்கையைக் கொண்டவர் என்று கருதப்படுகிறது. இந்தியாவின் பிரபலமான பிரதமர்கள் பட்டியலில் அவரின் பெயர் முன்னணியில் இருக்கின்றது. இந்திரா பிரதமராக ஆகியிருந்த பொழுது அமெரிக்க-ரஷ்ய மோதல் குறைந்து  இருந்தது. பாகிஸ்தானுக்கு இரண்டு நாடுகளும் ஆயுத உதவிகளை இந்திய-பாகிஸ்தான் போருக்கு பின்னர் வழங்கிக் கொண்டிருந்தன. சோவியத் ரஷ்யா சாஸ்திரி வென்று காட்டிய போரில் இந்தியா எதையும் சாதித்துவிடாமல் பார்த்துக் கொண்டது. இந்திரா ரஷ்யாவும் சீனாவும் மோதிக்கொண்ட பொழுது அமைதி காத்து தன்னுடைய பாதையைப் புலப்படுத்தினார். ரஷ்யா மீண்டும் வழிக்கு வந்தது.

வாஷிங்க்டன் பயணம் சென்று விவசாயத் தொழில்நுட்பம், விதைகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு வந்த இந்திரா வியட்நாம் போரில் அமெரிக்காவின் போக்கை கண்டிப்பதையும் செய்தார். ரஷ்ய தலைவர் கோசிஜின் பாகிஸ்தான் போய்விட்டு வந்த பின்பு சீனாவுடன் போரில் ஈடுபட்டு மூக்குடைப்பட்ட பொழுது இந்தியா அமைதி காத்தது. அப்பொழுது இந்தியாவின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் என்று சொன்ன ஒப்பந்தத்தை இரண்டு வருடங்கள் கழித்துப் பாகிஸ்தானுடன் போர் என்கிற சூழலிலேயே இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார். கிழக்குப் பாகிஸ்தானை படுகொலை பூமியாக மாற்றிக்கொண்டிருந்த பாகிஸ்தானின் ராணுவத்தின் செயல்களை நிக்ஸன்-கிஸ்ஸிங்கர் ஆகியோர் ஆதரித்தார்கள். கிழக்குப் பாகிஸ்தான்  அகதிகளின் எண்ணிக்கை இந்தியாவில் பெருகிக்கொண்டு போனது.

இந்திரா கோடிக்கணக்கில் பாகிஸ்தானிய ராணுவத்தால் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்திருந்த மக்களை மனிதாபிமானத்தோடு உலகம் அணுக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பாகிஸ்தானுக்கு அழுத்தம் தரவேண்டும் என்று அவர் வேண்டிககொண்டது உலகின் காதுகளில் விழவில்லை. உலகம் முழுக்கப் பயணம் செய்து அகதிகளுக்காக ஆதரவு திரட்டினார் இந்திரா. ஒரு தற்காலிக அரசை மேற்கு வங்கத்தில் அவாமி லீக் தலைமையில் அமைத்தார். பாகிஸ்தான் இந்திய நிலைகளின் மீது தாக்குதல் நிகழ்த்தியதும் போரை கச்சிதமாக நிகழ்த்தி, வெற்றி பெற்ற உடனே போரை நிறுத்திக்கொண்டார். பூட்டோவிடம் கடுமையான நிபந்தனைகள் வைக்காமல் வாய்மொழி உத்தரவாதத்தைக் காஷ்மீர் சிக்கலில் பெற்றுக்கொண்டார். கடுமையாக நடந்து கொண்டால் பாகிஸ்தானில் பூட்டோவால் ஆட்சி செய்ய முடியாது என்று உணர்ந்திருந்தார் இந்திரா. இதைப் பெருந்தன்மை என்று எண்ணாமல் இந்தியாவின் பலவீனம் என்று பாகிஸ்தான் தொடர்ந்து கருதிக்கொள்கிறது.

இந்தப் போருக்கு பின்னர் இந்தியா தரவேண்டிய உணவுக்கான பல மில்லியன் டாலர் கடனை அமெரிக்கா தள்ளுபடி செய்தது. இலங்கையில் இடதுசாரிகள் நிகழ்த்த முயன்று ஆயுத கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவர இந்திரா உதவினார். ஜி.பி.பார்த்தசாரதியை இலங்கை அரசு, ஈழத் தமிழர்கள் ஆகியோரிடையே உடன்படிக்கை கொண்டுவர அனுப்பினார். அதேசமயம் தமிழ் குழுக்களுக்குத் தமிழகத்தில் நிகழ்ந்த ஆயுத பயிற்சியை அவர் அமைதியாக வேடிக்கை பார்த்தார். இந்தியாவின் பாதுகாப்பில் இருந்த சிக்கிம் கைநழுவிப் போவதற்கான அறிகுறிகள் தெரிந்ததும் அதனைக் கைப்பற்றிக் கொண்டார். இந்தியாவைத் தெற்காசியாவில் பலமிகுந்த சக்தியாக இந்திரா முன்னிறுத்தினாலும் தெற்காசிய ஒற்றுமை என்பது சாத்தியமில்லாமல் போனது. அதற்குக் காரணங்கள் பல.

இந்தியா சிறு தேசங்கள் இந்தியாவின் ஆயுதக் குழுக்களுக்கு உதவும் என்று அஞ்சினார். அவையோ இந்திரா சிக்கிம் முதலிய பகுதிகளைக் கைப்பற்றியதால் தங்களின் பகுதிகளையும் கைப்பற்றக்கூடும் என்று அஞ்சி அமெரிக்கா, சீனா ஆகியவற்றிடம் சரண் புகுந்தார்கள். ஒரு ஒருங்கிணைந்த செயல்திட்டம் இந்திராவுக்கு இல்லை. தனித்தனி சிக்கல்களுக்கு எதிர்வினை ஆற்றுவதே வழக்கமாக இருந்தது. ஆப்கானிய போரில் சோவியத் ரஷ்யா இங்கே நுழைந்ததும், அதைச் சாக்காகச் சொல்லி அமெரிக்காவும் பாரசீக வளைகுடாவில் கால் பதித்தது. பாகிஸ்தானுக்கு எண்ணற்ற பொருள், ஆயுத உதவியும் செய்தது. இன்னொன்று, இந்தியா பொருளாதாரத்தில் தெற்காசியாவை கட்டமைக்கிற அளவுக்கு வலிமை மிகுந்ததாக இருக்கவில்லை இரான், இராக் முதலிய நாடுகளோடும், சவுதியோடும் இந்திரா நல்லுறவை பேணினார்.

அதேசமயம் அனைத்தையும் மையப்படுத்திய அவர் தனக்குப் பின்னர் வலிமையான அயலுறவுக் கொள்கையை எடுத்துச் செல்லும் அமைப்புகள், தலைவர்கள், கட்டுமானம் ஆகியவற்றை உருவாக்கத் தவறிவிட்டார். ஆசியானை அமெரிக்காவின் கைப்பாவை என்று எண்ணி அதில் உறுப்பினராகாமல் தவறு செய்தார். அமைதி செயல்பாடுகளுக்காக அணுகுண்டு வெடிப்பு என்று வெடித்துவிட்டுத் தன்னை அணு ஆயுத நாடாக அறிவிக்காமல் போய் NSG அமைப்பு உருவாக்கத்தால் அணு சக்தியில் பெரிய வளர்ச்சியை அடுத்த முப்பது வருடங்களுக்கு ஏற்படாமல் தடுக்கத் தெரியாமல் காரணமாகி விட்டார். உள்நாட்டுச் சிக்கல்களைக் கடைசி முறை ஆட்சிக்கு வந்த பொழுது இந்திரா ஒழுங்காகக் கையாளாமல் போய்ப் பாகிஸ்தானின் ஆசீர்வாதத்தில் காஷ்மீர், பஞ்சாப் ரத்த பூமியாக மாறியது. என்றாலும், இந்திரா இந்திய வெளியுறவுத் துறையை அடித்து விளையாடும் போக்கிற்கு நகர்த்தினார்.

இந்தியாவின் அயலுறவுக் கொள்கையில் தைரியமிகுந்த முன்னெடுப்புகள் நரசிம்ம ராவ் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன என்றாலும் அதற்கான ஆழமான அச்சாரம் ராஜீவ் காந்தியின் காலத்தில் போடப்பட்டது. சோவியத் ரஷ்யாவின் இந்திய ஆதரவு போக்குக் கோர்பசேவ் வந்த பிறகு மாறுவதை உணர்ந்தார் ராஜீவ். அமெரிக்காவை நோக்கி நேசக்கரம் நீட்டியதோடு, சீனாவுடன் பலகாலமாகக் கசந்திருந்த உறவை புதுப்பிக்க முயற்சித்தார். அமெரிக்கக் காங்கிரசில் பாகிஸ்தானுக்குத் தரப்படும் உதவியை மறைமுகமாகக் கண்டித்தார். இஸ்ரேல் அணியை இந்தியாவில் டேவிஸ் கப் போட்டியில் ஆட அனுமதித்தார்.

சும்டோரங் சூ பள்ளத்தாக்கில் சீனப் படைகள் இருப்பதைக் கண்ட இந்திய ராணுவம் தன்னுடைய படைகளைப் பெருமளவில் குவித்தது. அதற்குப் பெரிய அளவில் எந்த எதிர்வினையும் சீனா ஆற்றவில்லை என்பதைக் கண்ட இந்திய அரசு அருணாசல பிரதேசத்துக்குத் தனி மாநில அந்தஸ்தை வழங்கியது. அதற்குப் பிறகு சீனா பிரீமியரை சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நிகழ்த்தி ஒரு புதிய துவக்கத்தை ஆரம்பித்து வைத்தார். மாலத்தீவில் அப்துல் கயூம் அரசுக்கு எதிராக எண்பது தமிழ் போராளிகள் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்த பொழுது இந்திய அரசு உதவி நிலையைச் சீர்செய்தது. இலங்கையில் ஜெயவர்த்தனேவின் சூழ்ச்சியில் சிக்கிக்கொண்டு அமைதியைக் கொண்டு வருவதற்காக என்கிற பெயரில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட  இந்திய அமைதிப் படையின் செயல்பாடுகள்  ராஜீவின் மரணத்தில் போய் நின்றது.

இந்தியா தாரளமயமாக்கலுக்குப் பிறகு பல்வேறு புதிய முன்னெடுப்புகளை இந்திரா, ராஜீவ் போட்ட அடித்தளத்தில் முன்னெடுத்தன. அமெரிக்காவுடன் உறவு படிப்படியாகப் புதுப்பிக்கப்பட்டு அணுகுண்டு வெடிப்புக்கு பின்னர் ஏற்படுத்தப்பட்ட அணு ஆயுத ஒடுக்குமுறையை விட்டுப் புஷ் காலத்தில் மன்மோகன் சிங்கின் முயற்சியால் வெளிவர முடிந்தது. இஸ்ரேல், அரேபிய நாடுகளிடையே சுமுகமான உறவு நிலவிய சூழலை பயன்படுத்திக் கொண்டு இந்தியா தன்னுடைய உறவை முழுமையாக நரசிம்ம ராவ் காலத்தில் புதுப்பித்துக் கொண்டது. கிழக்காசியாவுடன் வர்த்தகத்தைப் பலமடங்கு பெருக்குவதை ஆசியானுடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் சாதித்தது. பூட்டானுடன் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் போடப்பட்ட பாரபட்சமான ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்து சரி செய்துகொண்டது. நேபாளத்துக்கும் அப்படியொரு உறுதி தரப்பட்டது. வங்கதேசத்துடன் நில எல்லை ஒப்பந்தம் கையெழுத்தானது. இலங்கையின் உள்விவகாரங்களில் மாறி மாறி போக்குகளை மாற்றுவதும் நிகழ்ந்தது. தெற்காசிய கட்டற்ற வியாபார ஒப்பந்தம் வாஜ்பேயி காலத்தில் கொண்டு வரப்பட்டது. மன்மோகன் சிங் இறக்குமதி வரிகளைப் பெருமளவில் தெற்காசிய நாடுகளுக்குத் தன்னிச்சையாகக் குறைத்தார்.

 

இந்தியா மனித உரிமைக்கு வெளிநாடுகளின் அழுத்தத்துக்குப் பிறகு அதிக முக்கியத்துவம் தர ஆரம்பித்துள்ளது., இந்தியா நேருவின் காலத்தில் அணிசேராக்கொள்கையை முன்னெடுத்தாலும் அது மேற்கின் எதிர்ப்பாக எப்பொழுதும் மாறவில்லை. இந்தியாவின் அயலுறவுக் கொள்கை புதுப்புது உயரங்களைத் தொட்டுக்கொண்டே இருக்கிறது. இந்தியா மாபெரும் சக்தியாக மாற முயல்வதைவிட அது சுனில் கில்னானியின் வரிகளில் ‘இணைக்கும் அல்லது கூட்டமைக்கும் சக்தியாக’ மாறுவது சிறப்பான ஒன்றாக இருக்கும்.

மொழி அரசியல் பகுதி – 4 இந்தியாவை சமஸ்கிருதமயமாக்கல்


மொழி அரசியல் பகுதி 4:

சம்ஸ்கிருதம் என்கிற மொழியை விடுதலைக்குப் பிந்தைய இந்திய அரசு எப்படியெல்லாம் வளர்க்க முயன்றது என்பதைப் பற்றிப் புரிந்துகொள்ளச் சம்ஸ்கிருத கமிஷன் சார்ந்து பல்வேறு விஷயங்களைத் தொட்டுக் காண்பிக்கிறது சுமதி ராமசுவாமியின் கட்டுரை.

விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் சம்ஸ்கிருதத்தை வளர்க்க அளவில்லாத நேரம், சக்தி, பணம் ஆகியவற்றை மத்திய அரசு செலவிட்டது. அம்மொழி யாருடைய தாய்மொழியும் இல்லை என்பதாலும், இந்தியாவின் பழமையான மொழி அதுவே என்பதாலும் அதனையே இந்தியாவின் தேசிய மொழியாக்க வேண்டும் என்று அதன் ஆதரவாளர்கள் முழங்கினார்கள். ஹீப்ரு மொழியை இஸ்ரேலின் தேசிய மொழியாக, மக்கள் பயன்பாட்டு மொழியாக மறுஉருவாக்கம் செய்த பொழுது, அதுவரை யூதர்கள் முன்னொரு காலத்தில் பேசிக்கொண்டிருந்த மொழி மக்களின் பயன்பாட்டுக்குள் பரவலான இடத்தைப் பெற்றது. இதைப்போலச் சம்ஸ்கிருதத்தை மாற்ற முயன்றதை ராபர்ட் அல்டர் ஒப்பிட்டு பார்க்கிறார்.
இதன் ஆதரவாளர்கள் ‘சம்ஸ்கிருதமே இந்தியா’ என்று உறுதியாக நம்புகிறவர்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்று பலரும் கூறிக்கொண்டு இருக்கும் சூழலில், இந்தியாவின் குழப்பம் மிகுந்த வேற்றுமைகளைத் தாண்டி குறிப்பிடத்தகுந்த ஒற்றுமையைச் சம்ஸ்கிருதமே சாதிக்கும் என்று அவர்கள் கருதினார்கள்.

பல்கலைக்கழகக் கல்வி கமிஷன், பள்ளிக்கால உயர்கல்வி கமிஷன், அதிகாரப்பூர்வ மொழி கமிஷன் ஆகியவை வடமொழிக் கல்வி இந்தியக் குடிமகன்களுக்கு அவசியம் என்று நம்பிக்கை தெரிவித்தன. பல்வேறு கருத்துக்கள்,, அற எடுத்துக்காட்டுகள், இலக்கிய வளங்கள், அறிவு, ஞானத்தின் கருவூலமான அம்மொழி அழிந்து கொண்டிருக்கையில் அதனை அரசு காக்காவிட்டால் அம்மொழி அழிந்துவிடும் என்று இக்கமிஷன்கள் கவலை தெரிவித்தன. அக்டோபர் 1956-ல் மாநில மறுவரைவுக் குழுவை அமைத்த மத்திய அரசு சம்ஸ்கிருதத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்யச் சுனிதி குமார் கோஷ் எனும் வடமொழி அறிஞர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இவருடன் சென்னைப் பல்கலையின் வி.ராகவன், பூனா பல்கலையின் ஆர்.கே.தாண்டேகர், ஜாதவ்பூர் பல்கலையின் எஸ்.கே.டே உட்பட ஏழு சம்ஸ்கிருத அறிஞர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

சுனிதி குமார் கோஷ் இந்திய மொழிகளின் மொழியியல் வரலாற்றில் ஆழ்ந்த அறிவுள்ளவர். நாற்பத்தி மூன்றில் அவர் இந்துஸ்தானியே இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் தகுதி உடையது என்றும், இந்துக்கள் மட்டும் இருந்தால் மூவாயிரம் வருடமாக இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ள வடமொழியை தேசிய மொழியாக ஆக்கலாம் எனக்கருதினார். அதிகாரப்பூர்வ மொழி கமிஷன் 56-ல் அறிக்கை சமர்ப்பித்த பொழுது அதன் உறுப்பினராக இருந்த கோஷ் ‘இந்தி ஏகாதிபத்தியத்தை’ எதிர்த்தார். வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்றும் மத்திய அரசின் மொழிகளாக வேண்டும் என அவர் கோரினார். வி.ராகவனோ எப்பொழுதும் வடமொழியே இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் எனவும், அப்படி இந்தி தேசியமொழியானால் அது சம்ஸ்கிருதமயமான வடமொழியாகவே இருக்க வேண்டும் எனக்கருதினார்.

கோஷ் தலைமை தாங்கிய கமிஷன் சம்ஸ்கிருதத்தை உச்சக்கட்ட ஒற்றுமை சக்தி, அளவில்லாமல் இணைக்கும் ஆற்றல், நம்முடைய இரத்தத்தில் கலந்த மொழி, அது மூச்சோடு மூச்சாகக் கலந்து விட்டது, இந்தியாவின் இருப்புக்கான ‘அடிப்படையே’ வடமொழியே என்று வாதிட்டது. ஒரு கலாசாரம், ஒரு மொழியின் அங்கம் என்கிற எண்ணத்தை வடமொழியை விலக்கினால் இந்தியர்கள் இழந்துவிடுவார்கள் என்று அது அஞ்சியது.

வடமொழியை இந்தியாவின் தேசிய மொழியாக, இணைப்பு மொழியாகக் கருதும் போக்கு ‘இந்துமத மறுமலர்ச்சி’யாளர்களிடம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்தே தென்பட ஆரம்பித்தது. இந்திய மொழிகளின் அனைத்துக்கும் அதுவே தாய் என்றும், ஒட்டுமொத்த வலிமை, அழகின் கருவூலம் என்றும் அது தவறாகப் போற்றப்பட்டது. சார்லஸ் வில்கின்ஸ், மோனியர் வில்லியம்ஸ் முதலிய ஆங்கிலேய நிர்வாகிகள் மற்ற இந்திய மொழியைக் கற்க முடியாத குறையை வடமொழியைக் கற்றுப் போக்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார்கள்.

தயானந்தர், விவேகானந்தர், அரவிந்த கோஷ் ஆகியோர் வடமொழியைக் கற்றே ஆகவேண்டும் என்று வலியுறுத்தியதோடு, தாங்களும் அதைக் கற்றுத் தேர்ந்தார்கள். நேரு, காந்தி வடமொழிக்கு பதிலாக இந்துஸ்தானியை தேசிய மொழியாக்க விரும்பினாலும், காந்திக்கு வடமொழியின் மீது பற்று இருக்கவே செய்தது. பகவத் கீதையைச் சம்ஸ்கிருதத்தில் தான் ஒருவர் படிப்பது உகந்தது என்றார். நேருவோ ‘இந்தியாவின் சிறந்த கலாசாரம், புதையலை உள்ளடக்கியது எது எனக்கேட்டால் வடமொழியே என யோசிக்காமல் சொல்வேன்.’ என்றார்.

தயானந்தர் ஆரிய சமாஜத்தை உருவாக்கி, வடமொழியைக் கற்பதை பரவலாக்க முயன்றார். பின்னர் இந்து மதத்துக்குப் பிற மதத்தவரை மதமாற்றுவதில் ஈடுபட்டதால் இந்தியை முன்னிறுத்தினார். எனினும், ஆரிய சமாஜம் உருது/அரேபிய/இஸ்லாமிய எதிர்ப்பின் அடையாளமாகத் தன்னுடைய கல்வித் திட்டத்தில் வடமொழியைக் கட்டாயம் சேர்த்தது. ‘தேசிய மதத்தின்’ முதன்மை கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தியாசிபிகல் அமைப்பின் ஆல்காட் ‘தேசிய வடமொழி இயக்கம்’ ஒன்றை நடத்தக்கூடத் திட்டமிட்டார்.

விவேகானந்தர் மக்கள் தங்களுடைய தாய்மொழியில் பாடங்களைக் கற்க வேண்டும் என்றாலும், வடமொழியே அவர்களுக்கு அதிகாரமும், மரியாதையும் தரும் என்று உறுதியாகக் கூறினார். அதைக் கற்கா விட்டால் மக்கள் கூட்டம் அடிமைப்பட்டே இருக்கும் என்றும், ஆதிக்க ஜாதியினரை எதிர்ப்பதை விடுத்து ஒடுக்கப்பட்ட ஜாதியினர் வடமொழியைக் கற்று தங்களின் நிலையை உயர்த்திக் கொள்வதோடு, ஆதிக்க ஜாதியினரின் கலாசாரத்தை வடமொழியைக் கற்பதன் மூலம் பெற்று ஜாதிமுறையைச் சமப்படுத்தலாம் என்று கூறினார்.

காந்தி இந்துஸ்தானி சம்ஸ்கிருதமயமாவதை எதிர்த்தாலும், தெற்கு, வடக்கு இரண்டின் இணைப்பாக வடமொழியே திகழ்கிறது என்றும், வடமொழியின் மகள்களாகத் தென்னிந்திய மொழிகள் தங்களுக்கு வார்த்தைப் பஞ்சம் ஏற்படுகிற பொழுது தாயான வடமொழியை நாடின என்றும் நாற்பத்தி இரண்டில் பேசினார். நாகரி, உருது வரிவடிவங்களில் அவர் விருப்பம் கொண்டிருப்பதாகச் சொன்னாலும் நாற்பத்தி ஆறில் இந்துக்கள் அனைவரும் நாகரி வரிவடிவத்தைக் கற்பதை கட்டாயமாக்க தன் விரும்புவதாகத் தெரிவித்தார். தான் வடமொழியைப் பள்ளிக்காலத்தில் கற்க கடினப்பட்டதை ஒப்புக்கொண்ட காந்தி, ஒவ்வொரு இந்து ஆணும், பெண்ணும் சம்ஸ்கிருதத்தில் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருக்க வேண்டும் என்று தன்னுடைய
சுயசரிதையில் எழுதினார்.

இவ்வளவு ஆதரவு கருத்துக்கள் சொல்லப்பட்டாலும், இறுதியில் வடமொழி தேசிய மொழியாகாமல் போனது சம்ஸ்கிருத கமிஷனை வருத்தப்படுத்தியது. வடமொழி ஒவ்வொரு இந்தியனின் நாவிலும் நடமாடிய பொழுது, இந்தியா வெற்றிமகுடம் தரித்த வண்ணம் இருந்தது என்று வரலாற்றை ஒற்றைப்படையாக அவர்கள் அணுகி வாதிட்டார்கள். வடமொழியை ஷெல்டன் பொல்லாக் ‘மாண்டரின்’ மொழி என்று அதன் உயர்தட்டு மக்களுக்கு மட்டுமே பயன்பட்ட தன்மையைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். தூய்மைப்படுத்தப்பட்ட வடமொழி தற்போது மக்களைச் சென்றடைவதன் மூலம் அது இயற்கையான மொழியாக மாறக்கூடும் என்று அவர்கள் கருதினார்கள்.

விடுதலைக்கு முந்தைய காலத்திலேயே பம்பாய், கல்கத்தா பல்கலைகளில் வடமொழி இரண்டாவது கட்டாய மொழியாக இருந்தது. தேசிய கல்வியில் வடமொழியைச் சேர்க்க பல்வேறு கல்லூரிகள், அரசுகள் முயல்வது விடுதலைக்கு முந்தைய காலத்தில் ஆரம்பித்தது அதன் உச்சப்புள்ளி இக்கமிஷனில் வந்து நின்றது.

இந்தியன் என்பவர் தேசத்துக்கான வடமொழியின் அடிப்படை மதிப்பை மறுக்கக்கூடாது என்று இக்கமிஷன் வாதிட்டது. செப்டம்பர் நாற்பத்தி ஏழில், சம்ஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாக ஏற்பதன் மூலம் மேலும் இணைந்திருக்க முடியும் என்று அம்பேத்கர் உட்பட இருபத்தி எட்டு பேர் மனுவை அரசியலமைப்பு வரைவுக் குழுவின் முன்னர்ச் சமர்ப்பித்தார்கள். (டி.டி.கே,லக்ஷ்மிகாந்த மைத்ரா, துர்காபாய் தேஷ்முக், நஸ்ரூதின் அகமது ஆகியோர் பிறர்.)எது இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் என்கிற சிக்கல் எழுந்த பொழுது நஸ்ரூதின் அகமது, ‘வடமொழி யாருக்கும் தாய்மொழி இல்லை என்பதால் அது அனைவருக்கும் சமமான வாய்ப்பையே தரும்.’ எனக் கருதினார். எல்லா மொழிகளிலும் வடமொழியின் சொற்கள் இருப்பதால் அம்மொழியைக் கற்பது கடினமாக இருக்காது என்று வடமொழியின் ஆதரவாளர்கள் வாதிட்டார்கள்.

மைத்ரா வடமொழியை ஒருவர் ஏற்க மறுப்பது தன்னுடைய பாட்டியை நிராகரிப்பது போலாகும் என்றார். இன்னமும் அபத்தமாக இந்தியின் ஆதரவாளர்கள், இந்தி தான் வேதகால வடமொழியில் இருந்து இறங்கி வந்த, மூத்த மகள் எனவும் பேசினார்கள். வடமொழியின் வரிவடிவமே அதிகாரப்பூர்வ வரிவடிவமாக இந்திக்கு ஏற்கப்பட்டது. அளகுராய் சாஸ்திரி, இந்தி என்கிற தேசிய மொழியும், தேவநாகரி வரிவடிவமும் ரிக் வேதத்தில் இருந்து பெறப்பட்டவை என்று அடிப்படை மொழியறிவு இல்லாமல் அரசியலமைப்பு வரைவுக் கூட்டத்தில் பேசினார்.

சம்ஸ்கிருத கமிஷன் இந்தியாவுக்கான மொழி வடமொழி என்று நிறுவ இந்தியா முழுக்கப் பயணம் செய்து பலரை நேர்முகம் கண்டது. தெற்கில் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்தே பலரும் இதில் ஆர்வமாகக் கலந்து கொண்டார்கள் என்று அப்பொழுதைய காமராஜர் அரசு அவர்களை மதிக்காததை மறைத்து எழுதினார்கள். என்னென்ன கேள்விகள் எழுப்பினோம் என்று மட்டும் சொன்ன கமிஷன், என்னென்ன பதில்கள் வந்தன என்பதைப் பற்றி மூச்சுவிடவில்லை. ஈழவர்கள், மாப்பிள்ளைமார்கள், கிறிஸ்துவர்கள் ஆகிய அனைவரும் வடமொழியை விருப்பத்தோடு கற்பதாகவும், லக்னோவில் இஸ்லாமிய பெண்களும், குஜராத்தில் பார்சிக்களும், பஞ்சாபில் சீக்கியர்கள் அதைக் கற்பதைக் கண்டதாகவும் சுனிதி குமார் சாட்டர்ஜி சொன்னார். இஸ்லாமியர்களை எந்த இடத்திலும் தாக்காமல் கவனமாக இருந்த கமிஷன், ஒரே ஒரு இடத்தில் வடமொழியைக் கற்க மறுத்து ஆங்கிலேயர் நம்முடைய நாட்டைப் பிடிக்க அவர்கள் காரணமாகி விட்டனர் என்று ‘அறிவுப்பூர்வமாக’ கருத்துத் தெரிவித்தது.

வேதங்கள் கோயில்களில் பயன்படுத்துவதைக் கண்டு பூரித்த இந்தக் கமிஷன் ஒரு மதச்சார்பற்ற அரசு கோயில்களை முறைப்படுத்தக் கூடாது என்றாலும், இந்திய கலாசாரத்தின் அடிப்படையான வேதத்தைத் தாங்கிய வடமொழியின் வளர்ச்சிக்கு இக்கோயில்களின் வருமானத்தைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்தது. தினமும் சம்ஸ்கிருத செய்திகளோடு, கீதையும், மற்ற இதிகாசங்களும் வானொலியில் ஓதப்படவேண்டும் என்றும், காளிதாசர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்றும் அது கோரியது. திரைப்பிரிவு இதிகாசங்கள் சார்ந்த ஆவணப் படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நீண்டன அதன் பரிந்துரைகள்.

அதன் அறிக்கையின் முதல் பக்கத்திலேயே தண்டி எனும் பல்லவர் அவையில் இருந்த வடமொழி அறிஞர் ‘மகா முனிவர்கள் பேசிய புனித மொழி’என்றதையும், தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய சேனாவரையர் ‘வடமொழி இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் பொதுவானது’ என்பதையும் சாதுரியமாகக் குறிப்பிட்டுத் தமிழர்கள் இம்மொழியை ஏற்பார்கள் என்று கருத்துத் தெரிவித்தது. தனித்தமிழ் இயக்கம் வடமொழியில் இருந்து கடன் பெறாமல் நவீன கருத்துக்கள், சிந்தனைகளை வெளிப்படுத்த முடியாது என்று சம்ஸ்கிருத திக்விஜயம் நூலில் சுனிதி குமார் சாட்டர்ஜி எழுதினார். ராகவன் இன்னும் ஒரு படிமேலே போய் இஸ்லாமியர்கள் ஆட்சியில் இந்தியா தன்னுடைய இந்தியத்தன்மையை வடமொழியை விலக்கியதால் இழந்தது என்றும், அப்பொழுது தெற்கு தான் வடமொழியைக் காத்தது என்றும் கருத்துரைத்தார்.

அதிகாரப்பூர்வ மொழி கமிஷன் ‘வெறும் ஐநூறு பேர் பேசும் ஒரு மொழியை அதிகாரப் பூர்வ மொழியாக’ ஆக்க முடியாது என்று குட்டியதை எதிர்கொள்ளும் விதமாக வால்மீகி ராமாயணத்தின் வரிகளைச் சொன்னால் மக்கள் புரிந்துகொண்டு கண்ணீர் விடுவதில்லையா என்று கேட்டுக் கலக்கியது! வடமொழி மற்ற தாய்மொழிகளைப் போல உயிரோடு இருப்பதோடு, கவிதை, கதைகளில் அது பயன்படுத்தப்படுகிறது, அது நவீன கருத்துக்களை வெளிப்படுத்தவும் பயன்படுகிறது என்றது இக்கமிஷன்.

ராஜா ராமண்ணா எனும் தேர்ந்த அறிவியல் அறிஞர் இன்றைய அறிவியல் காங்கிரஸ் சர்க்கஸுக்கு எல்லாம் முன்னோடியாக, ‘சம்ஸ்கிருதமும், அறிவியலும்’ எனும் துண்டறிக்கையில் ‘பாணினியின் இலக்கணமே மொழியை அறிவியல் முறைகளில் வேதியியல் பகுப்பாய்வு செய்தது’ என்றும், வடமொழியின் வடிவம் கணிதம், வடிவியல், தர்க்கம் ஆகியவற்றின் வடிவங்களை ஒத்திருப்பதாக மெய்சிலிர்த்தார். பெல்லியன் சூத்திரத்தை, பித்தாகரஸ் சூத்திரத்தை முன்னமே வடமொழியில் இருப்பதைச் சொல்லி கமிஷன் அறிவியலுக்கும் உகந்த மொழி வடமொழி என்றது. இந்து தேசியத்தின் மொழியில் பேசிய இந்தக் கமிஷன் சாமர்த்தியமாக அதைத் தேசியத்தின் போர்வையில் செய்வதாகக் காட்டிக்கொண்டது, இது மதச்சார்பின்மை அரசியலை விட்டுக் காங்கிரஸ் ஆட்சி ‘விலகிய கணம்’ எனப் பார்த்தா சாட்டர்ஜி’ வர்ணிக்கிறார்.

சத்யமேவ ஜெயதே என்று அரசு பொறித்ததும், ஸ்ரீமதி, ஸ்ரீமான் மிஸ்டர், மிஸர்ஸ் இடத்தை எடுத்துக்கொண்டதும், ஆயுள் காப்பீட்டுக் கழகம், இந்திய கடற்படை முதலிய அமைப்புகள் வடமொழியின் வாசகங்களைப் பயன்படுத்தியதை பெருமையோடு குறிப்பிட்ட கமிஷன் வடமொழியை அனைவரும் கற்க செய்யவேண்டும் என்றது.

மத்திய அரசு மத்திய சம்ஸ்கிருத வாரியத்தை வடமொழி வளர்ச்சி, பரவலாக்கம் ஆகியவற்றுக்கு அறிவுரை சொல்ல அமைத்தது. கேந்திரிய சம்ஸ்கிருத பரிஷத் அமைப்பை ஏற்படுத்தியும், கல்வித்துறையில் வடமொழி பிரிவு ஒன்றை உருவாக்கியும் வடமொழியைக் காக்க முனைந்தது. வடமொழி கற்றலை பல மாநில அரசுகளும், மத்திய அரசும் கட்டாயமாக்கின. ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டதிலும் கோடிக்கணக்கில் நிதி வடமொழி வளர்ப்புக்கு ஒதுக்கப்பட்டது. இந்து மதத்தை இந்தியாவின் இணைப்பு சக்தியாக மாற்ற முயன்று பிரிவினைக்கு வழிவிட்ட போக்கின் மறு வடிவமாக வடமொழி மீண்டும் இந்தியாவின் கலாசார முகமாக முன்னிறுத்தப்பட்டும் அரசின் செயல்பாடுகளைத் தாண்டி வடமொழி சீர்குலைந்து வருகிறது என்று அதன் ஆதரவாளர்கள் குமைகிறார்கள்.

சுதீப்தா கவிராஜ் குறிப்பிடுவதைப் போல, ‘நவீனத்தை எதிர்கொள்ள அஞ்சுகிற சமூகம் தன்னைக் கடந்தகாலம், கலாசாரம் ஆகியவற்றின் மாறுவேடங்களில் ஒட்டுமொத்த நவீன கருத்துக்களும் உள்ளதாகத் தன்னைப் புதைத்துக் கொள்வதைச் செய்கிறது. அது நவீனத்தை எதிர்கொள்ள மறுக்கும் பயமும், நவீனத்தால் தான் சிதைவுறுவதை ஏற்க மறுக்கும் போக்குமே இதற்குக் காரணம்.’

ஷெல்டன் பொல்லாக்கின் வரிகளில், ‘தெய்வங்களின் மொழியான சம்ஸ்கிருதம் தன்னுடைய வாழ்நாளை நீட்டித்துக் கொள்ள இம்மை உலகில் சாதாரண மனிதர்களின் நாவில் புழங்க வேண்டியது ஆகிற்று!’ என்கிறார். வடமொழி சில மேல்தட்டுக்கு மட்டுமே உரியது என்கிற போக்கு போய், அடித்தட்டு மக்களைச் சென்றடையும் ஜனநாயகமயமாக்கல் ஏற்பட்டு இருந்தாலும் அதனைக் கற்கும் ஒடுக்கப்பட்டவர்கள் மதிக்கப்படுகிறார்களா என்கிற கேள்வியையும் எழுப்பிக் கொள்ள வேண்டும்.

‘என் சம்ஸ்கிருதத்தின் கதை’ என்கிற கட்டுரையில் நவீன இந்தியாவில் முதன்முதலில் சம்ஸ்கிருதம் கற்ற தலித் பெண் என்கிற சிறப்புக்குரிய கும்தா பவ்டே தான் முதல்நிலையில் வடமொழியில் முதுகலைப் பட்டம் பெற்ற பின்னரும், பிராமணர்களும், ஆதிக்க ஜாதியினரும் அவரை ஏற்கவோ, அவருக்குப் பணி தரவோ விரும்பவில்லை. எனினும், அதே தேசம் நவீனத்தின் அடையாளமாக அவரை வரித்துக் கொண்டது. சாகாவரம் பெற்றது சம்ஸ்கிருதமும், சமத்துவமின்மையும் போலும்.

மொழி அரசியல் பகுதி-2 ஏன் இந்தி தேசிய மொழி ஆகவில்லை?


இந்தியாவில் மொழி அரசியல் பகுதி 2:

மொழியும், அரசமைப்புச் சட்டமும்- அரை-மனதான சமரசம்!
கிரான்வில் ஆஸ்டின் இந்தியாவின் அரசமைப்புச் சட்ட உருவாக்கம் எப்படி அரை மனதான சமரசத்தை மொழிக்கொள்கையில் மேற்கொண்டது என்பதை விரிவாகப் பேசுகிறார். விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் இந்தி, உருது, பஞ்சாபி முதலிய பல்வேறு மொழிகளை இணைத்துப் பேசப்பட்ட ‘பஜார் மொழி’யான இந்துஸ்தானி கூட 45% மக்களாலேயே பேசப்பட்டது.

இந்தியா என்கிற தேசக் கருத்தாக்கத்துக்கு விடுதலைக்குப் பின்னர் ஒரு தேசிய மொழி வேண்டும் என்கிற கருத்தாக்கம் பலரிடம் நிலவியது. அதே சமயம், அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே ஒரு மொழியை இந்தியாவுக்கான மொழியாக்கும் அதீத முடிவை எடுக்கவில்லை.
சாமர்த்தியமாக இந்தியை ‘இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழி’ என்று அறிவித்தார்கள். ஆங்கிலத்தை இணை அதிகாரப்பூர்வ மொழியாகப் பதினைந்து ஆண்டுகள் தொடரலாம். அதற்குப் பிறகு இந்தி அதன் இடத்தை முழுமையாக எடுத்துக் கொள்ளும் அல்லது முந்தைய நிலையை நாடாளுமன்றம் தொடரலாம் என்றும் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஆங்கிலம் நீதிமன்றம், அதிகாரப்பூர்வ பயன்பாட்டில் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை அடைவதற்கு முன்னர் நிகழ்ந்த போராட்டங்கள், விவாதங்கள், எதிர்ப்புகள் முக்கியமானவை.

இந்தி/இந்துஸ்தானி இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தாலும் ஆங்கிலம் எத்தனை ஆண்டுகளுக்கு அதிகாரப்பூர்வ மொழியாகத் தொடர்வது, மற்ற மொழிகளுக்கு என்ன இடத்தைக் கொடுப்பது என்பதில் பலத்த கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதில் மூன்று சாரார் இருந்தார்கள். இந்தித் தீவிரவாதிகள் என ஆஸ்டின் அழைக்கும் முதல் பிரிவினர், பெரும்பாலும் இந்து தேசியத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள்.

இவர்கள் பனராஸ், அலகாபாத்தில் உள்ள இந்து கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றவர்கள். கோவிந்த தாஸ், தாண்டன், பாலகிருஷ்ண சர்மா ஆகியவர்கள் பண்டைய இந்து மன்னர்களின் ஆட்சியைப் போல வருங்காலம் அமையவேண்டும் என்று கனவு கண்டார்கள். தாண்டன் இந்து சீர்திருத்த சட்டங்களைக் கடுமையாக எதிர்த்தவர். ஜி.எஸ்.குப்தா ஆரிய சமாஜத்தில் தொடர்ந்து இயங்கிய இஸ்லாமிய வெறுப்பை விதைத்தவர். ரகுவீரா பிற்காலத்தில் மதவாத ஜனசங்கத்தின் சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டவர். எனினும் அளகுராய் சாஸ்திரி, வி.டி.திரிபாதி, எஸ்.எல்.சக்சேனா ஆகியோர் மதச்சார்பின்மையில் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தாலும் இந்தி மட்டுமே இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று இவர்கள் அனைவரும் முழங்கினார்கள். மிதவாதிகள் இந்தி இந்தியாவின் முதன்மை மொழியாக இருந்தாலும், மற்ற மொழிகளும் சமமான இடத்தைப் பெறவேண்டும் என்று வாதாடினார்கள். நேரு இந்தப் பிரிவை சார்ந்திருந்தார், இதில் தான் வங்கம், மெட்ராஸ், பம்பாய் முதலிய பகுதிகளைச் சேர்ந்த ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகக் கொண்ட உறுப்பினர்களும் இருந்தார்கள்.

இந்தி மட்டுமே இந்தியாவின் தேசிய மொழி என அழுத்தி வாதிட்டு இந்தியாவைப் பிளவுபடுத்தினாலும் பரவாயில்லை என்பது போன்ற பார்வையையே இந்திவாலாக்கள் பிரதிபலித்தார்கள். இவர்கள் ஆங்கிலம் இந்திய தேச விடுதலைக்கு எதிரானது என்பதால் அதனைத் தேசிய மொழியாகக் கொள்ளவே முடியாது என்று வாதிட்டார்கள். அதனதன் தளத்தில் அந்தந்த மொழியைப் பயன்படுத்துவோம் என்றார்கள் மிதவாதிகள். இந்தியை தேசிய மொழியாக ஆக்காவிட்டாலும், உருது மொழியால் வளப்பட்டிருந்த இந்தி மொழியை அரசு பயன்படுத்துகிற பொழுது சம்ஸ்கிருத சொற்களையே பிரதானமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் பிரிவை சேர்த்தார்கள். மிதவாதிகள் இந்தியாவின் பன்மையான கலாசாரம், இந்துஸ்தானியில் காணப்படும் வடிவங்கள், பாணி, வெளிப்பாடுகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இந்தி அமையவேண்டும் என்கிற வரியை சேர்த்து திருப்திப்பட்டுக்கொண்டார்கள்.

பாகிஸ்தான், கனடா, தென் ஆப்ரிக்கா, சுவிட்சர்லாந்திலும் பல்வேறு மொழிகள் புழக்கத்தில் உள்ளன என்றாலும் அங்கே நிலவரம் இவ்வளவு சிக்கலானது இல்லை. பாகிஸ்தான் பெரும்பான்மை மொழிகளை விடுத்து உருது மொழியை தேசிய மொழியாகத் திணித்தது. கனடா, தென் ஆப்ரிக்காவில் மக்கள் தொகையும் , மொழிகள் எண்ணிக்கையும் இந்தியாவோடு ஒப்பிடும் பொழுது குறைவே! இவ்விரண்டு நாடுகளிலும் இரண்டு மொழிகளே பிரதான மொழிகள். சுவிட்சர்லாந்து நாட்டில் மூன்று மொழிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.

காந்தி இந்திய விடுதலைக் களத்துக்குள் வந்த பொழுதே, ‘இந்தியை தேசிய மொழிக்கான இடத்தையும் , மற்ற பிராந்திய மொழிகளை அவற்றுக்கான இடத்தை மக்களின் வாழ்வில் தராவிட்டால் சுயராஜ்யம் என்பது முழுமையடையாது என்பது என்னுடைய அடக்கமான, ஆனால், உறுதியான கருத்தாகும்.’ என்றார். காந்தியின் தலைமையில் மக்களின் மொழிகளைத் தன்னுடைய கூட்டங்களின் அலுவல் மொழியாகக் காங்கிரஸ் மாற்றியது. காக்கிநாடா காங்கிரசில் இந்துஸ்தானியிலேயே கட்சியின் அலுவல்கள் முடிந்தவரை நடைபெற வேண்டும் என்று கட்சிச்சட்டம் மாற்றப்பட்டாலும் ஆங்கிலத்தைப்
பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.

 

மோதிலால் நேருவின் அறிக்கை இந்தியாவின் பொது மொழியாக இந்துஸ்தானி ஆகவேண்டும் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டது. நேரு காந்தியைப் போலவே அந்தந்த பகுதி மக்களின் வளர்ச்சி தங்களின் தாய்மொழியால் கற்பதன் மூலமே சாத்தியம் என்று சொன்னார். ஆங்கிலத்தின் முந்தைய தொடர்புகள், தற்போதைய தேவையால் அதனைத் தவிர்க்க முடியாது என்று நேரு நடைமுறை உணர்ந்து கருதினார். இந்துஸ்தானி இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் என்று காந்தி நூறு முறை சொல்லியிருப்பார். நேருவும் அதுவே இந்தியாவின் தேசிய மொழியாகும் என்று கருதினார். ஏன் அப்படி? இந்துஸ்தானி சம்ஸ்கிருதமயமாக்கப்படாமல்,பாரசீகமயமாக்கப்பட்ட உருதுவாகவும் இல்லாமல் எல்லாப் பிராந்திய மொழிகளிலும் இருந்து வார்த்தைகளைப் பெற்று அம்மொழி வளரவே அவர்கள் கனவு கண்டார்கள்.

ராஜாஜி இந்துஸ்தானிய பிராந்திய மொழிகளின் வரிவடிவங்களில் எழுதுவதன் மூலம் அம்மொழியை வளர்க்க முடியும் என்று கருதினார். இந்திவாலாக்கள் இந்தி மொழியானது உருது, ஆங்கிலத்தை முழுக்க விலக்கி எழவேண்டும் என்று உறுதியாக இருந்தார்கள். ஆனால், நேரு உட்படப் பல இந்துக்கள் உருதுவை தங்களின் தாய்மொழியாகக் கொண்டிருந்தார்கள். காந்தி தொடர்ந்து இந்துஸ்தானி மொழியே இந்துக்கள், இஸ்லாமியர்களை இணைக்கும் என்று கருதினார். நாற்பத்தி ஐந்தில் தாண்டன் இந்தி சாஹித்திய சம்மேளனத்தில் நாகரி வடிவத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று வலியுறுத்துவதைத் தொடர்ந்தால் தான் அவ்வமைப்பில் இருந்து விலகுவதாக எச்சரித்தார். தாண்டன் ஆங்கிலத்தைத் துரத்திவிட்டு பிராந்திய மொழிகளைப் பேசுபவர்கள் இந்திக்கு மாற்றப்பட வேண்டும் என்றார். காந்தி பதவி விலகினார். முப்பத்தி ஏழில் ராஜாஜி, சுப்பராயன் இந்துஸ்தானியை உயர்கல்வியின் மூன்று ஃபார்ம்களில் திணிக்க, கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக. சுப்பராயன் ஒழிக! ராஜாஜி ஒழிக!’ என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அரசியலமைப்பு வரைவுக் குழுவில் மொழிப்போர்:
விதிமுறைகள் கமிட்டியில் தான் முதல் சிக்கல் ஆரம்பமானது. அரசியலமைப்பு சட்ட விவாதங்கள் இந்துஸ்தானி அல்லது ஆங்கிலத்தில் நடக்கலாம் என்று ராஜேந்திர பிரசாத் அறிவிக்க, சேத் கோவிந் தாஸ் ‘இருபத்தி ஐந்து வருடங்கள் காந்தியடிகள் போராடியும் இந்துஸ்தானியை தெற்கைச் சேர்ந்தவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஆங்கிலம் இந்தச் சபையில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை எங்களின் பொறுமையை முழுவதும் சோதிக்கிறது.’ என முழங்க, ‘ஒட்டுமொத்த சபையின் அலுவலும் ஆங்கிலத்தில் நடைபெற வேண்டும்’ என்று கே.சந்தானம் தீர்மானம் கொண்டுவந்தார். எனினும், இரண்டு மொழிகளுமே தொடரும் என்றே முடிவு செய்யப்பட்டது.
.
மத்திய அரசமைப்புச் சட்ட கமிட்டியில் இருந்த பனகல் நரசிங்க ராவ் பிராந்திய மொழிகளுக்கு எந்த இடத்தையும் அரசமைப்புச் சட்டத்தில் தர முடியாது என்றும், சட்டசபைகளில் கூட இந்துஸ்தானியோ, ஆங்கிலமோ தான் பயன்பாட்டு மொழியாக இருக்கும் என்று அவர் மாதிரியை வகுத்தார். இந்துஸ்தானியின் இடத்தை இந்திக்கு வழங்கியும், சட்டசபையில் இந்தியும், பிராந்திய மொழியும் தொடரும் என்றும் திருத்தங்கள் படேல் அறிமுகப்படுத்திய சட்ட வரைவில் கொண்டுவரப்பட்டன. இந்தச் சூழலில் பிரிவினை ஏற்பட்டு இந்துஸ்தானி மொழியை ஆதரிப்பவர்கள் இஸ்லாமியர்களுக்கும்,, பிரிவினைக்கும் ஆதரவானவர்கள் என்கிற கருத்தாக்கம் வலுப்பெற்றது. இந்தச் சிக்கலால் இந்துஸ்தானி என்கிற சொல்லுக்குப் பதிலாக நேரு, காந்தி முதலியவர்களே ‘பரவலான இந்தி’ என்று பயன்படுத்தினார்கள். விடுதலைக்குப் பிறகு மீண்டும் மொழிச்சிக்கல் களத்துக்கு வந்தது. இந்தியை ஏற்க இஸ்லாமியர்கள் தங்களின் தேசபக்தி பரிசோதனையில் வெற்றிபெற சம்மதித்தார்கள், தெற்கைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலமும் இணைந்து பயன்பாட்டில் பதினைந்து வருடம் இருக்க வேண்டும் என்று கோரினார்கள். வெறும் இந்தி மட்டுமே வேண்டும் என்று முரண்டுபிடித்தார்கள் இந்திவாலாக்கள்.

பீரார், மத்திய மாகாணங்களைச் சேர்ந்த அரசியலமைப்பு குழு உறுப்பினர்கள் கொண்டுவந்த திருத்தம் நிலைமையைச் சூடாக்கியது. மத்திய அரசுப்பணி தேர்வுகளில் ஒருவர் வெற்றி பெற இந்தி அறிவு கட்டாயம் தேவை என்றும், அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரப்பூர்வ வடிவம் இந்தியிலேயே இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. இது இந்தி பேசாத பகுதி உறுப்பினர்களைக் கவலைகொள்ள வைத்தது. டிடிகே ‘ஏற்கனவே பிரிவினையைத் தென்னகத்தில் சில சக்திகள் பேசிக்கொண்டிருக்கையில், இந்த ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்தவர்களின் ‘இந்தி சர்வாதிகாரம்’ அவர்களை வலுப்படுத்தும்.’ என்று கவலைப்பட்டார்.

ராஜேந்திர பிரசாத் ஏற்கனவே ஹிந்துஸ்தானி, உருது, இந்தி ஆகிய மொழியைப் பயன்படுத்த அலுவலில் அனுமதித்தாலும், ஆங்கிலச் சொற்களை இணைத்துக் கொள்ளவும், ஆங்கில மொழியை அலுவலில் பயன்படுத்தவும், தெற்கைச் சேர்ந்த பட்டாபி சீதாராமையாவை காங்கிரஸ் தலைவர் ஆக உதவியிருந்த அவரே அதிகாரப்பூர்வ அரசமைப்புச் சட்டமாக இந்தி வடிவமே கொள்ளப்பட வேண்டும் என்று அடம்பிடித்தார். நேரு ஆங்கில வடிவமே தொடரவேண்டும் என்றும், பலகாலம் கழித்து வேண்டுமானால் இந்திக்கு அந்த இடம் தரப்படலாம் என்றும் சொன்னார்.

சிறுபான்மையினர் தங்களின் மொழியை, கலாசாரத்தைக் காத்துக்கொள்ள உரிமை தந்த அதே சமயம், அரசு சிறுபான்மையினருக்கான கல்விக்கூடங்களை அமைப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் அம்பேத்கர், முன்ஷி கருதினார்கள். அதாவது அரசு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லும் அதே சமயம், இதையெல்லாம் செய்க என்று சிறுபான்மையினர் சார்ந்து சொல்லக்கூடாது என்று அவர்கள் கருதினார்கள். அரசுக்கு அறக்கடமையாக அது அமையலாமே அன்றிக் கட்டாயம் என்று அழுத்தம் தர அவர்கள் விரும்பவில்லை. மொழிச் சிறுபான்மையினர் மீது பெரும்பான்மை மொழியைத் திணிக்கக் கூடாது என்றும் அத்தீர்மானம் சொன்னது.

நாற்பத்தி எட்டாம் வருடத்தின் இலையுதிர் காலத்தில் ஓரிசா மாகாணத்தில் ஒரியா, தெலுங்கு இரண்டும் அதிகாரப்பூர்வ மொழி என்ற பொழுதும் கஞ்சம், கோராபுட் முதலிய தெலுங்கு பெரும்பான்மை மாவட்டங்களில் ஒரியா திணிக்கப்பட்டது. பீகாரின் மன்பாம் மாவட்டத்தில் வங்க மொழியினர் பெரும்பான்மையினராக இருந்த சூழலில் அங்கே இந்தி மொழி பள்ளிகளில் திணிக்கப்பட்டது. மத்திய மாகாணத்தின் நாக்பூரில் மராத்தி பேசுபவர்கள் இந்தி பேசுபவர்களைப் போல் இருமடங்கு இருந்தும் நாக்பூர் பல்கலை இந்தியை பயிற்றுமொழியாக அறிவித்தது.

இந்தச் சூழலில் காங்கிரஸ் செயற்குழு ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. ஒவ்வொரு மாநிலமும் தன்னுடைய பகுதியில் பயன்படுத்த வேண்டிய மொழியை அதுவே தேர்வு செய்யலாம். நீதிமன்ற, அலுவல் மொழியாக அதனையே பயன்படுத்தலாம் என்றும், இருபது சதவிகிதம் வரை ஒரே மொழிச் சிறுபான்மையினர் இருந்தால் அரசின் கோப்புகள் அந்த மொழியிலும் அமைய வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் தொடர்பு கொள்ளும் மொழி மத்திய அரசு பயன்படுத்தும் ஒரு மொழியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 7 1949-ல் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய தாண்டன் யாரெல்லாம் இந்தியை நாகரி வரிவடிவத்தில் தேசிய மொழி ஆவதை எதிர்க்கிறார்களோ அவர்கள் தேசியத்துக்கு எதிரானவர்கள், மதவாத சக்திகளுக்குத் துணை போவதையும் செய்கிறார்கள் என்றார். அரசமைப்பு வரைவுக் குழு கூடிய பொழுது நாடாளுமன்றம் ஆங்கிலம் அல்லது/மற்றும் இந்தி ஆகிய இரண்டையும் அலுவல் மொழியாகப் பயன்படுத்தலாம் பத்து வருடங்கள் பயன்படுத்தலாம் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் உள்ள ஓட்டையைப் பலர் எதிர்த்தார்கள். சந்தானம் தலைமையிலான குழு பதினைந்து ஆண்டுகள் என்று இதனை விரிவுபடுத்த கோரியது. அதோடு நில்லாமல் பொதுப் பயன்பாட்டுக்கு அரேபிய எண் முறையைப் பயன்படுத்தலாம் என்றும் அது பரிந்துரைத்தது.

இந்தியை தேசிய மொழியாக்கவும், இந்தியாவுக்குப் பாரத் எனப் பெயர் சூட்டவும் ஒரு பெண் துறவி உண்ணாவிரதம் இருந்தார். அவரை நேரு முதலியோர் சந்தித்துச் சமாதானப்படுத்தினார்கள். அரேபிய எண்கள் என்றால் எதிர்ப்பு வரும் என்று உணர்ந்து அதை ‘சர்வதேச எண்கள்’ என மாற்றினார்கள். இவை அனைத்தும் ஓட்டெடுப்புக்கு வந்தது. எழுபத்தி நான்கு-எழுபத்தி நான்கு என்று அரேபிய எண்கள், நாகரி எண்கள் இரண்டுக்கும் ஓட்டுக்கள் கிடைத்தன. மேலும், இந்தி பேசும் மாகாணங்கள் அரசோடு தொடர்பு கொள்ள இந்தியைப் பயன்படுத்தலாம் என்றும், எட்டாவது அட்டவணையில் ஆங்கிலம் சேர்க்கப்படாது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தப் பதினைந்து வருடத்தைக் குறைக்கவும், நாகரி எண்களைப் பயன்படுத்தவும், அரசுப்பணிகளில் இந்தியை கட்டாயமாக்கவும் இந்திவாலாக்கள் போராடினார்கள். இறுதியில் நாகரி எண்கள், இந்தி எண்கள், சர்வதேச எண்கள் இணைந்து பயன்படும் என்றும், உச்ச, உயர் நீதிமன்றங்களில், சட்டங்கள், அவசரச்சட்டங்கள் ஆகியற்றில் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலமே பதினைந்து வருட காலத்துக்கு இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. அடுத்தடுத்து ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்தியை இந்தியா முழுக்க வளர்ப்பதன் வேகத்தைக் கண்டறிய இந்தி கமிஷன்கள் அமைக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

பிற மொழிகள் எட்டாவது பட்டியலில் இடம் அளிக்கப்பட்டதோடு, அரசுப் பணித் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுதவும் அனுமதிக்கப்பட்டது. அந்தப் பிற மொழிகளைப் பிராந்திய மொழிகள் என்று சொல்லாமல், ‘அதிகாரப்பூர்வ அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்’ என்று அறிவிக்க நேரு சொன்னார். ஆர்.எஸ்.சுக்லா இப்படிப் பட்டியலில் பிற மொழிகளைச் சேர்ப்பது தேவையில்லாதது என்றார். இந்து மகாசபையின் முன்னாள் தலைவரும், வங்காளியுமான ஷ்யாம் பிரசாத் முகர்ஜி இந்தப் பட்டியலிடுதலை வரவேற்று இது இந்திக்கு இணையாகப் பிற மொழிக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை என்கிற சூழலை சரி செய்யும்.’ என்றார்.

ஓட்டெடுப்பில் இவை பெரும்பாலும் ஏற்கப்பட்டு இந்தி அதிகாரப்பூர்வ மொழியாக இந்துஸ்தானியை ஒரு ஓட்டில் முந்தி வென்றது. அம்பேத்கர் உட்பட இருபத்தி எட்டு பேர் சம்ஸ்கிருதத்தை இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக்க தீர்மானம் கொண்டுவந்தார்கள். எல்.கே.மைத்ரா என்பவர் யாருக்கும் வடமொழி தெரியாது என்பதால் அனைவர்க்கும் சமமான வாய்ப்பை அது வழங்கும் என்றார். எனினும் அது ஏற்கப்படவில்லை. நேரு இந்திவாலாக்களின் தொனியில் இருந்த அதிகார மமதையைக் கண்டித்தார். மக்களின் மொழிதான் தேசிய மொழியாக வேண்டுமே அன்றி, கற்ற சிலரின் மொழியல்ல என்றார்.

தாண்டன் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது நம்மைப் பின்னோக்கி தள்ளிவிடும் என்றும், நாகரி வடிவத்தில் மட்டும் எண்களைப் பயன்படுத்துவது நம் பண்டைய பாரம்பரியத்தின் அடையாளம் என்றும், உடனடியாக ஆங்கிலத்தின் இடத்தை முழுமையாக இந்திக்குத் தரலாம், அதிகபட்சம் ஐந்து வருடங்கள் வேண்டுமானால் ஆங்கிலம் அமலில் இருக்கலாம் என்று கொதித்துப் பேச, மவுலானா அபுல் கலாம் ஆசாத், இந்தி படிப்படியாகவே தென்னகத்தை அடைய வேண்டும் என்றும், வடக்கு-தெற்கு இரண்டையும் இணைக்கும் புள்ளியாக இருக்கும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டால் அந்த இணைப்பு அறுந்துவிடும் என்று எச்சரித்தார்.

இறுதியாக முன்ஷி-அய்யங்கார் திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நாகரி, ஆங்கில எண் பயன்பாடு குறித்து நாடாளுமன்றம் சட்டம் இயற்றும். உயர்நீதிமன்றங்களில் ஜனாதிபதி அனுமதித்தால் இந்தி அலுவல் மொழியாகப் பயன்படலாம், சட்டங்கள், அவசரச்சட்டங்கள், மசோதாக்கள் அந்தந்த மாநில மொழியில் அதிகாரப்பூர்வ ஆங்கில மொழியாக்கத்தோடு பதிப்பிக்கப்படலாம் என ஒத்துக்கொள்ளப்பட்டது. சம்ஸ்கிருதம் எட்டாவது அட்டவணையில் இணைக்கப்பட்டது.

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு இந்தியின் பயன்பாடு அரசு அலுவல்களில் குறையவே செய்தது. காங்கிரஸ் கட்சியே ஆங்கிலத்தில் தன்னுடைய அலுவல்களை நடத்தியது. மொழி ஆதிக்கத்தைச் செலுத்த முயன்ற இந்தி வாலாக்களின் போக்கு அதற்குப் பலத்த எதிர்ப்பை சம்பாதித்துக் கொடுத்தது. அரைமனதான ஒரு சமரசமே எட்டப்பட்டது என்றாலும், அடுத்தடுத்து வந்த 1963-ன் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டம் ஆங்கிலத்தை இந்தியோடு அரசின் அதிகாரப்பூர்வ மொழியாகத் தொடர்வதை உறுதி செய்தது. ஆங்கிலம் பேசுவது இந்தியத் தன்மைக்கு எதிரானது இல்லை என்கிற புரிதல் உண்டானது.

நேரு Vs நேதாஜி அரசியல் எதிரிகளா?- 2


நேருவின் தந்தை மோதிலால் நேரு இறந்தபொழுது போஸ் அயல் நாட்டில் இருந்தார். இருவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்த மோதிலால் நேருவின் மரணம் குறித்து, போஸ் அந்தக் கடிதங்களில் எங்கேயும் ஒரு வார்த்தை குறிப்பிடவில்லை. அது மட்டுமல்லாமல் பிப்ரவரி மாதம் இறந்துபோன மோதிலால் நேருவை, மார்ச் மாதத்தில் இறந்துபோனார் என்று தன்னுடைய சுயசரிதையில் தவறாகப் பதிவு செய்கிறார் போஸ்.

பாசிசத்தின் கட்டுப்பாடு, போஸை இந்தக் காலத்திலேயே ஈர்க்க ஆரம்பித்திருந்தது. காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தை வர்ணிக்கிற பொழுது, ‘பாரீஸ் நகரம் நோக்கி எல்பாவில் இருந்து நெப்போலியன் புறப்பட்டது போல, ரோமை நோக்கி முசோலினி புறப்பட்டது போல’ தண்டி யாத்திரை இருந்ததாக வர்ணிக்கிறார். இந்தப் பாசிச பாசம் இறுதிவரை போஸிடம் தொடரவே செய்தது.

உப்பு சத்தியாகிரகத்தை காந்தி திரும்பப்பெற்றது, போஸ் மற்றும் வித்தல்பாய் படேல் ஆகியோரை கடுமையாகக் கடுப்பேற்றியது. ஆஸ்திரியாவில் இருந்து கூட்டறிக்கை வெளியிட்டவர்கள், ‘மகாத்மா காந்தி ஒரு அரசியல் தலைவராகத் தோல்வியடைந்துவிட்டார் என்று நாங்கள் தெளிவாக நம்புகிறோம். காங்கிரஸ் இயக்கத்தை புரட்சிகரமான பாணியில் மாற்றும் புதிய தத்துவம், முறை தேவைப்படுகிறது. இதைச் சாதிக்க தலைமை மாற்றம் தேவை. மேலும் தீவிரவாதத்தன்மை கொண்டதாக ஒத்துழையாமை மாறவேண்டும்…’ என்று நீண்டது அந்த அறிக்கை.

நேருவோ இந்தியாவில் காந்திக்கு அருகில் இருந்தார். வெகு வெறுமையாக உணர்ந்த நேரு, காதியை விற்றல், கைத்தறி நெய்தல், தையல் ஆகிய சமூகப் பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட வேண்டும் என்று காந்தி அழைத்ததில் அதிர்ந்துபோனார். அந்தக்காலகட்டத்தில் ‘இதுவா நாம் பின்பற்ற வேண்டிய அரசியல் செயல்திட்டம்? நானும், காந்தியும் வெகுதூரம் விலகிவிட்டோம். என்னையும், அவரையும் பிணைத்திருந்த எல்லா இழைகளும் அறுந்துவிட்டது. குத்தப்பட்ட வலியால் துடிக்கிறேன்’ என்று சொன்ன நேரு, காந்தியோடு வெளியுலகில் பிணைந்திருந்தாலும் மனதளவில் விலகிக்கொண்டு இருந்தார்.

இந்தத் தருணத்தில்தான் தனி வாக்காளர் தொகுதி விஷயத்தில் காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். நேரு கலங்கிப் போனார். தன்னுடைய பதினைந்து வயது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில், ‘நான் மொத்தமாக ஆடிப்போயிருக்கிறேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை. மோசமான செய்தி வந்திருக்கிறது. பாபு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறார். நான் இனிமேல் அவரைப் பார்க்கவே மாட்டேனோ? இனிமேல் யாரிடம் போய் நான் சந்தேகம், அறிவுரை கேட்பேன். காயப்பட்டு இருக்கிறபொழுது, சோகமுற்று நிற்கிறபொழுது யாரிடம் அன்பான தேறுதலைப் பெறுவேன்?’ என்று புலம்பித் தள்ளினார்.

இதை கிட்டி குர்திக்கு எழுதிய கடிதத்தில் போஸ் கச்சிதமாகப் படம் பிடிக்கிறார் இப்படி- ’அவரின் மூளை ஒரு பக்கம் இழுக்கிறது, இதயம் வேறொரு திசையில் இழுக்கிறது. அவரின் இதயம் எப்பொழுதும் காந்தியுடன்தான் இருக்கிறது’

போஸ் ஐரோப்பாவில் இருந்த காலத்தில், இருமுறை முசோலினியை சந்தித்தார். ‘பிக் பாஸ்’ என்று அன்போடு முசோலினியைக் கொண்டாடிய நேதாஜி, அவரிடம் ‘நான் சீர்திருத்த முறையைவிட புரட்சிப் பாதையையே விரும்புகிறேன்’ என்று வாக்குமூலம் கொடுத்தார். அதை நோக்கி பயணப்படும் திட்டத்தை வகுக்குமாறு முசோலினி வழிகாட்டினார்.

1933-ல் லண்டனில் நடந்த மூன்றாவது இந்திய அரசியல் மாநாட்டில் பேசிய போஸ், ‘காந்திய முறையால் தீர்வு கிடைக்காது. அது சமரசம் செய்துகொள்கிறது. சமரசம் இல்லாத தீவிரவாதமே தீர்வு. அகிம்சையை நம்பாத, ஆட்சியைப் பிடிக்கும் கட்சி ஒன்றை உருவாக்கப்போகிறேன்… சோவியத் ரஷ்யா போன்ற மாதிரியைக் கொண்டு இந்தியா இயங்கும். அங்கே முதலாளிகளுக்கு இடமில்லை’ என்று முழங்கினார்.

ஜெர்மனிக்கு போஸ் பயணம் போனபொழுது, எப்படியாவது ஹிட்லரை சந்தித்துவிட துடித்தார். குறைந்தபட்சம் கெப்பல்ஸ் உடனான சந்திப்பு நிகழ்ந்துவிட்டால்கூட போதும் என்று அவர் எண்ணினார். இந்தியர்கள் பற்றிய கீழான பார்வையை தான் பேசினால் அவர்கள் மாற்றிக்கொள்வார்கள் என்று போஸ் நம்பினார். அவர் முனிச் நகரில் நடந்தபொழுது அவர் மீது கற்களை வீசி, ‘கருப்பன்!’ என்று குழந்தைகள் வசைபாடின. ஒரு கட்டத்துக்கு மேல், ஜெர்மானியர்கள் தங்களுடைய இனத்தூய்மைக் கொள்கையை விடமாட்டார்கள் என்று உணர்ந்த போஸ், ‘நீங்கள் உங்கள் இனவெறிக்கொள்கையை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். இந்தியர்கள் பற்றிய கீழான பார்வையை மட்டும் மாற்றிக்கொள்ளுங்கள்.’ என்று ஜெர்மானிய அகாதமியின் இயக்குனருக்குக் கடிதம் எழுதினார்.

‘இந்திய தேசாந்திரி’ எனும் தன்னுடைய சுயசரிதையை எழுதுவதற்கு உதவ, யாரையேனும் தேடிக்கொண்டு இருந்த போஸ் தன்னைவிட பதிமூன்று வயது இளைய எமிலியை சந்தித்தார். திறமை, அழகு, ஆங்கிலப்புலமை மிகுந்த எமிலியிடம் மனதை பறிகொடுத்தார். தானே காதல் அத்தியாயத்தை துவக்கினார்.

போஸின் அப்பா இறந்துபோக, கண்ணீரோடு வந்து தந்தையின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொண்டார். பின்னர் ஐரோப்பா திரும்பினார். இந்த ஐரோப்பா திரும்பும் காலத்தில் மீண்டும் முசோலினியை சந்தித்து தன்னுடைய சுயசரிதையான, ‘இந்திய தேசாந்திரி’ நூலை முசோலினிக்குப் போஸ் பரிசாகக் கொடுத்தார்.

இன்னொருபுறம் நேருவின் மனைவி தன்னுடைய வாழ்க்கையின் இறுதிகட்டத்தில் நின்றுகொண்டு இருந்தார். மேற்கத்திய பாணியிலான வாழ்க்கைமுறை கொண்ட நேருவின் குடும்பத்தில், கமலா வெகுகாலம் ஒட்ட முடியாமல், ஆங்கிலம் பேசத்தெரியாமல் சிரமப்பட்டார். இது ஒருபுறம் என்றால், உணர்வுப்பூர்வமாக எதையும் மனைவியிடம் வெளிப்படுத்த தெரியாத நேரு, இன்னொருபக்கம் படுத்தி எடுத்தார்.

‘எதுவாக இருந்தாலும் என்னோடு உறவில் இருக்கும் இன்னொரு நபரே விஷயத்தை துவங்க வேண்டும்’ என்று சொந்த வாழ்க்கையில் ஆசைப்படுவதை நேரு சொல்லியிருக்கிறார். கமலா, காசநோயாலும், கருக்கலைப்புகளாலும் உடல்நலம் குன்றிப் போராடிக்கொண்டிருந்தார். அவரை ஐரோப்பாவில் வைத்து மருத்துவம் பார்க்க நேரு கிளம்பிச் சென்றபொழுது, அங்கே போஸ் உடனிருந்து உதவிகள் செய்தார்.

மனைவி மரணப்படுக்கையில் இருந்தபொழுதும், எப்படி கடவுளின் மீது இவள் இன்னமும் பற்றோடு இருக்கிறாள் என்று ஆச்சரியப்பட்டார் நேரு. கமலா இறந்த பிறகு வெளிவந்த தன்னுடைய சுயசரிதையை அவருக்கு அர்ப்பணம் செய்தார். கமலாவின் இறுதிச்சடங்கில் லாசானே நகரில் போஸும் கலந்து கொண் டார் என்பது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.

போஸ் இப்பொழுது நேருவுடன் இணைந்து பெரிய விஷயங்கள் செய்ய முடியும் என்று எண்ணினார். ‘காந் தியுடன் உங்கள் அளவுக்கு நெருக்கமானவர் யாருமில்லை. உங்களைப் பகைத்துக்கொள்ளும் எதையும் அவர் செய்ய மாட்டார்’ என்று நேருவுக்கு எழுதினார். இந்தியா திரும்பினால் ஆங்கிலேய அரசு கைது செய் யும் என்கிற சூழலில் என்ன செய்யலாம் என்று நேருவிடமே ஆலோசனை கேட்டார். முதலில் நேரு இந் தியாவுக்கு வரவேண்டாம் என்று அறிவுரை தந்தாலும், பின்னர் காந்தி முதலியோரின் வழிகாட்டுதலில் போஸை இந்தியாவுக்கு திரும்புமாறு அழைத்தார்.

எமிலியை பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டதால் போஸ் காதல் தீயால் வெம்பினார். ‘பனிப்பாறையும் உருகும். இந்தியாவில், என் வாழ்க்கை சிறையில் கழியலாம். நான் சுட்டோ, தூக்கிலிடப்பட் டோ கொல்லப்படலாம். எப்படி இருந்தாலும் உன்னையே எண்ணிக்கொண்டு இருப்பேன். உன் காதலை அமைதியாக நினைத்து ஏங்குவேன். உன்னை மீண்டும் பார்ப்பேனா என்று தெரியாது. நீ எப்பொழுதும் என் மனம், எண்ணங்கள், கனவுகளில் வாழ்கிறாய். விதி நம்மை இந்தப் பிறவியில் பிரித்தால் நாம் அடுத்தப் பிறவியில் இணைவோம்.

நமக்குள் ஏதேனும் ஒற்றுமைகள் உள்ளனவா? என் தேசம், மக்கள், கலாசாரம், பழக்கங்கள், தட்பவெட்பம் எல்லாம் மாறுபட்டது என்றாலும், ஒரு கணத்தில் நாடுகளைப் பிரிக்கும் இவற்றை மறந்துவிட்டேன். நான் உனக்குள் இருக்கும் பெண்ணை நேசிக்கிறேன். உனக்குள் இருக்கும் ஆன்மாவை நேசிக்கிறேன்’ என்று எழுதிய காதல் கடிதத்தை அழித்துவிடுமாறு எமிலியிடம் சொன்னார். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. (சுகாதா போஸ் எழுதிய போஸின் வாழ்க்கை வரலாறு).

இருவரும் தாங்கள் காதலில் இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொள்ளாமல் பன்மையில் தங்களை அழைத்துக்கொண்டார்கள். பாக்ஸிங் நாள் அன்று போஸ் எமிலியை ரகசியமாக மணந்து கொண்டார். எந்தக் கடிதத்திலும் எமிலியைக் கடிந்து கொள்ளாத போஸ், வேறு புத்தகங்களை இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்குமாறு எமிலி கேட்டபொழுது மட்டும், ‘இருக்கின்ற புத்தகங்களை முதலில் படித்து முடி!’ என்று கோபிக்கிறார்.

போஸ் 1936-ல் இந்தியா திரும்பியபொழுது நேரு மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆக்கப்பட் டிருந்தார். போஸ் கைது செய்யப்பட்டதும் இந்தியா முழுக்க ‘சுபாஸ் போஸ்’ தினம் அனுசரிக்க நேரு அழைப்பு விடுத்தார். நேருவிடம்கூட தன்னுடைய காதல் வாழ்க்கையைப் பற்றி போஸ் மூச்சு விடவில்லை. முசோலினி பற்றி பெருமிதமாக எழுதிக்கொண்டிருந்த போஸ், நேருவிடம் கம்யூனிச புத்தகங்களைக் கடன் கேட்டார். ‘போஸுக்கு தான் ஒரு முசோலினி என்று உள்ளுக்குள் நினைப்பு’ என்று தன்னுடைய நாட்குறிப்பில் குறித்திருக்கிறார் நேரு.

கம்யூனிசம், பாசிசம் இரண்டையும் கவனத்தில் கொண்ட போஸ் பாசிசம் மீது பற்றுகொண்டவராக இருந் தார். ஏன் இந்தியாவில் கம்யூனிசம் எடுபடாமல் போகலாம் என்பதற்கு காரணங்களை அடுக்கியவர், பாசிசம் மீது அப்படி எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை. ஆஸ்திரியாவில் அவர் தங்கியிருந்தபொழுது மிகக் கடுமையான நுரம்பெர்க் சட்டங்கள் யூதர்கள் மீது பாய்ச்சப்பட்டன.

‘யூத செல்வாக்கை ஒழிக்கவே நாஜிக்கள் முயல்கிறார்கள் என்று எண்ணுகிறேன்’ என்று எளிமையாக அத்தனை கொடூரங்களையும் அவர் கடக்கிறார். நேரு காங்கிரஸ் செயற்குழுவில் யூத அகதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க நாம் முயல வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தபொழுது, ‘வெளியுறவுக் கொள்கை பற்றிய தெளிவான, யதார்த்த புரிதல் இல்லாமல் நேரு இப்படியெல்லாம் தீர்மானம் கொண்டுவருகிறார்.’ என்று வருத்தப்பட்டார்.

போஸ் தன்னுடைய சுயசரிதையில், ‘தொடர் எதிர்ப்பு ஆயுதக் கிளர்ச்சியாக மாறும். காந்தி ஒரு சீர்திருத்தவாதி, விடுதலை வாங்கித்தரும் தலைவர் இல்லை.’ எனவும், ‘இந்திய நாகரீகம், ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றின் சமூக-அரசியல் இயக்கங்களின் தாக்கங்களை உள்வாங்கித் தன்னுடைய வளர்ச்சியை அமைத்துக்கொள்ளும் திட்டத்தைப் போருக்கு பிந்தைய தன்னுடைய செயல்திட்டமாகவும் முன்வைக்கிறார். போஸின் சுயசரிதை இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

நேருவின் சுயசரிதை சிறையிலேயே எழுதப்பட்டது. அதில் மேற்கு, கிழக்கின் சங்கமமாக தான் இருப்பதையும், மேற்கின் ரசனையை விடமுடியாமல் இந்திய மனதை புரிந்துகொள்ள முடியாமல் துன்புறுவதைக் குறித்துப் பதிவு செய்கிறார். தன்னிடம் எல்லையற்ற அன்புகொண்ட மக்கள் எப்படி மதத்தின் மீது இத்தனை பற்றுகொண்டு இருக்கிறார்கள் என்று புரியவில்லை எனவும், ஆனாலும், அது எண்ணற்ற இன்னலுற்ற மனங்களுக்கு நிம்மதியைத் தருகிறது.’ என்றும் பதிகிறார். மார்க்சியம் மீதும், சோசியலிசம் மீதும் அவருக்கு இருக்கும் மரியாதையும் நூலில் வெளிப்படுகிறது.

நேருவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க காந்தி விரும்பினார். 1936-ல் முள்கிரீடத்தை மீண்டும் ஏற்க சம்மதமா என்று நேருவைக் கேட்டார். மேலும், ‘நேரு எந்தக் கொள்கை, தத்துவங்களுக்காக நிற்கிறாரோ அவற்றுக்கு நேர்மையாக அவர் இருக்கலாம்’ என்று உறுதியும் தந்தார். மனைவியின் மரணத்தில் வருந்திக் கொண்டிருந்த நேரு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சம்மதம் தெரிவித்தார்.

ஐரோப்பாவில் இருந்தபொழுது கம்யூனிச தலைவர் ரஜினி பாமி தத்தை சந்தித்திருந்த நேரு அவரிடம் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தெடுக்க உதவுவதாக உறுதி தந்தார். அவர் மனமெல்லாம் பொதுவுடைமை தாக்கம் நிறைந்திருந்தது.

நேரு தலைவர் ஆவதைத் தடுக்க காந்தியுடன் போராடிப் பார்த்தார் ராஜாஜி. அவர் அசையவில்லை. நேரு தலைவர் ஆனதும். தன்னுடைய உரையை ‘காம்ரேட்ஸ்!’ என்று சொல்லி ஆரம்பித்தார், ‘இந்திய அரசு சட்டம், 1935-ன்படி நாம் பதவியேற்பதில் தவறில்லை. அதே சமயம் அரசியலமைப்பு குழுவை உருவாக்க நாம் உறுதிபெற வேண்டும்.. காங்கிரஸ் மக்கள் பெருந்திரளுக்கான கட்சி, அது தன்னுடைய நடுத்தர வர்க்க மனோபாவத்தைக் கைவிட வேண்டும்.

சோசியலிசம்தான் நம்முடைய எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு தரும். மேற்கு சோசியலிசத்தால், கிழக்கு தேசியத்தால் நிரம்பியிருக்கிறது. ஏகாதிபத்தியம், பாசிசம் இரண்டும் முதலாளித்துவத்தின் வெவ்வேறு முகங்கள். இரண்டையும் நாம் எதிர்ப்போம்.’ என்றெல்லாம் பேசினார்.

அவருடைய தீர்மானங்கள் கட்சியின் செயற்குழுவில் தோற்கடிக் கப்பட்டன. அவரின் சோசியலிசம் சார்ந்த கருத்துக்களை ஏற்க மறுத்து படேல், ராஜேந்திர பிரசாத், ராஜாஜி முதலியோர் தங்கள் பதவிகளை காந்தி யின் வழிகாட்டுதலில் ராஜினாமா செய்தார் கள். பின்னர் காந்தியின் வழிகாட்டுதலில் ராஜினாமாவை மாற் றிக்கொண்டு தாங்கள் ஏன் நேருவின் தீர்மானத்தை ஏற்க மறுக் கிறோம் என்று கடிதம் கொடுத்தார்கள். பிர்லா முதலிய இருபத்தி யொரு முதலாளிகள் நேருவைக் கண்டித்துத் தீர்மானம் இயற்றி னார்கள்.

எதுவும் மோசமாக நடக்காமல் காந்தி பார்த்துக்கொள்ள வேண் டும் என்று கேட்டுக்கொண்டார் பிர்லா. காந்தியும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி அனுப்பினார். நேரு சொன்னவற் றையோ, சோசியலிசத்தையோ, புரட்சிகரமான செயல்திட்டங் களையோ கட்சி செயல்படுத்தாது என்பதை செயற்குழு தெளிவு படுத்தியது. நேரு ‘நான் மானமற்றவனாக உணர்கிறேன்…’ என்று நொந்துபோய் எழுதினார். ஆனால், அப்பா, மனைவி இருவரையும் இழந்துவிட்டு நின்றுகொண்டிருந்த நேரு, காந்தியை விட்டு விலக முடியாமல் இருந்தார். ‘நாங்கள் கருத்தியல் ரீதியாகக் கடல் அளவுக்கு முரண்பட் டாலும் இப்பொழுது மனதளவில் முன் எப்பொழுதையும்விட நெருக்கமாக உணர்கிறோம்…’ என்று அகதா ஹாரிசனுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி குறிப்பிட்டார்.

நேரு இப்படி மனதளவில் பெரிய போராட்டத்தில் இருந்தபொழுது போஸ் ஆங்கிலேய அரசால் சிறையி லேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்பட்டார். காங்கிரஸ் கட்சி தேர்தலில் நிற்பது என்று முடிவாகி இருந்தது. கட்சி வெற்றி பெற்ற தும் இந்திய அரசு சட்டத்துக்கு என்னென்ன இடைஞ்சல்கள் உண்டு செய்ய முடியுமோ அத்தனையையும் செய்ய வேண் டும் என்பது நேருவின் உறுதியான எண்ணமாக இருந்தது. தேர்தல் அறிக்கையை நேரு தயாரித்தபொழுது அதில் சோசியலிசம் என்கிற வார்த்தையை எங்கும் பயன் படுத்தவில்லை. ‘மன்னர்கூட தவறு செய்யலாம், செயற்குழு தவறு செய்யாது’ என்று வஞ்சப்புகழ்ச்சியாக நேரு குறிப்பிட்டார்.

‘ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்’ என்று குறிப்பிட்டார். தனிநபர் உரிமைகள், அரசியல் கைதிகளின் விடு விப்பு, விவசாயிகள், அரசு அமைப்புகள் ஆகியவற்றைச் சீர்செய்தல் ஆகியன முக்கியக் குறிக்கோள் களாகக் குறிப்பிடப்பட்டன. சோசியலிஸ்ட்கள், வலதுசாரிகள் என்று சகலரும் இந்தத் தீர்மானத்தால் பெரிதும் திருப்தி அடைந்தார்கள். எல்லாரும் இணைந்து தேர்தல் களம் கண்டார்கள்.

நேரு சுழன்று சூறாவளி போலப் பிரசாரம் செய்தார். மூன்று கோடி வாக்காளர் களில் பெரும்பாலானோரை சென்றடைந்தார். மக்கள் பெருந் திரளாக அவருக்கு ஆதரவு நல்கினார்கள். ஆறு மாகாணங்களில் தனிப் பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ், மூன்று மாகாணங்களில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

அமைச்சரவையில் கட்சி பங்கேற்கக் கூடாது என்று நேரு கருதியதை யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. நேரு மாய்ந்து, மாய்ந்து எப்படியெல்லாம் அரசை செயல்படவிடாமல் தடுக்கலாம் என்கிற ரீதியில் எழுதி யிருந்தவற்றை அப்படியே வாசித்துவிட்டு, அதைக் காலி செய்வது போல காந்தி இறுதியாக ஒரு பத்தியை சேர்த்து, பதவியில் அமர விரும்பியவர்களுக்குச் சாதகமாக காரியத்தை முடித்தார். பதினெட்டு மாகாணத் தில் பதிமூன்று மாகாணங்கள் பதவியில் அமர்வதில் ஆர்வமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எம்.என்.ராயை சந்தித்துப் படுக்கையில் விழுந்து அழுதுவிடுவது போலக் காட்சியளித்தார் நேரு. ‘நான் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்’ என்று அரற்றினார். அதோடு பெரிதாகக் கட்சித் தலைவராகத் தன்னுடைய பணிகளில் மனம் ஒப்பாமல் ஐரோப்பா நோக்கிப் பயணமானார்.

அடுத்த ஆண்டு காங்கிரஸ் கூட்டத்தை கொல்கத்தாவில் நடத்த போஸ் அழைப்பு விடுத்தார். அவரையே காங்கிரசின் அடுத்தத் தலைவராக ஆக்குவது என்று காந்தி முடிவு செய்தார். போஸ் தன்னுடைய உரையில், ’காந்தியின் அகிம்சை வழியில்தான் நாம் விடுதலை பெறவேண்டும்.

அது தீவிரமான போராட்ட முறை என்று அழைப்பதுதான் சரி. அதே சமயம் அந்தப் போராட்ட முறை சற்றும் வன்முறையற்றதாக இருக்க வேண்டும். நம்முடைய ஆட்சியில் எல்லா சிறுபான்மையினரும் எந்த ஆபத் தைப் பற்றிய கவலையும் இல்லாமல் சிறப்பாக வாழ முடியும். இந்தியும், உருதுவும் இணைந்த ஒரு மொழி யே நம்முடைய இணைப்பு மொழியாக வேண்டும்…’ என்றெல்லாம் பேசியவர் ‘தொழில்மயமாக்கல் பல் வேறு சிக்கல்களைக் கொண்டிருக்கிறது என்றாலும் தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்துக்கு நாம் போக முடியாது.’ என்று சொன்ன இடத்தில் மட்டும்தான் காந்தியை நேரடியாக தாக்கினார்.

மற்றபடி மிகவும் அமைதியான ஒரு உரையாகவே அது அமைந்திருந்தது. நேரு போஸுக்கு ஒரு வருடம் கழித்து இதைப்பற்றி எழுதிய கடிதத்தில், ‘நீங்கள் செயற்குழுவின் பார்வையோடு ஒத்துப்போவதை போலவே பேசினீர்கள். வழிகாட்டும் தலைவரைப்போல அல்லாமல் ஒரு சபா நாயகர் போலத்தான் உங்களுடைய பேச்சு அமைந்திருந் தது.’ என்றார்.

நேரு ஐரோப்பாவில் கிளமண்ட் அட்லி முதலிய லேபர் கட்சித் தலைவர்களைச் சந்தித்து அவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி அதிகார மாற்றத்தை நிகழ்த்துவார்கள் என்பது குறித்து விவாதித்தார். நேரு ஐரோப்பாவில் இருந் தபொழுது ஒருமுறைகூட போஸ் கடிதம் எழுதவில்லை. இந்தியாவுக்குத் திரும்பியதும், ‘நலமா நேரு?’ என்று உடனே கடிதம் எழுதினார்.

தேசிய திட்ட கமிட்டியை ஏற்படுத்திய போஸ் அதன் தலைவராக நேருவை நியமித்தார். பொதுச்செயலாளர் பதவி முதலிய எதுவும் வேண்டாம் என்று கடுப்போடு ஒதுங்கியிருந்த நேருவுக்கு, மீண்டும் பணியாற்ற இது உத்வேகம் தந்தது. ஆனால், இங்கேயும் அவர்களுக்குள் மோதல் வெடித்தது. காமத் என்கிற ஐ.சி.எஸ். அதிகாரி தன்னுடைய பதவியைத் துறந்துவிட்டு இந்த கமிட்டி யின் உறுப்பினர் ஆகியிருந்தார். கட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பொதுவெளியில் விமர்சனங்களை அவர் முன்வைக்க, கடுமையாகக் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது.

காமத்தை நியமித்த கட்சித் தலைவர் போஸிடம் பிரச்னையைக் கொண்டுசென்றார் நேரு. நேருவுக்கு மட் டும் தனிப்பட்ட முறையில் பிடிக்காமல் போய்த்தான் இப்படிக் கோருகிறார் என்று போஸ் எண்ணிக் கொண் டார். பின்னர் தனியாகப் பார்வர்ட் ப்ளாக் கட்சியை ஆரம்பித்தபொழுது அதற்கு காமத் பொதுச்செயலாளர் ஆனார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

தமிழன் இருக்கானே மச்சி! – ஒலிப்பதிவு


‘தமிழன் இருக்கானே மச்சி!’ என்கிற உரை பல்வேறு காரணங்களுக்காக மறக்க முடியாத ஒன்று. SSN College Of Engineering கல்லூரியில் இதோடு மூன்றாவது முறையாக நான் தமிழ் சார்ந்த நிகழ்வுகளில் பங்குகொள்கிறேன். முதலில் நடுவராக, அடுத்து கடந்த ஆண்டு சாரல் தமிழ் மன்றம் துவக்க விழா smile emoticon இன்றைக்கு Instincts கலைத்திருவிழாவின் தமிழ் நிகழ்வுகளை துவங்கி வைத்தேன்.

ஐம்பது நிமிடங்கள் நீண்ட அந்த உரையில் தமிழர்கள் இந்தி பேசாததால் இந்தியர்கள் இல்லை, தமிழர்கள் வியாபாரத்தில் திறன் குறைந்தவர்கள், சினிமா நடிகர்களை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள், பிரிவினைவாதிகள், விடுதலைப் போரில் பெரிய பங்களிப்பு தராதவர்கள், உணர்ச்சிகரமானவர்கள்,விளம்பரப் பிரியர்கள், தன்மானம் இழந்து காலில் விழுபவர்கள், தமிழ்க்கலாசாரத்தில் காதலுக்கு இடமில்லை, சங்ககாலத்தில் மது அருந்தும் பழக்கம் இல்லை, தமிழ்நாடு ஊழலின் உச்சம், தமிழர்கள் இந்திய தேசியத்துக்கு எதிரானவர்கள் முதலிய கருத்துக்களுக்கு மாற்றுப்பார்வைகளை தந்தேன். திராவிடக் கட்சிகளால் வீழ்ந்தோம், மதவாதம் ஏன் தமிழ் நாட்டில் வேரூன்ற முடியவில்லை என்பதை சொல்ல நினைத்து தவறவிட்டு விட்டேன். மற்றபடி பெரும்பாலும் நிறைவைத் தந்த உரை. அதிலும் கிட்டத்தட்ட முப்பது முறை கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்திய அறுநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நெகிழ வைத்தார்கள் என்றால், விழா முடிந்த பிறகு நாற்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தனித்தனியாகவும் , இளைஞிகள் குழுவாகவும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

கனத்த விஷயங்கள், நாற்பது ஆண்டுகால அரசியல், சங்ககால அம்சங்கள், வரலாறு, புவியியல் சார்ந்த பார்வைகளை நகைச்சுவை கலந்து ஐம்பது நிமிடங்களில் பதினெட்டு-இருபத்தி ஒரு வயது நண்பர்களுக்கு தந்தது தைரியமான முயற்சி. சில போதாமைகள் இருந்தாலும், என்னுடைய மிகச்சிறந்த பேச்சுக்களில் ஒன்று smile emoticon

Vishnu Varatharajan, Vignesh Kr, Thamil Thedal ஆகியோருக்கும் ஏனைய SSN – Institutions அன்பர்களுக்கும் நெகிழ்வான நன்றிகள். ஈரோட்டில் இருந்து என் பேச்சைக் கேட்க வந்து முடிந்த பின்பு பாராட்டிய அந்த தோழருக்கும் நன்றி.

Here it is :This speech tries to debunk myths on Tamil, Tamilians, Tamilnadu. A fifty minute delight in a college boy language coupled with history, language, sociology, political science perspectives…

ஐம்பது நிமிடங்களில் கல்லூரி மாணவர்களின் மொழியில் நிகழ்த்தப்பட்ட ‘தமிழன் இருக்கானே மச்சி!’ உரையின் ஒலிப்பதிவு…

அம்பேத்கர்,காந்தி-சுய மரியாதை,நவீனத்துவம் இணைந்து பயணிக்க வேண்டிய தலித்தியம் !


The flaming feet and other essays என்கிற D. R. Nagaraj அவர்களின் நூலை தூக்கம் தொலைத்து படித்து முடித்தேன். தலித்திய இயக்கத்தை பற்றிய பார்வைகளை மறுவாசிப்பு செய்வதையும்,காந்தி-அம்பேத்கர் உரையாடலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இணைத்து பேசும் காத்திரமான இந்த நூல் வெறும் இருநூற்றி சொச்சம் பக்கங்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். அம்பேத்கரும்,காந்தியும் மோதிக்கொண்டார்கள் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு அவசியம் அவர்கள் இருவரின் கருத்தியல்களையும் இணைத்துக்கொண்டு தற்கால சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம். 

காந்தி இந்து மதத்துக்குள் இருந்து கொண்டு அதிலும் குறிப்பாக ஆலயங்களுக்குள் ஒடுக்கப்பட்ட மக்கள் நுழைவதன் மூலம் அவர்களை சாதியத்தின் சமத்துவ மறுப்பில் இருந்து விடுவிக்கலாம் என்று எண்ணினார். எரவாடா சிறையில் உண்ணா நோன்பு இருக்கிற அந்த புள்ளியில் அவரை சந்திக்க ஒரு தலித் இளைஞன் வருகிறான். அவனைக்கொண்டே போராட்டத்தை ஆரஞ்சு சாறு குடித்து முடிக்கலாம் என்று காந்தியின் செயலர் மகாதேவ் தேசாய் எண்ணுகிறார். ஆனால்,காந்தியை சந்தித்துவிட்டு சென்ற அந்த இளைஞன் மீண்டும் அவரை சந்திக்க வரவே இல்லை. காந்திக்கு தங்களின் நிலையை மாற்ற வேண்டும் என்கிற விருப்பம் இருந்தாலும் அங்கே தான் ஒரு புனித பரிகாசத்துக்கு உள்ளாவதை அவன் உணர்ந்தான். அங்கேயே தலித் இயக்கத்தின் புரட்சிக்குரல் எழுந்துவிடுகிறது என்கிறார் ஆசிரியர். 

கோயிலில் இருக்கும் ஆன்மிகம் மற்றும் அது தரும் பெருமிதம் அதனோடு இணைந்த கலாசார வேர்கள் ஆகியன ஒடுக்கப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழையும் பொழுது மாற்றத்தை கொண்டு வரும் என்று காந்தி நினைத்தார். மேலும் இந்த சாதிய முறை கிராம பொருளாதரத்தை காக்கிறது,அது தேவை. அதில் இருக்கிற செயல்பாட்டு நெறிமுறை சிக்கலுக்காக அதை முற்றாக நிராகரிக்க கூடாது என்கிற பார்வை அவருக்கு ஆரம்பத்தில் இருந்தது. அண்ணல் அம்பேத்கர் எந்த அமைப்பு அவர்களை ஒடுக்குகிறதோ அதனுள்ளே இருந்தே எப்படி வழிபடுவது என்கிற கேள்வியை எழுப்பினார். சுய புனிதப்படுத்துதல் என்பதை காந்தி குறிக்கலாம்,ஆனால்,சுய மரியாதையை இழந்து ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ முடியாது என்று காந்தியின் பார்வையில் இருந்த குறைபாட்டை சுட்டிக்காட்டினார். மேலும்,சாதிய அமைப்பை கிளர்ச்சி செய்து தகர்ப்பதே ஒட்டுமொத்த விடுதலைக்கு வழி என்று அவர் எண்ணினார். 

தெற்கில் பிரமாணர் அல்லாதோரின் அரசியல் முகமான நீதிக்கட்சி 1944 தேர்தலில் தோற்றதும் அம்பேத்கர் இப்படி பதிகிறார்,”எந்த பிரமாணியத்தை எதிர்ப்பதாக அவர்கள் சொல்லிக்கொண்டார்களோ அவர்களை போலவே நாமம் அணிந்தே இவர்கள் இரண்டாவது பிராமணர்கள் போல நடந்து கொண்டார்கள். மேலும் அரசாங்க அமைப்புகளில் வேலை பெற்றால் மட்டும் போதும் என்று அவர்கள் பத்து சதவிகித மக்களுக்கு மட்டும் இயங்கி கிராமப்புறத்தில் இருந்த மிச்ச ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை கணக்கில் கொள்ளாமல் போய் இயக்கத்தை நீர்க்க விட்டுவிட்டார்கள். 

காந்தியின் ஹரிஜன் இயக்கத்தில் காந்திக்கு மனதார ஒப்புமை இருந்ததாக கொண்டாலும் அவரை பின்பற்றியவர்கள் அதற்கு தயாராக இல்லையென்பதே உண்மையாக இருந்தது. அவருக்கும்,அவரின் தொண்டர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களுக்கு மிகப்பெரிய இடைவெளி இந்த தலித்கள் பற்றிய போராட்டத்தில் இருந்தது. பூனா ஒப்பந்தத்தில் காந்தி தன்னுடைய விடாப்பிடியான போக்கின் மூலம் வென்றது போல இருந்தாலும் அது பலமற்ற அடித்தளத்தில் இருக்கிறது என்பதை அவர் உணர்ந்தே இருந்தார். அரசின்மைவாதியான காந்தி பூனா ஒப்பந்தத்தின் மூலம் அரசின் மைய நீரோட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். மேற்கின் தத்துவங்களை உள்வாங்கிய அண்ணலோ இந்த இந்துக்களோடு இணைந்து இயங்கவே முடியாது என்று தனித்த பிரிவாக எழ வேண்டும் என்று விரும்பினார் 

நவீனத்துவம் அதிலும் மேற்கின் தொழில்மயம் மனிதத்தன்மை அற்று இருக்கிறது மற்றும் அதில் அவமானங்கள் மற்றும் அவலங்கள் அதிகம் என்ற காந்தி அதே பண்போடு கிராமப்புறங்கள் ஒடுக்கப்பட்ட மக்களை நடத்தியதை கவனிக்க மறந்தார். அதை அம்பேத்கர் அவருக்கு உணர்த்தினார். காந்தியின் கிராம மக்களின் ஆன்மிகம் சார்ந்த பிடிப்பு மற்றும் அவர்களின் வேரோடு கூடிய இணக்கம் ஆகியவற்றை அம்பேத்கர் உள்வாங்கிக்கொண்டார். 

காந்தி தீண்டாமை ஒழிப்பில் கவனம் செலுத்தினார். அது அமைப்புக்குள் இருந்து கொண்டே மனசாட்சியை தட்டி எழுப்பி நிகழ வேண்டிய ஒன்று என்று அவர் நம்பினார். தீண்டாமை சிக்கல் இந்து மதத்துக்கு உரியது அதில் மற்றவர்கள் தலையிடக்கூடாது என்கிற பார்வை அவருக்கு இருந்தது. அம்பேத்கரோ எல்லா மத மக்களும் தங்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தரலாம் என்று முழக்கமிட்டார். காந்தியின் இந்து மதத்துக்குள் இருந்தே மாற்றங்களை பெறுவது என்பதில் தாங்கள் குகனைப்போல அடி பணிகிற ஒருவராகத்தான் பெரும்பாலும் கொள்ளப்படுவோம்,தீரா பக்தி மற்றும் சேவை என்று சொல்லி மேலெழும்பும் உரிமைகள் மறுக்கப்படும் தாங்கள் ராமனாக மாறமுடியாது என்கிற காந்தியின் மாதிரியின் போதாமையில் அண்ணலுக்கு புரிதல் இருந்தது. 

சுய சுத்திகரிப்பில் ஈடுபடும் சாதி இந்துக்களின் சடங்காக தாங்கள் மாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்து கற்பி,ஒன்று சேர்,கிளர்ச்சி செய் என்று சுய மரியாதையை ஒடுக்கப்பட்ட மக்கள் கொண்டிருக்க வேண்டும் என்று அழுத்தி அம்பேத்கர் இயங்கினார். காந்தி தோல் வேலைகளில் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்கள் இயல்பட வேண்டும்,அவர்களின் மரபார்ந்த தொழில்நுட்பங்கள் காலனியாதிக்கத்தில் காணமல் போயின என்றார். அவரின் வாதத்தில் ஒரு புறம் நியாயம் இருந்தாலும்,பல்வேறு தொழில்கள் அவர்களை இழிவுபடுத்தும் வேலைகளை செய்தமையால் அவற்றை விடுக்க வேண்டும் என்கிற அம்பேத்கரின் வாதத்தில் ஆழமிருந்தது. காந்தியின் எல்லாரையும் இணைத்துக்கொள்ளும் மதம்,அம்பேத்கரின் பொருளாதாரம் ஆகிய இரண்டும் இருவரின் உரையாடலில் இடம் மாறிக்கொண்டன. 

முழுக்க அமைப்பை உடைத்துவிட்டு போவது என்பது ஒரு புறமாக மட்டுமே இயங்குவதாக ஒற்றைப்படையாக போய் விடுகிறது உள்ளிருந்தபடியே யார் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறார்களோ அவர்களிடமும் மாற்றங்களை கொண்டு வர பாடுபட வேண்டும் என்கிற காந்திய சிந்தனையை தற்கால தலித் இயக்கங்கள் சில உள்வாங்கி இருக்கின்றன. கர்நாடக தலித் சங்கர்ஷ் சமிதி ஆதிக்க சாதியினரின் வீடுகளின் முன் குவளையில் தண்ணீர் கொடுத்து குடிக்க வைக்கும் போராட்டத்தை நிகழ்த்தினார்கள் என்பதை இணைத்து ஆசிரியர் பேசுகிறார். இப்படிப்பட்ட நகர்வுகள் அவசியம் என்கிறார்.

சோசியலிசம்,ஜனநாயகம்,நீதி ஆகிய மேற்கின் கருத்தாக்கங்களை உள்வாங்கி வந்த அம்பேத்கர் அங்கே இருந்த சாதிய அமைப்புமுறை ஆதிக்க சாதியினர் சொல்வதே வேதம்,உங்களுக்கு உரிமைகள் என்று எதுவும் கிடையாது,நீங்கள் இந்த அமைப்புக்குள்ளேயே உழல வேண்டும் என்கிற பார்வையை தந்திருந்தது. அவற்றை இதிலிருந்து முழுமையாக எதிர்ப்பதன் மூலம் மட்டுமே மீள முடியும் என்று அண்ணல் எண்ணினார். ஒரு கிராமப்புற சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவின் ஒரு நபர் ஏதேனும் ஒரு தவறு செய்தால் ஒட்டுமொத்த சமூகத்தையும் தண்டிக்கும் ஆதிக்க சாதியினர் அதே போக்கை தங்கள் சமூகத்து நபர் தவறு செய்கிற பொழுது கைக்கொள்ள மறுக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் மேலெழும்புவதை பல்வேறு வகைகளில் அவர்கள் மறுக்கிறார்கள்,எதிர்க்கிறார்கள். பண்டைய பழமொழிகள் ஜாதிய வெறுப்பை பல்வேறு இடங்களில் பிரதிபலித்துக்கொண்டே இருக்கிறது. மைசூரில் ஒரு பஞ்சம் ஏற்பட்ட பொழுது பிராமணர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து இயங்குவதை விட இறப்பதே மேல் என்று அழுத்தமாக இருந்ததை பதிகிறார் ஆசிரியர். இப்படிப்பட்ட இறுக்கமான சூழல்களை கலப்பு திருமணங்களின் மூலம் தற்கால தலித் இயக்கங்கள் எதிர்கொள்வது அவசியமாகிறது. அம்பேத்கரின் அடிப்படைகளான சுய மரியாதையை ஏந்திக்கொண்டு காந்தியின் எல்லாரையும் இணைத்துக்கொண்டு இயங்குதல் என்கிற உரமும் நல்ல வளமான சமூகத்துக்கு அவசியமாகிறது. 

நீர்,நிலம்,காடு ஆகியவை சார்ந்த வடிவமைப்பு உரிமைகள்,சமூக இடங்களில் ஒன்றாக புழங்க உரிமை மற்றும் சமூக விழாக்களில் இணைந்து பங்குபெறும் உரிமைகள் என்று தலித்துகளுக்கான உரிமைகள் மூன்று வகையாக பகுக்கலாம். இதில் மூன்றாவது உரிமையை மறுப்பதிலும்,வன்முறையை கட்டவிழ்ப்பதிலும் எண்ணற்ற ஆதிக்க சாதியினர் ஈடுபடுகிறார்கள். இப்படி எண்ணற்ற சிக்கல்கள் சாதி அமைப்பால் ஏற்படுவது கொண்டிருந்த சமூகத்தில் தற்போது கூடுதலாக் இன்னுமொரு ஆபத்து வந்துள்ளதை கவனிக்க அறிவு ஜீவிகள் மறுக்கிறார்கள். அது நவீனத்துவம். அதை கொண்டு ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. சூழலியலை காலி செய்கிற பொழுது ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரை எதிர்க்க வைத்து அதிகார மையங்கள் காரியம் சாதிப்பதை செய்கின்றன. அறிவியல்,தொழில்நுட்பம்,முதலீட்டு அமைப்புகள் நவீனத்துவம் என்கிற பெயரில் எண்ணற்ற ஒடுக்கப்பட்ட மக்கள்.பழங்குடியினரை அழிக்கிறது. அவர்களின் நிலத்தை விட்டும்,கலாசார பிணைப்பை விட்டும் காணடிக்கிறது. உள்ளூர் மட்டத்தில் வெவ்வேறு முகங்கள் கொண்டு இயங்கும் முதலாளித்துவத்தின் கோரங்களை விமர்சிக்க அறிவுஜீவிகள் முன்வர வேண்டும். அது ஒடுக்கப்பட்ட மக்களை ஜாதிய படிநிலையில் இருந்து கலாசாரம் மற்றும் அடையாளம் அற்றவர்களாக ஆக்கியிருக்கிறது என்று மட்டுமே சொல்லி இழப்பின் பெருவலியை கடக்க முயல்கிறோம். மிக நெடிய செறிந்த கலாசாரம் கொண்ட பவுத்தத்தை சாதி இந்து அமைப்புக்கு மாற்றாக அண்ணல் கைக்கொண்டதை கவனிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் பல்வேறு தொழில்நுட்பங்களில்,கலைத்தொழில்களில் சிறந்து விளங்கினர். அவற்றை மீட்பதும் அவசியமே. சாதிய அமைப்பை காலி செய்கிறது என்று நாம் நம்புகிற நவீனத்துவமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநியாயங்களை செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும். 

கல்வி,அறிவியல்,பொருளாதாரம் என்று ஆதிக்க சாதியினர் நவீனத்துவதை ஒடுக்கப்பட்ட மக்களை பின்னுக்கு தள்ள பயன்படுத்துகிற போக்கும் நிலவுகிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாக மட்டுமே பிந்தங்கியிருந்தார்கள் என்பதை என்பதை மறைத்து அவர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒரே மாதிரியான சிக்கல் கொண்டவர்கள் என்று பேசுவது வலி நிறைந்த வரலாற்றை உண்மையை மறைக்கும் போக்கே. ஆன்மீக பிரதிநித்துவங்கள் முழுக்க தவறானவை என்று பேசாமல் அவற்றின் ஒடுக்கப்பட்ட மக்களின் கலாசாரத்தோடு இணைதல்,அழித்தல் மற்றும் தேர்ந்தெடுத்த அமைதியை கூர்ந்து பதிவு செய்ய வேண்டும். 

தொழில்நுட்பம் செய்யும் பல்வேறு கொலைகளுக்கு,நவீனத்துவம் மக்களை அழிக்கும் அவலங்களுக்கு எதிராக,மண்ணுக்காக,சூழலியலுக்காக,அணைகள் கட்டவும், வளர்ச்சியை உருவாக்கவும்,தனிமங்கள் எடுக்கவும் மண்ணில் இருந்தும்,காடுகளில் இருந்தும் விரட்டப்படுவதில் பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களே என்பதை உணர்ந்து இதற்கு எதிராகவும் குரலெழுப்ப தவறுவது தகாது என்கிறது நூல். காந்தியின் இந்த நவீனத்துவம் மீதான விமர்சனத்தோடு அண்ணலின் அடிபணியமாட்டேன் என்கிற ஆதாரமும் சேருகிற பொழுதே மாற்றங்கள் நிஜமாகும்

Permanent Black வெளியீடு 
டி.ஆர்.நாகராஜ் 
விலை : 399
தமிழில் : 
தீப்பற்றிய பாதங்கள் – டி.ஆர். நாகராஜ்
புலம் புதிய வெளியீடு
பக்கங்கள்: 452 / கெட்டி அட்டை
விலை ரூ. 350

ஆஷிஷ் நந்தியோடு பேசுங்கள் !


TALKING INDIA எனும் ஆஷிஷ் நந்தியுடன் ரமின் ஜஹன்பெக்லோ எனும் இரானிய பேராசிரியர் நிகழ்த்திய உரையாடல்களின்  தொகுப்பாக வந்திருக்கும் நூலை வாசித்து முடித்த பொழுது நம்மின் நம்பிக்கைகளை ஒரே ஒரு நூல் மறுவாசிப்பு செய்ய வைக்கிற அற்புதம் நிகழும் என்கிற நம்பிக்கை மீண்டும் ஆழமாக நிலை பெற்றது.

கல்கத்தாவின் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த ஆஷிஷ் நந்தி மருத்துவப்படிப்பை பிடிக்காமல் துறந்து சமூகவியலில் பட்டம் பெற்று மருத்துவ உளவியலில் முனைவர் ஆய்வில் இறங்கிய அவர் மரபார்ந்த வாசிப்பை விட்டு நகர்ந்து பல்வேறு மறுவாசிப்புகளை அவர் நிகழ்த்தியதை நூலின் ஆரம்பத்தில் சொல்கிறார்.

இந்துத்வவாதிகள்,பெண்ணியவாதிகள் என்று வெவ்வேறு சிதாந்தந்தங்களை கொண்டு இயங்குவதாக சொல்லிக்கொள்கிற இவர்கள் எல்லாரும் யாருக்காக இயங்குவதாக சொல்கிறார்களோ அவர்களையே அதிகம் தாக்கி தங்களின் கருத்து பரிமாற்றத்தை கட்டமைக்கிறார்கள் என்பதை நந்தி குறிக்கிறார். இந்து மதவாதிகள் கிறிஸ்தவர்களை,இஸ்லாமியர்களை கருத்தியல் ரீதியாக தாக்குவதை விட உங்கள் மதத்தின் மீது உங்களுக்கே பற்றில்லையே என்று இந்துக்களின் மீதே அவ்ர்களின் தாக்குதல் தொடர்கிறது. சவர்க்கார் துவங்கி கோட்சே வரை நீங்கள் இஸ்லாமியர்கள்,கிறிஸ்துவர்கள் போல பற்றோடு இல்லை என்று அழுத்தி சொல்வதை கவனிக்க சொல்கிறார்.

நவீன மதவாதம் பற்றி நாம் கொண்டிருக்கும் பல்வேறு நம்பிக்கைகளை எக்கச்சக்க கேள்விகள் மூலம் மறுவாசிப்புக்கு அவர் உள்ளாக்குகிறார். ஹைதரபாத்தில் இஸ்லாமிய தலைவர் ஒருவரும்,இந்து தலைவர் ஒருவரும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் கலவரங்களை தங்களின் பேச்சுக்களின் மூலம் அரசியல் தேவைகளுக்காக உண்டு செய்பவர்கள் ; அதே சமயம் அவர்களின் நட்பு அப்படியே இருக்கிறது. கல்யாண் சிங் பாபர் மசூதி இடிப்புக்கு ஒரு முக்கியமான காரணம் ; அடுத்து மதச்சார்பின்மை முகமாக காட்டிகொண்ட சமாஜ்வாதி கட்சியில் அவர் இணைந்தார். அங்கே எந்த நெருடலும் இல்லாமல் அவரின் மகன் அமைச்சரானார். ஆக,கருத்தியல் ரீதியாக இங்கே மதவாதம் என்று ஒன்று இருப்பதாக நாம் நம்பவைக்கப்படுகிறோம். 96.4 சதவிகித மதக்கலவர மரணங்கள் நகர்ப்புறங்களிலேயே நிகழ்ந்திருக்கின்றன. பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லாத நகர்ப்புறத்தில் மதம் என்கிற ஒற்றை அடையாளத்தின் மூலம் மக்களை வன்முறை நோக்கி திருப்பும் செயலை கச்சிதமாக செய்ய முடிகிறது. பணம் கொடுத்து மதக்கலவரங்களை நிகழ்த்த முடியும் என்கிற வகையில அவை திட்டமிடப்பட்டு செய்யப்படுகின்றன. குஜராத்தில் மோடி அரசு வலிமையாக இருந்த பகுதிகளில் மதக்கலவரங்கள் நடக்கவில்லை ; எங்கே ஓட்டுக்கள் அவர்களுக்கு கடந்த தேர்தல் குறைவாக விழுந்ததோ அங்கே தான் கலவரங்கள் ஏற்பட்டன என்பதை பதிவு செய்கிறார். ஆர்.எஸ்.எஸ். ஒரு மத இயக்கம் என்பதைவிட அதை அரசியல் இயக்கம் என்றே பார்க்கவேண்டும் என்று தன் பார்வையை அவர் குறிக்கிறார். ஆர்.எஸ்.எஸ் எந்த இந்து கடவுளின் உருவத்தையும் கூட்டங்களில் பயன்படுத்தியது கிடையாது. பாரத மாதாவை மட்டுமே முன்னிறுத்திய அந்த அமைப்பு அயோத்தியாவில் தான் கோயில்கள் சார்ந்த விஷயத்தில் முதன்முறை நுழைந்தார்கள் என்று சொல்கிறார்.

உலகின் எண்பது சதவிகித இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளை ஏற்க மறுக்கிற இஸ்லாமிய அடிப்படைவாதம் எந்த வகையில் நியாயமானது என்று கேள்வி எழுப்புகிறார். சூரியனை வழிபடுகிறார்கள் என்று இரானியர்களை இராக்கியர்கள் குற்றம் சொல்கிறார்கள்,இந்தோனேசிய இஸ்லாம் பவுத்தம் மற்றும் இந்து மதத்தின் தாக்கம் கொண்டிருக்கிறது. வங்கதேச இஸ்லாமும் இந்து மதத்தின் கூறுகளை உள்வாங்கி இருக்கிறது என்கிற பாகிஸ்தான் இஸ்லாமியர்களின் இஸ்லாமும் பல்வேறு மாறுபாடுகளுக்கு உட்பட்டு இருக்கிறது என்பதே சரி ஆக அடிப்படைவாதங்கள் சுய நம்பிக்கையின்மை மற்றும் கலாசார போதாமையால் ஏற்படுகிறது.

  காந்தியே தன் மரணத்தை அப்படி அமைத்துக்கொள்ள விரும்பினார் என்றும் அவரை இந்தியாவின் நவீன முகம் வெறுத்தது,இந்து மதவாதிகள்,லிபரல்கள்,இடதுசாரிகள் என்று பலதரப்பினர் அவரை வெறுத்தார்கள். காந்தியை கொன்ற பின் கோட்சே என் அன்னையை காக்க என் தந்தையான காந்தியை கொல்ல நேர்ந்தது ; அவரை நான் நாயகன் ஆக்கியிருக்கிறேன். அதை அவர் விரும்புவார் என்கிறான். அது உண்மையே ! காந்தி தன்னுடைய மரணம் அதிகம் வீரியம் கொண்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்று உணர்ந்தே இருந்தார். அவர் விரும்பியவாறே அவர் மரணம் நிகழ்ந்தது. காந்தியின் திறந்த மனதோடு கூடிய இந்து மதம் மற்றும் இறுக்கமான இந்து மதம் ஆகிய இரண்டுக்கும் இடையே நடந்த போராட்டமே காந்தியின் மரணத்தில் வந்து நின்றது. பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர் நடந்த தேர்தலில் காந்தியை போலவே திறந்த மனதோடு கூடிய பெரும்பான்மை இந்துக்கள் பி.ஜே.பியை அடுத்து வந்த தேர்தலில் மொத்தமிருந்த  ஒன்பது தொகுதிகளில் அந்த மாவட்டத்தில் எட்டு தொகுதிகளில் தோற்கடித்தார்கள் என்பதை கவனிக்க வேண்டும் என்கிறார்..

 

காந்தியை நவீன இந்தியா மறக்க முயன்றாலும் காந்தி மறக்க முடியாதவராகவே இந்திய சூழலில் இருக்கிறார். அவரை நீங்கள் மறந்தாலும் அவர் வெவ்வேறு வழிகளில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறார் என்பதே உண்மை. காந்தியை முன்னோக்கி நகர்த்த எண்ணற்ற காந்தியவாதிகள் தவறிவிட்டார்கள்,அரசாங்கத்தை விமர்சனம் செய்கிற பண்பை அவர்கள் பெரும்பாலும் இழந்து விட்டார்கள்,ஆனால்,ஆச்சரியமாக இந்திய மார்க்சிஸ்ட்கள் காந்தியை பூர்ஷ்வாக்கள் பக்கம் நின்றவர் என்று வசைபாடினாலும் இந்தியாவின் பெண்ணிய,சுற்றுசூழியல் இயக்கங்களை முன்னெடுத்து காந்தியத்தை முன்னகர்த்தி இருக்கிறார்கள். அந்த இயக்கங்களின் அடிப்படை தத்துவங்களை காந்தி ஏற்கனவே வார்த்து தந்துவிட்டு போய்விட்டார் என்பதை கவனிக்க வேண்டும். காந்தியம் காந்தியை உண்கிறது ; மேலும் காந்தி ஆகச்சிறந்த காந்தியவாதி இல்லை என்பதும் உண்மையே என்று பதிகிறார்.

எமெர்ஜென்சி வெறும் இந்திராவின் செயல் மட்டுமில்லை ; ஜனநாயகத்தின் மீது படிப்படியாக வெறுப்புற்ற அதிகார வர்க்கத்தின் உதவியோடே அது  நிகழ்த்தப்பட்டது. பெண்களை சக்தி மிகுந்தவர்களாக பார்க்கிற மரபார்ந்த சிந்தனை இந்தியாவில் இருந்திருக்கிறது ; இந்த தெற்காசிய பகுதியில் தான் அதிகபட்ச பெண் தலைவர்கள் எழுந்திருக்கிறார்கள். அவர்கள் பதவிக்கு வருவதற்கு அவர்களின் பாலினம் தடையாக இல்லை என்பதை கவனிக்க வேண்டும், சதி என்பது நெடுங்காலமாக இந்திய பாரம்பரியத்தில் இருந்தது என்பதும் தவறான பார்வை. இருக்கின்ற தரவுகளின் படி மிகக்குறைவாகவே சதி நிகழ்ந்துள்ளது,அதிலும் சொத்துக்களில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமைகளை வங்கத்தில் பறிக்கவே அது பயன்படுத்தப்பட்டது என்பதை அவர் பதிவு செய்த பொழுது பெண்ணிய அமைப்புகளின் தீவிரமான எதிர்ப்புக்கு உள்ளானதை இணைத்தே பதிகிறார்.

ராஜராம் மோகன்ராய் நவீனத்துவ பார்வையை தாங்கியபடி சதியை எதிர்க்கவில்லை. சிவனின் நாட்டியம் பார்வதியின் தீக்குளிப்புக்கு பின்னர் நிகழ்ந்தது ; அந்த நம்பிக்கையில் சதி பின்பற்றப்படுகிறது என்று நீங்கள் நம்பினால் அந்த புனிதம் இன்று இல்லாத பொழுது எப்படி ஒரே ஒரு சடங்கின் மூலம் மட்டும் நம்பிக்கையை காக்க முடியும் என்று கருதுகிறீர்கள் என்று அவர்களின் உள்ளுக்குள் இருந்து கேள்வி எழுப்பி சாதித்தார் என்பதை பதிகிறார். நாடுகளைக்கடந்து கலாசாரங்கள் எல்லா காலங்களிலும் கடத்தப்பட்டு உள்ளன. புத்தர் நேபாளிய இறக்குமதி,சிதார் துவங்கி இசை வரை பல்வேறு அற்புதங்களை தந்த அமீர் குஸ்ரூ ஒரு இரானியர்

பாகிஸ்தானின் வரலாறு என்பது அவர்கள் இருக்கிற பகுதியின் வரலாறை பேசவே இல்லை. அது டெல்லியில்,இந்தோ-கங்கை சமவெளியில் இருந்த ஆட்சிகளை பற்றி பேசி அப்படிப்பட்ட பழம்பெருமை கொண்டவர்கள் நாம் என்றே பேசுகிறது ; பாகிஸ்தானியர்கள் தன்னிடம் பணம் கொடுத்து பொருளைத்தர மறுத்ததை அவர் சொல்லி அவர்கள் நம்மிடம் தோற்பதை விரும்பவில்லை. இரு நாட்டவருமே இன்னொருவரின் இருப்பை விரும்புகிறோம். நமக்கு எதிர்க்க ஒருவர் தேவைப்படுகிறார் ; இன்னுமொரு ஆச்சரியமான விஷயம் பாகிஸ்தான் என்கிற கருத்தாக்கத்தை பெரிதும் தூக்கிபிடித்தது தற்கால வங்கதேசமே. இப்போதைய பாகிஸ்தான் விடுதலைக்கு முந்தைய காலத்தில் பல்வேறு பகுதிகளில் இந்தியாவுடன் இணைந்து இருப்பதையே விரும்பியது. ஒருவேளை வங்கதேசம் பாகிஸ்தான் என்கிற பெயர் சூடியிருந்தால் அவர்களை நாம் எதிர்த்திருப்போம் என்று எள்ளலுடன் குறிக்கிறார். பாகிஸ்தானியர்கள் மற்றும் இந்தியர்கள் இருவருக்கும் மற்றவரை பற்றி நன்றாக தெரியும் என்கிற மாயை இருக்கிறது; அது இன்னொரு பகுதிக்கு பயணிக்கிற பொழுது மாறுகிறது என்பதே உண்மை

சிறுபான்மையினர் பிரிந்து போவதற்காக போராடுகிறார்கள் என்று நினைக்கிறோம் ; உண்மையில் அவர்கள் எதிர்பார்ப்பது தங்களுக்கான கவனத்தை தான். அது ஒழுங்காக தரப்படுகிற பொழுது அவர்களின் எழுச்சி அடங்கிவிடும் என்பதே உண்மை. நவீனத்துவம் வெற்றியாளர்களின் சிந்தனையாக இருக்கிறது ; மதம் ஏற்படுத்திய வன்முறையை தீவிரமாக எதிர்க்கிற அதே சமயம் அது ஏற்படுத்தியதை விட பன்மடங்கு அதிக மரணங்களை நவீனத்துவம் ஏற்படுத்தி இருக்கிறது. நவீனத்துவத்தை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ளும் அடிப்படைவாத இயக்கங்கள் அதன் முக்கிய கூறான வன்முறையை தாங்களும் பற்றிக்கொள்கிறார்கள் என்பதே உண்மை.

மரபில் பல்வேறு சங்கதிகளை,கூறுகளை சோதித்து பார்த்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதை முற்றிலும் தவறு என்று நாம் நிராகரிக்கிற பொழுது நாம் ஏதேனும் முக்கியமான அம்சத்தை தவறவிட்டிருப்போம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். உண்மையில் அடையாளங்களை தூக்கிப்பிடிக்கும் பலர் தங்களின் பலரையும் உள்வாங்கிக்கொண்டு நகரும் பாரம்பரியத்தை தவற விட்டவர்களே. மேற்கில் போய் இந்துவாக வாழ விரும்புகிற இந்தியாவில் பிறந்த இந்து ஒருவன் இங்கே பன்முகத்தன்மை கொண்ட பல்வேறு மக்களை ஏற்றுக்கொள்கிற இந்து மதத்தின் கூறுகளை உலகமயமாக்கலில் விட்டு ஒற்றைப்படையான அடையாளத்தை தூக்கிப்பிடித்து வெறுப்பை வளர்க்கிறார்கள். இதுவே அமெரிக்காவில் இருக்கும் யூதர்களுக்கும் பொருந்தும். அவர்கள் இஸ்ரேலிய யூதர்களை விட அதிகம் வெறி கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

Talking India: Ashis Nandy in Conversation With Ramin Jahanbeglooபிரிட்டிஷ் அரசு தன் காலத்தில் தன் பகுதியில் எழுந்த ஐயர்லாந்து புரட்சியை தனக்குள் இருந்த வேற்றுமையை மறைத்து இந்தியாவில் ஆட்சி செய்தது. ஒன்றாக இணைந்தே இருங்கள் என்கிற குரல் இங்கே போதிக்கப்பட்டது. நவீனத்தின் வேர்களை பற்றிக்கொண்டு வந்த நாம் அதனால் தான் வேற்றுமைகளை கண்டால் அஞ்சுகிறோம். பல்வேறு மக்களின் நம்பிக்கைகளை மதிக்காமல் ஒற்றுமை என்று மட்டும் குரல் கொடுக்கிறோம்.

நேருவிய பாபியன் சிந்தனைகளை நாம் பெரும்பாலும் துறந்திருக்கிறோம். அவரின் ஜனநாயகத்தை மட்டுமே உள்வாங்கி இருக்கிறோம். காந்தி ஏற்கனவே இருக்கும் ஒரு அமைப்பை அழிக்க அல்லது அதற்கு மாற்றான கருத்தியல் நிலை பெற பல நூற்றாண்டுகள் ஆகும் என்பதை உணர்ந்திருந்தார். அதனால் தான் அவர் தீண்டாமையை முதலில் எதிர்த்தார். அவர்களுக்கு சம உரிமை வழங்க இயங்கினார் ; அதையே இன்று தேர்தல் முறை செய்கிறது. இதையே இந்து மதவாதிகளும் செய்வதாக சொல்லி அவர்களை தங்களின் பிரிவுக்குள் கொண்டு வருகிறார்கள்.

காந்தியை ஒரு மதச்சார்பின்மைவாதி என்று ஏற்க மறுக்கும் நந்தி அவர் உண்மையில் மதத்துக்குள் இருந்தே மதத்தின் பெயரால் நிகழும் அடிப்படைவாதத்தை எதிர்த்தார் என்கிறார். இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்கள் மதச்சார்பின்மை என்பதை அரசாங்கம் ஏற்படுத்தி வைத்திருக்கும் வெற்று கோஷம் என்றே நினைக்கிறார்கள்.  தொடர்ந்து ஒரு மதத்தின் பெயரால் நடத்தப்படும் வெறுப்பரசியலை ஒற்றைப்படையாக மதத்தின் பெயரால் மட்டும் எதிர்க்கிற பொழுது பல்வேறு சிறிய குழுக்கள் அந்த மதத்தின் உள்வாங்கும் தன்மை கொண்ட,பல்வேறு மதத்தவரோடு இணைந்து அன்போடு பழகிய மக்களையும் இந்த ஒரே ஒரு அடையாளத்துக்குள் அடக்கி நாம் உண்மையில் மதவாதத்துக்கு உதவுகிறோம். பி.ஜே.பி ஆக்கப்பூர்வமான மதச்சார்பின்மை என்கிற கோஷத்தோடு ஐரோப்பிய தேசம் பற்றிய கருத்தியலை இந்தியாவிலும் சாதிக்கலாம் என்று நினைக்கிறது.

உலகமயமாக்கல் இன்னமும் நம்மை தேவைகளை நோக்கி நகர்த்தியிருக்கிறது. ஒரே ஒரு அறையில் பலர் வாழ்ந்த அமெரிக்காவில் இன்று ஒவ்வொரு பிள்ளைக்கும் அறைகள் வேண்டும் என்று எண்ண வைத்திருக்கிறார்கள். கிராமங்களில் பசியால் இறக்காத பலரை நகரத்தில் வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லி நகரத்தின் ஆகக்கொடிய ஏழைகளாக பசியோடு கிராமப்புற மக்களை வாடவிட்டு இருக்கிறோம். நிம்மதியாக இருந்தோம் என்று தங்களவில் வாழ்ந்த மக்களை வறுமையில் இருக்கிறோம் என்று மேலும் மேலும் தேவைகளை ஏற்படுத்தும் நுகர்வு சூழலில் உணரவைத்து உள்ளோம். பழங்குடியின மக்கள்,கிராமப்புற மக்களின் வறுமையை நாம் மாற்றிப்பொருள் கொள்ள வைத்து அவர்களை நம்மோடு இணைத்து வருகிறோம். கூட்டு வாழ்க்கையை காணடித்து நகர்கிறோம்

கிராமங்களை துடைத்துக்கொண்டே நகர்கிறது நவீனத்துவம். உலகமயமாக்கல் மற்றும் வளர்ச்சி சிறுகுழுக்கள்  மற்றும் பழங்குடியினரை தின்று கொண்டே இருக்கிறது. மிக குறுகிய பகுதியில் இயங்கும் கவனமற்ற குழுக்களை அது செரிதுக்கொண்டு நகரும். என்றாலும் உலகமயமாக்கல் வந்த பிறகு அரசின் வலிமை குறைந்திருப்பது வரவேற்க வேண்டியது. மக்கள் நல அரசுகளும் இதனால் காணாமல் போகின்றன என்பது கவலைக்குரிய அம்சம்.  

 

காந்தி அரசியல் என்கிற சேரியில் விருப்பப்பட்டு வாழ்ந்தபடியால் அவர் சிறந்த காந்தியவதியாக ஆகாமல் ஒரு தேர்ந்த அரசியல் ஆளுமையாகவே திகழ்ந்தார். காந்தி இங்கிலாந்தில் இருக்கிற பொழுது மார்க்சியவாதிகள்,சவர்க்காரின் வன்முறையை ஆதரிக்கும் அமைப்பு ஆகியவற்றை எல்லாம் பார்த்தபின்பு இறுதியில் டால்ஸ்டாய் பக்கம் திரும்பினார். அதுவே அவரை நவீனத்துவத்தின் மிக முக்கிய பண்பான வன்முறையை கைவிட செய்தது.

மேற்கை தொடர்ந்து பாசிசத்தை தந்தது என்றும் அமெரிக்காவை கொலைகார தேசம் என்கிற நாம் அங்கே இருந்து தோரோ,டால்ஸ்டாய்,ப்ளேக்,வால்ட் விட்மன்,மார்டின் லூதர் கிங் ஆகியோர் தோன்றினார்கள் என்பதையும் அமெரிக்கா தனிநபர் ஜனநாயகம் என்பதை தன் மூச்சாக கொண்டிருக்கிறது என்பதையும் இணைத்தே பேசவேண்டும். இந்த உரையாடல் நிகழாமல் இறுகியவாறே இருப்பது பயன்தராது.

இப்படிப்பட்ட ஒரு உரையாடலுக்கு இந்த நூல் வழிவகுத்திருக்கிறது. அவசியம் வாசிக்க வேண்டிய பெரும்பாலும் எளிய,ஆனால்,ஆழமான நூல்

விலை : 395

பக்கங்கள் : 148  

    

 

நேரு இருக்காரே மச்சி !-நேருவைப்பற்றி ஐந்து கறபிதங்கள்


நேருவைப்பற்றிய ஐந்து கற்பிதங்கள் :
கற்பிதம் ஒன்று : நேரு வாரிசு அரசியலை ஆரம்பித்து வைத்தார் :

இந்த வாதத்துக்கு நேருவின் மகள் மற்றும் பேரன் இந்தியாவின் பிரதமராக இருந்துள்ளார்கள் என்பதும்,சோனியா காந்தி அப்பதவியை நோக்கி நகர்ந்தார் என்பதும்,அவரின் கொள்ளுப்பேரன் ராகுல் காந்தி கட்சிக்குள் சேர்ந்த பின்னர் அவரே அடுத்த வாரிசாக இருப்பார் என்று தெரிவதும் ஆதாரமாக இருக்கிறது. 

உண்மையில் நேருவுக்கும்,இந்த வாரிசு அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்கு தன்னுடைய மகள் இந்தியாவின் பிரதமர் ஆவார் என்று எந்த எண்ணமும்,ஆசையும் இல்லை என்பதே உண்மை. திருமதி.இந்திரா காந்தி அவர்கள் தான் இந்திய தேசிய காங்கிரசை குடும்ப தொழிலாக மாற்றினார். அவரே தன்னுடைய மகன் சஞ்சய் மற்றும் அவரின் மறைவுக்கு பின்னர் அவரின் சகோதரர் ராஜீவ் ஆகியோரை அரசியலுக்கு கொண்டு வந்தார். 

ஒவ்வொரு முறையும் தனக்கு பிறகு தன்னுடைய மகனே ஆட்சி மற்றும் கட்சி தலைமைப்பொறுப்புக்கு வருவார் என்று தெளிவுப்படுத்தப்பட்டது. ஆகவே நேரு-காந்தி பரம்பரையை உண்மையில் இந்திரா காந்தி பரம்பரை என்றே சொல்லவேண்டும். 

கற்பிதம் 2 : நேரு காந்தியின் வாரிசாக தகுதியற்றவர். அவர் உண்மையில் தன்னுடைய தலைவருக்கு துரோகம் செய்து விட்டார். அவரின் தலைவர் அவரை தேர்வு செய்து பெருந்தவறு செய்துவிட்டார் :

இந்த கற்பிதத்தை ராஜ்மோகன் காந்தி தன்னுடைய The Good Boatman புத்தகத்தில் ஆதாரங்களோடு கச்சிதமாக உடைத்திருக்கிறார். அந்த நூலில் பல்வேறு மாற்றுகளில் இருந்து காந்தி நேருவை தேர்வு செய்ய காரணம் அவர் தான் காந்தியின் பன்முகத்தன்மை கொண்ட எல்லாரையும் இணைத்துக்கொண்டு இயங்கும் இந்தியா என்கிற கருத்தாக்கத்தை பிரதிபலித்தார். அவருக்கு மாற்றாக கருதப்பட்ட-படேல்,ராஜாஜி,ஆசாத்,கிருபாளினி,ராஜேந்திர பிரசாத் ஆகியோர் இதற்கு மாறாக வெவ்வேறு பிரிவுகளின் நலன்கள் மற்றும் சார்பு கொண்டவர்களாக ஓரளவுக்கேனும் இருந்தார்கள். நேரு மட்டுமே முஸ்லீகள் நம்பக்கூடிய இந்துவாக, தெற்கில் மதிக்கக்கூடிய உத்திர பிரதேச வாலாவாக,பெண்கள் நேசிக்கும் ஆணாக இருந்தார். காந்தியைப் போல ஒட்டு மொத்த இந்தியாவுக்குமான தலைவராக அவர் இருந்தார். 

கற்பிதம் 3 : நேரு மற்றும் படேல் எதிரிகள் மற்றும் எதிரெதிராகவே இயங்கினார்கள் :

‘வலிமை’யான இந்தியாவுக்காக தொடர்ந்து வாதாடும் ஆட்கள் இந்த வாதத்தை தொடர்ந்து விளம்பரப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். நேரு பாகிஸ்தான்,சீனா மற்றும் சிறுபான்மையினரிடம் மென்மையாக நடந்து கொண்டார் என்றும் கூடவே படேல் ஒரு வேளை இந்தியாவின் பிரதமர் ஆகியிருந்தால் அவர் இவரை விட சிறப்பான பிரதமராக இருந்திருப்பார் என்றும் அவர்கள் இணைத்தே பேசுவார்கள். 

உண்மையில்,நேரு மற்றும் படேல் ஒரு குழுவாக அற்புதமாக இணைந்து இயங்கினார்கள். இணைந்த மற்றும் வலிமை மிகுந்த இந்தியாவை விடுதலைக்கு பின்னான உருவாக்க காலத்தில் கட்டமைத்த இணை அவர்கள். அவர்கள் பொறுமை மற்றும் கருத்தியல் ரீதியாக மாறுபட்டார்கள் என்பது உண்மையே. ஆனாலும்,இந்த வேறுபாடுகளை நகர்த்தியும்,களைந்தும் அவர்கள் தங்களின் பொதுவான நோக்கமான சுதந்திரமான,ஒற்றுமையான ,மதச்சார்பற்ற,ஜனநாயக இந்தியாவுக்காக அர்ப்பணித்து இயங்கினார்கள். படேலை விட நேரு சிறப்பாக இயங்கக்கூடிய சில விஷயங்கள் இருந்தன -மக்களிடம் நெருங்கிப்பழகுவது,உலகோடு ஒப்பிட்டுக்கொள்வது,ஆபத்தான சூழலில் இருப்பதாக உணர்ந்த குழுக்களுக்கு (இஸ்லாமியர்கள்,பழங்குடியினர் மற்றும் தலித்துகள் )மற்ற இந்தியர்களை போல சம உரிமைகளை அவர்களும் பெறுவார்கள் என்பதை உறுதி செய்வது. நேருவை விட சிறப்பாக படேல் இயங்கக்கூடிய விஷயங்களும் இருந்தன – சுதேச சமஸ்தான ஆட்சியாளர்களை எதிர்கொள்வது,காங்கிரஸ் கட்சியை வளர்த்தல்,சட்ட உருவாக்க சபையில் எதிர்ப்பாளர்களையும் இணைத்துக்கொண்டு முன்னகர்வது. இருவருக்கும் இன்னொருவரின் திறமைகள் புரிந்திருந்தன ; அதை தாங்கள் கடக்கவோ,குறுக்கிடவோ இருவரும் விரும்பவில்லை. இப்படித்தான் பிரிவினையின் இடிபாடுகளில் இருந்து வலிமையான ஒரு புதிய தேசத்தை அவர்கள் கட்டமைத்தார்கள்

இந்த கற்பிதங்களுக்கு நேருவின் வரிகளிலேயே மிகச்சிறந்த விடை கிடைக்கிறது . காந்தியின் மறைவுக்கு பிறகு நேரு படேலுக்கு இப்படி கடிதம் எழுதினார்,”நம்முடைய பழைய முரண்பாடுகள் இன்றோடு முக்கியத்துவம் இழக்கின்றன. இந்த கணத்தில் நாம் அனைவரும் நெருக்கமாக,கூட்டுறவோடு நம்மால் முடிகிற அளவுக்கு இணைந்து பணியாற்றுவது அதி அவசியமாகிறது.” இந்த வருடங்களில் எல்லாம் தாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியதையும் நினைவு கூர்ந்த நேரு ,’உங்கள் மீதான அன்பு மற்றும் மரியாதை இந்த காலங்களில் வளர்ந்திருக்கிறது. எந்த நிகழ்வும் அண்ட அன்பையும்,மரியாதையையும் குறைக்க முடியாது…என்றாலும்,இந்த சிக்கல் மிகுந்த பாபுஜியின் மரண கணத்தில் நாம் மற்றும் நம்முடைய சகாக்கள் இணைந்து பணியாற்றுவது நம்முடைய கடமை என்று நான் சொல்ல விரும்புகிறேன்.”

படேல் நேருவின் கடிதத்துக்கு பதில் எழுதும் பொழுது “தங்களின் கடிதத்தின் அன்பு மற்றும் கனிவால் மிகவும் நெகிழ்ந்தும்,மகிழ்ந்தும் போனேன்” என்று சொல்லிவிட்டு ,”நாம் இருவரும் வாழ்நாள் முழுக்க ஒரு பொது குறிக்கோளுக்காக இணைந்து இயங்கும் காம்ரேட்களாக இருக்கிறோம். நம் தேச நலன் மீதான அளவுகடந்த அக்கறை,இருவரும் கொண்டுள்ள அன்பு மற்றும் மரியாதை நம்முடைய பார்வை மற்றும் வேறுபாடுகளை கடந்து நம்மை இணைத்தே வைத்திருக்கிறது. ” மேலும் “காந்தியின் மரணம் நாமிருவரும் எப்படி இணைந்து பலவற்றை சாதித்துள்ளோம் என்பதையும்,இந்த நாடே சோகம் சூழ்ந்திருக்கும் தருணத்தில் மக்களின் நலனுக்காக இன்னமும் இணைந்து பணியாற்றுவதன் அவசியத்தை மீண்டும் புதிதாக உணரவைக்கும் விழித்தெழுதலாக இருக்கிறது !” என்று குறிப்பிட்டார்.- வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா 

கற்பிதம் நான்கு : நேரு ஒரு சர்வாதிகாரி :

நேருவுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்பதை விடவும் தனக்கு பின் தன்னுடைய வாரிசாக ஒருவரை நேரு அறிவிக்கவில்லை என்பதே இதற்கு வலு சேர்க்கிறது.

நேரு தன்னுடன் இருந்த கட்சி மற்றும் அரசாங்க சகாக்கள் முன்னர் மேலானவராக தோற்றம் தந்திருப்பார் உண்மையே. அவர்கள் அவரின் காஸ்மோபாலிடன் பார்வையையோ,கலை,இசை,இலக்கியம்,அறிவியல் மீதான ஆர்வத்தையோ கொண்டிருக்கவில்லை. ஆனால்,நேருவை விட இந்தியாவின் ஜனநாயகத்தை காக்கும் அமைப்புகள் மற்றும் பண்புகளை யாரும் வளர்த்தெடுக்கவில்லை. அவரே வயது வந்த அனைவர்க்கும் வாக்குரிமைக்காக வாதாடினார்,ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்கட்சிகளை வரவேற்றார் , அதிகார வர்க்கம் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தில் அவர் தலையிட்டதே இல்லை. வின்சென்ட் சீன் இப்படி ஒரு முறை குறிப்பிட்டார் : “காந்திக்கும்,நேருவுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால் காந்தியடிகள் தான் ஒத்துப்போகாத பெரும்பான்மை கருத்துக்கு இசைவதை காட்டிலும் ஓய்வெடுப்பது,உண்ணாவிரதம் இருப்பது,பிரார்த்தனை செய்வது,தொழுநோயாளிகளுக்கு சேவை செய்வதும்,குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவது என்று இயங்க போய்விடுவார். நேரு அப்படியில்லாமல் தன்னுடைய கட்சி மற்றும் தேசம் பெரும்பானமையாக ஒரு கருத்து கொண்டிருக்கிற பொழுது அதோடு ஒத்துப்போகா விட்டாலும் அதை மதித்து ஏற்றுக்கொண்டார். ஆகவே நேருவின் கருத்துக்கு மாற்றாக காங்கிரஸ் ஆண்ட மாநில முதல்வர்கள் எப்பொழுதும் கட்சியின் அம்மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மொழிவாரி மாநிலங்களை முதலில் அவர் எதிர்த்தாலும் நாடும்,கட்சியும் அது தேவை என்றதும் ஏற்றுக்கொண்டு அப்படியே செயல்பட்டார். 

நேரு தனக்கு பின் ஒரு வாரிசை நியமிக்காமல் விலகியதற்கு காரணம் அதை மக்களும்,அவர்களின் பிரதிநிதிகளும் தேர்வு செய்யட்டும் என்று எண்ணியதே காரணம். நேருவை வாழ்நாள் முழுக்க தீவிரமாக விமர்சித்த D.F.கரக்கா இப்படி அவரின் உறுதியை புகழ்ந்தார் ,”நேரு தன்னுடைய வாரிசை பற்றி எந்த குறிப்பிடுதலையும் செய்யாதது மெச்சத்தக்கது. நேரு தனக்கு பின் வருகிறவர்களுக்கான பணி அது என்பதில் உறுதியாக இருந்தார். அவர் அதைப்பற்றி கவலைப்படவே இல்லை.”

கற்பிதம் 5 :

நேரு மையப்படுத்தப்பட்ட ஸ்டாலினிஸ்ட் பாணியிலான பொருளாதார வளர்ச்சி மாதிரியை கொண்டு வந்து நம்மை பல ஆண்டுகள் வளர்ச்சியில் பின்னோக்கி இருக்க செய்துவிட்டார் 

பொருளாதரத்தை வேகமாக மற்றும் பெரிய அளவில் திறந்துவிட வேண்டும் என்று எண்ணுவோர் இந்த வாதத்தை வலிமையாக முன்வைக்கிறார்கள். உண்மையில் இறக்குமதிக்கு மாற்றான பொருளாதார மாதிரியை கொண்டு வருவதில் விடுதலைக்கு பின்னர் கருத்து ஒற்றுமை இருந்தது என்பதே உண்மை. 

ரஷ்யா மட்டுமல்லாமல் ஜெர்மனி,ஜப்பான் ஆகிய தேசங்களும் எடுத்துக்காட்டுகளாக கொள்ளப்பட்டன. காலனியாதிக்கம் இந்தியர்களை அதிகமான மற்றும் நீளும் வெளிநாட்டு முதலீட்டின் மீது பயத்தை உண்டு செய்தது. மேலும் இந்திய தொழில் துறையே அரசின் ஆதரவு மற்றும் மானியத்தை கோரியது. 1944 இன் பம்பாய் திட்டத்தில் இந்தியாவின் முக்கிய முதலாளிகள் அனைவரும் கையெழுத்திட்டு இருந்தார்கள். அதில் ஆற்றல்,நீர்,போக்குவரத்து மற்றும் சுரங்கங்கள் என்று எல்லா முக்கிய துறைகளிலும் அரசின் குறிக்கீட்டையும் அதன் மூலமாக அவற்றை வளர்ப்பதையும் செய்ய சொல்லி கேட்டுக்கொண்டார்கள். தங்களிடம் அப்படி செய்ய போதுமான நிதியில்லாததால் அதை செய்வது அரசின் கடமை என்று அவர்கள் நினைத்தார்கள். 

இது சந்தைமயப்படுத்தப்பட்ட வர்த்தகம் மற்றும் இறுகிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு காலங்களுக்கு இடையயேயான போட்டி மற்றும் அவற்றின் நன்மைகள்,தீமைகள் பற்றிய வாதமில்லை. ஏன் நாம் இப்படியொரு தொழில்மய கொள்கையை தேர்ந்தெடுத்தோம் என்பதற்கான பதில் மட்டுமே இது : தொழிலதிபர்கள்,விஞ்ஞானிகள்,பொருளாதார வல்லுனர்கள்,அரசியல்வாதிகள் பல்வேறு தத்துவங்கள் மற்றும் வேறுபாடுகளை கடந்து நேருவோடு இந்த கருத்தில் பெரிதும் ஒத்துப்போனார்கள். அல்லது நேரு அவர்களோடு ஒத்துப்போனார் என்றும் சொல்லலாம். 

நேருவின் காலத்தில் அவரைப்போல நேசிக்கப்பட்டவரும் இல்லை ; அவரின் காலத்திற்கு பிறகு அவரைப்போல வில்லனாக்கப்பட்டவரும் வேறெவரும் இல்லை. வில்லனாக நேருவை காண்பிக்கும் போக்கு இப்படியான பொய்யான கற்பிதங்களால் தொடர்ந்து நீடிக்கிறது. –Ramachandra Guha

மூலம் : http://www.hindu.com/mag/2004/05/23/stories/2004052300240300.htm

விதியோடு ஒரு ஒப்பந்தம்-விடுதலை பெற்ற அன்று நேரு பேசிய உரை !


இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த நள்ளிரவில் நேரு அவர்கள் ஆற்றிய எழுச்சிமிகு உரையின் தமிழாக்கம்:

வெகுகாலத்துக்கு முன்னர் நாம் விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம் . நம்முடைய சபதத்தை முழுமையாக இல்லா விட்டாலும் பெருமளவில் மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது. நல்லிரவு துவங்கும் தருணத்தில் உலகமே உறங்கிக்கொண்டு இருக்கிற பொழுது,இந்தியா உயிர் மற்றும் விடுதலையோடு விழிப்பு கொள்கிறது ! வரலாற்றில் அரிதாக வரும் பழையதில் இருந்து புதியதை நோக்கி அடியெடுத்து வைக்கும் அந்த தருணம் வந்துள்ளது ;தேசத்தின் ஆன்மாவை வெகுகாலத்துக்கு ஒடுக்கி வைத்த காலம் முடிந்து ஆன்மா ஆனந்தக்குரல் எழுப்பும் 

இந்த உன்னத கணத்தில் இந்த தேசத்தின் மற்றும் தேசமக்களின் சேவைக்கும் மனித குலத்தின் நன்மைக்காகவும் சேவை செய்ய உறுதி பூணுவது சரியாக இருக்கும். வரலாற்றின் விடியலில் இந்தியா தன்னுடைய முடிவில்லாத தேடலை துவங்கி இருக்கிறது. அந்த அன்னையின் சுவடுகளில்லா நூற்றாண்டுகளின் வழியான முடிவில்லா தேடலில் வெற்றியும் தோல்வியும் கலந்தே வந்திருக்கிறது, என்றாலும்,அவளுக்கு வலிமை தந்த அடிப்படைகளை எப்பொழுதும் இந்தியா மறந்தது இல்லை ; தன்னுடைய தேடலை தொலைத்ததும் இல்லை. இந்த நாளில் துரதிர்ஷ்ட காலமொன்றை முடித்துக்கொண்டு மீண்டும் இந்தியா தன்னை கண்டடைகிறது. 

நாம் கொண்டாடும் இந்த சாதனை நாம் எதிர்கொள்ள இருக்கும் மிகப்பெரிய வெற்றிகள் மற்றும் சாதனைகளுக்கான ஒரு படி,ஒரு துவக்கம் அல்லது ஒரு வாய்ப்பு ! நாம் இந்த தருணத்தை பற்றிக்கொள்ளவும்,வருங்காலத்தின் சவால்களை எதிர்கொள்ளவும் நெஞ்சுரம் கொண்டிருக்கிறோமா ? 
விடுதலையும்,அதிகாரமும் பொறுப்பை கொண்டு வருகின்றன. இந்த சபை அதற்கான பொறுப்பை கொண்டிருக்கிறது. இந்த தேசத்தின் இறையான்மையை இந்த மக்களின் சார்பாக காக்க வேண்டிய பொறுப்பை அதை ஏற்றிருக்கிறது. உழைப்பின் வலிகளையும்,இதயம் முழுக்க நிரம்பி இருக்கும் சோகத்தின் நினைவுகளையும் சுமந்தே நாம் இந்த விடுதலையின் பிறப்பை அடைந்து இருக்கிறோம். சில துன்பங்கள் இன்னமும் தொடகிறது. கடந்த காலம் முடிந்துவிட்டது,நம் முன் எதிர்காலம் நமக்காக காத்திருக்கிறது

வருங்காலத்தில் சோம்பியிருக்கவோ,சும்மாயிருக்கவோ கூடாது. முடிவில்லா தேடலின் மூலம் நம்முடைய நிலைப்பாடுகளை பூர்த்தி செய்து கொள்ள முனைய வேண்டும். இந்தியாவுக்கான சேவை என்பது அல்லலுறும் பல கோடி மக்களுக்கான சேவை என்பதையே குறிக்கிறது. அது வறுமை,அறியாமை,நோய்கள்,வாய்ப்புகளின் சமமின்மை ஆகியவற்றை நீக்குதலையே குறிக்கிறது. 
நம் காலத்தின் உயர்ந்த மனிதர்களின் நோக்கம் எல்லா மக்களின் கண்களின் கண்ணீரை துடைத்தலே ஆகும். அது நம் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்கலாம். ஆனால்,கண்ணீரும் துன்புறுதலும் இருக்கிற வரை நம்முடைய பணி ஓயாது ! 
.

ஆகவே நாம் உழைக்க வேண்டும்,தீவிரமாக நம்முடைய கனவுகளை நிஜமாக்க உழைக்க வேண்டும் ! அந்த கனவுகள் இந்தியாவுக்கானவை. அவை உலகுக்கும்,எல்லா மக்களுக்கும் ஆனவை. 
சமாதானம் பிரிக்க முடியாதது என்று சொல்வார்கள் ; விடுதலையும் அப்படிப்பட்டதே ! வளமும்,பேரிடரும் கலந்தே உலகம் அமையும். எவற்றையும் தனியே பிரித்து விடமுடியாது ! 
எந்த இந்திய மக்களின் பிரதிநிதிகளோ நாம் அவர்களிடம் நம்முடன் நம்பிக்கை மற்றும் பிடிப்பு கொண்டு இந்த பெரும் சாகசத்தில் பங்குகொள்ள அழைக்கிறோம். சிறுமையான,தாழ்த்தும் விமர்சனத்துக்கான காலமில்லை இது. ஒருவரை இன்னொருவர் ஏசிக்கொள்ளவும்,தீய எண்ணங்கள் கொண்டிருக்கவும் இது உகந்த தருணமில்லை. நம் பிள்ளைகள் ஆனந்தமாக வாழும் அற்புத இல்லமாக இந்த விடுதலை இந்தியாவை கட்டமைக்க வேண்டும் 
விதியோடு ஒப்பந்தம் செய்து கொண்ட அமந்த நாள் வந்துவிட்டது. இந்தியா நிமிர்ந்து நிற்கிறது ! நீண்ட உறக்கம் மற்றும் போராட்டத்துக்கு பின்னர் இந்த தேசம் உற்சாகம் மற்றும் விடுதலை பெற்று எழுந்து நிற்கிறது ! நமக்கான திருப்புமுனை கொண்ட வரலாறு இன்று துவங்குகிறது ! இந்த வரலாற்றில் நாம் செயல்பட்டு,வாழ்ந்து அதை அற்புதமாக படைப்போம். 

இது இந்தியா,ஆசியா மற்றும் உலகத்துக்கு அதிமுக்கியமான தருணம்., ஒரு புதிய நட்சத்திரம்,விடுதலையின் நட்சத்திரம் எழுகிறது ! ஒரு புதிய நம்பிக்கை,தொலைநோக்கு இன்று நிஜமாகிறது ! இந்த நட்சத்திரம் என்றைக்கும் அஸ்தமிக்காமல்,நம்பிக்கை துரோகம் என்றைக்கும் நிகழாமல் இருக்கட்டும் !

மேகங்கள் நம்மை சூழ்ந்து இருந்தாலும் நம்முடைய மக்கள் துன்பத்ல் உழன்றாலும்,பெருஞ்சிக்கல்கள் நம்மை சூழ்ந்திருந்தாலும் இந்த விடுதலையை நாம் கொண்டாடுகிறோம், விடுதலை பொறுப்புகள்,சுமைகள் ஆகியவற்றோடு வருகிறது. அவற்றை விடுதலை மற்றும் ஒழுக்கம் கொண்ட மக்களின் உணர்வோடு எதிர்கொள்ள வேண்டும். 

இந்த நாளில் விடுதலையின் கணத்தில் நம்முடைய முதன்மையான சிந்தனை இந்த விடுதலையின் சிற்பி நம்முடைய தேசப்பிதாவை நோக்கி போகிறது. அவரே இந்தியாவின் ஆன்மாவின் உருவமாக விடுதலையின் விளக்கை ஏற்றி நம்மை சூழ்ந்திருந்த இருளை அகற்றினார் 

அவரின் மதிப்பட்ட்ற பின்பற்றுபவர்களாக நாம் இருந்திருக்கிறோம். அவரின் செய்தியை கறைப்படுத்தி இருக்கிறோம். ஆனாலும்,நம்முடைய வருங்கால சந்ததிகளின் மனதில் அந்த சிந்தனைகளை பதிக்க வேண்டும், இந்த தேசத்தின் பெருமை மிகுந்த மகனின் நம்பிக்கைமாற்றல் தைரியம் மற்றும் தன்னடக்கம் ஆகியவற்றை அவர்களுக்கு சொல்லவேண்டும்,. அந்த நம்பிக்கை விளக்கு அணிய நாம் விட மாட்டோம். எத்தகைய காற்று மற்றும் பெரும்புயல் அடித்தாலும் அந்த விளக்கை அணைய விட மாட்டோம் tempest.

அடுத்த சிந்தனை நம்முடைய முகம் தெரியா தன்னார்வலர்கள் மற்றும் விடுதலையின் வீரர்கள் பற்றியதாக இருக்கவேண்டும்., அவர்கள் எந்த புகழ்,பரிசு ஆகியன இல்லாமல் இந்த தேசத்துக்காக தங்களின் இறப்பு வரை சேவை செய்திருக்கிறார்கள் 

நம்மோடு இப்பொழுது இல்லாத,நம்மிடம் இருந்து அரசியல் எல்லைகளால் பிரிக்கப்பட்ட நம்முடன் மகிழ்ச்சியோடு விடுதலையை கொண்டாட முடியாத,பகிர்ந்து கொள்ள முடியாத நம்முடையசகோதர-சகோதரிகளை நினைவு கூர்கிறோம். அவர்கள் நம்மில் ஒருவர்,நம்மோடு எது நடந்தாலும் உடனிருப்பார்கள். அவர்களின் இன்பம் மற்றும் துன்பத்தில் நாம் பங்குகொள்வோம். 

நம் முன் எதிர்காலம் இருக்கிறது. அப்படியே உலர்ந்து போவோமா ? அல்லது நிலைஒது நிற்போமா ? இந்தியாவின் சாதாரண மனிதனுக்கு,உழைப்பாளிகளுக்கு,விவசாய தொழிலாளிகளுக்கு வறுமை,அறியாமை,நோய்கள் ஆகியவற்றில் இருந்து விடுதலை கொடுத்து அவர்களுக்கு விடுதலை மற்றும் வாய்ப்புகளை உருவாக்கும் சமூக,பொருளாதார,அரசியல் அமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் எல்லாருக்கும் நீதி மற்றும் வாழ்வின் முழுமையை உறுதி செய்வோம். நம் முன்னர் கடும் உழைப்பு காத்திருக்கிறது. நாம் நம்முடைய உறுதியை மீட்டெடுக்கும் வரை நம்முடைய மக்களுக்கான விதியை பெறும்வரை நம் யாருக்கும் ஓய்வில்லை. 

நாம் இந்த பெருநாட்டின் குடிமகன்கள் தைரியம் மிகுந்த முன்னெடுப்பின் விளிம்பில் இருக்கிறோம். அதன் உயர்ந்த தருணத்துக்கு ஏற்ப நாம் வாழவேண்டும். நாம் எந்த மதத்தை சார்ந்திருந்தாலும் நாம் இந்த தேசத்தின் சம உரிமை,சலுகைள் மற்றும் பொறுப்புகள் மிகுந்த பிள்ளைகளே ! நாம் மதவாதம் மற்றும் குறுகிய மனோபாவம் ஆகியன் கொண்டிருப்பதை ஊக்குவிக்க முடியாது. 

உலகின் தேசங்கள் மற்றும் மக்களுக்கு நாம் அமைதி,விடுதலை மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை காக்க ஒத்துழைக்கும் வாழ்த்து மற்றும் உறுதியை அனுப்பி வைக்கிறோம். இந்தியா எனும் வெகுவாக நேசிக்கப்படும்,பண்டைய,புனித,எப்பொழுதும் இளமையான அன்னை மண்ணுக்கு மரியாதை மிகுந்த மரியாதையை செலுத்துகிறோம். நாம் அவளின் சேவைக்காக நம்மை புதிதாக ஒப்புவித்து கொள்கிறோம். ஜெய் ஹிந்த் !

நாடு போற்றும் கோகலே


மரியா மாண்டிசோரி : குழந்தைகள் பள்ளிக்கு போவதற்கு ஏன் எக்கச்சக்கமாக பயப்படுகிறார்கள் என்று
நாம் யோசித்து இருக்கிறோமா ? பள்ளிகள் குழந்தைகளை பயமுறுத்துகிற விஷயமாகவே பெரும்பாலும் இருக்கிறது. ஆனால்,கல்விக்கூடங்கள் குழந்தைகள்
ஆனந்தமாக வந்து சேர்ந்து கற்றுத்தேர்கிற இடமாக மாற்ற முடியும் என்று நிரூபித்தவர் மரியா மாண்டிசோரி. மருத்துவப்படிப்பு படிக்கப்போனார் அவர்.

அங்கே அவரைப்பெண் என்பதால் இழிவாக நடத்தினார்கள். பாடங்களை சொல்லித்தரக்கூட ஆசிரியர்கள் மறுத்தார்கள். விலங்குகளை அறுக்கிற பொழுது தனியாக ஒரு அறையில் விட்டு அறுக்க வைத்தார்கள். மனம் வெறுத்தார் அவர்.
இருந்தாலும் மருதுவப்பட்டம் பெற்று வெளியே வந்தார். உளவியலில் தன்னுடைய ஆர்வத்தை செலுத்தினார்.

கல்வி சார்ந்த இத்தாலியில் ஐம்பது ஏழைப்பிள்ளைகளுக்கு கண்காணிப்பாளராக அவர் ஆனார்.. பிள்ளைகளை மிரட்டுவதோ,அடிப்பதோ பிடிக்காத அன்பான நபர் அவர்.
அங்கே இருந்த பிள்ளைகளின் பொழுதை எப்படி உற்சாகம் நிறைந்ததாக ஆக்குவது என்று அவர் யோசித்தார்.

நோட்டு புத்தகங்களுக்கு பதில் பொம்மைகளை அவர்களின் கையில் கொடுத்தார். எழுத்துக்களை சொல்லித்தருவதற்கு முன்னர் அவற்றை உணர்கிற வகையில்
பொருட்களை காட்டினார். வீட்டில் குழந்தைகள் வேலையே செய்ய விடக்கூடாது என்று இருந்த பொழுது எளிய செயல்களை செய்ய வைத்து பிள்ளைகளை சுறுசுறுப்பாக
வைத்துக்கொண்டார். மாணவர்கள் ஆசிரியர்களை கவனிக்க வைக்க நாம் முயலக்கூடாது,ஆசிரியர் மாணவரை கவனித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று
சொன்னவர் அப்படியே பிள்ளைகளை நடத்தினார்.

வண்ண அட்டைகள்,ஒலி எழுப்பும் கருவிகள்,ஓவியங்கள்,வண்ணத்தாள்கள்,புட்டிகள்
என்று குழந்தைகளின் கற்றலை வண்ணமயமானதாக இந்த வகுப்புகள் மாற்றின. அவரின் கல்விமுறையில் படித்து சாதித்தவர்கள் தான் கூகுள் மற்றும்
அமேசான் நிறுவனர்கள் ஆகியோர் இவரின் கல்விமுறையில் படித்தவர்களே. இன்று உலகம் முழுக்க இருபத்தி இரண்டாயிரம் பள்ளிகள்,நூற்றி பத்து நாடுகள் என்று விரிந்திருக்கும் அவரின் கனவு குழந்தைகளுக்கானது