மகத்தான மகத் போராட்ட வரலாறு – கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா


மகத் சத்தியாகிரகம் அம்பேத்கரால் மார்ச் 20 அன்று 1927-ல் நிகழ்த்தப்பட்டது. அதைப்பற்றி பேராசிரியர் கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா எழுதிய ‘அம்பேத்கரும், சாதி ஒழிப்பும்’ நூலில் காணப்படும் பக்கங்கள் உங்கள் வாசிப்புக்காக:

மார்ச் 1927-ல் ஒரு மாநாட்டை அம்பேத்கர் மகத்தில் கூட்டினார். இந்த மாநாட்டிற்குத் தலித் அல்லாத தலைவர்கள் ஆதரவு நல்கினார்கள். காயஸ்தரான எஸ்.திப்னிஸ், பூனாவில் பிராமணரல்லதோர் இயக்கத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவரும், அம்பேத்கர் வழக்கேற்று நடத்தியவருமான கே.எம்.ஜெத்தே ஆகியோர் இந்த மாநாட்டுக்கு ஆதரவு தந்தார்கள். மகத்தில் அம்பேத்கர் ஆற்றிய தலைமை உரை சமஸ்கிருதமயமாக்கலின் இலட்சியங்களை நோக்கிய பயணமாக இருந்தது:

‘நாம் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் முன்னேற்றத்தை எட்ட மூன்று கட்ட சுத்திகரிப்பிற்கு நம்மை நாமே ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய நடத்தையின் பொதுவான தொனியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், நம்முடைய உச்சரிப்பை செம்மைப்படுத்த வேண்டும், நம்முடைய சிந்தனைகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆகவே, இந்தக் கணத்தில் இருந்து நீங்கள் அழுகிப்போன இறைச்சியை உண்பதை துறப்பீர்கள் என்று உறுதி பூணுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’

இதற்குப் பிறகு அம்பேத்கர் ஒரு ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கினார். அவர் பேசிய மேடையில் துவங்கிய அந்த ஊர்வலம், சவுதார் குளத்தில் முடிந்தது. தண்ணீர் மூலமான அந்தக் கிணறு எழுத்தளவில் தீண்டப்படாத மக்களுக்குத் திறந்திருந்தது. ஆனால், அந்தக் குளத்தைப் பயன்படுத்த தீண்டப்படாத மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காந்தி தண்டி யாத்திரையின் போது உப்பை கையில் எடுத்ததைப் போல, சாதி தடையை உடைத்ததன் அடையாளமாக, கம்பீரமாக அம்பேத்கர் குளத்தில் இருந்து நீரை எடுத்து பருகினார். இந்த அத்துமீறல் தங்களை உசுப்பேற்றுகிற செயல் என்று கருதிய உள்ளூர் உயர் சாதி இந்துக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கூட்டம் நடந்த இடத்திற்குத் திரும்பிக்கொண்டு இருந்த போது தாக்கினார்கள்.

அடுத்தடுத்த நாட்கள், வாரங்களில் மகத்தின் உயர் சாதியினர் தீண்டப்படாத மக்களைச் சமூகப் புறக்கணிப்பிற்கு ஆட்படுத்தினார்கள். சமயங்களில் அவர்களை வேலையை விட்டு நீக்குவது, உழுது கொண்டிருந்த நிலத்தை விட்டு வெளியேற்றுவது ஆகிய செயல்களிலும் ஈடுபட்டார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆகஸ்ட் 4,1927 அன்று மகத் நகராட்சி மூன்றாண்டுகளுக்கு முன்னால் சவுதார் குளத்தைத் தீண்டப்படாத மக்கள் பயன்படுத்தலாம் என்கிற தன்னுடைய 1924-ம் ஆண்டு உத்தரவை திரும்பப் பெற்றுக்கொண்டது. அம்பேத்கர் இரண்டாவது கூட்டத்தைக் கூட்டினார். இதில் ஒரு புதிய வகையான போராட்டம் உருப்பெற்றது. இந்த இரண்டாவது மகத் மாநாடு டிசம்பர் 1927-ல் நடைபெற்றது. அம்பேத்கரின் பேச்சு சாதி அமைப்பை அக்குவேர், ஆணிவேராக அறுத்தெறிய அறைகூவல் விடுத்தது. அவர் பிரெஞ்சு புரட்சியின் முழக்கங்களை நினைவுகூர்ந்தார். மகத் மாநாட்டை, மூன்றாவது எஸ்டேட் பிரெஞ்சு புரட்சியை ஒட்டுமொத்தமாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்த ‘Etats Generaux de Versailles’ நிகழ்வோடு ஒப்பிட்டார்.

‘துவக்கத்திலேயே நான் உங்களுக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன். இந்தச் சவுதார் குளத்தில் இருந்து தண்ணீர் குடிக்க வேண்டாம் என்பதற்காகக் கலைந்து செல்லவில்லை. இப்போது அந்தக் குளத்திற்குள் நாங்க நுழைய விரும்புவதற்கு ஒரே காரணம் தான் உண்டு…நாங்களும் மற்றவர்களைப் போல மனிதர்கள் என்று நிரூபிக்க விரும்புகிறோம் […] இந்த மாநாட்டைக் கூட்டியதன் மூலம் இந்த மண்ணில் சமத்துவச் சகாப்தத்தைத் துவக்கி வைத்துள்ளோம். தீண்டாமையை அகற்றுவது, அனைத்து சாதியினரும் கலந்து உணவுண்ணும் சமபந்தி ஆகியவை மட்டுமே நமக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமைகளுக்கு முடிவு கட்டிவிடாது. நீதிமன்றங்கள், ராணுவம், காவல்துறை, வியாபாரம் முதலிய அனைத்து சேவைத்துறைகளும் நமக்குத் திறந்து விடப்பட வேண்டும் […] இந்து மதம் சமத்துவம், சாதிய ஒழிப்பு ஆகிய இரண்டு முக்கியக் கொள்கைகளின் மீது மறு கட்டமைப்பு செய்யப்பட வேண்டும்.’

இந்தப் பேச்சை தொடர்ந்து மனித உரிமை அறிக்கை, மனிதர்களுக்கான பிரிக்க முடியாத சமத்துவத்தை ஆதரிக்கும் தீர்மானம் ஆகியவை கைகளை உயர்த்தி வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் இன்னும் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரு தீர்மானம் இந்து சமூகத்தின் உட்பாகுபாடுகள் முற்றாக ஒழிக்கப்பட்டு ஒரே மக்கள் குழுவாக இணைய வேண்டும் என்றது. இரண்டாவது தீர்மானம் அர்ச்சகர் தொழிலை அனைத்து சாதியினருக்கும் உரியதாக ஆக்க வேண்டும் என்றது. இறுதியாக, பல்வேறு பேச்சாளர்களும் மனுஸ்மிருதியை கடுமையாகத் தாக்கினார்கள். அந்நூலின் ஒரு பிரதி மேடையின் முன்னால் இருந்து பீடத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. மனுஸ்மிருதியை ஒரு தலித் துறவி கம்பீரமாக எரித்தார்.

அடுத்த நாள், சவுதார் குளத்திற்குள் இலவச நுழைவை பெறுவதற்கான சத்தியாகிரகத்தை அம்பேத்கர் துவங்கினார். அதில் நான்காயிரம் தன்னார்வலர்கள் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்கள். சவுதார் குளம் தனியார் சொத்து என்று சொல்லி மேல்சாதி இந்துக்கள் நீதிமன்றத்தை நாடியிருந்தார்கள். ஆகவே, மாவட்ட மாஜிஸ்ட்ரேட் தீர்ப்பு வரும்வரை அமைதியாகக் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால், அம்பேத்கர் போராட்டத்தை ஒத்திவைத்து விட்டு, நீர்நிலையைச் சுற்றி ஒரு ஊர்வலத்தை நடத்தினார். இந்த அணுகுமுறை இப்படிப்பட்ட சூழல்களில் வருங்காலத்தில் அவர் பின்பற்றப்போகும் யுக்தியை ஒத்திருந்தது. அந்த யுக்தியானது பிரச்சினைகளை வீதிகளில் தீர்த்துக் கொள்வதை விட, நீதிமன்றத்திடம் அவற்றை ஒப்புக்கொடுப்பதே ஆகும். இது சட்டத்தை முழுமையாகச் சார்ந்திருப்பது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பது என்கிற அம்பேத்கரின் பாணியை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, அம்பேத்கரின் நிலைப்பாடு சரியென்று நீதிமன்றங்கள் 1937-ல் தீர்ப்பளிக்கும்.

தமிழில்: பூ.கொ.சரவணன்

நூலினை வாங்க: https://www.amazon.in/Ambedkarum-Saathi-Ozhippum-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/dp/9386737663/ref=sr_1_1?s=digital-text&ie=UTF8&qid=1553070070&sr=8-1&keywords=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

பின்னூட்டமொன்றை இடுக