அரிய சுவை தரும் அற்புதக்கதை ‘தேநீர்க் குடில்’


‘தேநீர்க் குடில்’ எனும் கவிஞர் யூமா வாசுகியின் நூல் வெகுநாள் காத்திருப்பிற்கு பின்பு வாசிக்க கிடைத்தது. இந்நூல் எழுத்தாளர் ஆரணி கே.யுவராஜன் அவர்களின் வாழ்க்கையின் தாக்கத்தில் எழுதப்பட்ட சிறார் கதை. யுவராஜன் சாரை வெகு நெருக்கமாக கண்டிருக்கிறேன். குழந்தைகள் உலகிற்கு தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்ட அன்பு மனம் மிக்கவர். ‘ஒப்புரவு’ எனும் வள்ளுவரின் சொல்லாடலுக்கு பொழிப்புரை அவரின் வாழ்க்கை என்பது துளிகூட மிகையில்லை. அவரின் பாசமிகு அம்மாவின் முகத்தை பார்க்கும் போது, மனதில் ரம்மியமும், மகிழ்ச்சியும் ஊற்றெடுக்கும்.  யுவராஜன் அண்ணனின் குழந்தைகளுக்கான படைப்புகள் அத்தனை அன்பும், கதைகளின் மழைச்சாரலையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் ஊட்டுபவை. அவரின் வாழ்வும் அத்தகையது தான்:  https://www.bbc.com/tamil/india-62246095

அவரின் குழந்தைப்பருவத்தின் தாக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் தேநீர்க்குடில் வேலிகள் அற்றது, பகட்டை விரும்பாதது, பாட்டாளிகளின் உறைவிடம். யூமா வாசுகி அவர்களின் இக்கதையில் ‘ராஜா’ எனும் சிறுவன் தான் நாயகன். அவனுக்கு நரம்புத் திரட்சிக்  குறைபாட்டினால் முகமெங்கும் சிறு, சிறு கட்டிகள். வெறுப்பும், ஒதுக்கலும்  வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாகிறது. இக்கதையின் மைய இழை அந்த வெறுப்பு சார்ந்தது அல்ல. வாழ்வின் வலிகள், மனிதர்களின் கசடுகளை வாசிப்பின் ருசியில் கடக்கிற ராஜாவின் பயணம் நம்மை அப்படியே தழுவிக்கொள்கிறது.

பள்ளியின் பிரார்த்தனை கூட்டத்தில் தலைமையாசிரியர் இப்படி சொல்கிறார். 
“… அவனை யாரும் வெறுக்காமல் புறக்கணிக்காமல் கேலி செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. தான் இப்படி இருக்கிறோமே என்று அவன் மனதில் குற்ற உணர்ச்சியோ, தாழ்வு மனப்பான்மையோ ஒருபோதும் வந்துவிடக்கூடாது. 
இந்த உலகின் மீதான அன்பையும், சக மனிதர்கள் மீதான நம்பிக்கையையும், எத்தகைய நெருக்கடியையும் எதிர்கொண்டு வெல்வதற்கான திட்டத்தையும் அவன் மனதில் நாம் உண்டாக்க வேண்டும்… அதற்காகவும் தான் சமூகம் இருக்கிறது, இந்தப்பள்ளி இருக்கிறது, நாம் இருக்கிறோம்…’ 

இது உரிமைப் பிரகடனம் மட்டுமல்ல. சமத்துவமும், உடன்பிறப்புணர்வும் பிணைத்து, அணைத்து பயணிக்க வேண்டும் என்பதற்கான அன்புக்குரல். ராஜாவின் தனிமையை போக்கும் வண்ணம் மாலதி அக்காவும், தோழன் இம்மானுவேலும், மேரியம்மாவும் அவனை அரவணைத்துக் கொள்கிறார்கள். தன்  பள்ளியைவிட்டு விட்டு மாலதியக்கா விரைவில் விடை பெறுவார் என்று ராஜா வருத்தப்படுகையில், “சரி, விடுறா, நான் இந்த வருடம் உனக்காகவே பெயிலாயிடுறேண்டா.” என்கிறாள். வெம்மைமிக்க வாழ்வின் கணங்களில் ‘உனை  நான் மறவேனே’ எனும் அந்த குளிர்ச்சி மிகுந்த குரலின் சாரல் எத்தனை ஆசிகளை விட மேலானது. 
இத்தேநீர்க்குடில் அயர்வு தரும் வாழ்வினில் நிம்மதியாக இளைப்பாறும் வண்ணம் அமைந்திருக்கிறது.

இதில் யெஸ்.பாலபாரதி அண்ணனும், அவருடைய படைப்புகளும் முதன்மையான இடத்தைப் பிடிக்கின்றன. ராஜா வாசிப்பின் வழியே மனித வாழ்க்கையின் அடுக்குகள், சிக்கல்கள், நுட்பங்கள், அதிசயங்கள், உணர்வுப் பிரவாகம் ஆகியவை புலப்படுகின்றன. அது யூமா வாசுகியின் எழுத்தில் பலவிதமான அபூர்வமான வாசனைகளை உடைய மலர்களால் ஆன பெரிய மலைப்பாம்பின் பிடியில், ராஜா விரும்பி சிக்கிக்கொண்டிருப்பதாக உணர்வதாக அமைகிறது. இந்நூல் தன்னம்பிக்கை சிம்மாசனத்தில் ராஜாவை நிறுத்துவதோடு நில்லாமல், சமூகத்தின் கூட்டு மனசாட்சியை குற்றவுணர்ச்சிக்கும், பகுப்பாய்விற்கும் வெறுப்பற்ற, மென்மையான கதைநடையில் உட்படுத்துகிறது. நோய்மையால்  தாழ்வுணர்ச்சி அடையும் குழந்தைகளை அரவணைத்துக் கொள்ளும் கரங்களை பெருக்கப்போகும் அற்புதம். தவறவிடக்கூடாத ஆக்கம்.

தன்னறம் நூல்வெளி வெளியீடு
 நன்கொடை : ரூபாய் 150
அலைபேசி: 9843870059

பின்னூட்டமொன்றை இடுக