தனிப்பட்ட நீட் வெற்றிகளை கொண்டாடாமல் விமர்சிக்கலாமா?


ஜீவித் குமார் அவர்களின் நீட் வெற்றி பெருமைக்குரியது. வாழ்த்தும், பேரன்பும். எளிய பின்னணி கொண்ட அரசுப்பள்ளி மாணவர் மருத்துவராகும் தருணம் மகிழ்ச்சிக்குரியது.

இப்போது சிலவற்றைத் தெளிவாக உரையாடுவோம். குடிமைப்பணித் தேர்வில் முதலிடத்தை பட்டியலினத்தைச் சேர்ந்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் பெறுகிற போது கொண்டாடித் தீர்ப்போம். அது நிச்சயம் கொண்டாட்டத்திற்கு உரியது. ஊக்கமும், உத்வேகமும் தருவது. ஆனால், முதல் 50 அல்லது 500 இடங்களைப் பார்த்தால் மேற்சொன்ன பிரிவுகள்/பாலினத்தைச் சேர்ந்தவர்கள் வெகு சொற்பமான இடங்களையே பிடித்திருப்பார்கள்.

ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தனிப்பட்ட நபரின் வெற்றியை இந்த சிக்கலான பின்புலத்தில் பொருத்திப்பேச வேண்டும். அந்த சமூகமே முன்னேறிவிட்டது, எதற்கு இட ஒதுக்கீடு என ஒரு தரப்பு பேசும். இன்னொரு தரப்பு முயன்றால் வெல்ல முடியும், தாழ்வு மனப்பான்மை விட்டொழியுங்கள் என உத்வேக சொற்பொழிவு ஆற்றும்.

கள உண்மை என்ன? எத்தனை அரசுப்பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம்பிடித்தார்கள்? நீட் வருகைக்கு முன்னால் இரட்டை இலக்கத்தில் இருந்தது. தற்போது ஒற்றை இலக்கத்திற்கு மாறியிருக்கிறது. இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், மேற்சொன்ன மாணவர் ஓராண்டு தனியார் மையத்தில் பயிற்சி பெற்றே வென்றிருக்கிறார். அவருக்கான பயிற்சிச் செலவை ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய வாய்ப்பு மருத்துவர் கனவுமிக்க ஏழை மாணவர்கள் அனைவருக்கும் கிடைக்குமா என்ன?

நீட் தேர்வில் வெற்றி பெறுவதும், அரசு/தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் பெறுவதும் ஒன்றல்ல. ப்ளஸ் 2 வில் வெற்றி பெற்றேன். எம்.எம்.சி.யில் இடம் பெறுவதும் ஒன்றல்ல. மேலும், ஒப்பீட்டளவிற்கு நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் தனியார் கல்லூரியில் சேருவது கடினம். நீட் வருகைக்குப் பின்னர் இன்னமும் கட்டணங்கள் எகிறியிருக்கின்றன.

நீட் வருகைக்குப் பின்னால் பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் மருத்துவக்கல்லூரிகளில் விழுந்திருக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நீட் எழுதிய, கோச்சிங் பெற்ற, ஆண் மாணவர்களே அதிகமாக வெல்கிறார்கள். அரசுப்பள்ளி மாணவர்கள் 10 பேர் கூட மருத்துவக்கல்லூரி வாசல்களை மிதிக்க முடியவில்லை. 7.5% இட ஒதுக்கீட்டை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்துக்கொண்டிருக்கிறது.

தனிப்பட்ட வெற்றிகள் பாராட்டுக்குரியவை. அது அடிப்படையான சிக்கல்கள், பிரச்சனைகள், முரண்பாடுகளில் இருந்து திசை திருப்பும் செயல்பாடாக மாறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். முன்பிருந்த நிலை கச்சிதமான ஒன்றில்லை. நீட் இன்னமும் நிலைமையை மோசமாக்கியிருக்கிறது. அதை சீர்செய்ய கொண்டாட்டங்களைத் தாண்டிய செயல்பாடு, உரையாடல் தேவை.

Dunkirk- திரையில் ஒரு போர்க்களம்


நோலனின் Dunkirk திரைப்படத்தைப் பார்த்து முடித்தேன். இரண்டாம் உலகப்போரின் ஆரம்பக் கட்டத்தில் வடக்குப் பிரான்சில் ஒரு சிறிய நிலப்பரப்பில் சிக்கிக்கொண்ட நான்கு லட்சம் பிரிட்டன் வீரர்களைப் பத்திரமாக நாடு திருப்புவது தான் கதையின் மையக்களம். ஜெர்மானிய படைகள் ஜலசமாதி கட்ட முயல்கையில் கடற்கரை, வானம், கடல் என்று மூன்று இடங்களில் நடக்கும் வாழ்வுக்கும், மரணத்துக்கும் இடையேயான போராட்டம் திரையில் விரிகிறது.

லகப்போரின் படபடப்பை ஒரு களத்தின் மூலமாக நோலன் கடத்தியிருக்கிறார். திரைப்படத்தில் வசனங்கள் அரிதாகத்தான் இடம் பெறுகின்றன. டன்க்ரிக் தெருவில் துப்பாக்கி குண்டுகளில் இருந்து தப்பித்து விட ஓடிவரும் டாமி, இறந்து போன வீரரின் பிணத்தைப் புதைத்துக் கொண்டிருக்கும் கிப்ஸன் ஆகியோருடன் கடற்கரையில் இருந்து பிரிட்டன் திரும்பும் வலிமிகுந்த பயணம் துவங்குகிறது. கப்பல்கள் ஜெர்மானிய வான்படையால், நீர்மூழ்கி கப்பலால் மூழ்கடிக்கப்படுகின்றன.

Image may contain: 1 person, text
‘ஒரு ஸ்ட்ரெச்சரில் காயப்பட்ட வீரர் ஒருவரை தாங்கிக்கொண்டு இருக்கும் இடத்தில் ஏழு வீரர்கள் நிற்கலாம்’ என்கிற வரிக்குப் பின்னால் அத்தனை வேதனை தொனிக்கிறது. ‘கைகோர்த்துப் பிரான்ஸ் வீரர்களோடு நடப்போம்’ என்கிற பிரிட்டன் அவர்களைத் தவிக்க விடுவதும், பிரான்ஸ் வீரன் ஒருவன் தப்பி உள்ளே நுழைவதும் என்று காட்சிகள் நகர்கின்றன. வானிலும் குறைந்த எரிபொருளோடு ஒரு மகத்தான போரை பிரிட்டன் படைகள் புரிகின்றன. பல லட்சம் வீரர்களை மீட்க சிறிய படகுகள் உயிரை பணயம் வைத்து டன்கிர்க் நோக்கி பயணிக்கின்றன.

கண் முன்னே உயிர்கள் இறக்கையில் கண்ணீர் கூட விட முடியாமல், தப்பித்து ஓட முடியாமல் வீரர்கள் சிக்கிக்கொண்டு நிற்பது போரின் வெம்மையைக் கடத்துகிறது. ‘நான் எதையுமே இதுவரை வாழ்க்கையில் சாதித்ததில்லை’ என்று போர்க்களம் நோக்கி சிறு படகில் வரும் சிறுவனுக்கு ஏற்படும் துயரமும், அதை ஒட்டி அலைபாயும் கோபம், மனிதம், அடக்கப்பட்ட கண்ணீர் என்று கலவையான உணர்ச்சிகள்.

வாழ்க்கையின் வீழ்ச்சிகளை அள்ளிக்கொள்ள நேரமில்லாமல், கடைசித் துண்டு நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு மனிதர்கள் ஒரு பெரும் போராட்டத்தில் பங்கு கொள்கிறார்கள். உயிருக்காகப் பயந்தபடி மற்றவர்களை மரணத்தின் வாயில் ஒப்படைக்கச் சிலர் முயல்கிறார்கள். ஒற்றைக் கோப்பை தேநீர் கூட எத்தனை கதகதப்பை தரமுடியும் என்பது காட்சிகளால் கடத்தப்படுகிறது. இருக்கிற கொஞ்சநஞ்சம் பலத்தைக் கொண்டு சாகசங்கள் புரிகிற வீரர்களும், மனிதர்களும் ஆங்காங்கே மென்மையாக, உறுதியாக நடுக்கங்கள் இடையே கம்பீரமாக நிற்கிறார்கள்.

பின்வாங்கி வீடு திரும்புகையில் அவமானமும், ஏளனமும் வரவேற்கும் என அஞ்சுகிறவர்களை மகத்தான மானுட நம்பிக்கை தழுவி கொள்கிறது. முகங்களைத் தடவி ‘வெல்டன்’ என்கிற முதியவரின் மகன் போரில் இறந்து போயிருக்கலாம். தன்னுடைய ஆற்ற முடியாத வேதனையை மறைத்துக் கொண்டிருக்கலாம். எத்தனை பெரிய தோல்வியிலும் நம்பிக்கைக்கான விதைகள் இருக்கும் என்பதைச் சர்ச்சிலின் வரிகள் எதிரொலிக்க விடப்பட்டு உணர்த்தப்படுகிறது. எனினும், இது மகத்தான உலகப்போர் படங்களில் ஒன்றா என்றால் இல்லை என்றே சொல்வேன். இது நோலனின் சிறந்த படமாக இருக்கலாம். ஆனால், இது ஆழமற்ற கடற்கரையில் நிகழும் நீச்சல் என்பதே சரி. பெரிதாக ரத்தம் கொப்பளிக்காத, அதே சமயம் போரின் வலியை, அதன் ஊடாகத் ததும்பி வழியும் மானுட உணர்ச்சிகளை, மாண்புகளை உணர இப்படத்தைப் பார்க்கலாம்.

— with Christopher Nolan.

பெண் குழந்தையைப் பொத்தி வளர்ப்பவரா நீங்கள்? ‘தங்கல்’ திரைப்படத்தைப் பாருங்கள்!


ஹரியானாவின் கதை இந்தியாவின் பெரும்பான்மை பெண்களின் கதையும் உண்டு. ஹரியானாவில் ஆண்:பெண் விகிதாசாரம் இந்தியாவிலேயே குறைவான ஒன்று. குழந்தைத் திருமணங்கள் அங்கு அன்றாட யதார்த்தம். காப் பஞ்சாயத்துகள் எனப்படும் வடநாட்டு கட்டப் பஞ்சாயத்துகள் நவ நாகரீக ஆடை அணிகிற பெண்களைத் தண்டிப்பது, சாதி அமைப்பை வலுவாகத் தூக்கிப் பிடிப்பது, ஆணவப் படுகொலைகளைக் கூட்டாகச் செய்வது ஆகியவற்றைத் தொடர்ந்து செய்கிறவை. ‘முட்டிக்குக் கீழ்தான் மூளை’ என அந்த மாநில ஆட்களை எள்ளி நகையாடுகிற அளவுக்கு நிலைமை மோசம். அப்படிப்பட்ட ஊரில் இருந்து தன்னுடைய மகள்களை மகத்தான சாதனைகளை நோக்கி நகர்த்தும் ஒரு தந்தையின் நிஜக்கதைதான் தங்கல்.

(கதையின் நெகிழ்வான தருணங்கள் இங்கே பேசப்பட இருக்கிறது. படத்தை இன்னமும் பார்க்காதவர்கள் படிப்பதை தவிர்க்கலாம்.)

ஒரு பெண்ணை எப்படி வளர்ப்பது? கண்ணின் மணியாக, கோழி தன்னுடைய குஞ்சை அடைகாப்பது போல வளர்ப்பது தான் பெரும்பாலான குடும்பங்களின் மனப்போக்கு. “ஐயே பொட்டப்பொண்ணு!” எனப் பல குடும்பங்கள் கதறுவது ஊரக இந்தியாவின் உண்மை முகம். காரணம் வரதட்சணை கொடுத்துப் பெண்ணை எப்படியேனும் கட்டிக் கொடுப்பது என்பதே அந்தப் பெண்ணுக்குத் தாங்கள் செய்யக்கூடிய மகத்தான சேவை என்று பதிய வைக்கப்பட்டு இருக்கிறது.
தன்னளவில் நிராசையான இந்தியாவிற்குச் சர்வதேச பதக்க கனவை தன் மகள்களின் வழியாகச் சாதிக்க நினைக்கும் மகாவீர் சிங்கிடம் அவரின் மனைவி கேட்கிறார்,
“இப்படிக் கிராப் வெட்டி ஆண் பிள்ளைகள் போல ஷார்ட்ஸ் போட்டு வளர்த்தால் எந்தப் பையன் கட்டிப்பான்?”

Image may contain: 5 people, people standing

“என் பொண்ணுங்களுக்கு ஏத்த மாப்பிள்ளைக்கு அலைய மாட்டேன். அவங்களைத் தைரியமா, நம்பிக்கையுள்ளவங்களா வளர்ப்பேன். அவங்களுக்கான மாப்பிளைகளை அவங்களே தேடிப்பாங்க.” என்று அந்த மல்யுத்த நாயகன் சொல்கையில் சிலிர்க்கிறது.

பெண்கள் வெளியிடங்களில் புழங்குவதே பெரும்பாலும் தடுக்கப்பட்ட மாநிலத்தில் ஆண்களுடன் மகளை மல்யுத்தம் செய்ய வைக்கிறார். ஊரே எள்ளி நகையாடுகிறது. வகுப்பில் ஆண் பிள்ளைகள் சீண்டுகிறார்கள். ஆனால், தேசியளவில் தங்கப் பதக்கத்தை ஜெயித்து வருகையில் ஊரே திரண்டு தங்களின் மகளாக வாரியணைத்துக் கொள்கிறது.
பெண்களை அழகுக்காக மட்டுமே ஆண்கள் ரசிப்பார்கள் என்பது பொதுபுத்தி. சமீபத்தில் பி.சாய்நாத்தின் ‘PARI’ தளத்துக்காகப் பருத்தி வயல்களில் இருந்து பாராலிம்பிக்ஸ் நோக்கி என்கிற கட்டுரையை மொழிபெயர்த்தேன். அதில் வளர்சிக் குறைபாடு உள்ள அம்பிகாபதி எனும் பெண் தேசிய அளவில் சாதித்த பொழுது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை இப்படிப் பதிவு செய்திருந்தார்: “எனக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே ஊரில் இருக்கிறது. ஒவ்வொருமுறை வெற்றியோடு அவர் திரும்புகிற பொழுது எண்ணற்ற கட்டவுட்களுடன் எங்க ஊரின் ரசிகர்கள் (பெரும்பாலும் ஆண்பிள்ளைகள்) வரவேற்கிறார்கள். “ புற அழகைத் தாண்டி அளப்பரிய சாதனைகள் சார்ந்தும் சமூகம் கொண்டாடும் என நம்பிக்கை தரும் தருணங்கள் அவை.

மகாவீர் சிங் பெண்ணியவாதி இல்லை. அவரின் மனைவியை வீட்டு வேலைகளே செய்ய வைக்கிறார். போயும், போயும் பெண் குழந்தை பிறந்ததே என்று முதலில் வருந்துகிறார். “எதுனாலும் தங்கம் தங்கம் தான்” எனத் தெருச்சண்டையில் மகள்கள் ஈடுபடும் பொழுது உணர்கிறார். எதிர்த்து ஆட பெண்கள் இல்லாத களத்தில்,, ஆண்களோடு மோதவிட்டு வார்த்து எடுக்கிறார். வாய்ப்புகள் இல்லை, வீட்டை விட்டு எப்படி வெளியே அனுப்புவது என அஞ்சும் பெற்றோர்கள் அந்தக் காட்சியில் விழித்துக் கொள்ளலாம்.

தந்தைக்கும், பயிற்சியாளருக்கும் இடையேயான போராட்டத்தில் சிக்கிக் கொள்ளும் மகாவீர் சிங் ‘எந்தத் தேர்வும் எனக்கு இல்லை.’ என்று வயிற்றைக் கழுவ வேலையில் தன்னுடைய மல்யுத்த கனவுகள் மலர்ந்த காலத்தில் தங்கிவிட்டார். அவரின் சர்வதேச கனவுகள் சாம்பலானது. மகள் சாதிக்கிறாள் என்று தெரிந்ததும் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கையோடு மல்யுத்தம் செய்கிறார்.

இந்தியாவின் தனிநபர் பதக்கங்களில் பெண்களின் பங்களிப்பு ஆண்களைவிட மேம்பட்டதாக இருக்கிறது. போதுமான வாய்ப்புகள் இன்மை, ஏளனம், வறுமை என்று பலவற்றை ஆண் வீரர்களைப் போல அவர்கள் எதிர்த்துப் போராடுவது ஒருபுறம் இவை அனைத்துக்கும் மேலே மகாவீர் சிங் சொல்வதைப் போல, “கேவலம் பொண்ணு” என்று பார்க்கும் சமூகத்தின், ஆண்களின் அன்றாடப் போரை எதிர்த்து கத்தி சுழற்றிய தங்கங்கள் அவர்கள்.

இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த கறிக்கடை பாய் கோழிக் கறியை குறைந்த விலையில் மகாவீர் சிங்கின் மகள்களுக்குத் தருகிறார். உச்சபட்ச காட்சிக்கு முன்னால் தன்னுடைய மகள்கள், “அப்பா அக்கா ஆடுறதை பாக்கணும்!” என்று கேட்டுக் கொண்டதற்காகப் பாய் அவர்களை வண்டியேற்றி அழைத்து வருகிறார். மகாவீர் சிங் சொல்கிறார், ‘மகளே! நீ நாளைக்கு நன்றாக ஆடவேண்டும்., உன்னை யாரும் மறக்கவே முடியாதபடி ஆடவேண்டும். உன் தங்கம் பல பெண்களை
அடக்குமுறைகளை, அடுப்படியைத் தாண்டி அடித்து ஆட உற்சாகப்படுத்தும்.’

Image result for dangal

சீதையைப் போல இரு, தமயந்தியைப் போல இரு, பெண்ணாய் இரு.” என்றெல்லாம் சொல்லாமல், ‘பி.டி. உஷாவைப் போல வா, அஞ்சு பாபி ஜார்ஜ் போல அசத்து, தீபிகா போல அடித்து ஆடு, சிந்து போல பெருமை தேடித் தா, சானியா போல சரித்திரம் படை.’ என ஊக்குவிக்க படம் சொல்லித் தருகிறது.

நிஜ நாயகன் மகாவீர் சிங்குக்கும், கீதா, பபிதா எனும் தங்கத் தாரகைகளுக்கும், அமீர் கானுக்கும், இந்தப் படக்குழுவினருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். கிரிக்கெட்டை தாண்டி பல்வேறு விளையாட்டுகளின் மீதும், பெண்களைப் பொத்தி வளர்க்கும் போக்கை மாற்றிக் கொள்ளவும் இந்தப் படம் ஊக்கப்படுத்தும்.

எளிமையான வாழ்க்கையைக் கேட்காதீர்கள், எதிர்த்து போராட மகள்களுக்குச் சொல்லித் தாருங்கள். பஞ்சு மெத்தையில் மடியில் படுக்க வைக்காதீர்கள். மண்ணில் மிருகங்களோடு வாழவேண்டிய நிலையில் நம்பிக்கை தாருங்கள். ஆடைகளிலும், முடியிலும், பெண்ணின் ஆடம்பரத் திருமணத்திலும் இல்லை குடும்பத்தின் பெருமை என்று அடித்துச் சொல்கிறது இந்தப் படம்.

விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள்


வீரத்துறவி விவேகானந்தர், தன்னம்பிக்கையின் தனித்த அடையாளம். 150-ம் ஆண்டு பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், அவரின் வாழ்க்கை தரும் உன்னதமான பாடங்களில் சில…

கேள்வி கேள்: 
இளம் வயதில் அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார் நரேந்திரன். ‘கரடி மோதிரம் போட்டால், செல்வந்தர் ஆகலாம்’ என்று பிறர் சொன்னதை அம்மாவிடம் கேட்டபோது, ‘அதை விற்கிறவன் ஏன் வறியவனாக இருக்கிறான்?’ என்று கேட்டார் அம்மா. ‘எதையும் பகுத்தறிந்து ஏற்க வேண்டும்’ என்று புரிந்துகொண்டார் விவேகானந்தர்.

உன்னை நம்பு: 
ஒருநாள் குரங்குக் கூட்டம் துரத்தி வந்தது. எல்லாரும் பயந்து ஓடினார்கள். திரும்பி நின்று எதிர்த்தார் நரேந்திரன். பின்வாங்கின குரங்குகள். ‘தன்னை நம்ப வேண்டும்’ என்று உணர்ந்தார். ‘கடவுளை நம்பாதவனை நாத்திகன் என்றது பழைய மதம். தன்னை நம்பாதவனை நாத்திகன் என்பது புதிய மதம்’ என்று முழங்கினார்.

பயணம் செய்: 
வாழ்நாள் முழுக்கப் பயணம் செய்வதில் பேரின்பம் கண்டார் விவேகானந்தர். மைசூர் அரசர், ”என்ன உதவி வேண்டும்?” என்று கேட்டபோது… ”திருச்சூருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தால் போதும்” என்றார். அவர் சென்னையில் தங்கிய இடம், தற்போது விவேகானந்தர் இல்லம் எனவும், குமரியில் தவம் செய்த இடம், விவேகானந்தர் பாறை எனவும் அழைக்கப்படுகிறது.

அன்பு செய்:
‘சக மனிதர்களை நேசிக்கவும் உதவவும் வேண்டும்’ என்று வலியுறுத்துவார். அதற்காக, ‘ராமகிருஷ்ண மடம்’ என்ற அமைப்பை நிறுவினார். ‘உதவி வேண்டுபவர்களுக்கு உங்கள் கரங்களை நீட்டி உதவுங்கள். அப்படி முடியாவிட்டால், உதவுபவர்களை ஆசீர்வதித்து அனுப்புங்கள்’ என்பார்.

வாசிப்பை நேசி: 
வேதங்கள், உலக இலக்கியங்கள், பைபிள் என்று ஓயாமல் வாசிப்பார். பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தை ஒரே நாளில் படித்துவிட்டார். அதில் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லி அசத்தினார் விவேகானந்தர்.

தேசம் காத்தல் செய்: 
தேசத்தின் பெருமைக்கும் அதன் உச்சத்துக்கும் உழைக்க, இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார். ‘விழிமின், எழுமின்… எழுமின், விழுமின்… குறிக்கோளை அடையக் குன்றாமல் உழைமின்’ என்கிற தாரக மந்திரத்தைத் தந்தார். ‘ஆங்கிலேயர்கள் என்னைக் கைதுசெய்து சுடட்டும். தேசத்தின் பெருமைக்காக, எந்த வகையான தியாகமும் செய்யலாம்’ என்று முழங்கினார்.

உடலினை உறுதி செய்:
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் கவனமாக இருந்தார் விவேகானந்தர். நீச்சல், மல்யுத்தம், சிலம்பம், உடற்பயிற்சிகளைப் பழகினார். ‘இளைஞர்கள், உடல் மற்றும் உள்ளத்தின் வலிமையில் கவனம் செலுத்த வேண்டும்’ என்பது அவரின் முக்கியமான அறிவுரை.
இலக்கே முக்கியம்: கலிஃபோர்னியாவில் முட்டை சுடும் போட்டி நடைபெற்றது. யாராலும் சரியாகச் சுட முடியவில்லை. சுவாமி துப்பாக்கியை வாங்கி, ஆறு முட்டைகளையும் குறி தவறாமல் சுட்டார். ‘இதுதான் எனக்கு முதல் அனுபவம். நீங்கள் வெல்லப்போகும் பரிசில் கவனம் செலுத்தினீர்கள். நான் இலக்கில் மட்டும் கவனம் செலுத்தினேன்’ என்றார்.
அன்பால் வெல்க:
அமெரிக்காவின் சிகாகோ நகரில் அன்பு பொங்க, ”சகோதர சகோதரிகளே!’ என்றதும் அவையே எழுந்து நின்று கைதட்டியது. ‘உங்களை மாதிரி அறிவாளியும் என்னை மாதிரி அழகியும் திருமணம் செய்துகொண்டால், அற்புதமான மகன் பிறப்பான்’ என்று பெண் ஒருவர் சொன்னபோது, ‘என்னையே தங்களின் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள் அன்னையே!’ என்றார் விவேகானந்தர்.

எளியோர் நலம் போற்று: 
ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், விதவைகள் என்று எல்லாருக்காகவும் குரல்கொடுத்தார். ‘தீண்டாமையை நீக்காவிட்டால், இந்து மதம் காணாமல் போய்விடும்’ என்றார். ‘ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத, ஓர் அநாதையின் வயிற்றில் கவளம் சோற்றை இட முடியாத கடவுளிடமோ, மதத்தின் மீதோ எனக்கு நம்பிக்கை கிடையாது’ என்று தைரியமாகச் சொன்னார்.