‘லியோ’ – மரணம் நெருங்குகையில் மகிழ்வாய் இருத்தல்


இது தமிழில் வெளிவந்த ‘லியோ’ திரைப்படம் குறித்த அறிமுகம் அல்ல. ‘Netflix’-ல் காணக்கிடைக்கும் ‘Leo’ குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படம் போலத் தோன்றலாம். ஆனால், சொற்களின் அதிசயத்தை திரையில் வார்த்திருக்கும் அழகிய முயற்சி இப்படம்.

ஐந்தாம் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கான பள்ளியில் விளையாட்டுப் பிராணிகளாக, ‘லியோ’ எனும் 74 வயதாகும் பல்லியும், ‘Squirtle’ எனும் ஆமையும் அறிமுகம் ஆகிறார்கள். இக்குழந்தைகளின் சிக்கல்கள், கவலைகள் புதியவை. கூடவே, கடுமை தொனிக்கும் ஆசிரியை வந்து சேர நிலைமை மோசமாகிறது. வார இறுதி நாளன்று ஒருவர் ஒரு பிராணியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற விதியின்படி ‘லியோ’ குழந்தைகளின் வீட்டிற்குச் செல்கிறது.

இன்னும் வாழ்வதற்கு ஓராண்டே இருக்கும் நிலையில் தப்பித்து போய் வாழ்வை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்பது அதன் கனவு. வாராவாரம் தப்பிக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகிறது. ஏன்? ஒவ்வொரு வாரமும் பேசும் பல்லியாக குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறது லியோ.

பெற்றோரின் மணவிலக்கு, கீச்சென்ற குரல், எப்போதும் கண்காணிக்கும் கண்கள், பெற்றோரின் கவனிப்பற்ற குழந்தைமை, வதைமுகமான வகுப்பறை என அத்தனை வெளிகளின் வழியாக உற்சாகமாகவும், நம்பிக்கையாகவும் ஓடுகிறது உலகறிந்த லியோ.

போகிற போக்கில் அதன் இலக்கு மாறுகிறது. கூடவே, சில பொய்களும் சேர்ந்து கொள்கிறது. கடுமைமிக்க வகுப்பறையில் கலகலப்பின் சுவையை கண்டுணர வைக்கும் மாயமாய் லியோ மாறுகிறது. தீர்வுகளை விட காது கொடுத்து கேட்பதன் முக்கியத்துவத்தை உணர வைக்கிறது.

மடிக்கணினி, ஸ்மார்ட்போன், மழலைகளின் ஒவ்வொரு கணத்தையும் கட்டுப்படுத்தும் Drone-கள் இவற்றின் நடுவே மனங்களித்து வாழ்தல் குறித்த படம் இது. உருவம், பிறர் நம் மீது கொண்டிருக்கும் பார்வை குறித்த கவலைகள், உற்றவர் இல்லாத ஏக்கம் எனப்பலவற்றின் தொகுப்பாக காட்சிகள் விரிகின்றன.

திடீரென்று இந்த மகிழ்ச்சியால் ஆன உலகம் உடைகிறது. லியோ வில்லன் ஆகிறது. வாழ்வு முடியும் கணத்தினில் புறக்கணிப்போடு மனம் வெதும்பி வெளியேற்றப்படுகிறது. ஏன்? திரையில் பாருங்கள். இக்கதை சிறுவர்களைப்பற்றியதாக பாவனை செய்தபடியே சொல்லப்படும் பெரியவர்களுக்கான கதை.

செயற்கரிய சேவைகள் புரிந்த மருத்துவர் சுனிதி சாலமன்


மருத்துவர் சுனிதி சாலமன் (14 அக்டோபர், 1939 – ஜூலை 28, 2015)

மருத்துவர் சுனிதி சாலமன் அவர்களை இந்தியாவில் முதன்முதலில் எய்ட்ஸ் நோய்த்தொற்றைக் கண்டறிந்த குழுவினை வழிநடத்தியவர் என்கிற ஒரு வரிச்செய்தியோடு கடந்துவிட முடியாது. அவரின் குடும்பம் மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்டது. தோல் பொருட்கள் தயாரிப்பில் கோலோச்சி கொண்டிருந்த கைடொண்டே குடும்பத்தில் பிறந்தார். வீட்டிற்கு வந்து அம்மை நோய்த்தடுப்பு ஊசி போடும் மருத்துவரின் கனிவில் இருந்து தானும் டாக்டராக வேண்டும் என்கிற கனவு அவருக்குத் துளிர்த்தது. மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர விண்ணப்பித்த போது, வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று அவரின் மனு ஏற்கப்படவில்லை. அப்போதைய சுகாதாரச் சேவைகள் துறையின் பொது இயக்குனர் சென்னைக்கு வந்திருப்பதை அறிந்து அவரிடம் நேரடியாக வாதிட்டு தனக்கான இடத்தைப் பெற்றார்.

எம்.எம்.சி.யில் படிக்க வந்த சுனிதிக்கு சக மாணவர் சாலமன் விக்டர் மீது காதல் பூத்தது. “நான் ஓயாம பேசிக்கிட்டே’ இருப்பேன். அவர் குறைவா தான் பேசுவார். அவர் தமிழ். நான் மராத்தி. மதமும் வேற. அம்மாகிட்டே போய் நான் வேற மதத்து பையன் ஒரு கிறிஸ்டியன் இல்லை முஸ்லீம்னு வெச்சுக்கோயேன் அவன லவ் பண்ணினா என்ன பண்ணுவேன்னு கேட்டேன்.’ அம்மா, ‘அதுல என்னடா இருக்கு. எல்லாரும் ஒரே கடவுளோட படைப்பில பூத்த பூக்கள் தான?’ அப்படின்னு கேட்டாங்க. ஆனா, சாலமனை தான் கட்டிக்கப் போறேன்னு சொன்னப்ப அவங்க ‘நான் உன்னை நினைச்சு அப்படிச் சொல்லலைன்னு சொன்னாங்க’ என்று பின்னாளில் எடுக்கப்பட்ட lovesick ஆவணப்படத்தில் பதிந்திருந்தார் சுனிதி.

ஒருவழியாக சாலமனை மணமுடித்தார்.மருத்துவர் சதாசிவம் அவர்களின் வழியில் இதய மருத்துவராக வேண்டுமென்று லண்டனில் காமன்வெல்த் ஸ்காலர்ஷிப்பில் பணியாற்ற சாலமன் பயணமானார். அவரோடு பயணமான சுனிதியும் லண்டனின் கிங்க்ஸ் மருத்துவமனையில் பொது மருத்துவத்துறையில் பணியாற்றினார். இருவரின் உலகமும் பணிப்பளுவால் நிரம்பிக்கொண்டது. ஒருவர் இரவெல்லாம் வேலை பார்த்துவிட்டு திரும்ப வரும் போது, இன்னொருவர் பணிக்கு கிளம்பியிருப்பார். சமையலறையில் துண்டுச் சீட்டுகளின் மூலம் காதலை வளர்த்துக் கொள்ள வேண்டிய கொடுங்காலமாக அது கழிந்தது.

அடுத்து அமெரிக்காவிற்கு மேற்படிப்புக்குப் பயணம் என்கிற சூழல் வந்த போது, பணியையும்-குடும்பத்தையும் ஒருங்கே கவனித்துக் கொள்ளும் வகையில் சுனிதியை கிளினிக்கல் துறையல்லாத படிப்பை தேர்ந்தெடுக்கச் சொல்லி சாலமன் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, சுனிதி நோயியல் துறையில் மேற்படிப்பினை சிகாகோவின் குக் கவுண்டி மருத்துவமனையில் பயின்றார். அதற்குள் சாலமனின் வழிகாட்டி சதாசிவம் இறந்துவிடத் துறையைத் தூக்கி நிறுத்த மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிக்கு இருவரும் திரும்ப நேர்ந்தது. சுனிதி தன்னுடைய பொது மருத்துவக் கனவுகளில் இருந்து மைக்ரோபயாலஜி துறைக்கு நகர்ந்திருந்தார்.

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியிலேயே பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் சுனிதி சாலமன். ஒவ்வொரு பேராசிரியரின் கண்காணிப்பின் கீழ் இரு மேற்படிப்பு மாணவர்கள் அமர்த்தப்படுவார்கள். அப்படிச் சேர்ந்த நிர்மலா செல்லப்பனிடம் ஹெச்.ஐ.வி கிருமி தமிழ்நாட்டிலும் காணப்படுகிறதா எனத் தேடுவோம் என்று சுனிதி சொன்னார். அப்போது முதலில் தன்பாலின ஈர்ப்புக் கொண்ட ஆண்களிடம் எய்ட்ஸ் கண்டறியப்பட்டு இருந்தது. அதனால், ‘இங்கே எல்லாம் அவங்களைத் தேடி நான் எங்கே போவேன்’ என்று நிர்மலா கேட்டார். சுனிதி பாலியல் தொழிலாளிகளிடம் தேடலாம் என்று பரிந்துரைத்தார்.

இரண்டு குட்டிக் குழந்தைகளின் தாயான நிர்மலாவிற்கு அச்சமாக இருந்தது. அவருடைய கணவர் வீரப்பன் ராமமூர்த்தி பெரும் ஆதரவு நல்கினார். அவரின் பைக்கில் பாலியல் தொழிலாளிகளைக் காவல்துறை கண்காணிப்பில் வைத்திருந்த இல்லங்களுக்குச் சென்று ரத்த மாதிரிகளைச் சேகரித்தார். இவற்றை ஐஸ் பெட்டி ஒன்றில் எடுத்துக்கொண்டு தொடர்வண்டியில் ஏறினார்கள். கணவனும், மனைவியும் ஆட்டோ பிடித்துச் சி.எம்.சி மருத்துவமனைக்குச் சென்றார்கள். பரிசோதனையில் ஆறு மாதிரிகள் மஞ்சள் நிறத்துக்கு மாறின. அவர்களால் நம்பவே முடியவில்லை. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்குப் புதிய மாதிரிகளை அனுப்பி வைத்த போது, அவர்களும் ஹெச்.ஐ.வி இந்தியாவின் கதவுகளைத் தட்டிவிட்டதை உறுதி செய்தார்கள். 1986-ல் அச்செய்தி அதிகாரப்பூர்வமாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

(சுனிதி சாலமன்-நிர்மலா செல்லப்பன்)

தமிழகம் பேரதிர்ச்சிக்கு ஆளானது. சுனிதி மராத்தி, அவர் தமிழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்க பார்க்கிறார் என்றெல்லாம் வசைகள் பாய்ந்தன. சுனிதி சாலமனை வேறொரு கவலை சூழ்ந்திருந்தது. ஹெச்.ஐ.வி நோயாளிகளை மருத்துவர்கள் தொட மறுத்தார்கள். அந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிரசவம் பார்க்க முடியாதென்று கதவுகள் மூடப்பட்டன. ‘எய்ட்ஸ் தொற்று பாலியல் தொழிலாளிகளில் முதன்முதலில் கண்டறியப்பட்டதால் இந்நோய் ஒழுக்கக் கேடானவர்களுக்கு மட்டுமே வரும் நோய் என்கிற எண்ணம் பரவலாக ஏற்பட்டுவிட்டது. ஒருவேளை முதன்முதலில் பச்சிளம் குழந்தைகளிடம் இந்நோய் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தால் இத்தனை வெறுப்பும், அருவருப்பும் இருந்திருக்காதோ என்னவோ’ என்று பின்னாளில் சுனிதி பேசினார்.

தான் கண்டுபிடித்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களைச் சமூகம் வெறுத்து ஒதுக்குவது சுனிதியை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. முதன்மையான காரணம், அவர் கண்ட ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்களின் கதைகள். முதன்முதலில் நோய்த்தொற்றுக் கண்டறியப்பட்டவர்களில் பதிமூன்று வயது சிறுமி ஒருவரும் இருந்தார். கடத்தப்பட்டு மூன்று நாட்கள் பட்டினி போட்டு அவரை வன்புணர்வு செய்த கொடூரத்தில் இருந்து தப்பி வந்திருந்தார். அவரை மாதிரி எத்தனையோ மக்களின் வாழ்க்கைக்குள் சத்தமில்லாமல் அவநம்பிக்கை, மரண பயம் சூழ்ந்திருந்தது.

சுனிதியிடம் ஒரு பெரும் பணக்காரர் வந்தார். தன்னுடைய தங்கை, மருமகனை மகளுக்கு மணமுடிக்கக் கேட்டிருந்தார். அப்போது தான், தன்னுடைய மகனுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இருப்பதை அவர் சொன்னார். கதவுக்குப் பின்னிருந்து அதனைக் கேட்ட மனைவி, மகனிடம் உண்மையைச் சொன்னார். விஷத்தை குடித்துவிட்டு வண்டியோட்டிக் கொண்டு போய் இருவரும் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள். ‘என்னோட மருமவள எய்ட்ஸ் வராம காப்பாத்தனும்னு நான் நினைச்சது தப்பா டாக்டரம்மா’ என்று அவர் கேட்டார். அரற்ற முடியாமல் சுனிதி நேராக வீட்டிற்குப் போனார். தன்னுடைய நாய்க்குட்டியை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார்.

ஹெச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பது அவரின் கனவாக மாறியிருந்தது. இத்தனைக்கும் எம்.எம்.சியிலேயே இலவச சிகிச்சை, கலந்தாய்வு மையம் ஒன்றை அவர் ஏற்படுத்தியிருந்தார். எனினும், மக்கள் அங்கே வர அஞ்சினார்கள். இனிமேலும், இப்படியே விடமுடியாது என்கிற கட்டத்தில், பதவியை விட்டுவிட்டு முழுநேரமாக அவர்களுக்கு உதவ முனைந்தார். சாலமன் முடியாது என்று அரற்றினார். எண்ணற்ற தன்பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள், பல பேருடன் உறவு கொண்டவர்கள், போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் என்று ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களோடு புழங்கி உயிரை போக்கிக் கொள்ள வேண்டுமா என்கிற கேள்வி அவருக்கு இருந்தது. “சாலி! என்கூட வாங்க. அவங்க கதைங்கள கேட்டுப் பாருங்க. அவங்க கண்ணில இருக்கிற மரணப் பயத்தைப் பாருங்க. இவங்கள நாம காப்பாத்தாம யாரு காப்பாத்துவா?” என்று கணவரை ஏற்க வைத்தார்.

அந்த பெரும் பயணம் 1993-ல் துவங்கியது. கையில் பெரிதாகப் பணமில்லை. அன்பு தோய்ந்த கனவு மட்டுமே இருந்தது. விடுதிகளில் அறையை வாடகை எடுத்துச் சிகிச்சை தர ஆரம்பித்தார். நண்பர்களின் இல்லங்களில் இருந்த காலியிடத்தில் போராட்டம் தொடர்ந்தது. பொதுக் கிளினிக் ஒன்றை தியாகராய நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் துவங்கியிருந்தார். யார் வேண்டுமானாலும் வரக்கூடிய மருத்துவமனையாக இருந்தாலும் எய்ட்ஸ் பயம் உள்ளவர்கள், சிகிச்சை வேண்டுபவர்கள் வந்து சேரக்கூடிய இடமாக மாறியது அவரின் மருத்துவமனை. மூன்று பேரோடு துவங்கிய YRG Care முன்னூறு பேரோடு கிட்டத்தட்ட இருபதாயிரம் ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கிற மையமாக வளர்ந்து நிற்கிறது. பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய தொழுநோய் வார்ட் ஒன்றை V.H.S அமைப்பிடம் இருந்து தன்னுடைய மையத்திற்காகச் சுனிதி பெற்றுக்கொண்ட அவர் . ‘எய்ட்ஸ் தான் புதிய தொழுநோய்’ என்று சொன்னார். தன்னுடைய நிறுவனத்தின் சேவைகளைப் பெருமளவு இலவசமாக வழங்க உலகத்தின் பல்வேறு நாடுகள், அமைப்புகளின் ஆய்வுப்பணிகளில் தன்னையும், தன்னுடைய அமைப்பினரையும் தீவிரமாக ஈடுபடுத்தினார். ஏழை என்பதற்காக ஒருவருக்கு மருத்துவச் சேவை மறுக்கப்படக் கூடாது என்பது அவரின் பார்வையாக இருந்தது.

இது ஒருபுறம் என்றால், வயதானவர்கள், இந்திய மரபை புனிதம் என்று கட்டிக் காக்கிறவர்கள் சுனிதி சாலமனின் எய்ட்ஸ் விழிப்புணர்வை செவிமடுக்க மறுத்தார்கள். அவர் மாணவர்கள், இளைஞர்கள் கதவுகளைத் தட்டினார். அவர்களிடம் ஹெச்.ஐ.வி குறித்து உரையாடினார். பல இளையவர்கள் திறந்த மனதோடு உரையாடினார்கள். தங்களையும் இந்தப் பயணத்திற்கு ஒப்புக் கொடுத்தார்கள். செக்ஸ் குறித்த திறந்த உரையாடல்களை தொடர்ந்து மேற்கொண்டதோடு, எய்ட்ஸ் குறித்த கற்பிதங்கள், மூட நம்பிக்கைகளை மென்மையான குரலில் அவர் கேள்விக்கு உள்ளாக்கினார்.

‘கல்லால அடிச்சு கொல்ல வேண்டியவங்கள எப்படித் தொட்டு, கட்டிப்பிடிச்சு பேசுறியோ’ போன்ற வார்த்தைகளைச் சுனிதி காதில் போட்டுக்கொண்டதே இல்லை. அவருக்கு ஒவ்வொரு ஹெச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவருக்கும் நோய்த்தொற்று இல்லாத மழலை பிறக்கும் நாள் பொன்னாள் தான். ஹெச்.ஐ.வி தொற்றுள்ள கர்ப்பிணிகளையும் பிறரோடு பொதுப் பிரசவ வார்டிலேயே அனுமதிக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து போராடினார். ‘நோயை விட மக்களிடம் நிலவும் தேவையில்லாத அருவருப்பும், வேறுபடுத்திப் பார்ப்பதுமே கொடுமையானவை’ என்று அவர் கருதினார். மேலும், ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு, புதிய நோய்த்தொற்று வருவதற்கான சாத்தியங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு திருமண உறவை ஏற்படுத்தும் முயற்சிகளையும் முன்னெடுத்தார்.

‘நிறைய அனாதைகளை உருவாக்க போறேன்னு கரிச்சு கொட்டுவாங்க. ஹெச்.ஐ.வியால பாதிக்கப்பட்டவங்க இருபது, இருபத்தஞ்சு வருஷம் வாழுறாங்க. பிறகு என்ன?’ என்று ஆன் எஸ்.கிம்மின் ‘lovesick’ ஆவணப்படத்தில் பேசினார் சுனிதி சாலமன். ‘இவங்களுக்குத் திருமணம் ஆகுறப்ப மறக்காம பத்திரிகை வைப்பாங்க. ஆனா, தயவு செய்ஞ்சு வந்துடாதீங்கன்னு கேட்டுப்பாங்க. ஒரு எய்ட்ஸ் டாக்டர் அங்க போனா மத்தவங்க எல்லாம் என்னென்னெவோ பேசுவாங்க இல்ல. அதுதான் காரணம் ’ என்று அதே ஆவணப்படத்தில் தெரிவித்தார் சுனிதி.

ஒரு சம்பவத்தை அவர் UNDP-யின் இதழுக்கு அளித்த பேட்டியில் நெகிழ்வோடு கவனப்படுத்தினார் :

“ஒரு ஹெச்.ஐ.வி பாசிட்டிவான பொண்ணு அவங்க ஃபிரெண்டை என்கிட்டே அழைச்சிகிட்டு வந்தாங்க. அவர் இவங்கள லவ் பண்றேன்னு சொன்னார். ‘எனக்கும் பிடிச்சு இருக்கு, ஆனா, காதல் எல்லாம் வேணாம்’ இவங்க சொல்லவே அவருக்கு ஒன்னும் புரில. தனக்கு ஹெச்.ஐ.வி இருக்குனு சொன்னா நம்புவாரானு தெரியாம என்கிட்டே கூட்டிட்டு வந்தாங்க. நான் பொறுமையா அவங்க நிலையை விளக்கி சொன்னேன். அவர் டக்குனு எழுந்து வெளியே போயிட்டார்.

பொண்ணு உடைஞ்சு போயிட்டாங்க. நானும் தான். சூழலை இயல்பாக்க ஒரு காபி சாப்பிட போனோம். அந்தப் பையன் திரும்ப வந்திருந்தார். கையில ரோஜா பூங்கொத்தோட நின்னுகிட்டு இருந்தார். ‘என்கிட்டே இதை மறைக்காம சொன்னது எனக்கு உன்மேலே இருக்கக் காதலை, மரியாதையைக் கூட்டித்தான் இருக்கு. எப்படி இப்படி ஆச்சுன்னு நான் கண்டிப்பா கேக்க மாட்டேன். ஆனா, உன்கூட எப்பவும் இருப்பேன்னு’ சொன்னார். எங்க ரெண்டு பேரு கண்ணிலயும் தண்ணி. எல்லா நேரத்திலும் அழுகையை மறைக்கணும்னு இல்லை. இப்படிப்பட்ட நிறையப் புரிஞ்சுக்குற மனுஷங்க தேவை.’

சுனிதி அப்படிப்பட்ட மனிதர்களில் முதன்மையானவர். இந்தியாவின் எய்ட்ஸ் தடுப்பு வரலாற்றின் முதன்மையான ஆளுமை அவரே. அந்நோய் குறித்த அவநம்பிக்கை, வெறுப்பு, நோய் பீடிக்கப்பட்டவர்களின் மீதான கண்டனப் பார்வைகளை அயராது எதிர்கொண்டார். இறுதிவரை மருத்துவர்கள் ‘உனக்கு எய்ட்ஸ்’ என்று மரணத் தண்டனையை அறிவிக்கும் நீதிபதிகளாக நடந்து கொள்ளாமல், கனிவும், அக்கறையும் மிக்கவர்களாகச் சக மனிதர்களை அணுக வேண்டும் என்கிற அரிய பாடத்தின் முதன்மையான எடுத்துக்காட்டாக அவரே திகழ்ந்தார்.

உதவியவை:
1. https://yrgcare.org/paying-tribute-to-late-dr-suniti-solomon-on-her-78th-birth-anniversary/
2. https://www.newyorker.com/news/news-desk/postscript-suniti-solomon-aids-researcher

3. https://www.thehindu.com/sci-tech/health/world-aids-day-how-dr-suniti-solomons-flexibility-shaped-indias-aids-crisis/article7936732.ece

4. https://www.livemint.com/Leisure/0BndFwDSQojGe71oE8lFVK/Freedom-to-live-with-HIV–Suniti-Solomon.html

5. www.bbc.com/news/magazine-37183012

6. https://www.thebetterindia.com/76774/suniti-solomon-doctor-hiv-aids-india/

7. HIV/AIDS in News- Journalists as Catalysts UNDP
8. https://www.netflix.com/in/title/80238021?source=35
9. https://yrgcare.org/wp-content/uploads/2015/10/HIV_in_India.pdf

புகைப்பட நன்றி: YRG CARE.

உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல!


‘என்ன இருந்தாலும் பெத்து, தூக்கி வளர்த்த அப்பா அம்மாவோட கனவுலாம் கொல்ற பிள்ளை என்ன பிள்ளையோ’ என்கிற வகையான சாடல்கள் கண்ணில் படுகின்றன.

ஒரு மொழிபெயர்ப்பு பதிலாகட்டும்:

உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல 
அவர்கள் காத்திருக்கும் எதிர்கால வாழ்வின் மகன் மற்றும் மகள்கள்
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள், ஆனால், அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை

அவர்களுக்கு நீங்கள் உங்களுடைய அன்பைத்தரலாம்; உங்களின் சிந்தனைகளை அல்ல!
ஏனெனில் அவர்களுக்கென்று அழகான சிந்தனைகள் உண்டு
அவர்களின் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம்
அவர்களின் ஆன்மாவிற்கு அல்ல
ஏனென்றால் அவர்களின் ஆன்மா வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது;
அந்த வீட்டை நீங்கள் கனவில் கூடச் சென்றடைய முடியாது

நீங்கள் அவர்களைப் போல ஆவதற்கு உழையுங்கள்;
ஆனால், அவர்களை உங்களைப்போல ஆக்கி விடாதீர்கள்
வாழ்க்கை பின்னோக்கி பயணிப்பதில்லை
கடந்தகாலத்தில் சுணங்கி கிடப்பதுமில்லை

உங்கள் குழந்தைகள் எனும் உயிருள்ள அம்புகளை ஏவும் விற்கள் நீங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
வில்லாளி முடிவுகளற்ற பாதையில் குறிவைத்து
முழுவலிமையோடு வில்லான உங்களை வளைக்கிறான்
அவன் அம்புகள் அதிவேகமாய், அளவற்ற தொலைவுகள் பயணிக்கலாம்
விற்பெருவீரனின் கர வளைப்பினில் உங்கள் ஆனந்தம் ஆர்ப்பரிக்கட்டும்
பாய்கிற அம்பை விரும்புகிற அவன்
பதறாத வில்லையும் விரும்புகிறான். – கலீல் ஜிப்ரான்

Image result for கலீல் ஜிப்ரான்
தமிழில்: பூ.கொ.சரவணன்

ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் -மானுடம் ததும்பும் உலகம்


ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ எனும் மானுடம் ததும்பும், அன்பு மிகைத்த, வெறுப்புகள் அற்றதொரு உலகினில் வசித்து விட்டு வருகிறேன். நாவலில் வருகிற ஹென்றி அடையாளங்கள் அற்றவன். அல்லது இன்னமும் சரியாகச் சொல்வதென்றால் அடையாளங்களைப் பொருட்படுத்தாதவன். ‘முரண்பாடுகள் இல்லாத, மோதல்கள் இல்லாத, முணுமுணுப்புகள் இல்லாத, சண்டைகள் இல்லாத, குறைகள் இல்லாத, முறையீடுகள் இல்லாத, எதிர்பார்ப்புகள் இல்லாத, ஆக்கிரமிப்புகள் இல்லாத, அதிகாரங்கள் இல்லாத, அன்பு மட்டுமே’ தழைத்த உலகம் அது.

ஹென்றியின் பப்பாவும், அவனும் உரையாடிக்கொள்ளும் கணங்களில் வழியும் பிரியமும், வன்மங்கள் அற்ற நெருக்கமும், அவ்வப்போது இயல்பாகக் கசிந்து பெருக்கெடுக்கும் கண்ணீரும் நம் கரங்களிலும் ஒட்டிக்கொள்கிறது. ‘என் மதம் எவ்வளவு உசத்தினாலும் அதை என் பிள்ளை மேலே திணிக்கக் கூடாது’ என்கிற பப்பா ‘பிரார்த்தனை என்பது வேண்டுவது அல்ல, விரும்புவது’ என்று நெகிழவைக்கிறார். பப்பா என்கிற சபாபதி, ‘யாரும் யாரையும் அடிக்கக் கூடாது. சண்டையே வேண்டாம்.’ என்று வன்முறையற்ற ஒரு புத்துலகை விரும்புகிறார். கடுமையான அடக்குமுறையால், பூவரச மரத்தின் குச்சியால் மட்டுமே பேசும் கொடுமைக்கார தந்தைக்குள் இருக்கும் மெல்லிய மனிதத்தை நாவல் புலப்படுத்துகிற போது பால்யகால அடிகளின் நினைவுகள் எட்டிப்பார்த்தன.

இந்தக் கதையில் வரும் மனிதர்கள் சொத்துக்களை விடத் தர்மத்தை பெரிதென்று நம்புகிறார்கள். தியாகத்தைச் செய்வதில் தங்களுக்குள் போட்டி போடுகிறார்கள். அவர்கள் அறத்தின் உச்சங்களை மானுட கசடுகளிடையே வெகு இயல்பாக அடைகிறார்கள். தனக்குப் பிரியமான வேறொருவரோடு வெளியேறுகிற மனைவியைக் கொல்ல சொல்லும் கவுரவங்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு மனசாட்சியின் குரலுக்குச் செவிமடுக்கிறார்கள். சமயங்களில் உறவுகளின் உன்னதம் காக்க தீங்கில்லாத பொய்களைச் சொல்கிறார்கள். காயப்பட்டு நிற்கும் முன்பின் தெரியாத மனிதர்களுக்கு மனம் கரைய கண்ணீர் வடிக்கிறார்கள். சொந்த காயங்களைத் தாண்டி துரோகம் இழைத்தவர்கள் மீது நிகழ்த்தப்படும் சாதிக்கொடுமைகளுக்கு எதிராகக் கவலைப்படுகிறார்கள், அவற்றைக் கடந்து நேசிக்கக் கற்றுத்தருகிறார்கள். 

Image may contain: one or more people and text

கதையின் நாயகன் ஹென்றி கிழங்கு வைக்கிற பெண் துவங்கி, சிறுவர்கள் வரை அனைவரையும் சமமாக மதித்துக் கைகூப்பி வணக்கம் செலுத்துகிறான். அழுதும், பயந்தும் படிக்கிற கல்வி என் மகனுக்கு வேண்டாம் என்கிற பப்பாவின் பேரன்பின் நிழலில் மனிதர்களை அவர்களின் குறைகளோடு ஏற்று அன்பு செலுத்துபவனாக வளர்கிறான். தந்தையின் வேர்கள் தேடி செல்கையிலும், சக மனிதர்களின் துயர்களுக்குச் செவிமடுக்கிறான். கொள்கைகள் என்று தனக்கொன்றும் இல்லை என்று மனிதர்களின் மனதிற்கு முக்கியத்துவம் தருகிறான். அவன் கண்களுக்கு மரத்தில் குதித்தோடும் மந்திகளும், மலையின் பேரழகும், குளிக்கிற பெண்ணும் ஒரே அழகியலோடு ரசிப்பதற்கு உரியவர்கள் ஆகிறார்கள். அந்தப் பார்வையில் மனச்சாய்வுகள் இல்லை. சந்தேகங்கள் சுவடின்றி மனிதர்களை நம்புகிறான். மனதை மட்டும் ரம்மியமாகச் செலுத்தியபடி, வாழ்க்கை இழுக்கும் போக்கினால் புகார்கள் இன்றிப் பயணிக்கிறான். புதிய அனுபவங்களைக் கண்டடைகிறான். 

Image result for ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த நாவலில் தனிமனிதர்களின் விடுதலைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. சமூகத்தின் கட்டுப்பாடுகள், போலித்தனங்கள், அடக்குமுறைகளில் இருந்து விலகி தங்களுக்கான வாழ்க்கையை வாழ முயல்பவர்கள் இயல்பாகக் கண்முன் நடமாடுகிறார்கள். ‘நான் திருமணங்களுக்கோ, ஆண் பெண் உறவுகளுக்கோ எதிரியில்ல…எதற்குமே எதிரியாக இருப்பது சரியல்ல… ஆனால்..ஆனால் எனக்குத் திருமணம் அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். எனக்குக் கூழ் மட்டும் போதும். எல்லாரும் கூழே குடிக்க வேண்டும் என்றா சொல்லுகிறேன்? நீங்கள் சொல்கிற மாதிரி இந்தக் கிராமங்களும், இங்கே வாழ்கிற மக்களும் நகர்வாழ்க்கையோடு பேதமற கலந்து போகிற நாள் வரலாம். வரட்டுமே. அதற்கு நானும் ஏன் ஆசைப்பட வேண்டும்?’ என்கிற ஹென்றியின் குரல் எல்லாக் காலத்திலும் விடுதலை நாடும் மனங்களில் ஒலிக்க வேண்டியது. மந்தைத்தனங்கள் தாண்டி மானுடம் நாடுபவர்களை வழிநடத்தக்கூடிய, மனதின் வன்மங்களை, கசடுகளைக் கரைக்கிற அற்புதத்தைப் புரியும் ஆரவாரமற்ற முக்கியமான நாவல் இது.

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
ஜெயகாந்தன்
பக்கங்கள் 316
விலை : 325
காலச்சுவடு பதிப்பகம்

மௌன வசந்த போராளி ரேச்சல் கார்சன் !


ரேச்சல் கார்சன் என்கிற மௌன வசந்தம் நூலை எழுதிய பெண்மணியின் வாழ்க்கை ஏற்படுத்திய அதிர்வலை கடந்த நூற்றாண்டின் சூழலியல் வரலாற்றில் மறக்க முடியாதது. எளிய குடும்பத்தில் பிறந்த ரேச்சல் பால்ய வயதிலேயே விலங்குகள்,பறவைகள் ஆகியவற்றைக்கொண்டு கதைகள் தீட்டினார்.

ரேச்சல் கார்சன் உயிரியல் பாடத்தில் பட்டம் பெற்ற பின்னர் கடல்வாழ் உயிரிச்சூழல்,மீன்வளம் ஆகியவற்றை பற்றி படித்து முடித்த பின்னர் முனைவர் ஆய்வு செய்யலாம் என்று பகுதி நேரத்தில் வேலை பார்த்துக்கொண்டே அவர் இயங்க முடிவு செய்த பொழுது அவரின் தந்தையின் இறப்பு குடும்பத்தை உலுக்கியது. 

குடும்பத்தின் பசியை போக்க வேலை செய்ய வேண்டும் என்கிற சூழலில் மேரி ஸ்காட் சிங்கர் எனும் விஞ்ஞானியின் உதவியால் மீன்வளத்துறையில் தற்காலிக பதவி கிடைத்தது. தேர்வெழுதி அதை நிரந்தரமாக்கி கொண்டார் அவர். அக்காவின் மரணத்தால் அவரின் இரண்டு குழந்தைகளையும் தானே வளர்க்க வேண்டிய இக்கட்டுக்கும் அவர் தள்ளப்பட்டார். 

குடும்ப சூழல் அழுத்திக்கொண்டு இருந்த தருணத்தில் சூழலியல் அதிலும் குறிப்பாக கடல் சார்ந்து தன்னுடைய தேடலை அவர் அதிகப்படுத்திக்கொண்டே போனார். கடற்காற்றின் கீழே என்கிற நூல் அவருக்கு பாராட்டை தந்தாலும் பெரிய அளவில் விற்பனையாகவில்லை. இந்த சூழலில் அமெரிக்க மீன் மற்றும் காட்டியிரி சேவை அமைப்பின் ஆசிரியராக ஆனபின்பு ‘நம்மை சுற்றியிருக்கும் கடல்’, ‘கடலின் முனையில்’,’வானைபற்றி சில சங்கதிகள்’ ஆகிய நூல்கள் எளிய மொழியில் சூழலியல் பற்றி பார்வையை மக்களிடம் கொண்டு சேர்த்தன. அதிலும் அவரின் இரண்டாவது நூல் ஆவணப்படமாகி ஆஸ்கர் விருதை அள்ளியது.

இந்த சூழலில் தான் அவருக்கு அவரின் தோழியான ஓல்கா ஓவன்ஸ் ஹக்கின்ஸிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. 1956-ம் வாக்கில் இங்கிலாந்தில் இலைகளை ஜப்பான் வண்டுகள் தின்று கொண்டிருந்தன. அவற்றை கொல்ல பூச்சிகொல்லியை வான் வழியாக ஹெலிகாப்டரின் மூலம் தெளித்தார்கள். அந்த பூச்சிக்கொல்லி பூச்சிகளை கொன்றதோடு நில்லாமல் நீர் வெளிகளில் கலந்து மீன்களை கொன்றது. மண் புழுக்களில் சேர்ந்து விஷமாக நிலம்,நீர்,காற்று ஆகியவற்றை பூச்சிக்கொல்லி மாசுபடுத்தியது . அதை உண்ட பறவைகள் கூடு கட்ட மறுத்தன. ஓரளவுக்கு பாதிக்கப்பட்ட பறவைகள் கூடு கட்டினாலும் அவை ஈன்ற முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவரவே இல்லை. ஓடுகள் வலுவிழந்து போய் பல முட்டைகள் போட்டதும் அழிந்து போயின. அதிலும் குறிப்பாக ராபின் என்கிற வசந்த கால பறவை பாதிக்கப்பட்டது. அதன் மவுனம் தோழியின் மனதை கீறியது. அதை குறிப்பிட்டு அவர் எழுதிய வாசகம் ரேச்சலை உலுக்கியது. 

DDT என்கிற பூச்சிக்கொல்லி முதன்முதலில் 1874 இல் உருவாக்கப்பட்டது ; ஒரு 55 வருடங்கள் கழித்து அதை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தலாம் என்று பால் ஹெர்மான் முல்லர் என்பவர் கண்டுபிடித்தார். அவருக்கு அதற்காக நோபல் பரிசு 1948 இல் வழங்கப்பட்டது. பூச்சிகளை மொத்தமாக கொல்வதற்கு விமானங்களில் இருந்து இந்த பூச்சிக்கொல்லியை தெளித்த சம்பவங்கள் ஏராளமாக உண்டு; DDT பொடியை பூசிக்கொண்டு போர் செய்யப்போகும் இடத்தில் பூச்சிகள் தங்களை கடிக்காமல் இருக்குமாறு ராணுவங்கள் பார்த்துக்கொண்டன. 

இந்த பூச்சிக்கொல்லி அமெரிக்காவில் உண்டாக்கிய தாக்கத்தை பற்றி தோழியின் கடிதத்துக்கு பிறகு ரேச்சல் ஆய்வு செய்தார். ஏற்கனவே பல்வேறு நிபுணர்கள் அதைக்குறித்து செய்த தனித்தனி ஆய்வுகளை ஒன்றாக தொகுத்தார். அந்த பூச்சிக்கொல்லிகள் எப்படி பறவைகள்,விலங்குகள் ஆகியவற்றையும் சூழலையும் பாதிப்பதோடு நில்லாமல் குழந்தைகளையும் தன்னுடைய நச்சுத்தன்மையால் தாக்குகிறது என்று ஆதாரப்பூர்வமாக நான்கு வருடகால தேடலுக்கு பின்னர் எழுதினார். 

மொட்டைக்கழுகுகள் என்கிற அமெரிக்காவின் தேசியப்பறவையின் முட்டை ஓடு வலுவிழப்பது துவங்கி மனிதர்களுக்கு கேன்சர் ஏற்படுவது வரை எண்ணற்ற பாதிப்புகளை அது உண்டாக்குவதை சுட்டிக்காட்டினார். மேலும் எப்படி கதிர்வீச்சு மரபியல் மாற்றங்களை உண்டு செய்கின்றனவோ அது போலவே பூச்சிக்கொல்லிகளும் மனிதர்களிடையே பல மோசமான ஆபத்துக்களை உண்டு செய்கிறது என்று எடுத்து சொன்னார். 

அது மட்டுமில்லாமல் உணவுச்சங்கிலியின் அடுத்த அடுக்குக்கு பூச்சிக்கொல்லி நகர்கிற பொழுது அதன் அளவு அதிகரிப்பதையும் அதிர்ச்சியோடு நிரூபித்தார். மேலும் எந்த பூச்சிகளை கொல்ல பூச்சிக்கொல்லியை உருவாக்கியதாக சொன்னார்களோ அந்த பூச்சிகள் எதிர்ப்பு சக்தி பெற்று DDT யை செயலிழக்க செய்ததையும் பதிந்தார். இன்னொரு பெரிய சிக்கல் இயற்கையான எதிரிகள் ஏற்கனவே DDT யால் அழிக்கப்பட்டு விட்டதால் எதுவுமே தேறாமல் இறுதியில் விஷத்தை மட்டுமே மனித குலம் சுமக்க வேண்டி நேரிட்டது என்று அவர் அறிவித்த பொழுது உலகம் நிமிர்ந்து உட்கார்ந்தது, 

நியூயார்க்கர் இதழில் தொடராக வந்த மௌன வசந்தம் நூலில் எப்படி பசுமை மற்றும் இயற்கை வனப்பு நிறைந்த ஒரு நிலப்பகுதி எதிரிகளின் சதியெல்லாம் இல்லாமல் அம்மண்ணின் மக்களின் செயல்பாடுகளால் அழிந்து காணாமல் போகிறது என்று கதை வடிவில் அவர் பதிவு செய்து வருங்காலத்தை பற்றி எச்சரித்தார். அவருக்கு எதிராக DDT நிறுவனங்கள் வழக்குகளை பதிவு செய்தன. அவரின் புத்தக அறிமுகங்கள் வராமல் தடுக்கும் முயற்சிகள் நிகழ்ந்தன. ஆனாலும் பத்து லட்சம் பிரதிகள் ஐம்பதே நாட்களில் விற்று தீர்ந்தது. 

அவர் இந்த காலத்தில் புற்றுநோயால் பெருமளவில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அவரின் மார்பகத்தை துண்டித்து விட்டு தீனமான குரலில் மக்களுக்காக குரல் கொடுத்தார். தலையில் கதிர்வீச்சு சிகிச்சையால் ஏற்பட்ட வழுக்கையை விக் அணிந்து மறைத்தவாறு பல்வேறு CBS டி.வி. ஷோக்களில் உரையாற்றினார். அவரின் இடுப்பு எலும்பு பகுதி முழுக்க பாதிக்கப்பட்டு அமர முடியாத சூழலிலும் வருங்கால சந்ததி நிமிர்ந்து நடக்க வேண்டும் என்று போராடினார்.

ஒரு பேட்டி முடிந்ததும் தலையின் மீது கரங்களை வைத்து அப்படியே மேசையில் சாய்கிற அளவுக்கு புற்றுநோய் அவரை தின்று கொண்டிருந்தது,என்றாலும். இறக்கிற வரை DDT க்கு எதிராக அவர் போராடி 56 வயதில் மரணித்து போனார். அவரை கம்யூனிஸ்ட் என்றும்,சதி செய்கிறார்,பொய்யர் என்றும் எழுதிய இதழ்களே அவரை உலகை மாற்றியவர் என்று அவரின் இறப்புக்கு பின்னர் DDT தடை செய்யப்பட்ட பின்னர் பதிவு செய்தன. மௌன வசந்தம் உண்மையில் மக்களின் வசந்தத்தை ஓரளவுக்காவது மீட்டது !

குழந்தைகளை போற்றிய கல்வி அன்னை மரியா மாண்டிசோரி


மரியா மாண்டிசோரி : குழந்தைகள் பள்ளிக்கு போவதற்கு ஏன் எக்கச்சக்கமாக பயப்படுகிறார்கள் என்று
நாம் யோசித்து இருக்கிறோமா ? பள்ளிகள் குழந்தைகளை பயமுறுத்துகிற விஷயமாகவே பெரும்பாலும் இருக்கிறது. ஆனால்,கல்விக்கூடங்கள் குழந்தைகள்
ஆனந்தமாக வந்து சேர்ந்து கற்றுத்தேர்கிற இடமாக மாற்ற முடியும் என்று நிரூபித்தவர் மரியா மாண்டிசோரி. மருத்துவப்படிப்பு படிக்கப்போனார் அவர்.

அங்கே அவரைப்பெண் என்பதால் இழிவாக நடத்தினார்கள். பாடங்களை சொல்லித்தரக்கூட ஆசிரியர்கள் மறுத்தார்கள். விலங்குகளை அறுக்கிற பொழுது தனியாக ஒரு அறையில் விட்டு அறுக்க வைத்தார்கள். மனம் வெறுத்தார் அவர்.
இருந்தாலும் மருத்துவப்பட்டம் பெற்று வெளியே வந்தார். உளவியலில் தன்னுடைய ஆர்வத்தை செலுத்தினார்.

கல்வி சார்ந்த இத்தாலியில் ஐம்பது ஏழைப்பிள்ளைகளுக்கு கண்காணிப்பாளராக அவர் ஆனார்.. பிள்ளைகளை மிரட்டுவதோ,அடிப்பதோ பிடிக்காத அன்பான நபர் அவர்.
அங்கே இருந்த பிள்ளைகளின் பொழுதை எப்படி உற்சாகம் நிறைந்ததாக ஆக்குவது என்று அவர் யோசித்தார்.

நோட்டு புத்தகங்களுக்கு பதில் பொம்மைகளை அவர்களின் கையில் கொடுத்தார். எழுத்துக்களை சொல்லித்தருவதற்கு முன்னர் அவற்றை உணர்கிற வகையில்
பொருட்களை காட்டினார். வீட்டில் குழந்தைகள் வேலையே செய்ய விடக்கூடாது என்று இருந்த பொழுது எளிய செயல்களை செய்ய வைத்து பிள்ளைகளை சுறுசுறுப்பாக
வைத்துக்கொண்டார். மாணவர்கள் ஆசிரியர்களை கவனிக்க வைக்க நாம் முயலக்கூடாது,ஆசிரியர் மாணவரை கவனித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று
சொன்னவர் அப்படியே பிள்ளைகளை நடத்தினார்.

வண்ண அட்டைகள்,ஒலி எழுப்பும் கருவிகள்,ஓவியங்கள்,வண்ணத்தாள்கள்,புட்டிகள்
என்று குழந்தைகளின் கற்றலை வண்ணமயமானதாக இந்த வகுப்புகள் மாற்றின. அவரின் கல்விமுறையில் படித்து சாதித்தவர்கள் தான் கூகுள் மற்றும்
அமேசான் நிறுவனர்கள் ஆகியோர் இவரின் கல்விமுறையில் படித்தவர்களே. இன்று உலகம் முழுக்க இருபத்தி இரண்டாயிரம் பள்ளிகள்,நூற்றி பத்து நாடுகள் என்று விரிந்திருக்கும் அவரின் கனவு குழந்தைகளுக்கானது