பிரிதலின் பருவகாலம்


அந்திவேளையில் மேகம் தூறுகையில்  விடைபெறல்கள் அமைந்துவிட்டால் நன்றாக இருக்கும். 

சொற்கள் அருகி விக்கி நிற்கையில் பிரிதல்கள் நிகழ்கின்றன. 

அலைபேசியின் ஊடாக அழுது அயர்ந்து போன முகங்கள் உடைந்து மறைகின்றன. 

புன்னகைத்தபடி கையசைத்து விலகுகையில் சன்னலோரம் பிரியமிக்க உறவொன்று  எட்டிப்பார்க்கையில் கேவல்கள் மின்னி அறைகின்றன. 

துயர்மிக்க காலங்களை கடக்கும் வண்ணம் விழாவொன்று நிகழ்கிறது. 

உடைந்தபடி உருகி வழியும் இசைச்சரம் ஒன்றின் தொடர்பறுந்து செவி துடிக்கையில் பிரிவுக்காலத்தின் வெம்மை இளைப்பாறுகிறது.

 ஒவ்வொரு பிரிதலின் கணத்தினிலும் புதிய நடுக்கங்கள் கரம் சேரும். 

ஆயினும், பிரிவைக் கடக்கும் பயணத்தில் புதிதாய் பூக்கும் தழும்பொன்றின் நேசம் மட்டும் எப்போதும்  உடனிருக்கும். – பூ கொ சரவணன்

கச்சிதமாக இருந்தால் தான் காதல் புரிய வேண்டுமா?


அன்புள்ள மனிதா!

நீ எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறாய்.

எதிர்பார்ப்பில்லாமல் அன்பை பொழிவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள நீ பிறப்பெடுக்கவில்லை. நீ அளவில்லாத அன்பிலே அல்லவா பிறந்தாய். அங்கேயே நீ திரும்பச் செல்வாய்

பிறகு ஏன் இங்குப் பிறந்தாய்?
தனிநபர் மீது தன்னிகரிலா அன்பு பொழிவதை கற்க பிறந்தாய்
உலக அன்பை உணர்ந்திட வந்தாய்
சிக்கல்கள் மிகுந்த பேரன்பை பற்றிக் கற்றிட வந்தாய்
பைத்தியக்கார பேரன்பை பற்றி அறிய பிறந்தாய்
உடைந்த காதலை உய்த்து அறிய உயிர் பெற்றாய்
முழுமையாகப் பிரியத்தைப் பருகிட வந்தாய்
தெய்வீகம் ததும்பும் அற்புதம் அது
அன்பினுள் நயத்தோடு தடுமாறிக்கொண்டே வாழ்வாய்
அத்தனை பேரன்பையும் குழப்பங்கள் விளைவித்து விரித்துரைப்பாய்

நீ கச்சிதமாகக் காதல் புரிய இங்கு வரவில்லை. நீ் கச்சிதமானவளே/னே

இங்கு மனிதனாக மாறி அழகாகக் காதல் புரிக. பிழைகளால்
சிறக்கட்டும் நின் பிரியம்.

காதலின் நினைவுகள் ஏந்தி கசிந்துருகி மீண்டெழுக

ஆனால், எதிர்பார்ப்புகளற்ற காதல் என்கிற கட்டுக்கதையை என்னிடம் சொல்லாதே

உண்மையைச் சொல்லவா? காதல் அலங்காரச்சொற்கள் நாடி அலைவதில்லை
அதற்குப் புகழ்மாலைகள் தேவையில்லை
கச்சிதமாக இருந்தால் தான் காதல் புரிய வேண்டும் என்பதில்லை

அது உன் காதலை கட்டுடைத்து காட்டு என்கிறது
அத்தனை பிரியத்தையும் பொழியச்சொல்கிறது
இந்தக் கணத்தில் மட்டும் வாழ்ந்தபடி, முழுமையாகக் காதல் செய்க எனக்கேட்கிறது

காதல் என்ன சொல்கிறது தெரியுமா?
காதலிப்பவளே/காதலிப்பவனே!
நீ ஜொலித்திடு, பறந்திடு.
நீ புன்னகை. நீ அழு.
காயப்படு, மீண்டு வா. விழுந்திடு, எழுந்து நில்.
ஆடிக்களித்திடு, உழைத்திடு.
நீ நீயாகவே வாழ்ந்திடு.
நீ நீயாகவே மரித்திடுக.

அது போதும்.
அதுவே அதீதமானது. – Courtney A Walsh

தமிழில்: பூ.கொ.சரவணன்.

ஒரு அறிமுகம் – கமலா தாஸ்


இந்தியாவின் தனித்துவமான, ஆழமான பெண்ணியக் கவிகளில் முக்கியமானவரான கமலா தாஸ் அவர்களின் சுய சரிதையான ‘என் கதை’ வெளிவந்த நாள் இன்று என்பதை ஒட்டி கூகுள் ஒரு டூடூலை வெளியிட்டு இருக்கிறது. அவரின் சொந்த வாழ்க்கையின் சுவடுகள் கொண்ட ‘ஒரு அறிமுகம்’ கவிதை ஆங்கிலம் வழி தமிழாக்கமாக இதோ:

Celebrating Kamala Das

ஒரு அறிமுகம்- கமலா தாஸ்

எனக்கு அரசியல் தெரியாது, ஆனாலும், நான் பெயர்களையே அறிவேன்
அரசியலில் உள்ளவர்களின் பெயர்களை அறிவேன்
அவற்றை அச்சாரம் பிசகாமல் மீண்டும் மீண்டும் உச்சரிப்பேன்
வாரத்தின் நாட்களைப் போல, மாதங்களின் பெயர்களைப் போல, அவர்கள் பெயர்களை நேருவில் துவங்கி மடமடவென ஒப்பிப்பேன்
நான் இந்தியன், பழுப்பு நிறம், மலபார் மண்ணில் மலர்ந்தவள்
மூன்று மொழிகளில் பேசி, இரண்டில் எழுதி, ஒரு மொழியில் சிந்திப்பவள்
ஆங்கிலம் உன் அன்னை மொழியில்லை, அதனால், அதில் எழுதாதே என்றார்கள்
விமர்சகர்களே, நண்பர்களே, வருகை தரும் உறவுகளே
நீங்கள் எல்லாரும் என்னை ஏன் தனியாக விடக்கூடாது
நீங்கள் அனைவரும் நான் விரும்பும் மொழியில் என்னைப் பேச விடுவீர்களா?
நான் பேசும் மொழி எனதாகிறது
அதன் சிதைவுகள், விபரீதமான வெளிப்பாடுகள்
யாவும் என்னுடையவை, அவை என்னுடையது மட்டுமே
என் மொழி பாதி ஆங்கிலம், பாதி இந்தியன், வேடிக்கையானதும் கூட, என்றாலும், அது சத்தியமானது
நான் எவ்வளவு மானுடம் மிக்கவளோ அத்தனை மானுடம் என் மொழியிலும் வழிகிறது
அம்மொழி எந்தன் ஆனந்தங்கள், காத்திருப்புகள், நம்பிக்கைகளைக் குரலெடுத்துக் கொட்டுகிறது
காக்கைகளுக்குக் கரைதலை போல, சிங்கங்களுக்குக் கர்ஜிப்பதை போல என் மொழி என் பயன் காக்கிறது
அது மனிதரின் பேச்சு
அது மனதின் பேச்சு. அங்குத் தொலையாமல் அருகே தொடரும் பேச்சு அது
விழித்தும், கூர்ந்தும் இருக்கும் மனமது
புயலில் தொலையும் மரங்களின், மழையில் கரையும் பருவகால மேகங்களின்
சிதையில் எரியும் பிணத்தின் கோர்வையற்ற முணுமுணுப்புகளின்
கேளாத, காணாத குரல் அல்ல அது
நான் மழலையாக இருந்தேன்
நான் வளர்ந்து விட்டேன் எனப் பின்னர் அறிவித்தார்கள்
என் தோள்கள் ஊதி பெருத்தன
ஓரிரு இடங்களில் ரோமங்கள் தோன்றின
வேறென்ன கேட்பது என்று தெரியாமல் காதல் வேண்டுமெனக் கேட்ட போது
அவன் பதினாறு வயதினளை படுக்கையறைக்கு அழைத்துப் போய்த் தாழ்ப்பாளிட்டான்
அவன் என்னை அடிக்கவில்லை, என் துயர்மிகு பெண்ணுடல் வதைபட்டதாய் மருகிற்று
என் மார்பகங்களின், கர்ப்பப்பையின் சுமை என்னை நசுக்கியது
நான் பரிதாபமாகச் சுருங்கிப்போனேன்
அதன் பின்….ஒரு சட்டையை, என் தம்பியின் ட்ரவுசரை அணிந்து கொண்டேன்
முடியை வெட்டி, எந்தப் பெண்மையைக் காணாமல் கடந்தேன்
புடவையைப் போர்த்திக்கொள்
பொம்பளையா இரு, பொண்டாட்டியா இரு என்று அவர்கள் சொன்னார்கள்
துணிகளில் வேலைப்பாடுகள் செய்து வீழ்ந்து போ
சமையல்காரியாய் இரு, வேலையாட்களோடு சண்டையிடு
அனுசரித்துப் போ என்று கத்தினார்கள் வகைப்படுத்துபவர்கள்
சுவர்களில் அமராதே
திரைச்சீலைகள் மூடிய சன்னல்களுக்குள் ஊடுருவி பார்க்காதே
ஆமியாய் இரு இல்லை கமலாவாய் இரு
இல்லை மாதவிக்குட்டியாகவே இரு
எதோ ஒரு பெயரை, எதோ ஒரு வேடத்தைத் தேர்வு செய்யும் நேரம் நெருங்கிவிட்டது
கண்ணாமூச்சி ஆட்டங்கள் ஆடாதே
மனச்சிதைவோடு மற்போர் புரியாதே
பெருங்காமம் கொண்ட பெண்ணாகாதே
காதலன் கைவிட்டு அகல்கையில் அழுதழுது அவமானம் கூட்டாதே
நான் ஒரு ஆடவனைக் கண்டேன்,காதலித்தேன்
அவனை எப்பெயர் இட்டும் அழைக்க வேண்டாம்
அவன் எல்லா ஆடவரை போன்றவன்
அவர்களைப் போல அவனுக்கு ஒரு பெண் தேவை
எப்படி ஒவ்வொரு பெண்ணைப் போலவும் பிரியம் நாடி நான் பசலை கொள்கிறேனோ
நதியின் பெரும்பசி பிரவாகம் என்னுள்
ஓயாத அலைகடலின் காத்திருப்பு
நீ யார் என்று அனைவரையும் கேட்கிறேன்
விடை இது தான். நான் தான் அது
தன்னைத்தானே அழைப்பவர்களை இந்த உலகம் முழுக்கக் கண்ணுறுகிறேன்
உறைக்குள் வாள் போல உறைந்து இருக்கிறான்
நான் தனித்துக் குடிக்கிறேன்
நள்ளிரவில், உணவு விடுதிகளில், புதிரான நகர்களில் குடித்துக் கிடக்கிறேன்
நான் தான் சிரிக்கிறேன், நானே காதல் லீலைகள் புரிகிறேன்
பின்னர் நானே அவமானம் கொள்கிறேன்
பொய்கள் பேசி, தொண்டைக்குள் விம்மியபடி பொய்களோடு பிணமாகிறேன்
நானே பாவி, நானே புனிதர்
நான் பிரியத்துக்கு உரியவள்
துரோகங்கள் தாங்குபவள்
உனக்கில்லாத பேரின்பங்கள் எனக்கும் இல்லை
உனக்கில்லாத வலிகள் எனக்குமில்லை
நானே என்னை நான் என அழைத்துக்கொள்கிறேன் .

Image result for MADHAVIKUTTY

தமிழில்: பூ.கொ.சரவணன்

காயப்படாமல் காதல் புரிவது எப்படி?


 

பிரியமுள்ள ரஃபேலுக்கு,
நான் உன் மீது அளவில்லாத அக்கறை காட்டுகிறேன். நீயோ பாராமுகமாக இருக்கிறாய். அதனால் நான் உன்னை விட்டு விலக நேர்கிறது. இது என் குற்றமா? கண்மண் தெரியாமல் அன்பை பொழிவது தான் நான் செய்கிற தவறா? இல்லை, நான் தான் அளவுக்கு மீறி எதிர்பார்க்கிறேனோ?

அளவுக்கு மீறி ஆசைப்படுகிறேன் என்பது உண்மை என்றால், உன்னைக் காலத்திற்கும் காதலிக்க என்ன வழி? கட்டற்று காதலித்து, கையளவு அன்பை எதிர்பார்ப்பதே சிறந்த வழியா? இப்படிப்பட்ட கலவையான உணர்வுகளைக் காலத்துக்கும் தாங்கிக்கொண்டு பிரியத்தோடு இருக்க முடியுமா? அப்படிப்பட்ட ஆற்றல் அம்மாக்களுக்கும், துறவிகளுக்கும் மட்டுமே சாத்தியம். நான் அன்னையுமில்லை, அனைத்தும் துறந்த துறவியும் இல்லை. என்னால் எதிர்ப்பார்ப்பையும், பேரன்பையும் பிரித்துப் பார்க்க முடியாது.
எதிர்பார்ப்பையும், அக்கறை ததும்பும் அன்பையும் பிரித்து விட முடியுமா என்ன? இப்படிப்பட்ட அரிய நிலை குறித்து உளவியல் வல்லுனர்களும், ஞானிகளும் பேசி கேட்டிருக்கிறேன். இந்த எதிர்பார்ப்பற்ற நிலைக்கு உன்னதமான விழிப்புணர்வோ, அளவில்லாத துன்பமோ அழைத்துச் செல்லும். இன்னும் அந்த இடத்தை நான் சென்றடையவில்லை. சில நேரங்களில், எப்போதுமே அங்கே போக மாட்டேன் என்று தோன்றுகிறது.

என்னுடைய ஆன்மாவின் ஒரு பகுதி, அங்கே போகக்கூட விரும்பவில்லை. நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதற்கும், எதையாவது எதிர்பார்ப்பதற்கும் இடையே நூலிழை வேறுபாடே உள்ளது. அது சுய-மோசடிக்கும், சுய-மரியாதைக்கும் இடையே உள்ள வேறுபாடு. நாம் எல்லோரும், இரு பக்கமிருந்தும் பேரன்பும், புரிதலும் பாயும் உறவினில் திளைக்கும் பேறு பெறவேண்டியவர்கள்.

எதையாவது எதிர்பார்ப்பது இயல்பான ஒன்று. அதில் சுயமரியாதை கலந்துள்ளது. நாம் எல்லோரும், இரு பக்கமிருந்தும் பேரன்பும், புரிதலும் பாயும் உறவினில் திளைக்கும் பேறு பெறவேண்டியவர்கள்.

எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது மேன்மைமிக்க நிலையாக இருக்க வேண்டியதில்லை. அது காயப்படாமல் காதல் புரிய முயலும் முயற்சியாகவும் இருக்கலாம். அன்பின் நிழல் கூடப் படராத காலங்களின் கடுமை தாளாமல், அதிலிருந்து தப்ப முயல்கிறோம். அப்போது எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதே காதல் காலத்துக்கும் தொடர வழி என்கிற தத்துவம் மூளைச்சலவை செய்கிறது. அந்தச் சுயமோசடியில் மூழ்கி விடுகிறோம்.

அது சரியாக இருக்க வேண்டியதில்லை. ஒருவேளை, அளவு கடந்த அன்பை பொழியும் அந்த நபர் தவறானவரோடு காதல் கொண்டிருக்கலாம். தனக்கானதை கேட்டு பெறவோ, வேறொருவரை காதலிக்கவோ தைரியமில்லாமல் அங்கேயே துவண்டு நிற்கலாம். ஒரு வேளை, தன்னுடைய காதலோடு கலந்து பாயும் எதிர்பார்ப்புகளை ஏந்திக்கொள்ளும், உணர்வுகளை மதிக்கும் உன்னதமான உறவை தேடி கண்டடைவதே அவருடைய முதல் வேலையாக இருக்க வேண்டும்.
ஆனால், என்ன செய்வது? உயிர் கரையும் உறவினில் எது சரியான எதிர்பார்ப்பு என எப்படித் தெரிந்து கொள்வது? எல்லாருக்கும் பொருந்த கூடிய ‘ஒரு உறவில் எது சரியான எதிர்பார்ப்பு’ என வழிகாட்டும் கையேடு எதுவும் எழுதப்படவில்லையே?

நமக்கு நாமே எது எதிர்பார்ப்பின் எல்லை என்று முடிவு செய்துகொள்ள வேண்டும். நாம் எப்படி அன்பு செய்யப்பட வேண்டும் என நாமே அறிந்து கொள்ளவேண்டும்.
ஆனால், நமக்கானவர்கள் பிரியத்தை எப்படிப் பொழிய வேண்டும் என்று தெரிகிறதா? அப்படியே தெரிந்தாலும், அதை எப்படி நம் காதலருக்கு கடத்துவது? அப்படிப்பட்ட மொழியைக் கண்டறியாத சபிக்கப்பட்ட சமூகம் அல்லவா இது?
ரஃபேல்! எப்படி உன்னிடம் அதைச் சொல்வது? என்ன வார்த்தைகளைப் பயன்படுத்துவது? நான் “தேவை”, “ஆசை”, “வேதனை”, “தனிமை” “அச்சம்” முதலிய வார்த்தைகளை உதிர்க்கலாமா? .
உனக்கு இந்தக் கடிதத்தை அனுப்பியே ஆக
வேண்டுமா?

Related image

இதற்குப் பதிலாக, நீ என்னை எப்படிக் காதலிக்க வேண்டும் என்று ஏங்கி தவிக்கிறேனோ, அதைப் போல உன்னைக் காதலிப்பதன் மூலம் என் கண்ணீரின் துளிகள் உன்னை நனைக்குமா? நீ எனக்கானவன் என்றால், பழத்தோட்டத்தின் மரங்கள் ஒன்றுக்கு ஒன்று இடிக்காமல் கிளைகளைப் பரப்புவதைப் போல, என் பிரியத்தின் பேரொளியை நீ பருகிக்கொள்வாய் இல்லையா? உன் கிளைகள் எனக்கு வழிவிடாமல் போகும் என்றால், நாம் காவிய காதலர்கள் இல்லை. சத்தமில்லாமல் நான் அகல்வதே சரியாக இருக்கும்.

Image result for how to love without getting hurt

எந்தச் சுவடும் இல்லாமல் அகல்வது ஒன்றும் எனக்குப் புதிதில்லையே? கண்டுகொள்ளாத உனக்காகத் தருவதற்கு என்று என்னிடம் இருக்கும் ஒரே கண்ணியமிகுந்த செயல்பாடு அது தானே? என் இதயத்தை இருகூராகப் பிளக்கும் இக்கணங்களில் அறிவை பயன்படுத்த முயல்கிறேன். அப்போதெல்லாம், தலையெழுத்தை மாற்றவா முடியும் என்று தோன்றுகிறது. இதைக்கூட நீ காதல் மிகைத்து பொங்கி வழியும் பிதற்றல் என்று சொல்வாய். எனக்கு இது ‘எதோ ஒன்று குறைகிறது’ என்று என் இதயம் குமுறும் வழியாகவே தோன்றுகிறது.

அன்னா 

Labyrinths பக்கத்தில் காணப்பட்ட பிலிப் ஜானின் எழுத்தின் தமிழாக்கம் இது.

இப்படித்தான் உன் இனியவளை இழப்பாய்!


இப்படித்தான் உன் இனியவளை இழப்பாய்:
அன்றொரு காலத்தில் அவளிடம் அணு அணுவாய் ரசித்தவை யாவும்
இன்றோ இம்சையாய் தெரியும் 
அவளின் அப்பாவித்தனம் எளிதாய் ஏமாறும் வெகுளித்தனமாக வெறுக்க வைக்கும்
அவளின் கரிசனம், மனநோயாய் புரியும்
அவளின் அறிவின் வெளிப்பாடு பாதுகாப்பின்மையின் பாய்ச்சலாகக் காட்சியளிக்கும்
அவளின் அசரவைக்கும் அழகும் அலுத்து போகும்
சில வகை வெளிச்சங்களில் அவளின் அழகு அகோரமாகத் தோன்றக்கூடும்
அவளின் ஆசை உணவு அமுதமாக இருந்தது போய்
உப்புசப்பற்றதாக உயிரை எடுக்கும்
ஆனந்தமாக அவள் சிரிக்கையில் எல்லாம்
நம்பமுடியாத அளவுக்கு முட்டாளாகத் தெரிவாள்
அவளின் இயல்பான பிரியத்தை, சவால்களில் இருந்து தப்பிக்கும் சாதுரியம் எனக் கருதுவாய்
உணர்ச்சிவசப்படுகையில் சிறுபிள்ளையாகச் சிறுத்துப் போவாள்
அவளின் அரசியல் பத்தாம்பசலித்தனமாகத் தோன்றக்கூடும்
அவள் ஆடை அணியும் அழகு ஆயிரம் மின்னலாக
ஆசையைக் கூட்டிய காலங்கள் கழிந்து
வெகு வாடிக்கையான ஒன்றாக, கேலிக்குரியதாகப் புலப்படும்
நீ ஆச்சரியப்படுவாய்:
‘இன்று எரிச்சலூட்டும் இவளா என்னவள்?
இதுவா என் இனியவள்?
இல்லை அவளை அளவோடு அன்பு செய்பவன் நான் தானோ?’ 

Image may contain: 1 person, standing and outdoor

என்னவனே,
உன்னை இன்னமும் காதலிக்கும் இந்தக் கணத்தில் எழுதுகிறேன்
காலமும், பிற கள்வர்களும்
உன்னைப்பற்றிய என் உன்னத நினைவுகளை உருக்குலைப்பதற்கு முன்பே
இதை இப்போதே எழுதுகிறேன்
இன்னும் சில வருடங்களில்
அன்பற்று உன்னை அந்நியனாகப் பார்க்காமல் இருப்பேனாக
நான் பிரார்த்திக்கிறேன்
இப்படியே இறுதிவரை பிரியம் செய்ய வேண்டும்.
வருங்காலத்தில் வழிதவற போகும் பேரன்பிற்கான இரங்கற்பா இது
என்ன ஆனாலும் நான் தயாராக இருக்க வேண்டும்
காதல் கண்டடைய முடியாத புதிரான பாதைகளில் பயணிக்கிறது
ஏன் அன்பு அகலாமல் அப்படியே இருந்துவிடக்கூடாது? – Labyrinths பக்கத்தில் பிலிப் ஜான் எழுதியிருக்கும் மடலின் தமிழாக்கம் இது.

தமிழில்: பூ.கொ.சரவணன்

புகைப்பட நன்றி: Jacob Ufkes on Unsplash

ஒரு மாநகர் விட்டு நீங்குதல்


ஒரு மாநகர் விட்டு நீங்குகையில்
அங்கே சேர்த்த பிரியங்களைச் சிதற நேரிடுகிறது
அனல் காற்றோடு வரவேற்று சாரலோடு வழியனுப்புகையில் மழை வெயில் தகிக்கிறது
நகர மறுத்த சாலை வாகனங்களின் இடையே கண்டடைந்த தேவதைகள் யாரும் கையசைத்ததில்லை
மொழிகள் நாடி விரைகையில் மவுனங்களால் ஒரு மாநகர் விடை கொடுக்கிறது
நீர் அற்ற நாட்களில் கிராமத்து குழாயடியாய் குறுகி நின்றது அப்பெருநகரம்
கண்ணாமூச்சி சிறுவர்கள் அற்றதொரு வெயில் காலத்தில் பொழிகின்றன பெயரற்ற சாபங்கள்
பேரிரைச்சல்களிடையே முத்தமிடும் காதலர்களின் கண்களைச் சந்திக்க முடியாத
பிரியம் நீத்த இளைஞனாய்
அடுத்த மாநகரின் மரணம் நோக்கி நடக்கிறான் அவன்

கடவுளின் மரணமும், சாத்தானின் ஆசியும்


ஒரு கரம் கூட வேண்டாம்
திருப்பிக்கொள்ளும் முகங்களின் கரங்கள் நாடி நின்றது போதும்
ஒரு ஆறுதலை மறுதலிப்பது எளிது
உற்றவர் அகன்றதும் உருளும் நீர்த்துளி விழுவதற்குள்
நடக்கப்பழகுவது நலம்
பிரியங்கள் பச்சாதாபமாகத் தெரிவதற்குள் ஒரு தற்கொலைக் கடிதம் முடித்துவிடு
கடித முடிவில் பெயர் எழுதுவதற்குள் கணம் கணமாய்ச் சாவதற்கு ஆயத்தம் ஆகு
நடுக்கங்கள் தலைதட்டி சிரிக்கையில் பூனைக்குட்டியிடம் பொங்கி அழு
நக்கியபடி நகரும் அந்தப் பிராணியின் கண்களில் ஒளிரும் காலம் ஒரு வாதை
திறக்கப்படாத குறுஞ்செய்தியை அழிப்பதாகத் தனிமைகள் தீர்ப்பது இருப்பதில்லை
வசந்தகாலங்கள் வருகையிலும் வெம்மைகள் விரித்தாடும் பள்ளத்தாக்கின் முனையில் அமர்ந்தபடி கதைத்து முடி
ஒரு கரம் கூட வேண்டாம்
ஒரு கடவுளின் மரணம் கடப்பதற்குள் சாத்தானின் ஆசிகளைப் பொறுக்கியபடி அடுத்தப் பிரிவிற்கு, விடை கொடுத்தலுக்கு விண்ணப்பம் எழுது