பெண் குழந்தையைப் பொத்தி வளர்ப்பவரா நீங்கள்? ‘தங்கல்’ திரைப்படத்தைப் பாருங்கள்!


ஹரியானாவின் கதை இந்தியாவின் பெரும்பான்மை பெண்களின் கதையும் உண்டு. ஹரியானாவில் ஆண்:பெண் விகிதாசாரம் இந்தியாவிலேயே குறைவான ஒன்று. குழந்தைத் திருமணங்கள் அங்கு அன்றாட யதார்த்தம். காப் பஞ்சாயத்துகள் எனப்படும் வடநாட்டு கட்டப் பஞ்சாயத்துகள் நவ நாகரீக ஆடை அணிகிற பெண்களைத் தண்டிப்பது, சாதி அமைப்பை வலுவாகத் தூக்கிப் பிடிப்பது, ஆணவப் படுகொலைகளைக் கூட்டாகச் செய்வது ஆகியவற்றைத் தொடர்ந்து செய்கிறவை. ‘முட்டிக்குக் கீழ்தான் மூளை’ என அந்த மாநில ஆட்களை எள்ளி நகையாடுகிற அளவுக்கு நிலைமை மோசம். அப்படிப்பட்ட ஊரில் இருந்து தன்னுடைய மகள்களை மகத்தான சாதனைகளை நோக்கி நகர்த்தும் ஒரு தந்தையின் நிஜக்கதைதான் தங்கல்.

(கதையின் நெகிழ்வான தருணங்கள் இங்கே பேசப்பட இருக்கிறது. படத்தை இன்னமும் பார்க்காதவர்கள் படிப்பதை தவிர்க்கலாம்.)

ஒரு பெண்ணை எப்படி வளர்ப்பது? கண்ணின் மணியாக, கோழி தன்னுடைய குஞ்சை அடைகாப்பது போல வளர்ப்பது தான் பெரும்பாலான குடும்பங்களின் மனப்போக்கு. “ஐயே பொட்டப்பொண்ணு!” எனப் பல குடும்பங்கள் கதறுவது ஊரக இந்தியாவின் உண்மை முகம். காரணம் வரதட்சணை கொடுத்துப் பெண்ணை எப்படியேனும் கட்டிக் கொடுப்பது என்பதே அந்தப் பெண்ணுக்குத் தாங்கள் செய்யக்கூடிய மகத்தான சேவை என்று பதிய வைக்கப்பட்டு இருக்கிறது.
தன்னளவில் நிராசையான இந்தியாவிற்குச் சர்வதேச பதக்க கனவை தன் மகள்களின் வழியாகச் சாதிக்க நினைக்கும் மகாவீர் சிங்கிடம் அவரின் மனைவி கேட்கிறார்,
“இப்படிக் கிராப் வெட்டி ஆண் பிள்ளைகள் போல ஷார்ட்ஸ் போட்டு வளர்த்தால் எந்தப் பையன் கட்டிப்பான்?”

Image may contain: 5 people, people standing

“என் பொண்ணுங்களுக்கு ஏத்த மாப்பிள்ளைக்கு அலைய மாட்டேன். அவங்களைத் தைரியமா, நம்பிக்கையுள்ளவங்களா வளர்ப்பேன். அவங்களுக்கான மாப்பிளைகளை அவங்களே தேடிப்பாங்க.” என்று அந்த மல்யுத்த நாயகன் சொல்கையில் சிலிர்க்கிறது.

பெண்கள் வெளியிடங்களில் புழங்குவதே பெரும்பாலும் தடுக்கப்பட்ட மாநிலத்தில் ஆண்களுடன் மகளை மல்யுத்தம் செய்ய வைக்கிறார். ஊரே எள்ளி நகையாடுகிறது. வகுப்பில் ஆண் பிள்ளைகள் சீண்டுகிறார்கள். ஆனால், தேசியளவில் தங்கப் பதக்கத்தை ஜெயித்து வருகையில் ஊரே திரண்டு தங்களின் மகளாக வாரியணைத்துக் கொள்கிறது.
பெண்களை அழகுக்காக மட்டுமே ஆண்கள் ரசிப்பார்கள் என்பது பொதுபுத்தி. சமீபத்தில் பி.சாய்நாத்தின் ‘PARI’ தளத்துக்காகப் பருத்தி வயல்களில் இருந்து பாராலிம்பிக்ஸ் நோக்கி என்கிற கட்டுரையை மொழிபெயர்த்தேன். அதில் வளர்சிக் குறைபாடு உள்ள அம்பிகாபதி எனும் பெண் தேசிய அளவில் சாதித்த பொழுது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை இப்படிப் பதிவு செய்திருந்தார்: “எனக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே ஊரில் இருக்கிறது. ஒவ்வொருமுறை வெற்றியோடு அவர் திரும்புகிற பொழுது எண்ணற்ற கட்டவுட்களுடன் எங்க ஊரின் ரசிகர்கள் (பெரும்பாலும் ஆண்பிள்ளைகள்) வரவேற்கிறார்கள். “ புற அழகைத் தாண்டி அளப்பரிய சாதனைகள் சார்ந்தும் சமூகம் கொண்டாடும் என நம்பிக்கை தரும் தருணங்கள் அவை.

மகாவீர் சிங் பெண்ணியவாதி இல்லை. அவரின் மனைவியை வீட்டு வேலைகளே செய்ய வைக்கிறார். போயும், போயும் பெண் குழந்தை பிறந்ததே என்று முதலில் வருந்துகிறார். “எதுனாலும் தங்கம் தங்கம் தான்” எனத் தெருச்சண்டையில் மகள்கள் ஈடுபடும் பொழுது உணர்கிறார். எதிர்த்து ஆட பெண்கள் இல்லாத களத்தில்,, ஆண்களோடு மோதவிட்டு வார்த்து எடுக்கிறார். வாய்ப்புகள் இல்லை, வீட்டை விட்டு எப்படி வெளியே அனுப்புவது என அஞ்சும் பெற்றோர்கள் அந்தக் காட்சியில் விழித்துக் கொள்ளலாம்.

தந்தைக்கும், பயிற்சியாளருக்கும் இடையேயான போராட்டத்தில் சிக்கிக் கொள்ளும் மகாவீர் சிங் ‘எந்தத் தேர்வும் எனக்கு இல்லை.’ என்று வயிற்றைக் கழுவ வேலையில் தன்னுடைய மல்யுத்த கனவுகள் மலர்ந்த காலத்தில் தங்கிவிட்டார். அவரின் சர்வதேச கனவுகள் சாம்பலானது. மகள் சாதிக்கிறாள் என்று தெரிந்ததும் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கையோடு மல்யுத்தம் செய்கிறார்.

இந்தியாவின் தனிநபர் பதக்கங்களில் பெண்களின் பங்களிப்பு ஆண்களைவிட மேம்பட்டதாக இருக்கிறது. போதுமான வாய்ப்புகள் இன்மை, ஏளனம், வறுமை என்று பலவற்றை ஆண் வீரர்களைப் போல அவர்கள் எதிர்த்துப் போராடுவது ஒருபுறம் இவை அனைத்துக்கும் மேலே மகாவீர் சிங் சொல்வதைப் போல, “கேவலம் பொண்ணு” என்று பார்க்கும் சமூகத்தின், ஆண்களின் அன்றாடப் போரை எதிர்த்து கத்தி சுழற்றிய தங்கங்கள் அவர்கள்.

இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த கறிக்கடை பாய் கோழிக் கறியை குறைந்த விலையில் மகாவீர் சிங்கின் மகள்களுக்குத் தருகிறார். உச்சபட்ச காட்சிக்கு முன்னால் தன்னுடைய மகள்கள், “அப்பா அக்கா ஆடுறதை பாக்கணும்!” என்று கேட்டுக் கொண்டதற்காகப் பாய் அவர்களை வண்டியேற்றி அழைத்து வருகிறார். மகாவீர் சிங் சொல்கிறார், ‘மகளே! நீ நாளைக்கு நன்றாக ஆடவேண்டும்., உன்னை யாரும் மறக்கவே முடியாதபடி ஆடவேண்டும். உன் தங்கம் பல பெண்களை
அடக்குமுறைகளை, அடுப்படியைத் தாண்டி அடித்து ஆட உற்சாகப்படுத்தும்.’

Image result for dangal

சீதையைப் போல இரு, தமயந்தியைப் போல இரு, பெண்ணாய் இரு.” என்றெல்லாம் சொல்லாமல், ‘பி.டி. உஷாவைப் போல வா, அஞ்சு பாபி ஜார்ஜ் போல அசத்து, தீபிகா போல அடித்து ஆடு, சிந்து போல பெருமை தேடித் தா, சானியா போல சரித்திரம் படை.’ என ஊக்குவிக்க படம் சொல்லித் தருகிறது.

நிஜ நாயகன் மகாவீர் சிங்குக்கும், கீதா, பபிதா எனும் தங்கத் தாரகைகளுக்கும், அமீர் கானுக்கும், இந்தப் படக்குழுவினருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். கிரிக்கெட்டை தாண்டி பல்வேறு விளையாட்டுகளின் மீதும், பெண்களைப் பொத்தி வளர்க்கும் போக்கை மாற்றிக் கொள்ளவும் இந்தப் படம் ஊக்கப்படுத்தும்.

எளிமையான வாழ்க்கையைக் கேட்காதீர்கள், எதிர்த்து போராட மகள்களுக்குச் சொல்லித் தாருங்கள். பஞ்சு மெத்தையில் மடியில் படுக்க வைக்காதீர்கள். மண்ணில் மிருகங்களோடு வாழவேண்டிய நிலையில் நம்பிக்கை தாருங்கள். ஆடைகளிலும், முடியிலும், பெண்ணின் ஆடம்பரத் திருமணத்திலும் இல்லை குடும்பத்தின் பெருமை என்று அடித்துச் சொல்கிறது இந்தப் படம்.