இந்தியா என்கிற கருத்தாக்கம்


ஆங்கிலத்தில் நூல்களை வாசிக்கப் பழகிய ஆரம்பக் காலத்தில் எனக்குத் தற்கால இந்தியாவைப் புரிந்து கொள்ள உதவிய நூல்கள் என்று இரண்டை சொல்ல முடியும். ஒன்று ராமச்சந்திர குஹாவின் ‘India After Gandhi’, இன்னொன்று ‘Idea of India’. சுனில் கில்நானியின் கவித்துவமான, பல்வேறு அடுக்குகள் கொண்ட எழுத்து நடையில் வெளிவந்த இரண்டாவது நூலை பல முறை வாசித்து வியந்திருக்கிறேன்.

அரசியல் அறிவியல் நூல் என்றாலும் அது மான்டோ, ஏ.கே.ராமனுஜன் என்று இலக்கியமயமாகி இளக வைக்கும். அணு குண்டு வெடிப்புக்கும், கொடிய வறுமைக்கும் இடையே சிக்கிக்கொண்டு நிற்கும் இந்தியாவைப் பல்வேறு குரல்களோடு முன்னிறுத்தும். திடீரென்று சண்டிகார் நகரின் முன்னால் நிறுத்தி நவீன இந்தியா எழும்புவதைக் கண்முன் நிறுத்தும். 

Image result for சுனில் கில்னானி

மேற்கை போலச் சர்வ வல்லமை கொண்ட அரசுகள் இந்தியாவில் ஏன் நிரந்தரமாக எழ முடியவில்லை என்கிற கேள்விக்குச் சுனில் கில்நானி தரும் பதில் முக்கியமானது. ஏன் பொருளாதார ரீதியான, ஆன்மீக ரீதியான விடுதலையை முன்னெடுக்காமல் அரசியல் ரீதியான விடுதலைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது? ஒற்றை மத நாடாகவோ, சர்வ வல்லமை பொருந்திய கம்யூனிச அரசாகவோ இந்தியா மாறாமல் போனது ஒன்றும் விபத்தில்லை என்பது நூலை வாசிக்கையில் புலப்படும். இந்தியா பொருளாதாரத்தில் தவறவிட்ட தருணங்கள் ஆதாரங்கள், மேற்கோள்களின் வழியாக நம்முடைய முன்முடிவுகளைத் தகர்க்கும். 

(பேராசிரியர் சுனில் கில்நானி)

Image result for சுனில் கில்னானி
இந்தியா என்கிற கலாசாரப் பகுதியை 1899-ல் ஒரு சட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த ஆட்சிப்பகுதிக்கான அடையாளமாக ஆங்கிலேயர்கள் மாற்றினார்கள். நவீன இந்தியாவில் யார் தான் இந்தியர்கள்? இந்து அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட சவார்க்கரின் இந்து தேசியம் ஒரு குரல் என்றால், பன்மைத்துவமும், மதச்சார்பின்மையும் கொண்டிருந்த மதத்தைக் கைவிடாத காந்தியின் இந்தியா வேறொரு குரலாக இருந்தது. நேருவின் கனவோ மதத்தைத் தூர வைத்து, கடந்த கால வரலாற்றின் கலாசாரக் கலப்பில் இருந்து ஒற்றுமைக்கான அடிப்படையை விதைக்க முயன்றது. ஆங்கிலேயர் அகன்று அரை நூற்றாண்டு காலத்திற்குப் பிறகும் யார் இந்தியர் என்கிற கேள்விக்கான போராட்டம் நீண்டு கொண்டே இருக்கிறது.

இந்தியர்கள் முன் இரு வகையான தேர்வுகள் இருக்கின்றன: தூய்மையற்ற, தொடர்ந்து வளர்த்தெடுக்கப்படவேண்டிய, பன்மைத்துவ இந்தியா ஒன்று. இன்னொன்று தன்னைப்பற்றி மட்டுமே கவலைப்படும், பிறரை தூய தேசியத்தின் பெயரால் ஒதுக்கி வைக்கும் கருத்தாக்கம். எதைத் தேர்ந்தெடுப்பது என்கிற பொறுப்பைச் சுமக்கிற தலைமுறையாகத் தற்போதைய தலைமுறை இருக்கிறது.

நானூறு பக்கங்களில் விரிந்திருக்கும் இந்நூல் வலதுசாரி, இடதுசாரி பார்வை கொண்ட நூல் என்கிற வகைமைகளுக்குள் அடைக்க முடியாத ஒன்று. இது பொருளாதாரம் துவங்கி சமூகம் வரை எல்லாவற்றைக் குறித்தும் தீவிரமான விமர்சனங்களையும், ஆழபற்றிக் கொள்ள வேண்டிய நம்பிக்கைகளையும் வெளிச்சமிட்டு நகர்கிறது. இந்தியா என்கிற கருத்தாக்கம் கடந்த காலக் கதைகளில் இல்லை, அது நிகழ்காலத்தில் கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று இந்தப் பிரமிக்க வைக்கும் நூல் புரிய வைக்கிறது. பயணங்கள் போவதற்கு இறுதி அத்தியாயம் ஊக்குவிக்கும். பைத்தியக்கார விடுதிக்கு அனுப்பப்பட வேண்டிய அடிப்படைவாதிகள் குறித்து ரசனையாகக் கேலி செய்யும். 

Image result for இந்தியா என்கிற கருத்தாக்கம்

கைவிட்டு விடக்கூடாத ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ பெருமளவில் சிக்கலானது, எப்போதும் நிறைவைத் தராத ஒன்று, ஆனால், நம் இருப்பிற்கு அது இன்றியமையாதது. இந்தியாவில் ஜனநாயகம் இன்னமும் உயிர்த்திருப்பதே நமக்கான நம்பிக்கை ஒளி என்று உணர வைக்கும் உன்னதம் இந்நூல். அனைவருக்குமான இந்தியா என்கிற கருத்தாக்கம் தோற்றுப்போனால் அதற்கு அதை எதிர்ப்பவர்கள் மட்டுமே காரணமில்லை. இந்தியா என்கிற அற்புத கருத்தாக்கத்தை மக்களிடம் இன்னமும் உரக்க சொல்லாத, அதை இன்னமும் தீவிரமாக முன்னெடுக்கத் தவறிய அனைவரும் அந்தக் குற்றத்துக்குக் காரணமாகத் திகழ்வார்கள் என்று நூலின் இருபதாவது ஆண்டுப் பதிப்புக்கான முன்னுரையில் சுனில் கில்நானி குறித்திருப்பது எத்தனை சத்தியமானது?

இந்த நூலை தமிழில் மூலத்தின் ஆன்மா சிதையாமல் கொண்டுவரும் முயற்சியில் அக்களூர் ரவி அவர்கள் பெருமளவில் வெற்றிப் பெற்றிருக்கிறார். செறிவான இந்நூலை சற்றே முயற்சித்து வாசித்தால், அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளும், புரிபடாத தேசத்தின் செயல்பாடுகளும் பளிச்செனத் துலங்கும். புதிய கோணத்தில் இந்தியாவும், சமூகமும் புரியும். 

இந்தியா என்கிற கருத்தாக்கம் – சுனில் கில்நானி
தமிழில்: அக்களூர் ரவி
சந்தியா பதிப்பகம்
380 பக்கங்கள்
315 ரூபாய்

 

கருத்துரிமை நெரிப்பின் கலங்க வைக்கும் வரலாறு – 2



ஆபாசம், அவமதிப்பு, அரசியலமைப்பு:
இந்தியாவில் காலனிய காலம் துவங்கி இன்று வரை கருத்துரிமை எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது என்பது குறித்த அபினவ் சந்திரசூடின் ‘Republic of Rhetoric’ நூல் அறிமுகத்தின் கடைசிப் பாகம் இது.எது ஆபாசம்?:
ஆபாசத்துக்கு உரிய ஒன்று கருத்துரிமையின் கீழ் வராது. எது ஆபாசம் என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றங்கள் காலனிய காலத்திலும், விடுதலைக்குப் பின்னரும் ஹிக்லின் சோதனையைப் பயன்படுத்தின. இந்தச் சோதனை ஒழுக்கமற்ற மனதானது எப்படி ஒரு படைப்பை காணும் என்பதைக் கணக்கில் கொண்டு ஆபாசம் எது என்பதை வரையறுத்தது. இதனால், ஒரு படைப்பில் ஏதேனும் ஒரு வரியோ, இல்லை பத்தியோ உடலுறவு, பாலியல் வர்ணனை சார்ந்து இருந்தால் நூலே ஆபாசம் என்று முடிவு கட்டப்பட்டது. காலனிய நீதிமன்றங்களில் ஆசன் என்கிற வார்த்தை இடம்பெற்றது, உடலுறவு கொள்ளச் சத்தான உணவு உண்ணுவது, கண்ணன் ராதையின் மார்பை அழுத்தியது, உடலுறவுக்கு அழைத்தது, வீதி நாடகம் எனும் தெலுங்கு படைப்பில் பெண்ணின் பாலுறுப்புகள் துன்புறுத்தப்பட்டது குறித்த விவரணை எனப் பலவற்றை ஆபாசம் என அறிவிக்கச் சொல்லி வழக்குகள் தொடரப்பட்டன. நபகோவின் லோலிதா நாவல் பதினொன்று அல்லது பதிமூன்று வயது பெண்ணோடு உடலுறுவு கொள்ளும் ஆண் குறித்த நாவல் என்பதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கராக்கா என்பவர் மொரார்ஜி தேசாய்க்குக் கடிதம் எழுதினார். நேரு தலையிட்டு நூலை வெளியிட வைத்தார்.

Image result for republic of rhetoric
Lady Chatterley’s Lover என்கிற டி.ஹெச்.லாரன்ஸ் நாவல் ஆபாசமாக இருக்கிறது எனச் சொல்லி அதைப் பம்பாயில் விற்ற ரஞ்சித் உதேஷி கைது செய்யப்பட்டார். அந்தக் கைது செல்லும் என்று தீர்ப்பளித்த நீதிபதி ஹிதயத்துல்லா கலை, இலக்கியத்தில் இருக்கும் காமம், நிர்வாணம் என்பது ஒட்டுமொத்தமாக மோசம் கிடையாது. காமம் என்பதே மோசமானதோ, மனிதரை பாழ்படுத்துவதோ இல்லை. அதே சமயம் அந்தப் படைப்பு பொது நன்மைக்குப் பயன்படுகிறதா என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். அது பொது நன்மையை உறுதி செய்யும் படைப்பா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும் என்று தீர்ப்பில் எழுதினார். ஹிக்லின் சோதனையைப் பயன்படுத்தி அந்நாவல் ஆபாசமானது ஆகவே அதை விற்றது குற்றம், காம விருப்புடைய மனங்களைக் காக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்றும் அறிவித்தார். இந்தத் தீர்ப்பு எது ஆபாசம் என்பதைத் தீர்மானித்தாலும், காமத்தை பேசும் எல்லாப் படைப்புகளும் ஆபாசம் இல்லை என்று அறிவித்தது.
        அதே சமயம், உச்சநீதிமன்றம் தேவிதாஸ் ராமச்சந்திர துலிஜாபுர்கர் வழக்கில் காந்தி முதலிய தேசத்தலைவர்கள் குறித்து ஆபாசமாக எழுத கூடாது என்று தீர்ப்பு எழுதியது.  அவீக் சர்க்கார் தன்னுடைய செய்தித்தாளில் போரிஸ் பெக்கர் தன்னுடைய காதலியோடு நிற்கும் அரை நிர்வாண படத்தை நிறவெறிக்கு எதிரான அடையாளமாக வெளியிட்டார். அதை ஆபாசம் என்று அறிவிக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. ஒரு படைப்பை முழுமையாகக் கணக்கில் கொண்டே அது ஆபாச உணர்வுகளைத் தூண்டுகிறதா என்று முடிவு செய்ய வேண்டும் என்று தீர்ப்பு எழுதியதன் மூலம் உச்சநீதிமன்றம் ஹிக்லின் சோதனையில் இருந்து ஓரளவிற்கு நகர்ந்து வந்தது.
Image result for boris becker aveek sarkar
   குஷ்பு கற்பு சார்ந்து கருத்து தெரிவித்ததற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில்,’காம உணர்ச்சியை, மோக சிந்தனைகளைத் தூண்டிவிடுவது ஆபாசமானது. அவர் பாலியல் இச்சைகளைத் தூண்டக்கூடிய எதையும் சொல்லிவிடவில்லை….திருமணம் என்பது சமூக அமைப்பு தான். எனினும், இந்தியாவில் பல்வேறு பூர்வகுடிகள் திருமண அமைப்புக்கு வெளியே உடலுறவு கொள்வது வழக்கமாக இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.’ என்று விவரித்துக் குஷ்பு பேசியது ஆபாசமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.
Image result for khusboo and supreme court
ராஜாஜி இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த போது 1930-ல் நடந்த சிட்டாகாங் ஆயுத புரட்சியை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஒன்று வருவது குறித்துக் கவலை தெரிவித்தார். அந்தத் திரைப்படம் ‘அரை வேக்காட்டுக் கல்வி கொண்ட மக்களைக் குற்றம் செய்வதற்குத் தூண்டி விடும்’ என்று அவர் பயந்தார். அதனைத் தொடர்ந்து தணிக்கை வாரியம் ஏற்படுத்தப்பட்டது. ராஜ் கபூர் வழக்கில் உச்சநீதிமன்றம் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கிய பின்னரும் ஒரு திரைப்படம் ஆபாசமாக இருக்கிறது என வழக்கு தொடர முடியும் என்று தீர்ப்பு எழுதியது. அதைத் தொடர்ந்து எண்பத்தி மூன்றில் திரைப்படச் சட்டம் திருத்தப்பட்டுத் தணிக்கை வாரியம் சான்றிதழ் தந்த பிறகு ஒரு திரைப்படம் ஆபாசம் என வழக்கு தொடர முடியாது என்று ஆக்கப்பட்டது.

        கேபிள் தொலைக்காட்சி விதிகள் தொலைக்காட்சிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. நல்ல ரசனை இல்லாதவற்றைக் காட்டக்கூடாது. எந்த இனக்குழு, மொழிக்குழுவையும் மோசமாகக் காட்டக்கூடாது. மூடநம்பிக்கைகளை வளர்க்க கூடாது. பொதுப் பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும் (இதனால் தான் தொலைக்காட்சிகள் தாங்களே பல படங்களைத் தணிக்கை செய்து ஒளிபரப்புகின்றன) என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. மேலும், செய்தித்தாள்கள் போல அல்லாமல் தொலைக்காட்சிகளுக்கு உரிமம் தேவைப்படுவதால் அவை இவற்றுக்குக் கட்டுப்படுகின்றன. வானொலி நிலையங்கள் அனைத்திந்திய வானொலி எந்த விளம்பர, செய்தி நெறிமுறைகளைப் பின்பற்றுகிறதோ அதை அனைத்து வானொலி நிலையங்களும் பின்பற்ற வேண்டும். இன்னும் மோசமாக, அரசு ஒப்புதல் பெற்ற அரசியல் செய்திகளையே அவை அலைபரப்ப முடியும்.

நீதிமன்ற அவமதிப்பு:
நீதிமன்ற அவமதிப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாக இங்கிலாந்தில் இருந்தாலும் அது அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. . நீதிமன்ற அவமதிப்புக் கருத்துரிமையில் சேர்க்கப்படாமல் கட்டுப்படுத்தப்படச் சில காரணங்களை அபினவ் முன்வைக்கிறார். நீதிபதிகள் தங்கள் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக வாதிடவோ, பதில் சொல்லவோ இயலாது. அப்படியே வழக்குத் தொடர்ந்தாலும் அது வெகுநாட்களுக்கு இழுத்துக் கொண்டே இருக்கும். மேலும், நீதிபதிகள் நீதிமன்றத்தை நடத்த விடாமல் தொல்லை கொடுப்பவர்களைக் கட்டுப்படுத்தவும், நீதிமன்றத்தில் குழப்பம் விளைவிப்பவர்களை எச்சரிக்கவும் நீதிமன்ற அவமதிப்புத் தேவைப்படுகிறது. எனினும், இது கருத்துரிமையை நெரிப்பதாக, கட்டற்றதாக இருக்க வேண்டியதில்லை என்பது ஆசிரியரின் பார்வை.

Image result for contempt of court india

நேரு செய்த நீதிமன்ற அவமதிப்பு:
எல்.ஐ.சி. முந்த்ரா என்பவரிடம் சந்தை விலையை விடக் கூடுதல் விலைக்குப் பங்குகளை வாங்கியது. இது சார்ந்து எல்.ஐ.சி. நிர்வாகிகள், நிதித்துறை செயலர், நிதி அமைச்சர் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டார்கள். விவியன் போஸ் என்கிற வங்கத்தைச் சேர்ந்த நீதிபதி விசாரணை மேற்கொண்டார். அவர் நிதித்துறை செயலாளர், எல்.ஐ.சி. தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிக்கை சமர்ப்பித்தார். இது குறித்து நேருவிடம் கேட்ட போது, ‘அருமையான அனுமானம்… விவியன் போஸ் அறிவற்றவர்’ என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

            இது நீதிமன்ற அவமதிப்பு என்பதற்காக நேரு மீது வழக்கு போட யோசிக்கப்பட்டது. நேருவே அதற்குள் விவியன் போஸ், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மன்னிப்பு கேட்டுக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடவும் நேரு ஒப்பினார். நேருவின் மன்னிப்பு ஏற்கப்பட்டது. அதற்குப் பிறகு நடந்த உச்சநீதிமன்ற நீதிபதியின் பிரிவுபாசார விழாவில் நேரு கலந்து கொண்டார். டால்மியா-ஜெயின் நிறுவனங்கள் மீதான விசாரணை பொறுப்பை விவியன் போஸிடமே நேரு ஒப்படைத்தார்.
மான நஷ்ட வழக்கு:
இந்தியாவில் மானநஷ்ட சட்டப்பிரிவை இன்னமும் கடுமையாக மெக்காலே வரையறுத்தார். இங்கிலாந்தில் எழுத்தில் இடம்பெறும் கருத்துகள் மட்டுமே மான நஷ்ட குற்றத்துக்கு உரியது. இந்தியாவில் பேச்சளவில் வெளிப்படும் கருத்துக்களும் மான நஷ்ட வழக்குக்கு உரிய குற்றமாகக் கருதப்படுகிறது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தால் மட்டுமே இச்சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை .
நக்கீரன் ராஜகோபால் நடத்திய நக்கீரன் இதழில் ஆட்டோ சங்கர் எழுதிய தொடர் இடம்பெற்றது. அதில் பல்வேறு அரசு அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டார் ஆட்டோ சங்கர். இது அவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கிற ஒன்று என்று மான நஷ்ட வழக்குப் போடப்பட்டது. நீதிமன்றம் அரசு அதிகாரிகள் குறித்த கருத்துக்களுக்காக மான நஷ்ட வழக்கு தொடர முடியாது. அதே சமயம், அந்தக் கருத்துக்கள் முழுக்க உண்மைக்குப் புறம்பானதாக, மோசமான உள்நோக்கம் கொண்டதாக இருந்தால் தண்டனைக்கு உரியது என்று அமெரிக்காவின் சுல்லிவன் வழக்கை மேற்கோள் காட்டி தீர்ப்பு எழுதப்பட்டது. ஆனால், அரசு அதிகாரிகள் மட்டுமே இப்படிப்பட்ட கருத்துக்களுக்கு மான நஷ்ட வழக்கு தொடர முடியாது. இதில் நீதிபதிகள் அடங்க மாட்டார்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.

Image result for nakheeran rajagopal auto shankar

வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் கருத்துரிமையில் சேராது. இது சார்ந்த கடுமையான சட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்டன. இந்தியா போன்ற பல்வேறு இனக்குழுக்கள் கொண்ட நாட்டில் அமைதியை நிலைநாட்ட வெறுப்பு மிக்கப் பேச்சுக்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று அரசு கருதியது. லேக் ராம் என்கிற ஆரிய சமாஜ உறுப்பினர் நபிகள் நாயகம் குறித்து வெறுப்பைக் கக்கினார். அதனால் அவர் ஆறு வருடங்களுக்குள் இறந்து விடுவார் என்று அகமதியா பிரிவை சேர்ந்த மிர்ஸா குலாம் முகமது தெரிவித்தார். லேக் ராம் கொல்லப்பட்டார். இதற்குப் பிறகே பல்வேறு குழுக்களிடையே குழப்பத்தை உண்டு செய்யும் பேச்சுகள் தடை செய்யப்படும் வகையில் 153A குற்ற சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது. இப்படிப்பட்ட சட்டங்கள் மதங்களைச் சீர்திருத்தும் நோக்கில் விமர்சிக்கும் கருத்துகளையும் வெளிப்பட விடாமல் தடுக்கும். உருவ வழிபாடு ஒழிப்பு இயக்கம், பிரம்ம சமாஜ இயக்கம், பிரார்த்தன சமாஜ இயக்கம் ஆகியவையும் இயங்காமல் போகக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது.

         மேலும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் பேச்சுக்களையும் தடை செய்யும் சட்டப்பிரிவும் கொண்டு வரப்பட்டது. இதற்குப் பின்னணியில் ‘ரங்கீலா ரசூல்’ எனும் பிரசுரம் இருந்தது. வண்ணமயமான நபிகள் என்கிற பொருள் தரும் இந்த நூல் நபிகள் நாயகத்தின் அக வாழ்வு சார்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தது. இது பண்டித சமுபதியால் எழுதப்பட்டது. இதைத் தடை செய்யக்கோரி தலிப் சிங் என்கிற நீதிபதி முன் வழக்குச் சென்றது. அந்நூல் மோசமானது என்றாலும் அது பகை, வெறுப்பை வளர்க்கவில்லை என்று தடை விதிக்க மறுத்தார் நீதிபதி. இருக்கிற சட்டமானது இறந்து போன மதத்தலைவர்களைக் காப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மேலும், வரலாற்று பார்வையுள்ள நூல்களும் இப்படிச் சட்டத்தைப் பயன்படுத்தினால் வராமல் போகும் என்று தீர்ப்பு எழுதினார். பல்வேறு கலவரங்கள் அந்நூலால் வெடித்தன.
Image result for rangeela rasool           

               ரிசலா-இ-வர்தமான் என்கிற உருது இதழ் ‘நரகப் பயணம்’ என்கிற தலைப்பில் வெளியிட்ட படைப்பில் நபிகள் நாயகம் நரகத்தில் துயரப்படுவதாக எழுதியது. இதை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய குற்றவியல் சட்ட அமர்வு தண்டனைக்குரிய குற்றமாக அக்கட்டுரையை அறிவித்து, அக்கட்டுரையின் ஆசிரியர் தேவி சரண் சர்மாவுக்கு ஒரு ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்தது. அந்த வழக்கில் நீதிபதி பிராட்வே இன்னும் சில கருத்துக்களைப் பதிவு செய்தார்: ‘ மதம், மதத்தை நிறுவியவர் மீதான அறிவார்ந்த, கூர்மையான, வலிமையான விமர்சனங்களைத் தடை செய்ய வேண்டியதில்லை. இழிவுபடுத்தும், அவதூறான கருத்துக்களே தண்டனைக்கு உரியவை’ என்று தீர்ப்பு எழுதினார்.

இதற்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசு புதிதாகச் சட்டப்பிரிவு 295A ஐ சேர்த்தது. இது மத உணர்வுகளைக் காயப்படுத்துவதைக் குற்றத்துக்கு உரிய தண்டனையாக அறிவித்தது. இந்தச் சட்டப்பிரிவு இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் என்று ஜின்னா கருத்து தெரிவித்தார். மேலும், ஜின்னா இந்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்றால் ஜாமீன் பெற முடியாது எனச் சட்ட திருத்தத்தைச் சாதித்தார். குற்றவியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

விடுதலைக்குப் பின்னால் 153A சட்டப்பிரிவு இன்னமும் கூடுதல் அதிகாரங்களைப் பெற்றது. இதன்படி, மதம், இனம், பிறந்த ஊர், வசிக்கும் இடம், மொழி, சாதி, சமூகம் சார்ந்து ஊறு, பகை, வெறுப்பு, மோசமான சிந்தனைகளை விதைத்தால் அவையும் தண்டனைக்கு உரியவை என்று திருத்தப்பட்டது. இன்னமும் மோசமாக, இந்திரா காந்தி காலத்தில் இந்த இரு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒருவரை கைது உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியும் என்றும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

கருத்துரிமை பெரும்பான்மையினரின் விருப்பு, வெறுப்புகளுக்கு உட்பட்டதா?:
பல்வந்த் சிங் என்கிற அரசு அதிகாரி இந்திரா காந்தி கொல்லப்பட்ட அன்று, ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பியதற்காகக் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை விடுவித்தது. பொது அமைதிக்கு எந்தத் தீங்கையும் அவரின் செயல் விளைவிக்கவில்லை. வன்முறையையும் அது தூண்டவில்லை என்பதை நீதிமன்றம் கருத்தில் கொண்டது. ஜாவலி எதிர் கர்நாடகா அரசு வழக்கில், ‘கன்னட மொழிக்கே முன்னுரிமை, இந்தி அதற்கு அடுத்த இடத்தையே கர்நாடகாவில் பெறவேண்டும்’ என்று கருத்து தெரிவித்த அரசு அதிகாரியின் கருத்து வெறுப்பைத் தூண்டும் பேச்சல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எவ்வளவு பிரபலமற்ற கருத்தாக இருந்தாலும் அதை விவாதிப்பதோ, ஆதரிப்பதோ தண்டனைக்கு உரியது அல்ல என்று அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

பெரியாரின் ராமாயணம் குறித்த நூல் இந்தியில் லலாய் சிங் யாதவால் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த நூலுக்கு உத்தரப் பிரதேச அரசு தடை விதித்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கிருஷ்ண ஐயர் இப்படித் தீர்ப்பு எழுதினார்:
‘எது ஆதிவாசிகளைக் காயப்படுத்துகிறதோ அது நவீன சமூகங்களுக்குச் சிரிப்பை வரவைக்கக் கூடியதாக இருக்கலாம். ஒரு மதம், பிரிவு, நாடு, காலம் ஆகியவற்றுக்கு எதிரானதாக, நிந்தனையாகத் தோன்றும் ஒன்று இன்னொரு தரப்புக்கு கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதமாக இருக்கலாம்…கலிலியோ, டார்வின் துவங்கி தோரோ, ரஸ்கின், காரல் மார்க்ஸ், ஹெச்.ஜி.வெல்ஸ், பெர்னார்ட் ஷா, ரஸ்ஸல் முதலிய பல்வேறு தலைசிறந்த சிந்தனையாளர்களின் கருத்துகள், பார்வைகள் மக்களால் எதிர்க்கப்பட்டுள்ளன. ஏன் மனு முதல் நேரு வரை தலைசிறந்த இந்தியர்களின் கருத்துகள் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன. இப்போதும் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சிலர் இந்தக் கருத்துக்களால் காயப்படுவார்கள். அதற்காக இந்த மகத்தான எழுத்துக்களைத் தங்களுடைய மூர்க்கமான பார்வையால் சில வெறியர்கள் வெறுக்கிறார்கள் என்பதற்காக எந்த அரசும் பழங்கால அரசுகளைப் போல அந்த நூலை கைப்பற்றாது’ என்று தடையை நீக்கினார்.

          ஒரே ஒரு கிராமத்திலே என்கிற இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் படத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட ரங்கராஜன் எதிர் ஜெகஜீவன் ராம் வழக்கில் பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பார்கள்,. வன்முறை நிகழும் என்றெல்லாம் அஞ்சி தணிக்கை வாரியம் அனுமதி வழங்கிய திரைப்படத்தை வெளியிடாமல் விட முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு படைப்பின் எதோ ஒரு கருத்துக் காயப்படுத்துகிறது என்பதற்காக அதனைத் தடை செய்ய முடியாது, அப்படைப்பின் மைய நோக்கத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டது.

Image result for periyar  ramayana

அதே சமயம், பரகூர் ராமச்சந்திரப்பா வழக்கில் நீதிமன்றம் பசவர் குறித்த ஆசிரியரின் கருத்துக்களுக்காக நூலை தடை செய்ததோடு, ‘மிகப்பெரிய மொழி, மத வேறுபாடுகளைக் கொண்ட நாட்டில் பலவீனமான மக்களின் மனங்கள் காயப்படாமல் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் கவனமும், கரிசனமும் வேண்டும்’ என்று அறிவுறுத்தியது. பல்வேறு புத்தகத் தடைகளை, திரைப்படத் தணிக்கைகளை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு இருந்திருக்கின்றன என்பதைப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
சிவாஜி குறித்த லெய்ன் நூலில் சிவாஜியின் தந்தை வேறொருவர் என்றும், அவரின் அப்சல் கான் மீதான தாக்குதல் இருக்கிற பிராமணிய அடுக்கை காப்பாற்றும் முயற்சியே ஆகும் என்றெல்லாம் கருத்துகள் நிலவியதால் அந்நூல் மகாராஷ்டிராவில் வன்முறைக்குக் களமானது. அந்நூலில் குறிப்பிடப்பட்ட நூலகம் தீக்கிரையானது. நூல் தடைக்கு ஆளானது. உச்சநீதிமன்றம் தடையை நீக்கியது. 

பத்திரிகைகளின் கழுத்தை நெரித்தல்:
இந்திய விடுதலைக்குப் பிறகு நேரு கொண்டு வந்த Press Act ஆங்கிலேயர் காலத்துப் பத்திரிகை அவசரநிலை சட்டத்தை விடக் கடுமையானதாக இருந்தது என்கிற அபினவ். மத்திய அரசு செய்தித்தாள்களின் பக்கங்கள், விளம்பரங்கள் எவ்வளவு இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க முயன்றது. சிறிய இதழ்களுக்கு வாய்ப்பு தரவும், ஒரு பத்திரிகை ஆதிக்கம் செலுத்தாமல் தடுக்கவும் இம்முயற்சி என்று காரணம் சொல்லப்பட்டது. நீதிமன்றம் நேரடியாக இது கருத்துரிமையைப் பாதிக்கா விட்டாலும் இது செய்தி நிறுவனத்துக்கு வருமான இழப்பை உண்டாக்கி, கருத்துகள் சென்று சேராமல் தடுப்பதை உள்நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்று சொல்லி அரசின் கட்டுப்பாடுகளை நீக்கியது. பத்திரிக்கையாளர்கள் சம்பளத்தைத் தீர்மானிக்க அரசு முயன்ற போது அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும், அது நியாயமானதாக இருக்க வேண்டும் என்றது. எத்தனை தாள்களை ஒரு செய்திதாளுக்கு ஒதுக்கலாம் என்பதை அரசு கட்டுப்படுத்த முயன்ற போது, நீதிமன்றம் மீண்டும் அதைக் கருத்துரிமையை நெரிக்கும் முயற்சி என்று ரத்து செய்தது. எனினும், அதில் பெரும்பான்மையோடு உடன்படாத நீதிபதி மாத்யூவின் தீர்ப்பு கவனத்துக்கு உரியது. ‘வெகு சிலரின் ஆதிக்கம் சந்தையை ஆளக்கூடாது. அது கருத்துரிமைக்குக் கேடானது’ என்றது இன்று ரிலையன்ஸ் முதலிய பெருநிறுவனங்கள் செய்தி நிறுவனங்களை நடத்தும் காலத்தில் பொருந்துவது என்கிறார் அபினவ். அதே சமயம், மேற்சொன்ன கட்டுப்பாடுகள் அதை மட்டுப்படுத்துமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும் என்கிறார் ஆசிரியர். சிறைத்தண்டனை கைதிகள் என்றாலும் அவர்களின் தனிப்பட்ட அந்தரங்க உரிமைகளை மீறி அவர்களைப்பற்றிச் செய்தியாளர்கள் கருத்துரிமை என்று சொல்லி பதிவு செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியுள்ளது.
லஹிரி அடிப்படை உரிமைகள் சார்ந்த விவாதங்கள் நடைபெற்ற போது, ‘இச்சட்டங்கள் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் பார்வையில் எழுதப்பட்டவை போல இருக்கின்றன’ என்றார். அபினவ் சந்திரசூடின் நூலை படிக்கிற போதும் அதுவே தோன்றியது. வெறும் வாய்ப்பந்தல் போட்டுவிட்டுக் கருத்துரிமைகள் விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும் காற்றில் பறக்க விடப்பட்டது நூலில் தெளிவாக வெளிப்படுகிறது. அதே சமயத்தில், ஏன் இந்தச் சட்டங்களுக்குத் தேவை இருக்கிறது, அவை ஏன் எழுந்தன என்பதைப் புரிந்து கொள்ள நூல் உதவுகிறது. நூலின் மிக முக்கியமான விடுபடல் அவசரநிலை காலம், அது எப்படிக் கருத்துரிமை சார்ந்த சட்டங்களில் மாற்றத்தை கொண்டுவந்தது என்பதை ஆசிரியர் கவனத்தில் கொள்ளவில்லை. ஒருவேளை ஆசிரியரின் தாத்தா சந்திரசூட் கருத்துரிமையைக் காக்க தவறிய ஜபல்பூர் வழக்கை விமர்சிக்க நேரிடுமோ என்று தவிர்த்திருக்கிறாரோ ஆசிரியர் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. எனினும், மிக முக்கியமான நூல்.

Continue reading

கருத்துரிமை நெரிப்பின் கலங்கவைக்கும் வரலாறு-ஒன்று!


காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற இந்தியா கருத்துரிமையைக் காப்பதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பதை அபினவ் சந்திரசூடின் ‘Republic of Rhetoric’ நூல் ஆய்வு செய்கிறது. கௌதம் பாட்டியாவின் கருத்துரிமை குறித்த நூல் அரசியல், சமூகச் சூழ்நிலைகளைப் பெரிதாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்கிற விமர்சனத்துக்கு இடையே இந்நூல் அந்த இடைவெளியை பெருமளவில் நிரப்புகிறது.
இந்திய விடுதலை மன்னர்கள், ஆதிக்கச் சாதியினர், நிலச்சுவான்தார் ஆகியோரின் செல்வாக்கை மட்டுப்படுத்துவதை ஓரளவுக்குச் செய்தது. இந்தச் சாதனை ஆங்கிலேயர் காலத்து அதிகார மையங்களை அசைத்துப் பார்த்தது. கருத்துரிமை சார்ந்து அப்படிச் சொல்ல முடியாது என்பதை இந்தியாவின் கருத்துரிமை சார்ந்த சட்டங்கள், கட்டுப்பாடுகள் உணர்த்துகின்றன. அரசியலமைப்பு சட்ட விவாதங்களில் ஹனுமந்தையா சொன்னதைப் போல, ‘நாம் வீணை, சிதார் இசைக்கு ஆசைப்பட்டோம். ஆங்கிலேயே வாத்தியக்குழுவின் இசை தான் கிட்டியுள்ளது’. அபினவ் இந்த நூலில் நிரூபிப்பதை போலச் சமயங்களில் ஆங்கிலேயரின் சட்டங்களை விடக் கடுமையான கட்டுப்பாடுகளை விடுதலைக்குப் பிந்தைய சட்டங்கள் விதித்து இருக்கின்றன. 

தேசத்துரோக சட்டத்தின் திகில் வரலாறு:
மெக்காலே இந்திய குற்றவியல் சட்டத்தை உருவாக்கிய போது தேசத்துரோகம் சார்ந்த சட்டப்பிரிவையும் உருவாக்கினார். எனினும், குற்றவியல் சட்டம் 1860-ல் நடைமுறைக்கு வந்த போது வரைவில் இருந்த தேசத்துரோகம் சார்ந்த சட்டப்பிரிவான 113 அமலுக்கு வரவில்லை. பத்தாண்டுகள் கழித்தே அந்தச் சட்டத்தைச் சீரமைத்து சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கிலாந்தில் தேசத்துரோக சட்டத்தின் எல்லைகள் பெரிது என்றாலும், நடைமுறையில் அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. மெக்காலே அரசின் மீது ‘disaffection’ காட்டினால் ஒருவர் மீது இச்சட்டத்தைப் பாய்ச்சலாம் என்று வரையறுத்து இருந்தார். அரசின் மீது நல்ல நம்பிக்கையோடு மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள் இதில் வராது என்பது அவரின் பார்வையாக இருந்தது. பர்னேஸ் பீகாக் என்கிற சட்டத்துறை வல்லுநர் வன்முறைக்குத் தூண்டினாலோ, அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவதாகக் கருத்துகள் இருந்தால் மட்டுமே தேசத்துரோக சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மாற்றியமைத்தார். அவரின் சட்டம் பிரிட்டனின் தேசத்துரோக சட்டத்தை ஒத்திருந்தது. ஆனால், ஸ்டீவன் என்கிறவர் உருவாக்கிய இறுதி வடிவத்தில் சட்டம் கடுமையானதாக ஆக்கப்பட்டது. அப்போது இஸ்லாமிய வாகாபிக்கள் கிறிஸ்துவர்களான ஆங்கிலேயருக்கு எதிராகப் புனிதப்போரை நடத்தக்கூடும் என்கிற அச்சத்தில் இச்சட்டம் தேவைப்படுவதாக அறிவித்தார்.
உடலுறவுக்கான விருப்ப வயதை பத்தில் இருந்து பன்னிரெண்டுக்கு உயர்த்திய ஆங்கிலேய அரசின் நடவடிக்கையை விமர்சித்துப் பங்கோபாசி என்கிற செய்தித்தாள் எழுதிய கட்டுரைகள் சார்ந்தே முதல் தேசத்துரோக வழக்குப் பாய்ச்சப்பட்டது. எனினும், இந்த வழக்கு சீக்கிரமே விலக்கி கொள்ளப்பட்டது. இஸ்லாமியர்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள் என்கிற அச்சத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம், இந்து தேசியவாதியான திலகர் மீது பாய்ச்சப்பட்டது. திலகரின் சிவாஜி குறித்த உரை மக்களைத் தூண்டிவிடுகிறது என்று தொடரப்பட்ட வழக்கில் ஜூரி தீர்ப்பளிக்க வேண்டியிருந்தது. இங்கிலாந்தில் ஜூரி ஒரு மனதாகத் தீர்ப்பு வழங்கினாலே இரண்டாண்டு தண்டனை. இந்தியாவிலோ அதற்கு மாறாகப் பெரும்பான்மை போதும். கூடுதலாக, நாடு கடத்தல் இந்தியர்களுக்குத் தண்டனை. இந்தியர் அல்லாத ஐரோப்பியர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைத்தண்டனை மட்டுமே. இதனால் திலகர் மீது சுமத்தப்பட்ட ராஜதுரோக குற்றங்களில் இந்திய உறுப்பினர்கள் அவரைத் தண்டிப்பதை எதிர்த்து வாக்களித்தாலும் பெரும்பான்மை ஆங்கிலேய உறுப்பினர்களின் வாக்குகளால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. மேலும், திலகர் மராத்தி மொழியில் எழுதிய கட்டுரைகள் படிப்பறிவு இல்லாத, முட்டாள் மக்களுக்காக எழுதப்பட்டது. அவை வாசித்துக் காட்டப்பட்டு அவர்களைத் தவறான பாதையில் செலுத்துகிறது என்று நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இருதிப்பகுதிக்குள் மெக்காலேவின் குறுகலான குற்றங்களை மட்டுமே தண்டிக்கும் ராஜதுரோக சட்டத்தை விரித்துப் பொருள் கொண்டு பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் தண்டனையை வழங்கின. இதை அடுத்து, தேசத்துரோக சட்டத்தை விரிவாக்கி ‘அரசு மீதான வெறுப்பு, அவமதிப்பு, பகை’ ஆகியவற்றை வளர்ப்பதையும் தேசத்துரோக குற்றம் என வரையறுத்துச் சட்டம் 1898-ல் அமலுக்கு வந்தது. காந்தி மீது இச்சட்டம் பயன்படுத்தப்பட்ட போது வரலாற்றில் முதன்முறையாக அந்தச் சட்டத்தின்படி தான் குற்றவாளி என்று காந்தி ஏற்றுக்கொண்டு அதிரவைத்தார். வன்முறைக்குத் தூண்டாத வரை அரசுக்கு எதிரான தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்துவது குற்றமில்லை என்றும், தான் தோன்றித்தனமான ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மக்களின் தலை மீது இறங்க தயாராக் இருக்கும் வாளே இச்சட்டம் என்று கடுமையாகக் காந்தி சாடினார்.
Gwyer என்கிற உச்சநீதிமன்ற நீதிபதி வன்முறைக்குத் தூண்டினாலோ, அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டினால் மட்டுமே இச்சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று உலகப்போர் சமயத்தில் தீர்ப்பு எழுதினார். மஜூம்தார் என்கிற சட்டசபை உறுப்பினர் நாற்பத்தி ஒன்றில் டாக்காவில் மதக்கலவரங்களைக் கட்டுப்படுத்த அரசு தவறி விட்டது எனத் தொடரப்பட்ட வழக்கில் இப்படி அவர் தீர்ப்பு எழுதினார். அரசாங்கங்களின் கர்வத்தைக் காயப்படுத்துகிற கருத்துக்களுக்கு மருந்து போட்டுக்கொள்ள இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றார். ஆனால், அவரின் கருத்தை பலேராவ் வழக்கில் லண்டனில் உள்ள ப்ரிவி கவுன்சில் ஏற்க மறுத்தது. விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் ஆயுள்தண்டனை தேசத்துரோக குற்றத்துக்கு விதிக்கப்பட்டது. 1974-ல் கைது உத்தரவு இல்லாமலே தேசத்துரோக குற்றங்களுக்குக் கைது செய்யலாம் என்று இந்திரா காந்தி அரசால் சட்டம் மாற்றியமைக்கப்பட்டது.
Image result for republic of rhetoric
கருத்துரிமை காவலர் கே.எம்.முன்ஷி:
கே.எம்.முன்ஷியை கிரான்வில் ஆஸ்டின் உரிமைகளை மட்டுப்படுத்துகிற செயலில் ஈடுபட்டவர் என்று அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரோடு இணைத்து குறிப்பிடுகிறார். ஆனால், உண்மை வேறாக இருக்கிறது என்பதை அபினவ் சந்திரசூட் நிறுவுகிறார். கே.எம்.முன்ஷி பத்திரிக்கைகளை முன் தணிக்கை செய்கிற பணியில் உலகப்போர் சமயத்தில் ஈடுபட்டிருந்தார். அவரே கருத்துரிமையைக் கட்டுப்படுத்தும் வரைவை தயாரித்த குழுவின் தலைவராக இருந்தார். அதில், பொது அமைதி, நன்னெறி, தேசத்துரோகம், ஆபாசம், அவதூறு, தெய்வ நிந்தனை என்று பல்வேறு கருத்துரிமையை மறுக்கும் பிரிவுகள் அடுக்கப்பட்டன. கே.டி.ஷா, ‘ஒரு வலது கை தந்ததை மூன்று, நான்கு இடது கைகள் பறித்துக் கொள்வதைப் போல’ இது இருப்பதாகக் குறைபட்டார். அம்பேத்கர் இந்தக் கட்டுப்பாடுகளை நியாயப்படுத்திப் பேசினார். டி.டி.கிருஷ்ணமாச்சாரியும் கருத்துரிமை கட்டுப்பாடுகள் அற்றதாக இருக்க முடியாது என்று கருத்து தெரிவித்தார்.

அம்பேத்கர் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் பேச்சுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார். வகுப்புவாத வெறியை தூண்டிவிடும் பேச்சு கருத்துரிமையின் கீழ் வரக்கூடாது என்று அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் வாதிட்டார். இது அரசுக்கு எதிரான கருத்துக்களைக் கட்டுப்படுத்தப் பயன்படும் என்று கவலை தெரிவித்தார் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி. கே.எம்.முன்ஷி வன்முறையைத் தூண்டிவிடாத பேச்சை அப்படியே விட்டுவிட வேண்டும் என்றார். தெளிவாக, ஆபத்தை விளைவிக்கும் பேச்சுக்களையே கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் வாதிட்டார். அவரின் வாதங்களால் அம்பேத்கர், அல்லாடி ஆகியோரின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. தேசத்துரோகம் சார்ந்த பேச்சுக்களையும் கருத்துரிமையைக் கட்டுப்படுத்தும் பிரிவுக்குள் கொண்டுவருவதையும் முன்ஷி நீக்க திருத்தம் கொண்டு வந்தார். அது ஏற்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்புக் கருத்துரிமையில் சேராது என்று அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு முடிவு செய்தது. நீதிபதிகள் காலனிய ஆட்சிக்கு நன்றியோடு இருந்துவிட்டு இன்னமும் பதவியில் தொடர்கிறார்கள், அவர்களுக்கு ஏன் பாதுகாப்பு என்று பி.தாஸ் என்கிற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும், நீதிமன்ற அவமதிப்புக் கருத்துரிமையில் சேராது என்று முடிவு செய்யப்பட்டது. நியாயமான கட்டுப்படுகளையே கருத்துரிமைக்கு விதிக்க வேண்டும் என்கிற பார்கவாவின் வேண்டுகோள் ஏற்கப்படவில்லை.

முதல் சட்ட திருத்தத்துக்கு வழி வகுத்த பிரசாத், முகர்ஜி:
கருத்துரிமைக்குக் கட்டுப்பாடுகள் ஓரளவுக்கே விதிக்கப்படுவதை அரசியலமைப்பு சட்ட குழுவின் விவாதங்கள் உறுதி செய்தாலும் சீக்கிரமே சிக்கல்கள் எழுந்தன. அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு வெறுப்பைத் தூண்டும், வகுப்பு வாதத்தை வளர்க்கும் பேச்சுக்களை, எழுத்துக்களைத் தடை செய்ய அரசுகள் முயன்ற போது அது கருத்துரிமைக்கு எதிரானது என நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன. ரொமேஷ் தாப்பர் என்கிற இடதுசாரியின் ‘CrossRoads’ செய்தித்தாள், ப்ரிஜ் பூஷன் என்கிற வலதுசாரியின் ‘Organiser’ செய்தித்தாள்களை அரசு கட்டுப்படுத்தியது. அவை கருத்துரிமைக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாகிஸ்தானில் இருக்கும் மதச் சிறுபான்மையினரின் நலனை காக்க லியாகத் அலிகான் உடன் நேரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அது சார்ந்தும் பிரிவினை, காஷ்மீர் சிக்கல்கள் சார்ந்தும் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி கடுமையாகப் பேசினார். பாகிஸ்தானுடன் போரிட்டே ஆக வேண்டும் என்று தொடர்ந்து பேசினார். இது படேல், நேரு ஆகியோரை கவலைக்கு உள்ளாக்கியது.

இன்னமும் மோசமாக, சார்ஜூ பிரசாத் என்கிற நீதிபதி, சங்க்ராம் என்கிற துண்டு பிரசுரத்தில், ‘நான் ரத்தவெறிக் கொண்ட காளி…. நான் தாகம் கொண்டிருக்கிறேன், எனக்குப் புரட்சி வேண்டும், போராட்டத்தின் மீது நம்பிக்கை வேண்டும்., அநீதியின் சங்கிலிகளைக் கிழித்து, கிழித்து எறியுங்கள்.’ என்று எழுதப்பட்டதை எதிர்த்துத் தொடர்ப்பட்ட வழக்கில், ‘கொலை செய்யத் தூண்டினாலும் அதுவும் கருத்துரிமை. அதற்கான தண்டனையைத் தூண்டியவர் அனுபவிக்க வேண்டும், ஆனால், கருத்துரிமையைக் கட்டுப்படுத்த முடியாது’ எனத் தீர்ப்பு தர அதிர்ந்து போனது அரசு. முதல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அம்பேத்கர் ‘பொது அமைதி’, ‘அயல்நாடுகளோடு நட்புறவு’, ‘குற்றத்துக்குத் தூண்டுவது’ ஆகியன சார்ந்து கருத்துரிமையைக் கட்டுப்படுத்தலாம் என்று திருத்தும் கொண்டு வந்தார். அயல்நாடுகளோடு நட்புறவை ஒரு தனிக் குடிமகனின் கருத்துகள் சீர்குலைக்குமா என்று நஸ்ரூதின் ஷா என்கிற உறுப்பினர் ஆச்சரியப்பட்டார்.

நியாயமான கட்டுப்பாடுகள் (reasonable restrictions) விதிக்கப்பட வேண்டும் என்கிற திருத்தத்தை அம்பேத்கர் கொண்டு வந்ததை உள்துறை அமைச்சர் ராஜாஜி பெரும் விவாதத்திற்குப் பிறகே ஏற்றுக்கொண்டார். குற்றத்துக்குத் தூண்டுவது என்கிற பிரிவு இருக்க வேண்டுமா என்கிற விவாதம் எழுந்த போது, ‘மதுவிலக்கு இருக்கும் ஊரில் மற்றவர்கள் கால்சட்டை பையில் சாராயம் சுமந்து செல்ல தூண்டுவது குற்றமில்லையா?’ என்று கேட்டார் ராஜாஜி. அம்பேத்கர், ‘வயல்களுக்கும், விறகு பொறுக்கக் காடுகளுக்கும் பட்டியலின சாதியினர் போகக்கூடாது எனச் சமூக விலக்கை சாதி இந்துக்கள் விதித்தால் அவற்றை ஏற்க முடியாது.’ என்று வாதிட்டார். பிளிட்ஸ் இதழில் கரஞ்சியா இந்தச் சட்ட திருத்தத்தைக் கருப்பு மசோதா, அரசியலமைப்புச் சட்டத்தை வன்புணர்வு செய்வது என்றெல்லாம் சாடினார். சட்டதிருத்தங்கள் பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டன.
எதிர்ப்புக்குரியவற்றைப் பதிப்பிப்பது சார்ந்து 1951, 1971-ல் நேரு, இந்திரா அரசுகள் சட்டங்களைக் கொண்டு வந்தன. இவை காலனிய சட்டத்தை விடக் கடுமையாகப் பத்திரிகைகளைக் கட்டுப்படுத்தின என்கிறார் சந்திரசூட். எவ்வளவு முன்பணத்தை அச்சகம் செலுத்த வேண்டும் என்கிற வரையறையை விதிக்காமல் இந்தச் சட்டங்கள் அதை அரசை தீர்மானிக்க விட்டன, ஆங்கிலேயர் காலத்தில் வரையறை விதிக்கப்பட்டு இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

திமுகவை பிரிவினை முழக்கத்தைக் கைவிட வைத்த சட்ட திருத்தம்:
திமுக அறுபதுகள் வரை திராவிட நாடு/தமிழ்நாடு கேட்டு தொடர்ந்து போராடிக்கொண்டு இருந்தது. சீனப்போர், நாகா, பஞ்சாப் பிரிவினை முழக்கங்கள் எல்லாம் சேர்ந்து கொள்ளப் பதினாறாவது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் ‘தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை’ சார்ந்து கருத்துரிமை கட்டுப்படுத்தப்படலாம் என்கிற சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சட்ட சீர்திருத்தத்தைச் செய்யுமாறு சி.பி.ராமசுவாமி ஐயர், காமராஜர் முதலியோர் அடங்கிய தேசிய ஒற்றுமை கமிட்டி பரிந்துரை செய்தது. மேலும், பதவி ஏற்றுக்கொள்ளும் சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமையைக் காக்கும் வகையில் இயங்குவேன் என்று உறுதிமொழி ஏற்பதும் கட்டாயமானது. நீதிபதிகளும் இவ்வாறு பதவி பிரமாணம் எடுக்க வேண்டியது கட்டாயமானது. இதன்மூலம் நீதிபதிகள் பிரிவினையை ஆதரிக்கும் பேச்சுகளைக் காப்பாற்ற முடியாமல் தடுக்கப்பட்டது. நரசிம்ம ரெட்டி எனும் உறுப்பினர் முந்தைய தேர்தலில் திமுகத் தந்த கடும் எதிர்ப்பை தாங்க முடியாமல் காங்கிரஸ் அதைப் பழிவாங்கவே இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததாகக் குற்றம் சாட்டினார். சட்ட அமைச்சர் சென் நாகா, பஞ்சாப் பிரிவினை, தெற்கின் போராட்டங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் சட்டம் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தார். பூபேஷ் குப்தா என்கிற கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அப்போது அமலில் இருந்த அவசரநிலை சட்டத்தைச் சுட்டிக்காட்டி கருத்துரிமை உறைந்து போயிருக்கும் காலத்தில் அது குறித்து விவாதிக்கிறோம் என்று சுட்டிக்காட்டினார். மக்களவையில் சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அண்ணா ஏழு திமுக உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தது கணக்கில் கொள்ளப்படவில்லை என்றார். மாநிலங்களவையில் அண்ணா மட்டுமே சட்டத்தை எதிர்த்து வாக்களித்தார். செழியன் சட்டத்தை எதிர்த்துப் பேசுகையில்:

‘தயவு செய்து எங்களோடு வாதிடுங்கள், போட்டி போடுங்கள், எங்களைச் சம்மதிக்க வையுங்கள். நாங்கள் மாறவே மாட்டோம் என்று தெரிந்தால் எங்களை விட்டுவிடுங்கள், மக்களிடம் போய் அவர்களைச் சம்மதிக்க வையுங்கள். இதை நீங்கள் செய்தால் தான், அது உண்மையான ஜனநாயகம். வேறு ஏதேனும் செய்வீர்கள் என்றால், அதற்குப் பெயர் ஜனநாயகம் இல்லை. அது வேறொன்று.’

என்றார்.
Image result for anna with era sezhiyan
         மேலும் அமெரிக்க உச்சநீதிமன்றம், ‘கருத்துக்களைக் கட்டாயப்படுத்தி ஒன்று சேர்ப்பது என்பது கல்லறையை நோக்கி அழைத்துச் செல்லும் ஒற்றுமையை மட்டுமே சாதிக்கிறது.’ என்று அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி பேசினார் செழியன். ஹெச்.என்.முகர்ஜி இறையாண்மை, ஒற்றுமை முதலிய வார்த்தைகள் தெளிவாக இல்லை, அவற்றைத் தவறாகப் பயன்படுத்தலாம் என்று கவலை தெரிவித்தார். காமத் ஸ்காட்டிஷ் ஹோம் ரூல் கட்சியைப் போல வன்முறையைத் தூண்டாமல் பிரிவினை பேசி, தேர்தலில் பங்கு கொண்டால் ஏற்பதில் ஒன்றும் தவறில்லை என்றார். வடக்கிற்கும், தெற்கிற்கும் வேறுபாடுகள் உள்ளன என்பதைக் கோப்ரகடே, பிபுதேந்திர மிஸ்ரா முதலியோர் சுட்டிக்காட்டி பேசினார்கள்.

(ஆபாசம், வெறுப்பைத் தூண்டும் பேச்சு, பத்திரிகை சுதந்திரம், நீதிமன்ற அவமதிப்பு குறித்த கருத்துரிமை விவாதங்கள் நாளை விரிவாக பேசப்படும்)


……………………………

தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு மறுக்கப்படும் பஞ்சமி நிலங்கள்


தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு மறுக்கப்படும் பஞ்சமி நிலங்கள் – இளங்கோவன் ராஜசேகரன்
 
“அவர்கள் மிக மோசமான
ஊட்டச்சத்து பற்றாக்குறையோடே எப்போதும் வாழ்கிறார்கள், எதோ கந்தல் துணியையே உடுத்திக்கொண்டு இருக்கிறார்கள், தொழுநோயோ, பிற மோசமான நோய்களோ அவர்களைத் தின்கிறது, அவர்கள் பன்றிகளைப் போல வேட்டையாடப்படுகிறார்கள், கல்வி மறுக்கப்பட்டு, கவனிப்பாரற்று இருக்கிறார்கள்…இந்த மக்கள் சமூகத்தைப் பரம்பரையாகத் தொடரும் அடிமை முறைகளில் இருந்தும், சட்ட ரீதியான தடைகளில் இருந்தும் ஆங்கிலேய அரசு மீட்டிருக்கிறது என்றாலும், இன்னமும் சமூகச் சீர்குலைவில் சிக்கி கடைமட்டத்தில் கிடக்கிறார்கள் இம்மக்கள்.”
 
—James Henry Apperley Tremenheere, செயல் ஆட்சியர், செங்கல்பட்டு, 1891.
 
அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் தலித்துகளின் மோசமான நிலையை இப்படி விவரித்த செயல் ஆட்சியர் அவர்களுக்குப் பல்வேறு உரிமைகளை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு நிலங்களை ஒதுக்க வேண்டும் என்பது திரமென்ஹீரின் பரிந்துரையாக இருந்தது. அவருடைய பரிந்துரையை ஏற்று, 1010/1010A , 30-9-1892 என்கிற ஆணையை வருவாய்த்துறை பிறப்பித்தது. அது ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சட்ட மசோதா 1892-ஐ அமலுக்குக் கொண்டு வந்தது. பன்னிரெண்டு லட்சம் ஏக்கர் நிலங்களைப் பஞ்சமர்கள் எனப்பட்ட தலித்துகளுக்கு ஒதுக்கியது அந்த மசோதா. இதையே பஞ்சமி நிலங்கள் என அழைத்தார்கள்.
Image result for James Henry Apperley Tremenheere
 
அதற்கு முன்னர் வரை மிராசு வகுப்பினர் எனப்பட்ட பிராமணர், வேளாளர் முதலிய திருச்சி, மதுரை, திருநெல்வேலி பகுதியில் வசித்து வந்தவர்களே நிலங்களுக்குப் பெரும்பாலும் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். வன்னியர்கள், சூத்திரர்கள் ஆகியோர் மிராசு அல்லாத வகுப்பினர் எனக் கருதப்பட்டார்கள். திரமென்ஹீர் தன்னுடைய அறிக்கையில் சேரிப்பகுதி நிலங்களையும் மிராசிதாரர்கள் கையகப்படுத்திக் கொள்வதைக் கடுமையாக எதிரக்கிறார். இது நிலங்களைக் குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கத்திற்குள் தள்ளுகிறது, பறையர்களை விவசாயம் செய்ய விடாமல் தடுக்கிறது என்றும் அவர் பதிவு செய்தார். மிராசுக்கள்பயிர்காரர்கள் என அழைக்கப்பட்ட சாதி இந்து விவசாயிகள் சிறிய நிலங்களில் விவசாயம் செய்வதை எதிர்க்கவில்லை. தீண்டப்படாத மக்கள் தான் நிலமில்லாமல் நின்றார்கள்.
 
திரமென்ஹீருக்கு முன்னரே தலித்துகளுக்கு நிலம் பெற்றுத்தரும் முயற்சிகள் நடைபெறாமல் இல்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் கிறிஸ்துவ மிஷனரியை சேர்ந்த வில்லியம் கவுடி, ஆடம் ஆன்ட்ரூவ் முதலிய பாதிரியார்கள் தலித்துகளுக்குக் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிலங்களைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். மெட்ராஸ் மிஷனரி மாநாட்டின் அறிக்கை இம்மக்கள் அடிமை முறையில் சிக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டியது. ஒரு மிராசிடம் இருந்து மிராசுக்கு நிலம் கைமாறிய போது அதில் வேலைபார்த்த ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்த பண்ணையாட்களும் கைமாறுவது நிகழ்ந்தது என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. அம்மக்கள் குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்த அந்த அறிக்கையைச் செங்கல்பட்டு ஆட்சியர் கரிசனத்தோடு அணுகினாலும், வருவாய் துறை, அந்த அறிக்கையை மிகைப்படுத்தப்பட்டது என்று நிராகரித்தது.
 
இதற்கு முன்னரே தலித்துகள் ரயில்வே, ராணுவ பகுதிகளில் நிலங்களை வாங்கினார்கள் என்று “A Century of Change: Caste and Irrigated Lands in Tamil Nadu, 1860s-1970s” என்கிற கட்டுரையில் ஜப்பானிய ஆய்வாளர் ஹருகா யானகிசாவா கவனப்படுத்துகிறார். 1817-ல் இருந்தே சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தலித்துகள் போராட்டங்களை நிகழ்த்தி வந்தார்கள். அதிலும் ராமநாதபுரத்தின் பள்ளர் மக்கள் சாதி இந்துக்களின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், 1858-ல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிக்கச் சாதியினருக்கு எதிரான ஒத்துழையாமை போராட்டங்களையும் நடத்தினார்கள். எனினும், ஆங்கிலேய அரசின் கவனத்துக்கு இவர்களின் கவலைக்குரிய நிலை குறித்த கவனப்படுத்தல் திரமென்ஹீர் அறிக்கையாலே சாத்தியமானது.
 
அந்த உத்தரவில் பல்வேறு பாதுகாப்பு பிரிவுகளும் சேர்க்கப்பட்டன. அரசிடம் பெறப்பட்ட நிலத்தைப் பத்தாண்டுகளுக்கு விற்க தடை, அதற்குப்பிறகு விற்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கே விற்க வேண்டும். மேற்கூறிய விதியை மீறி மற்ற வகுப்பினர் நிலத்தை வாங்கினால் எந்த இழப்பீடும் தராமல் அரசே நிலத்தை மீண்டும் கையகப்படுத்திக் கொள்ளலாம் என்றெல்லாம் பிரிவுகள் நீண்டன. 1918 -1933 காலத்தில் நிலங்கள் பிரித்து வழங்கப்பட்டன. எனினும், இப்படிப்பட்ட சட்டரீதியான பாதுகாப்புகளை மீறி தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பன்னிரெண்டு லட்சம் ஏக்கர் நிலங்களில் பெரும்பாலான நிலங்கள் மற்ற சாதியினரின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தன. ஒரு ஆய்வு, ‘ஒரு கூடை கேழ்வரகு, மக்காசோளத்துக்கு நிலங்கள் விற்கப்பட்டன’ என்று அதிரவைக்கிறது.
 
விடுதலைக்குப் பிறகு மேற்கு வங்கம், கேரளாவை போல அல்லாமல் தமிழகத்தில் நில சீர்திருத்தங்கள் ஏட்டளவில் நின்றன. காங்கிரஸ் அரசு ஹரிஜன கூட்டுறவு சங்கங்களைத் துவங்கியது, நில சீர்திருத்த சட்டங்களை நிறைவேற்றியது என்றாலும் உண்மையில் உழுதவர்களுக்கு நிலத்தை அது வழங்கவில்லை. தலித் செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுவதைப் போலக் காங்கிரஸ் ‘மிட்டா, மிராசுதாரர்களின் கட்சி’யாகத் திகழ்ந்தது.
 
நகர்ப்புறங்களுக்கு நில உரிமையாளர்களாகத் திகழ்ந்த பிராமணர்கள் குடிபெயர்ந்தார்கள். அவர்களின் இடத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கிராமங்களில் எடுத்துக்கொண்டார்கள். நிலத்தின் உரிமையாளர்கள் மாறினாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை இன்னமும் மோசமானதாக, ஒடுக்குமுறைகள் மிகுந்ததாக மாறியது. தலித்துகளின் நில உரிமைகளை வலியுறுத்தி 1-10-1941-ல் அரசு ஆணை எண் எம்.எஸ்.2217, 12-12.1946-ல் அரசு ஆணை எண் எம்.எஸ்.3092 முதலியவை இயற்றப்பட்டும் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை. குறுக்கு வழிகளில் தலித்துகளின் நிலங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கைப்பற்றிக்கொண்டார்கள். அறக்கட்டளைகளை ஏற்படுத்துவது, பயிரிடுபவர்கள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெயருக்கு நில உரிமையை மாற்றுவது முதலிய வழிகளின் மூலம் நிலங்களைத் தங்கள் வசமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வைத்துக்கொண்டார்கள். இப்படி இவர்கள் கைவசம் இருக்கும் நிலங்களின் அளவு மூன்றரை லட்சம் ஏக்கர் வரை இருக்கும் என்கிறார்கள். எனினும், இந்த மலைக்க வைக்கும் கையகப்படுத்தலை நிரூபிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இல்லை.
 
இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. நில ஆவணங்களைக் கர்ணம் எனப்படும் ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த அதிகாரிகளே, பரம்பரை பரம்பரையாக நில ஆவணங்களைக் காப்பவர்களாக இருந்தார்கள். இவர்கள் நிலங்களைப் பதிவு செய்யும் போதும், கைமாற்றும் போதும் அவற்றை மாற்றி எழுதியும், தில்லுமுல்லு செய்தும் ஆதிக்கச் சாதியினருக்கு உதவினர். இந்தப் பழைய ஆவணங்களையே இப்போதும் அதிகாரிகள் சார்ந்திருக்கிறார்கள்.
 
தமிழக அரசு 1979 ஜூன் 1-ல் இருந்து 1987 ஏப்ரல் 30-க்குள் “Updating Registry Scheme’’ (UDR) என்கிற திட்டத்தின் கீழ் நிலங்களை வகைப்படுத்தி, அளவை செய்யும் பணியைச் செய்து முடித்தது. அதனால் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. அது பட்டா நிலங்கள், பொறம்போக்கு நிலங்கள் என்று பஞ்சமி நிலங்களை மாற்றவே வழிவகுத்தது என்கிறார் சாமுவேல் ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் .
 
தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 2006-ல் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த நில நிர்வாக ஆணையர் அலுவலகம், பஞ்சமி நிலங்கள் 1,26,113 ஏக்கர்களுக்கு இருப்பதாகவும் அவற்றில் தலித் அல்லாதவர்கள் 10,619 ஏக்கர்கள் நிலத்தைத் தங்கள்ம வசம்ட்டு வைத்திருப்பதாகவும் பதில் தந்தது. அருள்தாஸ் தொன்னூறுகளில் கேட்டிருந்த கேள்விக்கு 1,04,494.38 ஏக்கர்கள் பஞ்சமி நிலம், அதில் 74,893 ஏக்கர்கள் தலித்துகள் வசம் இருப்பதாகவும் பதில் தரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர் கே.மெய்யாரின் தொடர் முயற்சிகளால் 2015-ல் 2,843 ஏக்கர்கள் பஞ்சமி நிலங்கள் அடையாளம் காணப்பட்டன. ஆனால், அவை தலித்துகள் வசம் இல்லை என்பது தான் சோகமானது.
 
பட்டியல் சாதி மக்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட நிலத்தில் வீடுகள் கட்டியவர்களும், அதில் குடியிருப்போரும் தொடுத்த வழக்கில் நீதிபதி சந்துரு வரலாற்றுச் சிறப்புமிகுந்த தீர்ப்பை வழங்கினார். பஞ்சமி நிலங்களை நிபந்தனைகளோடு தான் அரசு தந்திருக்கிறது. நிபந்தனைகள் மீறப்பட்டது என்றால் நில உரிமை கைமாற்றப்பட்டதை மீண்டும் அரசே எடுத்துக்கொள்ளலாம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைப் பத்தாண்டுகளுக்கு வேறு யாருக்கும் கைமாற்றக்கூடாது. அதற்குப்பிறகு அந்நிலத்தை விற்கவோ, அடமானம் வைக்கவோ விரும்பினால் தலித்துகளிடம் மட்டுமே செல்ல வேண்டும். என்று தீர்ப்பு வழங்கினார்.
 
இத்தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், பி.பி.எஸ். ஜனார்த்தன ராஜா உறுதி செய்தார்கள். பாப்பய்யா எதிர் கர்நாடக மாநிலம் வழக்கில் உச்ச நீதிமன்றம் 1996-ல் அளித்த தீர்ப்பை நீதிபதி சந்துருவை போலவே இந்த அமர்வு மேற்கோள் காட்டியது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 46 பொருளாதார நீதிக்கு வழிகோலுகிறது. மேலும், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 39(பி), அரசு தன்னிடம் இருக்கும் நிலங்களைப் பொதுநலன் கருதி பிரித்து வழங்க வேண்டும் என்கிறது. பட்டியல் சாதியினர், பழங்குடியினர் ஆகியோருக்கு பொருளாதார நீதி சமூக அந்தஸ்து, வாய்ப்பு, விடுதலைகளைப் பெற அடிப்படை உரிமையாகும் என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.
 
1991-ல் தர்மபுரியின் கரகட்டஹல்லியில் தலித்தின் நிலத்தைத் தலித் அல்லாதோர் ஆக்கிரமித்து இருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து அவற்றைத் தலித்துகளிடம் ஒப்படைக்கும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 85,000 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்ட நிலையில் பாதிவழியில் அந்த முயற்சி நிறுத்தப்பட்டது. 2011-ல் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் மூன்று பேர் கொண்ட குழுவை இப்பணிக்காக நீதிபதி மருதமுத்து தலைமையில் திமுக அரசு அமைத்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அக்கமிட்டி கலைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மூன்று உறுப்பினர் குழு இப்பணிக்கு அமைக்கப்பட்டது. எதுவும் பெரிதாக மாறிவிடவில்லை என்று தலித் செயல்பாட்டாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
 
நில உரிமையாளர்கள் குறித்த கணக்கெடுப்பு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவை விடக் குறைந்த தலித்துகளே நில உரிமையாளர்களாக இருக்கிறார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த பொதுச் செயலாளர் ரவிக்குமார் சுட்டிக்காட்டுகிறார். “ ஆந்திரா 11,00,000 ஹெக்டேர், கர்நாடகா 10,74,000 ஹெக்டேர், மகாராஷ்டிரா 13,03,000 ஹெக்டேர் நிலங்கள் தலித்துகள் வசமுள்ளன. தமிழகத்தில் 8,84,000 தலித்துகள் வசம் 5,03,000 நிலங்கள் இருந்தன. 2010-2011-ல் 8,73,000 தலித்துகள் 4,92,000 ஹெக்டேர் நிலத்துக்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள். அதாவது ஐந்தாண்டு இடைவெளியில் 11, ௦௦௦ தலித்துகள் 11,௦௦௦ ஹெக்டேர் நிலங்களை இழந்திருக்கிறார்கள். இரு திராவிட கட்சிகளே
இந்த நிலைக்குக் காரணம் என்று ரவிக்குமார் குற்றஞ்சாட்ட தயங்கவில்லை. “மாநில அரசு நியாயமாக நடந்து கொண்டிருந்தால் நில சீர்திருத்தம் முழுமையாக நிறைவேறியிருக்கும். இல்லாதவர்கள் வலிமை பெற்றிருப்பார்கள். சாதி வன்முறைகள் தடுக்கப்பட்டிருக்கும்.” என்கிறார். நிலங்கள் மறுக்கப்பட்ட தலித்துகள் நூறு நாள் வேலை வாய்ப்பு வலையில் சிக்கிக்கொள்கிறார்கள் என்கிறார் ரவிக்குமார்.
 
அம்பேத்கர் சொன்னது இன்றைக்கும் பொருந்துகிறது: “எங்களிடம் நிலமே இல்லை. ஏனெனில், மற்றவர்கள் எங்களிடம் இருந்து பிடுங்கிக்கொண்டார்கள்.” பறையர்கள் குறித்த தன்னுடைய குறிப்பை திரமென்ஹீர் அம்பேத்கர் பிறந்த 1891-ல் எழுதினார், “கொஞ்சம் நிலமும், ஒரு குடிசையும் பெறவும் , எழுதவும், படிக்கவும் தெரிந்து கொண்டு, தன்னுடைய உடல் உழைப்பை தான் விரும்பியபடி செய்ய, சுய மரியாதையைப் பெற்று, சாலையிலும் மதிக்கப்படும் நிலையைப் பறையர்கள் எய்தவே அவர்களுடைய இன்றைய துயர்மிகுந்த நிலையை நான் விளக்கி கூறவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன்.” அப்போதில் இருந்து தலித்துகளின் நிலைமை பெரிதாக மாறிவிடவில்லை!
Image result for ambedkar
 
 
சுருக்கமாகத் தமிழில்: பூ.கொ.சரவணன்

ஒரு பாலின உறவும், உச்சநீதிமன்றமும்


உச்சநீதிமன்றம் இருதரப்பு விருப்பத்தோடு மேற்கொள்ளப்படும் ஒரு பாலின உறவை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் IPC 377 ஐ செல்லும் என முன்னர் அறிவித்தது. இது குறித்து இன்றைய தனிநபர் உரிமை/ அந்தரங்க உரிமை அடிப்படை உரிமையே எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் நீதிபதி சந்திரசூட் எழுதிய தீர்ப்பின் வரிகள் இவை (அவருடன் மூன்று நீதிபதிகள் ஒப்பிய தீர்ப்பு இது):
 
மேற்கூறிய காரணங்களைக் கொண்டு
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21ன் படி தங்களுக்குப் பாலியல் உறவுத் தேர்வுக்கான அந்தரங்க உரிமை உள்ளது என LGBT யினர் வாதிட்டதை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்ததற்கு எந்த அரசியலமைப்பு ரீதியான அடிப்படையும் இல்லை.
இந்தியாவின் மக்கள் தொகையில் மிக மிகச் சொற்பமானவர்களே ‘lesbians, gays, bisexuals or transgenders’ ஆக உள்ளார்கள் என உச்சநீதிமன்றம் அத்தீர்ப்பில் குறிப்பிட்டது. அது ஒரு தனிநபரின் உரிமையை மறுக்க வலுவான அடிப்படை இல்லை. சில உரிமைகளை அடிப்படை உரிமைகளாக உயர்த்திப் பிடிப்பதன் நோக்கமே பெரும்பான்மையின் (சட்டமியற்றும் நாடாளுமன்றம்/சட்டமன்றம் அல்லது பெரும்பான்மை மக்கள்) கோபதாபங்களில் இருந்து அந்த உரிமைகளைக் காப்பதே ஆகும். அரசியலமைப்பில் தரப்பட்டிருக்கும் உரிமைகள் பெரும்பான்மை என்ன நினைக்கிறது என்பதைப் பொறுத்தது இல்லை. அரசியலமைப்புச் சட்டம் உரிமைகளுக்குத் தரும் பாதுகாப்பை அந்த உரிமை பெரும்பான்மையினரால் ஏற்கப்படுகிறதா எனச் சோதித்து நிராகரிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய அடிப்படை அல்ல. தனித்தியங்கும், தனிமைப்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் தங்களின் கருத்துகள், நம்பிக்கைகள், வாழ்க்கைமுறைகள் மைய நீரோட்டத்தோடு ஒத்துப்போகாமல் இருக்கிறது என்கிற எளிய காரணத்திற்காகப் பாகுபடுத்தப்படும் பேராபத்தை எதிர்கொள்கிறார்கள். சட்டத்தின் ஆட்சியின் அடிப்படையில் எழுப்பப்பட்ட ஜனநாயக அரசியலமைப்பில் மற்ற குடிமக்களின் விடுதலை, சுதந்திரத்தை பாதுகாக்க தரப்பட்டுள்ள உரிமைகள் எவ்வளவு புனிதமானதோ அதே அளவு இந்தச் சிறுபான்மையினரின் உரிமைகளும் போற்றப்பட வேண்டியவை ஆகும். ஒருவர் எந்த வகையான பாலியல் உறவை மேற்கொள்வது என்பதும் தனிநபர் உரிமையே. அதைக்கொண்டு ஒருவரை பாகுபடுத்துவது தனிமனிதரின் தன்மானம், சுயமரியாதையை ஆழமாக அடித்து நொறுக்குவது ஆகும். சமத்துவம் ஆனது இச்சமூகத்தில் ஒவ்வொரு தனிநபரின் பாலியல் உறவுத் தேர்வை சமமான தளத்தில் பாதுகாப்பதை கோருகிறது. தனிநபர்/அந்தரங்க உரிமைகள், பாலியல் உறவுத் தேர்வுக்கான உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள் 14, 15, 21 உறுதிப்படுத்தும் அடிப்படை உரிமைகளின் அடிநாதம் ஆகும்.
Image result for 377 supreme court
 
நீதிபதி S.A.போப்டேவின் கருத்துகள் இவை:
 
தனிநபர் உரிமை/ அந்தரங்க உரிமை என்பது அகவாழ்வின் நெருக்கங்கள், குடும்ப வாழ்க்கையின் புனிதம், திருமணம், உடலுறவு, வீடு, பாலியல் உறவுத்தேர்வு ஆகியற்றைப் பாதுகாப்பதை உள்ளடக்கியது ஆகும். தனிநபர் உரிமை என்பது ஒருவர் தனித்து விடப்படும் உரிமையையும் குறிக்கிறது. தனிநபர் உரிமை தனிநபரின் சுயத்தைக் காக்கிறது. மேலும், தன்னுடைய வாழ்வின் முக்கியமான கூறுகளைக் கட்டுப்படுத்தும் திறன் குறிப்பிட்ட நபருக்கு உண்டு என்பதை இந்த உரிமை அங்கீகரிக்கிறது. தனிநபர் தேர்வுகள் வாழ்க்கையை வழிநடத்துவது தனிநபர் உரிமையின் பிரிக்க முடியாத அங்கமாகும். தனிநபர் உரிமை முரண்பாடுகளைப் பாதுகாக்கிறது. நம் கலாசாரப்பன்மை, வேறுபாடுகளை அது அங்கீகரிக்கிறது. தனிநபர் உரிமை எங்கெல்லாம் ஏற்புடையது என்பது அந்தரங்க வெளி, தனிப்பட்ட வெளி, தனிநபர் வாழ்விடங்கள், பொது இடங்கள் என வேறுபட்டாலும் ஒரு தனிநபர் பொது இடத்தில் இருக்கிறார் என்பதற்காகவே அவரின் தனிநபர் தேர்வை இழக்கவோ, விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை. ஒரு தனிமனிதரின் தன்மானத்தின் பிரிக்க முடியாத பண்பாகத் தனிநபர் உரிமை திகழ்கிறது. ஆகவே அது தனிநபருடன் இணைந்தே இருப்பதாகும்.
 
2013 தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வில் இருக்கும் நிலையில் இக்கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தேசியம்-ஒரு உரையாடல்


#விடுதலை தினத்தைப் புறக்கணிக்க வேண்டும், இது கருப்பு தினம் என்றெல்லாம் பகிர்கிறார்கள். அரசுக்கும், தேசத்திற்கும் வேறுபாடு உண்டு. அது முக்கியமானது. நம் அனைவருக்கும் உரிய நாடு இது. இதன் பெருமைகளும், சிறுமைகளும் நமக்குரியவை. ‘தேசியத்தைப் பெரும்பான்மைவாதிகளிடம் ஒப்புக்கொடுத்து விட்டீர்கள். தேசியக்கொடியைக் கூட அவர்கள் தங்களுடையதாக ஆக்கிக் கொள்ள முயல்கிறார்கள். தேசியம், இந்தியா நம் எல்லாருக்குமானது. அவர்களின் வெறுப்பரசியலை நிராகரிக்கப் போய் ஒட்டுமொத்த தேசியத்தின் உரிமையை அவர்களுக்கு ஏன் தாரை வார்க்கிறோம்?’ எனக் கேட்டார் வரலாற்றாசிரியர் முகுல் கேசவன். நம் அனைவருக்குமான கேள்வி அது.#
 
இப்படியொரு பதிவை விடுதலை திருநாள் அன்று எழுதினேன். இந்தியா ஒரு நாடா? இந்தத் தேசியத்தை ஏற்கனவே பெரும்பான்மைவாதமாக மாற்றிவிட்டார்கள், பின் என்ன செய்வது? என்றெல்லாம் பல்வேறு கேள்விகள். இவற்றுக்கு முழுமையாகச் சில பத்திகளில் பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. எனினும், வரலாற்று ஆசிரியர்கள் முகுல் கேசவன், ஸ்ரீநாத் ராகவன், அரசியல் அறிஞர் சுனில் கில்னானி ஆகியோரின் வாதங்களை இணைத்து எழுதுகிறேன். த. பெனடிக்ட் ஆண்டர்சன் தேசியம் குறித்துச் செய்த ஆய்வுகள், முன்வைத்த கருத்துக்கள் தேசியம் என்பதே தீங்கானது என்கிற பார்வையைக் கேள்விக்கு உட்படுத்துகிறது. பதிவை நீள வைத்துவிடும் என்பதால் அது இன்னொரு நாள். ற்காலம் குறித்து நான் விரிவாக எழுத முடியாது என்றாலும், இந்தப் பதிவின் மூலம் தேசியம் குறித்த அசூயை குறைந்து, அதில் நமக்கான பங்கை, உரிமையை உணர்ந்து உரையாடுவதன் அவசியம் புரியும் என நம்புகிறேன்
 
தற்போதைய இந்தியா எக்காலத்திலும் ஒரே தேசமாக இருந்தது கிடையாது என்பது பலரின் வாதம். முழுக்க உண்மை. இந்தியாவை அரசியல் அறிஞர்கள் ‘உருவாகி கொண்டிருக்கும் தேசம் ‘ என்பார்கள். தேசியம் என்பது பன்னெடுங்காலமாக இருப்பது என்கிற வாதத்தை நவீன அரசியல் அறிவியல் ஏற்பது இல்லை. வரலாற்று ஆசிரியர்களும் அதனோடு ஒப்புகிறார்கள். தேசியங்கள் என்பவை கட்டமைக்கப்படுபவை. ஐரோப்பாவின் தேசியங்கள் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே நாடு என்கிற ரீதியில் கட்டமைக்கப்பட்டன. மாஜினி. கரிபால்டி, பிஸ்மார்க் எனப் பல்வேறு ஆளுமைகள் ஐரோப்பாவில் உருவாக்கிய தேசியங்கள் வேற்றுமைகளைத் துடைத்து எறிந்து விட்டு, ஒற்றைப்படையாக மக்களை ஒன்று சேர்க்க முயன்றன.
 
1878-ல் டெல்லியில் லிட்டனால் தர்பார் கூட்டப்பட்டது. அதில் பல்வேறு சுதேச சமஸ்தானங்களைச் சேர்ந்த மன்னர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டார்கள். இந்தியா என்கிற வனவிலங்கு சரணாலயத்தின் பல்வேறு விலங்குகளும் அங்கே இருந்தன என்று முகுல் கேசவன் குறிப்பிடுகிறார். இதே பாணியில், ஆனால் , ஆங்கிலேயருக்கு வந்தனம் என்று சொல்லாத ஒரு இந்திய வனவிலங்கு கூட்டத்தைக் காங்கிரஸ் நடத்த முயன்றது. காங்கிரசில் ஆதிக்க ஜாதியினரே ஆரம்பக் காலங்களில் நிரம்பி இருந்தார்கள். அது தன்னை இந்திய தேசிய காங்கிரஸ் என அழைத்துக் கொண்டது. இந்தியாவுக்கே பேசுகிறேன் என்று எப்படி நிரூபிப்பது? நோவாவின் கதை தெரியும் இல்லையா? உலகை இறைவன் அழிக்க எண்ணிய போது, ஒரு பெரிய கப்பலை படைத்து அதில் ஒவ்வொரு உயிரினத்தின் ஜோடிகளை மட்டும் ஏற்றுக்கொண்டார் நோவா என்கிறது விவிலியம். அப்படி இந்தியாவின் பலதரப்பட்ட மக்களின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பிய காங்கிரஸ், எல்லாரையும் பெயரளவில் ஆவது தன்னுடைய உறுப்பினராக ஆக்கிக்கொண்டது. இப்படி நோவாவின் மிதவையைப் போல அனைவரையும் உள்ளடக்கக் காங்கிரசின் தேசியம் முயன்றது. இதையே முகுல் கேசவன், ‘Noah’s Ark of Nationalism’ என்கிறார்.
Image result for முகுல் கேசவன்
 
இந்தத் தேசியம் எல்லாருக்குமான தேசியம் இல்லை என்பது உண்மை. ஒரு குடையின் கீழ் எல்லா இனங்கள், மொழியினரையும் கொண்டு வர இது முயன்றது. இந்தக் குடையில் ஒதுங்க முடியாது என்று வெவ்வேறு தரப்பினர் குரல் கொடுத்தார்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இஸ்லாமியர், தலித்துகள் என்று பலரும் தங்களுடைய தேசியம் இதுவல்ல என்று எண்ணினார்கள், போராடினார்கள்.
 
காங்கிரசின் இந்தத் தேசியத்தை எப்படி வர்ணிப்பது? இதை முகுல் கேசவன், ‘சந்தர்ப்பவாதம், திட்டமிடல், லட்சியவாதம் ஆகியவற்றின் கலவை. ஆங்கிலக் காதல் கொண்ட மக்கள் வருடத்திற்கு ஒருமுறை கூடிய படித்த மேல்தட்டினர் ஆரம்பக் காலத்தில் சமைத்த தேசியம்.’ என்கிறார். இந்தத் தேசியம் அடுத்தக் கட்டத்துக்குத் தாதாபாய் நவ்ரோஜி, ஆர்.சி.தத் முதலியோரால் நகர்ந்தது. இந்தியா என்கிற எங்கள் கனவில் அனைவருக்கும் இடம் என்று மட்டும் சொன்னால் போதுமா? ஆங்கிலேய அரசை எதிர்ப்பது எப்படி? எல்லா இந்தியர்களையும் ஒரே மதம் என்று சொல்லி சேர்க்க முடியாது. அனைவருக்கும் பொதுவான வரலாறு என்று ஒன்றில்லை. மொழி ரீதியாகவும் ஐரோப்பாவை போல ஒன்று திரட்ட முடியாது. தலை சுற்றியிருக்கும் இல்லையா?
 
மொழி, மதம், வர்க்கம் என்றெல்லாம் கிளம்பினால் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்குப் புரிந்தது. எல்லா இந்தியர்களையும் பாதிக்கும் ஒன்றை முன்னிறுத்த எண்ணினார்கள். இஸ்லாமிய வியாபாரிகள், ஜாட் விவசாயிகள், பார்சி முதலாளிகள், கூலித் தொழிலாளர்கள் என்று அனைவரையும் பாதித்தது காலனியம். ஆங்கிலேய அரசு எப்படித் தன்னுடைய காலனிய ஆட்சியின் மூலம் சுரண்டுகிறது என்பதை எடுத்துரைத்தும், பரப்புரை செய்தும் மக்களை ஒன்று திரட்டினார்கள். காங்கிரஸ் ஆங்கிலேயருக்கு எதிரான பொருளாதார தேசியத்தைப் பேசியதே அன்றிக் கலாசார தேசியத்தைப் பேசவில்லை. உழைக்கும் மக்கள், தொழிலாளிகள், விவசாயிகள் ஆகிய அனைவர்க்கும் அது குரல் கொடுத்தது. வரி விதிப்பு, கட்டணங்கள், பொருளாதாரக் கட்டுப்பாடுகள் என்று பலவற்றைச் சாடி மக்களை ஒன்று சேர்த்தது.
 
காங்கிரஸ் கனவு கண்ட இந்திய தேசியத்தை இந்துத்வர்கள் மேற்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பார்கள். ஆனால், காங்கிரஸ் கனவு கண்ட, பெருமளவில் சாதித்த இந்திய தேசியம் அசலானது. அதற்கு முன் எங்கும் முன்மாதிரி இல்லாதது. ஆச்சரியம் தருவது. இந்துத்வமே உண்மையில் ஐரோப்பிய தேசியத்தின் இறக்குமதி ஆகும். இந்திய தேசியம் ஏன் வளர்ந்தது? அது யாரையும் நீ தேசியவாதி என நிரூபிக்கச் சொல்லவில்லை. ‘தேசபக்தன் என நிரூபிக்க வேண்டும் என்று அது கட்டாயப்படுத்தவில்லை. கட்டாயப்படுத்தாமலே வளர்ந்த அற்புதம் அது.’ என்பார் சுனில் கில்னானி. எளிமையாகச் சொல்வது என்றால், எது ‘Idea of India?’, ‘No idea/Not one idea’. செக் தேசியவாதி ஜான் மஸர்யக் தேசியம் என்பதில் தேசமே உச்சமான அரசியல் விழுமியம் என்றார். ஆனால், எண்ணற்ற இந்திய தேசியவாதிகள் தேசம் உச்சமான அரசியல் விழுமியம் என்று பேச மறுத்தார்கள். தேசியம் என்கிற வார்த்தையை வரையறை செய்யாமல் காங்கிரஸ் சாமர்த்தியமாக நடந்து கொண்டது.
Image result for srinath raghavan mukul kesavan
 
இந்தத் தேசியம் இஸ்லாமியர்களை இணைத்துக் கொள்ள விடுதலைக்கு முன்னர்த் தவறியது. அது ஆதிக்க ஜாதியினர் பெரும்பாலும் கோலோச்சும் ஒன்றாக இருந்தது. எனினும், இவற்றைத் தாண்டி இந்தத் தேசியம் இந்தியாவை விடுதலைக்குப் பிறகு மதச்சார்பற்ற தேசமாகக் கட்டமைத்தது. தாராளவாதம் மிகுந்த ஒரு அரசியலமைப்புச் சட்டத்தைப் பரிசளித்தது. இட ஒதுக்கீடு, சமத்துவம், அனைவருக்கும் வாக்குரிமை என்று பலவற்றை அது கட்டமைத்தது. காங்கிரசின் தேசியத்தின் ஆதிக்க ஜாதி பண்பு, பல்வேறு தரப்பின் கவலைகளைக் கவனிக்காமல் இருந்தது, அதன் போதாமைகளைத் தாண்டி இந்தச் சாதனைகளை அது செய்தது. பல தரப்பையும் ஓரளவுக்காவது அது இணைப்பதை சாதித்தது.
 
ஆங்கிலேயருக்கு எதிரான பொருளாதார தேசியத்தின் மூலம் மக்களைத் திரட்டிய காங்கிரஸ் அவர்கள் நாட்டை விட்டு விலகியதும் சவால்களை எதிர்கொண்டது. மக்களை ஒன்றிணைத்த ஆங்கிலேய எதிர்ப்பு விடுதலையோடு முடிந்து போயிருந்தது. எல்லா மக்களுக்கும் பயன் தரும் ஆரம்பக்கல்வியைப் பற்றியோ, விவசாயிகளுக்கு உதவக்கூடிய நில சீர்திருத்தங்கள் குறித்தோ காங்கிரஸ் கவலை கொள்ளவில்லை. அதன் கனவுகள் மேலிருந்து கீழ்நோக்கி பாய்வதாக இருந்தது. சோட்டு ராம், சரண் சிங் முதலியோர் எப்படி இந்தியா நகர்ப்புற இந்தியா, கிராமங்களின் இந்தியா என்று பிளவுபட்டு நிற்கிறது எனச் சுட்டிக்காட்டி போராடினார்கள்.
 
ராம் மனோகர் லோகியா, பெரியார் ஆகியோர் பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்கள் ஆகியோருக்கு குரல் கொடுத்தார்கள். லோகியா பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கனவு கண்டார்.
எமெர்ஜென்சி இந்துத்துவர்களை அரசியல் மையத்துக்குக் கொண்டு வந்தது. அந்தப் பிளவுபடுத்தும் தேசியத்திற்கான மாற்றான காங்கிரஸ் தேசியம் நேருவுக்குப் பிறகு தேர்தல் அரசியலில் அரித்துக்கொண்டே போனது. முகுல் கேசவன் வரியில் சொல்வது என்றால், முன்னையது பட்டவர்த்தனமாக மதவாதம் போற்றுவது, காங்கிரஸோ சமயம், சந்தர்ப்பம் பார்த்து மதவாதத்தைப் பற்றிக்கொள்வது.
Image result for periyar lohia
 
இவற்றுக்கு மாற்றாக எழுந்திருக்க வேண்டிய பிற்படுத்தப்பட்டவர்கள் குரல்கள் வடக்கில் வெற்றி பெறவேவில்லை. ஸ்ரீநாத் ராகவன் தெற்கில் காங்கிரஸ், பாஜக அல்லாத வெற்றியை திமுக, அதிமுகச் சாதித்ததன் காரணம் அவை ஆட்சியில் இருந்த போது மக்கள் நலனுக்குத் தங்களால் ஆனதை செய்து காட்டியும் உள்ளன, இது வடக்கில் நிகழவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
 
காங்கிரஸ் கனவு கண்ட தேசியம் தன்னிடம் பதில் இல்லாத கேள்விகளைத் தள்ளிப்போட்டது. எது தேசிய மொழி என்கிற கேள்விக்கு விடுதலைக்கு முன்னால் இந்துஸ்தானி மொழி என்றது தேசியம். அதுவும் பாரசீக, தேவநாகரி வரிவடிவங்கள் என இரண்டிலும் இடம்பெறும் என வாக்குத் தந்தது. விடுதலைக்குப் பின்னால் பிரிவினையைக் காரணம் காட்டி பாரசீக வரிவடிவத்தைக் கைவிட்டது. அதோடு நில்லாமல் உருது மொழியைக் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டது. இந்தியை பின்னர் வந்தவர்கள் திணிப்பதற்கான வேர்கள் சமரசம் என்கிற பெயரில் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் ஊன்றப்பட்டன.
Image result for symbols of indian nationalism'
தேசிய கொடி கிட்டத்தட்ட விடுதலைக்குப் போராடிய காங்கிரசின் கொடி. அதில் அசோக சக்கரத்தை பதித்து அதற்குப் புதுப் பொருள் தரப்பட்டது. தேசிய கீதத்தை பெரும்பான்மைவாதிகள்
விடுதலைக்கு முன்னர்க் கடுமையாக எதிர்த்தார்கள். விடுதலைப்போரில் அவர்களுக்குத் தொடர்பே இல்லை. எனினும், இன்று தேசியத்தை உரிமை கொண்டாடுகிறார்கள். அவர்களின் பிளவுபடுத்தும் கனவுகளை நிராகரித்த தலைவர்களை உரிமை கொண்டாடுகிறார்கள். அனைவரையும் உள்ளடக்கிய கனவுகளின் மீது எழுந்த தேசியத்தை ஒற்றைப்படையான பார்வை தனதாக்க பார்க்கிறது. போதுமான அளவில் இல்லை என்றாலும், தன்னளவில் அனைவரையும் இணைத்துக் கொள்ள முயன்ற தேசியம் குறித்துப் பேசுவோர் இல்லை. இப்போது முகுல் கேசவனின் வரிகளை மீண்டும் படியுங்கள், ‘ ‘தேசியத்தைப் பெரும்பான்மைவாதிகளிடம் ஒப்புக்கொடுத்து விட்டீர்கள். தேசியக்கொடியைக் கூட அவர்கள் தங்களுடையதாக ஆக்கிக் கொள்ள முயல்கிறார்கள். தேசியம், இந்தியா நம் எல்லாருக்குமானது. அவர்களின் வெறுப்பரசியலை நிராகரிக்கப் போய் ஒட்டுமொத்த தேசியத்தின் உரிமையை அவர்களுக்கு ஏன் தாரை வார்க்கிறோம்?’ தேசியத்தைப் பெரும்பான்மைவாதத்தோடு தொடர்புபடுத்திகொள்வதால் நிகழ்வது அதுவே தேசியம் என அங்கீகரிப்பது தான்!
 
உதவியவை:
 
Secular Common Sense
 
Mukul Kesavan’s writings on Nationalism
 
Idea of India
 

இந்தி முதல் இன்றுவரை – வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுவது !


வரலாறு என்றாலே வருடங்களும், கடுப்பேற்றும் பெயர்களும் என்று நம் மனதில் பதிந்து போயிருக்கிறது இல்லையா? வரலாறு என்பது விறுவிறுப்பான ஒன்று என நம்ப முடிகிறதா? எதுக்காக வரலாறு எல்லாம் தெரிஞ்சுக்கணும் என்று கடுப்பாக கேட்டிருக்கிறீர்களா? ஒரு மூன்று மணி நேரத்தை மட்டும் கடன் கொடுங்கள். அப்புறம் பாருங்கள்:


Bored of textbook history? Ever wondered why history is important? Why history cannot be left unexplored? Fascinating, riveting journey guaranteed. Do lend your ears.

வரலாறு குறித்த மிக எளிய, வசீகரிக்கும் உரை இது என என்னால் சொல்ல முடியும். ஏன் இந்தித்திணிப்பை தமிழகம் எதிர்க்கிறது? அடையாள அரசியல் வரலாற்றில் எப்படி இருக்கிறது? வன்முறையும், அடையாளமும் குறித்து எப்படிப் புரிந்து கொள்வது? கடந்த கால வரலாற்றைக் கொண்டு நிகழ்காலத்தைத் தீர்மானிப்பது ஏன் ஆபத்தானது? ஔரங்கசீப் எப்படிப்பட்டவர்? மொகலாயர்கள் வெறுக்கப்பட வேண்டியவர்களா? வரலாறைப் புரிந்து கொள்ள சில நூல்கள் போதுமா? இந்தி முதல் இன்றுவரை ஒரு பிரமிக்க வைக்கும் பயணம். வாருங்கள். 🙂
Image result for வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுவோம்
Why TN opposes Hindi imposition? What is the Link between identity and violence? What are the problems in dealing with today’s problems by taking inspiration from past? How to view legacy of Aurangzeb, Mughals? From medieval to modern times a magisterial journey. Lets hear 🙂

ராமர் பாலம் என்பது ராமர் கட்டியதா? இதிகாசங்களை வரலாறாகக் கருதலாமா? ஹிட்லர் கொண்டாடப்பட வேண்டியவரா? போஸ் மகத்தான தலைவரா? காந்தி போஸுக்கு துரோகம் செய்தாரா? ஏன் இஸ்ரேல் மத்திய கிழக்கில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது? வரலாற்றின் வழியாக விடை தேடுவோம்.

Did Rama built Ram Sethu bridge? Can epics be treated as history? Why some people celebrate Hitler? Would we have been better had Bose succeeded? Did Gandhi betray Bose? Why Israel reigns supreme in middle east? Lets explore through the lens of history.

 
மதச்சார்பின்மைக்கும் மன்னர்களுக்கும் என்ன தொடர்பு? நேரு, அம்பேத்கர், பெரியார் சந்திக்கும் நெகிழவைக்கும் வரலாற்றுத் தருணம் எது? சாதியமைப்பு குறித்த அம்பேத்கரின் பார்வை என்ன? பெண்ணியமும் பெரியாரும் – ஒரு வரலாற்றுப் பார்வை. ஏன் காந்தி இன்றைக்கும் தேவை? ஏன் ராணுவ ஆட்சி ஆபத்தானது? வாஜ்பாயி நேரு குறித்து என்ன நினைத்தார்? விறுவிறுவென ஒரு பயணத்திற்குக் காதுகொடுங்கள்.

Are our kings truly secular? There was a moment when Nehru, Ambedkar and Periyar met in making history. What was that momentous occasion? What are Ambedkar’s views on caste? Why is Gandhi’s non-violence still needed? Why military rule won’t suit India? What is the link between Periyar and Feminism? Vajpayee had something interesting to say about Nehru. What is that? A riveting, surprising travel through the pages of Indian history. Do hear.

 
அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்வைக்கொண்டு பொதுவாழ்வை அணுகலாமா? வ உ சியின் சாதனைக்கடலின் ஒரு துளியை உணர்வோமா? எம்ஜிஆர் எப்படி ஆட்சி புரிந்தார்? அது என்ன ‘Idea of India’? வரிசைகட்டும் வினாக்கள், அசரவைக்கும் பதில்கள். செவிமடுங்கள்.
 
 
 
 
அவசியம் வாசிக்க வேண்டிய சில வரலாற்று நூல்கள் என்ன? அமர்த்தியா சென் சொல்லும் ‘Country of First Boys’ யார்? இன்னும் இன்னும்… பள்ளிக்காலத்திற்குப் பிந்தைய புத்தக வாசிப்புப் பயணம் குறித்த ஒரு ஐந்து நிமிட சிற்றுரையும் உண்டு.

அம்பேத்கர் – கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 5


அம்பேத்கர்-கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 5 – பேராசிரியர். பிரதாப் பானு மேத்தா

விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றையும் புரட்சிகரமாக அம்பேத்கர் பற்றிக்கொள்கிறார். அதனாலேயே, அம்பேத்கர்
நம் காலத்தின் பெரும் போராட்டங்களில் ஒன்றான ‘ஜனநாயகத்தின் பண்பு என்ன?’ என்பதன் மைய ஆளுமையாகத் திகழ்கிறார். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அம்பேத்கர் அறிவார்ந்த பங்களிப்பை வழங்கினார். அதுவே
அரசமைப்பு சட்டத்தின் போதாமைகள் குறித்து அம்பேத்கர் கொண்டிருந்த தெளிவான பார்வையை நாம் கண்டுகொள்ளாமல் போகக் காரணமாக இருக்கக் கூடாது. முனைவர் ஐஸ்வரி குமார் தனது மிக முக்கியமான புத்தகமான Radical Equality: Ambedkar, Gandhi and the Risk of Democracy (Stanford University Press)-ல் புலப்படுத்துவதைப் போல அம்பேத்கர் பல வகைகளில் புரட்சிகரமானவர். அவர் ஏன் புரட்சிகரமானவர்? ஜனநாயகம் குறித்து உணர்ச்சிவசப்படாத, தயவு தாட்சண்யமில்லாத பார்வையை அவர் கொண்டிருந்தார். சிந்தனையாளர் க்ராட்வேயின் ‘அரசமைப்பு அறநெறி’ என்கிற கோட்பாட்டைத் தனதாக்கி கொண்டே ஒரே இந்திய சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கர் மட்டுமே. அந்தக் கோட்பாட்டின்படி அரசாங்கம் என்பது அறத்தின் அடிப்படையிலான சுயகட்டுப்பாடு, வெவ்வேறு கருத்துகளுக்கு மரியாதை தருவது, கட்டற்ற உரையாடல் ஆகியவற்றைக் கூறுகளாகக் தன்னுடைய கூறுகளாகக் கொண்டது. எனினும், அரசமைப்பு அறமானது ஜனநாயகப்பண்புகள் அற்ற ஆழமான நிலத்தின் மேற்பகுதி மண் மட்டும் செழிப்பாக இருப்பதைப் போன்றதே ஆகும் என்று அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிட்டார்.

p19.gif
அரசமைப்பு சட்ட அடிப்படையிலான அரசை பேணுவது மட்டுமே ‘மக்களின் சுயாட்சிக்கு ஈடாக முடியாது.’ என்பதையும் கவனப்படுத்தினார். எனினும், அரசமைப்பு அறத்திற்கு இரண்டு முக்கியமான போதாமைகள் உண்டு என்று தீர்க்கதரிசியாக அவர் எச்சரித்தார். அரசமைப்புச் சட்டத்தை ஆட்சிமுறையும் ஒத்திருக்க வேண்டும். இதனால் தான், சட்ட அறிஞர் மாதவ் கோஸ்லா வாதிடுவதைப் போல, இந்தியாவில் ஆட்சிமுறையை அரசமைப்பு சட்டத்தின் வரையறைகளுக்குள் அமைப்பதற்கு ஆழமான அழுத்தம் தரப்படுகிறது. எழுபது வருடங்கள் கடந்த பின்னர், இப்பொழுது நம் முன் நின்று கொண்டு நம்மைக் கடுமையாகச் சாடுவதைப் போல இருக்கிறது அம்பேத்கரின் இந்த வாசகங்கள்: ‘அரசமைப்பு சட்டத்தின் வடிவத்தைத் துளிகூட மாற்றாமல், ஆட்சிமுறையின் வடிவத்தை மட்டும் மாற்றுவதன் மூலம் அரசமைப்பு சட்டத்தின் ஆன்மாவில் இருந்து முற்றிலும் வேறுபட்ட, ஒவ்வாத ஆட்சிமுறையைத் தர முடியும். அதன் மூலம் அரசமைப்பு சட்டத்தின் ஆன்மாவை சீர்குலைக்க முடியும். ‘

அதே போல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கான பொறுப்புமிகுந்த அரசாக இருக்க வேண்டியதில்லை. அவர், ‘காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்தது என்ன?’ நூலில் எழுதுவதைப் போல, ‘வயது வந்த அனைவருக்குமான வாக்குரிமை மட்டுமே மக்களுக்கான, மக்களாலான அரசை கொண்டு வந்துவிட முடியாது.’ எல்லாவற்றுக்கும் அமலாக, ஜனநாயகத்தின் மிக முக்கியமான முரண்பாட்டை அவர் உணர்ந்திருந்தார்: ஆழமான சமூக, பொருளாதாரச் சமத்துவமின்மைகளுக்கு இடையே ஜனநாயக சமத்துவத்தை ஏற்படுத்த முயல்வது. இப்படிப்பட்டமுரண்பாடுகளின் போரை வெகுகாலத்துக்கு எந்த ஜனநாயகமும் தாங்க முடியாது.

ஜனநாயகத்தைப் பற்றிய கூர்மையான விமர்சனத்தை வைத்த வகையில் மரபார்ந்த தாராளவாதிகளில் இருந்து மாறுபட்டவராக அம்பேத்கர் திகழ்கிறார். அம்பேத்கரை புரட்சிகரமான போக்குக் கொண்டு குடியரசாளர் என்று கருதுவதற்கு ஏற்றாற்போல அவர் சகோதரத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார், பொருளாதார ஏற்றத்தாழ்வும், உண்மையான ஜனநாயகமும் ஒன்றாக இயங்க முடியுமா என்கிற ஐயப்பாடு உடையவராக அவர் இருந்தார். தனக்குத் தானே விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டைத் தவிர்த்துக் குடியரசில் வேறு எதற்கும் அதிகாரம் செலுத்த இடமில்லை என்று அவர் குடியரசாளர் போல எண்ணினார். எனினும், இப்படிப்பட்ட பண்புகளால் அவரைக் குடியரசு முறையை முற்றாக ஏற்றுக்கொண்டவர் என்று எண்ணக்கூடாது. இதற்கு மூன்று முக்கியக் காரணங்கள்.

முதலாவதாக, மக்களின் அரசாள்வதற்கான தலைமை உரிமையான, ‘இறையாண்மை’ ஒற்றைப்படையானது என்பதை அவர் ஆழமாகச் சந்தேகித்தார். இதனாலேயே பல்வேறு வகைகளில் நாட்டின் ஆட்சிமுறையைக் கட்டுப்பாட்டில், பொறுப்பான செயல்பாட்டில் வைக்கும் தடுப்புகள், ஜனநாயகத்தின் சமநிலையை உறுதி செய்யும் அமைப்புகள் ஆகியவை தேவை என்கிற தாராளவாத பார்வை கொண்டவராக அவர் இருந்தார். அம்பேத்கரை பொறுத்தவரை இறையாண்மை என்பது ஒற்றைப்படையானது இல்லை. அதை யாரோ ஒருவர் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தி விட முடியாது. இந்தியாவின் சமூகச் சூழ்நிலை சீர்கேடுகளால் நிறைந்திருந்ததால், விழுமியங்களால் சமூக இணக்கத்தைச் சாதிப்பதை விட அரசைக்கொண்டு சமூக ஒழுங்கை உறுதி செய்ய முடியும் என்று அவர் நம்பினார். அதிகார பரவலாக்கல், பிரதேசவாதம் ஆகியவை குறித்த அவரின் ஓயாத விமர்சனம் இப்படிப்பட்ட முயற்சிகள் உள்ளூர் சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்து விடும் என்கிற ஐயப்பாட்டின் அடிப்படையில் ஓரளவுக்கு அமைந்திருந்தது. அதேசமயம் , அரசு சமூகத்தைப் புணரமைக்கும் என்பதில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அதேசமயம், அம்பேத்கர் அனைவரும் சகோதரர்களாகக் கூடி வாழும் சகோதரத்துவத்துக்கு ஏங்கினாலும், பெரும்பாலான குடியரசாளர்கள் கொண்டிருந்த ‘சகோதரத்துவம் என்பது ஒற்றுமையில் களிப்புக் கொள்வது.’ என்பதை அவர் ஏற்கவில்லை. அம்பேத்கர் தனி மனிதனின் தனித்துவதில் நம்பிக்கை கொண்டவர் என்பதால், அவர் கருத்தியல் ரீதியாக ஒற்றுமையைக் கோரிய குடியரசியலை முழுமையாக ஏற்கவில்லை. அவரின் செறிந்த, தன்னிகரில்லாத பகுத்தறிவு அவரைக் குடியரசியலை விட்டு சற்றுத் தள்ளியே இருக்க வைத்தது.

சமூகநீதி என்பது தலித்துகளை அதிகாரப்படுத்தலில் இருக்கிறது என்பதையும், அப்படிப்பட்ட அதிகாரப்படுத்தலுக்கு எல்லா வகையான அதிகாரங்களிலும் தலித்துகளுக்குப் பங்கு வேண்டும் என்பதிலும் அம்பேத்கர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாக இருந்தார். மற்ற அமைப்பு முறைகள் பொருளாதார வளம், ஆயுதம், கல்வி ஆகிய பரிமாணங்களில் ஒன்று, இரண்டு பரிமாணங்களில் தான் விலக்குதலை மேற்கொண்டன. ஆனால், ஜாதி அமைப்பில் மட்டும் தான் தலித்துகளைப் பொருளாதாரப் பலம், ராணுவம், கல்வி ஆகிய அனைத்து தளங்களிலும் ஒதுக்கி வைப்பது ஒரே சமயத்தில் நடைபெற்றது. அதனால் அது மிகக்கொடுமையான அடக்குமுறையாக இருந்தது.

ambedkarcu2.gif
அம்பேத்கர் கல்வியை மட்டுமே அதிகாரத்துக்கான திறப்பாகக் காணவில்லை. மஹர் ராணுவப்பிரிவை உருவாக்கி, விரிவுபடுத்தினார். பொருளாதார வளத்திலும் தலித்துகளுக்குப் பங்கு கிடைப்பதற்கான வெளிகளை அவர் கட்டமைக்க முயன்றார். இவையெல்லாம் வெறும் விபத்துக்கள் அல்ல. இவை அனைத்துக்கும் மேலாக, இவற்றை அடைய அரசு அதிகாரத்தில் பங்கு வேண்டும். தலித்துகளுக்குச் சட்டமியற்றும் சபைகளில் நியாயமான இடத்தைப் பெறுவதற்கான அவரின் வாழ்நாள் போராட்டத்தின் பின்னால் இந்தப் புரிதல் இருந்தது. திறமையானவர்கள், தகுதியானவர்கள் என்கிற கருத்தாக்கம் உண்மையில் பரம்பரை, பரம்பரையாகப் பெறப்பட்ட வாய்ப்புகளின் மீது எழுப்பப்பட்ட ஒன்று என்று முதன்முதலில் அப்பட்டமாக அம்பலப்படுத்தியவர்களில் அம்பேத்கரும் ஒருவர். திறமை என்பது தானே வருவதில்லை, அதற்குப் பின்னால் பல்வேறு காரணிகள், வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை இத்தனை காலம் கழித்தும் அழுத்தி சொல்ல வேண்டிய நிலைமை இருப்பது அவரின் கொள்கைகளில் இருந்து நாம் எவ்வளவு தூரம் தள்ளியிருக்கிறோம் என்பதற்குச் சாட்சியாகும்.

எனினும், இட ஒதுக்கீடு உருவாக்கத்தில் ஓரளவுக்கு முரண் உள்ளது. அம்பேத்கர் தன்னுடைய வாழ்நாள் முழுக்கத் தலித் அனுபவம் தனித்துவமானது என்று ஓயாமல் அழுத்தி சொல்லிக்கொண்டே இருந்தார். இப்படிப்பட்ட ‘தலித்துகள் தனித்துவமானவர்கள்’ என்கிற அவரின் ஓயாத குரல் மற்றவர்கள்
அவரோடு இணைந்து கூட்டணி அமைக்க முடியாமல் தடுத்தது என்று அவரின் செயல்முறைகளை விமர்சிப்பவர்கள் சுட்டிக்காட்டுவார்கள். தலித்துகள் தனித்துவமானவர்கள் என அழுத்தி சொன்னதன் மையத்தில் அவர்களை ஒடுக்கும் அனுபவத்தின் வலி நிறைந்திருந்தது. இதனால் தான் தலித்துகள் சிறுபான்மையினர் என்கிற தனி அடையாளத்தைப் பிறர் ஏற்க வேண்டும் என்று அம்பேத்கர் போராடினார். இட ஒதுக்கீடுகள் எப்படி மாறின என்பதைக் காண்கிற பொழுது அம்பேத்கரின் இந்தச் சிந்தனைகளின் அடிப்படைகள் ஓரளவுக்கு மழுங்கடிக்கப்பட்டு விட்டன என்பது பெரிய முரண்களில் ஒன்று.

தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் நீட்டிக்கப்பட்டது இரு விஷயங்களைச் செய்தது. ‘சாதி போர்களில்’ தலித்துகளின் தனித்த வரலாற்றை அது இருட்டடிப்பு செய்தது; அவர்களின் வரலாறை மற்றவர்கள் தங்களுடையதாகக் கையகப்படுத்திக் கொண்டார்கள். இந்தக் கையகப்படுதலை அவர்களைப் பல சமயங்களில் நேரடியாக ஒடுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே அடிக்கடி மேற்கொண்டார்கள். அதிகார பகிர்வு என்பதன் சொல்லாடல் பலருக்கும் உரியதாக ஆக்கப்பட்டதன் மூலம் தலித்துகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகள் அனைவருக்கும் உரியதாக, ஏன் புலப்படாத ஒன்றாக மாற்றப்பட்டு விட்டது. அம்பேத்கர் ஒரு புதிய அறத்தின் அடிப்படையிலான உறவினை அதிகாரத்திற்கான நேரடிப் போராட்டமாக, எதிர்வினைகளாலான எதிர்ப்பரசியலாக மாற்ற முயன்ற நம்பிக்கை மிகுந்த முன்னெடுப்பை இது காணடித்து விட்டது. அதே வேளையில், இட ஒதுக்கீடுகளுக்கான அரசியல் அடிப்படையை அது மாற்றியமைத்து உள்ளது. தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் இடையே உள்ளே பெரும்பான்மை கூட்டணி இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி உள்ளது. இடஒதுக்கீட்டுக்கு அரசியல் திடத்தன்மையை அது வழங்குகிறது. அதே சமயம், தலித்துகளின் அவலமிகுந்த நிலைமையின் தனித்த அறக்குரலை அது கேட்காமல் செய்துவிட்டது.

ambedkar_statue_0.jpg
அம்பேத்கர் தொடர்ந்து நம்மை அசைத்து பார்ப்பவராக இருக்கிறார். அவர் எல்லா வகையான அரசியல்கள் அவற்றோடு தொடர்புடைய பிரமைகள்
கேள்விக்கு உட்படுத்துகிறார். அம்பேத்கர் பாரம்பரியம், அதிகாரம், இந்து மதம், ஜனநாயகம். எல்லாவற்றுக்கும் மேலாக மெய்யியியல் என்கிற பெயரில் நிகழ்த்தப்படும் நேர்மையற்ற, அபத்தமான சொற்பொழிவுகள் ஆகியவை குறித்த நம்முடைய பிரமைகளைக் கடுமையாகக் கேள்விக்கு உட்படுத்துகிறார். இப்பொழுது இருக்கும் சூழலில், தேசபக்தியை நீதியை விட முக்கியத்துவப்படுத்துவது குறித்த அவரின் அவநம்பிக்கை மிகுந்த குரலுக்குச் செவிமடுத்து அவசியமாகிறது. ‘தேசியம் என்பது ஒன்றும் புனிதமானது அல்ல. அது கேள்விகளுக்கு அப்பாற்பட்ட கொள்கையும் அல்ல. ஆகவே, மற்ற எதைவிடவும் அதிமுக்கியமான ஒன்றாக தேசியத்தை மட்டும் தேர்ந்தெடுத்து கட்டாயப்படுத்தி ஏற்க வைப்பது ஏற்புடைய ஒன்று அல்ல.’

அவரின் சிந்தனைகளின் மையத்தில் பெரும் சோகத்தை ஊற்றெடுக்க வைக்கும் ஒரு கேள்வி எழுகிறது: மற்ற எவரைவிடவும் மனிதர்களின் கயமைகளை, அடக்குமுறைகளை அனுபவித்த ஒருவர் எப்படி நம்பிக்கையைக் கைவிடாதவராக இருந்தார்? எந்தப் புற ஊன்றுகோல்களையும் அவர் நம்பவில்லை, வரலாற்றின் இயங்கியலிலோ, மெய்யியலின் நிம்மதியிலோ, மதத்தின் ஆறுதல்களிலோ, போலி அறிவியலின் நிச்சயத் தன்மைகளிலோ அவர் பல நூறு ஆண்டுகாலத் துயரங்களில் இருந்து தப்பிக்கும் நம்பிக்கை இருப்பதாக நம்பாதது அவரின் அழியா தீரத்துக்குச் சான்றாகும். ஒரு பண்பில் அவர் காந்தியைப் போலவே தோன்றுகிறார்: நம்முடைய மனசாட்சியின் அறிவார்ந்த குரலை விடச் சமூகச் செயல்பாட்டிற்குச் சிறந்த அடித்தளம் எதுவும் இல்லை.

அவரின் கூர்மையான இன்னுமொரு கட்டுரையான ‘ரானடே, காந்தி, ஜின்னாவில்’ அவர் இப்படி அழுத்தமாக எழுதினார்:

உரிமைகள் சட்டங்களால் பாதுகாக்கப்படுவது இல்லை, அது சமுதாயத்தின் சமூக மனசாட்சி, அற மனசாட்சி ஆகியவற்றின் மூலமே காக்கப்படுகிறது என்று அனுபவம் நிரூபிக்கிறது. சட்டம் எந்த உரிமைகளைக் காக்க சட்டம் இயற்றப்படுகிறதோ,
அவற்றைச் சமூக மனசாட்சி அங்கீகரிக்கத் தயாராக இருந்தால் உரிமைகள் பாதுகாப்பாக, பத்திரமாக இருக்கும். அடிப்படை உரிமைகளைச் சமூகம் எதிர்க்கும் என்றால் எந்தச் சட்டமும், நாடாளுமன்றமும், நீதித்துறையும் உண்மையில் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த முடியாது. அமெரிக்காவில் நீக்ரோக்களுக்கும், ஜெர்மனியில் யூதர்களுக்கும், இந்தியாவில் தீண்டபப்டாத மக்களுக்கும் அடிப்படை உரிமைகளால் என்ன பயன்? பர்க் சொல்வதைப்போலப் பெரும் கூட்டத்தைத் தண்டிக்க எந்த முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை. சட்டமானது ஒரு தனித்த, ஒற்றை அடங்கமறுக்கிற குற்றவாளியை தண்டிக்க இயலும். சட்டத்தை ஏற்க மறுக்கிற பெரும் கூட்டத்தைச் சட்டம் ஒன்றும் செய்ய முடியாது.

கோல்ரிட்ஜ் குறிப்பிடும் சமூக மனசாட்சி தான் ஆன்மாவின் அமைதியான, களங்கப்படுத்த முடியாத நெறியாளர். அந்தச் சமூக மனசாட்சி தான் , “அடிப்படை உரிமைகள், பிற உரிமைகளின் பாதுகாவலன், அது இல்லாமல் மற்ற எல்லா அதிகாரங்களும் கடும் எதிர்ப்பையே சந்திக்கும்.”இது பெரும் நம்பிக்கை தருகிற அல்லது பெருமளவில் அவநம்பிக்கை தரும் சிந்தனையாக உங்களின் பார்வைக்கு ஏற்ப அமையும். நம்முடைய மனசாட்சியைத் தவிர வேறு எந்தத் தீர்வுகளும் இல்லை என்பது நம்மை எதிர்ப்பேச்சு பேச முடியாதவர்களாக மாற்றும், குறிப்பாக, அம்பேத்கருக்கு போலியான நம்பிக்கைகளால் மனசாட்சி பல சமயங்களில் மரித்துப் போகிறது என்பது புரிந்திருந்தது. அம்பேத்கருக்கு பெரும் அரசியல் செல்வாக்கு அவர் காலத்தில் இல்லை. அரசியல் வெற்றியின் மரபார்ந்த அளவுகோல்களின்படி அவர் அரசியலில் பெரும் தாக்கத்தை உண்டு செய்தவர் இல்லை. “நான் உருகாத பாறை போன்றவன். பாய்ந்து வரும் நதிகளின் போக்கை திசைதிருப்பும் வல்லமை மிக்கவன்.” என்று அம்பேத்கர் தன்னைப்பற்றி ஒரு சமயம் எழுதினார். நிச்சயமாக ஒட்டுமொத்த பண்பாட்டின் பயணத்தை நீதி நோக்கி அவர் திசை திருப்பினார். அதனால் ஏற்பட்ட போராட்டங்கள், அதிர்வுகள் இன்னமும் முழுமையாக உணரப்படவில்லை. அவை விடுதலைக்கான போராட்டங்களால், வன்முறை மிகுந்த எதிர்ப்புகளோடு இந்திய சமூகத்தில் வெளிப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் அனைவருக்குமான சிந்தனையாளர் இல்லை. அவரை நம்முடையவர் என்று உரிமை கொண்டாட நாம் போதுமானதை செய்யவில்லை. ஒரு வகையில் நம் அனைவருக்குமான சிந்தனையாளர் அவர்- நம் அனைவரையும் நிரந்தரமாக எச்சரிக்கும் எம்மான் அவர்.

(முடிந்தது)

தமிழில்: பூ கொ சரவணன்

அம்பேத்கர் – கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 4


அம்பேத்கர்-கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 4 – பேராசிரியர். பிரதாப் பானு மேத்தா

இப்படிப்பட்ட அம்பேத்கரின் அறிவு புகட்டலுக்குப் பின்னால் எப்படிப்பட்ட அறிவு சார்ந்த வாழ்க்கையை ஒரு தேசம் கட்டமைக்கும்? எந்த வகையான மீட்டெடுப்பு, நீதி நோக்கிய செயல்திட்டத்துக்கும் மையம் பிராமணியத்தை அழித்தொழிப்பதே என்பதில் அம்பேத்கர் மிகத்தெளிவாக இருந்தார். அம்பேத்கர் புத்த மதத்துக்கு மாறினாலும், மரபு என்பது என்ன என்கிற கேள்வி மனவேதனை தருகிற ஒன்றாகவே இன்றுவரை இருக்கிறது. ஒரு வகையில் அம்பேத்கரை புரிந்து கொள்ள அவர் ‘காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன?’ நூலில் செய்திருக்கும் உணர்ச்சி ததும்பும், நெகிழவைக்கும் சமர்ப்பணத்தைக் காண வேண்டும். உணர்ச்சிவசப்படாதவராக எப்பொழுதும் தன்னுடைய எழுத்துக்களில் வெளிப்படும் அம்பேத்கர் இந்தக் கணத்தில் உணர்ச்சிமயமாகிறார். தன்னுடைய குழந்தைகளின் மரணத்தைப் பற்றி எழுதுகையில் உணர்ச்சிகள் மிகுந்தவராக அம்பேத்கர் வெளிப்படுகிறார். ‘நம் குழந்தைகளின் மரணத்தோடு நம் வாழ்க்கையின் சாரமும், சுவையும் முடிந்து போகிறது’ விவிலியம் சொல்வதைப் போல,’“பூமிக்கு நீங்கள் உப்பாக இருக்கிறீர்கள். தன் சுவையை உப்பு இழந்தால் மீண்டும் அதை உப்பாக மாற்றவோ, வேறு எதற்கும் பயன்படுத்தவோ முடியாது. அது தெருவில் எறியப்பட்டு மக்களால் மிதிக்கப்படும்.”‘. என்று குழந்தைகளின் மரணத்தின் பொழுது எழுதுகிறார். தன்னுடைய நூலை ‘F’ என்று அவர் விளிக்கும் நபருக்கு சமர்ப்பிக்கிறார். அந்தச் சமர்ப்பணம் விவிலியத்தின் ரூத் புத்தகத்தில் ரூத்தும், நகோமியும் மேற்கொள்ளும் உரையாடலுடன் துவங்குகிறது. அந்தச் சமர்ப்பணம் ‘நீர் மரிக்கும் இடத்திலேயே நானும் மரிப்பேன். அதே இடத்தில்தான் நான் அடக்கம் பண்ணப்பட வேண்டும். நான் இந்த வாக்குறுதியைக் காப்பாற்றாவிட்டால் என்னைத் தண்டிக்கும்படி கர்த்தரிடம் கேட்டுக்கொள்வேன்: மரணம் ஒன்றுதான் நம்மைப் பிரிக்கும்’ எனும் வாசகத்துடன் முடிகிறது. அதற்குப்பின்னர் அம்பேத்கர் எழுதுகிற பத்தியை முழுமையை மேற்கோள் காட்டுவது சரியாக இருக்கும்:

நாம் இருவரும் இணைந்து விவிலியத்தை வாசிக்கும் போது , இந்தப் பத்தியின் இனிமை, சோகரசம் ஆகியவற்றால் நாம் உருகுவோம். நாம் இருவரும் ரூத்தின் ‘உம் ஜனங்களே என் ஜனங்கள். உம்முடைய தேவனே என் தேவன்.’ எனும் கூற்றைப் பற்றி நாம் விவாதித்துக் கொண்டோம். அப்போது நாம் இருவரும் அதன் சாரம் எது என்பதில் முரண்பட்டது இன்னமும் எனக்குப் பசுமையாக நினைவில் இருக்கிறது. ஒரு முழுமையான மனைவிக்குப் பொருத்தமான உண்மையான உணர்வுகளை அது வெளிப்படுத்துகிறது என்று நீ வலியுறுத்தினாய். அந்தப் பத்தியானது உண்மையில் சமூகவியல் மதிப்பு கொண்டுள்ளது எனவும், அதன் உண்மையான அர்த்தம் பேராசிரியர் ஸ்மித் வாதிடுவதைப் போல நவீன சமூகத்தைப் பழங்காலச் சமூகத்திடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்கிற கருத்தை நான் முன்வைத்தேன். ரூத்தின் கூற்றான, ‘பழங்காலச் சமூகமானது தன்னுடைய மேலாதிக்கம் மிகுந்த பண்புநலனான மனிதனும், இறைவனும் இணைந்தவர்கள் என்பதாக அறியப்பட்டது, திகழ்ந்தது. நவீனகாலச் சமூகமோ மனிதர்களின் சமூகமாக மட்டும் உள்ளது. (மனிதர் என்பதில் பெண்களையும் இணைத்தே நான் பேசுகிறேன் என்று நீ உணர்வாய் எனப் பிரார்த்திக்கிறேன்.) என்னுடைய கருத்து உனக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. எனினும், இந்தத் தலைப்பினில் நான் ஒரு நூலை ந எழுத வேண்டும் என்று நீ ஆர்வத்தோடு உற்சாகப்படுத்தினாய். நான் நிச்சயம் எழுதுவதாக வாக்களித்தேன். ஒரு கீழை தேசத்தைச் சேர்ந்தவனாக என் சமூகம் இன்னமும் பழங்காலச் சமூகமாகவே உள்ளது, இதில் மனிதர்களைப் பற்றிய அக்கறையை விடக் கடவுள்கள் பற்றிய கவலையே முக்கியமாக உள்ளது. இப்பொழுதைய சூழலில் அந்த உரையாடலின் மிக முக்கியமான நினைவாக உனக்கு அளித்த வாக்குறுதியே கண்முன் நிற்கிறது. அந்தப் புத்தகத்தை எழுதினால் அதை உனக்குச் சமர்ப்பிப்பதாக வாக்குறுதி தந்திருந்தேன். பேராசிரியர் ஸ்மித்தின் விளக்கம் எனக்குப் புதிய திறப்புகளைத் தந்தது, அந்த நூலை எப்படியேனும் எழுதிவிட வேண்டும் என்று நான் அளவில்லாத நம்பிக்கை கொண்டிருந்தேன். அந்த ஆய்வுப்பொருளில் இப்பொழுது ஒரு புத்தகம் எழுதுவதற்கான வாய்ப்புகள் வெகு குறைவு. அரசியலின் சுழலில் மாற்றிக்கொண்ட என்னால் இலக்கியத் தேடல்களை மேற்கொள்ள முடியாது என நீ அறிவாய். இந்தச் சுழலை விட்டு எப்பொழுது நான் வெளியேறுவேன் என்று எனக்குத் தெரியவில்லை. உலகப்போர் துவங்கியதில் இருந்தே உனக்குத் தந்த வாக்கை காப்பாற்ற முடியவில்லையே என்கிற நினைவு என்னைத் தொடர்ந்து வாட்டி வதைத்தது. இந்தப் போரில் நீ இறந்து போகலாம் என்கிற நினைப்பே என்னை அதற்கு இணையாக உருக்குலைத்தது. மரணத்தின் பிடியிலிருந்து நீ தப்பி விட்டாய். இதோ உனக்கு அர்ப்பணிக்க ஒரு புத்தகம். இந்த இரு நிகழ்வுகளும் சங்கமிப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்த நூலை எழுத வேண்டும் என்கிற திட்டத்தைக் காலத்துக்கும் தள்ளிப்போடுவதை விட நான் வெற்றிகரமாக எழுதி முடித்த புத்தகத்தை உனக்குச் சமர்ப்பிப்பதன் மூலம் என் வாக்கை நான் காப்பாற்றி விட்டேன். இந்தப் புத்தகத்தின் ஆய்வுப்பொருள் வேறு என்றாலும் இது அதற்கு மகத்தான மாற்று தான். இந்தச் சமர்ப்பணத்தை நீ ஏற்றுக்கொள்வாயா?’

இந்தச் சமர்ப்பணத்தில் தாங்கமுடியாத அளவு கனிவும், பொறுப்புணர்ச்சியும் நிறைந்து நமக்குள் ஆழமான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அம்பேத்கரை எப்படி நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பதற்கு ‘F’ என்று அம்பேத்கர் குறிக்கும் நபர் குறித்து நமக்குக் கிட்டத்தட்ட ஒன்றுமே தெரியாது என்பது சாட்சியாக நிற்கிறது. அந்தப் பெண்ணை அம்பேத்கர் குறித்த தனஞ்செய் கீரின் நூல் அம்பேத்கரின் ‘விவிலிய ஆசிரியை’ என்று விவரிக்கிறது. எனினும், இன்னும் தத்துவார்த்தமாகப் பார்த்தால் அம்பேத்கர் தன்னுடைய தர்க்கத்தின் அம்புகளைத் தொடுக்கிறார். நவீன உலகுக்கும், பழங்காலத்து உலகுக்கும் இடையே உள்ளே பெரும் வேறுபாடாக மனிதனை மையப்படுத்தல் இருக்கிறது. நம்மை அப்படியே உறையவைக்கும் வாக்கியமாக, ‘என் சமூகம் இன்னமும் பழங்காலச் சமூகமாகவே உள்ளது, இதில் மனிதர்களைப் பற்றிய அக்கறையை விடக் கடவுள்கள் பற்றிய கவலையே முக்கியமாக உள்ளது.’ உள்ளது. அது ஆறாத துன்பத்தோடு அவரின் நிலையை வெளிப்படுத்துகிறது. மனிதனை விட வேறொன்று மேலானது என்பது மனிதத்துக்கான சாவுமணி. இந்த அவலமான நிலையை நாம் வென்றெடுக்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர் எல்லாக் கடவுள்களையும் அழித்து ஒழிக்கக் களம் கண்டார்.

gadhi_ambedkar_20120820.jpg
அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியதை இந்தப் பின்னணியிலேயே காண வேண்டும். மனிதத்தை உண்மைக்கான தேடலின் மையமாக, அளவுகோலாக மாற்றும் அவரின் தேடல் தீவிரமாகத் தொடர்ந்துகொண்டே இருந்தது. கடவுளை அழித்து ஒழிப்பதோடு மட்டுமல்லாமல், கண்ணுக்கு புலப்படாதவற்றைத் தேடிச்செல்லும் எல்லா வகையான தேடலையும் மாய்த்துவிட முயலும் அளவுக்கு அந்தத் தேடல் தீவிரமானதாக இருந்தது. அம்பேத்கரின் பல்வேறு தேவைகளுக்குப் புத்த மதம் பயன்பட்டது.எந்த அறரீதியான, வரலாற்று ரீதியான மோதலை சுற்றி இந்திய வரலாறு கட்டமைக்கப்பட்டது அதன்மைய அச்சாகப் புத்த மதம் இருந்தது. Iபுத்தம் பிராமணியத்தின் கயமைகளைத் தோலுரித்துக் காண்பித்த மாற்று மரபாக இருந்தது. அது பிராமணியத்தால் அடக்கப்பட்டது. சமூக எதிர்ப்பின் ஒரு நடைமுறை செயல்பாடாகப் புத்த மதத்துக்கு மாறுவது அமைந்தது. புத்த மதத்தில் விடுதலை,சமத்துவம், சமூக இணக்கம் ஆகியவற்றை ஒன்றைந்து ஒரு புரட்சிகரமான சமூக அறமாக அதை மறு உருவாக்கம் செய்ய முனைந்தார். புத்த சங்கத்தில் இணக்கமாகக் கூட்டுறவோடு பல்வேறு மக்கள் ஒன்றிணைந்து இயங்கினார்கள். அதனால் புத்த மதத்தின் சங்கம் ஜனநாயக அமைப்புக்கான மாதிரியாகத் தோன்றியது. அறிஞர்கள் அம்பேத்கர் புத்த மதத்தைக் காரணக் காரியங்கள், கர்மா, சுயம் ஆகிய மெய்யியல் சார்ந்த கேள்விகள் அற்றதாகக் கட்டமைக்க முயன்றார் என்கிறார்கள். அம்பேத்கரின் புத்த மதம் சார்ந்த அணுகுமுறைக்கும், பிறரின் அணுகுமுறைக்கும் இருந்த மலையளவு வேறுபாட்டை உணர்ந்து கொள்ளப் பொதுவுடைமைத் தலைவரான ஆச்சார்ய நரேந்திர தேவ் ஐநூறு பக்கங்களில் எழுதிய மகத்தான நூலான ‘பவுத்ததர்ம இதிஹாஸ்’ நூலை அதே காலத்தில் எழுதப்பட்ட அம்பேத்கரின் ‘புத்தரும், தம்மமும்’ நூலோடு ஒப்பிட்டு பார்த்தால் போதுமானது. புத்த மதத்தின் மெய்யியல் சார்ந்த கேள்விகளில் அம்பேத்கருக்கு சற்றும் ஆர்வமில்லை. இன்னொரு புறம், நரேந்திர தேவ் பொதுவுடைமை சித்தாந்த பார்வை கொண்டவர் என்றாலும் புத்த மதத்தின் சமூக அறத்தேவையை அவர் சற்றும் கருத்தில் கொள்ளவில்லை. இந்த இரு வேறு நூல்களை எதிர்கொண்டு ஆய்கையில் இந்தியாவின் அறிவுலகத் துன்பியலை அது புரிய வைக்கிறது. மெய்யியல் சமூக அறம் இல்லாமல் இருக்கிறது; சமூக அறம் மெய்யியலை பெரும் ஐயத்தோடு அணுகுகிறது. இருதரப்பும் எப்பொழுதும் உரையாடல் மேற்கொள்ளவே முடியாது என்றாகி விட்டது. இந்தியாவின் ஞான மரபின் தீர்க்க முடியாத உள்முரண்பாட்டின் அடையாளமாக மெய்யியலின் பக்தியானது, ஆழமான சந்தேகம் மிகுந்த தேடலோடு பின்னிப்பிணைந்து உள்ளது. ஒருவர் சமூக அறத்தை கைக்கொள்ளவோ , அல்லது போலியான மெய்யியலுக்கு அடிமைப்பட்டோ இருக்க முடியும். இரண்டையும் ஒருங்கே உடையவராக இருக்க முடியாது என்று புத்த மதத்துக்கு மாறியதன் மூலம் அம்பேத்கர் அறிவித்தார். மதமாற்றம் மனிதத்தை மீட்கும் பெருஞ்செயலாகும்.

அம்பேத்கர் பெரும்பாலும் புத்த மதத்தைச் சமூக அறமாகவே கண்டார். புத்த சங்கங்களின் அமைப்புமுறையோடு அவர் தன்னுடைய கொள்கையான சகோதரத்துவதைக் கொண்டு போய் இணைத்தார். இது வெறும் விபத்தில்லை. புத்தர் பிராமணியத்தின் சடங்குகளை நிர்மூலம் ஆக்கினார், அம்பேத்கர் புத்த மதத்தை மெய்யியலின் எந்தத் தடயமும் இல்லாத ஒன்றாக மாற்ற முயன்றார். மெய்யியல் சார்ந்த தேடல்களில் மனிதன் எதோ ஒரு பெரிய ஆற்றலின் விளைவாக, நுண்பொருளை தேடுபவனாக மாறிவிடுவதைத் தவிர்க்க அம்பேத்கர் முனைந்தார். அவர் மீண்டும், மீண்டும் மந்திர தாயத்தைப் போலத் தன்னுடைய வழிகாட்டும் ஒளிவிளக்காகச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்துவது ஆச்சரியமில்லை. அவர் இன்னமும் குறிப்பாகச் சகோதரத்துவதை உண்மையோடு ஒப்பிட்டார். ‘உண்மையும் சகோதரத்துவமும் ஒன்றே’ என்றார். எல்லாவகையான தேடல்களுக்கும் ஒரு மையப்புள்ளி உண்டு அது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். இந்த மதத்தை மட்டுமே அம்பேத்கர் ஏற்றுக்கொள்வார்.

(தொடரும்)

தமிழில்: பூ கொ சரவணன்

அம்பேத்கர் – கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 3


பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியாவின் முதன்மையான அரசியல் அறிவியல் அறிஞர்களில் ஒருவர். ப்ரின்ஸ்டனில் முனைவர் பட்டம் பெற்ற அவர் ஹார்வர்ட், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது Centre For Policy Research மையத்தின் தலைவராக உள்ளார். ஆழமான பார்வைகளுக்கும், கூர்மையான கருத்துக்களுக்கும் பெயர் பெற்ற அவரின் ‘Ambedkar-Slayer of All Gods’ கட்டுரையின் 3)வது பகுதி இது:

18056994_1476284712402600_519730714716659236_n.jpg
அம்பேத்கர் நமக்கு இன்னமும் ஆழமான சங்கடத்தைத் தந்துகொண்டிருக்கிறார். அதற்கான காரணம் தற்காலத்தில் இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்ன் மையமாகத் திகழும் அம்பேத்கரின் சில கருத்துக்கள் ஆகும். ஒன்று இந்து சமூகம் என்பதன் கட்டமைப்பின் மையமாக வன்முறையே உள்ளது என்பது ஆகும். வன்முறை என்பது வழக்கத்துக்கு மாறாக நிகழ்கிற ஒன்றல்ல. இந்து சமூகத்தின் மேற்புறத்தில் மிதக்கும் குப்பைக் கூளமல்ல வன்முறை. அந்தக் குப்பையைச் சுத்தப்படுத்தினால் இந்து சமூகத்தின் தெளிவான, சுத்தமான நீர்நிலை தென்படும் என்பது புரட்டு. வன்முறையே இந்து சமூகத்தின் அடையாளம், அதன் இயங்குசக்தி. அம்பேத்கரை பொறுத்தவரை நீதியை அடைய இந்து மதத்தின் மீது கிட்டத்தட்ட ஒரு போரை அறிவிப்பதே வழி என்று அவர் கருதியதைப் பூசிமெழுக முடியாது. காந்திக்கு எழுதிய பதிலில் அம்பேத்கர் இப்படி எழுதினார்: ‘ நான் மகாத்மாவிடம் உறுதியாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்துக்கள், இந்து மதம் மீது நான் அருவருப்பு, அவமதிப்பு மிகுந்த உணர்வுகளை வெளிப்படுத்துவது அவர்களின் தோல்வியால் மட்டும் அல்ல. இந்துக்கள், இந்து மதம் மீது நான் அருவருப்புக் கொள்ளக் காரணம் அவர்கள் தவறான லட்சியங்களைக் கொண்டவர்களாக, மோசமான சமூக வாழ்வை மேற்கொள்வதாக உளமார உணர்ந்துகொண்டேன். இந்து மதம், இந்துக்களுடனான எனது பிரச்சினை என்பதுஅவர்களின் சமூக நடத்தையில் உள்ள குறைபாடுகள் பற்றியதல்ல. அது மேலும் அடிப்படையானது. அது இந்துக்கள், இந்து மதத்தின் ஆதர்சங்களைப் பற்றியது.’

இப்படிப்பட்ட திட்டவட்டமான அறிவிப்பு அம்பேத்கரைத் தற்காலப் போராட்டங்கள் பலவற்றுக்கும் மிகவும் மையமாக ஆக்குகிறது. நீதியை வென்று எடுப்பதற்கான இயக்கம் என்பது ஒரு பாரம்பரியத்தைச் சீர்திருத்துவதும் அதன் ஆதர்சங்களுக்கு நேர்மையாக அதனை நடந்துகொள்ள வைப்பதும் அல்ல. நீதியை அடைவதற்கு ஒரு பாரம்பரியத்தை ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்க வேண்டியிருக்கிறது. இந்திய கல்விக்கூடங்களில் ஒரு புதிய தலித் விழிப்புணர்வு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இது சமகால இந்தியாவின் மிகப்பெரிய கலாச்சாரப் பிளவாக இருக்கப் போகிறது என்று கருதுகிறேன். அம்பேத்கர்-பெரியார் செயல்பாட்டாளர்களுக்கும்,ABVP -க்கும் இடையே உருவாகியிருக்கும் மோதலானது அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் பிரச்சினையின் சிறு அறிகுறி மட்டுமே. அடையாள அரசியல் சார்ந்து ஏன் கல்விக்கூடங்களில் மாணவர் அரசியல் தீவிரமடைகிறது என்பதை இந்தப் பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டும். அம்பேத்கர் தன்னுடைய விமர்சனத்தில் தாக்க முனைந்தது உலகத்திலேயே மிகவும் ஆச்சரியப்படுத்துவதும், சிறைப்படுத்துவதுமான தத்துவ அமைப்பான பிராமணியமே ஆகும். பிராமணியம் அல்லாத இந்து கருத்தியல் முறைகளையும் அது பெரும் தீமையாய்ப் பற்றிக்கொண்டதால் பிராமணியத்தை அக்குவேறு ஆணிவேராகக் கழற்றி எறியாமல் நீதி என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இந்து மதம் இருக்கிறது.

main-qimg-377022f438193bb396dabe5a16298cee-c.jpg

அம்பேத்கரின் பெரும்பாலான படைப்புகளை மீண்டும் வாசிக்கையில் மிக முக்கியமான தேடல் ஒன்று புலப்படுகிறது: அது சாதி என்கிற கொடூரமான ஒடுக்குமுறை அமைப்பை எது உற்பத்தி செய்தது என்பதைப் புரிந்து கொள்ளும் ஓயாத முயற்சி. அம்பேத்கரின் பெரும்பாலான ஆய்வுக்கட்டுரைகள் அவற்றின் சமூகவியல் ஆழம், வரலாற்று கூர்மையால் அசரடிக்கின்றன. ஆரியர் படையெடுப்பால் அடிமைப்படுத்துதல் ஏற்பட்டது எனும் கோட்பாட்டை அவர் நிராகரித்தார். சாதி அமைப்பு குறித்து இனத்தை அடிப்படையாகக் கொண்டு தரப்பட்ட எல்லா வகையான விளக்கங்களையும் அவர் நிராகரித்தார். சாதி என்பது தொழில்கள் சார்ந்து எழுந்தது என்பது போன்ற விளக்கங்களை அவர் கடுமையாகச் சாடினார். சாதி என்பது தொழில்கள் அடிப்படையிலான அமைப்புமுறை அல்ல, அது தொழிலாளர்களை அடுக்குமுறையில் வைத்து அடிமைப்படுத்தும் முறையாக இயங்கியது என்பதே இந்தக் கடுமைக்குக் காரணம். அம்பேத்கர் எனும் வரலாற்றாளர், இந்தியவியல் அறிஞரின் பலங்களுக்குள் போவது இந்தக் கட்டுரையின் இலக்கு அல்ல. அர்விந்த் ஷர்மாவின் ‘BR Ambedkar, on the Aryan invasion and the Emergence of the Caste System in India’ எனும் கட்டுரையின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

அம்பேத்கரின் ஆய்வுகளின் மூலம் இரு முக்கியமான கூறுகள் தெரிய வருகிறது. சாதி அமைப்பின் வினோதமான தன்மையைப் பொருளியல், தொழில்முறை சார்ந்த விளக்கங்களால் விளக்க முடியாது. சாதியமைப்பின் அடிப்படை பிராமணர்களால் அதிகாரத்தின் செயல்பாடாகத் திணிக்கப்பட்ட கொடூரமான தொடர் பிரதிநிதித்துவப்படுத்தல்களால் ஆனது. தீண்டப்படாத மக்களின் முன்னேற்றத்துக்கான வழிகளான அதிகாரம், பொருளாதார வளம், கல்வி ஆகிய மூன்றும் அவர்களுக்கு மறுக்கப்பட்டதன் மூலம் சாதியமைப்பு தொடர்ந்து உயிர்த்திருக்கிறது. சாதி அடுக்குமுறையில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் தனக்குக் கீழுள்ள இன்னொரு பிரிவினரை ஒடுக்குவதன் மூலம் இன்பம் காணும் கொடூரமான அமைப்பு முறையாக அது திகழ்கிறது. சாதியமைப்பு நிரந்தரமான பாகுபாட்டில் களிப்புக் கொள்கிறது. இதனால் தான் பிராமணியம் மீதான அறச்சீற்றம் அம்பேத்கரிடமிருந்து வெளிப்படுகிறது. எந்த வகையிலும் பிராமணியம் உருவாக்கிய அடுக்குமுறைக்கு நியாயம் கற்பிக்க முடியாது. அதிகாரத்தைத் தெளிவாக, எளிமையாகத் திணிக்கும் முறை அது. இந்த அதிகாரம் ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது, இந்த ஒட்டுமொத்த கருத்தாக்கத்தை அடித்து நொறுக்கினால் மட்டுமே விடுதலை சாத்தியம்.

இதை நேருக்கு நேராக எதிர்கொள்வது இங்கே நிகழ்வதில்லை. இந்து மதத்தின் சாதி சார்ந்த எல்லா உரையாடல்களிலும் ஒரு வகையான மன்னிப்பு கோரும் தொனியோடு, ‘சாதி ஒரு காலத்தில் தொழில் சார்ந்து இருந்தது’ என்பார்கள். சாதி என்னவோ நியாயமான லட்சியத்தைக் கொண்டிருந்ததைப் போல, ‘சாதியின் இலட்சியங்களோடு அதன் சமூக யதார்த்தம் ஒத்துப்போகவில்லை’ என்று சப்பைக்கட்டு காட்டுவார்கள். சாதி என்பது நியாயப்படுத்த கூடிய கருத்தாக்கம் என்கிற ரீதியில் அவர்களின் உரையாடல் அமையும்.சாதி அமைப்பின் அருவருப்பு ஊட்டுகிற செயல்பாட்டை, ‘சாதி அமைப்பில் பொதுவாக நெகிழ்வுத்தன்மையும், இயக்கமும் இருந்தது’ என்று சொல்லி சீர்கட்ட முயல்வார்கள். ‘சாதி பண்புகளின் அடிப்படையிலானது, பிறப்பின் அடிப்படையிலானது இல்லை.’என்பர். இறுதியாக, சாதியை ஓரளவுக்கு நியாயப்படுத்துவது கூட மிக மோசமான ஒரு சமூக அமைப்பின் கொடூரத்தை உணரவிடாமல் தடுக்க முயலும் கபடநாடகமே ஆகும்.

இன்னமும் மோசமாகச் சாதியமைப்பை நியாயப்படுத்துபவர்கள் இந்து மதம் சமத்துவத்தை உறுதி செய்கிறது என்பர். மெய்யியல் கருத்தாக்கமான இந்தச் சமத்துவம் எப்பொழுதும் தன்னை ஒடுக்குமுறை நிறைந்த சமூக அமைப்போடு சாமர்த்தியமாக இணைத்துக் கொள்ளும். அம்பேத்கரை பொறுத்தவரை வர்ணாசிரமத்துக்கான அடிப்படையை வழங்கும் புருஷ சுக்தா பிற்காலத்தில் வேதத்தில் சேர்க்கப்பட்டது. எனினும், இப்படிப்பட்ட மெய்யியல் பகுப்புகளில் சமூகப் படிநிலை பின்னிப்பிணைந்தே இருக்கும். எவ்வளவு தான் வேதங்கள், கீதை முதலியவற்றை உருவகக் கதைகளாக மாற்றிப் பேசினாலும், இவை சமூகத்தின் சாதி அடுக்குக்குச் சேவகம் செய்வதையே பண்பாகக் கொண்டிருந்தன. இவை இரண்டையும் பிரித்துப் பார்க்க முயல்வது தவறான நம்பிக்கையின் அடிப்படையிலானது. இந்து மதத்துடன் அம்பேத்கர் மேற்கொண்ட உரையாடல் ஒரு சமூக அமைப்பு குறித்த விமர்சனம் மட்டுமல்ல, சாதி அமைப்பு எந்த அறிவுத்தளத்தின் மீது எழுப்பப்பட்டு உள்ளதோ அதை முழுவதும் நிர்மூலமாக்க முயலும் விமர்சனம் ஆகும்.

A42-14238.jpg
இந்தியாவின் ஞான மரபின் இருப்புக்கான பேராபத்து மேற்கின் அங்கீகார மறுப்பில் இல்லை. அதற்கு மாறாகச் சமூகத்தில் நிலவும் பாகுபாடு சார்ந்த கொந்தளிப்புகளில் உள்ளது. ஒரு ஞான மரபின் மையம் அடக்குமுறை, அடுக்குநிலை, பிளவுபட்ட சமூக அமைப்பால் கட்டமைக்கப்பட்டு இருக்கும் பொழுது எந்த முகத்தோடு, எந்த நன்னம்பிக்கையோடு அதனை நியாயப்படுத்துவீர்கள்? ஒரு மரபின் அறிவார்ந்த புரட்சிக்கருத்துக்கள் கூட இறுதியில் பழமைவாதத்தையே வெவ்வேறு வடிவங்களில் காக்கும் பொழுது அதை எப்படி ஒருவர் புரிந்து கொள்வது?

ஆன்மீகத்துக்கும், சமூகத்துக்கு இடையே உள்ள உறவு சார்ந்த அறிவுப்பூர்வமான விவாதத்தைச் செய்ய இது இடமில்லை. சமூகத்தை ஒட்டி மட்டும் தத்துவத்தைக் காணும் அம்பேத்கரின் வாசிப்பை நிச்சயம் விமர்சிக்கலாம். பண்டைய ஞானக் கட்டமைப்பின் அதிகாரம், அடுக்குமுறை ஆகியவை குறித்து யாரேனும் வெளிச்சத்தைப் பாய்ச்சினால் அவரைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது பொதுப்போக்கு. இதில் இருந்தே எவ்வளவு உணர்ச்சிவயப்படுபவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். சமீபத்தில் இந்துத்வா இந்தியவியல் அறிஞர் ஷெல்டன் பொல்லாக்கை கடுமையாகச் சாடியது. அதற்குக் காரணம் அவர் மேற்கை சேர்ந்தவர் என்பதல்ல. ஷெல்டன் பொல்லாக் பண்டைய மரபுக்கும் , அதிகாரத்தின் அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பை அவர் இணைத்து வாசிக்கிறார் என்பதில் இருந்தே இந்தக் கடுமையான என்பதில் இருந்தே எழுந்தது. அதிகாரத்தை மரபைத் தீர்மானிக்கும் அளவுகோலாக மாற்றியது அம்பேத்கரின் மகத்தான சாதனை. அம்பேத்கர் எங்களுக்கு உரியவர் என்கிற போட்டியானது இந்து மதத்தை அவர் ஆட்படுத்திய அதிகாரத்தின் அறக் களங்கத்தில் இருந்து காப்பாற்றும் ஒரு முயற்சியே ஆகும். இந்த வகையில், இந்திய பண்பாட்டின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் அம்பேத்கரின் விமர்சனமே மிகப் புரட்சிகரமானது.

அம்பேத்கர் நம்மை மேலும் மேலும் அதிர்ச்சியடைக்க வைக்கும் வகையில் இந்து அடையாளத்தின் அற, உளவியல் கூறுகளைத் தன்னுடைய விமர்சனங்களால் தோண்டி எடுக்கிறார். இந்து அடையாளத்தைக் கட்டமைப்பதில் பங்கு வகிக்கும் பல்வேறு அடுக்கு வன்முறை, எதிர்ப்பு ஆகியவற்றைத் தோலுரித்துக் காட்டுகிறார். அவரே சாதி அமைப்போடு தொடர்புடைய பாலின வன்முறை, மதவாதம் ஆகியவற்றைக் கேள்வி கேட்ட முதன்மையான சிந்தனையாளர். அவரின் ஆரம்பக் காலக் கட்டுரைகளில் அக மண முறையானது சாதியமைப்புக்கு மையம் மட்டுமல்ல. அதுவே பெண்களை, கைம்பெண்களை, மணமாகாத பெண் குழந்தைகளைக் கட்டுப்படுத்தி அதன்மூலம் சாதி அடையாளத்தைக் காக்க முயல்கிறது என அம்பேத்கர் வெளிப்படுத்தினார். அவர் எழுதுவதைப் போல, சாதியின் பிரச்சனை, ‘கூடுதலான ஆண்கள் கூட்டல் கூடுதலான பெண்கள்’ ஆகும். இந்த வகையில் பெண்களைக் கட்டுப்படுத்துவது சாதியின் மையமானது. அவரின் கருணையற்ற வாள் வீச்சாக மதவாதம் என்பது இந்து அடையாளத்தை உருவாக்குவதற்கான ஒரு வழிமுறையாகும் என்கிற வாதம் அமைந்தது. அவர் அதிர்ச்சி தரும் ஒரு உண்மையைப் புலப்படுத்துகிறார். ஒரு சாதியினர் மற்றொரு சாதியினரோடு இணைத்துத் தன்னை உணர்வதில்லை. ஒரு இந்து-முஸ்லீம் கலவரம் வரும் பொழுது தான் அவர்கள் ஒன்றாக உணர்கிறார்கள். தங்களுடைய உள்ளார்ந்த பாகுபாட்டைத் தாண்டி தங்களுடைய அடையாளத்தை நிலைப்படுத்த இந்துக்களுக்கு ஒரு எதிரி தேவைப்படுகிறார்.

இந்திய மரபின் மையமாக அகிம்சையை நிறுத்துவது நம்முடைய வன்முறையற்ற வரலாற்றின் விவரிப்பு அல்ல. அதற்கு மாறாக, வன்முறையே வரலாற்றின் மையமாக இருந்துள்ளது என்பதற்கான சாட்சி அது. சமூகவியல் அறிஞர் ஆர்லாண்டோ பாட்டர்சன் பண்டைய கிரேக்கத்தில் விடுதலை சார்ந்த முறையான உரையாடல் ஏற்படக் காரணம் என்று அந்தச் சமூகம் அடிமைமுறையால் கட்டமைக்கப்பட்டு இருந்ததைக் காரணம் காட்டுகிறார். விடுதலை போற்றப்பட்டதன் காரணம் சமூகத்தில் நிலவிய அடிமைத்தனத்தை மறுதலிக்கும் முயற்சியே ஆகும். சமூகத்தில் வன்முறை உள்ளார்ந்து நிறைந்திருந்ததன் அடையாளமே அகிம்சை சார்ந்த உரையாடல் காட்டுகிறது. பிராமணியம் புத்த மதத்தின் வன்முறை சார்ந்த விமர்சனத்தை உள்வாங்கியது என்றாலும் அதற்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டது. அம்பேத்கர் தீண்டாமையை மாட்டுக்கறியோடு தொடர்பு படுத்தினார். ஆதிக்க ஜாதியினர் தீண்டப்படாதோரிடம் வெளிப்படுத்தும் வினோதமான அருவருப்பை அவர்கள் மாட்டு இறைச்சி உண்பதன் மூலமே விளக்க முடியும். தீண்டப்படாதோர் மீது அவர்களுக்கு இருந்த ஆழ்ந்த வெறுப்பை விளக்க அம்பேத்கர் முயன்றார். அது வெறுமனே சமத்துவமின்மை, அடக்குமுறையோடு உள்ள உறவு அல்ல. அது தூய்மைவாதத்தைக் கைப்பற்றும் பணிக்கு உதவியது. இந்த வரலாறு தெரியாதவர்கள் தான் கல்விக்கூடங்களில் மாட்டு இறைச்சி சார்ந்து நிகழும் போராட்டங்களைப் புரிந்து கொள்ளத் தவறுவர்.

p19.gif

சுருக்கமாக, அம்பேத்கரின் செயல்பாடு எந்த ஒரு பண்பாட்டையும் பெரிய அளவில், மிகவும் தீரத்தோடு அறிவார்ந்த முறையில் தோலுரித்த முன்மாதிரி இல்லாத செயல்பாடு ஆகும். விழுமியங்களை மறுவாசிப்புச் செய்து அவற்றின் உண்மையான நோக்கங்களை அவர் புலப்படுத்தினார். அறம் என்றதற்குப் பின்னிருந்த அடக்குமுறைகளை அவர் கண்டெடுத்தார். அகிம்சையைக் கொண்டாடியதற்குப் பின்னால் பெரும் இம்சை இருந்ததாக அவர் சொன்னார். சடங்குகளுக்குப் பின்னால் பல்வேறு தடைகள் அடங்கியிருந்தன. அவற்றின் மூலம் யாரும் அதுவரை கண்டிராத மனித ஆளுமையின் மீதான மிக மோசமான சிதைப்பு மேற்கொள்ளப்பட்டது. பிரபஞ்ச அமைப்பு என்பது ஒன்று போன்ற நீண்ட பிரசாங்கங்களுக்குப் பின்னால் சமூகத்தின் ஆழமான பாகுபாடுகள் இருந்தன. பசுவின் மீது இருக்கும் அக்கறைக்குப் பின்னால் மாட்டு இறைச்சி உண்பவர்கள் மீதான ஆழமான வெறுப்பு ஒளிந்திருக்கிறது. பசுவிடம் காட்டப்படும் மிக மென்மையான போக்கு என்பது மற்றவர்களின் மீதான சித்திரவதையின் சுத்திகரிக்கப்பட்ட வடிவமே ஆகும். மனித உயிர்கள் பற்றி இரக்கமற்றவர்களாகப் பசுப் பாதுக்காப்பாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று எப்பொழுதேனும் ஆச்சரியப்பட்டிருப்பீர்கள் என்றால் அம்பேத்கரை வாசியுங்கள். அவரின் விமர்சனம் உங்களைக் கொட்டும். நம்முடைய கொள்கையில் இருந்து திசைமாறிவிட்டோம் என்று அவர் வாதிடவில்லை. இந்தக் கொள்கைகளுக்குப் பின்னால் வன்முறையும், சித்திரவதை செய்யும் பண்பும் நிறைந்து இருப்பதாக அதிரவைக்கிறார். இந்தியாவில் பிராமணியத்தின் ஆதிக்கத்தால் வால்டேர் போன்ற ஒரு சுதந்திரமான சிந்தனையாளரும் எழவில்லை என்று அவர் சாடினார். இருக்கிற சமூக அமைப்புக்குள் வேலை பார்க்கும் அரைகுறை சீர்திருத்தவாதிகளே நமக்கு வாய்த்தனர். யாருமே சாதியமைப்பின் அடிப்படையையே தீரத்தோடு கேள்விக்கு ஆட்படுத்தவில்லை.

அம்பேத்கரை தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக்கொள்வது அவரின் விமர்சனத்தைத் தீவிரமாகக் கவனத்தில் கொள்வதாகும். அம்பேத்கரை நோக்கிய எதிர்வினைகள் எதிர்ப்பாக இருந்தன: அரசமைப்பு சட்ட வரைவில் அவரை இணைத்துக்கொண்டதை தவிர்த்து அவரைத் திட்டமிட்டு ஓரம்கட்டவே முயன்றார்கள். அதற்கு அடுத்தக் கட்டம் தற்காப்புத் தொனியில் பேசுவது. நாம் தலித் உடல்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை எவ்வளவு கீழ்மையாக வேண்டுமானாலும் நடந்து கொண்டு மறுதலிப்போம். அவர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை மறுப்போம். தற்காப்பு அரசியல் இனிமேலும் ஈடுபடுவது இல்லை என்கிற பொழுது அவரைக் கையகப்படுத்த முயல்வது. இந்து மதம் பற்றிய அவருடைய விமர்சனங்களை உள்வாங்கிக் கொண்டே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அம்பேத்கரின் பெயரை உச்சரிக்கிறார்கள் என்பதைக் கற்பனைக்குக் கூட நம்பும்படியாக இல்லை. அவரின் இந்து மதத்தின் புதிர்கள் நூல் தடை செய்யப்பட்டது. நம் அனைவர்க்கும் அம்பேத்கர் உரியவர் என்று நாடகம் நிகழ்த்துவதன் மூலம் நம்மைப்பற்றி அம்பேத்கர் சொல்லும் கடுமையான உண்மைகளை வசப்படுத்தவோ, மூடி மறைக்கவோ முயல்கிறோம். இந்து மதத்தை ஆதரிப்பவர்கள் அம்பேத்கரின் விமர்சனங்களில் உள்ள உண்மையை ஒப்புக்கொண்டு விடலாம். அது உண்மையில் நன்னம்பிக்கை அடிப்படையிலான செயலாக இருக்கும். தேசிய இயக்கம் தான் மரபை வெறுக்காமல் மரபைக் கடக்க முயன்ற போராட்டங்கள் மிகுந்த அறிவார்ந்த கடைசிச் செயல்திட்டமாகும். மரபை சீர்திருத்தி அதைப் பாதுகாக்க முடியும் என்று எண்ணினார்கள். அம்பேத்கர் இந்தச் செயல்திட்டத்திற்குள் வலிமைமிகுந்த தாக்குதலை மேற்கொண்டார்: ‘மதத்தை ஒழிப்பது அடிமை முறையை ஒழிப்பதற்கு அவசியமாகும்.மதத்தை மரபைப் பாதுகாப்பதன் மூலம் சீர்திருத்த முயலாதீர்கள்; அதனை அழிப்பதன் மூலம் விடுதலையைப் பெறலாம்.

(தொடரும்)