அம்பேத்கர் – கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 1


 

பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியாவின் முதன்மையான அரசியல் அறிவியல் அறிஞர்களில் ஒருவர். ப்ரின்ஸ்டனில் முனைவர் பட்டம் பெற்ற அவர் ஹார்வர்ட், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது Centre For Policy Research மையத்தின் தலைவராக உள்ளார். ஆழமான பார்வைகளுக்கும், கூர்மையான கருத்துக்களுக்கும் பெயர் பெற்ற அவரின் ‘Ambedkar-Slayer of All Gods’ கட்டுரை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது:

#அம்பேத்கர் அதிகாரம்-ஜனநாயகம், பொருளாதார வளம்-வன்முறை, இந்து மதம்-பாரம்பரியம், தேசியம்-நீதி, எல்லாவற்றுக்கும் மேலாக மெய்யியல் என்கிற பெயரில் நிகழ்த்தப்படும் நேர்மையற்ற, அபத்தமான சொற்பொழிவுகள் ஆகியவை குறித்த நம்முடைய பிரமைகளைக் கடுமையாகக் கேள்விக்கு உட்படுத்துகிறார். அம்பேத்கர் நம்மை நாமே பார்த்துக்கொள்ள அஞ்சுகிற கண்ணாடியாகச் சுட்டெரிக்கிறார். அவரின் இருப்பு நம்முடைய மோசமான மனசாட்சி, இறைநம்பிக்கை குறித்த உறுத்தலை தந்துகொண்டே இருக்கிறது.#

தலைவர்களின் பிறந்தநாள்கள், வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூறும் நாட்கள் போன்றவை அப்போதைய நிலைமையை உணர்ந்து கொள்ளவும், வெற்றி, தோல்விகளைச் சீர்தூக்கிப் பார்க்கவும் வாய்க்கும் தருணங்களாகவே பெரும்பாலும் திகழ்கின்றன. இப்படிப்பட்ட அளவுகோல்கள், வெற்றி-தோல்விகளுக்குள் அண்ணல் அம்பேத்கரை அடக்க முயல்வது முந்திரிக்கொட்டைத்தனமானதும், முட்டாள்தனமானதும் ஆகும். மகத்தான தலைவர்கள் பலரைப் பொறுத்தவரை, ஒரு பண்பாட்டின் தர அளவுகோல்கள் லட்சியங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப அவர்கள் எந்த அளவுக்கு வாழ்ந்தார்கள் என்றே நாம் அவர்களைச் சீர்தூக்கிப் பார்க்கிறோம். அண்ணல் அம்பேத்கரைப் பொறுத்தவரை இது தலைகீழான ஒன்று. ஒட்டுமொத்த பண்பாடே தன்னை மதிப்பிட்டுப்பார்த்துக்கொள்ள வேண்டிய அளவுகோல் அவரே. நம்முடைய ஆதர்சங்களால் அவரை எடை போட முடியாது. அம்பேத்கர் எனும் ஆளுமையின் ஆதர்சங்களால் தான் நம்மை நாமே மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும். அம்பேத்கருடன் உறவாடுவதென்பது அவரை மதிப்பிடுவதென்பதல்ல, நம்மை மதிப்பிட்டுக்கொள்வதும், நாம் ஏன் இன்னமும் அவரின் நீதிக்கான அறைகூவலை, பகுத்தறிவுக்கான வாதத்தை, அமைப்புகள் குறித்த ஆழமான கற்பனைகளைப் பற்றிக்கொள்ளவும், முகத்துக்கு நேராக எதிர்கொள்ளவும் மறுக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதும் ஆகும்.? அம்பேத்கர், நம்மை நாமே பார்த்துக்கொள்ள அஞ்சுகிற கண்ணாடி. அவரின் இருப்பு நம்முடைய மோசமான மனசாட்சியையும்,மோசமான நம்பிக்கைகளையும் பற்றி நமக்குத் தொடர்ந்து நினைவுறுத்துகிறது.

அம்பேத்கர் குறித்து எழுதுவது மிகவும் கடினம்; இதற்குப் பல காரணங்கள் உண்டு. அறிவுத்துறையைச் சேர்ந்தவர்கள் அம்பேத்கர் குறித்துப் போதுமான அளவில் பங்களிப்பு செய்யவில்லை என்பது வருத்தம் தரும் உண்மையாகும். தன்னைக் குறித்த ஒரு நல்ல வாழ்க்கை வரலாறுக்காக அம்பேத்கர் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார். மராத்தி மொழியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சில முயற்சிகளைத் தவிர்த்து செறிந்த விளக்கங்கள் கொண்ட, அதிகாரப்பூர்வ அம்பேத்கர் படைப்புகள் இன்னமும் கனவாகவே உள்ளது. அவருடைய கடிதங்கள் இங்கும் அங்குமாகச் சிதறியும் தேடிக் கண்டுபிடிப்பதற்கு வெவ்வேறு அளவில் சிரமம் கொண்டதாக இருப்பதோடு, வெவ்வேறு வகையான அமைப்பு ரீதியான உரிமைப்போர்களில் சிக்கிக்கொண்டிருக்கின்றன.. அவருடைய 125-வது பிறந்தநாளுக்குச் செய்யப்படும் மிக மிக அவசியமாக மேற்கொள்ள வேண்டிய ஒரு பணி உண்டென்றால், அது அவரின் படைப்புகள், கட்டுரைகள், கடிதங்கள் ஆகிய அனைத்தையும் முழுமையாக, கச்சிதமாகத் தொகுப்பதே ஆகும். அவருடைய எல்லாப் படைப்புகளிலும் நீங்கள் மூழ்கி முத்தெடுத்தாலும் காந்தி, நேருவை நெருக்கமாக உணர்வதைப் போல அம்பேத்கர் என்கிற ஆளுமையை நீங்கள் கண்டுணர முடியாது. அறிவுத்துறை சார்ந்த ஆய்வுகள், அதிகாரபீடங்கள், பலத்த சமூக ஆதரவு, சமகால நினைவலைகள் காந்தி, நேரு குறித்த அறிவுத்துறை ரீதியான கட்டமைப்பை உறுதிசெய்வதற்கு வழிகோலின. அந்த அளவுக்குக் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் அண்ணல் அம்பேத்கர் அலட்சியத் திரை தாண்டி பிரகாசிக்க வேண்டியவராக இருக்கிறார்.

Dr.babasaheb-ambedkar.jpg
அம்பேத்கரை ஓரங்கட்டப் பார்க்கும் எந்த முயற்சியும் சுடர்விட்டு எரியும் அவரின் அரசியல், அற ஆற்றலை அணைத்து விட முடியாது. அவர் காலத்தின் தலைவர்களில் அவர் மட்டுமே இன்று பல கோடி மக்களிடையே மதரீதியிலான முக்கியத்துவத்தைவிட மேலான முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறார். தலித் காலனிகளின் வழிப்பாதைகளில் அவர் கடவுளாக்கப்பட்டு, சிலைவைக்கப்பட்டு நினைவுகூரப்படுகிறார். சாதாரண அரசியல் தலைவர்களை மக்கள் கொண்டாடுவதோடு அதனை ஒப்பிட முடியாது. அவரைப் பற்றிய நினைவுகூரல் கடந்த காலங்களின் மதப் புரட்சிகளை ஒத்திருக்கிறது. ‘ஜெய் ஸ்ரீராம்’ என்பதைவிட அதிக வல்லமை கொண்ட சக்தியாக ‘ஜெய் பீம்’ எனும் தலித் இயக்க வழிபாட்டுத் தன்மைகொண்ட ‘அம்பேத்கர் வணக்க முழக்கம்’ திகழ்கிறது. அம்பேத்கர் இனி வெறும் தலைவர் இல்லை. அவர் தீர்க்கதரிசி, மீட்பர்.

தீர்க்கதரிசிகள் குறித்து எழுதுவது மிகவும் கடினம். அதற்கு ஒன்றுக்கொன்று நேரெதிரான இரு முரண்பாடான காரணங்கள் உண்டு. அம்பேத்கர் கண்மூடித்தனமான வழிபாடு, துதிபாடல் ஆகியவற்றைக் குறித்து எச்சரித்தார். அதைக் கருத்தில் கொண்டால் அவரை ஆதர்சமாகக் கொண்ட மக்களோடு விவாதத்தில் ஈடுபடவே முடியாது.. அவர்களைப் பொறுத்தவரை அம்பேத்கர், கருத்தாடல் நிகழ்த்துவதற்கானவர் என்பதைவிட ஒரு பீடமாகக் கருதப்படுபவர். அம்பேத்கர் குறித்து எழுதுபவர்களை ஒரு சந்தேகக் கண்ணோடு காண்பது நிகழ்கிறது. தலித் அல்லாதோர் அவரைப் பற்றித் தாங்கள் ஏன் எழுத வேண்டும் என்கிற மனதளவிலான விலக்கலை மேற்கொண்டிருக்கிறார்கள். பல்லாண்டுகளாக நமக்கு அசௌகரியமான உணர்வைக் கொடுத்துக்கொண்டிருந்த ஆளுமையாகத் திகழும் அவரைக் கண்டுகொள்ளாமல் தவிர்த்தோம். ஒரு பெருந்தலைவரை ஓரங்கட்ட சமூகம் முயன்றாலும், அவர் அதைத் தாண்டி வெல்லும் அவரது பரிவாரத்தில் இணைந்துகொள்ள முயல்கிறது.

அம்பேத்கரை பயன்படுத்திக் கொள்வது கொள்ளும் முயற்சிகள் அவரை வசப்படுத்தி, கட்டுப்படுத்தும் முயற்சி என்றும் ஐயத்தோடு நோக்கப்படுகிறது. அம்பேத்கரைக் கடவுள் போல ஆக்குவது அவரின் புரட்சிகரமான கருத்துக்களை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பதற்கான எளிமையான, செய்கையே. அம்பேத்கரை பாஜக அபகரித்துக்கொள்வதற்கான முயற்சிகளில் இது வெளிப்படையாகத் தெரிகிறது. காங்கிரஸ் அவரை ஓரங்கட்டியதும், பாஜக அவரை அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வது நமக்குப் பலவற்றைச் சொல்லாமல் சொல்கின்றன. குறைந்தபட்சம் இப்பொழுதாவது அவர் குறித்து அதிகம் பேசுகிறார்கள். இப்படிப்பட்ட பெயரளவிலான போற்றுதல்கள் அவை பெரிதளவில் பயன் தராது என்பதை உணர்த்துவதோடு நின்றுவிடவில்லை. அம்பேத்கர் முன் நாம் தலைகுனிந்து வணங்கி நிற்பதன் மூலம் அவர் நம்முடைய ஆன்மாவைக் குத்திக் கிழிப்பதில் இலிருந்து தப்பிக்க எண்ணுகிறோம்.

dr-b-r-ambedkar-1_1.jpg
பிரதமர் நரேந்திர மோடி அண்ணல் அம்பேத்கர் நினைவகத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் அம்பேத்கரை தலித்துகளின் தலைவர் என்பதைத் தாண்டிக் காண வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இது உண்மை என்பதில் ஐயமில்லை.நீதி, ஜனநாயகம் குறித்துக் கவலை கொள்ளும் யாரும் அம்பேத்கரின் அறிவாற்றலால் நிச்சயம் பயன்பெறுவார்கள். அதே சமயம் அம்பேத்கர் வெறும் தலித் தலைவர் அல்ல என்பது வெற்று முழக்கமாக இருக்கக் கூடாது. அம்பேத்கர் ஏன் நம் எல்லாருக்குமான தலைவர் என்கிற ஆழமான கேள்வியை எழுப்பிக்கொள்ளும் திறப்பாக இந்த முழக்கம் அமையவேண்டும். அம்பேத்கர் பல்வேறு உலகளாவிய பொதுஉண்மைகளைப் பேசினார். தன்னை யாரேனும் உரிமை கொண்டாட வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். என்றைக்குத் தலித் விடுதலையைச் சாதிக்கிறோமோ அன்றே அம்பேத்கரை உரிமை கொண்டாடுவதற்கு நாம் தகுதியானவர்களாக ஆவோம் அம்பேத்கர் தலித்துகளுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் தலைவர் என்கிறோம் என்றால் அவரின் அறைகூவல்களுக்கு நேர்மையானவர்களாக, அவர் வைத்திருக்கக் கூடிய தேர்வுகளைத் திடமாக எதிர்கொள்பவர்களாக இருக்க வேண்டும்.

அம்பேத்கரை தலித் தலைவர் என்கிற முகம் மட்டுமே கொண்டவரில்லை என்பதன் மூலம் அவரின் புரட்சிக்குரலை மழுங்கடிப்பது சத்தமில்லாமல் சாதிக்கப்படுகிறது எனத் தலித்துகள் அஞ்சுவது பல சமயங்களில் நியாயமாகவே உள்ளது. அநீதிக்கு எதிராக அண்ணல் அம்பேத்கர் காட்டும் குத்திக் கிழிக்கும், தயவு தாட்சண்யமற்ற கோபத்தை மழுங்கடிப்பதன் மூலம் அம்பேத்கரோடு இணக்கமாகத் தலித் அல்லாதோர் உணர்கிறார்கள். அவரின் ஆங்கில எழுத்துக்களை விட மராத்தி மொழியில் இந்தக் கோபம் கூடுதலாகக் கொப்பளிக்கிறது. அவர் வாழ்நாள் முழுக்க அநீதியை அம்பலப்படுத்துவதை அயராமல் செய்தார். ஒரு செயல்நோக்கமோ, தேசமோ, அதிகாரமோ, கலாச்சாரமோ, செல்வமோ அநீதியைச் சற்று மூடி மறைக்க முயன்றாலும் அவற்றை ஏற்றுக்கொண்டு, அவற்றுக்கு அர்ப்பணிப்போடு இருக்க முடியவே முடியாது என்பதில் அம்பேத்கர் தெளிவாக இருந்தார். அருண் ஷோரி முதலிய விமர்சகர்கள் அம்பேத்கர் தேசியவாதி இல்லை என்கிறார்கள். ‘நீதியின் அடித்தளத்தின் மீது எழுப்பப்படாத ஒரு தேசம் தேசமே அல்ல’ என்றதில் அம்பேத்கரின் ஆளுமை பிரமிக்க வைக்கிறது. அவர், கிட்டத்தட்ட எல்லாச் சித்தாந்தங்களும் தலித்துகள் ஒடுக்கப்படுவதை மூடி மறைக்கும் சூழ்ச்சிகளாக நிகழ்ந்ததைக் கண்டு கொதித்தார். சித்தாந்தங்களின் நுண்மையான விவாதங்கள் எனும் பனிமூட்டத்தில், தலித் அடக்குமுறை எனும் உள்ளார்ந்த உணர்வு மூடி மறைக்கப்படுகிறது என்பதை அவர் புலப்படுத்தினார்.

தலித்துகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மூர்க்கமான வன்முறை, தந்திரமான ஒடுக்குமுறை, தினசரி அவமானங்கள் ஆகியவற்றை நாம் கண்கொண்டு பார்ப்பதே இல்லை. தலித்கள் மீதான வன்முறைகளை அப்படி நடப்பதாக முழுமையாக யாரும் ஒப்புக்கொண்டதே இல்லை. அப்படியே ஒப்புக்கொண்டாலும், அந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் முக்கியத்துவத்தைப் பொய் வேடத்தாலும், தற்காப்புத் தொனியின் மூலமும் இருட்டடிப்பு செய்துவிடுவதை அவர் சுட்டிக்காட்டினார். காந்தியை கடுமையாகத் தாக்கிய அம்பேத்கர் அதைவிடக் கூடுதலான கடுமையோடு நேருவை நோக்கி முக்கியமான விமர்சனத்தை இப்படி வைத்தார்: இந்திய சமூகத்தின் மையமாக உள்ள இந்த வன்முறையின் இருப்பை நேரு ஒப்புக்கொள்ள மறுக்கிறார். ‘நேருவை பாருங்கள். அமெரிக்காவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான ஜெபர்சனின் விடுதலை அறிவிப்பில் அவர் உத்வேகம் பெறுவதாகப் பெருமிதம் கொள்கிறார்.

இந்தியாவில் உள்ள ஆறு கோடி தீண்டப்படாத மக்களின் நிலை குறித்து எப்போதாவது சஞ்சலமோ, அவமானமோ நேரு அடைந்திருக்கிறாரா? அவரின் எழுதுகோலிலிருந்து ஊற்றெடுக்கும் இலக்கிய வெள்ளத்தில் எங்கேனும் அவர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றனவா?’. அம்பேத்கர் தலித் அல்லாத மக்களை நோக்கித் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். ‘தாங்கள் எப்படிப்பட்ட அநீதியை மேற்கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் உணர்வதே இல்லை!’. இன்றுவரை நாமும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

18033372_1473707332660338_4144983509933142800_n.jpg
அம்பேத்கரின் கோபத்தில் பழிவாங்கும் சாயல் எங்கும் இல்லாததால் அது ஆக்கப்பூர்வமானதாகத் திகழ்கிறது. அது கூர்மையான இலக்குக் கொண்ட சமூக விமர்சனமாகவே எப்பொழுதும் திகழ்கிறது. பழிக்குப் பழி எனப் பேசாத அம்பேத்கரின் பண்பை கொண்டே அவரின் புரட்சிகரமான முகத்தை மழுங்கச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டு சிக்கல்கள் எழுகின்றன. முதலாவது இறுதி இலக்கு, அதற்கான வழிமுறை ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்த அம்பேத்கரின் ஆழமான அலசல். இது குறித்து விரிவாகப் பின்னர்க் காண்போம். சாதி, அமைப்பு ரீதியாக அடக்குமுறையை மேற்கொண்டு சமூகத்தில் தலித்துகளைத் தொடர்ந்து அடிமைப்படுத்துவதன் மீது நமக்கு எழவேண்டிய நியாயமான கோபத்தை, அம்பேத்கரிடம் பழிவாங்கும் உணர்ச்சி இல்லாததைக் கொண்டு தணித்துக் கொள்கிறோம் என்று தலித்துகள் குற்றஞ்சாட்டுவது சரியே ஆகும்.

காந்தியுடன் அம்பேத்கர் மேற்கொண்ட உரையாடல்களில் ‘தலித் விடுதலை என்பது தலித்துகளை அதிகாரம் மிக்கவர்களாக மாற்றுவதற்குக் குறைவானது.’ என்கிற கருத்தாக்கத்தால் காயப்பட்டார். தலித்துகள் மீதான அடக்குமுறையை ஆதிக்கச் சாதியினரின் பிரச்சினையாகக் காந்தி புரிந்துகொள்ள முயன்றது ஒருவகையில் தலித் அதிகாரத்தை மறுதலிக்கும் தந்திரமே. காந்தி-அம்பேத்கர் விவாதத்துக்குள் போவதற்கு இது தருணமில்லை. (இந்தத் தலைப்பில் மேலும் ஆர்வம் கொண்டவர்கள் காண்க: டி.ஆர்.நாகராஜின் சிறந்த நூல்: The Flaming Feet and Other Essays: The Dalit Movement in India தமிழில் : ‘தீப்பற்றிய பாதங்கள்’ மொழிபெயர்ப்பு: ராமாநுஜம்)).

அம்பேத்கர் தலித்துகள் பேசாமடந்தைகளாக அநீதிகளை வாங்கிக்கொள்பவர்களாக இருக்க மாட்டார்கள் என அழுத்தி சொன்னது, எந்த அளவுக்குத் தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை நாம் மறப்பதற்கு வசதியாக உள்ளது. அரசமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அரசியல் செய்ய வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தியதைக் கொண்டு, அரசமைப்புரீதியான மேலோட்டமான சலுகைகள் மட்டுமே தலித் விடுதலை என்கிற கயமையை மேற்கொள்கிறோம். நீங்கள் மனசாட்சி உள்ளவராக இருந்தால், அம்பேத்கரின் எழுத்துக்கள் உங்களை அதிர்ச்சியடைய வைக்கும், பேச்சற்றவர்களாக வெட்கித் தலைகுனிய வைக்கும். அம்பேத்கரை தங்களுக்குரியவராக அபகரிக்க முயலும் விந்தையான ரசவாதத்தின் மூலம், அசௌகரியமான உணர்வை ஏற்படுத்த வேண்டிய அம்பேத்கர் கதகதப்பைத் தருபவராக மாற்றப்பட்டுள்ளார். அவர் புனிதராகக் கொண்டாடப்பட வேண்டியவர் என்று,வரும்போது எல்லோரும் ஒருமித்த கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். உண்மையில், இந்தியாவின் ஆன்மாவின் மீது நடக்கும் மிக முக்கியமான அடிப்படையான மோதல்களின் மையமாக அவரே உள்ளார்.

(தொடரும்)

கருப்பு வெள்ளை புகைப்படங்கள் காட்டும் வரலாறு!


ரகு ராய் இந்தியாவின் முக்கியமான புகைப்படக் கலைஞர்களில் ஒருவர். அறுபதுகளில் பொறியியல் வல்லுனராக வேலை பார்க்கும் வாய்ப்பை உதறிவிட்டுப் புகைப்படக் கலைஞராக வாழ்பவர். அவரின் லென்ஸ் வழியாக விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவைப் பார்க்கிற அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அரிய ஆவணமாக அவரின் புகைப்படங்கள் திகழ்ந்திருப்பதை ‘Picturing Time’ நூல் புலப்படுத்துகிறது. ஒரு நெகிழ்வான பயணத்தின் சில கணங்கள் இங்கே

Image result for raghu rai PICTURING TIME

நூலின் உள் முகப்பில் ஒரு மணல் புயல் வீசுகிற புகைப்படம் இருக்கிறது. ராஜஸ்தானில் நலத்திட்டங்களுக்கு எக்கச்சக்க நிதியை மத்திய அரசு ஒதுக்குகிறது. மாநில முதல்வர் வாரி சுருட்டுகிறார். என்ன ஆனது என்று களத்துக்கே சென்று விசாரிக்க இந்திரா காந்தி ராஜஸ்தான் வருகிறார். ஜனாதிபதி ஜெயில் சிங் இறந்து விட்டார் என்கிற செய்தி வருகிறது. இந்திராவின் ஹெலிகாப்டர் கிளம்புகிறது. அப்பொழுது எழும் மணல் புயல் மக்களின் கண்களில் தூவப்படுகிறது. காலங்களைக் கடந்தும் புகைப்படம் அரசியல், ஊழல், மக்கள் இடையே உள்ள உறவை பறைசாற்றுகிறது இல்லையா?

 

Image result for RAJASTHAN RAGHU RAI SAND STORM

ஒரு போர் எளிய மக்களை என்னவெல்லாம் செய்கிறது? இந்த வங்கப்போரின் ஒற்றைப் புகைப்படும் கலங்கடிக்கும்

இந்திராவை ‘ஊமை பொம்மை’ என்று ஆரம்பத்தில் கருதியவர்கள் எல்லாம் அசந்து போகும் அளவுக்கு அசுரப் பாய்ச்சல் காட்டினார். எவ்வளவோ பத்திகள் சொல்ல முடியாத அவரின் ஆதிக்கத்தை இந்தப் புகைப்படம் சொல்லிவிடுகிறது.

இந்திராவின் ஆட்சியை எதிர்த்து முழங்கிய ஜெயபிரகாஷ் நாராயண் மீது பாயும் லத்தியை ரகு ராயின் கேமிரா உறைய வைத்த பொழுது

அவசர நிலைக்குப் பிந்தைய தேர்தல் முடிவுகளுக்கு முந்தைய தினம்
எடுக்கப்பட்ட படம். சஞ்சய்யின் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தின் வாசகமான, ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ சுவரில் எழுதப்பட்டு இருக்கிறது. இந்திராவின் சுவரொட்டியை குப்பை அள்ளுபவர் அள்ளிக்கொண்டு போகிறார். ஒரு தலைவியின் வீழ்ச்சியின் ஆவணம் அது


இந்தியாவின் முதலாவது ஐந்து நட்சத்திர பீல்டு மார்ஷலாக மானெக்ஷா உயர்த்தப்படும் கணத்தில் ஜனாதிபதி மீசையை முறுக்கி விளையாடுகிறார்

Sam Manekshaw, 1973: President V.V. Giri is appointing the general to the five-star rank of field marshal; the first army chief to receive that title. It looks, of course, as if he is twirling the famous moustache.
அன்னை தெரசாவின் சேவை மிகுந்த, எளியவருக்கு இரங்கும் வாழ்க்கையைக் கடத்தும் புகைப்படம்

Image result for mother teresa raghu rai
நம்முடைய பாரம்பரிய சின்னங்களை எப்படிச் சிதைக்கிறோம் என்பதை உத்திர பிரதேசத்தின் இமாம்பராவை கொண்டு கவனப்படுத்துகிறார் ரகு ராய்

போபால் விஷ வாயு விபத்தை ரகு ராயின் புகைப்படங்கள் அதன் வலி, இழப்பு, கண்ணீர், அநீதி, கொடூரம் ஆகியவற்றோடு உலகத்தின் முன் நிறுத்தின. குறிப்பாக இந்தக் குழந்தையின் புகைப்படம் போபால் அநீதியின் கருப்பு-வெள்ளை சாட்சியாக இன்னமும் இருக்கிறது

Image result for bhopal raghu rai

 

Image result for RAJASTHAN RAGHU RAI thiruvalluvar
பாபர் மசூதி இடிப்புக்கு முந்தைய தினம் அயோத்தி எத்தகைய அமைதி பூமியாக இருந்தது என்கிற காட்சி மதவாதம் எப்படிக் குலைத்துப் போடுகிறது என வலியை தருகிறது

Image result for ayodhya raghu rai

 

காங்கிரஸ் குறித்த மிகக்கூர்மையான அங்கதம் இந்த புகைப்படத்தில் இருக்கிறது

புகைப்படங்கள் காப்புரிமை: ரகு ராய்

ALEPH PUBLICATIONS

RAGHU RAI

PICTURING TIME

விலை: 1500 ரூபாய்

பக்கங்கள்: 192

ஜெயலலிதா-புனைவில் புலப்படும் அரசியின் வாழ்க்கை!


சமகால அரசியல் கதைகள் பெரும்பாலும் புனைவு வடிவம் பெறுவதில்லை. குறிப்பாகத் தமிழகத்தில் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை நாவலாக அரிதிலும், அரிதாகவே வந்திருக்கின்றன. சினிமாவுக்குப் போன சித்தாளு எம்ஜிஆரை குறிப்பிடுவது என்பார்கள். வெட்டுப்புலி நாவலில் திராவிட இயக்க அரசியல் இழைந்து நகரும். சமகாலத் தலைவர்கள் குறித்த வாழ்க்கை வரலாறுகள் பெரும்பாலும் புகழ் பரணிகளாகவே அமைகின்றன. ஆங்கிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் குறித்த வாழ்க்கை வரலாறுகள் மிகச் சொற்பம். அண்ணா குறித்து ஒரு நூல், மறைமலையடிகள் குறித்து ஒரு நூல் ஆகியவை நினைவுக்கு வருகின்றன. இருவர் படத்தை எக்கச்சக்க நண்பர்கள் சிலிர்ப்போடு புகழ்வதைக் கண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் ஜெயலலிதா இறந்த பின்பு வாஸந்தியின் சிறுநூல் வெளிவந்தது. அவருடைய வாழ்நாளில் நீதிமன்ற தடையை அவர் பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.

இந்தச் சூழலில் ஆங்கிலத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அனிதா சிவக்குமரன் ‘The Queen’ என்கிற நாவலை எழுதியிருக்கிறார். ஐந்து வருடங்களுக்கு முன்னரே எழுதிய நாவலை தற்போது தான் வெளியிட்டு உள்ளார். நாவல் முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் வாழ்க்கையின் பிரதி என்றுவிட முடியாது.

Image result for THE QUEEN ANITA SIVAKUMARAN

கலையரசி என்கிற நாயகி தமிழ் வேர்கள் கொண்டவராகக் காட்டப்படுகிறார். அவரின் மேற்படிப்புக் கனவுகள் பொசுங்குகிற கணத்திலும், தாத்தா என்று வாட்ச்மான் நெஞ்சில் சாய்ந்து அழ மருகுகிற அன்புக்கு ஏங்கும் இளம் நடிகையாகப் பதிய வைக்கப்படுகிறார் கலையரசி. ‘பின்க்கியை தவிர எனக்குத் தோழிகள் இல்லை’ என்கிற கலையரசியின் மனக்குரல் ஜெயலலிதாவின் தனிமை மிகுந்த வாழ்க்கையை நினைவூட்டுகிறது.

முழுக்கப் பி.கே.பி என்கிற எம்.ஜி.ஆரை நினைவுபடுத்தும் கதாபாத்திரத்தின் நிழலில் வளர்கிற ஒருவராகக் கலையரசி இல்லை. அவரின் திரைப்படங்களை அவரின் முகத்துக்கு நேராக விமர்சிக்கிறார்.’வசனம் பேசியே வில்லன்களைத் திருத்துறீங்க. அவங்க உடனே திருந்தி உங்க காலில விழறாங்க. ..நீங்க ஒரு சாக்கடை பக்கமா வரீங்க. நீங்க அதில கால் வைக்கக் கூடாதுனு ஒருத்தன் நீட்டுவாக்கில விழறான். என்ன சினிமா இது?’ என்கிற கணத்தில் தனித்த ஆளுமை வெளிப்படுகிறது.

கதை நேர்க்கோட்டில் பயணிக்காமல் முன்பின்னாகப் பயணித்து வாசிப்பு விறுவிறுப்பைக் கூட்டுகிறது. புனைவு என்கிற வெளியின் சுதந்திரத்தோடு ஜெயலலிதாவின் வாழ்க்கையை மாற்றியும் கதைப்போக்கை அமைக்கிறார் அனிதா. ஆகவே, தெரிந்த கதை தானே என்கிற சலிப்போடு நூலை வாசிக்க முடியாது.

விமர்சனங்கள் பெரும்பாலும் இல்லாமல் ரத்தமும், சதையுமாகக் கலையரசியின் வாழ்க்கை கதையாக விரிந்தாலும் தருணங்களில் கூர்மையான வரிகள் கவனிக்க வைக்கின்றன. ‘இந்த ஆடம்பரமான கல்யாணத்தைப் பத்திய இந்தக் கட்டுரையை எடிட்டர் வெளியிட மாட்டார். அவர் ஒன்னும் மோசமான மனுஷனில்லை. ஆனா, அவர் அலுவலகத்தைக் கட்சி குண்டர்கள் உடைக்கிறதை விரும்ப மாட்டார். அவமதிப்பு வழக்குல உள்ள போய் மிதிபட அவர் தயாரில்லை. அவர் மனைவி முகத்தில் ஆசிட் அடிக்கிறதை அவர் எப்படித் தாங்க முடியும்?’

ஆண்களால் மட்டுமே சூழப்பட்ட அரசியலில் தனக்கு என்று ஒரு இரும்பு கூண்டை கட்டிக்கொண்ட கலையரசியின் வாழ்க்கைக்குள் வீடியோ கடை நடத்தும் செல்வி நுழைந்த பின்பு எப்படி ஊழல்மயமாகி போகிறது வாழ்க்கை என்பது எளிய, விறுவிறுப்பான நடையில் புலப்படுத்தப்படுகிறது. உதாரணத்துக்கு ஒன்று, ‘அதிகாரப்பூர்வமாக அவரின் சம்பளம் ஒரு ரூபாய் ..ஆனால், அவரால் எதையும் தனதாக்கி கொள்ள முடியும். விரலைக் கூடத் தூக்க வேண்டியதில்லை. பண மழை பொழிந்தது. ஒரு நோயுற்ற மனிதன் பல்வேறு நோய்களைச் சேர்ப்பது போல அதிகாரத்தில் இருந்தபடி அவர் சொத்துக்களைக் குவித்தார்.’

எனினும், இறுதியில் கலையரசி கைது செய்யப்பட்ட பின்பு வரும் விவரிப்பில்
கலையரசி மீது அனுதாபம் ஏற்படுகிற தொனியிலேயே ஆசிரியரின் நடை அமைகிறது. கருணாநிதியின் அரசியல் ஓரிரு கணங்களில் கூர்மையாக விமர்சிக்கப்படுகிறது. தொலைக்காட்சிகளின் மூலம் நடத்தப்படும் அரசியல், சூப்பர் ஸ்டாரின் வாய்ஸ் படலம் ஆகியவையும் உண்டு.

படிப்படியாக அரசியலின் ஆழ அகலங்கள் புரிந்து கொள்ளும் கலையரசி எப்படி அரசி ஆகிறார் என்பதைச் சில கணங்களில் இயல்பாக நாவல் புரிய வைக்கிறது. குறிப்பாக மேடைப்பேச்சில் எப்படித் தனக்கான பாணியைக் கண்டடைகிறார் என்பது கண்டிப்பாக வாசிக்க வேண்டிய பகுதி. சர்வாதிகாரியாக உருமாறும் கலையரசியின் வாழ்க்கை பக்கங்கள் 2005-யோடு முடிந்துவிடுவது வாசகருக்கு சற்று ஏமாற்றத்தை தரலாம்.

நாவலின் பெரிய பலவீனம் கோட்பாட்டுத் தளத்தில் பயணிக்க மறப்பது. ஏன் பல்லாயிரம் பேர் கடவுளாக வழிபடுகிறார்கள் என்பதை இன்னமும் செறிவாக நம்ப வைக்காமல் கடப்பது. ஜெயலலிதாவின் வாழ்க்கையின் பிரதி அல்ல இந்த நாவல். அதன் தாக்கம் வெவ்வேறு இடங்களில் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாகக் கலையரசியின் ஆழ்மனப்போராட்டங்கள் இன்னமும் நெருக்கமாகப் பதியப்பட்டு இருக்கலாம். எனினும், முக்கியமான முயற்சி.

Image result for THE QUEEN ANITA SIVAKUMARAN

The Queen
Anita SIvakumaran
Juggernaut Books
பக்கங்கள்: 280
விலை: 350

அரசியல் பழக அழைக்கிறான் சகாவு!


நிவின் பாலியின் நடிப்பில் வெளிவந்திருக்கும் சகாவு திரைப்படத்தைப் பார்த்தேன். இடதுசாரி கொள்கை கொண்ட காம்ரேட் கிருஷ்ணனின் வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படம். பிரச்சாரத்தைக் கமர்ஷியல் கலந்து கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். ஏகாதிபத்தியம், பூர்ஷ்வா, மூலதனம், மார்க்ஸ் முதலிய பெயர்கள் படத்தில் வரவில்லை.

எத்தனை தத்துவங்கள் படித்தாலும் மக்களின் மனங்களில் இடம்பெறுவது முக்கியம். எல்லா இடங்களிலும் ஒரே போராட்ட முறை உதவாது. எதிர்ப்பின் வடிவங்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்று பல்வேறு பாடங்கள் இயல்பாக எடுக்கப்படுகின்றன.

இடதுசாரி இயக்கத்தில் சாதி மறுப்பும் பிரதான இடம்பெற வேண்டும் என்பதை, ‘நான் யார் என்பதை என் பெயருக்குப் பின்னால் இருக்கும் வாலை கொண்டு தெரிந்து கொள்ள முடியாது. என் முன்பெயராலேயே நான் யார் என்பது தெரியும். சகாவு (தோழர்) கிருஷ்ணன்” என்கிற கணம் உணர்த்துகிறது. தன்னுடைய மனைவியின் கூலிப்பணத்தை, ‘உன் பணம் நீயே என்ன வேணா பண்ணு.’ என்கிற சகாவு கிருஷ்ணன் பெண்களின் விடுதலை வெளியை ஆண்கள் மதிக்க வேண்டும் என்று பாடம் நடத்துகிறார்.

அரசியல் படிக்கிற பிள்ளைங்களுக்கு எதுக்கு? என்கிற ஆசிரியையிடம், “பொறக்கிறப்பவே அரசியல்ல நாம அங்கமாகிடறோம் இல்லையா? ஏன் வகுப்பிலே பசங்க கருப்பு, நீல மையில் எழுத நீங்க சிவப்பு மையில திருத்துறீங்க? ஏன் மேலே இருக்கவங்க பச்சை மையில் கையெழுத்து போடுறாங்க. அதுவும் அரசியல் தானே? எது நல்லது, கெட்டதுனு பிரிச்சு பாக்க பழகணும். நாளைக்கு எங்கே போனாலும் சரியா செயல்பட அரசியல் புரியணும்.’ என்கிற கனம் விசிலடிக்க ஆசையாக இருந்தது.

Image may contain: 5 people, people standing, cloud, sky and text

சமீபத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், தற்போது அரசியல் செயல்பாட்டாளருமான ஜெயபிரகாஷ் நாராயணன் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது, ‘அதிகாரிகள் இருக்கிற அமைப்பை அப்படியே கட்டிக்காப்பவர்கள். அரசியல்வாதிகள் தான் உண்மையான மாற்றத்தை முன்னெடுப்பவர்கள்.’ என்று சொன்னார். ஒரு அரசியல்வாதி என்பவன் உச்ச இடங்களை அடைகிற ஒருவனாக மட்டும் இருக்க வேண்டும் என்றில்லை, எளிய மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கிற,போராடுகிற ஒருவனாகவும் இருக்கலாம் என்று படம் உணரவைக்கிறது.

அரசியலில் எப்படியாவது உச்சத்தை அடைவது என இயங்கும் இளைஞனின் பார்வையில் நகரும் திரைப்படம் கலை என்பது இளைஞர்களை அரசியல்மயப்படுத்தப் பயன்படும் என்பதை நகைச்சுவை, ஆக்ஷன் ஆகியவற்றைக் கச்சிதமாகக் கலந்து கடத்துகிறது. வன்முறையை வன்முறையால் எதிர்கொள்ளும் தருணங்கள் விமர்சனத்துக்கு உரியவை. அரசியல் பழக அழைக்கிறான் சகாவு. அவசியம் பாருங்கள்.

— with Nivin Pauly.

‘ராமச்சந்திர குஹா’வின் ‘Democrats and Dissenters’ கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் -1


ராமச்சந்திர குஹாவுக்குத் தனிப்பட்ட அறிமுகம் தேவையில்லை. அவரின் ‘Democrats and Dissenters’ கட்டுரைத் தொகுப்பை வாசித்து முடித்தேன். வாரத்துக்கு அவரின் இரண்டு கட்டுரைகளைக் குறைந்தபட்சம் படித்துவிடுவதாலும், ஏற்கனவே வெளிவந்த நூலின் கருத்துக்களின் நீட்சியாகச் சில கட்டுரைகள் அமைவதாலும் நூல் சற்றே சலிப்பைத் தந்தது. எனினும், நூல் சுவையான வாசிப்பு அனுபவமாக நிறைய இடங்களில் இருந்தது. இரு பகுதிகளாக நூல் அறிமுகம் அமையும். முதல் பாகத்தில் அரசியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பும், இரண்டாவது பகுதியில் ஆளுமைகள் குறித்த அறிமுகங்களும் இடம்பெறும்.

Image result for ramachandra guha democrats and dissenters

காங்கிரஸ் பேரியக்கத்துக்கு அஞ்சலி:

காங்கிரஸ் இயக்கம் காந்தியின் வருகைக்கு முன்னரே இந்தியா முழுக்க இருந்து ஆளுமைகளைத் தனதாக்கி கொண்டது. அதே சமயம் நகரங்களில் அது இயங்கியது. ஆங்கிலமே அதன் அலுவல் மொழியாக இருந்தது. காந்தி காங்கிரசில் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரை இணைத்தார். கட்சியின் அலுவல்கள் உள்ளூர் மொழிகளில் நிகழ்த்தப்பட்டன. மூன்றாவதாகப் பெண்களுக்கான உரிமைகள், தீண்டாமை ஒழிப்பு, இந்து-முஸ்லீம் ஒற்றுமை ஆகியவற்றுக்குப் பாடுபட்டார். இதன் மூலம் கட்சி காயஸ்தர்கள், பனியாக்கள், பிரமணர்கள் ஆகியோருக்கு மட்டுமே ஆன கட்சி என்கிற அவப்பெயரை துடைக்க முயன்றார். இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரை உருவாக்கினார். காந்தி மூன்றாவது இலக்கில் பெருமளவில் வெற்றியை பெற முடியவில்லை.

விடுதலைக்குப் பிந்தைய காங்கிரஸ் அறுபதுகள் வரை நம்பிக்கையை, பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு தேசத்தை இணைக்க முயன்றது. வெறுப்பினால் ஒரு புதிய தேசத்தை அது எழுப்ப முனையவில்லை. மதச்சார்பின்மை, சகல குடிமக்களுக்கும் சம உரிமைகள் ஆகியவற்றை அது முழக்கமாகக் கொண்டிருந்தது. ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவை சுயமாக, வலிமை மிக்கவையாக மாறுவதை நேருவின் காலம் உறுதி செய்தது.

Image result for CONGRESS NEHRU INDIRA RAJIV

நேருவுக்குப் பிந்தைய இந்திராவின் காலத்தில் நாகலாந்து, மிசோரம் பகுதிகளில் கிளர்ச்சிகள் எழுந்தன. தமிழகம் இந்தி திணிப்பில் குமைந்து கொண்டிருந்தது. நக்சலைட் இயக்கம் உருப்பெற்று இருந்தது. பொருளாதாரம் பெருமளவு அடிவாங்கி இருந்தது. இரண்டு போர்களின் காயங்களில் இருந்து இந்தியா மீண்டிருக்கவில்லை. அறுபத்தி ஏழு தேர்தல்களில் கேரளா, தமிழகம், வங்கம், ஒரிசாவில் ஆட்சி பறிப் போயிருந்தது. பீகார், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் கட்சி தாவி காங்கிரஸ் ஆட்சிக்கு உலை வைக்கப்பட்டது. இந்திராவை ஊமை பொம்மையாகக் கருதி பதவிக்குக் கொண்டு வந்த சிண்டிகேட் வேறு தலைக்கு மேலே கத்தி போல இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் இந்திரா அதிகாரத்தை மையப்படுத்திக் கொண்டார். கட்சியைப் பிளந்து தனக்குத் தலைவணங்கி, துதிபாடுபவர்களை வளர்த்தார்கள். காஷ்மீரி பண்டிட்கள் நான்கு பேரை கொண்டு தன்னுடைய ஆட்சி அதிகாரத்தின் மிக முக்கியமான முடிவுகளை எடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலே அவசரநிலையின் மூலம் ஜனநாயகத்தைக் கல்லறைக்கு அனுப்பினார். அவரின் படுகொலைக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டு எழுவது போலத் தோன்றினாலும் அடுத்து வந்த தேர்தலில் நாற்பது சதவிகித அளவு வாக்குகளைப் பெற்றது. சமீபத்திய தேர்தலில் அது 20% க்கும் கீழே போய்விட்டது.

காங்கிரஸ் மீண்டு எழுவதற்குப் வாய்ப்பே இல்லை என்கிறார் ராமச்சந்திர குஹா. அது படிப்படியாக மரணத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்கிற அவர் நேரு குடும்பத்தை விட்டு அது விலக வேண்டும் என்று எப்பொழுதும் சொல்வதை மீண்டும் சொல்கிறார். எனினும், காங்கிரஸ் கட்சி எப்படி அதனுடைய அஸ்தமனத்துக்குப் பின்னர் நினைவுகூரப்பட வேண்டும்? இந்திய விடுதலை காலத்தில் காங்கிரஸ் பல்வேறு மத, மொழிக்குழுக்களை உள்ளடக்கி, பல கட்சிகள் பங்குகொள்ளும் தேர்தல் ஜனநாயகத்தை, மதசார்பின்மையைச் சாதித்தது. வயது வந்த எல்லாருக்கும் வாக்குரிமை தந்தது. ஜாதி, பாலின பாகுபாடுகளைப் போக்க ஆரம்பக் காலத்தில் பெருமளவில் முயன்றது. இதை மதச்சிறுபான்மையினருக்கு சம உரிமைகள், இடம் தராமல் இரண்டாம் தர குடிமக்களாக நடத்த வேண்டும் என்ற இந்துத்வவாதிகள், சர்வாதிகார போக்குக் கொண்ட ஆட்சியை நிறுவ பார்த்த இடதுசாரிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள் தரக்கூடாது என்று இயங்கிய பிராமணியர்கள், பெண்களுக்கு உரிமைகளை மறுத்த இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ அடிப்படைவாதிகளுக்கு நடுவே இவற்றை முன்னெடுத்தார்கள். இந்தத் தேசம் முன்னைவிட ஒன்றுபட்டதாக, வன்முறை குறைந்ததாக அவர்கள் காலத்தில் மாறியது. சமூகத்தின் ஆணாதிக்கப் போக்கு குறைவதிலும், சகிப்பின்மை அறுபதுகள் வரை இருந்த காங்கிரசால் மட்டுப்படுவது நிகழ்ந்தது. சமூகத்தின் சமத்துவமின்மை, கட்டுப்பாடுகள் குறைந்தது. இவற்றைக் காங்கிரஸ் தன்னுடைய குறைகளோடு சாதித்தது. இவ்வாறே நினைவுக்கூரப்பட வேண்டும் என்கிறார்.

கருத்துரிமைக்கு எதிரான எட்டு ஆபத்துகள்:

காந்தியின் ‘இந்து சுயராஜ்யம்’ நூல் வெளிவந்த பொழுதே அதை ஆங்கிலேய அரசு இந்தியாவில் தடை செய்தது. அப்பொழுது காந்தி, ‘ஒருவர் சிந்திக்கவும், தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தவும் முழு உரிமை உண்டு. அவர் வன்முறையைப் பயன்படுத்தாதவரை அவரின் கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு.’ என்று எழுதினார். வன்முறையைத் தூண்டிவிடவும் கூடாது என்று சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார் குஹா.

Image result for eight threats to freedom of expression

இந்தியாவில் கருத்துரிமைக்குப் பெரும் சவாலாக ஆங்கிலேயர் கால IPC சட்டங்களான 153, 153A, 295, 295A , 499, 500, 505 ஆகியவை திகழ்கின்றன, எல்லாவற்றுக்கும் மேலாகக் காந்தி ஆங்கிலேயர் சட்டம் என்கிற பெயரில் செய்யும் வன்புணர்வு என்று வர்ணித்த 124A கருத்துரிமையைப் பெருமளவில் கட்டுப்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டுகிறார். விடுதலைக்குப் பின்னால் இடது, வலது இரண்டும் இந்திய அரசுக்கு எதிராக வன்முறை வழியைக் கைக்கொண்ட பொழுது இந்துத்துவ இதழான Organiser, இடதுசாரி இதழான Crossroads ஆகியவை தடை செய்யப்பட்டன. பிரிவினை, அகதிகள் சிக்கல், காஷ்மீர் பிரச்சனை ஆகியவற்றில் வன்முறையைத் தூண்டும் பேச்சுகளுக்கு அரசு பயந்து முதலாவது சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இதற்கு நேரு, அம்பேத்கர் மீது கருத்துரிமையைக் கட்டுப்படுத்துகிற கடுமையான செயலை செய்தார்கள் என்கிறார் குஹா. ஒரு வரலாற்று ஆசிரியராக அவர் சறுக்கும் இடம் அது. முதலாவது சட்டத்திருத்தத்தில் மதவாதத்தை எதிர்கொள்ளப் பேச்சுரிமையைக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தாலும், அதில் கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் செயல்பாட்டையும் இருவரும் செய்தார்கள். மேலும், முதலாவது சட்டதிருத்தத்துக்கு முன்னே பேச்சுரிமைக்குக் கட்டுப்பாடுகள் இருந்தது. எப்படி என்று விரிவாகத் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள்: https://indconlawphil.wordpress.com/…/on-reasonable-restri…/

இந்தியாவில் நீதித்துறை மிகவும் மெத்தனமாக இயங்குவதும், நீண்டு கொண்டே போகும் வழக்குகளும் கருத்துரிமைக்குச் சவாலாக அமைகின்றன என்கிறார் குஹா. அடையாள அரசியலும் கருத்துரிமைக்கு ஆபத்தாக இருக்கிறது; Satanic Verses எனும் சல்மான் ரூஷ்டியின் நூலை வாசிக்காமல், ஈரானுக்கு முன்னால் முந்திக்கொண்டு ராஜீவ் காந்தி அரசு தடை செய்தது. சிவாஜியின் பிறப்பு பற்றிய பல்வேறு கதைகளைத் தொகுத்த லென் அவர்களின் நூல் வராமல் இந்துத்வவாதிகள் பார்த்துக் கொண்டார்கள். மேற்கு வங்க இடதுசாரி அரசு தஸ்லீமா நஸ்ரினின் நாவலை தடை செய்தது. கருத்துரிமையை நீதிமன்றங்கள் காக்க முயன்றாலும் காவல் துறை கைகட்டி நிற்பதும் நிகழ்கிறது. சட்டம், ஒழுங்கு முக்கியம் என்று சொல்லியபடி கருத்துரிமையைக் காவு கொடுப்பது நிகழ்கிறது. ஹுசைன்-தோஷி இருவரும் இணைந்து ஓவிய கண்காட்சி நிகழ்த்திய பொழுது அது முழுவதும் தாக்கப்படுவதைக் காவல்துறை வேடிக்கை பார்த்தது. சிவாஜி குறித்த லேனின் புத்தகத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்ததும் காவல் துறை பதிப்பகத்துக்குப் பாதுகாப்பு தர மறுத்துவிட்டது.

அரசியல்வாதிகள் எப்படிக் கருத்துரிமைக்கு எதிராக இருக்கிறார்கள் என்று முன்னரே சுட்டிக்காட்டப்பட்டது. குஜராத்தில் சாயஜிராவ் பல்கலையை இந்துத்வர்கள் தாக்கிய பொழுது அப்பொழுதைய மோடி அரசு வேடிக்கை பார்க்கவே செய்தது. இந்தியாவின் மிகச்சிறந்த கலை சார்ந்த படைப்பகம் அழிக்கப்பட்டது. தமிழகத்தில் பெருமாள் முருகனின் கருத்துரிமைக்கு அதிமுக, திமுக இரண்டுமே ஆதரவுக்கரம் நீட்டவில்லை என்று குஹா சுட்டிக்காட்டுகிறார். அரசாங்க விளம்பரங்களை நம்பிக்கொண்டு இருக்கும் ஊடகங்கள் மறந்தும் எதிர்க்குரல் எழுப்புவது இல்லை. ஊடகத்தினர் எதோ ஒரு கருத்தால் காயப்பட்டதாகச் சொல்லிக்கொண்டு தாக்க கிளம்பும் குண்டர்கள் குழு தங்களுக்குத் தகவலை தெரிவித்ததும் அதைக் காவல்துறைக்குத் தெரியப்படுத்தாமல் பிரேக்கிங் நியூஸ், exclusive என்று கல்லா கட்டுவதைக் கவனப்படுத்துகிறார். தாராளமயம் காலத்திற்கு முன்பு பல்வேறு இதழ்களில் தனியாகச் சுற்றுசூழலுக்கு என்று நிருபர்கள் இருந்தார்கள். அவர்களின் பொருளாதாரப் பாய்ச்சலின் பொழுது வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். விளம்பரம் தரும் நிறுவனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொழுது கண்டும், காணாமல் ஊடகங்கள் இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களால் பல்வேறு ஊடக நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. அதுவும் வெகுசில நிறுவனங்கள் பெரும்பான்மை ஊடகத்தைக் கட்டுப்படுத்துவது நிகழ்கிறது. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக இதழ்கள் எழுதினால் டாட்டா நிறுவனம் செய்தது போல விளம்பரத்தை நிறுத்துவது நிகழ்கிறது. அரசியல் சார்புநிலைகள் எடுத்துக்கொண்டு படைப்பாளிகள் கருத்துரிமை சார்ந்தும் சார்புநிலைகள் குரல் கொடுப்பதும் கருத்துரிமைக்கு ஆபத்தாக அமைகிறது என்று சுட்டுகிறார் குஹா.

எங்கே போனது ஆழமான அரசியல் உரையாடல்?:
இந்தியாவின் அரசியலில் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கிக் கொண்டு இருந்த ஜெயபிரகாஷ் நாராயணன் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் தேர்தல் அரசியலை விடுத்துச் சேவைகளில் ஈடுபட்டு வந்தார். எனினும் இரண்டாவது பொதுத் தேர்தல் காலத்தில் நேருவுக்கு எழுதிய கடிதத்தில், ‘ஒரு கட்சித்தலைவராகச் செயல்படுவதை விட தேசிய தலைவராகச் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இங்கிலாந்தில் இடதுசாரியான தனக்கு லேபர் கட்சியை நெருக்கமானது என்றாலும், அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் கன்சர்வேடிவ் கட்சி வலிமை பெறவே விரும்புவேன். ஒரு கட்சி சகல அதிகாரத்தையும் பெறுவதை விட, விரும்பத்தகாத எதிர்கட்சிகள் கொஞ்சம் கூடுதல் வலிமை பெறுவது தவறில்லை. நாடாளுமன்ற முறை தோற்றுவிட்டது. வேறு வகையான அரசியல் முறைகள் குறித்து யோசிக்க வேண்டும்’ என்றெல்லாம் குறிப்பிட்டார்.

நேரு போர்க்காலங்களில் இப்படிப்பட்ட பொதுவான அரசுகள் சாத்தியம் என்றாலும், வெவ்வேறு இலக்குகள்,தொலைநோக்குகள் கொண்டவர்கள் இணைந்து செயல்படுவது சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில், அயலுறவில் உகந்ததாக இருக்காது என்றார். தேர்தலில் நிற்பது, கருத்துக்களைப் பரப்புவதன் மூலம் மக்களின் மனதை மாற்றுவது முதலிய முறைகளை மற்ற கட்சிகள் செய்ய எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் 150 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கையில் இன்னமும் வலிமைப்படுத்துவதை எப்படித் தான் செய்ய முடியும் என்று புரியவில்லை நேரு எழுதினார். அப்படி எதிர்க்கட்சிகளைப் பாதுகாத்து, பராமரித்து வளர்க்க முனைந்தால் அது ஏமாற்று வேலையாகவே இருக்கும். நாடாளுமன்ற முறை பல்வேறு தோல்விகளால் ஆனது. எனினும் இருப்பதில் அதுவே சிறந்த முறை என்று நேரு பதில் தந்ததோடு மாற்று முறையைப் பரிந்துரைக்கும்படி ஜெபியிடம் கேட்டார். அவர் ‘ Plea for the Reconstruction of the Indian Polity’ என்கிற கட்டுரையில் இன்றைய பஞ்சாயத்து ஆட்சிமுறைக்கான விதையை ஊன்றினார்.

Image result for NEHRU AND JAYAPRAKASH NARAYAN

இப்படிப்பட்ட தேர்ந்த உரையாடல்கள் இந்திய அரசியலில் பல்வேறு தளங்களில் அப்பொழுது நிகழ்ந்தது. ராஜ ராம் மோகன் ராய், கிறிஸ்துவ மிஷனரிகள் இந்து மதம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளுமா என உரையாடினார்கள். மேற்கை பற்றிய பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று தாகூர், காந்தி உரையாடினார்கள். ஜாதியை எப்படி அற, அரசியல் தளங்களில் எதிர்கொள்வது என்று காந்தி, அம்பேத்கர் உரையாடினார்கள். இந்துக்கள், முஸ்லீம்கள் ஒரு தேசமாக இணைந்து இருக்க முடியுமா என்று காந்தி, ஜின்னா பேசினார்கள். பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் முதலாளிகளின் பங்கு என்ன என்று நேரு, ராஜாஜியும், அடிமைப்படுத்தியவர்களின் மொழியான ஆங்கிலத்துக்கு இந்தியாவில் என்ன இடம் என்று ராஜாஜி, லோகியாவும் உரையாடினார்கள். இப்படிப்பட்ட உரையாடல்கள் இல்லாமல் இன்றைய அரசியல் இருக்கிறது.

சீனா, பாகிஸ்தானை புரிந்து கொள்வது:
சீனாவில் மாண்டரின் மொழியும் ஹன் இனமும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அங்கே திபெத்திய மொழியோ, யூகுர் மொழியோ கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. அரசில் இணைந்து பணியாற்ற சீன மொழியைக் கற்பது கட்டாயம். காலனியம், ஜப்பானிய தாக்குதல், கம்யூனிச புரட்சி ஆகியவற்றால் நாட்டைப் பிணைக்க மொழியைச் சீனா பயன்படுத்துகிறது. தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தால் போலீஸ் வந்து நிற்கும். சீனாவில் பெண்கள் இந்தியாவை விட மேம்பட்ட நிலையில் நடத்தப்படுகிறார்கள். இந்தியாவில் வேலை செய்யும் பெண்களின் சதவிகிதம் 30%, சீனாவில் 70%. இந்தியாவில் 25 வயது நிறைந்த பெண்களில் பள்ளிக்கல்வியை முழுமையாக முடித்தவர்கள் 27% சீனாவில் 54%. நாடாளுமன்றத்தில் இந்தியாவில் பெண்களின் பங்கு 12% அங்கே 21%. இங்கே பிரசவத்தின் பொழுது மரணிக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை 37/1 லட்சம், 174/1 லட்சம். இந்தியா சீனாவுக்குப் போட்டி என்று பலவற்றில் தன்னைக் கருதிக் கொள்கிறது. பெண்கள் விஷயத்தில் அதைக்கருத்தில் கொள்ளலாம்.

பழங்குடியினர் குறித்த குஹாவின் கட்டுரை பெருமளவில் இந்த உரையில் அடங்கி இருக்கிறது: https://saravananagathan.wordpress.com/…/%E0%AE%AA%E0%AE%B…/

பாகிஸ்தான் தன்னுடைய அரசியல் தலைவர்களில் ஊக்கம் தேட முடியாமல், அக்பர், பாபர் என்று பெருமை கொள்கிறது. அதற்கு மாறாக இந்தியாவில் எண்ணற்ற அரசியல் தலைவர்கள் உத்வேகம் தருவதற்குக் கடந்த காலங்களில் இருக்கிறார்கள். லாகூர் நகரத்தில் இந்து, சீக்கிய, இஸ்லாமிய, பார்சி கலாசாரங்கள் இணைந்து இருந்தாலும் லாகூர் குறித்த நூல்களில் இஸ்லாமிய முகத்துக்கு மட்டுமே கவனம் தரப்படுகிறது. இப்படிப்பட்ட ஒற்றைப்படையான வரலாற்று எழுதியல் இந்தியாவிலும் நிகழலாம் என்கிறார் குஹா. பாகிஸ்தான் என்கிற தேசம் குறித்த முழக்கத்தை முதன்முதலில் மின்டோ பார்க்கில் ஜின்னா வைத்தார். அங்கே ஒரு கோபுரத்தை கட்ட மக்கள் நிதி தராமல் போகவே திரைப்பட நுழைவுச்சீட்டு, குதிரைப்பந்தய நுழைவுச்சீட்டு ஆகியவற்றின் மீது வரி போட்டு அதைப் பாகிஸ்தானிய அரசு கட்டியது.

வன்முறையை எப்படிப் போராட்டக்குழுக்கள் கைக்கொள்வைது?:

. தேர்தல், பல கட்சி ஆட்சிமுறை, வலுவான நீதித்துறை, வாழ, பணி செய்ய, சொத்து சேர்க்க குடிமக்களுக்கு உரிமை ஆகியவை எந்தளவுக்கு ஒரு ஜனநாயகத்தில் கிடைக்கின்றன என்பதைப் பொறுத்தே அது எவ்வளவு வலிமையான அரசு என்று அறிய முடியும். இவற்றோடு பல்வேறு மதங்கள் இணைந்து இருப்பது, தங்களுடைய மொழியில் சிந்திப்பது, எழுதுவது, பேசுவது, விரும்பியதை உண்பது, உடுத்துவது, விரும்பியவரை மணத்தல் ஆகிய அனைத்தும் ஒரு நாட்டில் சகலருக்கும் கிடைக்கிறதா என்று பல்வேறு கேள்விகள் உண்டு. காஷ்மீரில் தேர்தல்கள் பெரும்பாலும் நேர்மையாக நடத்தப்பட்டதில்லை. ஒடுக்குமுறைகள் மிகுந்தே இருந்திருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் அதிகாரத்தை விட்டு திட்டமிட்டு விலக்கப்பட்டதோடு, தமிழ் மொழி இரண்டாம்பட்சமான இடத்தைப் பெற்றது. திட்டமிட்ட படுகொலைகள் வன்முறை பாதைக்குத் திருப்பியது. காஷ்மீரிலும் ஒட்டுமொத்த நம்பிக்கையும் போய் ஆயுத போராட்டங்கள் எழுந்தன. இலங்கையில் 2009-ல் போர் முடிந்து பல்வேறு இழப்புகளுக்குப் பிறகு நாடு அமைதிக்குத் திரும்பியிருக்கிறது.

எனினும், அங்கே பூரண உரிமைகளோ, நிம்மதியான வாழ்க்கையோ இன்னமும் சாத்தியமாக இல்லை. காஷ்மீர் எரிந்து கொண்டு இருக்கிறது. இதில் வன்முறையின் பங்கு என்ன? வன்முறை எதிர்க்கிற அரசு, அதிகாரிகள், மக்கள், தன் குழுவில் வேறு மதம், மொழியைச் சார்ந்தவர்கள், அரசியல் ரீதியாகத் தன்னோடு முரண்படும் தன்னுடைய குழுவினர் ஆகியோர் மீது நிகழ்த்தப்படுகிறது. முதல் இரண்டுக்கு ஓரளவுக்கு நியாயம் கற்பித்தாலும், இறுதி மூன்று ஏற்புடையது இல்லை. அப்பாவி மக்களைக் கொல்வது ஏற்புடையது அல்ல. விடுதலைப்புலிகள் அதை இலங்கையில் செய்தார்கள். காஷ்மீர் போராளிகள் மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் குடிமக்களைக் கொன்றார்கள். விடுதலைப்புலிகள் இஸ்லாமியர்களைத் தமிழர்களாக இருந்தும் கொன்றார்கள். காஷ்மீர் போராளிகள் காஷ்மீரி பண்டிட்கள் இரண்டு லட்சம் பேரை வெளியேற்றினார்கள். எந்த ஜனநாயகம், பன்மைத்தன்மைக்குப் போராடுகிறார்களோ அதைத் தங்களின் சகாக்களுக்கு மறுப்பதோடு அவர்களைக் கொல்லவும் செய்திருக்கிறார்கள். வன்முறையை எப்படித்தான் கையாள்வது? ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெகுமக்கள் மீது எப்பொழுதும் ஆயுதம் ஏந்தி போரிட்டது இல்லை.

இந்தியாவில் அமைதியாகத் தனிநாடு கேட்ட திராவிட இயக்கம் பின்னர்த் திமுகவால் தேர்தல் அரசியலில் கலந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றது. மாநில அளவில் ஆட்சி செய்யவும் செய்தது. மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஆயுத கிளர்ச்சியை விடுத்து முழுமையான மன்னிப்பு பெற்றுத் தேர்தலில் நின்றது. வெற்றி பெற்று ஆட்சியில் இருந்ததோடு எதிர்க்கட்சியாகவும் அமர்ந்தது. அரசுகள் ஜனநாயக அமைப்புகளை வலிமைபப்டுத்த வேண்டும், நேர்மையான தேர்தல்களை நடத்த வேண்டும். சிறுபான்மையினரின் மொழி, கலாசாரம் ஆகியவற்றை மதிக்க வேண்டும், சட்டங்கள், கொள்கைகளில் சிறுபான்மையினர் கருத்தை கணக்கில் கொள்ள வேண்டும். மாநில சுயாட்சியை வழங்குவதோடு வேலை, சுகாதாரம், பள்ளிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். ராணுவங்கள் செய்த மனித உரிமை மீறல்கள் குறித்துத் தனிப்பட்ட நேர்மையான விசாரணைகள் நிகழ்த்தி தண்டனை தரவேண்டும் என்கிறா குஹா.

Democrats and Dissenters
Ramachandra Guha
Allen Lane Publishers
பக்கங்கள்: 310
விலை: 699

எப்பொழுது விழிக்கும் நம் மனசாட்சி?-கடைக்கோடி குடிமக்களின் கதைகள்


எதுவும் நடக்காததைப் போலத் தலையைத் திருப்பிக் கொள்ளலாம். எத்தனை முறை?
உடைந்து அழுகிற மக்களின் கேவல் கேட்பதற்கு எத்தனை காதுகள் வேண்டும்?
சரிந்து விழுகிற மக்களின் மரணங்களை உணர எத்தனை பிணங்கள் இங்கே விழ வேண்டும்?’ – பாப் டைலான்

நம்மைச்சுற்றி இருக்கும் குரலற்ற, முகமற்ற மக்களின் வலிகள், போராட்டங்கள், கண்ணீர் ஆகியவற்றைக் கவனித்து இருக்கிறோமா? ஒருவரின் பிறப்பே அவரின் வாழ்க்கையின் சாபமாக மாறுவதை என்ன என்பது? தங்களால் தேர்வு செய்ய முடியாத அடையாளங்களுக்காகக் கொல்லப்படுபவர்களின் மரணங்கள் நம்மை உறுத்துகிறதா? அடித்து நொறுக்கும் வாழ்க்கையில் ஒரு சிறு நம்பிக்கை கீற்று கூட இல்லாமல் உறைந்து போயிருக்கும் மக்களின் வாழ்க்கை எப்படியிருக்கும்?

இந்திய ஆட்சிப்பணியில் இருந்து பின்னர்ப் பதவி விலகி சமூகச் செயல்பாட்டாளராக இருக்கும் ஹரீஷ் மந்திரின் ‘FATAL ACCIDENTS OF DEATH’ நூல் இவற்றுக்குப் பதில் தர முயல்கிறது. பல்வேறு சமூக அநீதிகளில் குலைந்து போன பதினேழு மனிதர்களின் வாழ்க்கையின் வழியாகச் சமூகத்தின் கசடுகள், உண்மைகள், அவலங்கள் ஆகியவற்றை முகத்தில் அறைந்தது போல எந்தப் பிரச்சாரத் தொனியும் இல்லாமல் நூல் கடத்துகிறது.


Image result for fatal accidents of birth
குஜராத் கலவரங்களில் குடும்பத்தின் இருபத்தி ஆறு உறவுகளையும்
மதவெறிக்கு பலிகொடுத்து விட்டு நசீப் எனும் இஸ்லாமிய பெண் நீதிக்காக [போராடுகிறார். அன்பு, அமைதி, நீதி, ஒற்றுமை நமக்கு வேண்டும் என்று அனைத்துத் தரப்புப் பெண்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். அவர் பர்தா அணியாமல் வெளியே சுற்றக்கூடாது என்று இஸ்லாமிய குருமார்கள் சொல்வதை மீறித் தீவிரமாக இயங்கி மாற்றங்களை விதைக்கிறார். மதங்கள் மகளிரை அடக்கவே முயல்கின்றன என்று தோன்றுகிறது.

நிமோடா எனும் ராஜஸ்தானின் கிராமத்தில் பல வருட வருமானத்தைக் கொட்டி அனுமானுக்குச் சிலை எழுப்பிய பன்வாரிலால் எனும் தலித் அந்தக் கோயிலை திறக்க ஆதிக்க ஜாதியினர் விட மறுக்கிறார்கள். புரோகிதர் கிடைக்காமல் திணறுகிறார். அல்லலுற்று, அவமானப்பட்டுக் கோயிலை துவங்கினாலும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கிறார்கள். நீதி கேட்டுப் போராடியும் சமரசம் செய்து கொண்டே ஊருக்குள் குடும்பம் அனுமதிக்கப்படுகிறது. தன்னுடைய இறைவனின் சந்நிதிக்குள் யாருமே நுழையாமல் தன்னைப் போல அவரும் தீண்டப்படாதவராக இருக்கிற வெம்மையோடு இறந்தும் போகிறார் அவர்.

சென்னையில் பிச்சைக்காரர்களைக் கைது செய்து தங்கவைக்கும் இல்லம் எப்படியிருக்கிறது என்பதை மாரியப்பன் என்பவரின் வாழ்க்கையின் மூலம் காட்டுகிறார் ஹரீஷ். சுற்றி காம்பவுண்ட் இல்லாததால் அடைத்துவைக்கப்பட்டுப் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். மல வாசனை மூக்கை எப்பொழுதும் துளைக்கிறது, தண்ணீர் பச்சை நிறத்தில் வந்து வயிற்றைக் குமட்டுகிறது. கைத்தொழில் சொல்லித்தர எந்த ஆசிரியரும் இல்லை. ஒழுங்கான உணவு என்பது வெறுங்கனவு மட்டுமே. மருத்துவ வசதிகள்கை இருப்பதே இல்லை. கையேந்தி பிழைப்பது அவமானம் என்று கைது செய்யப்பட்ட இடத்திலும் சற்றும் கருணையில்லாமல் கழியும் கொடிய வாழ்க்கை கண்முன் வந்து கனக்கிறது.

தன்னுடைய உடல்நலம் முற்றிலும் குன்றிப்போன கணவனைக் காப்பாற்ற வாங்கிய கடனுக்குத் தன்னுடைய மகளைத் தத்தாகக் கொடுக்கிறார் லலிதா எனும் ஓடியாவை சேர்ந்த பெண்மணி. நல்ல சோறு சாப்பிட்டு, நல்ல வாழ்க்கையை மகள் வாழட்டும் என்கிற எண்ணம். ஆனால், அதிகாரிகளுக்கு விஷயம் தெரிந்து கடன் கொடுத்தவர் கைது செய்யப்படுகிறார். மகள் திரும்பவும் ஒப்படைக்கப்படுகிறார். அவரும் நோய்வாய்ப்பட்டு மருந்து வாங்க காசில்லாமல் இறந்து போகிறார். காசுக்கு விற்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட பொழுது ஓடிவந்த யாரும் மகள் இறந்து போன பொழுது வரவே இல்லையே என்று அரற்றுகிறார் லலிதா.

Image result for fatal accidents of birth

தனம் என்கிற தண்டபாணி திருநங்கையாக வாழும் தங்களின் வலி மிகுந்த வாழ்க்கையை இயல்பாகச் சொல்கிறார். ஒன்று புணர்ந்து விலகும் மாமிசப் பிண்டமாக ஆண்கள் காண்கிறார்கள், இல்லை அருவருப்புக்கும், அவமானத்துக்கும் உரியவர்களாக விலகி செல்கிறார்கள். நாங்கள் உணர்வும், அன்பும், கனவுகளும் மிகுந்த மனிதர்கள் என்று யாரும் எண்ணவே மாட்டார்களா என்று அவர் கேட்டுவிட்டு மவுனம் கொள்கிறார். . தனம் தன்னுடைய அப்பாவின் மரணத்தின் பொழுது கூட அருகில் செல்ல முடியாமல் பரிதவிக்கிறார். தனியே குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துவிட்டு திரும்பி விடுகிறார். ‘பானையைச் செய்ஞ்சு வெய்யில வைக்கிறப்ப சிலது உடைஞ்சு போயிரும். யாரை அதுக்குக் குறை சொல்ல. உடைஞ்சது உடைஞ்சது தான்.’ என்கிறார் தனம் ஹரீஷ் எழுதுகிறார் “அங்கே எதுவும் உடைந்திருக்கவில்லை.”என்றே நான் உணர்ந்தேன்.

நிர்பயா வன்புணர்வில் ஈடுபட்ட மைனர் சிறுவன் மறுவாழ்வு மையத்தில் மூன்று ஆண்டுகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பொழுது அவனைத் தூக்கில் ஏற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டங்கள் திருத்தப்பட்டன. மருத்துவ நிபுணர்களின் எதிர்ப்பை மீறி பதினாறு வயது சிறுவர்கள் செய்யும் குற்றங்களுக்கும் பெரியவர்களுக்குத் தரப்படும் தண்டனைகளை ஆய்வுக்குப் பிறகு தரலாம் என்று திருத்தும் கொண்டுவரப்பட்டது. அந்தச் சிறுவனின் கதை பேசப்படவே இல்லை.

Image result for fatal accidents of birth

பதிமூன்று வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட அவனுடைய அம்மா வறுமை, அடி, உதை ஆகியவற்றோடு நோய்வாய்ப்பட்ட கணவனிடம் சிக்கி வெந்து நொந்து மகனை பதினோரு வயதில் நகரத்துக்கு வேலை தேடி அனுப்புகிறார். சமூகத்தில் எந்தக் கணத்திலும் வாய்ப்புகளோ, கனிவோ, வழிகாட்டுதலோ கிடைக்காமல் போன அவன் இந்தக் கொடுங்குற்றத்தை செய்கிறான். அவனைத் தூக்கில் ஏற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைத் தாண்டி நீதிபதி சட்டப்படி மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கிறார். அவன் பக்திமானாக மாறுகிறான். நன்றாகச் சமையல் செய்யக் கற்றுக்கொள்கிறான். அழகான ஓவியங்கள் வரைகிறான். அவனைக் கொன்று விடலாம். அவனை உருவாக்கும் சமூகத்தின் கொடுமைகளை?

Image result for fatal accidents of birth

ரோஹித் வெமுலாவின் வாழ்க்கையின் மூலம் ஆசிரியர் சமூகத்தை நோக்கி எழுப்பும் கேள்விகள் ஆழமானவை. வாழ்வதற்கும், கார்ல் சேகனை போலப் பிரபஞ்சத்தைத் தொட கனவு கண்ட ஒரு பேரறிஞனை உதவிப்பணத்துக்குக் கையேந்து விட்டு கொல்லும் அவலம் நெஞ்சை சுடுகிறது. சாவிலும் கடனை திருப்பிக் கொடுங்கள் என்று அவர் எழுதும் கடிதம் என்னவோ செய்கிறது.

ஹரீஷ் மந்தர்
பக்கங்கள்: 203
விலை: 399
SPEAKING TIGER வெளியீடு

 

வங்கதேசம் உருவான சர்வதேச வரலாறு


 

1971 A GLOBAL HISTORY OF CREATION OF BANGLADESH நூல் அறிமுகம். பாகம் 1:

போர்கள் இல்லாத உலகம் வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். ஆனால், போர்கள் நடந்து முடிந்த பின்னால் மாபெரும் வெற்றி என்றோ, பெருந்தோல்வி என்றோ கதைகள் எழுதப்படுகின்றன. சிலரை நாயகனாக, சிலரை வில்லனாக ஆக்கும் கருப்பு, வெள்ளை கதைகள் தான் போர்கள் சார்ந்து பெரும்பாலும் உலவி வருகிறது. வரலாறு ஆனால் அத்தனை எளியது இல்லை. ‘போர்களைப் புரிந்து கொள்வோம்.’ என்கிறார் ராணுவ வரலாற்று ஆசிரியர் ஸ்ரீநாத் ராகவன்.

 

Image result for 1971 war a global history

 

இந்தியாவின் முன்னணி ராணுவ வரலாற்று ஆசிரியரான அவர் இரண்டாம் உலகப்போரில் இந்தியாவின் பங்களிப்பு, 1971 போர் குறித்த சர்வதேச வரலாறு, நேரு காலத்தில் போரும், அமைதியும் என்று வெவ்வேறு தலைப்புகளில் மிக முக்கியமான நூல்களை எழுதியிருக்கிறார். அவரின் 1971 இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்த நூலை வாசித்து முடித்தேன்.

நூல் லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்தில் துவங்குகிறது. இந்தியாவுடன் ஏற்பட்ட எல்லை பிரச்சனையைப் போரில் கொண்டு போய்ப் பாகிஸ்தான் நிறுத்தியது. அந்தப் போரை சோவியத் ரஷ்யா சமாதானம் செய்து வைத்து முடித்த ஆறே வருடத்தில் ஏன் இன்னொரு போர் ஏற்பட்டது? மேற்கு, கிழக்கு என்று பாகிஸ்தான் இரு பகுதிகளாகப் பிரிந்து கிடந்தது. இந்தியா நடுவில் இருக்க, மனதளவிலும், நாடு என்கிற உணர்விலும் வேறுபடும் பல்வேறு தருணங்கள் இரு பகுதிகளுக்கு இடையே நடந்தன.

ஜின்னா 1948 ஆம் வருடம் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழியாக உருது மட்டுமே இருக்கும் என்றார். 1956-ல் பாகிஸ்தானின் பிரதமரும், வங்காளி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட குவாஜா நஜிமுதீன் உருது மொழி மட்டுமே அதிகாரப் பூர்வ மொழி என்று அறிவிக்க வங்கதேச மாணவர்கள் போராட்டங்களில் குதித்தார்கள். ரத்த வெள்ளம் ஓடியதற்குப் பின்பு வங்கமொழியும் தேசிய மொழியானது. கிழக்கு பாகிஸ்தானின் சணல் ஏற்றுமதியில் கிடைத்த வருமானம் மேற்கு பாகிஸ்தானை வளப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. 1954-1960 காலத்தில் மேற்கின் வளர்ச்சி 3.2% லிருந்து 7.2% ஆக உயர்ந்தது. கிழக்கு பகுதியின் வளர்ச்சி 1.7% லிருந்து 5.2% என்கிற அளவுக்கே உயர்ந்தது. பல்வேறு சலுகைகள் மேற்கு பகுதிக்கே வாரி இறைக்கப்பட்டன. அதிகாரம் பெரும்பாலும் மேற்கு பாகிஸ்தான் வசமே இருந்தது.

வங்கதேசம் என்கிற நாடு உருவாக இந்த மாற்றாந்தாய் மனோபாவமே காரணம் என்று சொல்லப்பட்டாலும் வங்கதேச உருவாக்க வரலாறு என்பது ஸ்ரீநாத் ராகவனின் பார்வையில், ‘சந்தர்ப்பம், தற்செயல், தேர்வு, வாய்ப்பு’ ஆகியவை ஒருங்கே கைகூடி வந்ததால் உண்டான ஒன்று. பாகிஸ்தானை அறுபதுகளில் அயூப் கான் ஆண்டுக் கொண்டிருந்தார். பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும் ராணுவ ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். மாணவர்களுக்குப் பல்கலையில் கல்வி புதிய விழிப்புணர்வை தந்தது. ஒரு முறை தேர்வில் தவறினால் ஒரே முறை மட்டுமே மீண்டும் தேர்வு எழுத அனுமதி முதலிய விதிகள் கடும் அதிருப்தியை உண்டு செய்தன. 86.5 லட்சமாக இருந்த வறியவர்கள் எண்ணிக்கை 93.3 லட்சமாக உயர்ந்து நின்றது. தலைமை பொருளாதார அறிஞரின் வார்த்தைகளில், நாட்டின் 66% தொழில்வளம், 87% வங்கி, காப்பீட்டு வளங்கள் 22 குடும்பங்களிடம் குவிந்து கிடந்தன.

ஒரு சிறு பொறி தான். பல்வேறு இளைஞர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். நாடே ரணகளம் ஆனது. எதிர்ப்பின் வெம்மை தாங்காமல் அயூப் கான் விலகி யாஹ்யா கான் எனும் ராணுவத் தளபதிக்கு வழிவிட்டார். ஜனநாயகம், புது அரசமைப்புச் சட்டம் வரும்வரை மட்டுமே தான் பதவியில் இருப்பேன் என்று யாஹ்யா கான் வாக்குத் தந்தார். தேர்தல் வந்தது.

Image result for yahya bhutto

கிழக்குப் பாகிஸ்தானில் அவாமி முஸ்லீம் லீகின் தலைவர் முஜிபுர் ரஹ்மான் ஆறு அம்சத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று போர்க்குரல் கொடுத்தார். உண்மையான கூட்டாட்சி வேண்டும், ராணுவம், வெளியுறவு ஆகியவை மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும், இரு தனித்தனி நாணயங்கள், தனி நிதிக் கொள்கைகள், தனி அயல்நாட்டுப் பரிவர்த்தனைகள் நிகழ அனுமதி வேண்டும். கிழக்கு பாகிஸ்தானுக்குத் தனிப்படையை வைத்துக்கொள்ள அங்கீகாரம் வேண்டும் என 1966-ல் கொடுத்த கோஷங்களை மீண்டும் எழுப்பினார். கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் அவர் பின்னால் அணிவகுத்தார்கள். மேற்கு பாகிஸ்தானில் பூட்டோ களத்தில் இருந்தார்.

தேர்தல் முடிவுகள் வந்தன. யாரும் எதிர்பாராத வகையில் முஜிபுர் ரஹ்மானின் கட்சி கிழக்குப் பாகிஸ்தானில் 160/162 என்று வென்று இருந்தது. மேற்கு பாகிஸ்தானில் 81/138 என்கிற அளவிலேயே பூட்டோ கட்சி வென்றது. ஆட்சி அமைக்க முஜிபுர் உரிமை கோரினார். பூட்டோவுடன் இணைந்து ஆட்சி அமையுங்கள் என்று யாஹ்யா கான் அடம்பிடித்தார். சிந்தும், பஞ்சாபும் தங்களுடைய ஆதிக்கத்தை இழந்துவிடும், ஆகவே, முஜிபுரின் கட்சி தனித்து ஆட்சி அமைக்கக் கூடாது என்று பூட்டோ கிளம்பினார். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க தேசிய கவுன்சிலின் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று முஜிபுர் கோரினார். இவர்களுக்கு அதிகாரத்தைத் தரவேண்டுமா எனக் கடுப்பாக யாஹ்யா கான் பார்த்தார். ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார்.

ஆறு அம்ச திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முஜிபுர் உறுதியாக இருந்தார். தேசிய கவுன்சிலை காலவரையறை இல்லாமல் ஒத்தி வைத்தார் யாஹ்யா. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்துவது போலப் பாவனைச் செய்துகொண்டே, படைகளை ஆசீர்வதித்துக் கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார்கள். அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பிணங்கள் விழுந்தன. மொத்தமாக அப்பகுதியின் அமைதி குலைந்து போனது. அப்பகுதி மாணவர்கள் அமர் சோனா பங்களா (என் இனிய பொன் வங்கமே) எனும் தாகூரின் பாடலை தேசிய கீதம் என அறிவித்தார்கள். தனி நாடு என முழங்கினார்கள்.

முஜிபுர் தனி நாடு என்று எங்கேயும் உச்சரிக்கவில்லை. ராணுவச்சட்டத்தை நீக்கிவிட்டு, படைகளைத் திரும்பப் பெறுங்கள். ராணுவம் நடத்திய துப்பாக்கி சூடுகள் மீது விசாரணை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் அதிகாரத்தைக் கைமாற்றுவது ஆகிய கோரிக்கைகளை மட்டுமே அவர் வைத்தார். அது நிச்சயம் முடியாது என்று யாஹ்யா-பூட்டோ செயல்களால் சொன்னார்கள். ராணுவத்துக்கு இறங்கி ஆடுங்கள் என்று உத்தரவு தந்தார் யாஹ்யா. முஜிபுர் கைது செய்யப்பட்டார். படுகொலைகள், பாலியல் வன்முறைகள் அரங்கேற ஆரம்பித்தன.

பரவலாக இந்தியாவில் சொல்லப்படும் கதை, இந்திரா வங்கதேசத்தைக் கச்சிதமாகத் திட்டமிட்டு சாதித்தார் என்பதே ஆகும். ஆனால், வரலாறு வேறு வகையாக இருக்கிறது. இந்திரா பாகிஸ்தானில் பிரச்சனை ஆரம்பித்த பொழுது, தன்னுடைய கட்சியில் ஏற்பட்ட பிளவை சமாளிக்கப் போரடிக் கொண்டு இருந்தார். ‘வறுமையே வெளியேறு’ என்கிற கோஷத்தோடு அவர் மீண்டும் மிருக பலத்தோடு ஆட்சிக்கு வந்திருந்தார்.

வங்கதேசம் என்கிற நாடு உருவாக வேண்டாம் என்பதே முதலில் இந்தியாவின் கருத்தாக இருந்தது. தனியாக உருவாகும் வங்கதேசம் அப்படியே மேற்கு வங்காளத்தையும் சேர்த்துக்கொண்டால் என்னாவது என்பது முதல் கவலை. அடுத்து அசாம் வேறு கிளம்பலாம் என்பது அடுத்தக் கவலை. காஷ்மீர் உள்நாட்டு சிக்கல் என்று தொடர்ந்து அழுத்திச் சொல்லிவிட்டு, இப்பொழுது பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது எப்படி என்பது அடுத்தத் தலைவலி. நைஜீரியாவின் BIAFRA எனும் பிரிவினை இயக்கம் நடைபெற்ற பொழுது அரங்கேறிய இனப்படுகொலைகளை ஐநா கண்டுகொள்ளவில்லை.ஆகவே, தனி நாட்டை எல்லாம் எதற்கு உருவாக்கி தலைவலியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே இந்தியா நினைத்தது.

மேலும், இந்திய ராணுவத் தளபதி மானெக்ஷாவின் கூற்றுப்படி, ‘ஏதேனும் செய்யுங்கள் தளபதி. உடனே போர் தொடுங்கள். போர் ஆரம்பித்தாலும் கவலையில்லை.’ என்று இந்திரா கெஞ்சிக்கேட்டும் அவர் போகவில்லை. ஆனால், இது உண்மையில்லை என்று ஆவணங்கள் நிரூபிக்கின்றன. பாகிஸ்தான் ராணுவம் நவீனமயமாகி இருந்தது. 90-120 நாட்கள் இந்தியாவுடன் போர் செய்யும் அளவுக்கு அதனிடம் வலிமை இருப்பதாக இந்திராவிடம் அறிக்கை தரப்பட்டு இருந்தது. ‘ஆயுதங்களைக் குவித்துக்கொண்டு போரில் பருவமழைக்குப் பின்னர் இறங்கலாம். அப்பொழுது பனிக்காலம் என்பதால் இமயமலையைக் கடந்து சீனா வர முடியாது.’ முதலிய வாதங்களை மானெக்ஷா வைத்தததால் இந்திரா பின்வாங்கினார் என்று ராணுவத் தளபதி சொன்னாலும், இந்திராவோ, அரசின் அதிகார மையங்களோ போரில் குதிப்பதை பற்றி அப்பொழுது யோசிக்கவே இல்லை என்பதே உண்மை.

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் அகதிகள் என்கிற எண்ணிக்கையில் பல லட்சம் மக்கள் இந்தியாவிற்கு இனப்படுகொலையால் தஞ்சம் புகுந்தார்கள். அதிலும் இந்துக்களைக் குறிவைத்து தாக்குவது தொடர்ந்தது. வந்த அகதிகளில் 80% இந்துக்கள் என்பது இதனைத் தெளிவுபடுத்தும். ஆனால், இதை இப்பொழுது வெளிப்படுத்தினால் இதை ‘இந்து-முஸ்லீம்’ பிரச்சனையாகப் பாகிஸ்தான் மாற்றும் என்று இந்திரா உணர்ந்திருந்தார். வாஜ்பேயியை அழைத்து, இதை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். IDSA அமைப்பின் தலைவராக இருந்த சுப்பிரமணியம் உடனே இறங்கி அடித்தால், வெற்றி பெற்றுவிடலாம். ஒரு தனி நாட்டை உருவாக்கிவிடலாம் என்று அறிவுரை சொன்னார். யாரும் கேட்பதாக இல்லை.

இதற்குச் சற்று முன்பு தான் ரஷ்யா-சீனா உறவு உருக்குலைந்து இருந்தது. செக்கோஸ்லோவாக்கியாவில் ராணுவத்தைக் கொண்டு அரசை அடித்துத் துவம்சம் செய்த கையோடு சோவியத் ரஷ்யா ‘பிரெஷ்னேவ் சாசனம்’ என்று ஒன்றை அறிவித்தது. உலகில் எங்கெல்லாம் சோசியலிசம் சரியாக அமல்படுத்தப்படவில்லையோ அங்கெல்லாம் வந்து சரி செய்யும் பொறுப்பு எங்களுக்கு உண்டு. சீனாவுக்கு வியர்த்தது. உசுரி நதிக்கரையில் இருபடைகளும் மோதிக்கொண்டன. பலத்த சேதத்தை இரு தரப்பும் சந்தித்தன. மீண்டும் சில மோதல்கள். உறவு முறிந்து போனது.

அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகர் கிஸ்ஸிங்கர் அகமகிழ்ந்து போனார். யாஹ்யா கானை அழைத்துச் சீனாவுடன் உறவு ஏற்படுத்த உதவுமாறு கேட்டார். தூதுவராக யாஹ்யா சென்று /வந்தார். சீனா பொறுமையாகவே அடியெடுத்து வைத்தது. இன்னொருபுறம் அமெரிக்க அதிபர் நிக்ஸன் இந்தியாவிற்குப் பயணம் வந்து போனார். ‘செவ்வாய் கிரகத்துக்குச் சேர்ந்து போவோம்.’என்றெல்லாம் உற்சாகம் பொங்க பேசினார். ஆனால், 1965 போருக்குப் பின்னால் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு ஆயுத விநியோகம் கிடையாது என்கிற விதியை தற்காலிகமாகப் பாகிஸ்தானுக்கு மட்டும் தளர்த்தினார். சீனா லட்சியம்.

கிழக்குப் பாகிஸ்தானில் நிலைமை மோசமாகி இருந்தது. சட்டத்தைத் தூக்கிப்பிடித்து, மாகாண சுயாட்சியைத் தரவேண்டும் என்று முஜிபுர் தரப்புக் கேட்டாலும், மூன்றே கட்சிகள் தான் இனி இருக்கும். அவாமி லீக் தடைசெய்யப்பட்டது. முஜிபுர் பொதுவாழ்வில் ஈடுபட வாழ்நாள் தடை என்று அறிவித்தார் யாஹ்யா. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க என்று தானே ஒரு குழுவை வேறு நியமித்தார். கண் துடைப்பு என்று கிழக்குப் பாகிஸ்தான் மக்களுக்குத் தெரியும். ராணுவ டாங்கிகள் வெறியாட்டம் ஆடிக்கொண்டு இருந்தன.

ரஷ்யா-இந்தியா போட்டுக்கொண்ட இருபது ஆண்டுகால நட்புணர்வு, ஒத்துழைப்பு ஒப்பந்தம் தான் அமெரிக்கா-சீனாவை இந்தியா-பாகிஸ்தான் போரில் ஈடுபடாமல் தடுத்தது என்பது பரவலாகச் சொல்லப்படுவது. உண்மையில் நடந்தது இன்னும் சிக்கலானது. சோவியத் ரஷ்யா ஒரு தனி நாடு உருவாவதை விரும்பவில்லை. சீனாவின் ஆதிக்கத்தை அது அதிகப்படுத்தும் என்பது ஒரு கவலை. இரண்டாவது நீர்த்துப்போன பூர்ஷ்வாக்கள் என்றே வங்கதேசம் நாடி போராடியவர்களை அவர்கள் நம்பினார்கள். இவை அனைத்துக்கும் மேலாக அமெரிக்கா-ரஷ்யா இருவரும் இந்தச் சிக்கலை அணுகியதில் ஒரு முக்கிய வேறுபாடு இருந்தது. அமெரிக்கா இதைப் பனிப்போரின் நீட்சியாகக் கண்டது. ரஷ்யாவோ அகதிகள் சிக்கல் தனி, பாகிஸ்தானின் அரசியல் சிக்கல் தனி என்று பிரித்துப் பார்த்தது.

இந்தியாவுடன் அந்த ஒப்பந்தத்தைப் போட்டுக்கொள்ளலாம் என்று வெகுகாலமாக ரஷ்யா கேட்டது. எனினும், உள்நாட்டில் நிலைமை தனக்குச் சாதகமாக இல்லாத சூழலில் அதனை அப்பொழுதைக்குச் செய்ய இந்திரா மறுத்தார். கிஸ்ஸிங்கர், ‘இந்தியா பாகிஸ்தான் மீது பாய்ந்தால் சீனா அதன் உதவிக்கு வரும்.’ என்று இந்திய தூதுவர் L.K.ஜாவை எச்சரித்தார். அவ்வளவு தான். வெகுகாலமாக இழுத்தடித்து ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து போட்டது.

 

Image result for indira mujib bhutto

பாகிஸ்தானில் பத்திரிக்கையாளராக இருந்த அந்தோணி மாஸிகரென்ஸ் கிழக்கு பாகிஸ்தானுக்குச் சென்று பார்த்த பொழுது பத்து நாட்களில் எப்படிப்பட்ட இனப்படுகொலை நடக்கிறது என உணர்ந்து /கொண்டார். தன்னுடைய நாட்டை விட்டு குடும்பத்தோடு வெளியேறினார். லண்டனின் ‘சண்டே டைம்ஸ்’ இதழில் இனப்படுகொலை என்கிற தலைப்பில் 5000 வார்த்தைகளில் அவர் எழுதிய கட்டுரை பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இங்கிலாந்து, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகளில் அம்மக்களுக்கு அனுதாபம் பெருகியது.

Image result for 1971 war
மோசமான பொருளாதாரச் சிக்கலில் பாகிஸ்தான் சிக்கியிருந்தது. தரவேண்டிய கடன்கள் கழுத்தை நெரித்தன. பொன்முட்டை கிழக்குப் பாகிஸ்தான் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருந்தது. உலகம் முழுக்க இருந்த வங்காளிகளைப் பணம் அனுப்ப வேண்டாம் என்று போராளிகள் கேட்டுக்கொண்டது வேறு பெரிய சேதத்தை உண்டு செய்தது. அமெரிக்கா நான் இருக்கிறேன் என்று நிதியுதவி செய்தது. சீனா மசிந்து கொடுத்து விடாதா என்று ஓரமாக வேறு கவனித்துக் கொண்டிருந்தது. சீனா என்ன தான் நினைத்துக் கொண்டிருந்தது?

சீனப்போருக்கு பின்னரும் இந்திய-சீன உறவினில் சிக்கல்கள் தொடர்ந்தன. எல்லையில் சமயங்களில் மோதிக்கொண்டன. சீனா உறவை சீர் செய்யலாம் என முயன்ற பொழுது இந்திரா அதற்கு ஒப்பவில்லை. இன்னமும் சீன வெறுப்பு உச்சத்தில் உள்ளது என உணர்ந்திருந்தார். எனினும் தொடர்ந்து சீனாவுடன் இந்தியா தொடர்பில் இருந்தது. சீனா பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீரின் கில்கிட் பகுதியில் சாலையை அமைத்த பொழுதும் இந்தியா பெரிதாக எதிர்க்கவில்லை.

சீனா பற்றியெரிந்த கிழக்குப் பாகிஸ்தான் சிக்கலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. காரணங்கள் பல. ரஷ்யாவை போலவே சீனாவும் வங்கப்போராளிகளைப் பூர்ஷ்வாக்கள் என எண்ணியது. சீன பாகிஸ்தான் உறவின் முதல் விதையைப் போட்டது சுஹ்ரவர்த்தி எனும் கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரதமர். அப்பகுதியில் பலர் சீன அனுதாபிகளாக இருந்தார்கள். மேலும் 2 சீன ஆதரவு கட்சிகள் கிழக்குப் பாகிஸ்தானில் செயல்பட்டன. உள்நாட்டுப்போர் தன் ஆதரவாளர்களை அழித்து ஒழிப்பதையும் சீனா கண்டது. சீனா நேரடியாகக் களத்தில் இறங்கவோ, பெரிதாகவோ மிரட்டவில்லை. காரணம் மாவோ!

கலாச்சாரப் புரட்சியின் என்கிற பெயரில் பல லட்சம் சீனர்கள் இறக்க காரணமானார் மாவோ. கட்சி, அரசு ஆகியவற்றுக்கு எதிராக ராணுவத்தைக் களமிறக்கியதன் மூலம் ராணுவம் நாட்டில் முதன்மையானது என்கிற நிலையை உண்டாக்கினார். அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வரவிருப்பது லின் பியாவோ எனும் ராணுவ தளபதி எனக் கருதப்பட்டது. மாவோவிற்கு அரிப்பெடுத்தது. தன் நாற்காலி ஆட்டம் காண்பதாக உணர்ந்தார். லின் பியாவோவை எப்படியேனும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று காய்கள் நகர்த்தினார். அவரோ அசராமல் அரசுக்கு நேர்மையாக இருப்பதாகக் காட்டிக்கொண்டார். அவரின் மகன் அவசரப்பட்டு ஒரு கிளர்ச்சியை நடத்த முயன்றார். மாவோ அனைவரையும் ஒழித்துக்கட்ட கிளம்பினார். லின் பியாவோ தப்பித்து ஓட வேண்டியதாயிற்று. ராணுவத்தின் பெருந்தலைகள ஒழித்துக் கட்டிவிட்டு பெருமூச்சு விட்டார் மாவோ. அதே காலத்தில் தான் பாகிஸ்தான் உள்நாட்டுப்போரில் தள்ளாடிக்கொண்டு இருந்தது.

 

Image result for srinath raghavan bangladesh

இந்தியா கொரில்லா போர் முறையைப் போராளிகளுக்கு அளித்துக் கொண்டிருந்தது. முக்தி பாஹினி, முஜிப் வாஹினி என இடதுசாரிகளைக் கொண்ட படை எனப் பிரிந்து கிடந்த பல்வேறு குழுக்களுக்குப் பயிற்சி அளித்தது. எனினும் அது போதுமானதாக இல்லை. ஒரு கோடிக்கும் மேல் அகதிகள் இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்திருந்தார்கள். எவ்வளவு தான் தாங்குவது? என இந்தியா உலக நாடுகளிடம் கேட்டது. ஐநா சில எச்சரிக்கை, கொஞ்சம் களப்பணி என்பதோடு நின்று கொண்டது. இரு வல்லரசுகளும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தன.

இந்தியா தன்னுடைய வீரர்களைச் சத்தமே இல்லாமல் போராளிகள் இடையே கலந்து மறைமுகப் போரை நடத்திக்கொண்டு இருந்தது. பாகிஸ்தான் மேற்கு பக்கமிருந்து இந்தியாவைத் தாக்கியது. ஒரு பெண் ஆளும் தேசம் தானே எனக் கொக்கரித்தார்கள். ‘CRUSH INDIA’எனக் கார்களில் அணிந்து கொண்டு திரிந்தார்கள். ஒரு முஸ்லீம் பத்து இந்தியர்களுக்குச் சமம் என நம்பினார்கள்.

போர் துவங்கியது என இந்தியா அறிவித்தது. மேற்கு எல்லையைக் காத்துக்கொண்டு கிழக்கில் படைகள் முன்னேறின.சிட்டகாங், குல்னா முதலிய துறைமுகங்களைக் கைப்பற்றுவது; முக்கிய நதி வழித்தடங்கள், விமானத் தளங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றுவது; நெல்லிக்காய் மூட்டையைக் கலைப்பது போலப் பாகிஸ்தான் வீரர்களைப் பிரித்து நசுக்குவது எனத் திட்டம் வகுக்கப்பட்டது. எனினும் டாக்காவை கைப்பற்றும் திட்டமில்லை. பத்மா, ஜமுனா, மேக்னா என ஏதேனும் ஒரு நதியை கடந்தாக வேண்டிய பெரும் சவால் இருந்தது. முடிந்தவரை பகுதிகளைக் கைப்பற்றி அங்கே தற்காலிக அரசை கொண்டுவருவது என்பதே இந்தியாவின் திட்டமாக இருந்தது. எனினும் ஒரு வித்தியாசமான வெற்றிக் காத்திருந்தது.

ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா, இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்த வேண்டும்; தங்களின் பகுதிகளுக்குத் திரும்ப வேண்டும்; அரசியல் தீர்வு நோக்கி நகர வேண்டும் எனத் தீர்மானம் கொண்டு வந்தது. சாரம் இந்தியாவிற்கு இதிலென்ன வேலை. ரஷ்யா வீட்டோ மூலம் தடுத்தது. பொதுச் சபையில் 104-11 எனத் தீர்மானம் நிறைவேறி இந்தியா அழுத்தத்துக்கு ஆளானது.

அமெரிக்கா கொதித்தது. சீனா களமிறங்க வேண்டும் எனத் தூண்டி விட்டார்கள். வாயை மட்டும் மென்றது சீனா. ஆயுதங்களை அமெரிக்கா நேரடியாகக் கொடுக்கத் தடையிருந்தபடியால் ஈரான் ஜோர்டான் மூலம் முயன்றது. ரஷ்யாவுக்குப் பயந்து கொண்டு ஈரான் நேரடியாக ஆயுதங்கள் அனுப்ப மறுத்தது.

‘சீக்கிரம் முடித்துத் தொலையுங்கள்’ என இந்தியாவிடம் சோவியத் ரஷ்யா சொன்னது. அமெரிக்கா தன்னுடைய மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை இந்தியப்பெருங்கடல் பகுதிக்கு அனுப்பியது. இந்தியப்படைகளுக்கு உத்வேகம் தரும் வகையில் ஒன்று நடந்தது.

 

Image result for 1971 war

கிழக்குப் பாகிஸ்தானில் போராடிக் கொண்டிருந்த பாகிஸ்தான் படைகளின் மேஜர் ஜெனரல் ராவ் ஃபர்மான் அலி கான் ஒரு கோரிக்கை கடிதம் எழுதினார். உடனே போர் நிறுத்தம், 72 மணிநேர பரஸ்பர அமைதி, ராணுவ வீரர்கள், மக்கள் ஆகியோரை அவரவரின் பகுதிகளுக்கு அனுப்ப அனுமதிப்பது, பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக எந்தத் தண்டனையும் அளிக்கப்படக்கூடாது என நீண்ட அதன் செய்தி- ‘தோல்வியின் விளிம்பில் பாகிஸ்தான்!’. யாஹ்யா கான் அதைக் கிழித்துப் போட்டாலும் வீடு கலகலத்து விட்டது.

டாக்கா நோக்கி இந்தியப்படைகள் விரைந்தன. போலந்து போரை நிறுத்தவும் எனத் தீர்மானம் கொண்டு வந்தது. சோவியத் ரஷ்யாவின் நட்பு நாடு அது. செய்தி இந்தியா முடித்துக் கொள்ளவும் என்பதே அது. பிரிட்டன் பிரான்ஸ் என இந்திய ஆதரவுப்போக்கு நாடுகளும் தீர்மானம் கொண்டு வந்தன. போலந்து தீர்மானத்தில் முஜிபுர் ரஹ்மான் உடன் தான் பேச்சுவார்த்தை எனும் அறிவுறுத்தல் வரைவில் இருந்தாலும் இறுதி வடிவில் இல்லாமல் போயிருந்தது. இந்தியாவிற்கு வேலையில்லை, வங்கதேசம் கனவு என்பது செய்தி.

 

Image result for indira mujib bhutto

போலந்து தீர்மானத்தை ஏற்கவும் என யாஹ்யா ஐநாவில் இருந்த பூட்டோவுக்குத் தொலைபேசியில் உத்தரவிட்டார். ‘ஹலோ என்ன கேக்கலையே’ என மழுப்பினார் பூட்டோ. ‘தெளிவாகக் கேட்கிறது’ என்ற ஆபரேட்டரை வாயை மூடும்படி பூட்டோ சொன்னார். போலந்து தீர்மானத்தைக் கிழித்துப் போட்டார். 93000 பாகிஸ்தான் படைவீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர். பூட்டோவுக்கு ராணுவம் வலுவிழந்து தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான காய் நகர்த்தலை முடித்த திருப்தி. வங்கதேசம் உருவானது.

அமெரிக்கா இந்தியாவிடம் சீனா உதவிக்கு வரும் எனப் பொய் சொல்லாமல் போயிருந்தால் இந்தியா ரஷ்யாவோடு ஒப்பந்தம் செய்திருக்காது. சீனாவின் உள்நாட்டுக் குழப்பம் தடுத்திருக்காவிட்டால், அமெரிக்கா பாகிஸ்தானை திவாலாகாமல் காத்திருக்காவிட்டால், போலந்து தீர்மானத்தைப் பூட்டோ கிழிக்காமல் இருந்திருந்தால் வங்கதேசம் உருவாகியிருக்காது.

ஊழல், செயல்திறமின்மை முஜிபுர் ரஹ்மான் ஆட்சியில் மிகுந்து போராட்டங்கள் வெடித்தன. அவசரநிலையைக் கொண்டு வந்தார். குடும்பத்தோடு ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியா சுப்ரமணியம் சொன்னதைப்போல முதலிலேயே போரில் அடித்து ஆடியிருந்தால் பல லட்சம் மக்கள் இறந்திருக்க மாட்டார்கள். ராணுவம், அரசியல்வாதிகள், இடதுசாரிகள், கட்சிகள் இடையே அவநம்பிக்கை மிகுந்திருக்காது. நாடு விடுதலைக்குப் பின்பு அப்படி அவலங்களைச் சந்திருக்காது. வங்கதேச உருவாக்கம் இந்திராவின் மகத்தான ராணுவ வெற்றி, மிக மோசமான ராஜதந்திர தோல்வி.

 

Image result for srinath raghavan

 


1971 A GLOBAL HISTORY OF CREATION OF BANGLADESH
ஶ்ரீநாத் ராகவன்
பக்கங்கள் 358
விலை 599
PERMANENT BLACK

நீட் தேர்வு சவால்களும், பயிற்றுமொழி சிக்கல்களும்


நீட் தேர்வு சவால்களும், பயிற்றுமொழி சிக்கல்களும் குறித்த அகரம் அறக்கட்டளை வெளியீட்டை படித்து முடித்தேன். பேராசிரியர். பிரபா கல்விமணி பல்வேறு ஆளுமைகள் எழுதிய நீட் குறித்த கட்டுரைகளையும், பயிற்றுமொழி சார்ந்த விவாதங்களையும் தொகுத்து இருக்கிறார்.

நீட் சார்ந்து நம் முன்வைக்கப்படும் விவாதங்களுக்குள் போவதற்கு முன்னால் மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டின் வரலாற்றை நீதியரசர் சந்துரு தொட்டுக் காண்பிக்கிறார். இந்தியா குடியரசு ஆனதற்குப் பிந்தைய முதல் அரசமைப்பு சட்ட சிக்கலே மருத்துவக் கல்வியின் அடிப்படையில் தான் எழுந்தது. மருத்துக்கல்விக்கே விண்ணப்பிக்காத சம்பகம் துரைராஜன் எனும் பெண்மணி தமிழகத்தில் உள்ள COMMUNAL G.O எனப்படும் இட வகுப்புவாரி இட ஒதுக்கீட்டால் தனக்குரிய நியாயமான இடம் மறுக்கப்படுவதாக நீதிமன்ற படியேறினார். அந்த வழக்கை நடத்தியவர் அரசமைப்பு சட்ட உருவாக்கத்தில் பங்குகொண்ட அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். உச்சநீதிமன்றம் தமிழகத்தின் இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு தந்ததற்குப் பின்னால் எழுந்த போராட்டங்களால் முதல் அரசமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது.

 

Image result for நீட்

தமிழகத்தில் படிப்படியாக இட ஒதுக்கீடு அளவு உயர்த்தப்பட்டுத் தற்போது 69% என்கிற அளவில் உள்ளது. இந்திரா சகானி வழக்குக்குப் பின்னால் 50% தான் இடஒதுக்கீடு தரமுடியும் என்று உச்சநீதிமன்றம் சொன்னதால் தமிழகத்தின் இட ஒதுக்கீட்டு முறை உச்சநீதிமன்றத்தில் கேள்விக்கு உள்ளானது. 1993-ல் தனிச்சட்டம் இயற்றி அதை ஒன்பதாவது அட்டவணையில் வைத்தாலும் தமிழகத்தின் இட ஒதுக்கீடு செல்லுமா எனும் வழக்கு 22 வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டப்படி மருத்துவக் கல்லூரியில் இடங்களை மத்திய அரசே பிரிவு 10A ன் படி அதிகரிக்க முடியும். உச்சநீதிமன்றம் 69% இட ஒதுக்கீட்டில் பாதிக்கப்படும் மாணவர்களுக்குத் தன்னிச்சையாகக் கூடுதல் இடங்களை இடைக்கால உத்தரவின் மூலம் வழங்கி கொண்டு இருக்கிறது.

கோத்தாரி கமிஷன் முதலிய பல்வேறு கல்வி சார்ந்த குழுக்கள் மத்திய அரசு மாநிலப்பட்டியலில் இருக்கும் கல்வியில் தலையிடக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தன. இவற்றுக்கு மாறாக இந்திரா காந்தி நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த பொழுது கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

தமிழகத்தில் எழுபதுகளுக்கு முன்புவரை மண்டலம், மாவட்டம் என்று பலவகையில் பிரித்து நேர்முகங்கள் முறையின்றி நடத்தப்பட்டுக் கண்டபடி இடங்கள் வழங்கப்பட்டன. இவற்றை எதிர்த்து ராஜேந்திரன், பெரியகருப்பன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளால் அம்முறை நீக்கப்பட்டது.

எண்பத்தி நான்கில் இருந்து தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகளின் மூலம் மட்டும் மருத்துவக்கல்வியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டார். 1996-ல் கிராமப்புற மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இவை பயன் தந்திருக்க வேண்டும், எனினும், நாமக்கல் முதலிய பல்வேறு மாவட்டங்களில் ஊரகப்பகுதிகளில் பள்ளிகளைத் துவங்கி கோழிப்பண்ணை பள்ளிகள் மருத்துவ இடங்களை அள்ளின. அதிமுக அரசு இந்த இட ஒதுக்கீட்டை 25% அளவுக்குக் கொண்டு சென்றது. உச்சநீதிமன்றம் இது செல்லாது என்றுவிட்டது.

நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களை மருத்துவ, பொறியியல் படிப்பில் சேரவிடாமல் தடுக்கிறது என்று சொல்லி தமிழக அரசு அதனை நீக்கியது. (2005) ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் நடந்த சட்டப்போராட்டத்துக்குப் பின்னால் தமிழக அரசின் முடிவை உச்சநீதிமன்றம் செல்லும் என்றது.

 

Image result for பிரபா கல்விமணி

இப்பொழுது உண்மையில் தமிழ்வழிக்கல்வியில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் இதனால் பயன்பெறுகிறார்களா என்கிற கேள்வியை எடுத்துக் கொள்வோம். கடந்த எட்டு ஆண்டுகளின் தரவு இது. கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவப் படிப்பிற்கான 29,225 எம்.பி.பி.எஸ் இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது 0.9%. ஆக, ஆங்கிலவழிக் கல்வி மாணவர்களே பெரும்பாலான இடங்களை அள்ளுகிறார்கள் என்பது தெளிவு.

பதினொன்றாம் வகுப்பிலேயே பன்னிரெண்டாம் வகுப்புப் பாடங்கள் பெரும்பாலான ஆங்கிலவழிக் கல்வி பள்ளிகளில் நடத்தப்படுகின்றன. பல்வேறு அரசியல்வாதிகளே இப்படிப்பட்ட பள்ளிகளை நடத்துபவர்களாக உள்ளார்கள். தமிழகத்தில் 42% பிள்ளைகள் ஆங்கிலவழிக் கல்வியில் படிக்கிறார்கள். மருத்துவக் கல்வியை மாநில அரசுகளிடம் விட்டிருந்த பொழுது எண்ணற்ற முதலாளிகளுக்கு இடங்களை வாரியிறைக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு மருத்துவக் கவுன்சில் உருவாக்கப்பட்டது. ஆள் மாறினார், காட்சி மாறவில்லை என்று சுயநிதி கல்லூரிகளின் அட்டூழியம் தொடரவே செய்தது. பல லட்சம் ரூபாய்களைக் கட்டணமாக அவை வசூலித்தன. இவற்றை எதிர்த்து உச்சநீதிமன்ற படியேறியவர்களுக்கு ஆறுதல் தருவது போல நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையிலான அமர்வு 50% இடங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணம், மதிப்பெண் அடிப்படையிலான இடம், மீதத்துக்குத் தங்களுடைய விருப்பப்படி இடங்களைத் தருவது என்று தீர்ப்புத் தந்தது.

டி.எம்.ஏ.பை வழக்கில் 11 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு உன்னிகிருஷ்ணன் வழக்கு வழங்கிய தீர்ப்பை ஒன்றுமில்லாமல் செய்தது. தனியார் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் தாங்களே நுழைவுத் தேர்வு நடத்தியும், விரும்பியபடியும் ஆட்களைச் சேர்க்கலாம் என்று தீர்ப்பு வந்தது. இதனால் பணம் அதிகம் தருபவர்களுக்கு இடங்கள் வாரியிறைக்கப்பட்டன.

இவற்றைச் சரி செய்யும் முயற்சி என்று சொல்லி NEET எனும் தேர்வு கொண்டுவரப்பட்டது. இதன்படி ஒரு குறிப்பிட்ட அளவு குறைந்தபட்ச மதிப்பெண்களை இத்தேர்வில் மாணவர்கள் பெறவேண்டும். OC-50%, OBC-40% என்று நிர்ணயிக்கப்பட்ட இந்த மதிப்பெண்களைக் கடக்கும் மாணவர்களுக்குத் தரப்பட்டியல் அடிப்படையில் அந்தந்த மாநில இட ஒதுக்கீட்டின்படி 85% இடங்களை நிரப்பிக் கொள்ளலாம். தாய்மொழியில் படித்த மாணவர்கள் தேர்வினை ஆங்கிலம், இந்தியில் எதிர்கொள்வது சாத்தியமில்லை என்று சொல்லப்பட்ட பின்பு தமிழ் முதலிய எட்டு மொழிகளிலும் வினாத்தாள் தரப்படும் என்று உறுதி தரப்பட்டது. நீட் தேர்வில் இருந்து ஒரு வருட விலக்கை மாநிலங்கள் நடத்தும் அரசுக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அவசர சட்டத்தின் மூலம் வழங்கியது.

வரும் ஆண்டு முதல் எல்லாக் கல்லூரிகளும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர்களைச் சேர்க்க வேண்டும். தனியார் கல்லூரிகளும் மாணவர்களை நீட் தேர்வின் மூலமே சேர்க்க வேண்டும் எனப்படுகிறது. ஆனால், இங்கேதான் ஒரு மிக முக்கியமான சவால் இருக்கிறது. பை வழக்கின் தீர்ப்பில் தரப்பட்ட தனியார் கல்லூரிகளுக்கான உரிமைகள் பெரும்பாலும் திரும்பப்பெறப் படவில்லை. நீட் தேர்வு மதிப்பெண்களின் தேறிய மாணவர்களைச் சேர்க்கிறார்கள் என்பது உறுதி என்றாலும், அதை மட்டுமே கொண்டு அவர்கள் சேர்ப்பார்களா என்பது கேள்விக்குறி. நீட் மதிப்பெண்கள் பெட்ரா மாணவர்களில் யார் அதிகப் பணம் கொடுக்கிறார்களோ அவர்களை 50% இடங்களில் சேர்த்துக்கொள்ள முடியும். இதைத் தடை செய்தால் உச்சநீதிமன்றம் எப்படி எதிர்வினை ஆற்றும் என்று தெரியாது.

இந்த நூலில் ஆங்கிலவழிக் கல்வி என்கிற பெயரில் தமிழகம் கண்டுள்ள பெரும் வீழ்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்திய அளவில் நடக்கும் பெரும்பான்மை நுழைவுத்தேர்வில் மிக மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். AIIMS தேர்வில் வெறும் ஆறு தமிழக மாணவர்களே தேர்ச்சி பெற்றார்கள் என்று பதிவு செய்கிறார்கள். தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி இடங்கள் ஒப்பீட்டு அளவில் நிறைய என்பதாலும், AIIMS தேர்வு பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாததாலும் பல மாணவர்கள் அத்தேர்வுகளை எடுக்காமல் போயிருக்கும் வாய்ப்பை கட்டுரை கருத்தில் கொள்ள மறுக்கிறது. அதேசமயம், சிபிஎஸ்ஈ பாடத்திட்டத்தில் கேள்விகள் கேட்கப்படுவது மாநில பாடத் திட்ட மாணவர்களுக்குக் கேடு என்பவர்கள் மாநில அரசின் பாடத்திட்டம் 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருப்பதை மறைக்கிறார்கள்.

பல்வேறு அரசுப்பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்களே இல்லை, நீட் தேர்வில் கோரப்படும் +1, +2 பாட அறிவுக்கு நாமக்கல் கோழிப்பண்ணை பள்ளிகள் தயாராவது சவாலான ஒன்று என்பதை நூல் சுட்டுகிறது. ஆந்திராவை பாருங்கள், கேரளாவை பாருங்கள் அவர்கள் எத்தனை இடங்களை அள்ளுகிறார்கள் அந்தக் கல்வித்தரம் மேம்பட்டது என்று நூலில் கொதிப்புத் தென்படுகிறது. ஒரு மிக முக்கியமான சிக்கலை இந்த நூல் தவற விடுகிறது. ஆந்திராவில் பொருளாதார அறிஞர் ஹரீஷ் தாமோதரன் சுட்டிக்காட்டுவதைப் போலப் பல்லாயிரம் கோடி நுழைவுத்தேர்வு பிசினஸ் கொடிகட்டி பறக்கிறது. கேரளாவும் மருத்துவ நுழைவுத் தேர்வில் அதனையே செய்கிறது. இப்படி நுழைவுத் தேர்வு தொழிற்சாலைகள் தமிழகத்தில் கல்லா கட்டும் வாய்ப்பு நீட் தேர்வால் ஏற்பட்டு இருக்கிறது. சுயநிதி பூதத்தில் இருந்து தப்பிப்பதாகக் காட்டிக்கொண்டு நுழைவுத்தேர்வு கொள்ளைக்காரர்கள் கடைபரப்புவது பேசப்படவே இல்லை.

தமிழகம் முழுக்கத் தனியார்மயமாக்கப்பட்ட கல்வியின் தரம் மிகவும் மோசமானதாக உள்ளது. அரசுப்பள்ளிகளும் மிக மோசமான கல்வியை வழங்குகின்றன. தற்போது நீட் தேர்வுகளில் ஆங்கில வழிக்கல்வி மாணவர்கள் பெற்ற இடங்களை CBSE பாடப்பிரிவில் பயின்ற மாணவர்கள் பெறுவார்கள். இல்லையேல் நுழைவுத்தேர்வுக்குக் காசு கட்டிப் படிக்கும் திராணி உள்ளவர்கள் தேறுவார்கள்.

Image result for நீட் தேர்வு

நீட் இப்பொழுதைய யதார்த்தம். நீட் தேர்வில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் நன்றாகச் செயல்படத் தனிப்பயிற்சிகளைத் தமிழக அரசு வழங்கலாம். மேலும், தமிழகத்தின் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது, தகுதியான ஆசிரியர், ஒழுங்கான கட்டமைப்பு, கற்றல் முறைகளில் கொண்டுவரப்பட்டு இருக்கும் CCE முதலிய மாற்றங்களைப் பெருமளவில் முன்னெடுப்பது என்று சவால்கள் ஏராளம். பயிற்றுமொழியாகத் தமிழை மேற்படிப்பில் கொண்டுவருவதை நோக்கி முழுமையான முன்னெடுப்புகள் தேவை என்று நூல் வாதிடுகிறது. பொறியியல் கல்வியைத் தமிழ்வழிப்படுத்தி என்ன பாடுபடுத்தினார்கள் என்பதை உணர்ந்தவன் என்கிற முறையில் நான் கவலையோடு தான் இதைப் பார்க்கிறேன். நீட் தேர்வால் மீண்டும் ஆங்கிலவழிக் கல்வி கற்கும் மாணவர்களே பெரும்பாலும் பயன்பெறுவார்கள். இட ஒதுக்கீடு சார்ந்தும் ஆழமான மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பணமுள்ளவர்களே இந்திய கல்வி முறையில் பெரும்பாலும் முந்தமுடியும் என்கிற அறையும் நிஜம் இந்த நூலின் மூலம் கடத்தப்படுகிறது.

நீட் தேர்வும் பயிற்றுமொழி சிக்கல்களும்
அகரம் அறக்கட்டளை வெளியீடு
விலை: 50
பக்கங்கள்: 104

காந்தியும், ராணுவமும்:


ராஜ்மோகன் காந்தியின் ‘FOUNDING FATHERS’ எனும் நூல் காந்தி, நேரு, அம்பேத்கர், படேல், போஸ் எனும் இந்தியாவின் மகத்தான தலைவர்கள் குறித்த பல்வேறு கேள்விகள், அவதூறுகள், சந்தேகங்கள் சார்ந்த தெளிவை தர முயல்கிறது. இதில் குறிப்பிட்ட சில தலைப்புகள் குறித்து மட்டும் இரு பாகங்களாக எழுத உள்ளேன்.
இந்த நூலின் முதல் பாகம் இரு முக்கியமான கேள்விகளை எடுத்துக் கொள்கிறது. காந்தியால் தான் இந்தியா சீனப்போரில் தோற்றது என்பது முதல் வாதம். இரண்டாவது காந்தி பிரிவினைக் காலத்தில் இஸ்லாமின் பெயரால் நடத்தப்பட்ட வன்முறையைச் சரியாக விமர்சிக்காமல் இருந்தார் என்பது இரண்டாவது வாதம். இவை இரண்டும் ஒரு சாதுவால் முன்வைக்கப்பட்டவை.
காந்தி எப்படி அகிம்சை முறையில் போராட வேண்டும் என்று சொல்லித் தந்தார். ஆனால், அவர் எப்படித் திருப்பித் தாக்குவது எனச் சொல்லித்தரவில்லை. மேலும், ஒரு ராணுவ வீரன் ‘போரில் எதிராளியைக் கொல்வது பாவம், அதனால் காற்றில் சுட்டேன்.’ என்று சீனப்போர் அனுபவத்தை அந்தச் சாதுவிடம் சொல்கிறான். காந்தியால் வந்த வினை தானே இது என்று அவர் ராஜ்மோகன் காந்தியிடம் கேட்கிறார்.
ப்ரூக்ஸ்-பகத் அறிக்கை இந்தியா சீனப்போரில் தோற்றதற்கான காரணங்களை விவரிக்கிறது. அதில் இந்தியா தன்னுடைய ராணுவ வலிமையைப் பெருக்காதது, உளவுத்துறை சீனா தன்னுடைய பகுதிகள் என்று சொன்னவற்றை நோக்கி முன்னேறினால் ஒன்றும் செய்யாது என்கிற ஐ.பி.யின் தவறான கணிப்பு ஆகியவற்றால் தான் இந்தியா தோற்றது என்கிறது.
காந்தி தன்னுடைய வாழ்நாளில் எப்பொழுதும் ராணுவம் வேண்டாம் என்று சொன்னதில்லை. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஆக்கிரமிப்பாளர்கள் காஷ்மீரில் நுழைந்த பொழுது இந்திய ராணுவத்தை விமானத்தில் அனுப்பியதை மனதார ஆதரித்தவர் அவர். ‘ராணுவம் ஒரு தேசத்தின் வலிமையின் அளவுகோல் இல்லை’ என்பது அவரின் கருத்தாக இருந்தது. 6-7-1947 –ல் இந்தியா பாகிஸ்தான் ஒருவரை இன்னொருவர் தாக்குவார் என்று அஞ்சிக்கொண்டு ராணுவத்துக்கு மட்டுமே செலவழித்துக் கொண்டிருந்து கல்வி முதலிய அடிப்படைத் தேவைகளைக் கோட்டை விட்டுவிடக் கூடாது என்று காந்தி பேசியிருந்தார்.

அதே சமயம், பிரிவினையால் டெல்லியில் கலவரங்கள் மிகுந்த பொழுது ஆர்.எஸ்.எஸ் முதலிய பல்வேறு குழுக்களைச் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று காந்தி கேட்டுக் கொண்டார். அதே சமயம், காவல்துறை அதைக் கவனித்துக் கொள்ளும் என்றே காந்தி சொன்னார்.
1899, 1906 வருடங்களில் ஆங்கிலேய அரசு தென் ஆப்ரிக்காவில் நிகழ்த்திய போர்களில் ஆம்புலன்ஸ் சேவை பிரிவுகளில் காந்தி இயங்கியிருக்கிறார். முதலாம் உலகப்போர் சமயத்தில் குஜராத்தின் கேடா பகுதியில் அவர் ஆங்கிலேய ராணுவத்துக்கு ஆள் திரட்டினார். முழு அமைதி விரும்பி என்று காந்தியை எண்ணுவது முட்டாள்தனம். வன்முறையால், அச்சத்தோடு அதைக் கையாள்வதன் மூலம் ஆங்கிலேய அரசை அசைத்துப் பார்க்க முடியாது என்கிற புரிதல் காந்திக்கு இருந்தது.

Image result for founding fathers rajmohan

19௦9-ல் வெவ்வேறு சம்பவங்களில் ஆங்கிலேய அதிகாரிகள் இந்தியர்களால் கொல்லப்பட்டார்கள். காந்தி இந்தப் படுகொலைகளைக் கடுமையாகக் கண்டித்தார். “நாம் எப்படிப்பட்ட ஆட்சியை விரும்புகிறோம்? ஆங்கிலேயர்களின் ஒடுக்குமுறை மிகுந்த ஆட்சிக்குப் பதிலாக இன்னொரு கொலைகாரர்களின் ஆட்சியை நோக்கி பயணிக்கிறோமா? கருப்போ, வெள்ளையோ கொலைகாரர்களின் ஆட்சியால் எந்தப் பயனும் இல்லை. சுயாட்சி என்பது கொலைகாரர்களை மாற்றுகிற ஒன்று அல்ல.’ என்று கடுமையாகக் காந்தி சாடி எழுதினார். ஆழமான புரிதல்கள் இல்லாத ஆயுதம் ஏந்தல் ஆபத்தானது என்பதே அவரின் புரிதல்.

பகத் சிங்கும், அவரின் தோழர்களும் ஆயுதமேந்தி போராடிய பொழுது, ‘அவர்களுடைய வீரம், தியாகம் ஆகியவற்றின் முன்னால் ஒருவர் தலைவணங்குவர். அர்கே சமயம், ஆயுதம் ஏந்தி போராடுவது வறுமையிலும், தெளிவான வழியும், புரிதலும் இல்லாத இந்நாட்டின் நொறுங்கிப் போன, அறிவற்ற மக்களை விடுவிக்குமா? ..ஒருவருக்கொருவர் கொன்று கொல்வது தான் நீதி பரிபாலனம் என்று எண்ணுகிறோமா?” என்று நவஜீவன் இதழில் காந்தி கண்டித்தார்.

காந்தி ராணுவத்துக்கோ, ஆயுதத்துக்கோ எதிரியில்ல. அரசுகள் பற்றியும், அவற்றின் ஒடுக்குமுறையும் பற்றியும் ஆழமான புரிதல் கொண்டவரே அவர். எனினும், வன்முறையைக் கையில் ஏந்துகிற பொழுது அரசுகள் அதை எளிதில் ஒடுக்குகிற வலிமையைப் பெற்று இருப்பதையும், வன்முறை உரையாடலுக்கான. உண்மையான மாற்றத்துக்கான திறப்பை அடைத்து விடுவதையும் உணர்ந்தவராக அவர் இருந்தார்.

அண்ணா குறித்து ஒரு விவாதம்


அண்ணா குறித்து ஒரு விவாதம். அண்ணன் அரவிந்தன் கண்ணையன் அண்ணா குறித்த எனது ஆங்கிலப் பதிவில் சில கேள்விகளை எழுப்பினார். என்னளவில் பதில் தந்தேன். அந்த கேள்வி-பதில்கள் இவை:

1. 1967 திமுக வெற்றியில் எம்ஜியாரின் பங்கு என்ன? அவர் மருத்துவமனையில் கழுத்தில் மாவுக்கட்டுடன் இருந்தப் புகைப்படத்தை வைத்தே திமுக பெரு வெற்றியை சம்பாதித்தது.

அண்ணாவின் வீச்சு எம்ஜிஆரையும் கடந்த ஒன்று. காமராஜர் தலைவர், அண்ணா வழிகாட்டி என எம்ஜிஆர் பேசிய உடனே வந்த திரைப்படம் பெருந்தோல்வி. இது எம்ஜிஆரின் ஈர்ப்பை குறைத்து மதிப்பிடுவது அல்ல. அண்ணாவுக்கு கூடிய கூட்டத்தில் பாதி கூட எம்ஜிஆருக்கு கூடவில்லை. உள்ளாட்சி தேர்தலில் கடும்தோல்வியை அவர் ஆட்சி சந்தித்து இருந்தது. அண்ணாவின் கவர்ச்சியை தனதாக்கிக் கொண்ட சாதுரியம் எம்ஜிஆரிடம் இருந்தது. எகா கொடி, அண்ணாயிசம்

2. சினிமா கவர்ச்சியை தமிழக அரசியலில் வேரூன்ற வைத்தது அண்ணாதுரை தானே?

திரைப்பட நடிகர்களை அழைத்து வருவது அண்ணா ஆரம்பித்து வைத்தது அல்ல. அது காங்கிரசின் சத்யமூர்த்தி போட்ட விதை. சினிமா ஆட்கள் மீது கவர்ச்சி இன்னமும் அதிகம். எனினும் சில கேள்விகள். தமிழர்களின் தேர்தல் முடிவுகளை சினிமா கவர்ச்சி முடிவு செய்கிறது என்றால் கடந்த 30 வருடங்களில் ஏன் சினிமா நடிகர்கள் தேர்தல் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. ஜெ தன் சினிமா நடிகை அடையாளம் துறந்தே சாதித்தார். தமிழர்கள் கைலாசபதியின் வரிகளில் கொண்டாட்ட மனப்பான்மை கொண்டவர்கள். உடனே ரஜினி வாய்ஸ் என்று சொல்லாதீர்கள். சிரித்துவிடுவேன்.

3. ஜெயகாந்தனின் இரங்கள் உரையில் அவர் மிக முக்கியமான விமர்சனங்களை முன் வைத்தார். எல்லோரும் அதில் இருந்த சில வரிகளுக்காக அவ்வுரையை வெறுத்தனர். ஆனால் அவர் வினர்சனங்களுக்கு பதிலில்லை.

ஜெயகாந்தனிடம் ஒரு பெரும் திராவிட இயக்க வெறுப்பு இருந்தது. அவர் பிராமணியத்தின் அடக்குமுறையை உணர்ந்து பேசியதாக எனக்குத் தோன்றவில்லை. அவர் காமராசரின் அணுக்கச்சீடர். நானூறு தமிழக இளைஞர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்த (உத்தரவே காமராசர் ஆசீர்வாதத்தில் தரப்பட்டது என்பார்கள்) காமராசரை குறித்து விமர்சித்தாரா? இந்திராவின் அவசரநிலையை தூக்கிப்பிடித்தவர் அவர். ஆக அவர் ஒரு தாராளவாதி என நான் கருதவில்லை. Yale பல்கலை கவுரவப்பட்டம் தந்த அண்ணா, பல ஆழமான சிந்தனைகள் கொண்ட அண்ணா (அண்ணாவின் நாடாளுமன்ற உரைகளைப் படியுங்கள்) மூடர் என்கிற தொனியில் பேசுவது வெறுப்பு மிகுந்த ஒன்று என்றே எண்ணுகிறேன். காமராசருக்கு கிடைத்த துதிபாடிகள் மு.க.வின் ஆட்சியால் அண்ணாவுக்கு இல்லாமல் போனார்கள்.

4. கண்ணதாசனின் ‘வனவாசம்’ புத்தகம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல விமர்சனங்களை வைத்ததே. அவற்றுக்கும் பதில் இல்லையே (பொதுவில் சொல்கிறேன்)

கண்ணதாசனின் பேச்சு பல சமயங்களில் நேற்று பேசியது இன்றைக்கு செல்லாது தொனியிலானது. கண்ணதாசனின் சொந்த அனுபவங்கள் ஒரு தேர்ந்த ஆய்வாளரின் விமர்சனத்துக்கு ஒப்பாகாது. அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற தட்டையான புரிதலோடு எழுதிய அவரின் இந்த விமர்சனங்கள் சொந்த அனுபவம் என்றே சொல்வேன்.

5. இன்று நாம் காணும் கலாசார தற்பெருமை பண்பு அவரின் கைங்கர்யம் தானே?

கலாசார பெருமை அடையாளங்கள் தாண்டி ஒரு சமூகத்தை இணைக்கிறது. இந்திஸ்தானாக தமிழகம் ஆகாமல் தடுத்தது நீங்கள் வெறுக்கும் தமிழ்ப்பற்று தான். அதன் அரசியலை, நியாயத்தை அறிய Passions of the Tongue உதவும். பொங்கலை வெகுமக்கள் விழாவாக மாற்றியது திராவிட இயக்கம். குறளை, சங்க இலக்கியத்தை மக்களிடையே கொண்டு சேர்த்தது அண்ணா. கலாச்சார பெருமை அண்ணாவுக்கும் முன்னும் சாதி, மதம், மொழி என்கிற பெயரில் இருந்தது. பெனடிக்ட் ஆன்டர்சன் சொல்வதைப்போன்ற Imagined communities ஆக மேடைப்பேச்சு படிப்பகங்கள் நாடகங்கள் மூலம் அண்ணா இல்லாத திராவிட அடையாளத்தை ஒருங்கிணைத்து சாதித்தார்.

6. ‘ஆரிய மாயை’ கோல்வால்கர் வகை வெறுப்பு அரசியல் தானே?

ஆரியர் உசத்தி என அன்னிபெசண்ட் கிளம்பியதற்கு எதிர்வினை தானே திராவிட இயக்கம்? ஒரு புரட்டை இன்னொரு புரட்டு எதிர்கொண்டது. அண்ணா உண்மையில் பிராமண வெறுப்பை மட்டுப்படுத்தினார். நாத்திகவாதம் நீக்கி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார். பிராமணர் எதிரியல்ல பிராமணியம் எதிரி என்றார் (அவர் காலத்தில் அது பெருமளவு உண்மையே) யோகேந்திர யாதவ் கவனப்படுத்துவதை போல காங்கிரஸ் இந்தி பகுதியில் பிராமணர்கள் ஆதிக்கத்தில் நேருவின் ஆட்சிக்காலத்திலும் கட்டுண்டிருந்தது. அண்ணா பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன் தேங்காயும் உடைக்க மாட்டேன் என்றார். ரஜினி கோத்தாரி குறிப்பிடுவதைப்போல வெகுமக்கள் தேர்தல் அரசியலில் வெறுப்பானது சனநாயகமயமாகி ஆக்கப்பூர்வமானவற்றை சாதிக்கிறது. அண்ணா அவ்வாறு பிரிவினை பேசியவர்களை மையநீரோட்டத்தில் இணைத்தார். அண்ணாவுக்கு அம்பேத்கருக்கு ஏற்பட்டது போல ஒரு நல்ல வரலாற்றாளர் கிட்டவில்லை. அதுவரை அண்ணா யாருமற்று தனியாக நிற்பார். மு.க. குடும்பம் அரசியலை விட்டு விலகினால் மட்டும் தான் அண்ணா குறித்த புரிதல் மேம்படுமோ என்னவோ? அண்ணாவுக்கு பிந்தையவர்களின் பாவம் அண்ணாவைச் சேர்கிறது.