‘லியோ’ – மரணம் நெருங்குகையில் மகிழ்வாய் இருத்தல்


இது தமிழில் வெளிவந்த ‘லியோ’ திரைப்படம் குறித்த அறிமுகம் அல்ல. ‘Netflix’-ல் காணக்கிடைக்கும் ‘Leo’ குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படம் போலத் தோன்றலாம். ஆனால், சொற்களின் அதிசயத்தை திரையில் வார்த்திருக்கும் அழகிய முயற்சி இப்படம்.

ஐந்தாம் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கான பள்ளியில் விளையாட்டுப் பிராணிகளாக, ‘லியோ’ எனும் 74 வயதாகும் பல்லியும், ‘Squirtle’ எனும் ஆமையும் அறிமுகம் ஆகிறார்கள். இக்குழந்தைகளின் சிக்கல்கள், கவலைகள் புதியவை. கூடவே, கடுமை தொனிக்கும் ஆசிரியை வந்து சேர நிலைமை மோசமாகிறது. வார இறுதி நாளன்று ஒருவர் ஒரு பிராணியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற விதியின்படி ‘லியோ’ குழந்தைகளின் வீட்டிற்குச் செல்கிறது.

இன்னும் வாழ்வதற்கு ஓராண்டே இருக்கும் நிலையில் தப்பித்து போய் வாழ்வை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்பது அதன் கனவு. வாராவாரம் தப்பிக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகிறது. ஏன்? ஒவ்வொரு வாரமும் பேசும் பல்லியாக குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறது லியோ.

பெற்றோரின் மணவிலக்கு, கீச்சென்ற குரல், எப்போதும் கண்காணிக்கும் கண்கள், பெற்றோரின் கவனிப்பற்ற குழந்தைமை, வதைமுகமான வகுப்பறை என அத்தனை வெளிகளின் வழியாக உற்சாகமாகவும், நம்பிக்கையாகவும் ஓடுகிறது உலகறிந்த லியோ.

போகிற போக்கில் அதன் இலக்கு மாறுகிறது. கூடவே, சில பொய்களும் சேர்ந்து கொள்கிறது. கடுமைமிக்க வகுப்பறையில் கலகலப்பின் சுவையை கண்டுணர வைக்கும் மாயமாய் லியோ மாறுகிறது. தீர்வுகளை விட காது கொடுத்து கேட்பதன் முக்கியத்துவத்தை உணர வைக்கிறது.

மடிக்கணினி, ஸ்மார்ட்போன், மழலைகளின் ஒவ்வொரு கணத்தையும் கட்டுப்படுத்தும் Drone-கள் இவற்றின் நடுவே மனங்களித்து வாழ்தல் குறித்த படம் இது. உருவம், பிறர் நம் மீது கொண்டிருக்கும் பார்வை குறித்த கவலைகள், உற்றவர் இல்லாத ஏக்கம் எனப்பலவற்றின் தொகுப்பாக காட்சிகள் விரிகின்றன.

திடீரென்று இந்த மகிழ்ச்சியால் ஆன உலகம் உடைகிறது. லியோ வில்லன் ஆகிறது. வாழ்வு முடியும் கணத்தினில் புறக்கணிப்போடு மனம் வெதும்பி வெளியேற்றப்படுகிறது. ஏன்? திரையில் பாருங்கள். இக்கதை சிறுவர்களைப்பற்றியதாக பாவனை செய்தபடியே சொல்லப்படும் பெரியவர்களுக்கான கதை.